Wednesday, 6 March 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் – 9

(மந்தரையின் தூண்டுதலால், கைகேயி கோபாக்கிருஹத்துக்குள்  நுழைகிறாள்.)


एवमुक्ता तु कैकेयी क्रोधेन ज्वलितानना।
दीर्घमुष्णं विनिश्वस्य मन्थरामिदमब्रवीत्।।2.9.1।।

மந்தரை இவ்வாறு கூறியதும், கோபத்தினால் ஜொலித்த முகத்துடன் உஷ்ணமான பெருமூச்செறிந்த கைகேயி, மந்தரையிடம் இவ்வாறு கூறினாள்:

 

अद्य राममितः क्षिप्रं वनं प्रस्थापयाम्यहम्।
यौवराज्ये च भरतं क्षिप्रमेवाभिषेचये।।2.9.2।।

“இன்றே, ராமனைக் காட்டுக்கு அனுப்பி விட்டுத் தாமதமின்றி, பரதனுக்கு முடிசூட்டச் செய்வேன்.

 

इदं त्विदानीं सम्पश्य केनोपायेन मन्थरे।
भरतः प्राप्नुयाद्राज्यं न तु रामः कथञ्चन।।2.9.3।।

மந்தரையே! ஏதாவது உபாயம் செய்து, ராமனுக்கு ஆட்சி கிடைக்காத படியும், பரதனுக்கு ஆட்சி கிடைக்கும் படியும் செய்யும் வழியைப் பார்.”

 

एवमुक्ता तया देव्या मन्थरा पापदर्शिनी।
रामार्थमुपहिंसन्ती कैकेयीमिदमब्रवीत्।।2.9.4।।

கைகேயி இவ்வாறு கூறியதும், தீய எண்ணங்கொண்ட மந்தரை, ராமனுக்குத் தீங்கு விளைவிப்பதற்காகக் கைகேயியிடம் கூறினாள்:

 

हन्तेदानीं प्रवक्ष्यामि कैकेयि श्रूयतां च मे।

यथा ते भरतो राज्यं पुत्रः प्राप्स्यति केवलम्।।2.9.5।।

“கைகேயியே! மிக்க மகிழ்ச்சி! உன் மகன் பரதன் மட்டுமே ராஜ்ஜியத்தை ஆளும் படி செய்ய வழி சொல்கிறேன், கேள்!

 

किं न स्मरसि कैकेयि स्मरन्ती वा निगूहसे।
यदुच्यमानमात्मार्थं मत्तस्त्वं श्रोतुमिच्छसि।।2.9.6।।

கைகேயியே! உன் விருப்பம் நிறைவேற, நான் என்ன சொல்லப் போகிறேன் என்பது உனக்கு நினைவில்லையா அல்லது அதை என் மூலமாகவே கேட்க விரும்புகிறாயா?

 

मयोच्यमानं यदि ते श्रोतुं छन्दो विलासिनि।
श्रूयतामभिधास्यामि श्रुत्वा चापि विमृश्यताम्।।2.9.7।।

அழகான கைகேயியே! நான் சொல்லிக் கேட்க விரும்புகிறாய் என்றால், நானே சொல்கிறேன். அதைக் கேட்டு விட்டு அதைப் பற்றி யோசி.”

 

श्रुत्वैवं वचनं तस्या मन्थरायास्तु कैकेयी।
किञ्चिदुत्थाय शयनात्स्वास्तीर्णादिदमब्रवीत्।।2.9.8।।

மந்தரையின் வார்த்தைகளைக் கேட்ட கைகேயி, நன்கு விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் இருந்து சிறிது எழுந்து, பின்னர்  பேசலானாள்.

 

कथय त्वं ममोपायं केनोपायेन मन्थरे।
भरतः प्राप्नुयाद्राज्यं न तु रामः कथञ्चन।।2.9.9।।

“மந்தரையே! எவ்வாறாயினும், பரதனுக்குத் தான் ராஜ்ஜியம் கிடைக்க வேண்டும், ராமனுக்குக் கிடைக்கக் கூடாது. அதற்கான உபாயத்தைக் கூறு.”

 

एवमुक्ता तया देव्या मन्थरा पापदर्शिनी।
रामार्थमुपहिंसन्ती कुब्जा वचनमब्रवीत्।।2.9.10।।

அரசியான கைகேயி இவ்வாறு கூறவும், தீய எண்ணம் கொண்ட மந்தரை, ராமனுக்குத் தீங்கு விளைவிக்கும் விதமாகப் பேசலானாள்.

