ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 15
(தசரதர், ருஷ்யஸ்ருங்க முனிவரின் வழிகாட்டுதலின்
படி ‘புத்ரகாமேஷ்டி’ என்னும் யாகத்தைச் செய்கிறார். தேவர்கள் படைப்புக் கடவுள்
பிரம்மாவிடம் சென்று, மனிதன், குரங்குகள், கரடிகள் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாத
ராவணனைக் கொல்ல ஒரு வழி சொல்லுமாறு கேட்கிறார்கள். அப்போது விஷ்ணு அங்கே
தோன்றுகிறார். தேவர்கள் அவரைத் தசரதனின் மகனாக அவதாரம் எடுக்கும்படி
வேண்டிக்கொள்கிறார்கள். அவரும் ஒப்புக்கொள்கிறார்.)
मेथावी तु ततो ध्यात्वा स किञ्चिदिदमुत्तरम्।
लब्धसंज्ञस्ततस्तं तु वेदज्ञो नृपमब्रवीत्।।1.15.1।।
மகா புத்திமானும்
வேதங்களை அறிந்தவருமான ருஷ்யஸ்ருங்கர், சிறிது நேரம் தியானித்துப் பிறகு நினைவு
படுத்திக்கொண்டு, அரசரிடம் இவ்வாறு கூறினார்.
इष्टिं तेऽहं करिष्यामि पुत्रीयां पुत्रकारणात्।
अथर्वशिरसि प्रोक्तैर्मन्त्रैस्सिद्धां विधानत:।।1.15.2।।
நான், வேதத்தின், ‘அதர்வ சிரஸ்’ என்னும் பகுதியில் சொல்லப்பட்டுள்ள, விருப்பங்களை
நிறைவேற்றிக் கொள்வதற்காக உள்ள மந்திரங்களைக்கொண்டு, தங்களுக்குப் புத்திரர்களை
அளிக்கும் ‘புத்ரகாமேஷ்டி’ என்னும் யாகத்தைச் செய்யப்போகிறேன்.
तत: प्राक्रमदिष्टिं तां पुत्रीयां पुत्रकारणात्।
जुहाव चाग्नौ तेजस्वी मन्त्रदृष्टेन कर्मणा।।1.15.3।।
ஒளி பொருந்திய
ருஷ்யஸ்ருங்கர், தசரதர் புதல்வர்களை அடையும் பொருட்டு, அவருக்காக, இஷ்டி யாகத்தைத்
தொடங்கி, முறைப்படி அதற்குண்டான மந்திரங்களுடன், பாரம்பரிய முறைப்படி, அக்கினிக்கு
ஹவிஸை அர்ப்பணித்தார்.
ततो
देवास्सगन्धर्वास्सिद्धाश्च परमर्षय: ।
भागप्रतिग्रहार्थं वै समवेता यथाविधि।।1.15.4।।
பிறகு, தேவர்களும்,
கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், யாகத்தில் தங்கள் பங்கைப்
பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அங்கே கூடினர்.
तास्समेत्य यथान्यायं
तस्मिन्सदसि देवता:।
अब्रुवन् लोककर्तारं ब्रह्माणं वचनं महत्।।1.15.5।।
அங்கே கூடிய அந்தத்
தேவதைகள், அப்போது, படைப்புக் கடவுளான பிரம்மதேவரிடம் கூறினார்கள்:
भगवन्त्वत्प्रसादेन
रावणो नाम राक्षस:।
सर्वान्नो बाधते वीर्याच्छासितुं तं न शक्नुम:।।1.15.6।।
“பகவானே! தங்கள்
அருளைப்பெற்ற, ராவணன் என்னும் வலிமை மிகுந்த ராக்ஷஸன், எங்களையெல்லாம் மிகவும்
துன்புறுத்துகிறான். அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்க எங்களால் முடியவில்லை.”
त्वया तस्मै वरो दत्त: प्रीतेन भगवन्पुरा।
मानयन्तश्च तं नित्यं सर्वं तस्य क्षमामहे।।1.15.7।।
முற்காலத்தில், அவனுடைய
தவத்தால் மகிழ்ந்து, அவனுக்குத் தாங்கள் வரம் அளித்தீர்கள். தங்களுக்கு மதிப்புக்
கொடுத்து, அவன் இழைக்கும் துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்.
उद्वेजयति
लोकान्स्तीनुच्छ्रितान्द्वेष्टि दुर्मति:।
शक्रं त्रिदशराजानं प्रधर्षयितुमिच्छति।।1.15.8।।
தீய எண்ணங்கொண்ட
ராவணன், மூன்று உலகையும் துன்புறுத்துகிறான். இந்த உலகைக் காப்பாற்றுபவர்களை
வெறுக்கிறான். தேவர்களின் தலைவனான இந்திரனையும் தாக்க விரும்புகிறான்.
ऋषीन्यक्षान्सगन्धर्वानसुरान्ब्राह्मणांस्तथा।
अतिक्रामति दुर्धर्षो वरदानेन मोहित:।।1.15.9।।
தாங்கள் அளித்த
வரத்தால் அகந்தை கொண்ட அவன், யாராலும் தாக்க முடியாதவனாகி விட்டான். ரிஷிகள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள்,
அந்தணர்கள் ஆகிய அனைவருடைய விஷயத்திலும் அத்து மீறுகிறான்.
नैनं सूर्य: प्रतपति
पार्श्वे वाति न मारुत:।
चलोर्मिमाली तं दृष्ट्वा समुद्रोऽपि न कम्पते।।1.15.10।।
.
சூரியன் அவனைத்
தகிப்பதில்லை. காற்று அவனருகில் பலமாக வீசுவதில்லை. இடையறாமல் அலைவீசும் கடல் கூட,
அவன் முன்னிலையில் அமைதியாகி விடுகிறது.
तन्महन्नो भयं
तस्माद्राक्षसाद्घोरदर्शनात्।
वधार्थं तस्य भगवन्नुपायं कर्तुमर्हसि।।1.15.11।।
அந்த பயங்கரமான ராக்ஷஸனைக்
கண்டால் எங்களுக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. பகவானே! அவனை எப்படியாவது வதம்
செய்ய, ஏதாவது உபாயம் தாங்கள் செய்யவேண்டும். “
एवमुक्तस्सुरैस्सर्वैश्चिन्तयित्वा
ततोऽब्रवीत्।
हन्तायं विदितस्तस्य वधोपायो दुरात्मन:।।1.15.12।।
தேவர்கள் அனைவரும் இவ்வாறு வேண்டிக்கொண்டவுடன், சிறிது யோசித்து
விட்டு, பிரம்மா கூறினார்: “ இந்தக் கொடியவனை வதம் செய்வதற்கான உபாயம் என்ன என்பது
எனக்குத்தெரிந்து விட்டது.
तेन गन्धर्वयक्षाणां
देवदानवरक्षसाम्।
अवध्योऽस्मीति वागुक्ता तथेत्युक्तं च तन्मया।।1.15.13।।
அவன் என்னிடம்,
“கந்தர்வர்களாலும், யக்ஷர்களாலும், தேவர்களாலும், அசுரர்களாலும், ராக்ஷஸர்களாலும்,
நான் கொல்லப்படக் கூடாது” என்ற வரம் கேட்டான். நானும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று
கூறினேன்.
नाकीर्तयदवज्ञानात्तद्रक्षो
मानुषान् प्रति।
तस्मात्स मानुषाद्वध्यो मृत्युर्नान्योऽस्य विद्यते।।1.15.14।।
அந்த ராக்ஷஸன்,
மனிதர்களை ஒரு பொருட்டாக மதிக்காததால், அவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.
ஆகவே, மனிதர்களால் மட்டுமே அவனுக்கு மரணம் உண்டாகும்.
एतच्छ्रुत्वा प्रियं
वाक्यं ब्रह्मणा समुदाहृतम्।
सर्वे महर्षयो देवाः प्रहृष्टास्तेऽभवंस्तदा।।1.15.15।।
பிரம்ம தேவன் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவதைகளும், மகரிஷிகளும் மிகவும்
மகிழ்ச்சி அடைந்தார்கள்
.
एतस्मिन्नन्तरे
विष्णुरुपयातो महाद्युति:।
शङ्खचक्रगदापाणि: पीतवासा जगत्पति:।।1.15.16।।
அந்தத் தருணத்தில்,
உலகத்தின் தலைவனான விஷ்ணு, மிகவும் பிரகாசமான உருவத்துடன், மஞ்சள் பட்டு
உடுத்திக்கொண்டு, சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைக் கையில் ஏந்திக்கொண்டு, அங்கே
வந்தார்.
ब्रह्मणा च समागम्य
तत्र तस्थौ समाहित:।
तमब्रुवन्सुरास्सर्वे
समभिष्टूय सन्नता:।।1.15.17।।
பிரம்மாவைச் சந்தித்த
பிறகு, விஷ்ணு சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, இவ்வாறு பேசலானார்.
