Sunday, 26 November 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 8

(இக்ஷ்வாகு வம்சத்தைத் தொடரச் செய்ய தசரதமன்னருக்குப் புதல்வர்கள் இல்லை. வயதாக ஆக அவருடைய வருத்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தனக்கு ஒரு வாரிசு வேண்டி, அஸ்வமேத யாகம் செய்ய எண்ணுகிறார். அமைச்சர்களையும், ஆலோசகர்களையும், குடும்ப புரோகிதர்களையும் அழைத்துத் தனது யோசனைக்கு அனுமதி வாங்க முயல்கிறார்.) 


तस्य त्वेवं प्रभावस्य धर्मज्ञस्य महात्मन:।
सुतार्थं तप्यमानस्य नासीद्वंशकरस्सुत:।।1.8.1।।

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த, தர்மாத்மாவான, கம்பீரமான, பெருந்தன்மையுள்ள அரசருக்கு, எவ்வளவோ தவங்கள் செய்தும், புத்திர பாக்கியம் இருக்கவில்லை.

 

चिन्तयानस्य तस्यैवं बुद्धिरासीन्महात्मन: ।
सुतार्थं हयमेधेन किमर्थं न यजाम्यहम्।।1.8.2।।

இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது, அந்த மகாத்மாவான அரசருக்குப் பிள்ளை வரம் வேண்டித், தான் ஏன் ஒரு அஸ்வமேத யாகம் செய்யக்கூடாது என்று தோன்றியது.

स निश्चितां मतिं कृत्वा यष्टव्यमिति बुद्धिमान्।
मन्त्रिभिस्सह धर्मात्मा सर्वैरेव कृतात्मभि:।।1.8.3।।

ततोऽब्रवीदिदं राजा सुमन्त्रं मन्त्रिसत्तमम्।
शीघ्रमानय मे सर्वान्गुरूंस्तान् सपुरोहितान्।।1.8.4।।

அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்ட, தசரத மன்னர், அமைச்சர்களுள் சிறந்தவரான சுமந்திரரிடம், “ என்னுடைய ஆன்மீக குருமார்களையும், குடும்ப புரோகிதர்களையும் அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.

 

ततस्सुमन्त्रस्त्वरितं गत्वा त्वरितविक्रम:।
समानयत्स तान् सर्वान् समस्तान्वेदपारगान् ।।1.8.5।।

सुयज्ञं वामदेवं च जाबालिमथ काश्यपम् ।
परोहितं वसिष्ठं च ये चान्ये व्दिजसत्तमा: ।। 1.8.6 ।।
 

அதன் படி விரைந்து சென்ற சுமந்திரர், சுயஞ்ஞர்,வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், குரு வசிஷ்டர் ஆகியோரையும்,  வேதத்தில் கரைகண்ட சில அந்தணர்களையும் அழைத்து வந்தார்.


तान्पूजयित्वा धर्मात्मा राजा दशरथस्तदा।
इदं धर्मार्थसहितं श्लक्ष्णंवचनमब्रवीत्।।1.8.7।।

அவர்களை மரியாதையாக வரவேற்றுப் பூஜித்த பின்னர், தசரதர் அறமும், பொருளும் நிறைந்த இந்தச் சொற்களைச் சொன்னார்.

 

मम लालप्यमानस्य पुत्रार्थन्नास्ति वै सुखम्।
तदर्थं हयमेधेन यक्ष्यामीति मतिर्मम।।1.8.8।।

புதல்வர்கள் இல்லாத குறையால், நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன்.  புதல்வர்களை வேண்டி, அஸ்வமேத யாகம் செய்யலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

 

तदहं यष्टुमिच्छामि शास्त्रदृष्टेन कर्मणा।
कथं प्राप्स्याम्यहं कामं बुद्धिरत्रविचार्यताम्।।1.8.9।।

“சாஸ்திரங்களில் கூறியுள்ள முறைப்படி அஸ்வமேத யாகம் செய்ய விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறுவதற்கான வழி யாது? நீங்கள் அனைவரும் கலந்தாலோசித்து ஒரு தீர்வு கூறுங்கள். “

 

ततस्साध्विति तद्वाक्यं ब्राह्मणा: प्रत्यपूजयन्।
वसिष्ठप्रमुखास्सर्वे पार्थिवस्य मुखाच्च्युतम्।।1.8.10।।

வசிஷ்டர் முதலான அந்தணர்கள் மன்னரின் வாயில் இருந்து வந்த இந்தச் சொற்களைக்கேட்டு, “மிக நன்று” என்று பாராட்டினார்கள்.

 

ऊचुश्च परमप्रीतास्सर्वे दशरथं वच:।
सम्भारास्सम्भ्रियन्तां ते तुरगश्च विमुच्यताम्।।1.8.11।।

மிகவும் மகிழ்ந்து, அவர்கள் தசரதரிடம் கூறினார்கள், “ யாகத்துக்கு வேண்டிய பொருட்களைச் சேகரிக்கத் துவங்குவோம். அதற்கான குதிரையையும் அனுப்புவோம்.”

 

सर्वथा प्राप्स्यसे पुत्रानभिप्रेतांश्च पार्थिव।
यस्य ते धार्मिकी बुद्धिरियं पुत्रार्थमागता।।1.8.12।।

அரசே! உங்கள் உள்ளத்தில் உதித்த இந்த விருப்பம் நியாயமானதும், சரியானதும் ஆகும். உங்கள் விருப்பம் நிச்சயம் பூர்த்தி அடையும். “

 

तत: प्रीतोऽभवद्राजा श्रुत्वा तद्विजभाषितम्।
अमात्यांश्चाब्रवीद्राजा हर्षपर्याकुलेक्षण:।।1.8.13।।

அந்தணர்கள் இவ்வாறு கூறக்கேட்ட மன்னர், கண்களில் மகிழ்ச்சி மின்னத் தன் அமைச்சர்களிடம் இவ்வாறு கூறினார்.

 

सम्भारास्सम्भ्रियन्तां मे गुरूणां वचनादिह।
समर्थाधिष्ठितश्चाश्वस्सोपाध्यायो विमुच्यताम्।।1.8.14।।

“என் ஆன்மீக குருமார்கள் கூறியது போல், யாகத்துக்கு வேண்டிய பொருட்களைச் சேகரியுங்கள். திறமை வாய்ந்த வீரர்களுடன், ஒரு நல்ல குதிரையையும் அனுப்பி வையுங்கள்.”

 

सरय्वाश्चोत्तरे तीरे यज्ञभूमिर्विधीयताम्।
शान्तयश्चाभिवर्धन्तां यथाकल्पं यथाविधि।।1.8.15।।

“யாகம் செய்வதற்கான விதி முறைகளின் படி, சரயு நதியின் வடக்கே, யாக சாலை அமைக்கப் படட்டும். தடையில்லாமல் யாகம் நடப்பதற்கான சடங்குகளும் முறைப்படி செய்யப்படட்டும்.”

 

शक्य: प्राप्तुमयं यज्ञस्सर्वेणापि महीक्षिता।
नापराधो भवेत्कष्टो यद्यस्मिन्क्रतुसत्तमे।।1.8.16।।

இந்தச் சிறந்த யாகத்தைச் செய்யும் எல்லா அரசரும், எந்தத் தடையும் எந்தக்குறையும் இன்றி இதை நிறைவேற்றினால், நிச்சயம் தாங்கள் விரும்பியதை அடைய முடியும்.

 

छिद्रं हि मृगयन्तेऽत्र विद्वांसो ब्रह्मराक्षसा: ।
निहतस्य च यज्ञस्य सद्य: कर्ता विनश्यति ।।1.8.17।।

கல்வி கற்றிருந்தும், சாபத்தினால் ப்ரம்ம ராட்சஸர்களாக மாறியவர்கள், இந்த யாகங்களில் எதாவது குற்றம் குறைகள் அகப்படாதா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படிக் கிடைத்து விட்டால், யாகம் செய்பவரையே அழித்து விடுவார்கள்.

तद्यथा विधिपूर्वं मे क्रतुरेष समाप्यते ।
तथा विधानं क्रियतां समर्था: करणेष्विह।।1.8.18।।

ஆகவே, அனைத்து ஏற்பாடுகளும், சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ள படி , முறையாகச் செய்யப் படவேண்டும். நீங்கள் எல்லாம் அப்படிச் செய்வதில் நிபுணர்கள்.”

 

तथेति चाब्रुवन्सर्वे मन्त्रिण:प्रत्यपूजयन्।
पार्थिवेन्द्रस्य तद्वाक्यं यथाज्ञप्तं निशम्य ते।।1.8.19।।

அந்த அமைச்சர்கள், அரசருடைய இந்தச் சொற்களை மதித்து, “தங்கள் கட்டளைப் படியே” என்று பதிலிறுத்தார்கள்.

 

तथा द्विजास्ते धर्मज्ञा वर्धयन्तो नृपोत्तमम्।
अनुज्ञातास्ततस्सर्वे पुनर्जग्मुर्यथागतम्।।1.8.20।।

பின்னர், தர்மங்களை அறிந்தவர்களான அந்த அந்தணர்கள், தசரத மன்னரை வணங்கி, விடைபெற்றுச் சென்றனர்.

 

विसर्जयित्वा तान्विप्रान्सचिवानिदमब्रवीत्।
ऋत्विग्भिरुपदिष्टोऽयं यथावत्क्रतुराप्यताम्।।1.8.21।।

அந்தணர்களுக்கு விடை கொடுத்த பின்னர் அமைச்சர்களிடம், தசரதர், “ இந்த யாகம் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள படி, அதற்குத் தலைமையேற்று நடத்தும் புரோகிதர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப நடத்தப் பட வேண்டும்” என்று கூறினார்.

 

इत्युक्त्वा नृपशार्दूलस्सचिवान्समुपस्थितान्।
विसर्जयित्वा स्वं वेश्म प्रविवेश महाद्युति:।।1.8.22।।

இவ்வாறு தன் அமைச்சர்களிடம் கூறி, அவர்களுக்கு விடை கொடுத்த பின்னர், அறிவிற் சிறந்த  தசரத மன்னர், அந்தப்புரத்துக்குள் நுழைந்தார்.

 

ततस्स गत्वा ता:पत्नीर्नरेन्द्रो हृदयप्रिया:।
उवाच दीक्षां विशत यक्ष्येऽहं सुतकारणात्।।1.8.23।।

அங்கே சென்று, தன் மனதிற்கு மிகவும் பிடித்த தன் மனைவியரிடம், “புதல்வனை வேண்டி, நான் யாகம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன். நீங்களும், விரதம் இருக்கத் தொடங்குங்கள்” என்று கூறினார்.


तासां तेनातिकान्तेन वचनेन सुवर्चसाम्।
मुखपद्मान्यशोभन्त पद्मानीव हिमात्यये।।1.8.24।।

அரசரிடம் இருந்து, இந்த இனிமையான செய்தியைக் கேட்ட அவர்களது முகமலர்கள், பனிக்காலம் முடிந்த பின் அழகாக மலர்ந்து மிளிரும் தாமரைகளைப் போல ஒளிர்ந்தன.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे अष्टमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் எட்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...