 

तव दैवासुरे युद्धे सह राजर्षिभिः पतिः।
अगच्छत्त्वामुपादाय देवराजस्य साह्यकृत्।।2.9.11।।

दिशमास्थाय वै देवि दक्षिणां दण्डकान्प्रति।
वैजयन्तमिति ख्यातं पुरं यत्र तिमिध्वजः।।2.9.12।।

“அரசியே! உன்னுடைய கணவர்,  தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் போர் நடந்த போது, தனது ரிஷிகளுடன், தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு உதவிசெய்யும் பொருட்டு, உன்னையும் அழைத்துச் சென்றார். தென் திசையில் உள்ள  தண்டக வனத்தை நோக்கித் திமித்வஜன் (Timidhwajan) என்னும் அசுரன் ஆட்சி செய்யும் வைஜயந்தம் என்னும் நகரத்துக்குச் சென்றார்.

 

स शम्बर इति ख्यातश्शतमायो महासुरः।
ददौ शक्रस्य सङ्ग्रामं देवसङ्घैरनिर्जितः।।2.9.13।।

சம்பராசுரன் என்று அறியப்பட்ட, நூறு விதமான மாய உரு எடுக்கக்கூடிய அந்த அசுரன், இந்திரனைப் போருக்கு வருமாறு அறைகூவல் விட்டான். பல தேவர்கள் சேர்ந்தும் அவனைத் தோற்கடிக்க முடிவில்லை.


तस्मिन्महति सङ्ग्रामे पुरुषान्क्षतविक्षतान्।
रात्रौ प्रसुप्तान्घ्नन्ति स्म तरसाऽऽसाद्य राक्षसाः।।2.9.14।।

அந்தப் பெரிய போரில் அசுரர்கள், போரில் காயப்பட்ட வீரர்களையும்,  இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் வீரர்களையும், கொன்று விடுவது வழக்கம்.

 

तत्राकरोन्महद्युद्धं राजा दशरथस्तदा।
असुरैश्च महाबाहुश्शस्त्रैश्च शकलीकृतः।।2.9.15।।

அந்த மகாயுத்தத்தில், தோள் வலி மிக்க தசரதர், அசுரர்களின் ஆயுதங்களால் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார்.

 

अपवाह्य त्वया देवि सङ्ग्रामान्नष्टचेतनः।
तत्रापि विक्षतश्शस्त्रैः पतिस्ते रक्षितस्त्वया।।2.9.16।।

தேவி! நினைவிழந்து கிடந்த உன் கணவரைப் போர்க்களத்தில் இருந்து தூக்கி வந்து காப்பாற்றினாய். பின்னொரு முறை, அசுரர்கள் எறிந்த ஆயுதங்களால் காயப்பட்டிருந்த அவரைக் காப்பாற்றினாய்.

 

तुष्टेन तेन दत्तौ ते द्वौ वरौ शुभदर्शने।
स त्वयोक्तः पतिर्देवि यदेच्छेयं तदा वरौ।।2.9.17।।

गृह्णीयामिति तत्तेन तथेत्युक्तं महात्मना।

மங்களகரமானவளே! உன் உதவிக்கு, நன்றி பாராட்டும் விதமாக, அரசர் உனக்கு இரண்டு வரங்களைக் கொடுத்தார். அவற்றை, உனக்கு வேண்டும் போது கேட்டுப் பெற்றுக் கொள்கிறேன், என்று நீ கூறினாய். பெருந்தன்மை மிக்க அரசரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

 

अनभिज्ञाम्ह्यहं देवि त्वयैव कथिता पुरा।।2.9.18।।

कथैषा तव तु स्नेहान्मनसा धार्यते मया।
रामाभिषेकसम्भारान्निगृह्य विनिवर्तय।।2.9.19।।

தேவி! இவையனைத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. நீதான் எனக்கு இவற்றையெல்லாம் கூறியிருக்கிறாய். உன் மீது இருக்கும் அன்பால், நான் இவற்றை என் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது, (அந்த வரங்களை உபயோகித்து), ராமனின் பட்டாபிஷேகத்தைப் பலவந்தமாக நிறுத்து.

 

तौ वरौ याच भर्तारं भरतस्याभिषेचनम्।
प्रव्राजनं च रामस्य त्वं वर्षाणि चतुर्दश।।2.9.20।।

உன் கணவரிடம் அந்த இரண்டு வரங்களைக் கேள். ஒரு வரத்தால், பரதனுக்கு முடி சூட்டச்செய்; இன்னொரு வரத்தால், ராமனைக் காட்டுக்கு அனுப்பு.

 

चतुर्दश हि वर्षाणि रामे प्रव्राजिते वनम्।
प्रजाभावगतस्नेहस्स्थिरः पुत्रो भविष्यति।।2.9.21।।

ராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பி விட்டால், அதற்குள் உன் மகன் பரதன் மக்களின் அன்பைப் பெற்று, நிலையாக ஆட்சி செய்யத் தயாராகிவிடுவான்.

 

क्रोधागारं प्रविश्याऽद्य क्रुद्धेवाश्वपतेस्सुते।
शेष्वाऽनन्तर्हितायां त्वं भूमौ मलिनवासिनी।।2.9.22।।

அஸ்வபதியின் மகளே! இப்போதே, கோபாக்கிரகத்துக்குள் போய், கோபமாக இருப்பவளைப் போல, அழுக்கு உடை அணிந்து, வெறும் தரையில் படுத்துக்கொள்.

 

मास्मैनं प्रत्युदीक्षेथा मा चैनमभिभाषथाः।
रुदन्ती चापि तं दृष्ट्वा जगत्यां शोकलालसा।।2.9.23।।

தசரதர் வரும் போது, துயரத்திலும், கண்ணீரிலும் தோய்ந்தவளாய் இரு. அவரைப் பார்க்கவோ, பேசவோ செய்யாதே!

 

दयिता त्वं सदा भर्तुरत्र मे नास्ति संशयः।
त्वत्कृते स महाराजो विशेदपि हुताशनम्।।2.9.24।।

உன் கணவருக்கு மிகவும் பிரியமான மனைவியாய் நீ எப்போதும் இருந்திருக்கிறாய் என்பதில் சந்தேகமில்லை. உனக்காக இந்த மகா மன்னர் எரியும் நெருப்பில் கூடப் புகுந்து விடுவார்.

 

न त्वां क्रोधयितुं शक्तो न क्रृद्धां प्रत्युदीक्षितुम्।
तव प्रियार्थं राजा हि प्राणानपि परित्यजेत्।।2.9.25।।

உன்னைக் கோபப்படுத்தவே அச்சப்படுவார், அரசர்.  நீ கோபித்துக் கொண்டிருந்தால் உன் முகத்தைக்கூட அவரால் பார்க்க முடியாது. உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றால், தன் உயிரைக்கூட விடத் தயங்கமாட்டார்.

 

न ह्यतिक्रमितुं शक्तस्तव वाक्यं महीपतिः।
मन्दस्वभावे बुध्यस्व सौभाग्यबलमात्मनः।।2.9.26।।

உன்னுடைய வார்த்தையை அரசர் எப்போதும் மீற மாட்டார். மந்த புத்தியுடையவளே! ( கைகேயியை மந்தரை செல்லமாகக் கடிந்து கொள்கிறாள்.) உன்னுடைய அழகின் பலத்தை உணர்ந்து கொள்!

 

मणिमुक्तं सुवर्णानि रत्नानि विविधानि च।
दद्याद्दशरथो राजा मास्म तेषु मनः कृथाः।।2.9.27।।

தசரத மன்னர் உனக்கு மணிகளையும், முத்தையும், பொன்னையும், பலவிதமான விலை உயர்ந்த கற்களையும் கொடுப்பார். நீ அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதே!

 

यौ तौ दैवासुरे युद्धे वरौ दशरथोऽददात्।
तौ स्मारय महाभागे सोऽर्थो न त्वामतिक्रमेत्।।2.9.28।।

பாக்கியசாலியான கைகேயியே! தேவாசுர யுத்தத்தின் போது உனக்கு அவர் கொடுத்த இரண்டு வரங்களை அவருக்கு நினைவூட்டு. உன்னுடைய நோக்கத்திலிருந்து நீ விலகக்கூடாது.

 

यदातु ते वरं दद्यात्स्वयमुत्थाप्य राघवः।
व्यवस्थाप्य महाराजं त्वमिमं वृणुया वरम्।।2.9.29।।

தசரதரே உன்னைத் தரையில் இருந்து எழுப்பி உன் ஆசனத்தில் அமர்த்திய பின் இந்த வரங்களைக் கேள்.

 

रामं प्रव्राजयारण्ये नव वर्षाणि पञ्च च।
भरतः क्रियतां राजा पृथिव्याः पार्थिवर्षभः।।2.9.30।।

“அரசர்களுள் சிறந்தவரே! ராமனைப் பதினான்காண்டுகள் காட்டுக்கு அனுப்பி விட்டு, பரதனை அரசனாக்குங்கள்!

 

चतुर्दश हि वर्षाणि रामे प्रव्राजिते वनम्।
रूढश्च कृतमूलश्च शेषं स्थास्यति ते सुतः।।2.9.31।।

ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் இருந்தால், அந்த சமயத்தில், உங்கள் மகன் பரதன், நல்ல வலிமை பெற்று வேர்பிடித்து வளர்ந்து, நிரந்தரமாக அரசனாகி விடுவான்.

 

रामप्रव्राजनं चैव देवि याचस्व तं वरम्।
एवं सिद्ध्यन्ति पुत्रस्य सर्वार्थास्तव भामिनि।।2.9.32।।

ராமன் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்பதை ஒரு வரமாகக் கேட்டு வாங்கிவிடு. அழகிய ராணியே! அதனால், உன் மகனுக்கு வேண்டியது அனைத்தும் நிறைவேறிவிடும்.

 

एवं प्रव्राजितश्चैव रामोऽरामो भविष्यति।
भरतश्च हतामित्रस्तव राजा भविष्यति।।2.9.33।।

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட பின் ராமன் ராமனாகவே இருக்க மாட்டான்.( ராமன் என்ற பெயருக்கு, அனைவருக்கும் இன்பம் அளிப்பவன் என்று பொருள்.) தனது எதிரியான ராமனை அடக்கி விடுவதால், பரதன் எந்தத் தடையும் இன்றி, அரசனாகி விடுவான்.

 

येन कालेन रामश्च वनात्प्रत्यागमिष्यति।
तेन कालेन पुत्रस्ते कृतमूलो भविष्यति।।2.9.34।।

सुगृहीतमनुष्यश्च सुहृद्भिस्सार्धमात्मवान्।

ராமன் திரும்பி வருவதற்குள், உங்கள் மகன் பரதன், தன்னம்பிக்கையுடன், வேர் பிடித்து, நல்ல நண்பர்களை சம்பாதித்து விடுவான். மக்களும் அவனை ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.”

 

प्राप्तकालं नु मन्येऽहं राजानं वीतसाध्वसा।।2.9.35।।

रामाभिषेकसङ्कल्पान्निगृह्य विनिवर्तय।

(மந்தரை தொடர்ந்து கூறினாள்) “உன்னுடைய வரங்களைக் கேட்டுப் பெறுவதற்கான சரியான காலம் வந்திருக்கிறது. ஆகவே, அச்சமின்றி, ராமனைப் பட்டத்து இளவரசனாக்கும் அரசருடைய தீர்மானத்தை மாற்றிக் கொள்ள வைத்து விடு.

 

अनर्थमर्थरूपेण ग्राहिता सा ततस्तया।।2.9.36।।

हृष्टा प्रतीता कैकेयी मन्थरामिदमब्रवीत्।

இவ்வாறு, மந்தரையின் தீய எண்ணத்தைத் தனக்கு நன்மை பயக்கும் நோக்கம் என்று ஏற்றுக்கொண்ட பின், மகிழ்ச்சியுடன் கைகேயி மந்தரையிடம் பேசினாள்:

 

सा हि वाक्येन कुब्जायाः किशोरीवोत्पथं गता।।2.9.37।।

कैकेयी विस्मयं प्राप्ता परं परमदर्शना।

நல்ல முன் யோசனையுடைய கைகேயி, விவரமறியாத சிறுமியைப் போல், மந்தரையின் சொற்களால் வியப்புற்றுத் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தாள்.

 

कुब्जे त्वां नाभिजानामि श्रेष्ठां श्रेष्ठाभिथायिनीम्।।2.9.38।।

पृथिव्यामसि कुब्जानामुत्तमा बुद्धिनिश्चये।

“மந்தரையே! நீ இவ்வளவு புத்திசாலித்தனத்துடன் இவ்வளவு சிறப்பாகப் பேசுவாய் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இந்த உலகத்தில் உள்ள கூனிகளிலேயே, மிகச் சிறந்தவள் நீ தான்!

