Sunday, 26 November 2023

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 6

 

(தசரத மன்னரின் ஆட்சியில், அயோத்தியின் செழிப்பு, வசதிகள் ஆகியவற்றைப் பற்றிய வர்ணனை)


तस्यां पुर्यामयोध्यायां वेदवित्सर्वसङ्ग्रह: ।
दीर्घदर्शी महातेजा: पौरजानपदप्रिय: ।।1.6.1।।

इक्ष्वाकूणामतिरथो यज्वा धर्मरतो वशी ।
महर्षिकल्पो राजर्षिस्त्रिषु लोकेषु विश्रुत: ।।1.6.2।।

बलवान्निहतामित्रो मित्रवान्विजितेन्द्रिय: ।
धनैश्च सङ्ग्रहैश्चान्यैश्शक्रवैश्रवणोपम: ।।1.6.3।।

यथा मनुर्महातेजा लोकस्य परिरक्षिता ।
तथा दशरथो राजा वसञ्जगदपालयत् ।। 1.6.4।।

வேதங்களை நன்கு கற்றறிந்தவரும், தீர்க்கதரிசியும், மிகுந்த ஒளி பொருந்தியவரும், நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்களுக்கு மிகவும் பிரியமானவரும், இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களுக்குள்ளே, பல மஹாரதர்களுடன் தனியாக யுத்தம் செய்து வெல்லக்கூடிய அதிரதரும், பல வேள்விகளைச் செய்தவரும், தர்மவழியில் செல்பவரும், தன் பிரஜைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரிய ரிஷிகளுக்கு ஒப்பானவரும், ராஜரிஷியானவரும், மூவுலகங்களிலும், புகழப்பெற்றவரும், வலிமை கொண்டவரும், எதிரிகளை அழிப்பவரும், நிறைய நண்பர்களை உடையவரும், புலன்களை வென்றவரும், பணமும், பிற செல்வங்களும் ஏராளமாகச் சேர்த்து, இந்திரனுக்கும், குபேரனுக்கும் இணையாகக் கருதப்பட்டவருமான தசரத மன்னர், அந்த அயோத்தியில் இருந்து கொண்டு, இந்த உலக முழுவதையும் ஆண்டு வந்தார்.

 

तेन सत्याभिसन्धेन त्रिवर्गमनुतिष्ठता ।
पालिता सा पुरी श्रेष्ठा इन्द्रेणेवामरावती ।।1.6.5।।

வாக்குத் தவறாதவராய், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று புருஷார்த்தங்களையும் பின்பற்றி, மனு வடித்த நீதியின் படி, இந்திரன் அமராவதியை ஆள்வதைப் போல, தசரத மன்னன் அயோத்தியை ஆண்டு வந்தார்.


तस्मिन्पुरवरे हृष्टा धर्मात्मानो बहुश्रुता: ।
नरास्तुष्टा धनैस्स्वैस्स्वैरलुब्धास्सत्यवादिन: ।।1.6.6।।

அந்தச் சிறந்த நகரத்தில் வசித்த மக்கள், மகிழ்ச்சியுடனும், தர்மத்தைப் பின்பற்றுபவர்களாகவும், கற்றறிந்த அறிஞர்களாகவும், தங்கள் தங்கள் உடைமைகளுடன் திருப்தியாகவும், பேராசையில்லாமலும், வாக்குத் தவறாதவர்களாகவும் திகழ்ந்தனர்.



नाल्पसन्निचय: कश्चिदासीत्तस्मिन् पुरोत्तमे ।
कुटुम्बी यो ह्यसिद्धार्थोऽगवाश्वधनधान्यवान् ।।1.6.7।।

அந்தச் சிறந்த நகரத்தில், அதிகச் செல்வம் இல்லாதவர்களோ, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை முறைப்படி பின்பற்றாதவர்களோ, தானியங்கள், கால் நடைச் செல்வங்கள், குதிரைகள் ஆகியவை இல்லாதவர்களோ, எவருமே இல்லை.

 

कामी वा न कदर्यो वा नृशंस: पुरुष: क्वचित् ।
द्रष्टुं शक्यमयोध्यायान्नाविद्वान्न च नास्तिक: ।।1.6.8।।

காமம் நிறைந்தவர்களையோ, கருமிகளையோ, கொடூரமானவர்களையோ, கல்வி கற்காதவர்களையோ, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையோ, அயோத்தியில் காணவே முடியாது.


सर्वे नराश्च नार्यश्च धर्मशीलास्सुसंयता: ।
उदिताश्शीलवृत्ताभ्यां महर्षय इवामला: ।।1.6.9।।

அந்த நகரத்து ஆடவரும், பெண்டிரும், தர்மத்தின் வழி நடப்பவர்களாகவும், சுய கட்டுப்பாடு உடையவர்களாகவும், நல்ல நடத்தை உள்ளவர்களாகவும், தூய்மையான மகரிஷிகளைப் போல வாழ்ந்தார்கள்.

