ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 77
(தசரதர் தனது புதல்வர்களுடனும், அவர்களுடைய
மனைவிகளுடனும், அயோத்தியில் பிரவேசிக்கிறார். பரதனும், சத்துருக்கினனும், தாய் மாமாவுடன் புறப்படுகிறார்கள். ராமனின்
குணங்களின் சிறப்பு போற்றப்படுகிறது.)
गते रामे प्रशान्तात्मा रामो दाशरथिर्धनु:।
वरुणायाप्रमेयाय ददौ हस्ते ससायकम्।।1.77.1।।
பரசுராமர் அங்கிருந்து
அகன்றதும், தாசரதியாகிய ராமன், அந்த வில்லையும் அம்பையும், அளவாற்ற வலிமை நிறைந்த
வருணனிடத்தில் கொடுத்தான்.
अभिवाद्य ततो रामो
वसिष्ठप्रमुखानृषीन्।
पितरं विह्वलं दृष्ट्वा प्रोवाच रघुनन्दन:।।1.77.2।।
பின்னர் ராமன் வசிஷ்டர்
முதலாய ரிஷிகளை வணங்கி விட்டு, இன்னும் பதற்றத்தில் இருந்த தனது தந்தையிடம்
இவ்வாறு கூறினான்:
जामदग्न्यो गतो राम:
प्रयातु चतुरङ्गिणी।
अयोध्याभिमुखी सेना त्वया नाथेन पालिता।।1.77.3।।
ஜமதக்கினியின்
புதல்வரான பரசுராமர் இங்கிருந்து சென்று விட்டார். நீங்கள் தலைமை வகிக்கும், நால்வகைச் சேனைகளையும் அயோத்தி நோக்கிப்
போகச்சொல்லுங்கள்.
सन्दिशस्व महाराज सेनां
त्वच्छासने स्थिताम्।
शासनं काङ्क्षते सेना चातकालिर्जलं यथा।।1.77.4।।
பேரரசே! தங்கள் கீழ்
உள்ள சேனை, நீரை எதிர் நோக்கியிருக்கும் சாதகப் பறவைகளைப் போலத் தங்கள் ஆணையை
எதிர் நோக்கியிருக்கிறது. அவர்களுக்குக்கட்டளையிடுங்கள்.”
रामस्य वचनं श्रुत्वा
राजा दशरथ स्सुतम्।
बाहुभ्यां सम्परिष्वज्य मूर्ध्नि चाघ्राय राघवम्।।1.77.5।।
गतो राम इति श्रुत्वा हृष्ट: प्रमुदितो नृप:।
पुनर्जातं तदा मेने पुत्रमात्मानमेव च।।1.77.6।।
தசரத மன்னர் ராமனை இரு
கைகளாலும், ஆலிங்கனம் செய்து கொண்டு, அவனை உச்சி மோந்து, பரசுராமர் அங்கிருந்து
சென்று விட்டார் என்பதைக் கேட்டு, மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, தாங்கள் புனர்ஜென்மம்
எடுத்தது போல் உணர்ந்தார்.
चोदयामास तां सेनां
जगामाशु तत: पुरीम्।
पताकाध्वजिनीं रम्यां तूर्योद्घुष्टनिनादिताम्।।1.77.7।।
सिक्तराज पथां रम्यां प्रकीर्णकुसुमोत्कराम् ।
राजप्रवेशसुमुखै: पौरैर्मङ्गलवादिभि:।।1.77.8।।
सम्पूर्णां प्राविशद्राजा जनौघैस्समलङ्कृताम्।
பின்னர் தசரதர் தனது படையை விரைந்து அயோத்தி நோக்கிச் செல்லுமாறு ஆணையிட்டார்.
அவர் அயோத்தி சென்றடைந்த போது நகரம் முழுவதும் கொடிகளாலும், பதாகைகளாலும், நன்றாக
அலங்கரிக்கப்பட்டிருந்தது. எக்காளங்கள் முழங்கின. அரசவீதிகளை எல்லாம் தண்ணீர்
தெளித்து மலர்தூவி அலங்கரித்திருந்தார்கள். எங்கு பார்த்தாலும், மக்கள்
கூட்டங்கூட்டமாக நின்று, மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டும், இன்னிசையை
எழுப்பிக்கொண்டும், அரசர் வருவதை எதிர் நோக்கியிருந்தனர்.
पौरै: प्रत्युद्गतो
दूरं द्विजैश्च पुरवासिभि:।
पुत्रैरनुगत श्श्रीमान् श्रीमद्भिश्च महायशा: ।।1.77.9।।
प्रविवेश गृहं राजा हिमवत्सदृशं पुनः।
செல்வச்சீமானான தசரதர்,
தனது அருமையான புதல்வர்களுடன் அயோத்தியில் பிரவேசித்த போது, அந்த நகர மக்களும்,
அந்தணர்களும், வெகு தூரம் அவர்களை வரவேற்பதற்காக வந்திருந்தார்கள். தசரதர்,
இமயமலையைப் போலத் தனது மாளிகைக்குள் பிரவேசித்தார்.
ननन्द सजनो राजा गृहे
कामै स्सुपूजित:।।1.77.10।।
कौसल्या च सुमित्रा च कैकेयी च सुमध्यमा।
वधूप्रतिग्रहे युक्ता याश्चान्या राजयोषित:।।1.77.11।।
அரசரும் அவருடன்
வந்தவர்களும் மிகவும் மரியாதையுடனும், அன்புடனும் வரவேற்கப்பட்டார்கள். கௌசல்யை,
சுமித்திரை, மெல்லிய இடையுடைய கைகேயி மற்றும், பிற அரச மகளிர் புதுமணப் பெண்களை
வரவேற்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
ततस्सीतां
महाभागामूर्मिलां च यशस्विनीम्।
कुशध्वजसुते चोभे जगृहुर्नृपपत्नय:।।1.77.12।।
தசரத மன்னரின் அரசிகள்
மகாபாக்கியசாலியான சீதையையும், புகழ் பெற்ற ஊர்மிளையையும், குசத்வஜமன்னரின்
புதல்விகள் இருவரையும் அன்புடன் வரவேற்றார்கள்.
मङ्गलालम्भनैश्चापि
शोभिता: क्षौमवासस:।
देवतायतनान्याशु सर्वास्ता: प्रत्यपूजयन्।।1.77.13।।
கைகளில் மங்களகரமான
பொருட்களை ஏந்திக்கொண்டு, பட்டாடைகளில் ஒளிவீசிக்கொண்டிருந்த அந்த மணப்பெண்கள்,
ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபட்டார்கள்.
अभिवाद्याभिवाद्यांश्च
सर्वा राजसुतास्तदा।
स्वं स्वं गृहमथासाद्य कुबेरभवनोपमम्।।1.77.14।।
गोभिर्धनैश्च धान्यैश्च तर्पयित्वा द्विजोत्तमान्।
रेमिरे मुदिता: सर्वा भर्तृभि: सहिता रह:।।1.77.15।।
பின்னர் அந்த
அரசகுமாரிகள், வணங்க வேண்டியவர்களை வணங்கி விட்டுக் குபேர பவனத்தை ஒத்த தங்கள்
தங்கள் இல்லங்களுக்குச் சென்று, பசுக்களையும், செல்வத்தையும், தானியங்களையும்,
சிறந்த அந்தணர்களுக்குக் கொடுத்து அவர்களைத் திருப்திப் படுத்தி விட்டுத் தங்கள்
தனியறையில் தங்கள் கணவன்மார்களுடன் மகிழ்ந்திருந்தார்கள்.
कुमाराश्च महात्मानो
वीर्येणाप्रतिमा भुवि ।
कृतदारा: कृतास्त्राश्च सधना: ससुहृज्जना:।।1.77.16।।
शुश्रूषमाणा: पितरं वर्तयन्ति नरर्षभा:।
மகாத்மாக்களும்,
இணையற்ற வீரம் நிறைந்தவர்களும், ஆயுதங்களை உபயோகிப்பதில் நிபுணர்களும் ஆகிய அரச
குமாரர்கள் நால்வரும், நண்பர்களுடன் கூடியிருந்தும், தங்கள் தகப்பனாரின்
ஆணைகளை நிறைவேற்றிக்கொண்டும், அவருக்குச்
சேவை செய்தும், இன்பமாக வாழ்ந்து வந்தனர்.
कस्यचित्त्वथ कालस्य
राजा दशरथ: सुतम्।1.77.17।।
भरतं कैकयीपुत्र मब्रवीद्रघुनन्दन:।
சிறிது காலம் சென்ற
பிறகு, ரகு நந்தனராகிய தசரதர், கைகேயியின் புதல்வனாகிய பரதனிடம் இவ்வாறு கூறினார்:
अयं केकयराजस्य पुत्रो
वसति पुत्रक।।1.77.18।।
त्वां नेतुमागतो वीर युधाजिन्मातुलस्तव।
“குழந்தாய்! உன்னை
அழைத்துப் போவதற்காக, கேகய மன்னரின் புதல்வராகிய வீரம் நிறைந்த உனது தாய் மாமன்
வந்து இங்கு தங்கியிருக்கிறார்.
प्रार्थितस्तेन धर्मज्ञ
मिधिलायामहं तथा।।1.77.19।।
ऋषिमध्ये तु तस्य त्वं प्रीतिं कर्तुमिहार्हसि।
தர்மங்களை அறிந்தவனே!
மிதிலை நகரத்தில், ரிஷிகளுக்கு மத்தியில் இந்த வேண்டுகோளை அவர் என்னிடம் வைத்தார்.
அவர் விருப்பத்தை நிறைவேற்றி அவரை நீ மகிழ்விக்க வேண்டும்.
श्रुत्वा
दशरथस्यैतद्भरत: कैकयीसुत:।।1.77.20।।
अभिवाद्य गुरुं रामं परिष्वज्य च लक्ष्मणम्।
गमनायाभिचक्राम शत्रुघ्नसहितस्तदा।।1.77.21।।
தசரதரின் வார்த்தைகளைக்
கேட்ட கைகேயியின் புதல்வனான பரதன், தன் தந்தையாரையும், ராமனையும் வணங்கி,
லக்ஷ்மணனை ஆலிங்கனம் செய்து கொண்டு, சத்துருக்கினனுடன் பயணத்துக்குத் தயாரானான்.
आपृच्छ्य पितरं शूरो
रामं चाक्लिष्टकारिणम्।
मातृश्चापि नरश्रेष्ठ श्शत्रुघ्नसहितो ययौ।।1.77.22।।
வீரம் நிறைந்த பரதன்,
தன் தந்தையாரிடமும், களைப்பேயில்லாமல் செயலாற்றக்கூடிய தன் தமையனான ராமனிடமும்,
தாயார்களிடமும் விடைபெற்றபின், சத்துருக்கினனுடன் புறப்பட்டான்.
गते तु भरते रामो
लक्ष्मणश्च महाबल:।
पितरं देवसंङ्काशं पूजयामासतुस्तदा।।1.77.23।।
பரதன் அங்கிருந்து
சென்ற பிறகு, மகாபலசாலியான ராமன், லக்ஷ்மணனுடன் சேர்ந்து, தெய்வத்துக்கிணையான
தங்கள் தந்தையாருக்குச் சேவை செய்தார்கள்.
पितुराज्ञां पुरस्कृत्य
पौरकार्याणि सर्वश:।
चकार रामो धर्मात्मा प्रियाणि च हितानि च।।1.77.24।।
தர்மாத்மாவான ராமன்,
தனது தந்தையாரின் ஆணையைச் சிரமேற்கொண்டு, நகர மக்களுக்கு மகிழ்ச்சியையும்,
நன்மையையும் தரக்கூடிய காரியங்களை நிறைவேற்றினான்.
मातृभ्यो मातृकार्याणि
कृत्वा परमयन्त्रित:।
गुरूणां गुरुकार्याणि काले कालेऽन्ववैक्षत।।1.77.25।।
மாறாத ஒழுங்குடன்,
ராமன் அவ்வப்போது தனது தாய்மார்களையும், பெரியவர்களையும் சென்று பார்த்து,
அவர்களுக்கு எல்லாம் சரிவரக் கிடைக்கின்றதா என்று பார்த்துக்கொண்டான்.
एवं दशरथ: प्रीतो
ब्राह्मणा नैगमास्तथा।
रामस्य शीलवृत्तेन सर्वे विषयवासिन:।।1.77.26।।
ராமனின் இப்படிப்பட்ட
நற்குணங்களாலும், நன்னடத்தையாலும், தசரதரும், அந்தணர்களும், நகரத்தோரும், நாட்டு
மக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
तेषामतियशा लोके राम
स्सत्यपराक्रमः।
स्वयम्भूरिव भूतानां बभूव गुणवत्तर:।।1.77.27।।
பெரும்புகழ்
பெற்றவனும், சத்யபராக்கிரமனும் ஆன ராமன் தன்னுடைய உன்னதமான குணங்களால், அந்த
நாட்டு மக்களை மட்டுமன்றி, அனைத்து உயிர்களையும், காப்பாற்றும்
பிரம்மதேவன் போல ஆனான்.
रामस्तु सीतया सार्धं
विजहार बहूनृतून् ।
मनस्स्वी तद्गतस्तस्याः नित्यं हृदि समर्पित:।।1.77.28।।
மென்மையான மனமுடைய
ராமன், சீதையின் மீது முழுமையான அன்பு செலுத்தி, அவளுடன் இன்பமாக வாழ்ந்தான்.
இவ்வாறு, பல பருவங்கள் கடந்தன.
प्रिया तु सीता रामस्य
दारा: पितृकृता इति।
गुणाद्रूपगुणाच्चापि प्रीतिर्भूयोऽभ्यवर्धत।।1.77.29।।
தனது தந்தையாரால்
தேர்ந்தெடுக்கப்பட்டு ராமனுக்கு மனைவியான சீதை, மேலும் தனது நற்குணங்களாலும்,
ஒப்பற்ற அழகாலும், அன்பு காட்டும் விதத்தாலும், ராமனுக்கு மிகவும் பிரியமானவள்
ஆனாள்.
तस्याश्च भर्ता
द्विगुणं हृदये परिवर्तते।
अन्तर्जातमपि व्यक्तमाख्याति हृदयं हृदा।।1.77.30।।
சீதைக்கோ, தன் கணவன்
இன்னும் இரண்டு மடங்கு அன்புக்குரியவன் ஆனான். அவர்கள் இருவரும் தங்கள் மனதில்
எழும் எண்ணங்களை, உள்ளத்தாலேயே பரிமாறிக்கொண்டனர்.
तस्य भूयो विशेषेण
मैथिली जनकात्मजा।
देवताभि स्समा रूपे सीता श्रीरिव रूपिणी।।1.77.31।।
செல்வத்தில்
இலக்குமியைப் போலவும், அழகில் தேவதையைப் போலவும் இருந்த ஜனகரின் புதல்வியான சீதை
ராமனுக்கு மிகவும் பிரியமானவளாக இருந்தாள்.
तया स राजर्षिसुतोऽभिरामया
समेयिवानुत्तमराजकन्यया।
अतीव राम श्शुशुभेऽभिरामया।
विभु श्श्रिया विष्णुरिवामरेश्वर:।।1.77.32।।
ராஜரிஷி தசரதரின்
புதல்வனாகிய ராமன், மிக அழகான சீதையுடன் இணைந்து, இலக்குமியுடன் இணைந்து
பிரகாசிக்கும் திருமாலைப் போல விளங்கினான்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये चतुर्विंशत्सहस्रिकायां संहितायां
बालकाण्डे सप्तसप्ततितमस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் எழுபத்தேழாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
*ஸ்ரீமத் ராமாயணத்தின் பாலகாண்டம் இத்துடன் நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
05.02.2024
No comments:
Post a Comment