 

त्वमेव तु ममाऽर्थेषु नित्ययुक्ता हितैषिणी।।2.9.39।।

नाहं समवबुध्येयं कुब्जे राज्ञश्चिकीर्षितम्।

கூனியே! நீ மட்டும் தான் என்னுடைய விஷயங்களில் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு எனக்கு எது நன்மையைக் கொடுக்குமோ, அதைச் செய்கிறாய். நீ மட்டும் இல்லாமல் இருந்தால், அரசருடைய செயலில் மறைந்திருக்கும் ஆபத்தை நான் உணர்ந்திருக்கவே மாட்டேன்.

 

सन्ति दुस्संस्थिताः कुब्जा वक्राः परमदारुणाः।।2.9.40।।

त्वं पद्ममिव वातेन सन्नता प्रियदर्शना।

இந்த உலகில் எத்தனையோ கூனிகள் அவலட்சணமான வளைந்த உருவத்துடன் இருக்கிறார்கள். நீயோ, காற்றில் வளைந்த தாமரையைப் போல் அழகாக இருக்கிறாய்.

 

उरस्तेऽभिनिविष्टं वै यावत्स्कन्धात् समुन्नतं।।2.9.41।।

अधस्ताच्चोदरं शातं सुनाभमिव लज्जितम्।

உன்னுடைய செழிப்பான மார்பகங்கள் உன் தோளுக்குச் சமமாக உயர்ந்திருக்கின்றன. உனது வயிறோ நாணமுற்றது போல ஒட்டி இருக்கிறது.

 

परिपूर्णं तु जघनं सुपीनौ च पयोधरौ।।2.9.42।।

विमलेन्दुसमं वक्त्रमहोराजसि मन्थरे।

செழிப்பான இடையுடனும், முழுமையான மார்பகங்களுடனும், தூய்மையான நிலவைப் போன்ற முகத்துடனும், நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!

 

जघनं तव निर्घुष्टं रशनादामशोभितम्।।2.9.43।।

जङ्घे भृशमुपन्यस्ते पादौ चाप्यायतावुभौ।

உன்னுடைய இடை, ஒலிக்கும் சலங்கைகள் கோர்த்த ஒட்டியாணத்துடன் அழகாக இருக்கிறது. உனது பின்னங்கால்கள் வலிமையுடனும், உனது பாதங்கள் நீண்டும் அமைந்துள்ளன.

 

त्वमायताभ्यां सक्थिभ्यां मन्थरे क्षौमवासिनी।।2.9.44।।

अग्रतो मम गच्छन्ती राजहंसीव राजसे।

மந்தரையே! பட்டாடை உடுத்திக்கொண்டு, வலிமையான தொடைகளுடன் நீ என் முன்னே நடக்கும் போது பெண் அன்னத்தைப் போல் விளங்குகிறாய்.

 

आसन्याश्शम्बरे मायास्सहस्रमसुराधिपे।।2.9.45।।

सर्वास्त्वयि निविष्टास्ता भूयश्चान्यास्सहस्रशः।

சம்பராசுரனிடம் இருந்த ஆயிரக்கணக்கான மாயைகளை விட அதிக மாயைகளை உன்னால் செய்ய முடியும்.

 

तवेदं स्थगु यद्दीर्घं रथघोणमिवायतम्।।2.9.46।।

मतयः क्षत्रविद्याश्च मायाश्चात्र वसन्ति ते।

தேரின் சக்கரத்தைப் போல் அகன்று இருக்கும் உனது இந்த முதுகின் வளைவில், உன்னுடைய புத்திசாலித்தனமான எண்ணங்களும், க்ஷத்திரிய வித்தைகளும், மாயைகளும், பொதிந்துள்ளன.

 

अत्र ते प्रतिमोक्ष्यामि मालां कुब्जे हिरण्मयीम्।।2.9.47।।

अभिषिक्ते च भरते राघवे च वनं गते।

கூனியே! ராமன் காட்டுக்குப் போய், பரதன் அரசனான பின், உன்னுடைய இந்த முதுகின் வளைவின் மேல் ஒரு தங்க மாலை அணிவிப்பேன்.

 

जात्येन च सुवर्णेन सुनिष्टप्तेन मन्थरे।।2.9.48।।

लब्धार्था च प्रतीता च लेपयिष्यामि ते स्थगु।

மந்தரையே! என் நோக்கம் நிறைவேறியபின், எனக்கு திருப்தி உண்டானபின், உன்னுடைய முதுகின் வளைவின் மேல் தங்கத் திரவத்தைப் பூசுவேன்.

