Sunday, 3 March 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் – 7

(மந்தரை ராமனின் பட்டாபிஷேகத்தைப் பற்றிக் கைகேயியிடம் கூறுகிறாள். அதைக் கேட்டு மகிழ்ந்த கைகேயி, மந்தரைக்கு ஆபரணங்களைப் பரிசாக வழங்குகிறாள். )


ज्ञातिदासी यतो जाता कैकेय्यास्तु सहोषिता।
प्रासादं चन्द्रसङ्काशमारुरोह यदृच्छया।।2.7.1।।

கைகேயி பிறந்ததில் இருந்து, அவளுடனேயே வசித்துவரும், அவளுடைய தாசியான மந்தரை, நிலவைப் போல் ஒளி வீசிக்கொண்டிருந்த கைகேயியின் அரன்மணைக்குள் பிரவேசித்தாள்.

 

सिक्तराजपथां कृत्स्नां प्रकीर्णकुसुमोत्कराम्।
अयोध्यां मन्थरा तस्मात्प्रासादादन्ववैक्षत।।2.7.2।।

அயோத்தியின் முக்கிய வீதிகளில் எல்லாம் நீர் தெளிக்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டு இருந்ததை அந்த அரண்மனையில் இருந்து பார்த்தாள்.

 

पताकाभिर्वरार्हाभिर्ध्वजैश्च समलङ्कृताम्।
वृतां छन्दपथैश्चापि शिरस्स्नातजनैर्वृताम्।।2.7.3।।

माल्यमोदकहस्तैश्च द्विजेन्द्रैरभिनादिताम्।
शुक्लदेवगृहद्वारां सर्ववादित्रनिस्वनाम्।।2.7.4।।

सम्प्रहृष्टजनाकीर्णां ब्रह्मघोषाभिनादिताम्।
प्रहृष्टवरहस्त्यश्वां सम्प्रणर्दितगोवृषाम्।।2.7.5।।

प्रहृष्टमुदितैः पौरैरुच्छ्रितध्वजमालिनीम्।
अयोध्यां मन्थरा दृष्ट्वा परं विस्मयमागता।।2.7.6।।

அயோத்தி நகரம் முழுவதும், விலை உயர்ந்த கொடிகளாலும், பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும், வளைந்து செல்லும் வீதிகள் அனைத்திலும், மக்கள் தலைக்குக் குளித்து விட்டு இங்கும் அங்கும் நடமாடிக்கொண்டிருப்பதையும், இசைக் கருவிகளின் ஒலியுடன் கலந்து, கைகளில் மலர்மாலைகளையும், மோதகங்களையும் வைத்துக்கொண்டு சிறந்த அந்தணர்கள் செய்த வேதகோஷங்களால் எதிரொலித்துக்கொண்டிருக்கும்,  வெள்ளை நிறக் கதவுகளைக்கொண்ட கோயில்களையும், மிகுந்த உற்சாகத்துடன் ஒலியெழுப்பிக் கொண்டிருந்த குதிரைகளையும், எருதுகளையும், மகிழ்ச்சியுடன் நீண்ட கொடிகளை அசைத்துக் கொண்டிருந்த அயோத்தி மக்களையும், கண்ட மந்தரை ஆச்சரியத்தில் மூழ்கினாள்.

 

 

प्रहर्षोत्फुल्लनयनां पाण्डुरक्षौमवासिनीम्।
अविदूरे स्थितां दृष्ट्वा धात्रीं पप्रच्छ मन्थरा।।2.7.7।।

வெண்பட்டு உடுத்திக்கொண்டு அருகே நின்றிருந்த அரண்மனைத் தாதியிடம் மந்தரை கேட்டாள்:

 

उत्तमेनाभिसंयुक्ता हर्षेणार्थपरा सती।
राममाता धनं किन्नु जनेभ्यस्सम्प्रयच्छति।।2.7.8।।

“செல்வத்தைச் சேர்ப்பதில் மிகவும் விருப்பம் கொண்ட ராமனுடைய அன்னை எதற்காகத் தனது செல்வத்தை மக்களுக்கு இப்படி வாரி வழங்குகிறாள்?

 

अतिमात्रप्रहर्षोऽयं किं जनस्य च शंस मे।
कारयिष्यति किं वापि सम्प्रहृष्टो महीपतिः।।2.7.9।।

இந்த மக்கள் எதற்காக இப்படி அளவுக்கு மீறிய மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்? அரசர் மகிழ்ச்சியுடன் என்ன காரியம் செய்யப்போகிறார்?”

 

विदीर्यमाणा हर्षेण धात्री तु परया मुदा।
आचचक्षेऽथ कुब्जायै भूयसीं राघव श्रियम्।।2.7.10।।

பொங்கி வழியும் மகிழ்ச்சியுடன் அந்தத் தாதியானவள், கூன் முதுகு கொண்ட மந்தரையிடம் ராமனுக்குக் கிடைக்கப் போகும், அந்தப் பெரும் பாக்கியத்தைப் பற்றிக் கூறினாள்.

 

श्वः पुष्येण जितक्रोधं यौवराज्येन राघवम्।
राजा दशरथो राममभिषेचयिताऽनघम्।।2.7.11।।

“நாளை, புஷ்ய நக்ஷத்திரம் கூடிய நன்னாளில், தசரத மன்னர், குற்றமற்ற ராகவனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்யப் போகிறார்.”‘

 

धात्र्यास्तु वचनं शृत्वा कुब्जा क्षिप्रममर्षिता।
कैलासशिखराकारा त्प्रासादादवरोहत।।2.7.12।।

தாதியின் அந்த வார்த்தைகளைக் கேட்ட மந்தரை, மிகுந்த கோபம் கொண்டு, கைலாச மலையின் சிகரத்தைப் போல் உயர்ந்திருந்த அந்த அரண்மனையில் இருந்து கீழே இறங்கினாள்.

 

सा दह्यमाना कोपेन मन्थरा पापदर्शिनी।
शयानामेत्य कैकेयीमिदं वचनमब्रवीत्।।2.7.13।।

தீய எண்ணம் கொண்ட மந்தரை, கொழுந்து விட்டெரியும் கோபத்துடன், தனது மஞ்சத்தில் படுத்துக் கொண்டிருந்த கைகேயியிடம் இவ்வாறு கூறினாள்:

 

उत्तिष्ठ मूढे किं शेषे भयं त्वामभिवर्तते।
उपप्लुतामौघेन किमात्मानं न बुध्यसे।।2.7.14।।

“மூடப்பெண்ணே! எழுந்திரு! ஏன் படுத்துக் கொண்டிருக்கிறாய்? உனக்குப் பயங்கரமான நிலைமை வரப்போகிறது. நீ துன்பக்கடலில் மிதந்து கொண்டிருப்பதை ஏன் அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய்?

 

अनिष्टे सुभगाकारे सौभाग्येन विकत्थसे।
चलं हि तव सौभाग्यं नद्यास्स्रोत इवोष्णगे।।2.7.15।।

உன் கணவருக்கு நீ தான் மிகவும் பிரியமானவள் என்று நீ பெருமைப் பட்டுக்கொண்டாலும், உண்மையில் அவருக்கு உன் மேல் பிரியமே இல்லை. உன்னுடைய பாக்கியமானது வெய்யில் காலத்து நதியின் நீர் போல நிலையில்லாமல் இருக்கிறது.”

 

एवमुक्ता तु कैकेयी रुष्टया परुषं वचः।
कुब्जया पापदर्शिन्या विषादमगमत्परम्।।2.7.16।।

கூன் முதுகும், கெட்ட எண்ணமும் உடைய மந்தரையின் இந்தக் கடுமையான சொற்களைக் கேட்டுக் கைகேயி மிகவும் வருத்தமுற்றாள்.

 

कैकेयी त्वब्रवीत्कुब्जां कच्चित्क्षेमं नु मन्थरे।
विषण्णवदनां हि त्वां लक्षये भृशदुःखिताम्।।2.7.17।।

கைகேயி கூனியிடம் கூறினாள்: “மந்தரையே! எல்லாம் நலம் தானே! உன்னுடைய வாடிய முகத்தைப் பார்த்தால், நீ மிக்க வருத்தத்தில் இருப்பது போல் தெரிகிறது.”

 

मन्थरा तु वच श्श्रुत्वा कैकेय्या मधुराक्षरम्।
उवाच क्रोधसंयुक्ता वाक्यं वाक्यविशारदा।।2.7.18।।

இவ்வாறு மென்மையாகக் கைகேயி பேசியதைக் கேட்ட, மந்தரை, மிகுந்த கோபத்துடன் பேசினாள்.

 

सा विषण्णतरा भूत्वा कुब्जा तस्या हितैषिणी।
विषादयन्ती प्रोवाच भेदयन्ती च राघवम्।।2.7.19।।

கைகேயியின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மந்தரை, இன்னும் அதிக வருத்தத்துடன், ராமனைக் கைகேயியின் மனத்தில் இருந்து விலக்கும் விதமாகப் பேசலானாள்:

 

अक्षय्यं सुमहद्देवि प्रवृत्तं त्वद्विनाशनम्।
रामं दशरथो राजा यौवराज्येऽभिषेक्ष्यति।।2.7.20।।

“அரசியே! மிகப் பெரியதும், முடிவில்லாததுமான அழிவு உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தசரத மன்னர் ராமனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்யப் போகிறார்.

 

साऽस्म्यगाधे भये मग्ना दुःखशोकसमन्विता।
दह्यमानाऽनलेनेव त्वद्धितार्थमिहागता।।2.7.21।।

ஆழம் காண முடியாத அச்சத்தில் மூழ்கி, மிகுந்த சோகத்துடனும், கண்ணீருடனும், நெருப்பால் எரிக்கப்படுவதைப் போன்ற உணர்வுடனும், உனக்கு நன்மை விளைய வேண்டும் என்ற விருப்பத்துடனும், நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.

 

तव दुःखेन कैकेयि मम दुःखं महद्भवेत्।
त्वद्वृद्धौ मम वृद्धिश्च भवेदत्र न संशयः।।2.7.22।।

கைகேயியே! உன்னுடைய துன்பம் என்னுடைய துன்பம்; உன்னுடைய வளர்ச்சி, என்னுடைய வளர்ச்சி. இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

 

नराधिपकुले जाता महिषी त्वं महीपतेः।
उग्रत्वं राजधर्माणां कथं देवि न बुध्यसे।।2.7.23।।

அரசியே! அரச குலத்தில் பிறந்து, ஒரு மன்னருக்கு மனைவியாக இருக்கும் உனக்கு, அரசியல் எவ்வளவு இரக்கமற்றது என்பது ஏன் புரியவில்லை?

 

धर्मावादी शठो भर्ता श्लक्ष्णवादी च दारुणः।
शुद्धभावे न जानीषे तेनैव मतिसन्धिता।।2.7.24।।

உன்னுடைய கணவர் வெளியில் தர்மத்தைப் பற்றிப் பேசுவார். ஆனால் உண்மையில் அவர் ஏமாற்றுக்காரர். இனிமையாகப் பேசினாலும், கொடுமையாக நடந்து கொள்வார். உன்னுடைய வெகுளித்தனத்தால், நீ அவரால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்கு இது புரியவேயில்லை.

 

उपस्थितः प्रयुञ्जानस्त्वयि सान्त्वमनर्थकम्।
अर्थेनैवाद्य ते भर्ता कौसल्यां योजयिष्यति।।2.7.25।।

உன்னிடம் வரும் போது அவர் அர்த்தமற்ற, இனிமையான வார்த்தைகளைப் பேசுகிறார். ஆனால், கௌசல்யைக்குத் தான் உண்மையில் அர்த்தமுள்ள விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்.

 

उपवाह्य स दुष्टात्मा भरतं तव बन्धुषु।
काल्ये स्थापयिता रामं राज्ये निहतकण्टके।।2.7.26।।

தீய எண்ணம் கொண்ட அவர், உன் மகன் பரதனை உனது உறவினர்களின் வீட்டுக்கு அனுப்பி விட்டு, நாளைக் காலையில், எந்த விதத் தடையும் இன்றி ராமனுக்குப் பட்டம் சூட்டப் போகிறார்.

 

शत्रुः पतिप्रवादेन मात्रेव हितकाम्यया।
आशीविष इवाङ्केन बाले परिधृतस्त्वया।।2.7.27।।

வெகுளிப்பெண்ணே! ஒரு விரோதியை உன் கணவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும், நீ ஒரு தாயைப் போல் அவருக்கு நன்மை செய்கிறாய். ஆனால், உண்மையில்,  ஒரு விஷசர்ப்பத்தை மடியில் கட்டிக்கொண்டிருக்கிறாய்.

 

यथा हि कुर्यात्सर्पो वा शत्रुर्वा प्रत्युपेक्षितः।
राज्ञा दशरथेनाद्य सपुत्रा त्वं तथा कृता।।2.7.28।।

தசரத மன்னர், ஒரு சர்ப்பத்தையோ, ஒரு எதிரியையோ, அலட்சியப்படுத்துவதைப் போல, உன்னையும் உன் மகனையும்,  அலட்சியப் படுத்தியிருக்கிறார்.

 

पापेनानृतसान्त्वेन बाले नित्यसुखोचिते।
रामं स्थापयता राज्ये सानुबन्धा हता ह्यसि।।2.7.29।।

அறிவற்ற பெண்ணே! நீ வசதியாக இருந்து பழக்கப்பட்டவள். ஏமாற்றும், இனிய சொற்களால், உன்னை சமாதானப் படுத்தி தசரத மன்னர் ராமனுக்கு பட்டம் சூட்டப் போகிறார். நீயும் உன் மகனும் அழிந்து போவீர்கள்.

 

सा प्राप्तकालं कैकेयि क्षिप्रं कुरु हितं तव।
त्रायस्व पुत्रमात्मानं मां च विस्मयदर्शने।।2.7.30।।

கைகேயியே! சரியான சமயம் வந்திருக்கிறது. உனது நன்மைக்காக உடனே செயல்படு. உன்னையும், உன் மகனையும் மட்டுமல்லாது, என்னையும் காப்பாற்று.

 

मन्थाराया वचश्श्रुत्वा शयाना सा शुभानना।
उत्तस्थौ हर्षसम्पूर्णा चन्द्रलेखेव शारदी।।2.7.31।।

மந்தரையின் சொற்களைக் கேட்டு, மஞ்சத்தில் சயனித்திருந்த கைகேயி, மிகுந்த மகிழ்ச்சியுடன், சரத் காலத்துச் சந்திரனைப் போன்ற அழகிய பிரகாசமான முகத்துடன் படுக்கையை விட்டு எழுந்தாள்.

 

अतीव सा तु संहृष्टा कैकेयी विस्मयान्विता।
एकमाभरणं तस्यै कुब्जायै प्रददौ शुभम्।।2.7.32।।

(ராமனுக்குப் பட்டம் சூட்டப்போகும்) அந்தச் செய்தியைக் கேட்டு, அளவுக்கு மீறிய மகிழ்ச்சியுடனும், வியப்புடனும், மந்தரைக்கு ஒரு அழகான ஆபரணத்தைப் பரிசாகக் கொடுத்தாள்.

 

दत्वा त्वाभरणं तस्यै कुब्जायै प्रमदोत्तमा।
कैकेयी मन्थरां दृष्ट्वा पुनरेवाब्रवीदिदम्।।2.7.33।।

அழகிகளில் சிறந்தவளான கைகேயி, அந்த ஆபரணத்தை மந்தரைக்குக் கொடுத்து விட்டு, இவ்வாறு கூறினாள்:

 

इदं तु मन्थरे मह्यमाख्यासि परमं प्रियम्।
एतन्मे प्रियमाख्यातुः किं वा भूयः करोमि ते।।2.7.34।।

“மந்தரையே! நீ கொண்டு வந்திருக்கும் இந்தச் செய்தி மிக மிக இனிமையானது. நல்ல செய்தி கொண்டு வந்த உனக்கு இந்தப் பரிசை அளிக்கிறேன்! நான் உனக்கு இன்னும் என்ன செய்யட்டும்?”

 

रामे वा भरते वाऽहं विशेषं नोपलक्षये।
तस्मात्तुष्टाऽस्मि यद्राजा रामं राज्येऽभिषेक्ष्यति।।2.7.35।।

ராமனுக்கும், பரதனுக்கும் இடையில் நான் எந்த வேறுபாட்டையும், பார்ப்பதில்லை. ஆகவே, ராமனுக்குப் பட்டம் கிடைப்பதில் எனக்கு மிகவும் திருப்தி உண்டாகிறது.

 

न मे परं किञ्चिदितस्त्वया पुनः प्रियं प्रियार्हे सुवचं वचःपरम्।
तथा ह्यवोचस्त्वमतः प्रियोत्तरं वरं परं ते प्रददामि तं वृणु।।2.7.36।।

“அன்புக்குரியவளே! எனக்கு இதைக் காட்டிலும், பெரியதும், இனிமையானதுமான செய்தி எதுவும் இல்லை. இதை விடப் பெரிய பரிசை உனக்குக்கொடுக்கிறேன். எது வேண்டுமோ, கேள்!”


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे सप्तमस्सर्गः।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் ஏழாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

03 .03.2024

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...