Monday, 4 March 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் – 8

(மந்தரை கைகேயியைத் தூண்டி விடுகிறாள். கைகேயி ராமனின் குண நலன்களை எடுத்துக் கூறுகிறாள். மந்தரை கொஞ்சம் கொஞ்சமாகக் கைகேயியின் மனதை மாற்றி, ராமன் முடி சூட்டிக்கொண்டால் பரதனுக்கு ஆபத்து உண்டாகும் என்று கூறி ராமனை நாட்டை விட்டு அனுப்பி விட்டுப் பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும் என்கிறாள்.)


मन्थरा त्वभ्यसूयैनामुत्सृज्याभरणं च तत्।
उवाचेदं ततो वाक्यं कोपदुःखसमन्विता।।2.8.1।।

கைகேயியின் பேச்சால் கோபமும், வருத்தமும் மேலிட, மந்தரை கைகேயி பரிசாக அளித்த ஆபரணத்தைத் தூக்கிப் போட்டு விட்டு இவ்வாறு கூறினாள்:

 

हर्षं किमिदमस्थाने कृतवत्यसि बालिशे।
शोकसागरमध्यस्थमात्मानं नावबुध्यसे।।2.8.2।।

“மூடப்பெண்ணே!  நீ துன்பக்கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதை உணராமல், தவறான நேரத்தில் ஏன் இப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாய்?

 

मनसा प्रहसामि त्वां देवि दुःखार्दिता सती।
यच्छोचितव्ये हृष्टाऽसि प्राप्येदं व्यसनं महत्।।2.8.3।।

தேவி! இப்படி ஒரு துர்ப்பாக்கியம் உனக்கு ஏற்பட்டிருக்கும் போது, துன்பப் படுவதற்குப் பதிலாக, மகிழ்ச்சி அடைகிறாயே, உன்னை நினைத்து எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.

 

शोचामि दुर्मतित्वं ते का हि प्राज्ञा प्रहर्षयेत्।
अरेस्सपत्नीपुत्रस्य वृद्धिं मृत्योरिवागताम्।।2.8.4।।

உன்னுடைய தவறான அபிப்பிராயத்தைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். (தனது எதிரியைப் போன்ற) தனது சக்களத்தியின் மகனின் உயர்வைக் கண்டு எந்த புத்தியுள்ள பெண்ணாவது மகிழ்ச்சி அடைவாளா? அது மரணத்துக்குச் சமம் அல்லவா?”

 

भरतादेव रामस्य राज्यसाधारणाद्भयम्।
तद्विचिन्त्य विषण्णाऽस्मि भयं भीताऽद्धि जायते।।2.8.5।।

பரதனுக்கும், ராமனுக்கும் இந்த ஆட்சியில் சம பங்கு இருப்பதால், பரதனை நினைத்து ராமன் அச்சத்தில் இருப்பான். இதைப் பற்றி யோசித்து நான் மிகவும் கவலைப் படுகிறேன். ஏனென்றால், பயத்தில் இருந்து தான் ஆபத்து உண்டாகிறது.

 

लक्ष्मणो हि महेष्वासो रामं सर्वात्मना गतः।
शत्रुघ्नश्चापि भरतं काकुत्स्थं लक्ष्मणो यथा।।2.8.6।।

உயர்ந்த வில்லை ஏந்தும் லக்ஷ்மணன், தனது தமையனான ராமனிடம் முழுமையாக சரணடைந்து விட்டதைப் போலவே, சத்ருக்கினனும், பரதனிடம் சரணடைந்திருக்கிறான்.

 

प्रत्यासन्नक्रमेणापि भरतस्यैव भामिनि।
राज्यक्रमो विप्रकृष्टस्तयोस्तावत्कनीयसोः।।2.8.7।।

பரதன் ராமனுக்கு அடுத்துப் பிறந்ததால், ராமனுக்கு அடுத்த உரிமை பரதனுக்குத் தான். மற்ற இருவரும் அதன் பின்னே பிறந்ததால், அவர்களுக்கு அரசாளும் வாய்ப்பு இல்லை.

