Sunday, 26 November 2023

 

 

                                  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 7

( தசரத மன்னரின் அரசவை மற்றும் அமைச்சர்களின் சிறப்பு)

 

तस्यामात्या गुणैरासन्निक्ष्वाकोस्तु महात्मन: ।
मन्त्रज्ञाश्चेङ्गितज्ञाश्च नित्यं प्रियहिते रता: ।।1.7.1।।


இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களின் அமைச்சர்கள் யாவரும், நற்குணங்கள் நிறைந்தவர்களாகவும், நல்ல புத்திமதிகள் சொல்லக்கூடியவர்களாகவும், ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர் மனதில் ஓடக்கூடிய எண்ணங்களைக் கணிக்கக் கூடியவர்களாகவும், அரசனுக்கு

 நன்மை செய்பவர்களாகவும் அமைந்திருந்தனர்.

 

अष्टौ बभूवुर्वीरस्य तस्यामात्या यशस्विन: ।
शुचयश्चानुरक्ताश्च राजकृत्येषु नित्यश: ।।1.7.2।।

வலிமையும், புகழும் பொருந்திய தசரதனுக்குத் தூய நடத்தை உள்ளவர்களும், எப்பொழுதும் அரசனுடைய காரியங்களை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுபவர்களுமான, எட்டு அமைச்சர்கள் இருந்தனர்.

 

 

धृष्टिर्जयन्तो विजयस्सिद्धार्थो ह्यर्थसाधक: ।
अशोको मन्त्रपालश्च सुमन्त्रश्चाष्टमोऽभवत् ।।1.7.3।।

அவர்கள், த்ருஷ்டி, ஜயந்தன், விஜயன், சித்தார்த்தன், அர்த்தஸாதகன், அசோகன், மந்த்ரபாலன், சுமந்திரன் ஆகியோர்.


ऋत्विजौ द्वावभिमतौ तस्याऽऽस्तामृषिसत्तमौ ।
वसिष्ठो वामदेवश्च मन्त्रिणश्च तथापरे ।।1.7.4।।

தசரதனுக்கு, வசிஷ்டர், வாமதேவர் என்னும் இரண்டு மிகச்சிறந்த ரிஷிகள், குடும்ப புரோகிதர்களாக இருந்தனர். இவர்களைத்தவிர,  நல்வழி கூறுவோர் வேறு சிலரும் இருந்தனர்.


विद्याविनीता ह्रीमन्त: कुशला नियतेन्द्रिया: ।
श्रीमन्तश्च महात्मानश्शास्त्रज्ञा दृढविक्रमा: ।।1.7.5।।

कीर्तिमन्त: प्रणिहिता: यथावचनकारिण: ।
तेज: क्षमायश:प्राप्ता स्मितपूर्वाभिभाषिण: ।।1.7.6।।

அனைத்து விதமான கல்வியையும் பெற்றிருந்த அவர்கள், நியாயமில்லாத செயல்களைச் செய்வதற்கு நாணினார்கள். அவர்கள் நற்பெயர் பெற்றவர்களாகவும், திறமைசாலிகளாகவும், சாஸ்திரங்களை நன்கு கற்றவர்களாகவும், செல்வம் படைத்தவர்களாகவும், பெருந்தன்மை உடையவர்களாகவும் இருந்தார்கள். புலனடக்கமும், செயல்களில் கட்டுப்பாடும் கொண்ட அவர்கள் சொன்னதைச் செய்பவர்களாகவும், தீர்மானத்துடன் செயல்படுபவர்களாகவும் இருந்தார்கள். புத்திசாலிகளாகவும், மன்னிக்கும் குணம் உடையவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும்,  புன்னகையுடன் பேசும் வழக்கத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.

.

क्रोधात्कामार्थहेतोर्वा न ब्रूयुरनृतं वच: ।
तेषामविदितं किञ्चित्स्वेषु नास्ति परेषु वा ।

क्रियमाणं कृतं वापि चारेणापि चिकीर्षितम् ।।1.7.7।।

கோபத்தினாலோ, ஆசையினாலோ, அவர்கள் ஒரு போதும், பொய்யோ, நியாயமற்ற வார்த்தைகளையோ சொன்னதில்லை. தன்னைச் சார்ந்தவர்களோ, மற்றவர்களோ, செய்த காரியங்கள், செய்து கொண்டிருக்கும் காரியங்கள், செய்ய நினைத்திருக்கும் காரியங்கள் ஆகிய அனைத்தையும் தங்கள் ஒற்றர்கள் மூலம் அந்த அமைச்சர்கள் அறிந்திருந்தார்கள்.