 

नाकुण्डली नामकुटी नास्रग्वी नाल्पभोगवान् ।
नामृष्टो नानुलिप्ताङ्गो नासुगन्धश्च विद्यते ।।1.6.10।।

காதணிகள் அணியாமலும், கிரீடம் இன்றியும், மாலைகள் அணியாமலும், உடலுக்கு, தூய்மை இன்றியும், வாசனைத் தைலங்கள் தடவாமலும், அந்த நகரத்தில் எவருமே இருக்கவில்லை..


नामृष्टभोजी नादाता नाप्यनङ्गदनिष्कधृक् ।
नाहस्ताभरणो वाऽपि दृश्यते नाप्यनात्मवान् ।।1.6.11।।

அந்த நகரத்தில், முழு திருப்தி இல்லாமல் உணவு உண்ணுபவர்களோ, பிறருக்குத் தானம் செய்யாதவர்களோ, கைகள், கழுத்துகளில் ஆபரணங்கள் அணியாதவர்களோ, தன்னைக் கட்டுக்குள் வைக்காதவர்களோ, யாரும் இருக்கவில்லை.



नानाहिताग्निर्नायज्वा न क्षुद्रो वा न तस्कर: ।
कश्चिदासीदयोध्यायान्न च निर्वृत्तसङ्कर: ।।1.6.12।।

அந்த அயோத்தியில் அக்கினி வேள்விகளும், பிற வேள்விகளும் செய்யாதவர்களோ, கீழான எண்ணம் கொண்டவர்களோ, திருடர்களோ, வர்ணக் கலப்பினால் பிறந்தவர்களோ, யாரும் இருக்கவில்லை.

.

स्वकर्मनिरता नित्यं ब्राह्मणा विजितेन्द्रिया: ।
दानाध्ययनशीलाश्च संयताश्च परिग्रहे ।।1.6.13।।

அந்தணர்கள், தினந்தோறும் தங்கள் கடமைகளைச் செய்பவர்களாகவும், புலன்களை வென்றவர்களாகவும், தானம் செய்வதில் விருப்பம் உடையவர்களாகவும், தானாகவே, கல்வி கற்பதில் நாட்டம் உள்ளவர்களாகவும், பிறர் கொடுக்கும் தானத்தையும், அளவோடு பெற்றுக் கொள்பவர்களாகவும், குடும்ப வாழ்க்கையில் மட்டுமே இன்பம் காண்பவர்களாகவும் இருந்தார்கள்.


न नास्तिको नानृतको न कश्चिदबहुश्रुत: ।
नासूयको न चाऽशक्तो नाविद्वान्विद्यते तदा ।।1.6.14।।

அந்தக் காலத்தில், அந்நகரத்தில், கடவுள் நம்பிக்கை அற்றவரோ, பொய் சொல்பவரோ, சாஸ்திரங்களை அதிகம் கற்காதவரோ, பொறாமை பிடித்தவரோ, வலிமையற்றவரோ, கல்வி அறிவில்லாதவரோ, யாருமே இருக்கவில்லை.


नाषडङ्गविदत्रासीन्नाव्रतो नासहस्रद: ।
न दीन: क्षिप्तचित्तो वा व्यथितो वाऽपि कश्चन ।।1.6.15।।

 

அங்கே, ( சிக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகிய ) ஆறு வேதாங்கங்களைக்  கற்காதவர்களும், விரதங்களை அனுசரிக்காதவர்களும், ஆயிரக்கணக்கில் தானம் செய்யாதவர்களும், துன்பத்தில் உழல்பவர்களும், நிலையான மன நிலை இல்லாதவர்களும், எரிச்சல் படுபவர்களும் இல்லவே இல்லை.


कश्चिन्नरो वा नारी वा नाश्रीमान्नाप्यरूपवान् ।
द्रष्टुं शक्यमयोध्यायां नापि राजन्यभक्तिमान् ।।1.6.16।।

அயோத்தியில், ஆண்களிலோ, பெண்களிலோ, செல்வம் இல்லாதவர்களோ, அழகில்லாதவர்களோ, அரசன் மீது பக்தி இல்லாதவர்களோ, ஒருவர் கூடக் காணக் கிடைக்க மாட்டார்கள்.

 

वर्णेष्वग्र्यचतुर्थेषु देवतातिथिपूजका:।
कृतज्ञाश्च वदान्याश्च शूरा विक्रमसंयुता: ।।1.6.17।।

दीर्घायुषो नरास्सर्वे धर्मं सत्यं च संश्रिता: ।
सहिता: पुत्रपौत्रैश्च नित्यं स्त्रीभि: पुरोत्तमे ।।1.6.18।।

நகரங்களுள் சிறந்ததான அயோத்தியில், முதல் நான்கு வர்ணத்தினரும், கடவுளை வழிபடுபவர்களாகவும், விருந்தோம்புபவராகவும் இருந்தார்கள். நன்றி மிகுந்தவர்களாய், தாராள மனமுடையவர்களாய், வீரமும், வலிமையும் பொருந்தியவர்களாய், தர்மத்தையும், சத்தியத்தையும் பின்பற்றித் தன் புத்திர பௌத்திரர்களுடனும், மனைவியருடனும், நீண்ட காலம் இன்புற்று வாழ்ந்து வந்தனர்.


क्षत्रं ब्रह्ममुखं चासीद्वैश्या: क्षत्रमनुव्रता: ।
शूद्रास्स्वधर्मनिरतास्त्रीन्वर्णानुपचारिण: ।।1.6.19।।

க்ஷத்திரியர்கள் அந்தணர்களை மதித்தார்கள்; வைசியர்கள், க்ஷத்திரியர்களைப் பின்பற்றினார்கள். சூத்திரர்கள் இந்த மூன்று வர்ணத்தினருக்கும் உதவியாகத் தன் கடமைகளைச் செய்து வந்தார்கள்.


सा तेनेक्ष्वाकुनाथेन पुरी सुपरिरक्षिता ।
यथा पुरस्तान्मनुना मानवेन्द्रेण धीमता ।।1.6.20।।

முன்னர், மனிதர்களுள் மேன்மையானவரும் மிகச் சிறந்த புத்திமானுமான மனுஅரசர் எவ்வாறு ஆட்சி செய்து வந்தாரோ, அவ்வாறே, இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த தசரதரும், நீதி தவறாமல், தனது நாட்டை ஆண்டு வந்தார்.

 

योधानामग्निकल्पानां पेशलानाममर्षिणाम् ।
सम्पूर्णा कृतविद्यानां गुहा केसरिणामिव ।।1.6.21।।

குகைகளில் சிங்கங்கள் இருப்பது போல, அயோத்தியில் வீரர்கள் இருந்தார்கள். எரியும் தழல் போன்று ஒளி வீசும் அவ்வீரர்கள், திறமையும், மன உறுதியும், போர்க்கலையில் நிபுணத்துவமும் பெற்றிருந்தார்கள்.

काम्भोजविषये जातैर्बाह्लीकैश्च हयोत्तमै: ।
वनायुजैर्नदीजैश्च पूर्णा हरिहयोत्तमै:।।1.6.22।।

அந்த நகரம், காம்போஜம், பாஹ்லிகம், வனயு, சிந்து ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட, இந்திரனின் குதிரையான உச்சிஸ்ரவஸ் போன்ற அற்புதமான குதிரைகளால் நிரம்பியிருந்தது.

 

विन्ध्यपर्वतजैर्मत्तै: पूर्णा हैमवतैरपि ।
मदान्वितैरतिबलैर्मातङ्गै: पर्वतोपमै: ।।1.6.23।।

ऐरावतकुलीनैश्च महापद्मकुलैस्तथा ।
अञ्जनादपि निष्पन्नैर्वामनादपि च द्विपैः ।।1.6.24।।

அந்நகரம் விந்திய மலையில் பிறந்த மதம் பிடித்த யானைகளாலும், இமய மலையில் பிறந்த, மலை போன்ற வலிமை நிறைந்த யானைகளாலும், ஐராவதம், மஹாபத்மம், அஞ்சனா, வாமனா ஆகிய புகழ் பெற்ற யானைகளின் இனத்தைச் சேர்ந்த யானைகளாலும், நிரம்பி இருந்தது.

 

भद्रैर्मन्द्रैर्मृगैश्चैव भद्रमन्द्रमृगैस्तथा।
भद्रमन्द्रैर्भद्रमृगैर्मृगमन्द्रैश्च सा पुरी।

नित्यमत्तैस्सदा पूर्णा नागैरचलसन्निभै:।।1.6.25।।

இவை மட்டுமன்றி, அயோத்தி நகரமானது, பத்ர, மந்த்ர, ம்ருக ஆகிய யானைகளின் கலப்பினங்களான, மலையை நிகர்த்த, மதம் பிடித்த யானைகளால் நிறைந்து இருந்தது.

 

सा योजने च द्वे भूय: सत्यनामा प्रकाशते ।
यस्यां दशरथो राजा वसन् जगदपालयत् ।।1.6.26।।

தசரதரால் ஆளப்பட்ட இந்த நகரம் ( 2 யோஜனை ) 16 மைல் விஸ்தீரணம் உடையதாகத் தன் பெயரின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

 

तां पुरीं स महातेजा राजा दशरथो महान् ।
शशास शमितामित्रो नक्षत्राणीव चन्द्रमा: ।।1.6.27।।

வலிமை மிக்க தசரத மன்னர், தன் திறமையால், எதிரிகளை அடக்கிச் சந்திரன் நக்ஷத்திரங்களை ஆட்சி செய்வது போல் அயோத்தியை ஆண்டு வந்தார்.

 

तां सत्यनामां दृढतोरणार्गलां
गृहैर्विचित्रैरुपशोभितां शिवाम् ।

पुरीमयोध्यां नृसहस्रसङ्कुलां
शशास वै शक्रसमो महीपति: ।।1.6.28।।

வலிமையான கதவுகளும், பூட்டுகளும், அழகிய வீடுகளும், ஆயிரக்கணக்கான மனிதர்களும் கொண்ட, தன் பெயருக்கேற்ற படி, ‘வெல்ல முடியாத’ நகரமான அயோத்தியை, இந்திரனுக்கு நிகரான தசரத மன்னர்

ஆண்டு வந்தார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे षष्ठस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஆறாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

 

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

 

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...