ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
அயோத்தியா
காண்டம்
ஸர்க்கம்
– 3
(தசரதர் வசிஷ்டரிடமும்,
வாம தேவரிடமும், ராமனின் யுவராஜ பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச்
செய்யுமாறும், அதற்கு வேண்டிய பொருட்களைச் சேகரிக்குமாறும் வேண்டிக்கொள்கிறார்.
சுமந்திரர் ராமரைச் சபைக்கு அழைத்து வருகிறார். ராமருக்கு தசரதர் சில அறிவுரைகள்
கூறுகிறார்.)
तेषामञ्जलिपद्मानि प्रगृहीतानि सर्वशः।
प्रतिगृह्याब्रवीद्राजा तेभ्यः प्रियहितं वचः।।2.3.1।।
அனைவரும், கைகளைத்
தாமரை மொட்டுக்களைப் போல் கூப்பிக் கொண்டு, ராமருக்குப் பட்டம் கட்ட வேண்டும்
என்று தசரதரை வேண்டிக்கொள்கிறார்கள்.
அவர்களுக்குத் தானும் மரியாதை செய்த படியே அவர்களுக்கு மகிழ்ச்சியையும்,
நன்மையையும் தரக்கூடிய வார்த்தைகளைத் தசரதர் கூறினார்:
अहोऽस्मि परमप्रीतः
प्रभावश्चातुलो मम।
यन्मे ज्येष्ठं प्रियं पुत्रं यौवराज्यस्थमिच्छथ।।2.3.2।।
என்னுடைய மூத்த
குமாரனான ராமனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எல்லாரும் கூறியதைக் கேட்டு
எனக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாகிறது. என்னுடைய வைபவம் இன்னும் அதிகரித்தாற் போல்
இருக்கிறது. “
इति प्रत्यर्च्य
तान्राजा ब्राह्मणानिदमब्रवीत्।
वसिष्ठं वामदेवं च तेषामेवोपशृण्वताम्।।2.3.3।।
அவர்களுக்கெல்லாம் உரிய
மரியாதையைச் செய்த பின்னர் தசரதர், அவர்கள் முன்னிலையிலேயே வசிஷ்டரிடமும்,
வாமதேவரிடமும், பிற அந்தணர்களிடமும் இவ்வாறு கூறினார்.
चैत्रश्श्रीमानयं मासः
पुण्यः पुष्पितकाननः।
यौवराज्याय रामस्य सर्वमेवोपकल्प्यताम्।।2.3.4।।
राज्ञस्तूपरते वाक्ये जनघोषो महानभूत्।
“தோட்டங்கள் எல்லாம்
பூத்துக்குலுங்கும் இந்தச் சித்திரை மாதம் மங்களகரமானது. ராமனின் யுவராஜ
பட்டாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்”. தசரதரின் இந்த
சொற்களைக் கேட்ட அவையோர் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
शनैस्तस्मिन्प्रशान्ते च जनघोषे
जनाधिपः।।2.3.5।।
वसिष्ठं मुनिशार्दूलं राजा वचनमब्रवीत्।
அந்த ஆரவாரம் மெதுவாக
அடங்கியவுடன், தசரதர் முனிவருள் சிறந்த வசிஷ்டரிடம் இவ்வாறு கூறினார்:
अभिषेकाय रामस्य
यत्कर्म सपरिच्छदम्।।2.3.6।।
तदद्य भगवन् सर्वमाज्ञापयितु मर्हसि।
“பூஜிக்கத்தகுந்தவரே!
ராமனின் யுவராஜ பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய பொருட்களையெல்லாம் சேகரிப்பதற்கான
ஆணையைப் பிறப்பித்து விடுங்கள்.”
तच्छ्रुत्वा भूमिपालस्य
वसिष्ठो द्विजसत्तमः।।2.3.7।।
आदिदेशाग्रतो राज्ञ स्स्थितान्युक्तान् कृताञ्जलीन्।
அரசரின் இந்த
வார்த்தைகளைக் கேட்டு, அரசரின் முன் கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்த
ஆலோசகர்களுக்கு, அந்தணருள் சிறந்த வசிஷ்டர் இவ்வாறு ஆணையிட்டார்.
सुवर्णादीनि रत्नानि
बलीन् सर्वौषधीरपि।।2.3.8।।
शुक्लमाल्यांश्च लाजांश्च पृथक्च मधुसर्पिषी।
अहतानि च वासांसि रथं सर्वायुधान्यपि।।2.3.9।।
चतुरङ्गबलं चैव गजं च शुभलक्षणम्।
चामरव्यजने श्वेते ध्वजं छत्रं च पाण्डुरम्।।2.3.10।।
शतं च शातकुम्भानां कुम्भानाग्निवर्चसाम्।
हिरण्यशृङ्गमृषभं समग्रं व्याघ्रचर्म च।।2.3.11।।
उपस्थापयत प्रातरग्न्यगारं महीपतेः।
“தங்கம் மற்றும் பிற
உலோகங்கள், ரத்தினங்கள், பூஜைக்கு வேண்டிய பொருட்கள், மூலிகைகள், வெள்ளை மலர்களால்
ஆன மாலைகள், வறுத்த பொரி, தனித் தனிப் பாத்திரங்களில் தேன் மற்றும் நெய்,
புத்தாடைகள், தேர், அனைத்து வித ஆயுதங்கள்,
நால்வகைப் படைகள், மங்களமான லக்ஷணங்களை உடைய ஒரு யானை, வெண்சாமரங்கள்,
கொடி, வெண்கொற்றக்குடை, நெருப்பைப் போல் பிரகாசிக்கும் நூறு தங்கப்பாத்திரங்கள்,
தங்கக்கொப்பி பூட்டிய கொம்புகளுடைய ஒரு எருது, புலித்தோல், ஆகியவற்றை, நாளைக்
காலைக்குள், அரண்மனையில், புனிதமான
அக்கினிக்கு அருகில் தயாராக வைத்திருக்க வேண்டும்.
यच्चान्यत्किञ्चिदेष्टव्यं
तत्सर्वमुपकल्प्यताम्।।2.3.12।।
अन्तःपुरस्य द्वाराणि सर्वस्य नगरस्य च।
चन्दनस्रग्भिरर्च्यन्तां धूपैश्च घ्राणहारिभिः।।2.3.13।।
எந்த ஒரு சிறிய பொருள்
தேவை என்றாலும், அது உடனே கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தப்புரம் மற்றும்
நகரத்தின் எல்லாக் கதவுகளுக்கும் சந்தனம் பூசி, மலர்களால் அலங்கரித்து, நல்ல மணம்
வீசக்கூடிய தூபத்தை ஏற்றி வழிபடவேண்டும்.
प्रशस्तमन्नं
गुणवद्दधिक्षीरोपसेचनम्।
द्विजानां शतसाहस्रे यत्प्रकाममलं भवेत्।।2.3.14।।
நூறாயிரம் அந்தணர்கள்
திருப்தியுடன் உண்ணும் வகையில் சிறந்த அரிசியைப் பாலில் வேக வைத்துத் தயிர்
சேர்த்துப் பரிமாற வேண்டும்.
सत्कृत्य
द्विजमुख्यानां श्वःप्रभाते प्रदीयताम्।
घृतं दधि च लाजाश्च दक्षिणाश्चापि पुष्कलाः।।2.3.15।।
நாளைக் காலையில் சிறந்த
அந்தணர்களுக்கு நல்ல முறையில் மரியாதை செய்து, அன்னம், நெய், தயிர், வறுத்த பொரி
மற்றும் பரிசுகளை ஏராளமாக வழங்க வேண்டும்.
सूर्येऽभ्युदितमात्रे
श्वो भविता स्वस्तिवाचनम्।
ब्राह्मणाश्च निमन्त्र्यन्तां कल्प्यन्तामासनानि च।।2.3.16।।
நாளை விடிந்த உடனேயே,
வாழ்த்துக்கூறும் மந்திரங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தணர்களை அழைத்து
அவர்களைத் தகுந்த இருக்கைகளில் அமரச் செய்ய வேண்டும்.
