ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 14
(ஸரயு நதிக்கரையில்
தசரதர் வைதிக முறைப்படி அஸ்வமேத யாகம் செய்கிறார்.)
अथ संवत्सरे पूर्णे तस्मिन्प्राप्ते तुरङ्गमे।
सरय्वाश्चोत्तरे तीरे राज्ञो यज्ञोऽभ्यवर्तत।।1.14.1।।
யாகத்துக்கான குதிரை (திக்விஜயத்துக்குச்
சென்று) ஒரு வருடம் கழித்துத் திரும்பி வந்தவுடன், தசரதர், ஸரயு நதியின் வடகரையில்
அமைந்துள்ள யாகசாலையில் யாகத்தைத் தொடங்கினார்.
ऋश्यशृङ्गं पुरस्कृत्य कर्म चक्रुर्द्विजर्षभा:।
अश्वमेधे महायज्ञे राज्ञोऽस्य सुमहात्मन:।।1.14.2।।
மகாத்மாவான தசரத
மன்னரால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த அஸ்வமேத யாகத்தில், ருஷ்யஸ்ருங்கர் தலைமையில்
அந்தண ஸ்ரேஷ்டர்கள் யாகத்துக்கான சடங்குகளைச் செய்தார்கள்.
कर्म कुर्वन्ति
विधिवद्याजका वेदपारगा:।
यथाविधि यथान्यायं परिक्रामन्ति शास्त्रत:।।1.14.3।।
வேதங்களை முழுமையாகக்
கற்ற தலைமைப் புரோகிதர்கள் சாஸ்திரங்களில் வகுத்துள்ள விதி முறைகளின் படியும்,
நியாயப்படியும், யாகத்தை நடத்தி வைத்தார்கள்.
प्रवर्ग्यं शास्त्रत:
कृत्वा तथैवोपसदं द्विजा:
चक्रुश्च विधिवत्सर्वमधिकं कर्म शास्त्रत:।।1.14.4।।
அந்தணர்கள், ‘ப்ரவர்க்யம்’,
‘உபஸதம்’ போன்ற கர்மாக்களையும் இன்னும் பிற சடங்குகளையும் சாஸ்திரத்தில்
சொல்லியபடி நிறைவேற்றினர்.
अभिपूज्य ततो हृष्टास्सर्वे चक्रुर्यथाविधि।
प्रातस्सवनपूर्वाणि कर्माणि मुनिपुङ्गवा:।।1.14.5।।
பிறகு, முனிபுங்கவர்கள்
மகிழ்ச்சியுடன் தேவதைகளைப் பூஜித்து, ‘ப்ராதஸ்ஸவனம்’ முதலிய கர்மாக்களை விதிப்படி
செய்தார்கள்.
ऐन्द्रश्च विधिवद्दत्तो
राजा चाभिषुतोऽनघ:।
माध्यन्दिनं च सवनं प्रावर्तत यथाक्रमम्।।1.14.6।।
இந்திரனுக்குக்
கொடுக்கப்பட வேண்டிய ஹவிஸ் விதிப்படி கொடுக்கப்பட்டது. சோமம் எனப்படும் தாவரத்தின்
சாறும் பிழிந்து எடுக்கப்பட்டு ( நெய்யுடன் சேர்த்து) யாகத்தீயில்
அர்ப்பணிக்கப்பட்டது. நண்பகலில் செய்ய வேண்டிய சடங்குகள் முறைப்படி செய்யப்பட்டன.
तृतीयसवनं चैव
राज्ञोऽस्य सुमहात्मन:।
चक्रुस्तेशास्त्रतो दृष्ट्वा तथा ब्राह्मणपुङ्गवा:।।1.14.7।।
மிகச்சிறந்த அந்த அந்தணர்கள்,
அரசரின் மூன்றாவது ஸவனத்தையும், முறைப்படி செய்தார்கள்.
न चाहुतमभूत्तत्र
स्खलितं वापि किञ्चन ।
दृश्यते ब्रह्मवत्सर्वं क्षेमयुक्तं हि चक्रिरे।।1.14.8।।
அந்த யாகத்தில்,
ஆஹுதிகள் கொடுப்பதில் எதுவும் விட்டுப் போகவில்லை. எந்தத் தவறும் நடக்கவில்லை.
அனைத்து மந்திரங்களுடன், நல்ல முறையில் செய்தார்கள்.
न तेष्वहस्सु श्रान्तो
वा क्षुधितो वापि दृश्यते।
नाविद्वान्ब्राह्मणस्तत्र नाशतानुचरस्तथा।।1.14.9।।
அந்த நாட்களில்,
களைப்பானவர்களோ, பசியுடன் இருந்தவர்களோ, யாரும் காணப்படவில்லை. கல்வி
கற்காதவராகவோ, நூறு பேருக்குக் குறைவான சீடர்களை உடையவர்களாகவோ, எந்த அந்தணரும்
அங்கு இல்லை.
ब्राह्मणा भुञ्जते नित्यं नाथवन्तश्च भुञ्जते।
तापसा भुञ्जते चापि श्रमणा भुञ्जतेतथा।।1.14.10।।
அங்கே, அந்தணர்களும்,
யஜமானர்களின் கீழ் வேலை செய்பவரும், தவசிகளும், முனிவர்களும், வேண்டிய அளவு உணவு
உட்கொண்டார்கள்.
वृद्धाश्च व्याधिताश्चैव स्त्रियो बालास्तथैव च ।
अनिशं भुञ्जमानानां न तृप्तिरुपलभ्यते।।1.14.11।।
வயது
முதிர்ந்தவர்களும், உடல் நலமில்லாதவர்களும், பெண்களும், குழந்தைகளும், நன்றாக உணவு
உண்டார்கள். அவர்களுக்கு உணவு உண்பதில் சலிப்பே உண்டாகவில்லை. (உணவு வகைகள்
அவ்வளவு ருசியாக இருந்தன.)
दीयतां दीयतामन्नं वासांसि विविधानि च।
इति सञ्चोदितास्तत्र तथा चक्रुरनेकश:।।1.14.12।।
“எல்லோருக்கும் உணவு
கொடுங்கள்; உடைகளைக் கொடுங்கள்” என்று அதிகாரிகள் தொடர்ந்து சொல்ல, அவ்வாறே,
எண்ணற்றவர்களுக்கு உணவும், உடையும் கொடுக்கப்பட்டன.
अन्नकूटाश्च बहवो
दृश्यन्ते पर्वतोपमा:।
दिवसे दिवसे तत्र सिद्धस्य विधिवत्तदा।।1.14.13।।
தினந்தோறும், விதி
முறைப்படி சமைக்கப்பட்ட உணவு வகைகள், அங்கு
மலை போல் குவிந்திருந்தன.
नानादेशादनुप्राप्ता:
पुरुषास्स्त्रीगणास्तथा।
अन्नपानैस्सुविहितास्तस्मिन्यज्ञे महात्मन:।।1.14.14।।
அந்த மகாத்மாவான அரசர்
நடத்தும் யாகத்தில், பலவேறு தேசத்திலிருந்து வந்த ஆடவருக்கும், பெண்டிருக்கும்,
நல்ல உணவு வழங்கப்பட்டது.
अन्नं हि विधिवत्साधु प्रशंसन्ति द्विजर्षभा:।
अहो तृप्ता: स्म भद्रं ते इति शुश्राव राघव:।।1.14.15।।
அந்தணர்கள், விதி
முறைப்படி சமைக்கப்பட்ட சுவையான உணவு வகைகளை உண்டுவிட்டு, “மிகவும் நன்றாக
இருந்தது’ எங்களுக்கு மிகவும் திருப்தி உண்டாயிற்று. தங்களுக்கு மங்களம்
உண்டாகட்டும்” என்று கூறிய சொற்களை, ரகு வம்சத்தில் பிறந்தவரான தசரத மன்னர்
கேட்டார்.
स्वलङ्कृताश्च पुरुषा
ब्राह्मणान्पर्यवेषयन्।
उपासते च तानन्ये सुमृष्टमणिकुण्डला:।।1.14.16।।
நல்ல முறையில்
அலங்காரம் செய்து கொண்டிருந்த பரிசாரகர்கள் அந்தணர்களுக்குப் பரிமாறினார்கள். பல
விதமான பளபளக்கும் அணிமணிகளை அணிந்தவர்கள், அவர்களுக்கு உதவி செய்தார்கள்.
