Sunday, 26 November 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 5

 

(தசரதனின் ராஜ்ஜியமும், அயோத்தியின் மாட்சியும்)


सर्वा पूर्वमियं येषामासीत्कृत्स्ना वसुन्धरा ।
प्रजापतिमुपादाय नृपाणां जयशालिनाम् ।।1.5.1।।

முற்காலத்தில், இந்த பூமி முழுவதும் பிரஜாபதியில் தொடங்கிப் பல வெற்றி நிறந்த அரசர்களால் ஆளப்பட்டு வந்தது.

 

येषां स सगरो नाम सागरो येन खानित: ।
षष्टि: पुत्रसहस्राणि यं यान्तं पर्यवारयन् ।।1.5.2।।

அவர்களுக்குள், ஸகரர் என்ற ஒரு அரசர் பிரம்மாண்டமான ஒரு கடலைத் தோண்ட ஏற்பாடு செய்தார். (ஆகவே தான் கடல் ஸாகரம் எனப்பட்டது.) அவருடைய 60000 புதல்வர்களும் அவர் செல்லுமிடங்களெல்லாம் பின் தொடர்ந்தார்கள்.

 

इक्ष्वाकूणामिदं तेषां राज्ञां वंशे महात्मनाम् ।
महदुत्पन्नमाख्यानं रामायणमिति श्रुतम् ।।1.5.3।।

இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றிய அப்படிப்பட்ட மகாத்மாக்களான அரசர்களின் குலத்தில் தான் ராமாயணம் என்ற புகழ்பெற்ற, இந்தக் காவியம் பிறந்தது.

 

तदिदं वर्तयिष्यामि सर्वं निखिलमादित: ।
धर्मकामार्थसहितं श्रोतव्यमनसूयया ।।1.5.4।।

அறம், பொருள், இன்பம் ஆகிய புருஷார்த்தங்களைக் கொடுக்கக் கூடிய அந்தக் காவியத்தை முதலில் இருந்து முழுமையாகச் சொல்லப் போகிறேன். எந்த விதமான எதிர்மறை எண்ணங்களும் இன்றி, அதைக்கேட்பீர்களாக!


कोसलो नाम मुदितस्स्फीतो जनपदो महान् ।
निविष्टस्सरयूतीरे प्रभूतधनधान्यवान् ।।1.5.5।।


ஸரயு நதிக்கரையில், தன தான்யங்களால் செழிப்புற்ற, செல்வங்கள் நிறைந்த, கோசலம் என்ற ஒரு சிறந்த தேசம் அமைந்திருந்தது.

 

अयोध्या नाम नगरी तत्रासील्लोकविश्रुता ।
मनुना मानवेन्द्रेण या पुरी निर्मिता स्वयम् ।।1.5.6।।

அந்தக் கோசல நகரில், மனிதர்களின் தலைவனான மனுவால் நிர்மாணிக்கப்பட்ட, அயோத்தி என்னும் புகழ்பெற்ற நகரம் இருந்தது.


आयता दश च द्वे च योजनानि महापुरी ।
श्रीमती त्रीणि विस्तीर्णा सुविभक्तमहापथा ।।1.5.7।।

மிகுந்த அழகு வாய்ந்த, நன்கு அமைக்கப்பட்ட சாலைகளுடைய அந்த மகாநகரம் 12 யோஜனை நீளமும்( 96 மைல்கள்) மூன்று யோஜனை அகலமும் (24 மைல்கள்) கொண்டிருந்தது.

 

राजमार्गेण महता सुविभक्तेन शोभिता ।
मुक्तपुष्पावकीर्णेन जलसिक्तेन नित्यश: ।।1.5.8।।

தினந்தோறும் நீரூற்றி, நன்கு கவனிக்கப்பட்ட, மலர்ந்த பூக்கள் நிறைந்த பூச்செடிகளை உடைய அந்த ராஜ மார்க்கம் மிகவும் அழகாக இருந்தது.

 

तां तु राजा दशरथो महाराष्ट्रविवर्धन: ।
पुरीमावासयामास दिवं देवपतिर्यथा ।।1.5.9।।

அந்தத் தேசத்தின் செழிப்பை மேலும் அதிகரிப்பதில், ஈடுபட்டிருந்த தசரதன் என்னும் அந்நாட்டு மன்னன், தேவர்களின் அரசனாகிய இந்திரன் போல் விளங்கினான்.

 

कवाटतोरणवतीं सुविभक्तान्तरापणाम् ।
सर्वयन्त्रायुधवतीमुपेतां सर्वशिल्पिभि: ।।1.5.10।।

தோரணங்கள் கட்டப்பட்ட வளைவான வெளிக்கதவுகளும், நன்றாக அமைக்கப்பட்ட கடைவீதிகளும் கொண்ட அந்த நகரத்தில் எல்லாவிதமான உபகரணங்களையும், ஆயுதங்களையும் உபயோகிப்பதில் கைதேர்ந்தவர்கள் இருந்தார்கள்.


सूतमागधसम्बाधां श्रीमतीमतुलप्रभाम् ।
उच्चाट्टालध्वजवतीं शतघ्नीशतसङ्कुलाम् ।।1.5.11।।

ஒப்புவமையில்லாத சிறப்புகள் வாய்ந்த அந்த நகரத்தில் அரசர்களை அற்புதமாகப்புகழ்ந்து பாடும் கவிஞர்கள் இருந்தார்கள். கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான கட்டிடங்களும், நூற்றுக்கணக்கான ‘ஷதங்கி’ என்னும் பீரங்கிகளும் அந்த நகரத்தில் இருந்தன.

 

वधूनाटकसङ्घैश्च संयुक्तां सर्वत: पुरीम् ।
उद्यानाम्रवणोपेतां महतीं सालमेखलाम् ।।1.5.12।।

ஏராளமான நடன மங்கையரையும், நடிகர்களையும், கொண்ட அந்த நகரத்தின் எல்லாப் பக்கங்களிலும், தோட்டங்களும், மாந்தோப்புகளும் இருந்ததோடன்றிப், பெரிய சால மரங்கள் அந்நகருக்கு அரணாக அமைந்திருந்தன.

 

दुर्गगम्भीरपरिघां दुर्गामन्यैर्दुरासदाम् ।
वाजिवारणसम्पूर्णां गोभिरुष्ट्रै: खरैस्तथा ।।1.5.13।।

அந்த நகரம், கம்பீரமான கோட்டைகளாலும், ஆழமான அகழிகளாலும்,  பாதுகாக்கப்பட்டு வந்தது.  வெளியார் யாரும் உள்ளே புகமுடியாத அந்த நகரத்தில், குதிரைகளும், யானைகளும், பசுக்களும், ஒட்டகங்களும், கழுதைகளும் ஏராளமாக இருந்தன.


सामन्तराजसङ्घैश्च बलिकर्मभिरावृताम् ।
नानादेशनिवासैश्च वणिग्भिरुपशोभिताम् ।।1.5.14।।

அரசனுக்குக் கப்பம் கட்ட வேண்டி வந்து குழுமியுள்ள அண்டை நாட்டு அரசர்களாலும், பிற நாட்டில் இருந்து வாணிபம் செய்வதற்காக வந்துள்ள வணிகர்களாலும், அந்த நகரம் மேலும் அழகு பெற்று விளங்கியது.


प्रासादै रत्नविकृतै: पर्वतैरुपशोभिताम् ।
कूटागारैश्च सम्पूर्णामिन्द्रस्येवामरावतीम् ।।1.5.15।।

இந்திரனின் ராஜ்ஜியமான அமராவதியைப் போன்ற, அந்த நகரம், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அரண்மனைகளாலும், நெடிதுயர்ந்த மலைகளாலும் அழகு பெற்றிருந்தது.


चित्रामष्टापदाकारां नरनारीगणैर्युताम् ।
सर्वरत्नसमाकीर्णां विमानगृहशोभिताम् ।।1.5.16।।

எழு நிலை மாடங்களுடைய வீடுகளுடனும், அதில் வசிக்கும் ஆடவர், பெண்டிர் ஆகியோருடனும், விலை உயர்ந்த மணிகள் நிறைந்த அந்த நகரம் ‘சொக்கட்டான்’ விளையாட்டிற்கான பலகையைப் போல இருந்தது.

 

गृहगाढामविच्छिद्रां समभूमौ निवेशिताम् ।
शालितण्डुलसम्पूर्णामिक्षुकाण्डरसोदकाम् ।।1.5.17।।
 

அங்கிருந்த வீடுகள் எல்லாம் சம தளத்தில் கட்டப்பட்டிருந்தன. எல்லா வீடுகளிலும் மக்கள் நிறைந்திருந்தனர். எந்த இடமும் காலியாக விடப்படவில்லை. எங்கும் அரிசி ஏராளமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. நீரின் சுவையோ, கரும்பின் சாற்றை ஒத்திருந்தது.


दुन्दुभीभिर्मृदङ्गैश्च वीणाभि: पणवैस्तथा ।
नादितां भृशमत्यर्थं पृथिव्यां तामनुत्तमाम् ।।1.5.18।।

துந்துபிகள், மிருதங்கங்கள், வீணைகள், பணவங்கள் ஆகியவற்றின் ஒலியுடன் கூடிய அயோத்தி நகரத்தைக் காட்டிலும் சிறந்த நகரம் இந்த உலகத்தில் இருக்கவில்லை.


विमानमिव सिद्धानां तपसाधिगतं दिवि ।
सुनिवेशितवेश्मान्तां नरोत्तमसमावृताम् ।।1.5.19।।

 

ஸ்வர்க்கத்தில், தவத்தில் சிறந்த சித்தர்களால், மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வான ஊர்தியைப் போல, மிகச்சிறந்த மனிதர்கள் வாழ்ந்த அந்த நகரம் விளங்கியது.



ये च बाणैर्न विध्यन्ति विविक्तमपरापरम् ।
शब्दवेध्यं च विततं लघुहस्ता विशारदा: ।।1.5.20।।

सिंहव्याघ्रवराहाणां मत्तानां नर्दतां वने ।
हन्तारो निशितैश्शस्त्रैर्बलाद्बाहुबलैरपि ।।1.5.21।।

तादृशानां सहस्रैस्तामभिपूर्णां महारथै: ।
पुरीमावासयामास राजा दशरथस्तदा ।।1.5.22।।
 

அந்த நகரத்தில் வில் வித்தையில் தேர்ந்த, ஆயிரக்கணக்கான மஹாரதர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் தனியாக இருப்பவரையோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாதவர்களையோ, தப்பி ஓடுபவர்களையோ, (பின் தொடரமுடிந்தாலும்)  தாக்க மாட்டார்கள். தன் வசம் இழந்த சிங்கம், புலி, காட்டுப்பன்றிகள் போன்ற மிருகங்களைத் தங்கள் ஆயுதங்களாலும், கைகளில் வலிமையாலும் தாக்கிக் கொல்வார்கள். 

அப்படிப்பட்ட அயோத்தி நகரத்தில் தசரத மன்னர் வசித்து வந்தார்.

 

तामग्निमद्भिर्गुणवद्भिरावृतां
द्विजोत्तमैर्वेदषडङ्गपारगै: ।

सहस्रदैस्सत्यरतैर्महात्मभि
र्महर्षिकल्पै ऋषिभिश्च केवलै: ।।1.5.23।।

அயோத்தி நகரமானது அக்கினி வேள்வியைத் தொடர்ந்து செய்யும் அந்தணர்களாலும், வேத வேதாங்கங்களில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களாலும், ரிஷிகளாலும் நிரம்பி இருந்தது. அம்மக்கள் தாராள மனமுடையவர்களாகவும், உண்மையானவர்களாகவும், கண்ணியமானவர்களுமாக இருந்தார்கள்.

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे पञ्चमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஐந்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...