आबध्यन्तां पताकाश्च
राजमार्गश्च सिंच्यताम्।
सर्वे च तालावचरा गणिकाश्च स्वलङ्कृताः।।2.3.17।।
कक्ष्यां द्वितीयामासाद्य तिष्ठन्तु नृपवेश्मनः।
எங்கும் பதாகைகள் கட்டப்பட
வேண்டும். ராஜ வீதிகளில் தண்ணீர் தெளிக்கப்பட வேண்டும். நடிகர்களையும், நன்கு
அலங்கரித்துக் கொண்டுள்ள கணிகைகளையும், உள்ளறைகளில் அமரச் செய்ய வேண்டும்.
देवायतनचैत्येषुसान्नभक्षा
स्सदक्षिणाः।।2.3.18।।
उपस्थापयितव्या स्स्युर्माल्ययोग्याः पृथक्पृथक्।
உணவு மற்றும்
தின்பண்டங்களை அளிக்கவும், மாலைகளை ஏந்தி நிற்கவும், தக்ஷிணைகள் வழங்கவும்,
கோவில்களிலும், பிற வழிபாட்டு ஸ்தலங்களிலும், ஆட்களை நிறுத்தி வைக்கவேண்டும்.
दीर्घासिबद्धा योधाश्च
सन्नद्धा मृष्टवाससः।।2.3.19।।
महाराजाङ्गणं सर्वे प्रविशन्तु महोदयम्।
புத்தாடைகள் அணிந்த,
நீண்ட உடைவாளை இடையில் செருகிக்கொண்டுள்ள, எப்போதும் தயாராகவும்,
எச்சரிக்கையுடனும் இருக்கும் போர்வீரர்கள், மகாராஜாவின் சபைக்குள் வந்திருக்க
வேண்டும்.”
एवं व्यादिश्य विप्रौ
तौ क्रियास्तत्र सुनिष्ठितौ।।2.3.20।।
चक्रतुश्चैव यच्छेषं पार्थिवाय निवेद्य च।
சுயக்கட்டுப்பாடு மிக்க
அந்த இரு அந்தணர்களும்,(வசிஷ்டர் மற்றும் வாமதேவர்) இந்தக் காரியங்களையும்,
இன்னும் மீதமிருந்த காரியங்களையும் செய்யச்சொல்லி ஆணையிட்டு விட்டு அதைப் பற்றி
அரசருக்கும் தெரிவித்தார்கள்.
कृतमित्येव चाब्रूतां
अभिगम्य जगत्पतिम्।।2.3.21।।
यथोक्तवचनं प्रीतौ हर्षयुक्तौ द्विजर्षभौ।
செய்யப்பட்டுள்ள
ஏற்பாடுகளால், திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும், அந்த இரு அந்தண ஸ்ரேஷ்டர்களும்
( வசிஷ்டரும் வாமதேவரும்) அரசரிடம் சென்று, “ தாங்கள் கூறிய படி அனைத்தும்
செய்தாயிற்று” என்று தெரிவித்தார்கள்.
ततस्सुमन्त्रं
द्युतिमान्राजा वचनमब्रवीत्।
रामः कृतात्मा भवता शीघ्रमानीयतामिति।।2.3.22।।
பின்னர், தசரத மன்னர்,
சுமந்திரரிடத்தில், தன்னடக்கம் உள்ள ராமரை உடனே அங்கே அழைத்து வருமாறு கூறினார்.
स तथेति प्रतिज्ञाय
सुमन्त्रो राजशासनात्।।2.3.23।।
रामं तत्रानयाञ्चक्रे रथेन रथिनां वरम्।
“அப்படியே ஆகட்டும்!”
என்று கூறி, மிகச்சிறந்த தேரோட்டியான சுமந்திரர், ராமரைத் தேரில் இருத்தி, அங்கே
அழைத்து வரச்சென்றார்.
अथ तत्र समासीना स्तदा
दशरथं नृपम्।।2.3.24।।
प्राच्योदीच्याः प्रतीच्याश्च दाक्षिणात्याश्च भूमिपाः।
म्लेच्छाश्चार्याश्च ये चान्ये वनशैलान्तवासिनः।।2.3.25।।
उपासाञ्चक्रिरे सर्वे तं देवा इव वासवम्।
சுமந்திரர்
புறப்பட்டுச் சென்ற பிறகு, கிழக்குப் பகுதியிலிருந்தும், மேற்குப்பகுதியில்
இருந்தும், தெற்குப்பகுதியிலிருந்தும், ஆரியர்களும், ஆரியர் அல்லாதவர்களும்,
காட்டுவாசிகளும், மலைவாசிகளும், அனைவருமே அங்கு வந்து, தேவேந்திரனுக்குத் தேவர்கள்
மரியாதை செலுத்துவதைப் போல தசரதருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
तेषां मध्ये स
राजर्षिर्मरुतामिव वासवः।।2.3.26।।
प्रासादस्थो रथगतं ददर्शायान्तमात्मजम्।
ராஜரிஷியான தசரதர்,
மருத்துக்களிடையே விளங்கும் இந்திரனைப்போலத் தன் அரண்மனையில் இருந்து கொண்டு,
தேரில் அமர்ந்து வந்து கொண்டிருக்கும் தன் புதல்வனாகிய ராமனைப் பார்த்தார்.
गन्धर्वराजप्रतिमं लोके
विख्यातपौरुषम्।।2.3.27।।
दीर्घबाहुं महासत्त्वं मत्तमातङ्गगामिनम्।
चन्द्रकान्ताननं राममतीव प्रियदर्शनम्।।2.3.28।।
रूपौदार्यगुणैः पुंसां दृष्टिचित्तापहारिणम्।
घर्माभितप्ताः पर्जन्यं ह्लादयन्तमिव प्रजाः।।2.3.29।।
न ततर्प समायान्तं पश्यमानो नराधिपः।
தன் வீரத்துக்குப்
பெயர் போன ராமர் கந்தர்வர்களுடைய அரசர் போலக் காணப்பட்டார். நீண்ட கரங்களுடனும்,
சந்திரகாந்தக் கல்லைப் போன்ற குளிர்ச்சியான முகத்துடனும், மிகுந்த வலிமையுடனும்,
மதம் பிடித்த யானை போன்ற கம்பீரமான நடையுடனும், மக்களுடைய கண்களைக்கவரும் அழகுடனும்,
பெருந்தன்மையுடனும் வெய்யிலினால் தகிக்கப்பட்ட மக்களுக்கு மழையைப் போல் இன்பம்
தருபவராகக் காணப்பட்ட ராமரைக் கண்ட தசரதருக்குத் திருப்தியே உண்டாகவில்லை.
अवतार्य सुमन्त्रस्तं
राघवं स्यन्दनोत्तमात्।।2.3.30।।
पितुस्समीपं गच्छन्तं प्राञ्जलिः पृष्ठतोऽन्वगात्।
ராமருக்கு, அந்தச் சிறந்த ரதத்தில் இருந்து
இறங்க உதவி செய்த சுமந்திரர், தனது தந்தையாரை நோக்கிச் செல்லும் அவரைக் கூப்பிய
கரங்களுடன் பிந்தொடர்ந்தார்.
स तं कैलासशृङ्गाभं
प्रासादं नरपुङ्गवः।।2.3.31।।
आरुरोह नृपं द्रष्टुं सह सूतेन राघवः।
மனிதருள் சிறந்த ராமர், தேரோட்டியான
சுமந்திரருடன், கைலாசமலையின் சிகரத்தைப் போல உயர்ந்திருந்த அரண்மணையின் படிகளில்
ஏறினார்.
स प्राञ्जलिरभिप्रेत्य
प्रणतः पितुरन्तिके।।2.3.32।।
नाम स्वं श्रावयन्रामो ववन्दे चरणौ पितुः।
கைகளைக்
கூப்பிக்கொண்டே, தசரதரை நோக்கி நடந்த ராமர், தனது பெயரைக் கூறிக்கொண்டு, குனிந்து,
தனது தந்தையாரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.
तं दृष्ट्वा प्रणतं
पार्श्वे कृताञ्जलिपुटं नृपः।।2.3.33।।
गृह्याञ्जलौ समाकृष्य सस्वजे प्रियमात्मजम्।
தனது அன்புக்குரிய
புதல்வன் அவ்வாறு கைகளைக் கூப்பிக்கொண்டு நிற்பதைக்கண்ட தசரதர், அந்தக் கூப்பிய
கைகளைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்து அணைத்துக் கொண்டார்.
तस्मै चाभ्युदितं
दिव्यं मणिकाञ्चनभूषितम्।।2.3.34।।
दिदेश राजा रुचिरं रामाय परमासनम्।
தசரத மன்னர்,
ராமருக்குப், பொன்னாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட மிக உயர்ந்த ஆசனத்தை
அளித்தார்.
तदासनवरं प्राप्य
व्यदीपयत राघवः।।2.3.35।।
स्वयैव प्रभया मेरुमुदये विमलो रविः।
அந்த உயர்ந்த ஆசனத்தில்
அமர்ந்த ராமர், காலை நேரத்தில், மேரு மலையில் இருந்து தன் சொந்த ஒளியால்
பிரகாசிக்கும் சூரியனைப் போல ஒளிர்ந்தார்.
तेन विभ्राजता तत्र सा
सभाऽभिव्यरोचत।।2.3.36।।
विमलग्रहनक्षत्रा शारदी द्यौरिवेन्दुना।
அந்தச் சபையானது, ராமரின் இருப்பால், தெள்ளத்
தெளிவாகத் துலங்கும் நக்ஷத்திரங்களுடனும், கிரகங்களுடனும், ஒளிரும் சரத்காலத்து
ஆகாயத்தைப் போல ஒளிவீசியது.
तं पश्यमानो
नृपतिस्तुतोष प्रियमात्मजम्।।2.3.37।।
अलङ्कृतमिवात्मानमादर्शतलसंस्थितम्।
தனது அன்புக்குரிய
புதல்வனான ராமரைப்பார்த்த தசரதர், கண்ணாடியையே அழகுபடுத்தும், தன்னுடைய
பிம்பத்தையே பார்த்தது போல் மகிழ்ந்தார்.
स तं सस्मितमाभाष्य
पुत्रं पुत्रवतां वरः।।2.3.38।।
उवाचेदं वचो राजा देवेन्द्रमिव काश्यपः।
தந்தையாருக்குள்
சிறந்தவரான தசரதர், காஸ்யபர் தனது மகனான தேவேந்திரனுடன் பேசுவது போலப்
புன்னகையுடன் ராமரிடம் பேசலானார்.
ज्येष्ठायामसि मे
पत्न्यां सदृश्यां सदृशस्सुतः।।2.3.39।।
उत्पन्नस्त्वं गुणश्रेष्ठो मम रामात्मजः प्रियः।
“ராமா! எனது அருமையான
மூத்த மனைவியின் அருமையான புதல்வனாகிய நீ, உனது நற்பண்புகளால், எனக்கு மிகவும்
பிரியமானவனாக இருக்கிறாய்!
यतस्त्वया प्रजाश्चेमा
स्स्वगुणैरनुरञ्जिताः।।2.3.40।।
तस्मात्त्वं पुष्ययोगेन यौवराज्यमवाप्नुहि।
உனது நற்பண்புகளால், நீ
நம் பிரஜைகளையும் மகிழ்வித்திருப்பதால், சந்திரனுடன், புஷ்ய நக்ஷத்திரம் கூடும்
நன்னாளில், நீ யுவராஜ பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
कामतस्त्वं प्रकृत्यैव
विनीतो गुणवानसि।।2.3.41।।
गुणवत्यपि तु स्नेहात्पुत्र वक्ष्यामि ते हितम्।
இயற்கையாகவே, மென்மையான
இயல்பு கொண்ட நீ, நற்பண்புகளின் உறைவிடமாக இருக்கிறாய். இருந்த போதிலும், உன்
மீதுள்ள அன்பால் உனக்குச் சில அறிவுரைகள் கூறுகிறேன்.
भूयो विनयमास्थाय भव
नित्यं जितेन्द्रियः।।2.3.42।।
कामक्रोधसमुत्थानि त्यजेथा व्यसनानि च।
பணிவுடன், எப்போதும்
உன்னுடைய இந்திரியங்களைக் கட்டுக்குள் வைத்திரு. விருப்பத்தினாலோ, கோபத்தினாலோ,
தவறுகள் செய்யாமலிரு.
परोक्षया वर्तमानो
वृत्त्या प्रत्यक्षया तथा।।2.3.43।।
अमात्यप्रभृतीस्सर्वाःप्रकृतीश्चानुरञ्जय।
உன்னுடைய நேரடியான
மற்றும் மறைமுகமான நடவடிக்கைகளால், உன்னுடைய அமைச்சர்களையும், பிற மக்களையும்
எப்போதும் திருப்திப்படுத்த வேண்டும்.
कोष्ठागारायुधागारैःकृत्वा
सन्निचयान्बहून्।।2.3.44।।
तुष्टानुरक्तप्रकृतिर्यः पालयति मेदिनीम्।
तस्यनन्दन्ति मित्राणि लब्ध्वाऽमृतमिवामराः।।2.3.45।।
तस्मात्त्वमपि चात्मानं नियम्यैवं समाचर।
தானியக்கிடங்குகளும்,
படைத்தடவாளங்களும், எப்போதும் நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள். உன்னுடைய
பிரஜைகளை எப்போதும் விசுவாசம் உள்ளவர்களாகவும், திருப்தியுடையவர்களாயும்,
வைத்திரு. அப்படி இருக்கும் மன்னனுடைய நண்பர்கள் அமுதத்தை உண்ட தேவர்களைப் போல
மகிழ்ந்திருப்பார்கள். ஆகவே, நீயும் உன்னுடைய மனதைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்.”
तच्छ्रुत्वा
सुहृदस्तस्य रामस्य प्रियकारिणः।।2.3.46।।
त्वरिताः शीघ्रमभ्येत्य कौसल्यायै न्यवेदयन्।
இதைக் கேட்ட ராமருடைய நண்பர்கள் விரைந்து சென்று
கௌசல்யையிடம் இந்த இனிய செய்தியைச் சொன்னார்கள்.
सा हिरण्यं च गाश्चैव
रत्नानि विविधानि च।।2.3.47।।
व्यादिदेश प्रियाख्येभ्यः कौसल्या प्रमदोत्तमा।
மங்கையருள் சிறந்த கௌசல்யை, இந்த மங்கலச் செய்தியைக்
கேட்டு மகிழ்ந்து, அந்தச் செய்தியைக் கொண்டு வந்தவர்களுக்குப் பொன், பசுக்கள்
மட்டும் ரத்தினங்களைப் பரிசாக அளிக்க ஏற்பாடு செய்தார்.
अथाऽभिवाद्य राजानं
रथमारुह्य राघवः।।2.3.48।।
ययौ स्वं द्युतिमद्वेश्म जनौघैः प्रतिपूजितः।
பின்னர், தசரதரை வணங்கி
விடை பெற்றுக்கொண்டு, ராமர், தேரில் ஏறி, அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யத் தனது
உத்தமமான அரண்மனைக்குச் சென்றார்.
ते चापि पौरा
नृपतेर्वचस्त च्छृत्वा तथा लाभमिवेष्टमाशु।
नरेन्द्रमामन्त्र्य गृहाणि गत्वा देवान्समानर्चुरतिप्रहृष्टाः।।2.3.49।।
அரசரின் அறிவிப்பைக்
கேட்ட நகர மக்களும், தங்களுக்கு பெரும் நன்மை ஏற்பட்டதாக உணர்ந்து, அரசரிடம்
விடைபெற்றுக்கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரவர் இல்லங்களுக்கு விரைந்து
சென்று, இறைவனை வழிபட்டார்கள்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे तृतीयस्सर्गः।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின்
மூன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
19.02.2024
No comments:
Post a Comment