कर्मान्तरे तदा विप्रा
हेतुवादान्बहूनपि।
प्राहुश्च वाग्मिनो धीरा: परस्परजिगीषया।।1.14.17।।
அப்போது,
சொல்வன்மையுடைய அந்தணர்கள் சிலர், சடங்குகளுக்கு இடையே சிறிது இடைவெளி கிடைத்த
போது, சுவையான விவாதங்களிலும் ஈடுபட்டார்கள்.
दिवसे दिवसे तत्र
संस्तरे कुशला द्विजा:।
सर्वकर्माणि चक्रुस्ते यथाशास्त्रं प्रचोदिता:।।1.14.18।।
ஒவ்வொரு நாளும்,
யாகச்சடங்குகள் செய்வதில் கை தேர்ந்த அந்தணர்கள், (வசிஷ்டரின்) வழிகாட்டுதலின்
படி, அனைத்துக் கர்மாக்களையும், விதி முறைப்படி செய்தார்கள்.
नाषडङ्गविदत्रासीन्नाव्रतो
नाबहुश्रुत:।
सदस्यास्तस्य वै राज्ञो नावादकुशला द्विजा:।।1.14.19।।
அங்கே, ஆறு
வேதாங்கங்களையும் கற்காதவரோ, விரதங்களைச் சரியாகப் பின்பற்றாதவரோ, சாஸ்திரங்களைச் சரிவர அறியாதவரோ, நன்றாக
விவாதிக்கும் திறமை இல்லாதவரோ, ஒருவர் கூட இல்லை.
प्राप्ते यूपोच्छ्रये
तस्मिन्षड्बैल्वा: खादिरास्तथा।
तावन्तो बिल्वसहिता: पर्णिनश्च तथापरे।।1.14.20।।
श्लेष्मातकमयस्त्वेको देवदारुमयस्तथा।
द्वावेव विहितौ तत्र बाहुव्यस्तपरिग्रहौ।।1.14.21।।
அந்த யாக சாலையில், வில்வம்,
கருங்காலி, பலாசம், நறுவிலி, ஆகிய மரங்களால் செய்யப்பட்ட ஆறு ஆறு ( ஒவ்வொன்றிலும்
ஆறு) யூபஸ்தம்பங்களையும் (விலங்குகளைக் கட்டும் தூண்கள்), தேவதாரு மரத்தால்
செய்யப்பட்ட இரண்டு தூண்களையும் , ஒரு தூணுக்கும் இன்னொரு தூணுக்கும் இடையே இரண்டு
கைகளை நன்றாக விரிக்கும் அளவு இடைவெளி விட்டு நிர்மாணித்தார்கள்.
कारितास्सर्व एवैते
शास्त्रज्ञैर्यज्ञकोविदै:।
शोभार्थं तस्य यज्ञस्य काञ्चनालङ्कृताऽभवन्।।1.14.22।।
சாஸ்திரங்களை நன்கு
அறிந்தவர்களாலும், யாகம் செய்விப்பதில் கை தேர்ந்தவர்களாலும், எழுப்பப்பட்ட இந்தத்
தூண்களைப் பொன்னால் அலங்கரித்து, யாகத்தின் அழகை மேலும், அதிகரித்தார்கள்.
एकविंशतियूपास्ते
एकविंशत्यरत्नय:।
वासोभिरेकविंशद्भिरेकैकं समलङ्कृता:।।1.14.23।।
இருபத்தோரு முழ உயரம்
கொண்ட அந்த இருபத்தோறு தூண்களுக்கும் துணிகளைச் சுற்றி அலங்கரித்தார்கள்.
विन्यस्ता विधिवत्सर्वे
शिल्पिभिस्सुकृता दृढा:।
अष्टाश्रयस्सर्व एव श्लक्ष्णरूपसमन्विता:।।1.14.24।।
முறைப்படி
ஸ்தாபிக்கப்பட்ட அந்தத் தூண்கள், சிற்பிகளால் அழகாகச் செதுக்கப்பட்டவையாகவும்,
உறுதியானவையாகவும், எட்டு முகங்கள் கொண்டவையாகவும், மழமழப்பாகத்
தேய்க்கப்பட்டவையாகவும் இருந்தன.
आच्छादितास्ते वासोभि:
पुष्पैर्गन्धैश्च भूषिता:।
सप्तर्षयो दीप्तिमन्तो विराजन्ते यथा दिवि।।1.14.25।।
துணிகளால்
சுற்றப்பட்டு, மலர்களாலும், சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தூண்கள்
வானத்தில் மின்னும் சப்தரிஷிகளைப் (நக்ஷத்திரங்கள்)போல ஒளிர்ந்தன.
इष्टकाश्च यथान्यायं
कारिताश्च प्रमाणत:।
चितोऽग्निर्ब्राह्मणैस्तत्र कुशलैश्शुल्बकर्मणि ।।1.14.26।।
அந்த யாக குண்டமானது, விதிக்கப்பட்டுள்ள
அளவில் தயாரிக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு, நூலால் அளந்து கச்சிதமாகக் கட்டும்
திறமை படைத்த அந்தணர்களால், அழகாக அமைக்கப்பட்டது.
सचित्यो राजसिंहस्य
सञ्चित: कुशलैर्द्विजै:।
गरुडो रुक्मपक्षो वै त्रिगुणोऽष्टादशात्मक:।।1.14.27।।
அரசர்களுள் சிறந்த
தசரதருடைய யாகத்துக்காக திறமையான
அந்தணர்களால், பொன்னிறச் சிறகுகளைக் கொண்ட கருடனைப்போன்ற உருவத்தில் பதினெட்டு யாக
குண்டங்கள் அமைக்கப்பட்டன.
नियुक्तास्तत्र
पशवस्तत्तदुद्दिश्य दैवतम्।
उरगा: पक्षिणश्चैव यथाशास्त्रं प्रचोदिता:।।1.14.28।।
சாஸ்திரப்படி, அங்கே,
அந்த அந்த தேவதைகளுக்கு அர்ப்பணிப்பதற்காக, பாம்புகள், பறவைகள் போன்றவை தயாராக
வைக்கப்பட்டிருந்தன.
शामित्रे तु हयस्तत्र
तथा जलचराश्च ये।
ऋत्विग्भिस्सर्वमेवैतन्नियुक्तं शास्त्रतस्तदा।।1.14.29।।
பலி கொடுக்கும் நேரம்
நெருங்கிய போது, தலைமைப் புரோகிதர்கள், சாஸ்திரப்படி, குதிரையையும், நீர்
விலங்குகளையும், யாகத்தூண்களில் கட்டினார்கள்.
पशूनां त्रिशतं तत्र यूपेषु नियतं तदा।
अश्वरत्नोत्तमं तस्य राज्ञो दशरथस्य च ।।1.14.30।।
அப்போது, முந்நூறு
விலங்குகளும், தசரதருடைய ரத்தினம் போன்ற அருமையான குதிரையும், பலித்தூண்களில்
கட்டப்பட்டன.
कौसल्या तं हयं तत्र
परिचर्य समन्तत:।
कृपाणैर्विशशासैनं त्रिभि: परमया मुदा ।।1.14.31।।
கௌசல்யா, மிகவும்
சிரத்தையுடன் அந்தக் குதிரையைப் பூஜித்து, மூன்று வாட்களால் அதைக் கொன்றாள்.
पतत्रिणा तदा सार्धं
सुस्थितेन च चेतसा।
अवसद्रजनीमेकां कौशल्या धर्मकाम्यया।।1.14.32।।
பிறகு, கௌசல்யா,
தர்மத்தை அனுசரிக்கும் பொருட்டு, திடமான
மனத்துடன் ஒரு இரவு முழுவதும் அந்தக் குதிரையின் அருகில் கழித்தாள்.