 

कुशला व्यवहारेषु सौहृदेषु परीक्षिता: ।
प्राप्तकालं तु ते दण्डं धारयेयुस्सुतेष्वपि ।।1.7.8।।

மக்களிடம் எவ்வறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். தங்கள் நண்பர்களுக்கு உண்மையாக நடந்து கொண்டார்கள். தங்கள் புதல்வர்களே ஆயினும், தவறிழைத்தால், அவர்களுக்குத் தண்டனை வழங்கத் தவற மாட்டார்கள்.


कोशसङ्ग्रहणे युक्ता बलस्य च परिग्रहे ।
अहितं चापि पुरुषं न विहिंस्युरदूषकम् ।।1.7.9।।

அரசின் கருவூலத்தை நிரப்புவதிலும், படை திரட்டுவதிலும் கை தேர்ந்தவர்கள் அவர்கள். தவறு ஒன்றும் இழைக்காத போது, தங்களுக்கு வேண்டாதவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எந்த விதமான தீங்கும் இழைக்க மாட்டார்கள்.



वीराश्च नियतोत्साहा राजशास्त्रमनुष्ठिता: ।
शुचीनां रक्षितारश्च नित्यं विषयवासिनाम् ।।1.7.10।।

வீரம் நிறைந்த அவர்கள் எப்போதும் குன்றாத உற்சாகத்துடன் இருந்தார்கள். அரசியல் சாஸ்திரப்படி நடந்து கொண்டு, அந்த ராஜ்ஜியத்தில் வசித்த நல்ல மனிதர்களைப் பாதுகாத்து வந்தார்கள்.

 

ब्रह्म क्षत्रमहिंसन्तस्ते कोशं समपूरयन् ।
सुतीक्ष्णदण्डास्संप्रेक्ष्य पुरुषस्य बलाबलम् ।।1.7.11।।

அரசின் கருவூலத்தை நிரப்பும் போது, எண்ணத்திலோ, சொல்லிலோ, செயலிலோ, அந்தணர்களுக்கோ, க்ஷத்திரியர்களுக்கோ, எந்தத் துன்பமும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள்.  தவறுகள் நேரிட்டால், அதைச் செய்த மனிதனின் வலிமை மற்றும் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, கடுமையான தண்டனைகளை விதித்தார்கள்.

 

शुचीनामेकबुद्धीनां सर्वेषां सम्प्रजानताम् ।
नासीत्पुरे वा राष्ट्रे वा मृषावादी नर: क्वचित् ।।1.7.12।।

இவ்வாறு தூய நடத்தையுடன் அந்த அமைச்சர்கள், ஒரு மனதாக ராஜ்ஜியத்தை நடத்திக்கொண்டு வந்ததால், அந்த நகரத்திலோ, அந்த நாட்டிலோ, பொய் பேசுபவர் எவரும் இருக்கவில்லை.

 

कश्चिन्न दुष्टस्तत्रासीत्परदाररतो नर: ।
प्रशान्तं सर्वमेवासीद्राष्ट्रं पुरवरं च तत् ।।1.7.13।।

அந்த நாட்டில் தீய எண்ணம் கொண்டவர்களோ, பிறருடைய மனைவிகள் மேல் விருப்பம் கொண்டவர்களோ இருக்கவில்லை. நகரங்களிலேயே மிகச் சிறந்ததான அயோத்தி முழுவதும், அமைதி நிலவியது.

 

सुवाससस्सुवेषाश्च ते च सर्वे सुशीलिन: ।
हितार्थं च नरेन्द्रस्य जाग्रतो नयचक्षुषा ।।1.7.14।।

நல்ல உடையணிந்து, தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டிருந்த அந்த அமைச்சர்கள், அரசனின் நன்மையைக் கருத்தில் கொண்டு, நியாயத்திலேயே கண்ணாக, எச்சரிக்கையுடன் இருந்தார்கள்.

 

गुरोर्गुणगृहीताश्च प्रख्याताश्च पराक्रमे ।
विदेशेष्वपि विज्ञातास्सर्वतो बुद्धिनिश्चयात् ।।1.7.15।।

வயதில் மூத்தவர்களுடைய நல்ல குணங்களைப் பின்பற்றுபவர்களாகவும், தங்கள் வீரத்துக்காகப் புகழ் பெற்றவர்களாகவும், எல்லா விஷயங்களிலும், தங்கள் அறிவாற்றாலால் வழி நடத்தப்படுபவர்களாகவும், வெளி நாடுகளில் கூட அறியப் பட்டவர்களாகவும் இருந்தார்கள்.



सन्धिविग्रहतत्त्वज्ञा: प्रकृत्या सम्पदान्विता: ।।1.7.16।।

मन्त्रसंवरणे शक्ताश्श्लक्ष्णास्सूक्ष्मासु बुद्धिषु ।
नीतिशास्त्रविशेषज्ञास्सततं प्रियवादिन: ।।1.7.17।।

அந்த அமைச்சர்கள், இயற்கையிலேயே, அமைதி, போர் ஆகியவற்றைப் பற்றி, நன்கு புரிந்தவர்களாக இருந்தார்கள். செல்வச் செழிப்பு நிறைந்தவர்களாகவும், ரகசியத்தைக் காப்பாற்றக் கூடியவர்களாகவும், எந்த விஷயத்தையும் கூர்மையான அறிவோடு நுணுக்கமாகப் புரிந்து கொள்பவர்களாகவும் இருந்தார்கள். ஒழுக்கத்தைப் பற்றியும், வாழ்க்கையின் நெறி முறைகளைப்பற்றியும் நன்கு அறிந்திருந்தார்கள். எப்போதும், இனிமையாகப் பேசுபவர்களாகவும் இருந்தார்கள்.



ईदृशैस्तैरमात्यैस्तु राजा दशरथोऽनघ: ।
उपपन्नो गुणोपेतैरन्वशासद्वसुन्धराम् ।।1.7.18।।

குற்றமற்ற தசரத மன்னர், இப்படிப்பட்ட அருமையான அமைச்சர்களால் சூழப்பட்டு, இந்த உலகத்தை ஆண்டு வந்தார்.

 

अवेक्षमाणश्चारेण प्रजा धर्मेण रञ्जयन् ।
प्रजानां पालनं कुर्वन्नधर्मान्परिवर्जयन् ।।1.7.19।।

विश्रुतस्त्रिषु लोकेषु वदान्यस्सत्यसङ्गर: ।
स तत्र पुरुषव्याघ्रश्शशास पृथिवीमिमाम् ।।1.7.20।।

மூன்று உலகங்களிலும், தாராள மனமுடையவர் என்றும், மனிதர்களுக்குள் புலி போன்றவர் என்றும் பெயர் பெற்ற தசரத மன்னர், ஒற்றர்களின் உதவியால் மக்களுக்கு நல்ல பாதுகாப்பைக்கொடுப்பவராகவும், அவர்கள் மன மகிழ்ச்சியுடன் வாழ வழி செய்பவராகவும் இருந்து, தர்ம வழியில் நின்று, அதர்மத்தை விட்டு நல்லாட்சி புரிந்து வந்தார்.

 

नाध्यगच्छद्विशिष्टं वा तुल्यं वा शत्रुमात्मन: ।
मित्रवान्नतसामन्त: प्रतापहतकण्टक: ।।1.7.21।।

स शशास जगद्राजा दिवं देवपतिर्यथा ।


நிறைய நண்பர்களை உடைய தசரத மன்னரைக் கப்பம் கட்டும் மன்னர்கள் வணங்கினார்கள்.  எதிரிகளை அவர் தன் வலிமையால் அழித்தார். அவருக்கு நிகராகவோ, அவரை விடச் சிறந்தவராகவோ, எந்த எதிரியும் அவருக்கு இல்லை. இத்தகைய சிறப்புகளுடன் தேவர்களின் தலைவனைப்போல, இந்த உலகை அவர் ஆண்டு வந்தார்.

 

तैर्मन्त्रिभिर्मन्त्रहिते नियुक्तै
र्वृतोऽनुरक्तै: कुशलैस्समर्थै: ।

स पार्थिवो दीप्तिमवाप युक्त
स्तेजोमयैर्गोभिरिवोदितोऽर्क: ।।1.7.22।।

அவருடைய நலனில் மிகுந்த அக்கறை கொண்ட, சிறந்த ஆலோசனை வழங்கக் கூடிய, திறமையான, விசுவாசமுள்ள அமைச்சர்களால் சூழப்பட்டிருந்த அந்த தசரத மன்னர், ஒளி வீசும் கதிர்களுடைய உதய சூரியனைப்போன்ற மகிமையைப் பெற்றிருந்தார்.

.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे सप्तमस्सर्ग: ।।

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஏழாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...