அங்கிருந்த தேவதைகள் எல்லாம், அவரை நமஸ்கரித்து ஸ்தோத்திரம் செய்தனர்.
त्वान्नियोक्ष्यामहे
विष्णो लोकानां हितकाम्यया।
राज्ञो दशरथस्य त्वमयोध्याधिपते: प्रभो:।।1.15.18।
धर्मज्ञस्य वदान्यस्य महर्षिसमतेजस: ।
तस्य भार्यासु तिसृषु ह्रीश्रीकीर्त्युपमासु च।।1.15.19।।
विष्णो पुत्रत्वमागच्छ कृत्वाऽऽत्मानं चतुर्विधम्। 1
“ஓ விஷ்ணுவே! இந்த உலக
நன்மைக்காக உங்களிடம் பிரார்த்தித்துக் கொள்கிறோம். அயோத்தியின் அரசரான தசரதர்,
தர்மாத்மாவாகவும், நற்குணங்கள் பொருந்தியவராகவும், தாராள மனம் படைத்தவராகவும்,
ரிஷிகளுக்கு நிகரான காந்தியுடையவராகவும் இருக்கிறார். ஹ்ரி, ஸ்ரீ, கீர்த்தி (அடக்கம்,
செல்வச்செழிப்பு, புகழ்) ஆகியவற்றின் வடிவங்களாக உள்ள அவரது மூன்று மனைவிகளுக்கும்
புதல்வர்களாகத், தாங்களே நான்கு வடிவங்களில் அவதாரம் எடுக்க வேண்டும்.
तत्र त्वं मानुषो भूत्वा प्रवृद्धं लोककण्टकम्।
अवध्यं दैवतैर्विष्णो समरे जहि रावणम्।।1.15.20।।
ஓ விஷ்ணுவே! நாளுக்கு
நாள் அதிகரிக்கும் ஆணவத்துடன், தேவர்களாலும் வெல்ல முடியாதவனாகி, மூன்று
உலகங்களுக்கும் துன்பம் கொடுத்துக்கொண்டிருக்கும் ராவணனைத் தாங்கள் மனித உருவம்
எடுத்துப் போரில் வதம் செய்ய வேண்டும்.
स हि देवांश्च
गन्धर्वान्सिद्धांश्च मुनिसत्तमान्।
राक्षसो रावणो मूर्खो वीर्योत्सेकेन बाधते।।1.15.21।।
மந்த புத்தியுள்ள அந்த
ராவணன் என்னும் ராக்ஷஸன், தனது வலிமையால் விளைந்த ஆணவத்தால்,
தேவர்களையும்,கந்தர்வர்களையும்,
சித்தர்களையும், முனிசிரேஷ்டர்களையும் மிகவும் துன்புறுத்துகிறான்.
ऋषयश्च ततस्तेन गन्धर्वाप्सरसस्तथा।
क्रीडन्तो नन्दनवने क्रूरेण किल हिंसिता:।।1.15.22।।
அந்தக் கொடூரமான
ராக்ஷஸன் தன் ஆணவத்தினாலும், வலிமையாலும்,
ரிஷிகளையும், நந்தவனத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் கந்தர்வர்களையும்,
அப்சரஸ்களையும் துன்புறுத்துகிறானாம்.
वधार्थं वयमायातास्तस्य
वै मुनिभिस्सह।
सिद्धगन्धर्वयक्षाश्च ततस्त्वां शरणं गता:।।1.15.23।।
சித்தர்கள்,
கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள் ஆகிய நாங்கள் எல்லோரும் அவனை வதம்
செய்வதற்கான வழியை நாடி வந்துள்ளோம். தங்களைத் தான் சரணடைந்துள்ளோம்.
त्वं गति: परमा देव
सर्वेषां न: परन्तप:।
वधाय देवशत्रूणां नृणां लोके मन: कुरु।।1.15.24।।
எதிரிகளைத் துன்புறுத்துபவரே!
விஷ்ணுவே! எல்லாவற்றையும் விடச் சிறந்தவரான தாங்கள் தான் எங்களுக்கு அடைக்கலம்.
மனிதர்களுடைய உலகத்தில், மனிதனாக அவதாரம் எடுத்துத் தேவர்களின் எதிரியாகிய
ராக்ஷஸனை வதம் செய்து அருள வேண்டும்.
एवमुक्तस्तु देवेशो
विष्णुस्त्रिदशपुङ्गव:।
पितामहपुरोगांस्तान्सर्वलोकनमस्कृत:।।1.15.25।।
अब्रवीत्त्रिदशान्सर्वान्समेतान्धर्मसंहितान् ।।1.15.26।।
தேவர்களில் சிறந்தவரும்,
அனைத்து உலகங்களாலும் வணங்கப்படுபவரும் ஆன விஷ்ணுவிடம், பிரம்மாவின் தலைமையில்,
அங்கே கூடியிருந்த தர்மத்தின் வழி நடக்கும் அனைத்து தேவர்களும், இவ்வாறு கூறினர்.
भयं त्यजत भद्रं वो
हितार्थं युधि रावणम्।
सपुत्रपौत्रं सामात्यं समित्रज्ञातिबान्धवम्।।1.15.27।।
हत्वा क्रूरं दुरात्मानं देवर्षीणां भयावहम्।
दशवर्षसहस्राणि दशवर्षशतानि च।
वत्स्यामि मानुषे लोके पालयन्पृथिवीमिमाम्।।1.15.28।।
“பயப்படாதீர்கள்! உங்களுக்கு ஆசீர்வாதங்கள்!
உங்கள் அனைவருடைய நன்மைக்காகக், குரூரமான அந்த ராவணனையும், அவனுடைய புதல்வர்கள்,
பேரன்கள், அமைச்சர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன், போரில் வதம்
செய்து,பின்னர் இந்த உலகில் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டு வசிப்பேன்.”
एवं दत्वा वरं देवो
देवानां विष्णुरात्मवान्।
मानुषे चिन्तयामास जन्मभूमिमथात्मन:।।1.15.29।।
பரமாத்வான விஷ்ணு,
தேவர்களுக்கு இவ்விதம் வரம் கொடுத்த பின்னர், எங்கே மனிதனாகப் பிறப்பது என்று
யோசிக்க ஆரம்பித்தார்.
तत: पद्मपलाशाक्ष:
कृत्वाऽऽत्मानं चतुर्विधम्।
पितरं रोचयामास तथा दशरथन्नृपम्।।1.15.30।।
பின்னர், தாமரைக்
கண்ணனான விஷ்ணு, நான்கு விதமாக உருக்கொண்டு, தசரத மன்னரைத் தனது தந்தையாக
மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுத்தார்.
तदा देवर्षि
गन्धर्वास्सरुद्रास्साप्सरोगणा:।
स्तुतिभिर्दिव्यरूपाभिस्तुष्टुवुर्मधुसूदनम्।।1.15.31।।
அப்போது,
கந்தர்வர்களுடனும், அப்சரஸ்களின் கூட்டங்களுடனும், ருத்ரர்களுடனும், சேர்ந்து
தேவர்கள் அனைவரும், திவ்யமான ஸ்தோத்திரங்களால், மதுசூதனனாகிய விஷ்ணுவைத்
துதித்தார்கள்.
तमुद्धतं
रावणमुग्रतेजसं
प्रवृद्धदर्पं त्रिदशेश्वरद्विषम्।
विरावणं साधुतपस्विकण्टकं
तपस्विनामुद्धर तं भयावहम्।।1.15.32।।
“ஆகவே, அதிகமான
வலிமையும், அதீதமான ஆணவமும் கொண்டு, இந்த மூவுலகுக்கும் துன்பம் கொடுப்பவனும்,
ரிஷிகளுக்கு அச்சத்தை உண்டாக்குபவனும், தேவேந்திரனுடைய பயங்கரமான எதிரியுமான
ராவணனை வேருடன் அழித்து விடுங்கள்.
तमेव हत्वा सबलं
सबान्धवं
विरावणं रावणमग्य्रपौरुषम्।
स्वर्लोकमागच्छ गतज्वरश्चिरं
सुरेन्द्रगुप्तं गतदोषकल्मषम्।।1.15.33।।
இந்த
உலகங்களுக்கெல்லாம் துன்பம் தரும் ராவணனை, அவனுடைய படைகளுடனும், உறவினர்களுடனும்,
கொன்று, இங்குள்ள துன்பங்களையும், குறைகளையும், பாவங்களையும் போக்கிய பின், மீண்டும்
தேவலோகத்துக்குத் திரும்பி வாருங்கள்.”
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे पञ्चदशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பதினைந்தாவது ஸர்க்கம், நிறைவு
பெறுகிறது.
***
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/