ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
அயோத்தியா
காண்டம்
ஸர்க்கம்
– 4
(ராமரை மீண்டும்
அழைத்து வரச் சொல்லி, சுமந்திரரை தசரதர் அனுப்புகிறார். ராமருக்குச் சில
விஷயங்களைச் சொல்கிறார். பின்னர் ராமர்
கௌசல்யையின் இருப்பிடத்துக்குச் சென்று அவரிடம் தனது பட்டாபிஷேகத்தைப் பற்றிக்கூறி,
அவருடைய ஆசியைப் பெறுகிறார்.)
गतेष्वथ नृपो भूयः पौरेषु सह मन्त्रिभिः।
मन्त्रयित्वा ततश्चक्रे निश्चयज्ञस्सनिश्चयम्।।2.4.1।।
श्व एव पुष्यो भविताश्वोऽभिषेच्यस्तु मे सुतः।
रामो राजीवताम्राक्षो यौवराज्य इति प्रभुः।।2.4.2।।
நகரமக்கள் அனைவரும் அங்கிருந்து
அகன்றதும், தீர்மானம் செய்வதில் தேர்ந்த தசரதர், மீண்டும் தனது ஆலோசகர்களுடன்
கலந்துரையாடி, அடுத்த நாளே சந்திரன் புஷ்ய நக்ஷத்திரத்துடன் கூடி இருக்கப் போவதை
அறிந்து, சிவந்த தாமரை மலரின் இதழ்களைப் போன்ற கண்களை உடைய தன் மகன் ராமனுக்கு,
நாளையே யுவராஜ பட்டாபிஷேகம் நடத்த வேண்டும் என்று தீர்மானித்தார்.
अथाऽन्तर्गृहमाविश्य
राजा दशरथस्तदा।
सूतमामन्त्रयामास रामं पुनरिहानय।।2.4.3।।
பின்னர்,
அந்தப்புறத்துக்குச் சென்ற தசரதர், சுமந்திரரை அழைத்து, மீண்டும் ராமரைத் தன்னிடம்
அழைத்து வருமாறு பணித்தார்.
प्रतिगृह्य स तद्वाक्यं
सूतः पुनरुपाययौ।
रामस्य भवनं शीघ्रं राममानयितुं पुनः।।2.4.4।।
அரசரின் கட்டளைப் படி,
தேரோட்டி சுமந்திரர் உடனே ராமரை அழைத்து வருவதற்காக, வேகமாகச் சென்றார்.
द्वार्स्थैरावेदितं
तस्य रामायाऽऽगमनं पुनः।
श्रुत्वैव चापि रामस्तं प्राप्तं शङ्कान्वितोऽभवत्।।2.4.5।।
வாயிற்காப்போர்கள்
சுமந்திரர் வந்திருப்பதாக அறிவித்ததும், எதற்காக அவர் மீண்டும் வந்திருக்கிறார்
என்று ராமருக்குக் கவலை உண்டாயிற்று.
प्रवेश्य चैनं त्वरितं
रामो वचनमब्रवीत्।
यदागमनकृत्यं ते भूयस्तद्ब्रूह्यशेषतः।।2.4.6।।
ராமர் உடனே சுமத்திரரை உள்ளே
வரவேற்று, அவர் மீண்டும் வந்ததற்கான காரணத்தை முழுமையாக உரைக்குமாறு
கேட்டுக்கொண்டார்.
तमुवाच तत स्सूतो राजा
त्वां द्रष्टुमिच्छति।
श्रुत्वा प्रमाणमत्र त्वं गमनायेतराय वा।।2.4.7।।
சுமந்திரர் பதில்
கூறினார்: “அரசர் தங்களைப் பார்க்க
விரும்புகிறார். செல்வதா வேண்டாமா என்பதைத் தாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். “
इति सूतवच श्श्रुत्वा
रामोऽथ त्वरयाऽन्वितः।
प्रययौ राजभवनं पुनर्द्रष्टुं नरेश्वरम्।।2.4.8।।
தேரோட்டியின்
சொற்களைக்கேட்ட ராமர் உடனடியாக அரசரைச் சந்திக்க அரண்மனைக்குப் புறப்பட்டார்.
तं श्रुत्वा
समनुप्राप्तं रामं दशरथो नृपः।
प्रवेशयामास गृहं विवक्षुः प्रियमुत्तमम्।।2.4.9।।
ராமர் வந்து சேர்ந்து
விட்ட செய்தி அறிந்த தசரதர் அவருக்கு ஒரு இனிமையான செய்தி சொல்வதற்காக, அந்தப் புறத்துக்குள்
வரவழைத்தார்.
प्रविशन्नेव च
श्रीमान्राघवो भवनं पितुः।
ददर्श पितरं दूरात्प्रणिपत्य कृताञ्जलिः।।2.4.10।।
தந்தையாரின்
அரண்மனைக்குள் நுழைந்த ராமர், தூரத்தில் இருந்தே, கைகளைக் கூப்பிக்கொண்டு, தலை
வணங்கிக் கொண்டே, தந்தையைப் பார்த்தார்.
प्रणमन्तं समुत्थाप्य
तं परिष्वज्य भूमिपः।
प्रदिश्य चास्मै रुचिरमासनं पुनरब्रवीत्।।2.4.11।।
குனிந்து வணங்கிய ராமரை
எழுப்பிய தசரதர், அவரை அணைத்துக்கொண்டு, அவருக்கு ஒரு அருமையான ஆசனத்தை அளித்து,
அதில் அமரச்செய்தபின், கூறினார்:
राम वृद्धोऽस्मि
दीर्घायुर्भुक्ता भोगा मयेप्सिताः।
अन्नवद्भिः क्रतुशतै स्तथेष्टं भूरिदक्षिणैः।।2.4.12।।
“ராமா! நீண்ட காலம்
வாழ்ந்து, எனக்கு வயதாகி விட்டது. நான் விரும்பியதையெல்லாம் அனுபவித்து விட்டேன்.
நூற்றுக்கணக்கான யாகங்கள் செய்து, நிறைய அன்னமும், தக்ஷிணைகளும் கொடுத்து
விட்டேன்.
जातमिष्टमपत्यं मे
त्वमद्यानुपमं भुवि।
दत्तमिष्टमधीतं च मया पुरुषसत्तम।।2.4.13।।
மனிதருள் சிறந்தவனே!
நான் விரும்பியது போன்ற புதல்வனாகப் பிறந்துள்ள உனக்கு இணையாக இந்த உலகில் எவரும்
இல்லை. நான் நிறைய சடங்குகள் செய்து, நிறைய தானங்கள் அளித்திருக்கிறேன்.
வேதங்களையும் நன்கு கற்றிருக்கிறேன்.
अनुभूतानि चेष्टानि मया
वीर सुखान्यपि।
देवर्षिपितृविप्राणामनृणोऽस्मि तथाऽत्मनः।।2.4.14।।
வீரனே! நான் விரும்பிய
சுகங்களை அனுபவித்து விட்டேன். கடவுளர்களுக்கும், ரிஷிகளுக்கும்,
பித்ருக்களுக்கும், அந்தணர்களுக்கும்
செய்ய வேண்டிய கடன்களைச் செய்து முடித்து விட்டேன்.
न किञ्चिन्मम कर्तव्यं
तवान्यत्राभिषेचनात्।
अतो यत्त्वामहं ब्रूयां तन्मे त्वं कर्तुमर्हसि।।2.4.15।।
உனக்குப் பட்டாபிஷேகம்
செய்வதைத் தவிர, நான் செய்ய வேண்டிய
கடமைகள் யாதும் இல்லை. ஆகவே, நான் சொல்லியபடி நீ செய்ய வேண்டும்.
अद्य
प्रकृतयस्सर्वास्त्वामिच्छन्ति नराधिपम्।
अतस्त्वां युवराजानमभिषेक्ष्यामि पुत्रक।।2.4.16।।
இன்று குடிமக்கள்
அனைவரும், உன்னைத் தங்கள் அரசனாகப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். ஆகவே,
உனக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்விக்கப்
போகிறேன்.
अपि चाद्याऽशुभान्राम
स्वप्ने पश्यामि दारुणान्।
सनिर्घाता दिवोल्का च पततीह महास्वना।।2.4.17।।
மேலும், ராமா!
இப்போதெல்லாம், எனக்கு பயங்கரமான அபசகுனங்களைக் காட்டுகின்ற கனவுகள் பகல்
நேரத்தில் வருகின்றன. பலத்த இடிச்சத்தத்துடன், விண்கற்கள் விழுவது போல் கனவுகள்
வருகின்றன.
अवष्टब्धं च मे राम
नक्षत्रं दारुणैर्ग्रहैः।
आवेदयन्ति दैवज्ञाः सूर्याङ्गारकराहुभिः।।2.4.18।।
ராமா! சூரியனும்,
செவ்வாயும், ராகுவும் என்னுடைய நக்ஷத்திரத்தைத் தாக்குகின்றன என்று ஜோதிடர்கள்
கூறுகிறார்கள்.
प्रायेण हि
निमित्तानामीदृशानां समुद्भवे।
राजा हि मृत्युमाप्नोति घोरां वाऽऽपदमृच्छति।।2.4.19।।
இப்படிப்பட்ட நிமித்தங்கள்
காணப்படும் போது, பெரும்பாலும், அரசருக்கு மரணம் சம்பவிக்கும் அல்லது அவருக்கு
மிகப் பெரிய ஆபத்து ஏற்படும்.
तद्यावदेव मे चेतो न
विमुह्यति राघव।
तावदेवाभिषिञ्चस्व चला हि प्राणिनां मतिः।।2.4.20।।
ராமா! ஆகையால்,
என்னுடைய மனம் குழம்புவதற்கு முன்னர் உன்னைப் பட்டத்து இளவரசனாகப் பார்க்க
வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால், மனிதனுடைய மனம் நிலையில்லாதது.
अद्य चन्द्रोऽभ्युपगतः
पुष्यात्पूर्वं पुनर्वसू।
श्वः पुष्ययोगं नियतं वक्ष्यन्ते दैवचिन्तकाः।।2.4.21।।
இன்று சந்திரன்
புனர்வசு நக்ஷத்திரத்துடன் கூடியிருக்கிறது. நாளை புஷ்ய நக்ஷத்திரத்துடன்
கூடியிருக்கும். அப்படியிருக்கும் நாள் பட்டாபிஷேகம் செய்வதற்கு மங்களகரமான நாள்
என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
ततः
पुष्येऽभिषिञ्चस्व मनस्त्वरयतीव माम्।
श्वस्त्वाऽहमभिषेक्ष्यामि यौवराज्ये परन्तप।।2.4.22।।
‘புஷ்ய நக்ஷத்திரம் இருக்கும் போதே ராமனுக்குப்
பட்டம் சூட்டி விடு’ என்று எனது மனம் என்னை அவசரப்படுத்துகிறது. எதிரிகளைத்
தகிப்பவனே! நாளை உனக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்யப்போகிறேன்.
तस्मात्त्वयाऽद्य
प्रभृति निशेयं नियतात्मना।
सह वध्वोपवस्तव्या दर्भप्रस्तरशायिना।।2.4.23।।
ஆகவே, நீயும் எனது
மருமகளான சீதையும் இன்று இரவு உபவாசம் இருந்து மனக்கட்டுப்பாட்டுடன், தர்ப்பைப்
புல்லின் மீது படுத்து உறங்க வேண்டும்.
सुहृदश्चाप्रमत्तास्त्वां
रक्षन्त्वद्य समन्ततः।
भवन्ति बहु विघ्नानि कार्याण्येवंविधानि हि।।2.4.24।।
இதைப் போன்ற செயல்கள்
நடைபெறும் போது தடைகள் வருவது இயற்கை. ஆகவே, உன்னை எல்லாப் பக்கங்களில் இருந்தும்
பத்திரமாகப் பாதுகாக்குமாறு உனது நண்பர்களிடம் கூறிவிடு.
विप्रोषितश्च भरतो
यावदेव पुरादितः।
तावदेवाभिषेकस्ते प्राप्तकालो मतो मम।।2.4.25।।
பரதன் இங்கு இல்லாமல்
இருக்கும் சமயமே, உனக்குப் பட்டம் சூட்டுவதற்கு ஏற்ற சமயம் என்று நான்
நினைக்கிறேன்.
कामं खलु सतां वृत्ते
भ्राता ते भरतस्स्थितः।
ज्येष्ठानुवर्ती धर्मात्मा सानुक्रोशो जितेन्द्रियः।।2.4.26।।
உன்னுடைய தம்பியான
பரதன் தர்ம வழியில் நடந்து வந்திருக்கிறான் என்பதும் தனது தமையனைப் பின்தொடர்ந்து
வந்திருக்கிறான் என்பதும் உண்மை தான். அவன் தர்மாத்மா என்பதிலும், இரக்கம்
நிறைந்தவன் என்பதிலும், தன்னடக்கம் மிக்கவன் என்பதிலும் எந்த ஐயமும் இல்லை.
किन्तु चित्तं
मनुष्याणामनित्यमिति मे मतिः।
सतां च धर्मनित्यानां कृतशोभि च राघव।।2.4.27।।
ஆனாலும், மிகச் சிறந்த
நற்பண்புகள் உடையவர்களாய், தர்மத்திலேயே தனது எண்ணங்களை நிலை பெறச் செய்தவர்களின்
மனம் கூடத் தடுமாறக்கூடும்.”
इत्युक्त
स्सोऽभ्यनुज्ञात श्श्वोभाविन्यभिषेचने।
व्रजेति रामः पितरमभिवाद्याभ्ययाद्गृहम्।।2.4.28।।
இவ்வாறு மறு நாள்
பட்டாபிஷேகம் நடை பெறப்போகிறது என்னும் செய்தியைத் தெரிவித்தபின், ராமருக்குப் போக
தசரதர் அனுமதி அளித்தார். அதன் பிறகு,
அவரை வணங்கி விட்டுத் தன் இருப்பிடம் திரும்பினார், ராமர்.
प्रविश्य चात्मनो
वेश्मराज्ञोद्दिष्टेऽभिषेचने।
तत्क्षणेन विनिर्गम्य मातुरन्तपुरं ययौ।।2.4.29।।
தசரதர் பட்டாபிஷேகத்துக்கு
நாள் குறித்த பிறகு, தனது இல்லத்துக்குச் சென்ற ராமர், அங்கிருந்து, உடனேயே தனது
தாயாரின் இருப்பிடத்துக்குச் சென்றார்.
तत्र तां प्रवणामेव
मातरं क्षौमवासिनीम्।
वाग्यतां देवतागारे ददर्शाऽऽयाचतीं श्रियम्।।2.4.30।।
அங்கே, இறைவனை வழிபடும்
அறையில், பட்டாடைகளை அணிந்திருந்த தன் தாயார், அமைதியாகத் தன் மகனுக்கு அரச பதவி
கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதைக் கண்டார்.
प्रागेव चागता तत्र
सुमित्रा लक्ष्मण स्तथा।
सीता चानायिता श्रुत्वा प्रियं रामाभिषेचनम्।।2.4.31।।
ராமனுக்குப்
பட்டாபிஷேகம் நடைபெறப்போகிறது என்னும் நல்ல செய்தியைக் கேட்டு, சுமித்திரையும்,
லக்ஷ்மணனும், அங்கே முதலிலேயே வந்து விட்டார்கள். சீதைக்குச் சொல்லி அனுப்பி
அவளும் வந்து விட்டாள்.
तस्मिन् काले हि
कौशल्या तस्थावामीलितेक्षणा।
सुमित्रयाऽन्वास्यमाना सीतया लक्ष्मणेन च।।2.4.32।।
அப்போது, பாதி மூடிய
கண்களுடன், கௌசல்யை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தாள். சுமித்திரை, சீதை மற்றும்
லக்ஷ்மணன் அங்கேயே நின்றிருந்தார்கள்.
श्रुत्वा पुष्येण
पुत्रस्य यौवराज्याऽभिषेचनम्।
प्राणायामेन पुरुषं ध्यायमाना जनार्दनम्।।2.4.33।।
தன்னுடைய மகன்
ராமனுக்குப் புஷ்ய நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் பட்டாபிஷேகம் நடைபெறப் போகிறது
என்று கேள்விப்பட்டிருந்த கௌசல்யை, மூச்சை அடக்கிப் பிராணாயாமத்தில் ஈடுபட்டுத்
திருமாலை வழிபட்டுக்கொண்டிருந்தாள்.
तथा सनियमामेव
सोऽभिगम्याभिवाद्य च।
उवाच वचनं रामो हर्षयंस्तामनिन्दिताम्।।2.4.34।।
கௌசல்யை அவ்வாறு
தியானத்தில் ஈடுபட்டிருந்த போது ராமர் அங்கு வந்து, தன் தாயை மரியாதையுடன் வணங்கி
விட்டு, அவளுடைய மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் படியான வார்த்தைகளைக் கூறினார்:
अम्ब पित्रा
नियुक्तोऽस्मि प्रजापालनकर्मणि।
भविता श्वोऽभिषेको मे यथा मे शासनं पितुः।।2.4.35।।
“தாயே! எனது தந்தையார்
மக்களைக் காக்கும் பணியை எனக்கு ஒப்படைத்திருக்கிறார். அவருடைய கட்டளைப் படி, நாளை
எனக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போகிறது.
सीतयाप्युपवस्तव्या
रजनीयं मया सह।
एवमृत्विगुपाध्यायै स्सह मामुक्तवान्पिता।।2.4.36।।
இன்றிரவு, சீதையும்,
தலைமைப் புரோகிதர்களும், விழாவை நடத்தி வைப்பவர்களும் என்னுடன் சேர்ந்து உபவாசம்
இருக்க வேண்டும் என்று தந்தையார் என்னிடம் கூறினார்.
यानि यान्यत्र योग्यानि
श्वोभाविन्यभिषेचने।
तानि मे मङ्गलान्यद्य वैदेह्याश्चैव कारय।।2.4.37।।
அபிஷேகம் நாளை
நடைபெறப்போகிறது. இன்றே, அதற்குண்டான மங்கலச் சடங்குகளை எனக்கும், சீதைக்கும்
செய்து விடுங்கள்.”
एतच्छ्रुत्वा तु
कौशल्या चिरकालाभिकाङ्क्षितम्।
हर्षबाष्पकलं वाक्यमिदं राममभाषत।।2.4.38।।
தன்னுடைய வெகு நாளைய
விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில், ஆனந்தக்கண்ணீருடன், தழுதழுத்த குரலில் கௌசல்யை
கூறினாள்:
वत्स राम चिरं जीव
हतास्ते परिपन्थिनः।
ज्ञातीन्मे त्वं श्रिया युक्त स्सुमित्रायाश्च नन्दय।।2.4.39।।
“அருமைக் குழந்தாய்! நீ
நீடூழி வாழவேண்டும்! உன் எதிரிகள் அழிந்து போகட்டும்! செல்வச்செழிப்புடன் நீ நன்கு
வாழ்ந்து என்னுடைய உறவினர்களுக்கும், சுமித்திரையின் உறவினர்களுக்கும் ஆனந்தத்தைக்
கொடு!”
कल्याणे बत नक्षत्रे
मयि जातोऽसि पुत्रक।
येन त्वया दशरथो गुणैराराधितः पिता।।2.4.40।।
அருமை மகனே! நீ ஒரு
அதிருஷ்டமான நக்ஷத்திரத்தில் எனக்குப் பிறந்திருக்கிறாய். அதனால் தான் உனது
தந்தையார் உனது நற்குணங்களால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்! ஓ! (இதைக் கேட்க)
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!
अमोघं बत मे क्षान्तं पुरुषे पुष्करेक्षणे।
येयमिक्ष्वाकुराज्यश्रीः पुत्र त्वां संश्रयिष्यति।।2.4.41।।
மகனே! கடினமான விரதங்களை
அனுஷ்டித்து விஷ்ணுவை நான் வணங்கியது வீண்போகவில்லை. இக்ஷ்வாகு வம்சத்தின்
ராஜ்யலக்ஷ்மி உன்னிடம் வரப்போகிறாள். ஓ! எவ்வளவு மகிழ்ச்சி!”
इत्येवमुक्तो मात्रेदं
रामो भ्रातरमब्रवीत्।
प्राञ्जलिं प्रह्वमासीनमभिवीक्ष्य स्मयन्निव।।2.4.42।।
தனது தாயார் கௌசல்யை இவ்வாறு
தன்னிடம் கூறியதும், பணிவுடன் கைகளைக் கூப்பிக்கொண்டு அமர்ந்திருந்த லக்ஷ்மணனிடம்,
புன் சிரிப்புடன் ராமர் கூறினார்:
लक्ष्मणेमां मया सार्धं
प्रशाधि त्वं वसुन्धराम्।
द्वितीयं मेऽन्तरात्मानं त्वामियं श्रीरुपस्थिता।।2.4.43।।
“லக்ஷ்மணா! என்னுடன்
சேர்ந்து நீயும் இந்த ராஜ்ஜியத்தை ஆட்சி செய்ய வேண்டும். நீ என்னுடைய இன்னொரு
அந்தராத்மா; ஆகையால், இந்த ராஜ்ஜியம் உனக்கும் உரியது தான்.
सौमित्रे भुङ्क्ष्व
भोगांत्स्वमिष्टान्राज्यफलानि च।
जीवितं च हि राज्यं च त्वदर्थमभिकामये।।2.4.44।।
சுமித்திரையின் மகனே,
லக்ஷ்மணா! இந்த அரசுக்குரிய அனைத்து இன்பங்களையும், நீ அனுபவிப்பாயாக!
உனக்காகத்தான் நான் இந்த ஆட்சியையே விரும்பி ஏற்றுக் கொள்கிறேன்.“
इत्युक्त्वा लक्ष्मणं
रामो मातरावभिवाद्य च।
अभ्यनुज्ञाप्य सीतां च जगाम स्वं निवेशनम्।।2.4.45।।
லக்ஷ்மணனுடன் பேசிய
பிறகு, ராமர் தன் இரு தாயார்களையும் மரியாதையுடன் வணங்கி விடை பெற்று, சீதையையும்
விடைபெறச் செய்த பின்னர், தனது இல்லத்துக்குத் திரும்பினார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे चतुर्थस्सर्गः।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் நான்காவது ஸர்க்கம், நிறைவு
பெறுகிறது.
.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
21.02.2024
No comments:
Post a Comment