Friday, 23 February 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் – 5

 (வசிஷ்டர் ராமரையும் சீதையையும் மறு நாள் நடைபெற இருக்கும் பட்டாபிஷேகத்துக்காக அன்று இரவு உபவாசம் இருக்கச் சொல்கிறார்.)


सन्दिश्य रामं नृपति श्श्वोभाविन्यभिषेचने।
पुरोहितं समाहूय वशिष्ठमिदमब्रवीत्।।2.5.1।।

ராமருக்குத் தேவையானவற்றை அறிவுறுத்திய பிறகு, தசரத மன்னர், புரோகிதரான வசிஷ்டரை அழைத்து, மறு நாள் நடைபெறப்போகும் பட்டாபிஷேகத்தின் பொருட்டு, ராமரும், சீதையும் உபவாசம் இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கும் படி வேண்டிக்கொண்டார்.

 

गच्छोपवासं काकुत्स्थं कारयाद्य तपोधन।
श्रीयशोराज्यलाभाय वध्वा सह यतव्रतम्।।2.5.2।।

“தவச்செல்வரே! தாங்கள் தயவு செய்து, காகுஸ்தனான ராமனிடம் சென்று, நம் தேசத்தின் செல்வ வளமும், புகழும் நிலை பெற்றிருக்கவேண்டி,  அவன் தனது மனைவியுடன் இன்று உபவாச விரதம் இருக்க வேண்டும் என்று கூறி அவ்வாறு உபவாசத்தை அனுஷ்டிக்கச் செய்யுங்கள்.


तथेति च स राजानमुक्त्वा वेदविदां वरः।
स्वयं वसिष्ठो भगवान्ययौ रामनिवेशनम्।।2.5.3।।

उपवासयितुं रामं मन्त्रवन्मन्त्रकोविदः।
ब्राह्मं रथवरं युक्तमास्थाय सुदृढव्रतः।।2.5.4।।

வேதங்களை நன்கு அறிந்தவரும், மந்திரங்களில் நிபுணருமான வசிஷ்டர் ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி, தனக்கேற்ற சிறந்த ரதத்தில் ஏறிக்கொண்டு, தானே ராமரின் இருப்பிடத்துக்குச் சென்று, மந்திரங்களைக் கூறி உபவாச விரதத்தைத் தொடங்கி வைத்தார்.

 

स रामभवनं प्राप्य पाण्डुराभ्रघनप्रभम्।
तिस्रः कक्ष्या रथेनैव विवेशमुनिसत्तमः।।2.5.5।।

ராமனின் இல்லத்தில் அமைந்திருந்த மூன்று முற்றங்களைத் தேரிலேயே கடந்து, அந்தத் தவசிரேஷ்டர், வெண்மேகங்களைப் போல் ஒளி வீசிக்கொண்டிருந்த ராமனின் இல்லத்திற்குள் பிரவேசித்தார்.

 

तमागतमृषिं रामस्त्वरन्निव ससम्भ्रमः।
मानयिष्यन्समानार्हं निश्चक्राम निवेशनात्।।2.5.6।।

மரியாதைக்குரிய வசிஷ்ட முனிவர் வந்திருப்பதை அறிந்து, அவரை வணங்கி வரவேற்பதற்காக, உடனே பரபரப்புடன் வெளியே வந்தார், ராமர்.

 

अभ्येत्य त्वरमाणश्च रथाभ्याशं मनीषिणः।
ततोऽवतारयामास परिगृह्य रथात्स्वयम्।।2.5.7।।

விரைவாக நடந்து வசிஷ்டர் வந்த தேரை அடைந்து, தானே, அவருடைய கையைப் பிடித்துக் கீழே இறங்க உதவி செய்தார்.

 

स चैनं प्रश्रितं दृष्ट्वा सम्भाष्याभिप्रसाद्य च।
प्रियार्हं हर्षयन्राममित्युवाच पुरोहितः।।2.5.8।।

பணிவுடனும், பிரியமுடனும் இருந்த ராமரின் நலம் விசாரித்த பின், குடும்ப புரோகிதரான வசிஷ்டர், ராமருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் இந்த வார்த்தைகளைக் கூறினார்:

 

प्रसन्नस्ते पिता राम यौवराज्यमवाप्स्यसि।
उपवासं भवानद्य करोतु सह सीतया।।2.5.9।।

“ராமா! உன்னிடம் மகிழ்ந்திருக்கும் உன்னுடைய தந்தையாரால் நீ யுவராஜ பதவியை அடையப் போகிறாய். ஆகவே, சீதையுடன் சேர்ந்து, இன்று நீ உபவாச விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். “

 

प्रातस्त्वामभिषेक्ता हि यौवराज्ये नराधिपः।
पिता दशरथः प्रीत्या ययातिं नहुषो यथा।।2.5.10।।

நாளை விடியற்காலையில் , உன்னுடைய தந்தையாரான தசரதர், நகுஷ மன்னர் தனது மகன் யயாதிக்குப் பட்டம் சூட்டியது போல, உனக்குப் பட்டம் சூட்டப் போகிறார்.”

 

इत्युक्त्वा स तदा राममुपवासं यतव्रतम्।
मन्त्रवत्कारयामास वैदेह्या सहितं मुनिः।।2.5.11।।

வசிஷ்ட முனிவர், ராமரிடம் இவ்வாறு கூறிவிட்டு, மந்திரங்கள் சொல்லி, ராமரையும், சீதையையும் உபவாசம் இருக்க வைத்தார்.

 

ततो यथावद्रामेण स राज्ञो गुरुरर्चितः।
अभ्यनुज्ञाप्य काकुत्स्थं ययौ रामनिवेशनात्।।2.5.12।।

பின்னர், ராமனிடம் இருந்து தகுந்த வகையில் கௌரவிக்கப்பட்ட வசிஷ்டர், ராமரின் இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

 

सुहृद्भिस्तत्र रामोऽपि सहासीनः प्रियंवदैः।
सभाजितो विवेशाऽथ ताननुज्ञाप्य सर्वशः।।2.5.13।।

அதன் பின்னர் சிறிது நேரம், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்து விட்டு, அவர்கள் அளித்த மரியாதையையும் பெற்றுக்கொண்டு, ராமர் தனது அறைக்குள் பிரவேசித்தார்.

 

हृष्टनारीनरयुतं रामवेश्म तदा बभौ।
यथा मत्तद्विजगणं प्रफुल्लनलिनं सरः।।2.5.14।।
 

ராமரின் இருப்பிடமானது, மகிழ்ச்சி நிறைந்த ஆண்களாலும், பெண்களாலும் சூழப்பெற்று, நன்கு மலர்ந்த தாமரை மலர்களும், ஆனந்தமான பறவைகளும் நிறைந்த குளத்தைப் போல் விளங்கியது.

 

स राजभवनप्रख्यात्तस्माद्रामनिवेशानात्।
निर्गत्य ददृशे मार्गं वसिष्ठो जनसंवृतम्।।2.5.15।।

வசிஷ்டர், அரண்மனையைப் போல் விளங்கிய ராமரின் இருப்பிடத்திலிருந்து, வெளியே ராஜ வீதிக்கு வந்த போது, அது மக்களால் நிரம்பியிருக்கக் கண்டார்.

 

बृन्दबृन्दैरयोध्यायां राजमार्गास्समन्ततः।
बभूवुरभिसम्बाधाः कुतूहलजनैर्वृताः।।2.5.16।।

ராஜ வீதிகள் அனைத்தும், ஆர்வம் நிறைந்த அயோத்தி மக்களால் நிறைந்து நெரிசலுடன் காணப்பட்டன.

 

जनबृन्दोर्मिसंघर्षहर्षस्वनवतस्तदा।
बभूव राजमार्गस्य सागरस्येव निस्वनः।।2.5.17।।

அந்த ராஜவீதிகள் அனைத்தும், மக்களது மகிழ்ச்சி ஆரவாரத்தால், அலை வீசும் கடல் போல  விளங்கின.

 

सिक्तसम्मृष्टरथ्या हि तदहर्वनमालिनी।
आसीदयोध्यानगरी समुच्छ्रितगृहध्वजा।।2.5.18।।

அன்று, ராஜவீதிகள் அனைத்தும், நீர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, பூந்தோட்டங்கள் சூழ, வீடுகளின் மீது கொடிகள் கட்டப்பட்டு விளங்கின.

 

तदा ह्ययोध्यानिलयः सस्त्रीबालाबलो जनः।
रामाभिषेकमाकाङ्क्षन्नाकाङ्क्षदुदयं रवेः।।2.5.19।।
 

அப்போது அயோத்தி நகரத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கூட, ராமருடைய பட்டாபிஷேகத்துக்காக, மறு நாள் விடிவதை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தார்கள்.

 

प्रजालङ्कारभूतं च जनस्यानन्दवर्धनम्।
उत्सुकोऽभूज्जनो द्रष्टुं तमयोध्यामहोत्सवम्।।2.5.20।।
 

மக்களுடைய ஆனந்தத்தை அதிகரிக்கக்கூடிய, அயோத்திக்கு ஒரு அழகான ஆபரணம் போல்  விளங்கப் போகும் அந்த மிகப் பெரிய திருவிழாவைக் காண மக்கள் பேரார்வம் கொண்டிருந்தார்கள்.

 

 एवं तज्जनसम्बाधं राजमार्गं पुरोहितः।
 व्यूहन्निव जनौघं तं शनै राजकुलं ययौ।।2.5.21।।

கூட்டமாகக்கூடியிருந்த அந்த மக்களை வியூகங்களைப் போல் பிரித்துக்கொண்டு, மெதுவாக, அரண்மனையை நோக்கிப் புரோகிதரான வசிஷ்டரின் தேர் சென்றது.

 

सिताभ्रशिखरप्रख्यं प्रासादमधिरुह्य सः।
समीयाय नरेन्द्रेण शक्रेणेव बृहस्पतिः।।2.5.22।।

மலை மேல் வெண் மேகங்கள் சூழ்ந்துள்ளது போல் தோற்றமளித்த அரண்மனைக்குள் ஏறிச் சென்று, ப்ருஹஸ்பதியானவர் இந்திரனைச் சந்திந்ததைப் போல், வசிஷ்டர் தசரதரைச் சந்தித்தார்.

 

तमागतमभिप्रेक्ष्य हित्वा राजासनं नृपः।
पप्रच्छ स च तस्मै तत्कृतमित्यभ्यवेदयत्।।2.5.23।।

வசிஷ்டர் வருவதைக் கண்ட தசரதர், தன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வசிஷ்டர் சென்ற காரியம் நல்ல படியாக ஆயிற்றா என்று வினவ, ‘ஆயிற்று’ என்று முனிவர் பதிலிறுத்தார்.

 

चैव तदा तुल्यं सहासीनास्सभासदः।
आसनेभ्यस्समुत्तस्थुः पूजयन्तः पुरोहितम्।।2.5.24।।

அரசருடன் அவையில் அமர்ந்திருந்த அனைவரும், அரசர் எழுந்த போது , தாங்களும் தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து, குருவுக்கு மரியாதை செலுத்தினர்.

 

गुरुणा त्वभ्यनुज्ञातो मनुजौघं विसृज्य तम्।
विवेशान्तः पुरं राजा सिंहो गिरिगुहामिव।।2.5.25।।

பின்னர் தசரத மன்னர், குருவிடம் விடை பெற்று, அவையோருக்கு விடை கொடுத்து விட்டுத் தன் மலைக்குகைக்குள் நுழையும் சிங்கத்தைப் போலத் தன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார்.

 

तदग्य्रवेषप्रमदाजनाकुलं महेन्द्रवेश्मप्रतिमं निवेशनम्।
विदीपयंश्चारु विवेश पार्थिव श्शशीव तारागणसङ्कुलं नभः।।2.5.26।।

மிகச் சிறந்த ஆடைகள் அணிந்த மங்கையர் நிறைந்து,  இந்திரனின் அரண்மணை போல் விளங்கிய அந்த அந்தப்புரத்துக்குள், நக்ஷத்திரங்கள் சூழந்த ஆகாயத்தை ஒளி வீசச்செய்யும் சந்திரனைப் போல் தசரத மன்னர் பிரவேசித்தார்.

 

 इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे पञ्चमस्सर्गः।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் ஐந்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

23.02.2024

 

 

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...