होताऽध्वर्युस्तथोद्गाता हस्तेन समयोजयन्।
महिष्या परिवृत्त्या च वावातां च तथापराम्।।1.14.33।।
ஹோதா, அத்வர்யு,
உத்கதா, பட்ட மகிஷியான கௌசல்யா, பரிவ்ருத்தி, வவாதா, ஆகியோரையும், அந்தக் குதிரையைக்
கையால் தொடச் செய்தார்கள். ( அவர்கள்
எல்லாரும், தசரதனின் மனைவிகள் –– வேறு வேறு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்)
पतत्रिणस्तस्य वपा
मुद्धृत्य नियतेन्द्रिय:।
ऋत्विक्परमसम्पन्न: श्रपयामास शास्त्रत:।।1.14.34।।
புலனடக்கம் உடைய,
அறிவில் சிறந்த, முக்கிய புரோகிதர், அந்தக் குதிரையின் மஜ்ஜையை எடுத்து, விதிப்படி
சமைத்தார்.
धूमगन्धं वपायास्तु
जिघ्रति स्म नराधिप:।
यथाकालं यथान्यायं निर्णुदन्पापमात्मन:।।1.14.35।।
அரசர்கள் அனைவரும், பொருத்தமான
நேரத்தில், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள படி, தங்கள் பாவங்களை
நீக்கிக்கொள்வதற்காக, அந்த மஜ்ஜையை சமைக்கும் போது வெளிவந்த புகையை சுவாசித்தார்கள்.
हयस्य यानि चाङ्गानि तानि सर्वाणि ब्राह्मणा:।
अग्नौ प्रास्यन्ति विधिवत्समन्त्राष्षोडशर्त्विज:।।1.14.36।।
குதிரையின் அங்கங்கள்
அனைத்தையும், அவைகளுக்குண்டான மந்திரங்களுடன், வேதங்களை அறிந்த பதினாறு அந்தணர்கள்,
விதிப்படி அக்கினிக்கு அர்ப்பணித்தார்கள்.
प्लक्षशाखासु यज्ञानामन्येषां क्रियते हवि:।
अश्वमेधस्य यज्ञस्य वैतसो भाग इष्यते।।1.14.37।।
பிற யாகங்களில் ப்லக்ஷ
(இறளி மரம்) மரத்தின் கிளைகள் மூலம் ஹவிஸ் கொடுக்கப்படும். அஸ்வமேத யாகத்தில்
பிரம்புக் கொடியினால் ஹவிஸ் அர்ப்பணிக்கப்படும்.
त्र्यहोऽश्वमेधस्सङ्ख्यात: कल्पसूत्रेण ब्राह्मणै:। 37
चतुष्टोममहस्तस्य प्रथमं परिकल्पितम्।।1.14.38।।
கல்ப சூத்திரத்தில்
கூறியுள்ளபடி அஸ்வமேத யாகம் மூன்று நாட்கள் நடத்தப்பட வேண்டும். முதல் நாளான அன்று, சதுஷ்டோமத்துக்கான ஏற்பாடு
செய்யப்பட்டது.
उक्थ्यं द्वितीयं
संख्यातमतिरात्रं तथोत्तरम्।
कारितास्तत्र बहवो विहिताश्शास्त्रदर्शनात्।।1.14.39।।
இரண்டாம் நாள்,
‘உக்த்யா’ என்னும் சடங்கும், மூன்றாம் நாள் ‘அதிராத்ரம்’ என்னும் சடங்கும்
செய்யப்பட்டன. இவையன்றி, சாஸ்திரப்படி செய்யப்பட வேண்டிய வேறு பல யாகங்களும்
செய்யப்பட்டன.
ज्योतिष्टोमायुषी चैवमतिरात्रौ विनिर्मितौ।
अभिजिद्विश्वजिच्चैवमप्तोर्यामो महाक्रतु:।।1.14.40।।
அதிராத்திரியில்
ஜ்யோதிஷ்டோமா, மற்றும், ஆயுர் யாகங்கள் நடத்தப்பட்டன. அபிஜித், விஸ்வஜித்,
அப்தோர்யாமா, ஆகிய சடங்குகளும், இந்த மஹாயாகத்தின் அங்கங்களாக நிறைவேற்றப் பட்டன.
प्राचीं होत्रे ददौ
राजा दिशं स्वकुलवर्धन:।
अध्वर्यवे प्रतीचीं तु ब्रह्मणे दक्षिणां दिशम्।।1.14.41।।
उद्गात्रे च तथोदीचीं दक्षिणैषा विनिर्मिता।
हयमेधे महायज्ञे स्वयंभूविहिते पुरा।।1.14.42।।
தசரதர், தன் குலத்தை விருத்தி செய்வதற்காக, ஹோதாவுக்கு கிழக்கு திக்கையும்,
அத்வர்யுவுக்கு மேற்கு திக்கையும், பிரம்மாவுக்கு தெற்கு திக்கையும்,
உத்காதாவுக்கு வடக்கு திக்கையும் அளித்தார். வெகு காலத்துக்கு முன்பே, மகத்தான
அஸ்வமேத யாகத்தில் இவ்வாறு தக்ஷிணைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரம்மாவால்
சொல்லப்பட்டிருந்தது.
क्रतुं समाप्य तु तदा
न्यायत: पुरुषर्षभ: ।
ऋत्विग्भ्यो हि ददौ राजा तां धरां कुलवर्धन:।।1.14.43।।
தன் குலத்தை மேன்மைப்
படுத்தும் தசரத மன்னர், யாகத்தை நல்ல படி முடித்த பின்னர், அவர் ஆட்சி செய்து வந்த
பூமியை, முறைப்படி புரோகிதர்களுக்குத் தானமாக அளித்தார்.
.
ऋत्विजस्त्वब्रुवन्सर्वे
राजानं गतकल्मषम्।
भवानेव महीं कृत्स्नामेको रक्षितुमर्हति।।1.14.44।।
ஆனால் அந்தப் புரோகிதர்கள், பாவம் அனைத்தும் நீங்கிப் புனிதப் படுத்தப் பட்ட
தசரதரை நோக்கி, “தாங்கள் தான் இந்த பூமி முழுவதையும் காப்பாற்றும் தகுதி
படைத்தவர்.”
न भूम्या कार्यमस्माकं
न हि शक्तास्स्म पालने।
रतास्स्वाध्यायकरणे वयं नित्यं हि भूमिप।।1.14.45।।
निष्क्रयं किञ्चिदेवेह प्रयच्छतु भवानिति। 4
“பூமியை ஆள்பவரே!
இந்தப் பூமியால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இதை ஆளும் சக்தியும் எங்களுக்கு
இல்லை. நாங்கள் தினமும் வேதங்களைப் படிப்பதிலேயே ஈடுபட்டிருப்பவர்கள். இதற்குப்
பதிலாக, வேறு எதையாவது கொடுங்கள். “
मणिरत्नं सुवर्णं वा
गावो यद्वा समुद्यतम्।
तत्प्रयच्छ नरश्रेष्ठ धरण्या न प्रयोजनम्।।1.14.46।।
“மனிதருள் சிறந்தவரே!
எங்களுக்கு, ரத்தினங்களோ, பொன்னோ, பசுக்களோ, எது இருக்கிறதோ, அதைக் கொடுங்கள்.
எங்களுக்கு இந்தப் பூமியால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.”
एवमुक्तो
नरपतिर्ब्राह्मणैर्वेदपारगै:।।1.14.47।।
गवां शतसहस्राणि दश तेभ्यो ददौ नृप:। 4
शतकोटीस्सुवर्णस्य रजतस्य चतुर्गुणम् ।।1.14.48।।
மக்களின் தலைவனான
தசரதன், வேதங்களின் கரை கண்ட அந்த அந்தணர்கள் சொற்படி, அவர்களுக்கு பத்து லட்சம்
பசுக்களையும், நூறு கோடி தங்க நாணயங்களையும், அதைப் போல நான்கு மடங்கு வெள்ளி
நாணயங்களையும் தானமாக அளித்தார்.
ऋत्विजश्च ततस्सर्वे
प्रददुस्सहिता वसु।
ऋश्यशृङ्गाय मुनये वसिष्ठाय च धीमते।।1.14.49।।
பின்னர் அந்த
அந்தணர்கள், தங்களுக்குக் கிடைத்த தானம் அனைத்தையும், ருஷ்யஸ்ருங்க முனிவருக்கும்,
விவேகம் நிறைந்த வசிஷ்டருக்கும் அர்ப்பணித்து விட்டனர்.
ततस्ते न्यायत: कृत्वा
प्रविभागं द्विजोत्तमा:।
सुप्रीतमनसस्सर्वे प्रत्यूचुर्मुदिता भृशम्।।1.14.50।।
அதனால் மிகவும்
மகிழ்ந்த அந்த இருவரும், அத்தனை செல்வத்தையும் நியாயப்படி சமமாகப் பங்கிட்டு, அவரவர்களுக்கு
அளித்து விட்டு, ‘எங்களுக்கு மிகவும் திருப்தி உண்டாயிற்று ‘என்று கூறினார்கள்:
तत: प्रसर्पकैभ्यस्तु
हिरण्यं सुसमाहित:।
जाम्बूनदं कोटिसंख्यं ब्राह्मणेभ्यो ददौ तदा।।1.14.51।।
பின்னர், யாகத்தைக் காண
வந்திருந்த அந்தணர்களுக்கு தசரதர் ஒரு கோடி தங்க நாணயங்களை அளித்தார்.
दरिद्राय द्विजायाथ
हस्ताभरणमुत्तमम्।
कस्मैचिद्याचमानाय ददौ राघवनन्दन:।।1.14.52।।
அதன் பிறகு, தசரதர், தன்னிடம்
யாசித்த ஒரு ஏழை அந்தணருக்குத் தனது மிகச்சிறந்த கை வளையைக் கொடுத்தார்.
तत: प्रीतेषु
नृपतिर्द्विजेषु द्विजवत्सल:।
प्रणाममकरोत्तेषां हर्षपर्याकुलेक्षण:।।1.14.53।।
அந்தணர்கள் மேல் அன்பு
கொண்ட தசரதர், தான் கொடுத்த தானங்களால், அவர்களுக்குத் திருப்தி உண்டாயிற்று என்று
அறிந்து, கண்களில் மகிழ்ச்சி பொங்க அவர்களை வணங்கினார்.
तस्याशिषोऽथ
विधिवद्ब्राह्मणैस्समुदीरिता:।
उदारस्य नृवीरस्य धरण्यां प्रणतस्य च ।।1.14.54।।
பின்னர், தரையில்
விழுந்து தங்களை நமஸ்கரித்த, தாராள மனம் படைத்த
அந்தத் தசரத மன்னருக்கு, அந்தணர்கள் முறைப்படி ஆசீர்வாதங்களை
வழங்கினார்கள்.
तत: प्रीतमना राजा प्राप्य यज्ञमनुत्तमम्।
पापापहं स्वर्नयनं दुष्करं पार्थिवर्षभै:।।1.14.55।।
பாவங்களைப்
போக்கக்கூடியதும், ஸ்வர்க்கத்துக்கு இட்டுச் செல்லக்கூடியதுமான இத்தகைய யாகங்களை எல்லா
அரசர்களாலும் செய்து விட முடியாது. அத்தகைய மஹாயாகத்தைச் செய்து முடித்த தசரதர்
மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
ततोऽब्रवीदृश्यशृङ्गं
राजा दशरथस्तदा।
कुलस्य वर्धनं त्वं तु कर्तुमर्हसि सुव्रत।।1.14.56।।
பின்னர்
ருஷ்யஸ்ருங்கரைப் பார்த்து தசரதர் கூறினார்: ”கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவரே!
தயவு செய்து என் குலம் வளர்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.“
तथेति च स राजानमुवाच
द्विजसत्तम:।
भविष्यन्ति सुता
राजंश्चत्वारस्ते कुलोद्वहा:।।1.14.57।।
அந்தணருள் சிறந்தவரான
ருஷ்யஸ்ருங்கர், “ அரசே! அப்படியே ஆகட்டும்! தங்கள் குலத்தைச் செழிக்கச் செய்யும்
நான்கு புதல்வர்கள் தங்களுக்குப் பிறப்பார்கள்.” என்றார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे चतुर्दशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பதினான்காவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
***
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment