ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 11
(சுமந்திரர் சனத்
குமாரர் சொன்ன கதையை மேலும் தொடர்கிறார். சுமந்திரரின் அறிவுரைப் படி, தசரதர்,
ரோமபாதரிடம் சென்று, அஸ்வமேத யாகம் செய்விக்க ருஷ்யஸ்ருங்கரின் உதவியை நாடுகிறார்.
ருஷ்யஸ்ருங்கர் அயோத்திக்கு வருகிறார்.)
भूय एव हि राजेन्द्र शृणु मे वचनं हितम्।
यथा स देवप्रवर: कथायामेवमब्रवीत्।।1.11.1।।
சுமந்திரர் சொன்னார்: “
அரசர்களுள் சிறந்தவரே! தேவர்களுள் மேன்மையானவரான சனத் குமாரர் மேலும் என்ன
சொன்னார் என்பதைச் சொல்லுகிறேன். அதைக் கேட்பதால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.”
इक्ष्वाकूणां कुले जातो
भविष्यति सुधार्मिक:।
राजा दशरथो नाम्ना श्रीमान्सत्यप्रतिश्रव:।।1.11.2।।
“இக்ஷ்வாகு வம்சத்தில்,
மங்களகரமானவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவரும், தர்மவானும் ஆன தசரதர் என்ற
பெயருள்ள அரசர் தோன்றுவார்.
अङ्गराजेन सख्यं च तस्य राज्ञो भविष्यति।
कन्या चास्य महाभागा शान्ता नाम भविष्यति।।1.11.3।।
தசரதமன்னருக்கு, அங்க
தேசத்து அரசருடன் நட்பு உண்டாகும். அந்த அரசருக்கு, பண்பில் சிறந்த சாந்தா என்ற
மகள் பிறப்பாள்.
पुत्रस्तु सोऽङ्गराजस्य
रोमपाद इति श्रुत:।
तं स राजा दशरथो गमिष्यति महायशा:।।1.11.4।।
அங்க தேசத்து அரசனான ரோமபாதனிடம்,
புகழ் பெற்ற தசரத மன்னர் செல்வார்.
अनपत्योऽस्मि
धर्मात्मन् शान्ताभर्ता मम क्रतुम्।
आहरेत त्वयाज्ञप्तस्सन्तानार्थं कुलस्य च।।1.11.5।।
“தர்மாத்வான அரசரே!
நான் புத்ர பாக்யம் இல்லாதவனாக இருக்கிறேன். தயவு செய்து உங்கள் மகள் சாந்தாவின்
கணவரை (ருஷ்யஸ்ருங்கரை) எனக்குப் புத்திரர்கள்பிறக்க வேண்டி, யாகம் நடத்திக்
கொடுக்குமாறு, நீங்கள் கட்டளையிட வேண்டும். “ என்று வேண்டுவார்.
श्रुत्वा राज्ञोऽथ
तद्वाक्यं मनसा स विचिन्त्य च।
प्रदास्यते पुत्रवन्तं शान्ताभर्तारमात्मवान्।।1.11.6।।
அந்தச் சொற்களைக் கேட்டு
ரோமபாத மன்னர், தசரதருக்குப் புத்ர பாக்யம் உண்டாக்கும் வேள்வியை நடத்தும்
திறனுள்ள ருஷ்யஸ்ருங்கரை, தசரதருடன் அனுப்பி வைக்கச் சம்மதிப்பார்.
प्रतिगृह्य च तं विप्रं
स राजा विगतज्वर:।
आहरिष्यति तं यज्ञं प्रहृष्टेनान्तरात्मना।।1.11.7।।
தன் மனத்துயர் நீங்கிய
தசரதர், அந்த அந்தணரின் உதவியால், முழு மனதுடன் யாகத்தை நடத்துவார்.
तं च राजा दशरथो
यष्टुकाम: कृताञ्जलि:।
ऋश्यशृङ्गं द्विजश्रेष्ठं वरयिष्यति धर्मवित्।। 1.11.8।।
यज्ञार्थं प्रसवार्थं च स्वर्गार्थं च नरेश्वर:।
लभते च स तं कामं द्विजमुख्याद्विशांपति:।।1.11.9।।
தர்மங்களை நன்கு
அறிந்த, சத்ய சந்தனாகிய தசரத மன்னர், இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, அந்தணர்களுள்
சிறந்தவரான ருஷ்யஸ்ருங்கரிடம், புத்திரர்கள் பிறக்க வேண்டியும், பின்னர்
ஸ்வர்க்கம் கிடைக்க வேண்டியும், யாகத்தை நடத்திக்கொடுக்குமாறு வேண்டித் தான்
விரும்பியதை அடைவார்.
पुत्राश्चास्य
भविष्यन्ति चत्वारोऽमितविक्रमा:।
वंशप्रतिष्ठानकरास्सर्वलोकेषु विश्रुता:।।1.11.10।।
தங்கள் குலத்துக்குப்
பெருமை சேர்க்கும் படியான, அளவற்ற வீரமுடைய நான்கு புதல்வர்கள் அவருக்குப்
பிறப்பார்கள். அவர்கள் உலகம் முழுவதும் புகழ் அடைவார்கள்.
एवं स देवप्रवर: पूर्वं
कथितवान्कथाम्।
सनत्कुमारो भगवान्पुरा देवयुगे प्रभु:।।1.11.11।।
க்ருதயுகத்தில்,
தேவர்களுள் சிறந்தவரான சனத்குமாரர் இந்தக் கதையைக் கூறினார்.
स त्वं पुरुषशार्दूल
तमानय सुसत्कृतम्।
स्वयमेव महाराज गत्वा सबलवाहन:।।1.11.12।।
மனிதர்களுள் சிறந்தவரே!
பேரரசே! நீங்களே, படையுடனும், வாகனங்களுடனும், நேரில் சென்று, அவரை
(ருஷ்யஸ்ருங்கரை) கௌரவத்துடன், இங்கு அழைத்து வாருங்கள்.
अनुमान्य वसिष्ठं च सूतवाक्यं निशम्य च।
सान्त:पुरस्सहामात्य: प्रययौ यत्र स द्विज:।।1.11.13।।
தேரோட்டியின் சொற்களைக்
கேட்ட தசரத மன்னர், வசிஷ்டரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, தன் அந்தப்புர
அரசிகளுடனும், அமைச்சர்களுடனும், அந்த அந்தணர் (ருஷ்யஸ்ருங்கர்) இருக்கும் இடத்திய
நோக்கிப் புறப்பட்டார்.
वनानि सरितश्चैव
व्यतिक्रम्य शनैश्शनै:।
अभिचक्राम तं देशं यत्र वै मुनिपुङ्गव:।।1.11.14।।
மெதுவாகக் காடுகளையும்,
நதிகளையும் கடந்து, தவத்தில் சிறந்த அந்த அந்தணர்(ருஷ்யஸ்ருங்கர்) வசித்த இடத்தைச்
சென்றடைந்தார்.
आसाद्य तं द्विजश्रेष्ठं रोमपादसमीपगम्।
ऋषिपुत्रं ददर्शादौ दीप्यमानमिवानलम्।।1.11.15।।
அந்த அரசவையில், அரசர்
ரோமபாதருக்கு அருகில், நெருப்பைப் போல ஜ்வலித்துக்கொண்டு அமர்ந்திருந்த, அந்தண
ஸ்ரேஷ்டரான ரிஷிபுத்திரரைக் (ருஷ்யஸ்ருங்கர்)
கண்டார்.
ततो राजा यथान्यायं पूजां चक्रे विशेषत:।
सखित्वात्तस्य वै राज्ञ: प्रहृष्टेनान्तरात्मना।।1.11.16।।
பின்னர், அரசர்
ரோமபாதர், தசரத மன்னரை மனதார வரவேற்று, மகிழ்வுடனும், நட்புடனும், முறைப்படி,
அவருக்குப் பூஜைகள் செய்தார்.
रोमपादेन चाख्यातमृषिपुत्राय धीमते।
सख्यं सम्बन्धकं चैव तदा तं प्रत्यपूजयत्।।1.11.17।।
ருஷ்யஸ்ருங்கருக்குத் தசரதருடன், தனக்கிருந்த நட்பைப் பற்றி ரோமபாதர் விளக்கிக்
கூறியதும், ருஷ்யஸ்ருங்கரும் தசரதருக்குப் பூஜைகள் செய்தார்.
एवं सुसत्कृतस्तेन
सहोषित्वा नरर्षभ:।
सप्ताष्टदिवसान्राजा राजानमिदमब्रवीत्।।1.11.18।।
இவ்வாறு, நன்கு மரியாதை
செய்யப்பட்ட, மனிதர்களுள் சிறந்தவரான தசரதர், ரோமபாதருடன் ஏழெட்டு நாட்கள் தங்கி
விட்டுப் பிறகு, இந்த வார்த்தைகளைக் கூறினார்.
शान्ता तव सुता राजन्
सह भर्त्रा विशांपते।
मदीयनगरं यातु कार्यं हि महदुद्यतम्।।1.11.19।।
மக்களின் தலைவரே!
என்னுடைய நகரத்தில் ஒரு முக்கியமான வேள்வியை நடத்த எண்ணியிருக்கிறேன்.
நீங்கள்உங்கள் மகளையும், அவளது கணவரையும் என் நகரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
तथेति राजा संश्रुत्य गमनं तस्य धीमत:।
उवाच वचनं विप्रं गच्छ त्वं सह भार्यया।।1.11.20।।
தசரதரின்
வேண்டுகோளுக்கு இணங்கிய ரோமபாதர், ருஷ்யஸ்ருங்கரிடம், “ நீங்கள் உங்கள் மனைவியுடன்
போய் வாருங்கள்” என்று கூறி விடை கொடுத்தார்.
ऋषिपुत्र: प्रतिश्रुत्य
तथेत्याह नृपं तदा।
स नृपेणाभ्यनुज्ञात: प्रययौ सह भार्यया।।1.11.21।।
மன்னர் சொன்ன சொற்களைக்
கேட்ட ருஷ்யஸ்ருங்கர், ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறி, மன்னருடைய அனுமதி பெற்றுத்
தன் மனைவியுடன் (அயோத்திக்கு) புறப்பட்டார்.
तावन्योन्याञ्जलिं
कृत्वा स्नेहात्संश्लिष्य चोरसा।
ननन्दतुर्दशरथो रोमपादश्च वीर्यवान्।।1.11.22।।
தசரதரும், ரோம பாதரும்,
மகிழ்ந்து, ஒருவரை ஒருவர் கை கூப்பி வணங்கி, மனதாரத் தழுவிக்கொண்டார்கள்.
ततस्सुहृदमापृच्छ्य प्रस्थितो रघुनन्दन:।
पौरेभ्य: प्रेषयामास दूतान्वै शीघ्रगामिन:।।1.11.23।।
பின்னர், தசரதர், தன்
நண்பர் ரோமபாதரிடம் விடைபெற்று, அயோத்திக்குப் புறப்பட்டார். விரைந்து
செல்லக்கூடிய தூதர்களிடம், நகர மக்களுக்கு,
இந்த செய்தியைச் சொல்லி அனுப்பினார்.
क्रियतां नगरं सर्वं
क्षिप्रमेव स्वलङ्कृतम्।
धूपितं सिक्तसम्मृष्टं पताकाभिरलङ्कृतम्।।1.11.24।।
“நகரம் முழுவதையும்
நன்றாக அலங்கரியுங்கள். தரையெல்லாம், தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்து, வாசனைத்
திரவியங்களைத் தெளித்துக், கொடிகளை ஏற்றி, நன்றாக அழகு படுத்துங்கள்.”
तत: प्रहृष्टा:
पौरास्ते श्रुत्वा राजानमागतम्।
तथा प्रचक्रुस्तत्सर्वं राज्ञा यत्प्रेषितं तदा ।।1.11.25।।
அரசர் அயோத்திக்குத்
திரும்ப வருகிறார் என்பதைக் கேட்டறிந்த நகர மக்கள், மிகவும் மகிழ்ந்து, அரசர்
சொல்லி அனுப்பிய படியே, அனைத்தையும் செய்தார்கள்.
ततस्स्वलङ्कृतं राजा नगरं प्रविवेश ह।
शङ्खदुन्दुभिनिर्घोषै: पुरस्कृत्य द्विजर्षभम्।।1.11.26।।
தசரத மன்னர், மிகச்
சிறந்த அந்தணரான ருஷ்யஸ்ருங்கரைத் தேரின் முன்புறம் அமர்த்தி, துந்துபிகளும்,
முரசுகளும் ஒலிக்க, நன்றாக
அலங்கரிக்கப்பட்ட நகரத்துக்குள் பிரவேசித்தார்.
तत: प्रमुदितास्सर्वे दृष्ट्वा तं नागरा द्विजम्।
प्रवेश्यमानं सत्कृत्य नरेन्द्रेणेन्द्रकर्मणा।।1.11.27।।
அயோத்தி மக்களனைவரும்,
வீரத்தில், தேவேந்திரனுக் கிணையான தசரதரால், நல்ல முறையில் கௌரவிக்கப்பட்ட அந்த
அந்தணரைக் கண்டு, மனமகிழ்ந்தார்கள்.
अन्त:पुरं प्रवेश्यैनं
पूजां कृत्वा च शास्त्रत:।
कृतकृत्यं तदात्मानं मेने तस्योपवाहनात्।।1.11.28।।
பின்னர் தசரதர்,
ருஷ்யஸ்ருங்கரை அந்தப் புரத்துக்கு அழைத்துச் சென்று, அங்கே, சாஸ்திர முறைப்படி
அவருக்குப் பூஜைகள் செய்வித்த பின், தான் செய்ய வேண்டிய பெரிய காரியத்தைச் செய்து
முடித்து விட்டதாக உணர்ந்தார்.
अन्त:पुरस्त्रियस्सर्वाश्शान्तां
दृष्ट्वा तथागताम्।
सह भर्त्रा विशालाक्षीं प्रीत्यानन्दमुपागमन्।।1.11.29।।
அரச குலத்து மகளிர்
அனைவரும், தன் கணவருடன் அங்கே வந்துள்ள (அகன்ற கண்களையுடைய) சாந்தாவைக் கண்டு,
அன்பு பொங்க, மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
पूज्यमाना च ताभिस्सा
राज्ञा चैव विशेषत:।
उवास तत्र सुखिता कञ्चित्कालं सहर्त्विजा।।1.11.30।।
அரச குலப் பெண்டிரும்,
குறிப்பாக, தசரதரும் செய்த மரியாதைகளைப்
பெற்றுக்கொண்டு, தன் கணவரான ருஷ்யஸ்ருங்க
முனிவருடன், சற்று நேரம் சாந்தா அங்கே தங்கி இருந்தாள்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकादशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பதினொன்றாவது ஸர்க்கம், நிறைவு
பெறுகிறது.
***
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment