ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 10
(ருஷ்யஸ்ருங்கரை அங்க தேசத்துக்கு வரவழைத்த விதத்தை சுமந்திரர்
வர்ணிக்கிறார். வறட்சியால் வாடும் அங்க தேசத்துக்கு அவரை வரவழைக்க வேண்டி ரோமபாதர்
கணிகைகளை அனுப்புகிறார். ருஷ்யஸ்ருங்கர் அங்க தேசத்துக்கு வந்தவுடனேயே மழை பெய்து வறட்சியும்
பஞ்சமும் நீங்குகின்றன. ரோமபாதர் தன் மகள் சாந்தாவை ருஷ்யஸ்ருங்கருக்கு மணம் செய்து
கொடுக்கிறார்.)
सुमन्त्रश्चोदितो राज्ञा प्रोवाचेदं वचस्तदा।
यथर्श्यशृङ्गस्त्वानीत श्श्रुणु मे मन्त्रिभिस्सह।।1.10.1।।
தசரதர், அவ்வாறு கேட்டதால்
சுமந்திரர் கூறினார், “ருஷ்யஸ்ருங்கர் ரோமபாதனின் அவைக்கு எவ்வாறு அழைத்து
வரப்பட்டார் என்பதை விவரமாகக் கூறுகிறேன். நீங்களும், உங்கள் அமைச்சர்களும்,
கேளுங்கள்.”
रोमपादमुवाचेदं सहामात्य: पुरोहित:।
उपायो निरपायोऽयमस्माभिरभिचिन्तित:।। 1.10.2।।
(ரோமபாதனின் அவையில்
இருந்த) புரோகிதர்களும், அமைச்சர்களும், ரோமபாதனிடம் வந்து, ”நிச்சயம்
தோல்வியடையாத ஒரு திட்டத்தை யோசித்திருக்கிறோம்” என்றார்கள்.
ऋश्यशृङ्गो
वनचरस्तपस्स्वाध्ययने रत:।
अनभिज्ञस्स नारीणां विषयाणां सुखस्य च।1.10.3।।
காட்டில் வசித்து வரும்
ருஷ்யஸ்ருங்கர், எந்நேரமும், தவத்திலும், வேதங்களைக் கற்பதிலுமே
ஈடுபட்டிருக்கிறார். அவருக்குப் பெண்கள் பற்றியோ, உடலின்பம் பற்றியோ, ஒன்றுமே
தெரியாது.
इन्द्रियार्थैरभिमतैर्नरचित्तप्रमाथिभि:
।
पुरमानाययिष्याम: क्षिप्रं चाध्यवसीयताम्।। 1.10.4।।
ஆகவே, ஆண்களின் மனதை
வெற்றி கொள்ளக்கூடிய, இந்திரிய சுகங்களை அவருக்கு அறிமுகப் படுத்துவது மூலம்
ருஷ்யஸ்ருங்கரை, நம் நகரத்துக்கு அழைத்து வர முடியும். இதைப் பற்றி, விரைவில்
தீர்மானிக்க வேண்டும்.”
गणिकास्तत्र गच्छन्तु
रूपवत्यस्स्वलङ्कृता:।
प्रलोभ्य विविधोपायैरानेष्यन्तीह सत्कृता:।।1.10.5।।
நன்கு
அலங்கரித்துக்கொண்ட அழகான கணிகைகளை அவரிடம் அனுப்புங்கள். அவர்கள் பல விதமான
உபாயங்கள் செய்து ருஷ்யஸ்ருங்கரை இங்கே வரும் படி செய்து விடுவார்கள்.
श्रुत्वा तथेति राजा च
प्रत्युवाच पुरोहितम्।
पुरोहितो मन्त्रिणश्च तथा चक्रुश्च ते तदा।।1.10.6।।
(இந்த
யோசனையைக்கேட்ட) அரசர், “அப்படியே
செய்யுங்கள்” என்று கூறவே, புரோகிதர்களும், அமைச்சர்களும் அதன் படி செய்தார்கள்.
