Sunday, 26 November 2023

  

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 9

(தசரதரின் முக்கியமான அமைச்சரும், நம்பிக்கைக்குரிய தேரோட்டியுமான சுமந்திரர், ருஷ்யஸ்ருங்கரின் கதையைத் தசரதருக்குச் சொல்லி, அவர் மூலம் யாகம் செய்வித்தால் நிச்சயம் புதல்வர்கள் உண்டாவார்கள் என்கிறார்.  அதைக் கேட்ட தசரதர் ருஷ்யஸ்ருங்கரை அயோத்திக்கு வரவழைக்கத் திட்டம் போடுகிறார்.)

 

एतच्छ्रुत्वा रहस्सूतो राजानमिदमब्रवीत्।
ऋत्विग्भिरुपदिष्टोऽयं पुरावृत्तो मया श्रुत:।।1.9.1।।

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரசனின் தேரோட்டியான சுமந்திரர் அரசரைத் தனியே சந்தித்து, “யாகம் செய்விக்கும் புரோகிதர்கள் மூலம் நான் இதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

सनत्कुमारो भगवान्पूर्वं कथितवान्कथाम्।
ऋषीणां सन्निधौ राजन् तव पुत्रागमं प्रति।।1.9.2।।

அரசே! உங்களுக்கு புத்திரர்கள் உண்டாகப் போவதைப் பற்றி, ரிஷிகள் முன்னே, பகவான் சனத் குமாரர் இந்தக் கதையை முன்னமே சொல்லியிருக்கிறார்.

 

काश्यपस्यतु पुत्रोऽस्ति विभण्डक इति श्रुत:।
ऋष्यशृङ्ग इति ख्यातस्तस्य पुत्रो भविष्यति।।1.9.3।।

காஷ்யப ரிஷிக்கு விபாண்டகர் என்ற புதல்வர் ஒருவர் இருக்கிறார். விபாண்டகருக்கு, ருஷ்யஸ்ருங்கர் என்ற மகன் பிறப்பான்.

 

स वने नित्यसंवृद्धो मुनिर्वनचरस्सदा ।
नान्यं जानाति विप्रेन्द्रो नित्यं पित्रनुवर्तनात् ।।1.9.4।।

காட்டிலேயே வளர்ந்து, காட்டிலேயே நடமாடிக்கொண்டு, எப்போதும் தனது தந்தையையே பின் தொடர்ந்து செல்லும் அந்த அந்தண குமாரனுக்கு வேறு எதுவுமே தெரியாது.

 

द्वैविध्यं ब्रह्मचर्यस्य भविष्यति महात्मन:।
लोकेषु प्रथितं राजन्विप्रैश्च कथितं सदा।।1.9.5।।

அரசே! அந்தணர்களால் குறிப்பிடப்பட்ட இரண்டு வகையான பிரம்மச்சரியத்தையும் ஒழுங்காக அனுஷ்டிக்கப்போகும் அவன் மூவுலகங்களிலும் புகழப்படுவான்.

 

तस्यैवं वर्तमानस्य कालस्समभिवर्तत ।
अग्निं शुश्रूषमाणस्य पितरं च यशस्विनम्।।1.9.6।।

அக்கினியைத் தினமும் பூஜித்துக்கொண்டும், தனது புகழ்பெற்ற தந்தைக்குக் கீழ்ப்படிந்தும், வெகு காலம் இவ்வாறு வாழ்வான்.

 

एतस्मिन्नेव काले तु रोमपाद: प्रतापवान्।
अङ्गेषु प्रथितो राजा भविष्यति महाबल:।। 1.9.7।।

அந்தச் சமயத்தில் அங்க தேசத்தை ரோமபாதன் என்ற அரசன் ஆட்சி செய்வான்.

 

तस्य व्यतिक्रमाद्राज्ञो भविष्यति सुदारुणा ।
अनावृष्टिस्सुघोरा वै सर्वभूतभयावहा ।।1.9.8।।

அந்த அரசன் முறை தவறி ஆட்சி செய்யப்போக, மழையே பெய்யாமல், அனைத்து உயிர்களையும் அச்சப்படுத்தக்கூடிய ஒரு பயங்கரமான வறட்சி அந்த நாட்டில் ஏற்படும்.

अनावृष्ट्यां तु वृत्तायां राजा दु:खसमन्वित:।
ब्राह्मणान्श्रुतवृद्धांश्च समानीय प्रवक्ष्यति।। 1.9.9।।

தொடர்ந்த வறட்சியினால், மிகவும் துயருற்று, அரசன் ரோமபாதன், மூத்த அறிஞர்களையும் , அந்தணர்களையும் சபைக்கு வரவழைத்து இவ்வாறு கூறுவான்.

 

भवन्तश्श्रुतधर्माणो लोकचारित्रवेदिन: ।
समादिशन्तु नियमं प्रायश्चित्तं यथा भवेत् ।।1.9.10।।

“தாங்கள் அனைவரும்,  தர்மங்களையும், உலக நடைமுறைகளையும் நன்கு அறிந்தவர்கள். தயவு செய்து, இந்த வறட்சியில் இருந்து மீள்வதற்கு, முறைப்படி என்ன பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்.”

 
वक्ष्यन्ति ते महीपालं ब्राह्मणा वेदपारगा:।
विभण्डकसुतं राजन्सर्वोपायैरिहानय।।1.9.11।।

வேதங்களை நன் கு கற்றறிந்த அந்த அந்தணர்கள் கூறுவார்கள், “அரசே! எவ்வாறாயினும் விபாண்டக ரிஷியின் மகனாகிய ருஷ்யஸ்ருங்கரை இங்கு வரவழையுங்கள்.”

 

आनाय्य च महीपाल ऋश्यशृङ्गं सुसत्कृतम्।
प्रयच्छ कन्यां शान्तां वै विधिना सुसमाहित: ।।1.9.12।।

அரசே! அவரை வரவழைத்து, மிகவும் கௌரவத்துடன் வரவேற்றுத் தங்கள் மகளான சாந்தாவை அவருக்குத் திருமணம் செய்து கொடுங்கள்.”

 

तेषां तु वचनं श्रुत्वा राजा चिन्तां प्रपत्स्यते ।
केनोपायेन वै शक्य इहानेतुं स वीर्यवान् ।।1.9.13।।

அவர்கள் கூறியதைக்கேட்ட மன்னன், எவ்வாறு ருஷ்யஸ்ருங்கரை அங்கு வரவழைப்பது என்று யோசிக்கத் தொடங்குவான்.


ततो राजा विनिश्चित्य सह मन्त्रिभिरात्मवान्।
पुरोहितममात्यांश्च तत: प्रेष्यति सत्कृतान्।।1.9.14।।

பிறகு, புத்திசாலியான அந்த மன்னன், தனது அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின், தனது புரோகிதர்களையும், அமைச்சர்களையும், ருஷ்யஸ்ருங்கரை மரியாதை செய்து அழைத்து வருமாறு வேண்டுவான்.


ते तु राज्ञो वचश्श्रुशृत्वा व्यथिता विनतानना:।
न गच्छेम ऋषेर्भीता अनुनेष्यन्ति तं नृपम् ।। 1.9.15।।

அரசனின் ஆணையைக் கேட்டு அவர்கள், (விபாண்டகரின் சக்தியை நினைத்து) அச்சமும் கலக்கமும் அடைந்து, தலை குனிந்து, “நாங்கள் போக மாட்டோம்” என்பார்கள்.

 

वक्ष्यन्ति चिन्तयित्वा ते तस्योपायांश्च तत्क्षमान्।
आनेष्यामो वयं विप्रं न च दोषो भविष्यति।। 1.9.16।।

பின் அவர்களளே, எவ்வாறு ருஷ்யஸ்ருங்கரை அங்கு வரவழைப்பது என்று யோசித்து, “ஏதாவது நடக்கக்கூடாதது நடந்து விட்டால், எங்களைக் குற்றம் சொல்லாமல் இருப்பீர்களானால், நாங்கள் அவரை அழைத்து வரச் செல்கிறோம்” என்பார்கள்.

 

एवमङ्गाधिपेनैव गणिकाभि: ऋषेस्सुत:।
आनीतोऽवर्षयद्देवश्शान्ता चास्मै प्रदीयते।।1.9.17।।

இவ்வாறு, அரசவைக் கணிகையரின் துணை கொண்டு, ருஷ்யஸ்ருங்கரைத் தன் தேசத்துக்கு ரோமபாதன் அழைத்து வரச் செய்யும் போது, தேவேந்திரன் அங்கு மழை பொழியச் செய்வான். அரசனின் மகள் சாந்தாவை ருஷ்யஸ்ருங்கருக்கு மணமுடித்து வைப்பார்கள். “

 

ऋश्यशृङ्गस्तु जामाता पुत्रांस्तव विधास्यति।
सनत्कुमारकथितमेतावद्व्याहृतं मया।।1.9.18।।

“தங்களுடைய மருமகனான ருஷ்யஸ்ருங்கர் உங்களுக்குப் புதல்வர்கள் கிடைக்க ஏற்பாடு செய்வார்” என்று சனத் குமாரரால் சொல்லப்பட்ட விஷயத்தை நான் உங்களுக்குக் கூறினேன்.”


अथ हृष्टो दशरथस्सुमन्त्रं प्रत्यभाषत।
यथर्श्यशृङ्गस्त्वानीतो विस्तरेण त्वयोच्यताम्।।1.9.19।।

இதைக்கேட்டு மகிழ்ந்த தசரதர், “ருஷ்யஸ்ருங்கர் எவ்வாறு ரோமபாதனின் அரசவைக்கு வரவழைக்கப் பட்டார் என்பதை விவரமாகக் கூறுங்கள்” என்றார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे नवमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஒன்பதாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...