 

मुखे च तिलकं चित्रं जातरूपमयं शुभम्।।2.9.49।।

कारयिष्यामि ते कुब्जे शुभान्याभरणानि च।

மந்தரையே! உனது மங்களமான முகத்துக்குப் பொன்னாலான திலகமும், மற்றும், பலவிதமான ஆபரணங்களையும் செய்விப்பேன்.

 

परिधाय शुभे वस्त्रे देवतेव चरिष्यसि।।2.9.50।।

चन्द्रमाह्वयमानेन मुखेनाप्रतिमानना।
गमिष्यसि गतिं मुख्यां गर्वयन्ती द्विषज्जनम्।।2.9.51।।

அழகிய ஆடையணிந்து நீ ஒரு தேவதையைப் போல நடப்பாய். நிலவைப்பழிக்கும் அழகுடன், உன் எதிரிகளுக்கிடையே கூட, கர்வத்துடன், பெருமிதமான நிலையை அடைவாய்.

 

तवापि कुब्जाः कुब्जायास्सर्वाभरणभूषिताः।
पादौ परिचरिष्यन्ति यथैव त्वं सदा मम।।2.9.52।।

கூனுடைய பிற பெண்கள், பலவித ஆபரணங்களை அணிந்து கொண்டு, நீ எனக்குச் சேவை செய்வது போல் உனக்குச் சேவை செய்வார்கள்.

 

इति प्रशस्यमाना सा कैकेयीमिदमब्रवीत्।
शयानां शयने शुभ्रे वेद्यामग्निशिखामिव।।2.9.53।।

இவ்வாறு புகழப்பட்ட மந்தரை, வேள்விக்கூடத்தில் எரிந்து கொண்டிருக்கும் வெண்தழலின் நிறத்தை ஒத்த மஞ்சத்தில் சயனித்திருந்த கைகேயியிடம்  கூறினாள்:


गतोदके सेतुबन्धो न कल्याणि विधीयते।
उत्तिष्ठ कुरु कल्याणि राजानमनुदर्शय।।2.9.54।।

“பாக்கியசாலியே! தண்ணீர் ஓடிப் போன பிறகு யாரும், அணை கட்ட மாட்டார்கள். எழுந்திரு! உன் நலனுக்காக, அரசரிடம் சரியாக நாடகத்தை நடத்து. “

 

तथा प्रोत्साहिता देवी गत्वा मन्थरया सह।
क्रोधागारं विशालाक्षी सौभाग्यमदगर्विता।।2.9.55।।

अनेकशतसाहस्रं मुक्ताहारं वराङ्गना।
अवमुच्य वरार्हाणि शुभान्याभरणानि च।।2.9.56।।

ततो हेमोपमा तत्र कुब्जावाक्यवशं गता।
संविश्य भूमौ कैकेयी मन्थरामिदमब्रवीत्।।2.9.57।।

அகன்ற கண்களையுடைய அழகிய கைகேயி, மந்தரையால் தூண்டப்பட்டுத் தன் அழகினால் ஏற்பட்ட கர்வத்துடன், மந்தரையுடன் கோபாக்கிருஹத்துக்குள்  நுழைந்தாள். தான் அணிந்திருந்த விலை உயர்ந்த முத்து மாலையையும், பிற விலை மதிப்பற்ற ஆபரணங்களையும் கழற்றி எறிந்தாள். பின்னர், பொன்னின் நிறமுடைய கைகேயி, தரையில் படுத்துக் கொண்டு, மந்தரையிடம் கூறினாள்:

 

इह वा मां मृतां कुब्जे नृपायावेदयिष्यसि।
वनं तु राघवे प्राप्ते भरतः प्राप्स्यति क्षितिम्।।2.9.58।।

“கூனியே! ராமன் காட்டுக்குப் போனவுடன், பரதனுக்கு முடி சூட்டவேண்டும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் நான் உயிரை விட்டு விடுவேன் என்றும் அரசரிடம் சென்று சொல்.”

 

न सुवर्णेन मे ह्यर्थो न रत्नैर्न च भूषणैः।
एष मे जीवितस्यान्तो रामो यद्यभिषिच्यते।।2.9.59।।

எனக்குப் பொன்னும், பொருளும், ரத்தினங்களும், ஆபரணங்களும் வேண்டாம். ராமன் முடி சூட்டிக் கொண்டால், அது தான் என்னுடைய மரணம்.”

 

अथो पुनस्तां महिषीं महीक्षितो वचोभिरत्यर्थमहापराक्रमैः।
उवाच कुब्जा भरतस्य मातरं हितं वचो राममुपेत्य चाहितम्।।2.9.60।।

அந்தக் கூனியானவள், பரதனுடைய தாயான கைகேயியிடம், பரதனுக்கு சாதகமாகவும், ராமனுக்குத் தீங்கு விளைவிக்கும் படியும், மிகவும், வலிமை மிக்க வார்த்தைகளைக் கூறினாள்.

 

प्रपत्स्यते राज्यमिदं हि राघवो यदि ध्रुवं त्वं ससुता च तप्स्यसे।
अतो हि कल्याणि यतस्व तत्तथा यथा सुतस्ते भरतोऽभिषेक्ष्यते।।2.9.61।।

“ராமனுக்கு இந்த ராஜ்ஜியம் கிடைத்து விட்டால், நீயும் உன் புதல்வனும் நிச்சயம் துன்பத்துக்கு ஆளாவீர்கள். மங்களகரமானவளே! ஆகவே, பரதன் ஆட்சிக்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்!”

 

तथाऽतिविद्धा महिषी तु कुब्जया समाहता वागिषुभिर्मुहुर्मुहुः।
निधायहस्तौ हृदयेऽतिविस्मिता शशंस कुब्जां कुपिता पुनः पुनः।।2.9.62।।

மந்தரையின் அம்பைப் போன்ற கூரிய சொற்களால், மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட கைகேயி, தசரதர் மேல் பெருங்கோபம் கொண்டாள். தனது  நெஞ்சின் மீது கைகளை வைத்துக் கொண்டு, ஆச்சரியத்துடன் அந்தக் கூனியைப் புகழ்ந்துரைத்தாள்.


यमस्य वा मां विषयं गतामितो निशाम्य कुब्जे प्रतिवेदयिष्यसि।
वनं गते वा सुचिराय राघवे समृद्धकामो भरतो भविष्यति।।2.9.63।।

“அரசரிடம் சொல்; ஒன்று, ராமன் நீண்ட காலம் காட்டில் இருப்பதற்காக, நாட்டை விட்டுச் செல்ல வேண்டும். அதன் பிறகு, பரதன் முடி சூட்டிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நான் யமனின் இருப்பிடம் சென்று விடுவேன், என்று.”

अहं हि नैवास्तरणानि न स्रजोन चन्दनं नाञ्जनपानभोजनम्।
न किञ्चिदिच्छामि न चेह जीवितंन चेदितो गच्छति राघवो वनम्।।2.9.64।।

ராமன் இங்கிருந்து காட்டுக்குப் போகவில்லை யென்றால், எனக்குப் படுக்கை வேண்டாம், மாலைகள் வேண்டாம், சந்தனம் வேண்டாம், நறுமணத்தைலங்கள் வேண்டாம், உணவு வேண்டாம், தண்ணீர் வேண்டாம், என் உயிர் கூட வேண்டாம்.”

 

अथैतदुक्त्वा वचनं सुदारुणंनिधाय सर्वाभरणानि भामिनी।
असंवृतामास्तरणेन मेदिनींतदाऽधिशिश्ये पतितेव किन्नरी।।2.9.65।।

இத்தகைய கொடூரமான சொற்களைக் கூறிய அந்த அழகிய கைகேயி, தனது ஆபரணங்களையெல்லாம், களைந்து விட்டுக் கீழே விழுந்து விட்ட கின்னர மங்கையைப்போல், கம்பளத்தையும் உருவி விட்டு, வெறும் தரையில் படுத்துக்கொண்டாள்.

 

उदीर्णसंरम्भतमोवृताननातथाऽवमुक्तोत्तममाल्यभूषणा।
नरेन्द्रपत्नी विमना बभूव सातमोवृता द्यौरिव मग्नतारका।।2.9.66।।

அரசி கைகேயி, ஆபரணங்களையெல்லாம் களைந்து விட்டு, மிகுந்த கோபத்தினால் கருத்த முகத்துடன், நக்ஷத்திரங்கள் இல்லாத ஆகாயத்தைப் போல் இருந்தாள்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे नवमस्सर्गः।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் ஒன்பதாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

06.03.2024

 

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...