 

विदुषः क्षत्रचारित्रे प्राज्ञस्य प्राप्तकारिणः।
भयात्प्रवेपे रामस्य चिन्तयन्ती तवात्मजम्।।2.8.8।।

க்ஷத்திரிய தர்மத்தை நன்கு அறிந்தவன் ராமன். சரியான நேரத்தில் எதைச் செய்ய வேண்டும்  என்பதை அவன் அறிவான். உன்னுடைய மகனின் விதியை நினைத்து நான் நடுங்குகிறேன்.

 

सुभगा खलु कौशल्या यस्याः पुत्रोऽभिषेक्ष्यते।
यौवराज्येन महता श्वः पुष्येण द्विजोत्तमैः।।2.8.9।।

நாளை புஷ்ய நக்ஷத்திரத்தன்று, சிறந்த அந்தணர்களால், முடிசூட்டிக்கொள்ளப் போகும் மகனைப் பெற்ற கௌசல்யை தான், பாக்கியசாலி.

 

प्राप्तां सुमहतीं प्रीतिं प्रतीतां तां हतद्विषम्।
उपस्थास्यसि कौसल्यां दासीव त्त्वं कृताञ्जलिः।।2.8.10।।

தனது எதிரிகளை அகற்றி விட்டு மகிழ்ந்திருக்கும், அந்தப் புகழ் பெற்ற கௌசல்யைக்கு, கூப்பிய கைகளுடன் ஒரு தாதியைப் போல் நீ சேவை செய்ய வேண்டும்.

 

एवं चेत्त्वं सहास्माभिस्तस्याः प्रेष्या भविष्यसि।
पुत्रश्च तव रामस्य प्रेष्यभावं गमिष्यति।।2.8.11।।

நீயும் எங்களைப் போல் ஒரு தாதியாகி விட்டால், உன்னுடைய மகனும் ராமனுக்கு ஒரு சேவகனைப் போல் தான் இருப்பான்.

 

हृष्टाः खलु भविष्यन्ति रामस्य परमास्स्त्रियः।
अप्रहृष्टा भविष्यन्ति स्नुषास्ते भरतक्षये।।2.8.12।।

ராமனின் அரண்மனையில் உள்ள பெண்கள் அனைவரும் மகிழ்ந்திருப்பார்கள். பரதனின் நிலைமை கீழே இறங்கினால், உன்னுடைய மருமகள் மகிழ்ச்சியை இழந்து விடுவாள். “

 

तां दृष्ट्वा परमप्रीतां ब्रुवन्तीं मन्थरां ततः।
रामस्यैव गुणान्देवी कैकेयी प्रशशंस ह।।2.8.13।।

மிகுந்த வருத்தத்தில் இவ்வாறு பேசிய மந்தரையைப் பார்த்துக் கைகேயி, ராமனின் நற்குணங்களைப் புகழ்ந்து பேசலானாள்.

 

धर्मज्ञो गुरुभिर्दान्तः कृतज्ञस्सत्यवाक्छुचिः।
रामो राज्ञ स्सुतो ज्येष्ठो यौवराज्यमतोऽर्हति।।2.8.14।।

“ராமன் தர்மங்களை அறிந்தவன். மேலானவர்களால், ஒழுக்கம் கற்பிக்கப்பட்டவன். அவனுக்கு நன்றியுணர்வும், சத்தியத்தின் மேல் ஈடுபாடும் அதிகம். அவன் குற்றமற்றவன். அரசரின் மூத்த புதல்வன். ஆகவே, அவனுக்கு பட்டம் சூட்டிக்கொள்ள எல்லா உரிமையும் இருக்கிறது.

 

भ्रातृ़न्भृत्यांश्च दीर्घायुः पितृवत्पालयिष्यति।
सन्तप्स्यसे कथं कुब्जे श्रुत्वा रामाभिषेचनम्।।2.8.15।।

நீண்ட ஆயுளுடைய ராமன் தனது சகோதரர்களையும், சேவகர்களையும், ஒரு தந்தையாரைப் போல் அன்புடன் காப்பாற்றுவான். நீ எதற்காக, ராமனின் பட்டாபிஷேகத்தை நினைத்து வருந்துகிறாய்?”

 

भरतश्चापि रामस्य ध्रुवं वर्षशतात्परम्।
पितृपैतामहं राज्यमवाप्ता पुरुषर्षभः।।2.8.16।।

நூறு ஆண்டுகள் ராமன் ஆட்சி செய்த பிறது, பரதனும் அவனுடைய முன்னோர்களின் ராஜ்ஜியத்தை ஆள்வான்.

 

सा त्वमभ्युदये प्राप्ते वर्तमाने च मन्थरे।
भविष्यति च कल्याणे किमर्थं परितप्यसे।।2.8.17।।

மந்தரையே! நாம் முற்காலத்திலும் செல்வ வளத்தோடு வாழ்ந்திருக்கிறோம். இப்போதும் செல்வ வளத்தோடு தான் வாழ்கிறோம். இனி, எதிர்காலத்திலும், செல்வ வளத்தோடு வாழப்போகிறோம். பின்னர் எதற்காக வருந்துகிறாய்?

 

यथा मे भरतो मान्यस्तथा भूयोऽपि राघवः।
कौशल्यातोऽतिरिक्तं च सोऽनुशुश्रूषते हि माम्।।2.8.18।।

பரதன் எனக்கு முக்கியமானவன் என்றால், ராமன் அவனைக் காட்டிலும் முக்கியமானவன். ராமன் தனது தாயாரான கௌசல்யைக்குச் சேவை செய்வதை விட அதிகமாக எனக்குத் தான் சேவை செய்கிறான்.

 

राज्यं यदि हि रामस्य भरतस्यापि तत्तदा।
मन्यते हि यथात्मानं तथा भ्रातृ़ंश्च राघवः।।2.8.19।।

இந்த ராஜ்ஜியம், ராமனுடையது என்றால், அது பரதனுடையதும் ஆகும், ஏனென்றால், ராமன் தனது சகோதரர்களையும்,  தன்னைப் போலவே கருதுகிறான்.”

 

कैकेयीवचनं श्रुत्वा मन्थरा भृशदुःखिता।
दीर्घमुष्णं च विनिश्वस्य कैकेयीमिदमब्रवीत्।।2.8.20।।

கைகேயியின் வார்த்தைகளைக் கேட்டு, மிகவும் வருத்தமுற்ற மந்தரை, நீண்ட பெருமூச்செறிந்து விட்டுக் கைகேயியிடம் கூறினாள்:

 

अनर्थदर्शिनी मौर्ख्यान्नात्मानमवबुध्यसे।
शोकव्यसनविस्तीर्णे मज्जन्ती दुःखसागरे।।2.8.21।।

கண்ணீரும், துன்பங்களும் நிறைந்த துயரக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் நீ, உனது மூடத்தனத்தால், உனக்கு எது நன்மை தரும் என்பதை அறியாமல் இருக்கிறாய்.

 

भविता राघवो राजा राघवस्यानु यस्सुतः।
राजवंशात्तु कैकेयि भरतःपरिहास्यते।।2.8.22।।

“ரகு வம்சத்தவனான ராமன் அரசனாவான்; அவனுக்குப் பிறகு, அவனுடைய புதல்வன் அரசனாவான். கைகேயியே! பரதனுக்கு ஆட்சி கிடைக்க வாய்ப்பே இல்லை.

 

न हि राज्ञस्सुता स्सर्वे राज्ये तिष्ठन्ति भामिनि।
स्थाप्यमानेषु सर्वेषु सुमहाननयो भवेत्।।2.8.23।।

“அழகிய பெண்ணே! ஒரு மன்னனுடைய அனைத்துப் புதல்வர்களும் மன்னர்களாவதில்லை. அப்படி அவர்கள் மன்னர்களாக்கப் பட்டால், குழப்பம் தான் மிஞ்சும்.

 

तस्माज्ज्येष्ठे हि कैकेयि राज्यतन्त्राणि पार्थिवाः।
स्थापयन्त्यनवद्याङ्गि गुणवत्स्वितरेष्वपि।।2.8.24।।

ஆகவே, கைகேயியே! ஒரு மன்னனின் ராஜ்ஜியம், அவனுடைய மூத்த புதல்வனுக்கோ, அல்லது, திறமையும், நற்குணங்களும் நிறைந்த புதல்வனுக்கோ, அளிக்கப்படுகிறது.

 

असावत्यन्तनिर्भग्नस्तव पुत्रो भविष्यति।
अनाथवत्सुखेभ्यश्च राजवंशाच्च वत्सले।।2.8.25।।

அன்பானவளே! ராஜ்ஜியமும் கிடைக்காமல், அதன் வசதிகளும் கிடைக்காமல், உன் புதல்வன் முழுமையாக விரக்தியடைந்து மனம் உடைந்து விடுவான்.

 

साऽहं त्वदर्थे सम्प्राप्ता त्वं तु मां नावबुद्ध्यसे।
सपत्नि वृद्धौ या मे त्वं प्रदेयं दातुमिच्छसि।।2.8.26।।

உனக்கு நன்மை செய்யத் தான் நான் இருக்கிறேன். ஆனால், நீ என்னைப் புரிந்து கொள்ளாமல், உன்னுடைய சக்களத்தியின் வளர்ச்சியில் மகிழ்ந்து, எனக்குப் பரிசளிக்க விரும்புகிறாய்.

 

ध्रुवं तु भरतं रामः प्राप्य राज्यमकण्टकम्।
देशान्तरं वा नयिता लोकान्तरमथाऽपि वा।।2.8.27।।

எந்த இடையூறும் இல்லாத இந்த ராஜ்ஜியத்தை அடைந்த பின், ராமன் பரதனை நாட்டை விட்டோ அல்லது இந்த உலகத்தையே விட்டோ, அனுப்பி விடுவான். அது நிச்சயம்.

 

बाल एव हि मातुल्यं भरतो नायितस्त्वया।
सन्निकर्षाच्च सौहार्दं जायते स्थावरेष्वपि।।2.8.28।।

பரதனுடைய சிறு வயது முதலே, அவனை நீ அவனது மாமாவின் வீட்டுக்கு அனுப்பி வந்திருக்கிறாய். அருகில் இருந்தால் தான் உயிரற்ற பொருட்களிடையே கூட  அன்பு வளரும்.

 

भरतस्याप्यनुवशश्शत्रुघ्नोऽपि समं गतः।
लक्ष्मणो हि यथा रामं तथाऽसौ भरतं गतः।।2.8.29।।

பரதனுடைய சொற்படி நடக்கும் சத்துருக்கினனும் அவனுடன் சென்றிருக்கிறான். ராமனிடம் லக்ஷ்மணன் சரணடைந்துள்ளது போல, சத்துருக்கினனும், பரதனிடம் சரணடைந்துள்ளான்.

 

श्रूयते हि द्रुमः कश्चिच्छेत्तव्यो वनजीविभिः।
सन्निकर्षादिषीकाभिर्मोचितः परमाद्भयात्।।2.8.30।।

காட்டு வாசிகள் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்று தீர்மானித்தால் கூட, அதைச் சுற்றி ‘இசிகா’ என்னும் புல் புதர் போல் வளர்ந்திருந்தால், அதனை வெட்டாமல் விட்டு விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், அல்லவா?

 

गोप्ता हि रामं सौमित्रिर्लक्ष्मणं चापि राघवः।
अश्विनोरिव सौभ्रात्रं तयोर्लोकेषु विश्रुतम्।।2.8.31।।

லக்ஷ்மணன் ராமனைப் பாதுகாப்பது போல், ராமனும் லக்ஷ்மணனைப் பாதுகாக்கிறான். அவர்கள் இருவரின் சகோதர பாசம் அஸ்வினி குமாரர்களின் பாசத்தைப் போன்றது என்று உலகம் புகழ்கிறது.

 

तस्मान्न लक्ष्मणे रामः पापं किञ्चित्करिष्यति।
रामस्तु भरते पापं कुर्यादिति न संशयः।।2.8.32।।

ஆகவே, ராமன் லக்ஷ்மணனுக்கு எந்த விதத் துன்பத்தையும் தர மாட்டான். ஆனால், பரதனைப் பொருத்தவரை, சந்தேகமில்லாமல் ராமன் அவனுக்குத் தீங்கிழைப்பான்.

