ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 4
( வால்மீகி மகரிஷி ராமாயணத்தை24000 ஸ்லோகங்களில் இயற்றி,
அதைக் குச லவர்களுக்குக் கற்பித்து, அவர்கள் தங்கள் இனிமையான குரலில் அதைப் பாடிப்
பிரபலப் படுத்தும் படி ஆணையிடுகிறார். குச லவர்களும் ஊர் ஊராகப் போய் ராமாயண காவியத்தைப்
பாடுகிறார்கள். ராமன் நடத்தும் அஸ்வமேத யாகத்திலும் பாடுகிறார்கள். ஸ்ரீ ராமர் அவர்களை
அயோத்தி அரண்மனைக்கு அழைத்து, அங்கே அவர்கள் பாடுவதைக் கேட்கிறார். )
प्राप्तराज्यस्य रामस्य
वाल्मीकिर्भगवानृषि:।
चकार चरितं कृत्स्नं विचित्रपदमात्मवान्।।1.4.1।।
ஆன்மீக ஞானம் நிறைந்த
வால்மீகி மகரிஷி, தனது ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட ராமனின் முழு
சரித்திரத்தையும், அற்புதமான வார்த்தைகளால் அழகுற இயற்றினார்.
चतुर्विंशत्सहस्राणि श्लोकानामुक्तवानृषि:।
तथा सर्गशतान्पञ्च षट्काण्डानि तथोत्तरम् ।।1.4.2।।
வால்மீகி, 24000
ஸ்லோகங்களையும், 500 ஸர்க்கங்களில் அமைத்து, அவற்றை, 6 காண்டங்களாகப்
பிரித்ததல்லாமல், அதன் தொடர்ச்சியாக உத்தர காண்டத்தையும் இயற்றினார்.
कृत्वापि
तन्महाप्राज्ञस्सभविष्यं सहोत्तरम्।
चिन्तयामास कोन्वेतत्प्रयुञ्जीयादिति प्रभु:।।1.4.3।।
இறந்த காலம், நிகழ்
கால்ம, எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் உணரும் சக்தி வாய்ந்த மஹா புத்திமானான
வால்மீகி, உத்தர காண்டம் உள்பட ஏழு காண்டங்களையும் இயற்றியபின்னர், இதை யார் பாடி
அரங்கேற்றுவார் என்று யோசிக்கலானார்.
तस्य चिन्तयमानस्य महर्षेर्भावितात्मन:।
अगृह्णीतां तत: पादौ मुनिवेषौ कुशीलवौ ।।1.4.4।।
அவ்வாறு மரியாதைக்குரிய மகரிஷி யோசித்துக்கொண்டிருந்த
போது, முனிவர்களின் வேடத்தில் இருந்த குச லவர்கள் அவருடைய பாதத்தைத் தொட்டு
வணங்கினார்கள்.
कुशीलवौ तु धर्मज्ञौ राजपुत्रौ यशस्विनौ।
भ्रातरौ स्वरसम्पन्नौ ददर्शाश्रमवासिनौ ।।1.4.5।।
தர்மத்தைப்பற்றிய ஞானம்
உள்ளவர்களும், புகழ் பெற்ற அரச குமாரர்களும், இனிமையான குரல் வளம் பெற்றவர்களுமான,
அந்த குச லவ சகோதரர்களை, வால்மீகி பார்த்தார்.
स तु मेधाविनौ दृष्ट्वा
वेदेषु परिनिष्ठितौ।
वेदोपबृंहणार्थाय तावग्राहयत प्रभु:।।1.4.6।।
குச லவர்கள், அபாரமான
அறிவாற்றல் பெற்றிருப்பதையும், அவர்கள் வேதங்களில் சிறந்த பயிற்சி
பெற்றிருப்பதையும் கண்ட மகரிஷி அவர்களுக்கு, அவர் இயற்றிய ராமாயணத்தைக்
கற்பித்தார்.
काव्यं रामायणं कृत्स्नं सीतायाश्चरितं महत्।
पौलस्त्यवधमित्येव चकार चरितव्रत:।।1.4.7।।
தவத்தில் சிறந்த
வால்மீகி, சீதையின் சரிதத்தையும், ராவணனின் வதத்தையும் உள்ளிட்ட ராமாயணம்
முழுவதையும் இயற்றி முடித்தார்.
पाठ्ये गेये च मधुरं
प्रमाणैस्त्रिभिरन्वितम्।
जातिभिस्सप्तभिर्बद्धं तन्त्रीलयसमन्वितम्।।1.4.8।।
रसैश्शृङ्गारकारुण्यहास्यवीरभयानकै:।
रौद्रादिभिश्च संयुक्तं काव्यमेतदगायताम्।।1.4.9।।
तौ तु गान्धर्वतत्त्वज्ञौ मूर्छनास्थानकोविदौ।
भ्रातरौ स्वरसम्पन्नौ गन्धर्वाविव रूपिणौ।।1.4.10।।
रूपलक्षणसम्पन्नौ मधुरस्वरभाषिणौ।
बिम्बादिवोद्धृतौ बिम्बौ रामदेहात्तथाऽपरौ।।1.4.11।।
மங்களகரமான உருவ
அழகும், மிகவும் இனிமையான குரலும் உடைய அந்தக் குச லவர்கள், மனித வடிவில் வந்த
கந்தர்வர்களை ஒத்திருந்தார்கள். ராமனின் பிரதிபிம்பம் போலக் காணப்பட்டார்கள்.
நினைவில் பதிந்து விடக்கூடிய இந்த ராமாயண காவியம், சொல்வதற்கு இனிமையாகவும்,
பாடுவதற்கு ஏற்றதாகவும் அமைந்திருந்தது. இந்த அருமையான காவியம் மூன்று காலங்களில்
பாடக்கூடியதாகவும், ஏழு ஸ்வரங்களுக்குள் அமைந்ததாகவும், வாத்தியங்களுடன் இழைந்து
பாடக்கூடியதாகவும் இருந்தது. இவை மட்டுமன்றி, ஸ்ருங்காரம், ஹாஸ்யம்,
காருண்யம், வீரம், பயானகம், ரௌத்ரம்,
முதலாய ஒன்பது சுவைகளையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்த அற்புதமான காவியத்தை குச
லவர்கள் பாடினார்கள்.
तौ राजपुत्रौ
कार्त्स्न्येन धर्म्यमाख्यानमुत्तमम्।
वाचोविधेयं तत्सर्वं कृत्वा काव्यमनिन्दितौ।।1.4.12।।
ऋषीणां च द्विजातीनां साधूनां च समागमे।
यथोपदेशं तत्त्वज्ञौ जगतुस्सुसमाहितौ।।1.4.13।।
அந்த இளவரசர்கள், தர்மத்தைச் சார்ந்து அமைந்திருந்த அந்த உத்தமமான காவியம்
முழுவதையும், எந்தவிதக் குற்றம், குறைகளுமின்றி, வால்மீகியானவர் அவர்களுக்கு
எவ்வாறு கற்பித்தாரோ, அதே போல, ரிஷிகளும், அந்தணர்களும் நிரம்பியிருந்த அந்த
சபையில் பாடினார்கள்.
महात्मानौ महाभागौ सर्वलक्षणलक्षितौ।
तौ कदाचित्समेतानामृषीणां भावितात्मनाम्।
आसीनानां समीपस्थाविदं काव्यमगायताम्।।1.4.14।।
எல்லா லக்ஷணங்களும்,
கம்பீரமும் பொருந்திய அந்த இளவரசர்கள் மரியாதைக்குரிய ரிஷிகள் எல்லாரும்
அமர்ந்திருந்த ஒரு சபையில், அவர்கள் முன்னே, இந்தக் காவியத்தைப் பாடினார்கள்.
तच्छ्रुत्वा मुनयस्सर्वे बाष्पपर्याकुलेक्षणा:।
साधुसाध्विति तावूचु: परं विस्मयमागता:।।1.4.15।।
அதை கேட்ட அந்த
ரிஷிகள், மிகவும் ஆச்சரியப்பட்டுக் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன், “ மிக நன்று! மிக
நன்று!” என்று அவர்களைப் பாராட்டினார்கள்.
ते प्रीतमनसस्सर्वे मुनयो धर्मवत्सला:।
प्रशशंसु: प्रशस्तव्यौ गायमानौ कुशीलवौ।।1.4.16।।
தர்மத்தின் மேல்
பற்றுக் கொண்ட அந்த முனிவர்கள், மனம் மகிழ்ந்து, புகழ்ச்சிக்குத் தகுதியான வகையில்
பாடிய குசலவர்களுக்குப் புகழாரம் சூட்டினார்கள்.
अहो गीतस्य माधुर्यं श्लोकानां च विशेषत:।
चिरनिर्वृत्तमप्येतत्प्रत्यक्षमिव दर्शितम्।।1.4.17।।
“ ஆஹா! இவர்கள் பாடுவது
எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அதுவும் அந்தப் பாடல்கள்! எப்போதோ நடந்த
நிகழ்ச்சிகளைப் பற்றியதானாலும், கண் முன்னே நடப்பது போல் இருக்கிறதே!” என்று
பாராட்டினார்கள்.
प्रविश्य तावुभौ सुष्ठु भावं सम्यगगायताम्।
सहितौ मधुरं रक्तं सम्पन्नं स्वरसम्पदा।।1.4.18।।
அந்த இருவரும்
சேர்ந்து மனத்தைக் கவரும் குரலில், சுஸ்வரமாகவும், இனிமையாகவும், மிகச்
சிறப்பாகவும் பாடினார்கள்.
एवं प्रशस्यमानौ तौ
तपश्श्लाघ्यैर्महात्मभि:।
संरक्ततरमत्यर्थं मधुरं तावगायताम्।।1.4.19।।
தவ சிரேஷ்டர்களால்,
இவ்வாறு புகழப்பட்டதில், குச லவர்கள் இன்னும் ஊக்கம் அடைந்து, முன்னைக் காட்டிலும்
இனிமையாகப் பாடினார்கள்.
प्रीत:
कश्चिन्मुनिस्ताभ्यां संस्थित: कलशं ददौ।
प्रसन्नो वल्कलं कश्चिद्ददौ ताभ्यां महायशा:।।1.4.20।।
அந்தச் சபையில் இருந்த
ஒரு முனிவர் அவர்களுடைய இசையில் மகிழ்ந்து தன் நீர்க்கலசத்தைப் பரிசாக அளித்தார்.
இன்னுமொரு புகழ் பெற்ற முனிவர் தன்னிடமிருந்த மரவுரியை அளித்தார்.
आश्चर्यमिदमाख्यानं
मुनिना सम्प्रकीर्तितम्।
परं कवीनामाधारं समाप्तं च यथाक्रमम्।।1.4.21।।
வால்மீகியால் முறைப்படி
இயற்றப்பட்டுள்ள இந்தச் சிறப்பான காவியம், கவிஞர்களுக்கெல்லாம் ஆதாரமான நூலாக
அமைந்துள்ளது.
अभिगीतमिदं गीतं
सर्वगीतेषु कोविदौ।
आयुष्यं पुष्टिजनकं सर्वश्रुतिमनोहरम्।।1.4.22।।
प्रशस्यमानौ सर्वत्र कदाचित्तत्र गायकौ ।
रथ्यासु राजमार्गेषु ददर्श भरताग्रज:।।1.4.23।।
சுஸ்வரத்துடன்
பாடுவதில் சிறந்த இந்த இரண்டு பாடகர்களும், இந்தக் காவியத்தைத் தெருக்களிலும், ராஜ
மார்க்கங்களிலும் பாடிக்கொண்டு போனார்கள். கேட்பதற்கு இனிமையாகவும், உள்ளத்துக்கு
ஊட்டம் வழங்குவதாகவும் இருந்த அந்தக் காவியத்தை அவர்கள் பாடிக் கொண்டிருந்த போது,
ஒரு நாள் அரசரான ராமர் அதைக் கேட்க
நேர்ந்தது.
स्ववेश्म चानीय तदा
भ्रातरौ स कुशीलवौ।
पूजयामास पूजार्हौ रामश्शत्रुनिबर्हण:।।1.4.24।।
எதிரிகளை அழிக்கும்
திறன் வாய்ந்த ராமர், பூஜிக்கத்தகுந்த அந்த குச லவர்களைத் தன் அரண்மனைக்கு அழைத்து
வரச் செய்து அவர்களுக்குத் தக்க மரியாதை செய்தார்.
आसीन: काञ्चने दिव्ये स च सिंहासने प्रभु:।
उपोपविष्टस्सचिवैर्भ्रातृभिश्च परन्तप:।।1.4.25।।
அரசராகிய ராமர்,
மந்திரிகளாலும், சகோதரர்களாலும் சூழப்பட்டுத் தங்கத்தினாலான சிம்மாசனத்தில்
அமர்ந்திருந்தார்.
दृष्ट्वा तु रूपसम्पन्नौ तावुभौ नियतस्तथा।
उवाच लक्ष्मणं रामश्शत्रुघ्नं भरतं तदा।।1.4.26।।
சுய கட்டுப்பாடுள்ள
ராமர், மிகுந்த அழகுடைய அந்த சகோதரர்களைப்பார்த்துத் தன் சகோதரர்களான, லக்ஷ்மணன்,
சத்ருக்னன், பரதன் ஆகியோரிடம்,
श्रूयतामिदमाख्यानमनयोर्देववर्चसो:।
विचित्रार्थपदं सम्यग्गायकौ तावचोदयत्।।1.4.27।।
“சொல்லும் பொருளும் மிக
அழகாக அமைந்துள்ள இந்தக் காவியத்தைக் கேட்போம்” என்று கூறி, தேவர்களைப் போல ஒளி
பொருந்திய குச லவர்களிடம் அந்தக் காவியத்தைப் பாடுமாறு வேண்டினார்.
तौ चापि मधुरं रक्तं
स्वञ्चितायतनिस्वनम् ।
तन्त्रीलयवदत्यर्थं विश्रुतार्थमगायताम् ।।1.4.28।।
அவர்களும், தங்கள் கணீரென்ற
இனிமையான குரலில், வாத்தியக்கருவிகளுடன் இணைந்து, பொருளாழம் நிறந்த அந்தக்
காவியத்தைக் கேட்போர் மனம் கவரும் விதமாகப் பாடினார்கள்.
ह्लादयत्सर्वगात्राणि
मनांसि हृदयानि च।
श्रोत्राश्रयसुखं गेयं तद्बभौ जनसंसदि।।1.4.29।।
அவர்களுடைய பாடல்
அந்தச் சபையில் இருந்தோர்களின் காதுக்கு இனிமையாக இருந்தது மட்டுமன்றி, அவர்களின்
மனம், நெஞ்சம் என்று, அனைத்துப் புலன்களையும் மகிழ்வித்தது.
इमौ मुनी पार्थिवलक्षणान्वितौ
कुशीलवौ चैव महातपस्विनौ।
ममापि तद्भूतिकरं प्रवक्ष्यते
महानुभावं चरितं निबोधत।।1.4.30।।
அந்தச் சபையினரைப்
பார்த்து ராமர் கூறினார், “ குசனும் லவனும், அரச லக்ஷணங்களுடன் விளங்கிய போதிலும்,
மகா தபஸ்விகள். எனக்கும் மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுத்து, நன்மை பயக்கும் இந்தக்
காவியத்தை அவர்கள் பாடுவதைக் கவனத்துடன் கேளுங்கள். “
ततस्तु तौ रामवच:प्रचोदितावगायतां मार्गविधानसम्पदा।
स चापि राम: परिषद्गतः शनैर्बुभूषयासक्तमना बभूव।।1.4.31।।
ராமரால் இவ்வாறு உற்சாகப்படுத்தப்பட்ட
குச லவர்கள், பரம்பரையான முறைப்படி அந்தச் சபையின் முன்னே பாடத் தொடங்கினார்கள்.
ராமரும், மன அமைதி வேண்டி அவர்களின் பாடலில் முழு கவனத்தையும் செலுத்தினார்.
.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे चतुर्थस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் நான்காவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment