Saturday, 2 March 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் – 6

(ராமனும் சீதையும் முறைப்படி விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்.  அயோத்தி மக்கள் மகிழ்ச்சியுடன் மன்னருக்குத் தங்கள் நன்றியறிதலைத் தெரிவிக்கிறார்கள். கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் அயோத்தி நகருக்கு வருகிறார்கள். )

गते पुरोहिते रामः स्नातो नियतमानसः।
सह पत्न्या विशालाक्ष्या नारायणमुपागमत्।।2.6.1।।

குடும்பப் புரோகிதரான வசிஷ்டர் அங்கிருந்து சென்றவுடனே, ராமர், ஸ்னானம் செய்து விட்டு, அகன்ற விழிகளையுடைய தன் மனைவி சீதையுடன், மனம் ஒன்றி, நாராயணனை வழிபடுவதற்காக வந்தார்.

 

प्रगृह्य शिरसा पात्रीं हविषो विधिवत्तदा।
महते दैवतायाज्यं जुहाव ज्वलितेऽनले।।2.6.2।।

பின்னர், விதிப்படி, ஹவிஸ் வைத்திருந்த பாத்திரத்தைத் தலை மேல் ஏந்தி, அங்கிருந்த புனிதமான தீயில் நெய்யை ஆஹுதி செய்து, விஷ்ணுவை வழிபட்டார்.

 

शेषं च हविषस्तस्य प्राश्याशास्यात्मनः प्रियम्।
ध्यायन्नारायणं देवं स्वास्तीर्णे कुशसंस्तरे।।2.6.3।।

वाग्यत स्सह वैदेह्या भूत्वा नियतमानसः।
श्रीमत्यायतने विष्णो श्शिश्ये नरवरात्मजः।।2.6.4।।

பின்னர், அதில் மீதம் இருந்ததைத் தான் அருந்தி, மனக்கட்டுப்பாட்டுடன், மௌன விரதம் மேற்கொண்டு, பகவான் நாராயணனை தியானித்துக் கொண்டு, அந்த மங்களகரமான கோயிலில், நன்கு விரிக்கப்பட்ட தர்ப்பைப் புல்லின் மேல் வைதேஹியுடன் படுத்துறங்கினார்.

 

एकयामावशिष्टायां रात्र्यां प्रतिविबुद्ध्य सः।
अलङ्कारविधिं कृत्स्नं कारयामास वेश्मनः।।2.6.5।।

விடிவதற்கு இன்னும் ஒரு யாமம்(சுமார் – 3 மணி  நேரம்) இருக்கும் போதே விழித்துக்கொண்ட ராமர், தனது இல்லம் முழுவதையும் அலங்கரிக்கச் செய்தார்.

 

तत्र श्रृण्वन्सुखा वाच स्सूतमागधवन्दिनाम्।
पूर्वां सध्यामुपासीनो जजाप यतमानसः।।2.6.6।।

பின்னர், பாடகர்கள் மற்றும் துதி செய்வோரின் இனிமையான சொற்களைக் கேட்ட பின், காலையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, மன ஒருமைப்பாட்டுடன் காயத்ரி மந்திரத்தை ஜபித்தார்.

 

तुष्टाव प्रणतश्चैव शिरसा मधुसूदनम्।
विमलक्षौमसंवीतो वाचयामास स द्विजान्।।2.6.7।।

தூய பட்டாடை உடுத்திக்கொண்டு, ராமர் மதுசூதனரான விஷ்ணுவைத் தலை வணங்கித் துதித்த பின்னர், அந்தணர்கள் உரைத்த, சுத்தி மந்திரங்களக் கேட்டுக்கொண்டார்.

 

तेषां पुण्याहघोषोऽथ गम्भीरमधुरस्तदा।
अयोध्यां पूरयामास तूर्यघोषानुनादितः।।2.6.8।।

அதன் பிறகு, ‘இந்த நாள் மங்களகரமான நாள்’ என்னும் ஒலி, எக்காளங்களின் ஒலிகளுடன் சேர்ந்து அயோத்தியெங்கும் எதிரொலித்தது.

 

कृतोपवासं तु तदा वैदेह्या सह राघवम्।
अयोध्यानिलयश्श्रुत्वा सर्वः प्रमुदितो जनः।।2.6.9।।

ராமரும் சீதையும், உபவாச விரதத்தை அனுஷ்டித்தார்கள் என்று கேள்விப்பட்ட அயோத்தி மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள்.

 

ततः पौरजनस्सर्वश्श्रुत्वा रामाभिषेचनम्।
प्रभातां रजनीं दृष्ट्वा चक्रे शोभयितुं पुरीम्।।2.6.10।।

ராமருக்கு யுவராஜ பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது என்பதைக் கேட்ட மக்கள் அனைவரும், விடிந்தவுடனேயே, நகரத்தை அலங்கரிக்கத் தொடங்கினார்கள்.

 

सिताभ्रशिखराभेषु देवतायतनेषु च।
चतुष्पथेषु रथ्यासु चैत्येष्वट्टालकेषु च।।2.6.11।।

नानापण्यसमृद्धेषु वणिजामापणेषु च।
कुटुम्बिनां समृद्धेषु श्रीमत्सु भवनेषु च।।2.6.12।।

सभासु चैव सर्वासु वृक्षेष्वालक्षितेषु च।
ध्वजा स्समुच्छ्रिताश्चित्राः पताकाश्चाभवंस्तदा।।2.6.13।।

வெண்மேகங்கள் சூழ்ந்து விளங்கும் ஆலய கோபுரங்களிலும், நாற்சந்திகளிலும், முக்கிய பாதைகளிலும், சாலைகளின் இரு மருங்கிலும் உள்ள மரங்களின் மீதும், உப்பரிகைகளின் மீதும், விற்பனைப் பொருட்கள் குவிந்திருந்த கடைகளின் மீதும், செல்வம் கொழிக்கும் குடிமக்களின் வீடுகளின் மீதும், பொது இடங்களிலும், மரங்கள் மீதும், தூரத்தில் இருந்து பார்த்தாலே, தெரியும் வண்ணம், கொடிகளும், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன.

 

नटनर्तकसङ्घानां गायकानां च गायताम्।
मनः कर्णसुखा वाच श्शुशृवुश्च ततस्ततः।।2.6.14।।

ஆங்காங்கே, நடிகர்களும், நடனமாதர்களும், தங்கள் இனிமையான பாடல்களாலும், நடனங்களாலும், இனிமையான பேச்சுகளாலும், மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள்.

 

रामाभिषेकयुक्ताश्च कथाश्चक्रुर्मिथो जनाः।
रामाभिषेके सम्प्राप्ते चत्वरेषु गृहेषु च।।2.6.15।।

ராமனுடைய பட்டாபிஷேகத்துக்கான நேரம் நெருங்க, நெருங்க, நகர மக்கள், பொது இடங்களிலும், தங்கள் இல்லங்களிலும், ராமனின் பட்டாபிஷேகத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

 

बाला अपि क्रीडमाना गृहद्वारेषु सङ्घशः।
रामाभिषवसंयुक्ताश्चक्रुरेवं मिथः कथाः।।2.6.16।।

அதே போல், வீடுகளின் முன், கூட்டங்கூட்டமாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளும், ராமனின் பட்டாபிஷேகத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

कृतपुष्पोपहारश्च धूपगन्धाधिवासितः।
राजमार्गः कृतः श्रीमान्पौरै रामाभिषेचने।।2.6.17।।

ராமனின் பட்டாபிஷேகத்தின் பொருட்டு, முக்கிய வீதிகள் அனைத்தும், மலர்தூவப்பட்டு, மணம் வீசும் புகை எங்கும் பரவி, அற்புதமாகக் காணப்பட்டன.

 

प्रकाशकरणार्थं च निशागमनशङ्कया।
दीपवृक्षां स्तथा चक्रुरनु रथ्यासु सर्वशः।।2.6.18।।

பட்டாபிஷேக நிகழ்வு முடியும் முன் இருட்டாகி விட்டால் என்ன செய்வது என்று யோசித்து, தீபங்கள் ஏற்றுவதற்கான மரவடிவங்களை வீதியெங்கும் அமைத்திருந்தார்கள்.

 

अलङ्कारं पुरस्यैवं कृत्वा तत्पुरवासिनः।
आकाङ्क्षमाणा रामस्य यौवराज्याभिषेचनम्।।2.6.19।।

समेत्य सङ्घशस्सर्वे चत्वरेषु सभासु च।
कथयन्तो मिथस्तत्र प्रशशंसुर्जनाधिपम्।।2.6.20।।

இவ்வாறு, அயோத்தி மக்கள், நகரத்தை நன்கு அலங்கரித்து விட்டு, ராமனின் யுவராஜ பட்டாபிஷேகத்துக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஆங்காங்கே, பொதுச் சதுக்கங்களிலும், சபைகளிலும், குழுக்களாகக் குழுமி, தசரதரின் புகழைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

 

अहो महात्मा राजाऽयमिक्ष्वाकुकुलनन्दनः।
ज्ञात्वा यो वृद्धमात्मानं रामं राज्येऽभिषेक्ष्यति।।2.6.21।।

“இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த தசரத மன்னர், தனக்கு வயதாகி விட்டது என்பதை உணர்ந்து கொண்டு, உயர்ந்த எண்ணத்துடன், தன் புதல்வராகிய ராமருக்கு முடி சூட்டப் போகிறார்.

 

सर्वेप्यनुगृहीता स्मो यन्नो रामो महीपतिः।
चिराय भविता गोप्ता दृष्टलोकपरावरः।।2.6.22।।

இந்த உலகத்தில் ஏற்றத் தாழ்வுகளை நன்கு அறிந்த ராமர் நமக்கெல்லாம் அரசராக இருந்து வெகு காலம் நம்மைக் காப்பாற்றுவார்.

 

अनुद्धतमनाः विद्वान्धर्मात्मा भ्रातृवत्सलः।
यथा च भ्रातृषु स्निग्धस्तथाऽस्मास्वपि राघवः।।2.6.23।।

ரகு வம்சத்தில் பிறந்த இந்த ராமர் சிறிதும் அகந்தை இல்லாதவர்; நல்ல கல்வியறிவு பெற்றவர்; அறவழியில் செல்பவர்; தமது சகோதரர்கள் மீது மிகுந்த பாசம் உள்ளவர்; அதே போன்ற பாசத்தைக் குடிமக்களாகிய நம் மீதும் செலுத்துபவர்.

 

चिरं जीवतु धर्मात्मा राजा दशरथोऽनघः।
यत्प्रसादोनभिषिक्तं तु रामं द्रक्ष्यामहे वयम्।।2.6.24।।

தர்மாத்மாவும், குற்றமற்றவரும் ஆன தசரத மன்னரின் கருணையால் தான், நாம் இன்று ராமனின் முடி சூட்டு விழாவைக் காணப் போகிறோம். தசரத மன்னர் நீடூழி வாழ வேண்டும்!”

 

एवंविधं कथयतां पौराणां शुश्रुवु स्तदा।
दिग्भ्योपि श्रुतवृत्तान्ता: प्राप्ता जानपदा जनाः।।2.6.25।।

ராமனின் முடி சூட்டுவிழாவைப் பற்றிக் கேள்விப்பட்டு, பல திசைகளில் இருந்தும், கிராமங்களில் இருந்தும், அயோத்திக்கு வந்து சேர்ந்தவர்கள், அந்த நகர மக்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டார்கள்.

 

ते तु दिग्भ्यः पुरीं प्राप्ता द्रष्टुं रामाभिषेचनम्।
रामस्य पूरयामासुः पुरीं जानपदा जनाः।।2.6.26।।

ராமனுடைய அயோத்தி நகரமே, அவருடைய முடி சூட்டுவிழாவைக் காண்பதற்காகப் பலதிசைகளில் இருந்தும் வந்திருந்த மக்களால் நிறைந்திருந்தது.

 

जनौघैस्तैर्विसर्पद्भिः शुश्रुवे तत्र निस्वनः।
पर्वसूदीर्णवेगस्य सागरस्येव निस्वनः।।2.6.27।।

இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்த மக்கள் எழுப்பிய ஓசையால் அந்த நகரம், பௌர்ணமி தினத்தன்று, முழு நிலவைக் கண்டு ஆர்ப்பரிக்கும், கடலின் ஓசையை ஒத்திருந்தது.

 

ततस्तदिन्द्रक्षयसन्निभं पुरं दिदृक्षुभिर्जानपदैरुपागतैः।
समन्तत स्सस्वनमाकुलं बभौ समुद्रयादोभिरिवार्णवोदकम्।।2.6.28।।

இந்திரனின் அமராவதியை ஒத்திருந்த அயோத்தி நகரமானது, ராமனின் பட்டாபிஷேகத்தைக் காண்பதற்காக வந்திருந்த மக்களுடைய நடமாட்டங்களாலும், அவர்கள் எழுப்பிய ஒலிகளாலும், பலவிதமான நீர்வாழ் விலங்குகள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் சமுத்திரத்தை ஒத்திருந்தது.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे षष्ठस्सर्गः।।


இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் ஆறாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

02.03.2024

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...