 

तस्माद्राजगृहादेव वनं गच्छतु ते सुतः।
एतद्धि रोचते मह्यं भृशं चापि हितं तव।।2.8.33।।

ஆகவே உன் மகன் ராஜக்ருஹத்திலிருந்து (பரதனுடைய மாமாவின் வீடு) நேரே காட்டுக்குத் தான் செல்வான். அது தான் எனக்கும் இன்பம் தரும். அதனால் தான் உனக்கும் நன்மை உண்டாகும். ( மந்தரை வெறுப்பில் இவ்வாறு பேசுகிறாள்.)

 

एवं ते ज्ञातिपक्षस्य श्रेयश्चैव भविष्यति।
यदि चेद्भरतो धर्मात्पित्र्यं राज्यमवाप्स्यसि।।2.8.34।।

பரதனுக்கு, அவனுடைய முன்னோர்களின் ராஜ்ஜியம் கிடைத்தால், உனக்கு மட்டும் அல்லாது, உன் உறவினர்களுக்கும் அதனால் நன்மை உண்டாகும்.

 

स ते सुखोचितो बालो रामस्य सहजो रिपुः।
समृद्धार्थस्य नष्टार्थो जीविष्यति कथं वशे।।2.8.35।।

உனது மகன், இளையவனான பரதன் வசதிகளுக்குப் பழக்கப்பட்டவன். அவன் ராமனுடன் பிறந்த அவனது எதிரி. தனது செல்வம் எல்லாம் இழந்து, ராமனுக்கு அடங்கி அவன் எவ்வாறு வாழ்வான்?

अभिद्रुतमिवारण्ये सिंहेन गजयूथपम्।
प्रच्छाद्यमानं रामेण भरतं त्रातुमर्हसि।।2.8.36।।

காட்டில், சிங்கத்தினால் தாக்கப்பட்டுள்ள யானைத் தலைவனைப் போன்று, பரதன் ராமனால் துன்பப்படப் போகிறான். அத்தகைய துன்பத்தில் இருந்து நீ பரதனைக் காப்பாற்ற வேண்டும்.

 

दर्पान्निराकृता पूर्वं त्वया सौभाग्यवत्तया।
राममाता सपत्नी ते कथं वैरं न शातयेत्।।2.8.37।।

உன் கணவருக்கு மிகவும் பிடித்தமான மனைவி என்ற விதத்தில், நீ பலமுறை கௌசல்யையை மட்டம் தட்டியிருக்கிறாய். இப்போது, அவள் அதற்கு பதிலடி கொடுக்காமல் இருப்பாளா?

 

यदा हि रामः पृथिवीमवाप्स्यति प्रभूतरत्नाकरशैलपत्तनाम्।
तदा गमिष्यस्यशुभं पराभवं सहैव दीना भरतेन भामिनि।।2.8.38।।

அழகியே! ராமன் இந்தக் கடலும், மலையும், நகரங்களும் சேர்ந்த ராஜ்ஜியத்துக்குத் தலைவனாக ஆகிவிட்டால், பரதனுடன், நீயும் உன் நிலையில் தாழ்ந்து, பரிதாபத்துக்கு உரியவளாக ஆகிவிடுவாய்.

 

यदा हि रामः पृथिवीमवाप्स्यति ध्रुवं प्रणष्टो भरतो भविष्यति।
अतो हि सञ्चिन्तय राज्यमात्मजे परस्य चैवाद्य विवासकारणम्।।2.8.39।।

ராமன் இந்த ராஜ்ஜியத்தின் அதிபதி ஆனால், பரதனுக்கு அழிவு தான். ஆகவே, உன் மகன் பரதனுக்கு ராஜ்ஜியம் கிடைக்கவும், உன் எதிரியாகிய ராமனை நாடு கடத்தவும் செய்யும் வழியைப் பற்றி இப்போதே,  யோசி.”


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे अष्टमस्सर्गः।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் எட்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

04 .03.2024

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...