वारमुख्याश्च तच्छ्रुत्वा वनं प्रविविशुर्महत्।
आश्रमस्याविदूरेऽस्मिन् यत्नं कुर्वन्ति दर्शने।।1.10.7।।
ऋषिपुत्रस्य धीरस्य नित्यमाश्रमवासिन:।
அவர்கள் சொற்படி,
அரசவையில் இருந்த அழகான கணிகைகள், அந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து,
(ருஷ்யஸ்ருங்கர் இருந்த) ஆசிரமத்திலிருந்து அதிக தூரம் இல்லாத இடத்தில் இருந்து
கொண்டு, புலன்களை வென்றவரான ருஷ்யஸ்ருங்கரை எப்படியாவது பார்த்து விட
முயற்சித்தார்கள்.
पितुस्सनित्यसन्तुष्टो
नातिचक्राम चाश्रमात्।।1.10.8।।
न तेन जन्मप्रभृति दृष्टपूर्वं तपस्विना।
स्त्री वा पुमान्वा यच्चान्यत्सर्वं नगरराष्ट्रजम्।। 1.10.9।।
எப்போதும்,
திருப்தியுடன் இருந்த ருஷ்யஸ்ருங்கர், தன் தந்தையாரின் ஆசிரமத்தை விட்டு வெளியே
சென்றதே இல்லை. தவத்திலேயே ஆழ்ந்திருந்த அவர், நகரத்தைச் சேர்ந்த ஆணையோ, பெண்ணையோ,
பிறந்ததிலிருந்து, பார்த்ததே இல்லை.
तत: कदाचित्तं
देशमाजगाम यदृच्छया।
विभण्डकसुतस्तत्र ताश्चापश्यद्वराङ्गना:।।1.10.10।।
பிறகு ஒரு நாள்,
யதேச்சையாக, அந்தப் பெண்கள் இருந்த இடத்துக்கு (விபாண்டகரின் புதல்வரான)
ருஷ்யஸ்ருங்கர் வந்த போது, அங்கே, அந்த அழகிய பெண்களைக்கண்டார்.
ताश्चित्रवेषा: प्रमदा
गायन्त्यो मधुरस्वरा:।
ऋषिपुत्रमुपागम्य सर्वा वचनमब्रुवन्।। 1.10.11।।
அழகாக உடையணிந்து, இனிய
குரலில் பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்கள், ருஷ்யஸ்ருங்கரை நெருங்கி, இவ்வாறு
கேட்டார்கள்:
कस्त्वं किं वर्तसे
ब्रह्मन् ज्ञातुमिच्छामहे वयम्।
एकस्त्वं विजने घोरे वने चरसि शंस न:।। 1.10.12।।
“அந்தணரே! நீங்கள்
யார்? எவ்வாறு இங்கே வாழ்கிறீர்கள்? இந்த பயங்கரமான காட்டிலே, தனியாக ஏன் அலைந்து
கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் அறிய விரும்புகிறோம். தயவு செய்து சொல்லுங்கள். “
अदृष्टरूपास्तास्तेन
काम्यरूपा वने स्त्रिय:।
हार्दात्तस्य मतिर्जाता व्याख्यातुं पितरं स्वकम्।।1.10.13।।
அது வரை அந்தக்காட்டில்
அவர் கண்டிராத அந்த மனங்கவரும் அழகியரைப் பார்த்து, அவர்கள் மேல் அன்பு கொண்ட, ருஷ்யஸ்ருங்கருக்குத்
தன் தந்தையாரைப் பற்றி, அவர்களிடம் பேசும் விருப்பம் எழுந்தது.
पिता विभण्डकोऽस्माकं तस्याहं सुत औरस:।
ऋश्यशृङ्ग इति ख्यातं नाम कर्म च मे भुवि।।1.10.14।।
“விபாண்டகர் என்னும்
முனிவருடைய சொந்த மகன் நான். என்னுடைய கர்மாவால், ருஷ்யஸ்ருங்கர் என்று
அழைக்கப்படுகிறேன். (அவருக்குத் தலையில் ஒரு கொம்பு இருந்தது. அதனால் அந்தப்
பெயர்.)
इहाश्रमपदोऽस्माकं
समीपे शुभदर्शना:।
करिष्ये वोऽत्र पूजां वै सर्वेषां विधिपूर्वकम्।।1.10.15।।
மங்களகரமான பெண்களே!
என்னுடைய ஆசிரமம் அருகில் தான் இருக்கிறது. (தயவு செய்து வாருங்கள்) நான் உங்களை
முறைப்படி வரவேற்று உபசரிப்பேன்.
ऋषिपुत्रवचश्श्रुत्वा
सर्वासां मतिरास वै।
तदाश्रमपदं द्रष्टुं जग्मुस्सर्वाश्च तेन ता:।। 1.10.16।।
ரிஷிபுத்திரனான
ருஷ்யஸ்ருங்கரின் சொற்களைக் கேட்ட அந்த அழகிய மங்கையருக்கு, அவருடைய ஆசிரமத்தைக்
காணும் விருப்பம் உண்டானதால், அவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.
आगतानां तत:
पूजामृषिपुत्रश्चकार ह।
इदमर्घ्यमिदं पाद्यमिदं मूलमिदं फलं च न:।।1.10.17।।
ருஷ்யஸ்ருங்கர் அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அர்க்யம் (
நிவேதிக்கும் பொருட்கள்), பாத்யம் ( கால் கழுவும் நீர்) ஆகியவை கொடுத்துப்
பின்னர், பழங்களையும், கிழங்குகளையும் கொடுத்தார்.
प्रतिगृह्य च तां पूजां
सर्वा एव समुत्सुका:।
ऋषेर्भीताश्च शीघ्रं ता गमनाय मतिं दधु:।।1.10.18।।
ருஷ்யஸ்ருங்கர் அளித்த
உபசாரங்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டாலும், அவருடைய தந்தையார் திரும்பி வந்து
விடுவார் என்ற அச்சத்தால், விரைவில் அங்கிருந்து சென்று விடவேண்டும் என்று அந்தப்
பெண்கள் தீர்மானித்தார்கள்.
अस्माकमपि मुख्यानि
फलानीमानि वै द्विज ।
गृहाण प्रति भद्रं ते भक्षयस्व च मा चिरम्।।1.10.19।।
“அந்தணரே! இந்த
அருமையான பழங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அதைச் சாப்பிடுங்கள்.
தாமதம் செய்ய வேண்டாம். “
ततस्तास्तं समालिङ्ग्य
सर्वा हर्षसमन्विता:।
मोदकान्प्रददुस्तस्मै भक्ष्यांश्च विविधान् बहून्।।1.10.20।।
பின்னர், அந்த மங்கையர்
ருஷ்யஸ்ருங்கரை மகிழ்ச்சியுடன் தழுவிக்கொண்டு, பல விதமான இனிய தின்பண்டங்களையும்,
உணவுப் பதார்த்தங்களையும் கொடுத்தார்கள்.
तानि चास्वाद्य तेजस्वी
फलानीति स्म मन्यते।
अनास्वादितपूर्वाणि वने नित्यनिवासिनाम्।।1.10.21।।
காட்டில் வசிப்பவர்
கொடுக்கும் பழங்கள் கிழங்குகள் முதலியவைகளை மட்டுமே சுவைத்திருந்த ருஷ்யஸ்ருங்கர்,
அந்தத் தின்பண்டங்களையும் பழங்கள் என்றே எண்ணினார்.
आपृच्छ्य च तदा विप्रं
व्रतचर्यां निवेद्य च।
गच्छन्ति स्मापदेशात्ता भीतास्तस्य पितुस्स्त्रिय:।।1.10.22।।
ருஷ்யஸ்ருங்கருடைய
தந்தையார் வந்து விடுவார் என்ற அச்சத்தினால், மாலையில் செய்ய வேண்டிய சடங்குகள் செய்ய
வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி,
அங்கிருந்து சென்று விட்டார்கள்.
गतासु तासु सर्वासु
काश्यपस्यात्मजो द्विज:।
अस्वस्थहृदयश्चासीद्दु:खं स्म परिवर्तते।।1.10.23।।
அந்தப் பெண்கள்
அங்கிருந்து சென்ற பிறகு, காஷ்யப குலத்து அந்தணரான ருஷ்யஸ்ருங்கர், மிகுந்த மனவருத்தம்
அடைந்தார்.
ततोऽपरेद्युस्तं
देशमाजगाम स वीर्यवान्।
मनोज्ञा यत्र ता दृष्टा वारमुख्यास्स्वलङ्कृताः।।1.10.24।।
அடுத்த நாள், தவத்தில்
சிறந்த ருஷ்யஸ்ருங்கர், மனத்தைக் கவரும் விதத்தில் அலங்கரித்துக் கொண்டிருந்த
அந்தக் கணிகையர் இருந்த இடத்துக்கு வந்தார்.
दृष्ट्वैव च तास्तदा
विप्रमायान्तं हृष्टमानसा:।
उपसृत्य ततस्सर्वास्तास्तमूचुरिदं वच:।।1.10.25।।
தங்களை நோக்கி வந்து
கொண்டிருக்கும் ருஷ்யஸ்ருங்கரைக் கண்டு, மிகவும் மகிழ்ந்த அவர்கள், அவர் அருகில்
வந்து, இவ்வாறு கூறினார்கள்:
एह्याश्रमपदं सौम्य ह्यस्माकमिति
चाब्रुवन्।
तत्राप्येष विधिश्श्रीमान् विशेषेण भविष्यति।।1.10.26।।
“அழகிய அந்தணரே!
எங்களுடைய ஆசிரமத்துக்கு வாருங்கள். உங்களுக்காக, சிறப்பான வரவேற்பு
வழங்கப்படும்.”
श्रुत्वा तु वचनं तासां
सर्वासां हृदयङ्गमम्।
गमनाय मतिं चक्रे तं च निन्युस्तदा स्त्रिय:।।1.10.27।।
மனதிற்கினிய இந்த
வார்த்தைகளைக் கேட்ட ருஷ்யஸ்ருங்கர் அவர்களுடன் செல்லச் சம்மதித்தார். அவர்களும்,
அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றனர்.
तत्र चानीयमाने तु
विप्रे तस्मिन्महात्मनि।
ववर्ष सहसा देवो जगत्प्रह्लादयंस्तदा।।1.10.28।।
அந்த ஒளி பொருந்திய
முனிவர் அங்க தேசத்துக்கு அழைத்து வரப் பட்ட பொழுது, மழைக் கடவுள் இந்த உலகை
மகிழ்விப்பதற்காக, திடீரென்று மழை பொழிந்தார்.
वर्षेणैवागतं विप्रं
विषयं स्वं नराधिप:।
प्रत्युद्गम्य मुनिं प्रह्वश्शिरसा च महीं गत:।।1.10.29।।
வரும் பொழுதே, மழையை
அழைத்து வந்த ருஷ்யஸ்ருங்க முனிவரைத் தானே, வெளியில் வந்து வரவேற்ற அரசர்
ரோமபாதர், அவருக்குத் தலை வணங்கி, அவர் முன், கீழே விழுந்து நமஸ்காரம் செய்தார்.
अर्घ्यं च प्रददौ तस्मै न्यायतस्सुसमाहित:।
वव्रे प्रसादं विप्रेन्द्रान्मा विप्रं मन्युराविशेत्।।1.10.30।।
பிறகு அந்தணர்களுள்
சிறந்தவரான ருஷ்யஸ்ருங்கருக்குப் பல விதமான அர்க்யங்கள் கொடுத்து, அவருடைய
தந்தையாருடைய கோபம் தன்னைத் தண்டிக்காமல் செய்யுமாறு வரம் வேண்டினார்.
अन्त:पुरं प्रविश्यास्मै कन्यां दत्त्वा यथाविधि।
शान्तां शान्तेन मनसा राजा हर्षमवाप स:।।1.10.31।।
एवं स न्यवसत्तत्र सर्वकामैस्सुपूजित:।
பிறகு, அவரை
அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்று, தன் மகளான சாந்தாவை முறைப்படி மணம் செய்து
கொடுத்து, மன நிம்மதியும், மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்தார். ருஷ்யஸ்ருங்கர், தன்
அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றப் பட்டு, அங்கேயே வசிக்கத் தொடங்கினார்.”
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे दशमस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பத்தாவது ஸர்க்கம், நிறைவு
பெறுகிறது.
***
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment