ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்தியா காண்டம்
ஸர்க்கம் –12
(தசரத
மன்னரின் புலம்பல்)
ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः।
चिन्तामभिसमापेदे मुहूर्तं प्रतताप च।।2.12.1।।
கைகேயியின் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்ட தசரத மன்னர் துயரப்பெருங்கடலில்
மூழ்கித் தாங்க முடியாத துன்பத்தை அடைந்தார்.
किन्नु मे यदि वा स्वप्नश्चित्तमोहोऽपि वा मम।
अनुभूतोपसर्गो वा मनसो वाप्युपद्रवः।।2.12.2।।
‘இது என்ன ஒரு கெட்ட கனவா? என் மனம் எதையாவது கற்பனை செய்து
கொள்கிறதா? எனக்கு நேரப்போகும் கெடுதலுக்கு இது ஒரு முன்னோடியா? அல்லது எது என் மனத்தில்
ஏற்பட்டுள்ள நோயா?’ என்று தசரதர் ஐயப்பட்டார்.
इति सञ्चिन्त्य तद्राजा नाध्यगच्छत्तदासुखम्।
प्रतिलभ्य चिरात्संज्ञां कैकेयीवाक्यताडितः।।2.12.3।।
व्यथितो विक्लबश्चैव व्याघ्रीं दृष्ट्वा यथा मृगः।
असंवृतायामासीनो जगत्यां दीर्घमुच्छवसन्।।2.12.4।।
मण्डले पन्नगो रुद्धो मन्त्रैरिव महाविषः।
अहो धिगिति सामर्षो वाचमुक्त्वा नराधिपः।।2.12.5।।
मोहमापेदिवान्भूय श्शोकोपहतचेतनः।
இப்படிப்பட்ட எண்ணங்களால்
மன்னருக்கு எந்த நிம்மதியும் கிடைக்கவில்லை. பெண்புலியைக்கண்ட மானைப் போல் கைகேயியைக்
கண்டு திடுக்கிட்டார். அவளுடைய இரக்கமற்ற வார்த்தைகளால் தாக்குண்டு தன் நினைவை இழந்தார். வெறுந்தரையில் மயங்கி விழுந்து கட்டுண்ட நாகம் போல்
பெருமூச்செறிந்தார். நினைவு திரும்பியதும், ‘சே’ என்ன இப்படி ஆயிற்றே! என்று வெறுப்புடன் கூறிய மன்னர், மீண்டும் நினைவிழந்தார்.
चिरेण तु नृप स्संज्ञां प्रतिलभ्य सुदुःखितः।।2.12.6।।
कैकेयीमब्रवीत्क्रुद्धःप्रदहन्निव चक्षुषा।
வெகு நேரத்துக்குப்பின்னர் மீண்டும் சுய நினைவடைந்த மன்னர்
ஆழ்ந்த துயரத்துடன் கோபத்தினால் எரியும் கண்களால் கைகேயியைப் பார்த்துக் கூறினார்:
नृशंसे दुष्टचारित्रे कुलस्यास्य विनाशिनि।।2.12.7।।
किं कृतं तव रामेण पापं पापे मयापि वा।
கொடுமையும் பாவமும் நிறைந்தவளே! என் குடும்பத்தை நாசமாக்கத்
தீர்மானித்து விட்டாய். ராமனோ, நானோ உனக்கு என்ன கெடுதல் செய்து விட்டோம்?
यदा ते जननीतुल्यां वृत्तिं वहति राघव: ।।2.12.8।।
तस्यैव त्वमनर्थाय किंनिमित्तमिहोद्यता ।
உன்னைத் தனது சொந்தத் தாயைப் போல நினைத்து அன்பு காட்டும்
ராமனுக்கு ஏதற்காக இப்படி ஒரு அநீதியை இழைக்கிறாய்?
त्वं मयाऽऽत्मविनाशार्थं भवनं स्वं प्रवेशिता।।2.12.9।।
अविज्ञानान्नृपसुता व्याली तीक्ष्णविषा यथा।
விஷம் நிறைந்த பெண் பாம்பைப் போன்ற இளவரசியான உன்னை, என்னை
நானே அழித்துக் கொள்வதற்காக என் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
जीवलोको यदा सर्वो रामस्याह गुणस्तवम्।।2.12.10।।
अपराधं किमुद्दिश्य त्यक्ष्यामीष्टमहं सुतम्।
அனைத்து உயிர்களும் என் மகன் ராமனின் நற்குணங்களைப் புகழ்கின்றன.
எந்தக் குற்றத்துக்காக நான் என் அன்பிற்குரிய மகனை இழக்க வேண்டும்?
कौसल्यां वा सुमित्रां वा त्यजेयमपि वा श्रियम्।।2.12.11।।
जीवितं वाऽत्मनो रामं न त्वेव पितृवत्सलम्।
நான் கௌசல்யையையோ, சுமித்திரையையோ அல்லது எனதூயிரையோ கூட
விட்டு விடுவேன். ஆனால், தந்தை மீது மிகவும் அன்பு கொண்ட என் ராமனை என்னால் பிரிய முடியாது.
परा भवति मे प्रीतिर्दृष्ट्वा तनयमग्रजम्।।2.12.12।।
अपश्यतस्तु मे रामं नष्टा भवति चेतना।
என் முதல் மகனான ராமனைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எல்லை
இல்லாத மகிழ்ச்சி உண்டாகிறது. அவனைப் பார்க்காவிட்டால் நான் உணர்விழந்து போகிறேன்.
तिष्ठेल्लोको विना सूर्यं शस्यं वा सलिलं विना।।2.12.13।।
न तु रामं विना देहे तिष्ठेत्तु मम जीवितम्।
இந்த உலகம் சூரியன் இல்லாமல் வாழலாம்; பயிர்கள் தண்ணீர் இல்லாமல்
பிழைக்கலாம். ஆனால், ராமன் இல்லாமல் என் உயிர் என் உடலில் தங்காது.
तदलं त्यज्यतामेष निश्चयः पापनिश्चये।।2.12.14।।
अपि ते चरणै मूर्ध्ना स्पृशाम्येष प्रसीद मे।
தீய நோக்கம் கொண்டவளே! போதும்! உன் தீர்மானத்தை விட்டு விடு.
உன் காலில் என் தலையை வைத்து வேண்டிக்கொள்கிறேன். என் மேல் இரக்கம் காட்டு.
किमिदं चिन्तितं पापे त्वया परमदारुणम्।।2.12.15।।
अथ जिज्ञाससे मां त्वं भरतस्य प्रियाप्रिये।
अस्तु यत्तत्त्वया पूर्वं व्याहृतं राघवं प्रति।।2.12.16।।
स मे ज्येष्ठस्सुत श्रीमान्धर्मज्येष्ठ इतीव मे।
तत्त्वया प्रियवादिन्या सेवार्थं कथितं भवेत्।।2.12.17।।
பாவ எண்ணம் கொண்டவளே! இப்படிப்பட்ட பயங்கரமான எண்ணம் உனக்கு
ஏன் வந்தது? பரதனைப் பற்றிய என் அபிப்பிராயம் என்ன என்று உனக்குத் தெரிய வேண்டுமா?
அது இருக்கட்டும். முன்பெல்லால் ராமனைப் பற்றிப் பேசும் போது, ‘ராமன் தான் என்னுடைய மூத்த மகன். அவன் மிகவும் மேன்மையானவன்.
தன் கடமையச் செய்வதில் முதல்வனாக இருப்பவன்’ என்றெல்லாம சொல்லியிருக்கிறாயே! அந்த இனிமையான
வார்த்தைகளையெல்லாம், என்னை மகிழ்விப்பதற்காகத்தான் சொன்னாயா?
तच्छ्रुत्वा शोकसन्तप्ता सन्तापयसि मां भृशम्।
आविष्टाऽसि गृहं शून्यं सा त्वं परवशं गता।।2.12.18।।
மற்றவர்களுடைய சொற்களைக்கேட்டு, உன்னைத் துன்புறுத்திக்கொண்டு,
என்னையும் துன்புறுத்துகிறாய்.
इक्ष्वाकूणां कुले देवि सम्प्राप्तस्सुमहानयम्।
अनयो नयसम्पन्ने यत्र ते विकृता मतिः।।2.12.19।।
தேவி! நீ இது வரை நல்ல நியாயமான எண்ணங்களைக் கொண்டிருந்தாய்.
இப்படிப்பட்ட தீய எண்ணங்கள் உன் மனத்தில் உண்டானதால், மிக மேன்மையான இக்ஷ்வாகு வம்சமே ஒழுக்கம் இழந்து விட்டது.
नहि किञ्चिदयुक्तं वा विप्रियं वा पुरा मम।
अकरोस्त्वं विशालाक्षि तेन न श्रद्दधाम्यहम्।।2.12.20।।
அகன்றவிழிகளையுடையவளே! இதுவரை தவறான முறையிலோ, எனக்குப் பிடிக்காத
வகையிலோ, நீ நடந்து கொண்டதேயில்லை. ஆகவே நீ
சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.
ननु ते राघवस्तुल्यो भरतेन महात्मना।
बहुशो हि सुबाले त्वं कथाः कथयसे मम।।2.12.21।।
தேவி! மேன்மை மிகுந்த பரதனும், ராமனும் உனக்கு ஒன்று தான்
நீ என்னிடம் சொல்வாயே.
तस्य धर्मात्मनो देवि वनवासं यशस्विनः।
कथं रोचयसे भीरु नव वर्षाणि पञ्च च।।2.12.22।।
பின், தர்மாத்மாவும், மேன்மை பொருந்தியவனுமான ராமன் பதினான்காண்டுகளைக்
காட்டில் கழிக்க வேண்டும் என்று எப்படி விரும்புகிறாய்?
अत्यन्तसुकुमारस्य तस्य धर्मे धृतात्मनः।
कथं रोचयसे वासमरण्ये भृशदारुणे।।2.12.23।।
மிக மென்மையானவனும், தர்மவழியில் நடப்பவனுமான ராமனை அந்த
பயங்கரமான காட்டில் வசிக்க வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகிறாய்?
रोचयस्यभिरामस्य रामस्य शुभलोचने।
तव शुश्रूषमाणस्य किमर्थं विप्रवासनम्।।2.12.24।।
கவர்ச்சி மிகுந்த கண்களையுடையவளே! மனங்கவரும்படி நடந்து கொள்பவனும்,
உனக்கு சேவை செய்வதில் பெருவிருப்பம் கொண்டவனுமான ராமனை அவ்வளவு தூரம் ஏன் அனுப்பவிரும்புகிறாய்?
रामो हि भरताद्भूयस्तव शुश्रूषते सदा।
विशेषं त्वयि तस्मात्तु भरतस्य न लक्षये।।2.12.25।।
பரதனைக்காட்டிலும் உனக்கு சேவை செய்பவன் ராமன் தான். அப்படியிருக்க,
நீ ஏன் பரதனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாய்?
शुश्रूषां गौरवं चैव प्रमाणं वचनक्रियाम्।
कस्ते भूयस्तरं कुर्यादन्यत्र मनुजर्षभात्।।2.12.26।।
बहूनां स्त्रीसहस्राणां बहूनां चोपजीविनाम्।
ஆயிரக்கணக்கான பெண்களும், சேவகர்களும் இருந்த போதிலும், மனிதருள்
சிறந்தவனான ராமனைக்காட்டிலும் உனக்கு சேவை செய்பவர்களோ, உனக்கு மரியாதை கொடுப்பவர்களோ,
உன் கட்டளைகளை அப்படியே பின்பற்றுபவர்களோ, யார் இருக்கிறார்கள்?
परिवादोऽपवादो वा राघवे नोपपद्यते।।2.12.27।।
सान्त्वयन्सर्वभूतानि राम श्शुद्धेन चेतसा।
गृह्णाति मनुजव्याघ्र प्रियैर्विषयवासिनः।।2.12.28।।
மனிதருள் சிறந்த ராமன் தூய உள்ளத்துடன், இந்த நாட்டு மக்களுக்குப்
பிரியமான செயல்களைச் செய்து அவர்களுடைய அன்பை சம்பாதித்திருக்கிறான். இந்த ரகு குலத்தோன்றலின்
மேல் எந்த விதமான குற்றமோ, பழியோ இல்லை.
सत्येन लोकान् जयति दीनान् दानेन राघवः।
गुरूञ्छुश्रूषया वीरो धनुषा युधि शात्रवान्।।2.12.29।।
மக்களைத் தன் உண்மையான நடத்தையாலும், ஏழைகளைத் தானத்தாலும்,
தன்னை விடப்பெரியவர்களை சேவையாலும், போர்க்களத்தில் எதிரிகளைத் தன் வில்லின் திறத்தாலும்,
பெருவீரனான ராமன் வென்றிருக்கிறான்.
सत्यं दानं तपस्त्यागो मित्रता शौचमार्जवम्।
विद्या च गुरुशुश्रूषा ध्रुवाण्येतानि राघवे।।2.12.30।।
சத்தியம், தானம், தவம், தூய்மை, தியாகம், நேர்மை, கல்வி,
பெரியவர்களுக்குச் செய்யும் சேவை போன்ற குணங்கள் ராமனில் அழமாகப் பதிந்துள்ளன.
तस्मिन्नार्जवसम्पन्ने देवि देवोपमे कथम्।
पापमाशंससे रामे महर्षिसमतेजसि।।2.12.31।।
தேவர்களைப் போலும், ரிஷிகளைப்போலும் ஒளி பொருந்திய, நேர்மையே வடிவான ராமனுக்குத் தீங்கு
விளைவிக்க எப்படி விரும்புகிறாய்?
न स्मराम्यप्रियं वाक्यं लोकस्य प्रियवादिनः।
स कथं त्वत्कृते रामं वक्ष्यामि प्रियमप्रियम्।।2.12.32।।
அனைவரிடத்தும், பிரியமான வார்த்தைகளையே பேசும் என் அன்பான
ராமனிடத்தில், உனக்காக எப்படி விரும்பத்தகாத சொற்களைக்கூறுவேன்?
क्षमा यस्मिन्दमस्त्याग सत्यं धर्मः कृतज्ञता।
अप्यहिंसा च भूतानां तमृते का गतिर्मम।।2.12.33।।
மன்னிக்கும் குணமும், பொறுமையும், தியாகமும், சத்தியமும்,
நேர்மையும், நன்றியும், உயிர்களிடத்து அகிம்சையும் உடைய ராமன் இல்லாவிட்டால் எனக்கு
வேறு கதி ஏது?
मम वृद्धस्य कैकेयि गतान्तस्य तपस्विनः।
दीनं लालप्यमानस्य कारुण्यं कर्तुमर्हसि।।2.12.34।।
கைகேயி! மரணத்தருவாயில் இருக்கும் இந்த வயதான கிழவனின் பரிதாபமான
அழுகையைக்கேட்டு, என் மேல் நீ கருணை காட்ட வேண்டும்.
पृथिव्यां सागरान्तायां यत्किञ्चिदधिगम्यते।
तत्सर्वं तव दास्यामि मा च त्वां मन्युराविशेत्।।2.12.35।।
கடல் சூழ்ந்த இந்தப்பூமியில் கிடைக்கும் அனைத்தையும் உனக்குக்கொடுத்து
விடுகிறேன். நீ கோபப்படாதே.
अञ्जलिं करोमि कैकेयि पादौ चापि स्पृशामि ते।
शरणं भव रामस्य माऽधर्मो मामिह स्पृशेत्।।2.12.36।।
கைகேயி! உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன். உன் காலைத்தொட்டு
வணங்குகிறேன். ராமனைக்காப்பாற்று. இப்பிறவியில் என்னைப் பாவம் தீண்டாமல் பார்த்துக்கொள்.
इति दुःखाभिसन्तप्तं विलपन्तमचेतनम्।
घूर्णमानं महाराजं शोकेन समभिप्लुतम्।।2.12.37।।
पारं शोकार्णवस्याशु प्रार्थयन्तं पुनः पुनः।
प्रत्युवाचाथ कैकेयी रौद्रा रौद्रतरं वचः।।2.12.38।।
துன்பத்தால் துயருற்றுக் கண்களில் நீர் சொரிந்து கொண்டு,
தன் நினைவை அடிக்கடி இழந்து கொண்டு, தலை சுற்றி, வலி பொறுக்க முடியாமல், இந்தத் துன்பக்கடலை
விரைவில் கடக்க உதவி செய்யுமாறு மீண்டும் மீண்டும், வேண்டிக்கொண்ட தசரத மன்னரைப் பார்த்து,
குரூரமான கைகேயி, அதிகக் குரூரமான வார்த்தைகளைக்கூறினாள்.
यदि दत्त्वा वरौ राजन्पुनः प्रत्यनुतप्यसे।
धार्मिकत्वं कथं वीर पृथिव्यां कथयिष्यसि।।2.12.39।।
“மகாவீரம் பொருந்திய அரசே! இரண்டு வரங்களைக் கொடுத்து விட்டு,
இப்படிக் கவலைப்படும் நீங்கள் தர்மத்தைப்பற்றி எப்படிப்பேச முடியும்?
यदा समेता बहवस्त्वया राजर्षय स्सह।
कथयिष्यन्ति धर्मज्ञ तत्र किं प्रतिवक्ष्यसि।।2.12.40।।
தர்மம் அனைத்தும் அறிந்தவரே! எண்ணற்ற ராஜரிஷிகள் கூடியிருக்கும்
அவையில், உங்களிடம் இதைப் பற்றிக்கேட்டால், என்ன பதில் கூறுவீர்கள்?
यस्याः प्रसादे जीवामि या च मामभ्यपालयत्।
तस्याः कृतम् मया मिथ्या कैकेय्या इति वक्षयसि।।2.12.41।।
எந்தக் கைகேயியின் கருணையால், நான் காப்பாற்றப்பட்டு, இன்று
உயிருடன் இருக்கிறேனோ, அந்தக் கைகேயிக்குக்கொடுத்த வாக்கை நான் மீறி விட்டேன் என்று
கூறுவீர்களா?
किल्बिषत्वं नरेन्द्राणां करिष्यसि नराधिप।
यो दत्वा वरमद्यैव पुनरन्यानि भाषसे।।2.12.42।।
அரசே! இப்போதே எனக்கு இரண்டு வரங்களைக் கொடுத்து விட்டு
, உடனே வேறு விதமாகப் பேசுகிறீர்கள். தாங்க: இக்ஷ்வாகு குலத்துக்கே களங்கம் உண்டாக்குகிறீர்கள்.
शैब्यश्श्येनकपोतीये स्वमांसं पक्षिणे ददौ।
1अलर्कश्चक्षुषी दत्वा जगाम गतिमुत्तमाम्।।2.12.43।।
பருந்துக்கும், புறாவுக்கும் இடையே நடந்த தகராறில், சிபிச்சக்கரவர்த்தி,
தன் உடம்பில் இருந்து தசையைக்கொடுத்தார். அரசர் அலர்க்கர் ஒரு கண்ணிழந்தவருக்காகத்
தன் கண்களையே தானம் செய்து மேலான நிலையை அடைந்தார்.
सागरस्समयं कृत्वा न वेलामतिवर्तते।
समयं माऽनृतं कार्षीः पूर्ववृत्तमनुस्मरन्।।2.12.44।।
தனது சத்தியத்தை மீறக்கூடாது என்பதற்காக, சமுத்திரம் தன்
கரையைத் தாண்டுவதில்லை. தாங்களும், தங்கள் முன்னோர்களான அரசர்கள் நடத்தையைப் பின்பற்றித் தங்கள் சத்தியத்தில் இருந்து
தவறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
स त्वं धर्मं परित्यज्य रामं राज्येऽभिषिच्य च।
सह कौसल्यया नित्यं रन्तुमिच्छसि दुर्मते।।2.12.45।।
தீய எண்ணம் உடையவரே! தர்மத்தை விட்டு விட்டு, ராமனுக்கு முடி
சூட்டிவிட்டுக் கௌசல்யையுடன் தினமும் மகிழ்ந்திருக்க விரும்புகிறீர்கள்.
भवत्वधर्मो धर्मो वा सत्यं वा यदि वाऽनृतम्।
यत्त्वया संश्रुतं मह्यं तस्य नास्ति व्यतिक्रमः।।2.12.46।।
தர்மமோ, அதர்மமோ, உண்மையோ, பொய்யோ, தாங்கள் எனக்குக் கொடுத்த
வாக்கை மீற நான் அனுமதிக்க மாட்டேன்.
अहं हि विषमद्यैव पीत्वा बहु तवाग्रतः।
पश्यतस्ते मरिष्यामि रामो यद्यभिषिच्यते।।2.12.47।।
தாங்கள் ராமனுக்குத்
தான் முடி சூட்டப் போகிறீர்கள் என்றால், தங்கள் கண் முன்பே விஷம் குடித்துத்
தற்கொலை செய்து கொள்வேன்.
एकाहमपि पश्येयं यद्यहं राममातरम्।
अञ्जलिं प्रतिगृह्णन्तीं श्रेयो ननु मृतिर्मम।।2.12.48।।
என்னைப் பொருத்த வரை, ராமனைப் பெற்ற கௌசல்யை அனைவராலும் வணங்கப்படுவதை
ஒரு நாள் பார்ப்பதை விட, நான் இறப்பதே மேல்.
भरतेनात्मना चाहं शपे ते मनुजाधिप।
यथा नान्येन तुष्येयमृते रामविवासनात्।।2.12.49।।
என் உயிர் மீதும், பரதன் மீதும் ஆணையிட்டுக்கூறுகிறேன், ராமனை நாடு கடத்துவதைத்
தவிர வேறு எதையும் நான் ஏற்கமாட்டேன்.”
एतावदुक्त्वा वचनं कैकेयी विरराम ह।
विलपन्तं च राजानं न प्रतिव्याजहार सा।।2.12.50।।
இவ்வாறு கூறி விட்டுக் கைகேயி அமைதியாகி விட்டாள். மன்னரின்
புலம்பல்களை அவள் பொருட்படுத்தவேயில்லை.
श्रुत्वा तु राजा कैकेय्या वृतं परमशोभनम्।
रामस्य च वने वासमैश्वर्यं भरतस्य च।।2.12.51।।
नाभ्यभाषत कैकेयीं मुहूर्तं व्याकुलेन्द्रियः।
ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும், பரதனுக்கு முடி சூட்ட வேண்டும் என்றும்
கைகேயி வைத்த இந்த நியாயமற்ற கோரிக்கையைக் கேட்ட மன்னர் பேச்சிழந்து விட்டார். அவருடைய
உள்ளம் கொந்தளித்தது. அவர் கைகேயியுடன் பேசவில்லை.
प्रैक्षतानिमिषो देवीं प्रियामप्रियवादिनीम्।।2.12.52।।
तां हि वज्रसमां वाचमाकर्ण्य हृदयाप्रियाम्।
दुःखशोकमयीं घोरां राजा न सुखितोऽभवत्।।2.12.53।।
இடி போல் தன்னைத் தாக்கிய விரும்பத்தகாத சொற்களைக்கூறிய கைகேயியை
மன்னர் உறுத்துப் பார்த்தார்.
स देव्या व्यवसायं च घोरं च शपथं कृतम्।
ध्यात्वा रामेति निश्श्वस्य छिन्न स्तरुरिवापतत्।।2.12.54।।
கைகேயியின் பிடிவாதத்தையும், அவள் செய்த பயங்கரமான சபதத்தையும்
பார்த்த மன்னர் ‘ராமா’ என்று கூறிக்கொண்டு, வெட்டுண்ட மரம் போல் தரையில் விழுந்தார்.
नष्टचित्तो यथोन्मत्तो विपरीतो यथाऽतुरः।
हृततेजा यथा सर्पो बभूव जगतीपतिः।।2.12.55।।
புவியரசரான தசரதர், புத்தி பேதலித்தவரைப் போல முன்னுக்குப்
பின் முரணாகப் பேசிக்கொண்டு, மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பாம்பைப் போல் ஆனார்.
दीनया तु गिरा राजा इति होवाच कैकयीम्।
अनर्थमिममर्थाभं केन त्वमुपदर्शिता।।2.12.56।।
भूतोपहतचित्तेव ब्रुवन्ती मां न लज्जसे।
மீண்டும் நினைவு பெற்ற தசரத மன்னர், மிகவும் பணிவுடன் கேட்டார்
“ஏன் இப்படி உனக்கு மட்டும் லாபம் உண்டாக்கும் படியான தீய செய்கையைச் செய்கிறாய்? ஏதோ
கெட்ட ஆவியின் வசப்பட்டவள் போல இப்படிப் பேசுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா?
शीलव्यसनमेतत्ते नाभिजानाम्यहं पुरा।।2.12.57।।
बालायास्तत्त्वितिदानीं ते लक्षये विपरीतवत्।
நீ உன் இளம் வயதில் இருந்த போது, இப்படியெல்லாம் மோசமாக நடந்து
கொள்வாய் என்று எனக்குத் தெரியவில்லையே. இப்போது, நான் நினைத்ததற்கு எதிர்மாறாக நடந்து
கொள்கிறாய்.
कुतो वा ते भयं जातं या त्वमेवंविधं वरम्।।2.12.58।।
राष्ट्रे भरतमासीनं वृणीषे राघवं वने।
பரதனுக்கு சிம்மாசனமும், ராமனுக்கு வனவாசமும் கேட்கும் அளவுக்கு
உன் உள்ளத்தில் பயம் எங்கிருந்து வந்தது?
विरमैतेन भावेन त्वमेतेनानृतेन वा।।2.12.59।।
यदि भर्तुः प्रियं कार्यं लोकस्य भरतस्य च।
உன் கணவனுக்கும், இந்த உலகத்துக்கும், பரதனுக்கும் நன்மை
செய்யவேண்டும் என்று நினைத்தாயானால், இந்த எண்ணத்தை விட்டுவிடு.
नृशंसे पापसङ्कल्पे क्षुद्रे दुष्कृतकारिणि।।2.12.60।।
किन्नु दुखमलीकं वा मयि रामे च पश्यसि।
குரூரமானவளே! பாவ எண்ணம் கொண்டவளே! தீய செயல்களைச் செய்பவளே!
கீழானவளே! நானோ, ராமனோ என்ன பாவம் செய்தோம்?
न कथञ्चिदृते रामाद्भरतो राज्यमावसेत्।।2.12.61।।
रामादपि हि तं मन्ये धर्मतो बलवत्तरम्।
ராமனை வஞ்சித்து இந்த நாட்டைப் பெறுவதற்கு பரதன் ஒருபோதும்
ஒப்புக்கொள்ள மாட்டான். ஏனெனில், ராமனைக்காட்டிலும், பரதன் தர்மத்தில் உறுதியானவன்.
कथं द्रक्ष्यामि रामस्य वनं गच्छेति भाषिते।।2.12.62।।
मुखवर्णं विवर्णं तु तं यथैवेन्दुमुपप्लुतम्।
ராமனைக் காட்டுக்குப் போகும் படி சொல்லும் போது கிரகணம் பிடித்த
சந்திரனைப் போல் ஒளியிழந்து போகும் ராமனுடைய முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்?
तां हि मे सुकृतां बुद्धिं सुहृद्भिस्सह निश्चिताम्।।2.12.63।।
कथं द्रक्ष्याम्यपावृत्तां परैरिव हतां चमूम्।
किं मां वक्ष्यन्ति राजानो नानादिग्भ्य स्समागताः।।2.12.64।।
बालो बताऽयमैक्ष्वाकश्चिरं राज्यमकारयत्।
सुकृताम् well thoughtout, सुहृद्भि: सह in consultation with friends, निश्चिताम्
has been decided, मे I, तां बुद्धिम् that decision, परैः by enemies, हताम्
defeated, चमूमिव like the army, अपावृत्ताम् retreating, कथम् how, द्रक्ष्यामि
can I see, नानादिग्भ्यः from different directions, समागताः men assembled, राजानः
all kings, माम् about me, किम् what, वक्ष्यन्ति they will speak of, बालः
ignorant one, अयम् ऐक्ष्वाकः this Dasaratha, चिरम् for a long time, राज्यम्
kingdom, अकारयत् ruled.
I have taken this decision in consultation with friends to install Rama. How
can I see such a decision being reversed like a retreating army defeated by
enemies? Kings from different quarters have already arrived and they will say,
How did this ignorant descendant of the Ikshakus (Dasaratha) rule this kingdom
for such a long time?
எனது நண்பர்களிடம் நன்கு கலந்தாலோசித்த பின்னர் தான் ராமனுக்கு
முடி சூட்டும் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளேன். அப்படிப்பட்ட தீர்மானம் எதிரியால்
தோற்கடிக்கப்பட்ட படையைப் போல அப்படியே திரும்பிச் செல்வதை நான் எப்படிப் பார்ப்பேன்? பல பகுதிகளிலிருந்தும் அரசர்கள் ஏற்கனவே வந்து விட்டார்கள்.
அவர்களெல்லாம், ‘இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தும் இப்படி அறியாமை நிறைந்தவனாக இருக்கும்
மன்னன் இந்த தேசத்தை இவ்வளவு காலம் எப்படி ஆண்டான்?’ என்று பேசுவார்களே!
यदा तु बहवो वृद्धा गुणवन्तो बहुश्रुताः।।2.12.65।।
परिप्रक्ष्यन्ति काकुत्स्थं वक्ष्यामि किमहं तदा।
குணவான் களும் கற்றறிந்தவர்களும், காகுஸ்தனான ராமனைப் பற்றி
விசாரித்தால் அவர்களிடம் என்ன சொல்வேன்?
कैकेय्या क्लिश्यमानेन रामः प्रव्राजितो मया।।2.12.66।।
यदि सत्यं ब्रवीम्येतत्तदसत्यं भविष्यति।
கைகேயியின் கொடுமையால் நான் ராமனைக் காட்டுக்கு அனுப்பி விட்டேன்
என்று கூறினால், அதை யாரும் நம்ப மாட்டார்கள். நான் பொய் சொல்வதாக ஆகிவிடும்.
किं मां वक्ष्यति कौशल्या राघवे वनमास्थिते।।2.12.67।।
किं चैनां प्रतिवक्ष्यामि कृत्वा विप्रियमीदृशम्।
ராமன் காட்டுக்குப் போனால் கௌசல்யை என்னிடம் என்ன சொல்வாள்?
இப்படிப்பட்ட ஒரு விரும்பத்தகாத செயலைச் செய்த பின், அவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?
यदा यदा हि कौशल्या दासीवच्च सखीव च।।2.12.68।।
भार्यावद्भगिनीवच्च मातृवच्चोपतिष्ठति।
सततं प्रियकामा मे प्रियपुत्रा प्रियंवदा।।2.12.69।।
न मया सत्कृता देवी सत्कारार्हा कृते तव।
இனிமையாகப் பேசும் கௌசல்யை எப்போதும் என் நலத்தையே விரும்புபவள்.
எனக்கு, அன்பான மகனைக்கொடுத்தவள்; எனக்கு மனதார சேவகம் செய்பவள். எனக்குத் தோழியாகவும்,
மனைவியாகவும், சகோதரியாகவும், தாயாகவும், இருப்பவள். நான் அவளை மிக நன்றாக நடத்த வேண்டும்.
ஆனால், உன்னால் அவளுக்கு உரிய கவனத்தை என்னால் கொடுக்க முடியவில்லை.
इदानीं तत्तपति मां यन्मया सुकृतं त्वयि।।2.12.70।।
अपथ्यव्यञ्जनोपेतं भुक्तमन्नमिवातुरम्।
உனக்கு நான் எத்தனையோ சலுகை காட்டியிருக்கிறேன். ஆனாலும்,
நல்ல உணவுடன், உடல் நலத்துக்கொவ்வாத கறிவகைகளை உண்டதனால், உடல் நலம் குன்றியவன் போல்
ஆகிவிட்டேன்.
विप्रकारं च रामस्य सम्प्रयाणं वनस्य च।।2.12.71।।
सुमित्रा प्रेक्ष्य वै भीता कथं मे विश्वसिष्यति।
ராமனுக்கு நடக்கும் அவமானத்தையும், அவன் காட்டுக்குப் போவதையும்
பார்க்கும் சுமித்திரை பயந்து போவாள். அவளுக்கு என் மீது என்ன நம்பிக்கை இருக்கும்?
कृपणं बत वैदेही श्रोष्यति द्वयमप्रियम्।।2.12.72।।
मां च पञ्चत्वमापन्नं रामं च वनमाश्रितम्।
வைதேஹி ராமன் காட்டுக்குப்
போகும் செய்தியோடு சேர்த்து நான் மரணமடைந்த செய்தியையும் கேட்டு வருந்துவாள்.
वैदेही बत मे प्राणान्शोचन्ती क्षपयिष्यति।।2.12.73।।
हीना हिमवतः पार्श्वे किन्नरेणेव किन्नरी।
ஐயோ! ராமனைப் பிரிந்த வைதேஹி, கின்னரனால் கைவிடப்பட்ட கின்னரியைப்
போல் துடித்துப் போவாளே!
न हि राममहं दृष्ट्वा प्रवसन्तं महावने।।2.12.74।।
चिरं जीवितुमाशंसे रुदन्तीं चापि मैथिलीम्।
அந்தப் பெரிய காட்டில் ராமன் வசிப்பதையும், இங்கே சீதை அழுது
கொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டு நான் அதிக நாள் உயிரோடு இருக்க மாட்டேன்.
सा नूनं विधवा राज्यं सपुत्रा कारयिष्यसि।।2.12.75।।
न हि प्रव्राजिते रामे देवि जीवितुमुत्सहे।
தேவி! நீ விதவையாகி, உன் மகனுடன் நாட்டை ஆள்வாயாக. ராமன்
காட்டுக்குச் சென்ற பின் நான் உயிர்வாழ விரும்பவில்லை.
सतीं त्वामहमत्यन्तं व्यवस्याम्यसतीं सतीम्।
रूपिणीं विषसंयुक्तां पीत्वेव मदिरां नरः।।2.12.76।।
விஷம் கலந்த மதுவை அருந்துவதற்கு முன்னர் அது விஷம் கலந்தது
என்பதை அறியாதவர் போல, பார்ப்பதற்கு அழகாக இருக்கும் நீ, உண்மையில் தூய்மையானவள் அல்ல
என்பதை நான் அறிந்திருக்கவில்லை .
अनृतैर्बहु मां सान्त्वै स्सान्त्वयन्ती स्म भाषसे।
गीतशब्देन संरुध्य लुब्धो मृगमिवावधीः।।2.12.77।।
இனிமையான சொற்களைக் கூறி, எனக்கு ஆறுதல் அளித்து வந்த நீ, உண்மையில் மானை, இனிமையான இசையை ஒலிக்கச் செய்து,
பொறியில் சிக்க வைத்துப் பின்னர் அதைக் கொல்லும் வேடன் போல் ஆகிவிட்டாய்.
अनार्य इति मामार्याः पुत्रविक्रायकं ध्रुवम्।
धिक्करिष्यन्ति रथ्यासु सुरापं ब्राह्मणं यथा।।2.12.78।।
பாதையில் போகும் மரியாதைக்குரிய மக்கள், ‘ அவர் தன் மகனை
விற்று விட்டார்’ என்று கூறி, மதுவருந்தும் அந்தணரைப் பரிகசிப்பதைப் போல என்னைப் பரிகசிப்பார்கள்.
अहो दुःखमहो कृच्छ्रं यत्र वाचः क्षमे तव।
दुःखमेवंविधं प्राप्तं पुराकृतमिवाशुभम्।।2.12.79।।
உன்னுடைய வார்த்தைகளையெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறதே, என்ன ஒரு துன்பம்! என்ன
ஒரு கொடுமை! முன்னால் செய்த பாவத்தின் பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
चिरं खलु मया पापे त्वं पापेनाभिरक्षिता।
अज्ञानादुपसम्पन्ना रज्जुरुद्बन्धिनी यथा।।2.12.80।।
பாவியே! நான் செய்த பாவத்தால், அறியாமல் வெகு காலம் உன்னைக்
காப்பாற்றி வந்திருக்கிறேன். வெகு நாட்கள் பத்திரமாக வைத்திருந்த கயிறே நம் கழுத்தில்
விழுந்த தூக்குக் கயிறாவதைப் போல, நீ எனக்கு ஆகியிருக்கிறாய்!
रममाणस्त्वया सार्धं मृत्युं त्वां नाभिलक्षये।
बालो रहसि हस्तेन कृष्णसर्पमिवास्पृशम्।।2.12.81।।
உன்னுடன் இருக்கும் வேளையில், நீ மரணத்தின் வடிவம் என்று
உணராமல், சிறு குழந்தை கரு நாகத்தைக் கையில் பிடித்து விளையாடுவதைப் போல் உன்னைத் தழுவி
மகிழ்ந்திருந்தேன்.
मया ह्यपितृकः पुत्र स्समहात्मा दुरात्मना।
तं तु मां जीवलोकोऽयं नूनमाक्रोष्टुमर्हति।।2.12.82।।
கொடியவனான நான், பெருந்தன்மையுள்ள ராமனைத் தகப்பன் இல்லாதவனாக்கி
விட்டேன். இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் என்னைக் கண்டனம் செய்வதற்குத் தகுதியானவனாகி
விட்டேன்.
बालिशो बत कामात्मा राजा दशरथो भृशम्।
यः स्त्रीकृते प्रियं पुत्रं वनं प्रस्थापयिष्यति।।2.12.83।।
‘அடடா! ஒரு பெண்ணின்
மீது ஏற்பட்ட மோகத்தால் இந்தத் தசரத மன்னர், தனது மகனைக் காட்டுக்கு அனுப்பி எவ்வளவு
முட்டாள் தனமாக நடந்து கொண்டு விட்டார்!’என்று அவர்கள் சொல்வார்கள்.
व्रतैश्च ब्रह्मचर्यैश्च गुरुभिश्चोपकर्शितः।
भोगकाले महत्कृच्छ्रं पुनरेव प्रपत्स्यते।।2.12.84।।
ஏற்கனவே குருமார்களின் கட்டளைப்படி உபவாசம் இருந்தும், பிரம்மச்சரியத்தை
அனுஷ்டித்தும், உடல் இளைத்திருக்கும் ராமன், இனிமேலும் சுகங்களை அநுபவிக்காமல் துன்பத்துக்கு
உள்ளாகவேண்டுமே!
नालं द्वितीयं वचनं पुत्रो मां प्रतिभाषितुम्।
स वनं प्रव्रजेत्युक्तो बाढमित्येव वक्ष्यति।।2.12.85।।
என் மகன் ராமன் நான் ஒன்று சொன்னால், மறு வார்த்தை பேச மாட்டான்.
‘காட்டிற்குப் போ’ என்று சொன்னால், ‘அப்படியே ஆகட்டும்’ என்பான்.
यदि मे राघवः कुर्याद्वनं गच्छेति चोदितः।
प्रतिकूलं प्रियं मे स्यान्न तु वत्सः करिष्यति।।2.12.86।।
ரகுகுலத் தோன்றலான ராமனை க் காட்டுக்குப் போகச் சொன்னால்,
‘முடியாது’ என்று அவன் மறுத்து விட்டால், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், அவன்
அப்படிச் செய்யமாட்டான்.
शुद्धभावो हि भावं मे न तु ज्ञास्यति राघवः।।2.12.87।।
स वनं प्रब्रजे त्युक्तो बाढ मित्येव वक्षयति।
ராமன் என் உள்மனத்தின் விருப்பத்தை அறியமாட்டான். ஆகவே, அவனிடம்
நான் வனம் போகச்சொன்னால், ‘அப்படியே’ என்று சொல்லி விடுவான்.
राघवे हि वनं प्राप्ते सर्वलोकस्य धिक्कृतम्।।2.12.88।।
मृत्युरक्षमणीयं मां नयिष्यति यमक्षयम्।
ராமன் காட்டுக்குச் சென்றுவிட்டானானால், என்னை அனைவரும் இகழ்வர்;
யாரும் என்னை மன்னிக்க மாட்டார்கள். யமன் என்னைத் தன் இருப்பிடத்துக்கு இட்டுச்செல்வான்.
मृते मयि गते रामे वनं मनुजपुङ्गवे।।2.12.89।।
इष्टे मम जने शेषे किं पापं प्रतिपत्स्यसे।
மனிதருள் சிறந்த ராமனைக் காட்டிற்கு அனுப்பி விட்டு, நானும்
மரணித்த பின்னர், எனக்குப் பிரியமானவர்களுக்கு இன்னும் என்ன தீங்குகளை இழைக்க எண்ணியிருக்கிறாய்?
कौशल्या मां च रामं च पुत्रौ च यदि हास्यति।।2.12.90।।
दुःखान्यसहती देवी मामेवानुमरिष्यति।
என்னையும், ராமனையும், இலக்குவனையும், சத்ருக்னனையும் இழந்த
பின்னர், துயரம் தாங்க முடியாமல், அவளும் இறந்து விடுவாள்.
कौसल्यां च सुमित्रां च मां च पुत्रैस्त्रिभिस्सह।।2.12.91।।
प्रक्षिप्य नरके सा त्वं कैकेयि सुखिता भव।
கைகேயி! கௌசல்யையையும், சுமித்திரையையும், என்னையும், என்னுடைய
மூன்று மகன் களையும் நரகத்துக்கு அனுப்பி விட்டு, நீ மட்டும் மகிழ்ச்சியாக இரு!
मया रामेण च त्यक्तं शाश्वतं सत्कृतं गुणैः।।2.12.92।।
इक्ष्वाकुकुलमक्षोभ्यमाकुलं पालयिष्यसि।
நற்குணங்களுக்குப் பெயர் போன இக்ஷ்வாகு குலம் ராமனையும் என்னையும்
இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும். அப்போது, எந்தத் தொந்தரவும் இல்லாமல், நீ அதை
ஆண்டு கொண்டிரு.
प्रियं चेद्भरतस्यैतद्रामप्रव्राजनं भवेत्।।2.12.93।।
मा स्म मे भरतः कार्षीत्प्रेतकृत्यं गतायुषः।
ராமனைக் காட்டுக்கு அனுப்புவது பரதனுக்கு சம்மதம் என்றால்,
நான் இறந்த பிறகு என்னுடைய ஈமச்சடங்குகளை அவன் செய்யக்கூடாது.
हन्तानार्ये ममामित्रे सकामा भव कैकयि।।2.12.94।।
मृते मयि गते रामे वनं पुरुषपुङ्गवे।
सेदानीं विधवा राज्यं सपुत्रा कारयिष्यसि।।2.12.95।।
என் எதிரியே! கைகேயி! மனிதருள் சிறந்த ராமன் காட்டுக்குச்
சென்று, உன் விருப்பங்கள் நிறைவேறிய பிறகு, நானும் இறந்த பிறகு, ஒரு விதவையாக, உன்
மகனுடன் நீ நாட்டை ஆள்வாய்!
त्वं राजपुत्रीवादेन न्यवसो मम वेश्मनि।
अकीर्तिश्चातुला लोके ध्रुवः परिभवश्च मे।।2.12.96।।
सर्वभूतेषु चावज्ञा यथा पापकृतस्तथा।
ஒரு இளவரசியாக என்னுடைய அரண்மனையில் வாழ்ந்து எனக்கு இந்த
உலகத்தில் இணையில்லாத அவமானத்தையும் பழியையும் உண்டாக்கியிருக்கிறாய். என்னைப் பார்ப்பவர்கள்
எல்லாம் என்னை ஒரு பாவியைப் போல் அவமரியாதையுடன் பார்ப்பார்கள்.
कथं रथैर्विभुर्यात्वा गजाश्वैश्च मुहुर्मुहुः।।2.12.97।।
पद्भ्यां रामो महारण्ये वत्सो मे विचरिष्यति।
தேர்களின் மீதும், யானைகளின் மீதும், குதிரைகளின் மீதும்
மட்டுமே பயணித்து வந்த என் மகன் ராமன் எப்படிக் கால் நடையாக காட்டில் நடமாடுவான்?
यस्य त्वाहारसमये सूदाः कुण्डलधारिणः।।2.12.98।।
अहंपूर्वाः पचन्ति स्म प्रशस्तं पानभोजनम्।
स कथन्नु कषायाणि तिक्तानि कटुकानि च।।2.12.99।।
भक्षयन्वन्यमाहारं सुतो मे वर्तयिष्यति।
காதுகளில் குண்டலங்களையணிந்த சமையற்காரர்கள், பெருமையுடன் வித விதமான உணவுப் பதார்த்தங்களையும்,
பானங்களையும் தயாரித்து ராமனுக்கு வழங்குவார்கள். காட்டில் கசப்பாகவும் காரமாகவும்
இருக்கும் காட்டுப் பழங்களையும், கிழங்குகளையும் தின்று ராமன் எப்படி உயிர் வாழ்வான்?
महार्हवस्त्रसंवीतो भूत्वा चिरसुखोषितः।।2.12.100।।
काषायपरिधानस्तु कथं भूमौनिवत्स्यति।
மிகவும் விலை உயர்ந்த உடைகளுக்கும், அரசனுக்குரிய வசதிகளுக்கும்
பழக்கப்பட்ட ராமன் எப்படிக் காஷாயம் தரித்துக்கொண்டு தரையில் படுத்து உறங்குவான்?
कस्यैतद्धारुणं वाक्यमेवंविधमचिन्तितम्।।2.12.101।।
रामस्यारण्यगमनं भरतस्याभिषेचनम्।
ராமனுக்கு வனவாசமும், பரதனுக்குப் பட்டாபிஷேகமும் வேண்டும்
என்று கேட்கும் படியான பயங்கரமான எண்ணத்தை யார் கொடுத்தார்கள்?
धिगस्तु योषितो नाम शठा स्स्वार्थपरास्सदा।
न ब्रवीमि स्त्रिय स्सर्वा भरतस्यैव मातरम्।।2.12.102।।
‘ஒரு பெண் என்பவள் ரகசியமாகப் பிறரைத் துன்புறுத்துபவள்;
சுய நலம் மிக்கவள்’ என்று அனைத்துப் பெண்களையும் பற்றிக்கூற மாட்டேன். ஆனால், பரதனுடைய
அன்னை அப்படிப்பட்டவள் தான்.
अनर्थभावेऽर्थपरे नृशंसे ममानुतापाय निविष्टभावे।
किमप्रियं पश्यसि मन्निमित्तं हितानुकारिण्यथवाऽपि रामे।।2.12.103।।
தீயவளே! பேராசை பிடித்தவளே! குரூரமானவளே! என்னைத் துன்புறுத்துவதற்காக,
பிறருக்கு நல்லதையே செய்யும் ராமன் என்ன தீங்கு செய்தான் என்று அவனை இப்படிப் படுத்துகிறாய்?
परित्यजेयुः पितरो हि पुत्रान्भार्याः पतींश्चापि कृतानुरागाः।
कृत्स्नं हि सर्वं कुपितं जगत्स्याद्दृष्ट्वैव रामं व्यसने निमग्नम्।।2.12.104।।
ராமன் இப்படிப்பட்ட நிலைக்கு வந்ததைக் கண்டு இந்த உலகம் முழுவதும்
கோபப்படும். தந்தைமார் மகன்களைத் தியாகம் செய்து விடுவார்கள். கணவன் மீது அன்பு கொண்ட
மனைவிகள் அவர்களை விட்டு விடுவார்கள்.
अहं पुनर्देवकुमाररूपमलङ्कृतं तं सुतमाव्रजन्तम्।
नन्दामि पश्यन्नपि दर्शनेन भवामि दृष्ट्वैव च पुनर्युवेव।।2.12.105।।
பேரழகுடன் நன்கு அலங்கரித்துக்கொண்டு, தேவகுமாரனைப் போன்ற ராமன் என்னை நோக்கி வரும் போது, அந்தக் காட்சியிலேயே
நான் அகமகிழ்ந்து போகிறேன். அவனைப் பார்த்தாலே எனக்கு இளமை திரும்புகிறது.
विनाऽपि सूर्येण भवेत्प्रवृत्तिरवर्षता वज्रधरेण वाऽपि।
रामं तु गच्छन्तमित स्समीक्ष्य जीवेन्न कश्चित्त्विति चेतना मे।।2.12.106।।
சூரியன் இல்லாமலும், வஜ்ராயுதத்தைத் தாங்கும் இந்திரன் மழை
தராமலும் போனாலும் கூட இந்த உலகில் செயல்கள் நடக்கும் . ஆனால், ராமன் காட்டுக்குச்
செல்வதைப் பார்த்த பின்னர் யாரும் உயிர் வாழமாட்டார்கள். இது எனது திடமான நம்பிக்கை.
विनाशकामामहिताममित्रामावासयं मृत्युमिवात्मनस्त्वाम्।
चिरं बताङ्केन धृतासि सर्पी महाविषा तेन हतोऽस्मि मोहात्।।2.12.107।।
மரணமே உருவான, விஷம் நிறைந்த பெண்பாம்பான உன்னை என் மடியில்
வைத்து ஆதரவு கொடுத்தேன். இந்த மோகமே என் அழிவுக்குக் காரணமானது. நீ எனக்கு எதிரி.
எனக்குத் தீங்கு நினைப்பவள். என்னை அழித்தவள்.
मया च रामेण च लक्ष्मणेन प्रशास्तु हीनो भरतस्त्वया सह।
पुरं च राष्ट्रं च निहत्य बान्धवान् ममाहितानां च भवाभिहर्षिणी।।2.12.108।।
ராமனையும் இலக்குவனையும் என்னிடமிருந்து பிரித்து விட்டு,
என் உறவினர்களைக் கொன்று விட்டு, என் எதிரிகள் இன்பம் அடையும் படி பரதன் உன்னுடன் சேர்ந்து
இந்த நாட்டை ஆளட்டும்!
नृशंसवृत्ते व्यसनप्रहारिणि प्रसह्य वाक्यं यदिहाद्य भाषसे।
न नाम ते केन मुखात्पतन्त्यधो विशीर्यमाणा दशना स्सहस्रधा।।2.12.109।।
குரூர மனம் கொண்டவளே! துன்பத்தில் இருப்பவனை மேலும் தாக்குகிறாய்.
இப்படிப்பட்ட கொடிய சொற்களைச் சொல்லும் உன் பற்கள் ஆயிரம் துண்டுகளாக ஏன் சிதறிப்போகவில்லை?
न किञ्चिदाहाहितमप्रियं वचो न वेत्ति रामः परुषाणि भाषितुम्।
कथन्नु रामे ह्यभिरामवादिनि ब्रवीषि दोषान्गुणनित्यसम्मते।।2.12.110।।
ஒரு கடுமையான சொல்லோ, ஏற்றுக்கொள்ள முடியாத சொல்லோ, சொல்லக்கூடத்
தெரியாதவன் ராமன். அனைவரிடமும் இன்பமாகப் பேசுபவன். அவனது நற்குணங்களாலேயே எல்லாராலும்
புகழப்படுபவன். அவனிடம் நீ என்ன குற்றம் கண்டாய்?
प्रताम्य वा प्रज्वल वा प्रणश्य वा सहस्रशो वा स्फुटिता महीं
व्रज।
न ते करिष्यामि वच स्सुदारुणं ममाहितं केकयराजपांसनि।।2.12.111।।
கேகய வம்சத்துக்கு இழுக்கானவளே! நீ எவ்வளவு தான் வருந்தினாலும், உன்னையே எரித்துக்கொண்டாலும்,
முழுவதுமாக அழித்துக்கொண்டாலும், ஆயிரம் துண்டுகளாகி இந்தப் பூமி மேல் விழுந்தாலும்,
உன்னுடைய பயங்கரமான, தீமை விளைவிக்கக்கூடிய சொற்களின் படி நடக்க மாட்டேன்.
क्षुरोपमां नित्यमसत्प्रियंवदां प्रदुष्टभावां स्वकुलोपघातिनीम्।
न जीवितुं त्वां विषहेऽमनोरमां दिधक्षमाणां हृदयं सबन्धनम्।।2.12,112।।
நீ கத்தியைப் போன்றவள். எப்போதும், இனிமையான பொய்களைப்பேசுகிறவள்.
நீ தீங்கு விளவிப்பவள். உன்னுடைய குலத்தையே அழிப்பவள். மனத்திற்கு வேதனை அளிப்பவள்.
என் உள்ளத்தை எரித்து விட வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறாய். நீ உயிரோடு
இருப்பதைப் பார்த்து சகிக்க என்னால் முடியவில்லை.
न जीवितं मेऽस्ति पुनःकुत स्सुखं विनाऽऽत्मजेनाऽत्मवतः कुतो
रतिः।
ममाहितं देवि न कर्तुमर्हसि स्पृशामि पादावपि ते प्रसीद मे।।2.12.113।।
என் மகன் ராமன் இன்றி, எனக்கு வாழ்வு இல்லை. இன்பத்தைப் பற்றிப்
பேசவே வேண்டாம். என்னைப் போல் சுயமரியாதை உள்ளவனுக்கு, மகனைத்தவிர வேறு இன்பம் ஏது?
தேவி! இப்படிப்பட்ட தீங்கு இழைப்பது தகாது. உன் காலைத் தொட்டு வணங்குகிறேன். என் மீது
கருணை காட்டு.
स भूमिपालो विलपन्ननाथवत्स्त्रिया गृहीतो हृदयेऽतिमात्रया।
पपात देव्याश्चरणौ प्रसारितावुभावसम्स्पृश्य यथाऽतुरस्तथा।।2.12.114।।
தசரத மன்னர், ஒரு பெண்ணின் கைப்பிடியில் தன் மனத்தைக் கொடுத்து
விட்டு, ஒரு அனாதையைப் போல் தன் மரியாதையை விட்டு, அவள் கால்களைத் தொடப் போகும் போது,
அவள் அவற்றை இழுத்துக் கொண்டதால், தொட முடியாமல், வியாதியுற்றவரைப்போல் தரையில் வீழ்ந்தார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे द्वादशस्सर्गः।।
இத்துடன்,
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் பன்னிரண்டாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
27.07.25