ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 75
(தசரதருடைய பேச்சைக் கேட்காமல், பரசுராமர்
தன்னிடம் உள்ள விஷ்ணுவின் வில்லுக்கு நாண் ஏற்றுமாறு ராமனிடம் கூறுகிறார்.)
राम दाशरथे राम वीर्यं ते श्रूयतेऽद्भुतम्।
धनुषो भेदनं चैव निखिलेन मया श्रुतम्।।1.75.1।।
(பரசுராமர் கூறினார்:) “ராமா!
தசரதரின் புதல்வனே! உன்னுடைய அற்புதமான வீரத்தைப் பற்றியும், நீ சிவனுடைய வில்லை
உடைத்ததைப் பற்றியும் கேள்விப்பட்டேன்.
तदद्भुतमचिन्त्यं च
भेदनं धनुषस्त्वया।
तच्छ्रुत्वाऽहमनुप्राप्तो धनुर्गृह्यापरं शुभम्।।1.75.2।।
நீ சிவனுடைய வில்லை
ஒடித்தது, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதச் செயல். அதைக் கேள்விப்பட்டு,
இன்னொரு மங்களகரமான வில்லுடன் இங்கு வந்திருக்கிறேன்.
तदिदं घोरसङ्काशं
जामदग्न्यं महद्धनु:।
पूरयस्व शरेणैव स्वबलं दर्शयस्व च।।1.75.3।।
அச்சத்தை உண்டாக்கக்
கூடிய இந்த வில் ஜமதக்னி முனிவரிடம் இருந்து பெறப்பட்டது. இதை நாணேற்றி அதில்
அம்பைஸ்செலுத்தி, உன் வீரத்தைக் காட்டு!
तदहं ते बलं दृष्ट्वा
धनुषोऽस्य प्रपूरणे।
द्वन्द्वयुद्धं प्रदास्यामि वीर्यश्लाघ्यस्य राघव।।1.75.4।।
இந்த வில்லை நாணேற்றி,
அம்பு விட்டு, நீ உன் வீரத்தைக் காண்பிப்பதைக் கண்ட பிறகு, உன்னுடன் துவந்த
யுத்தம் ( இரண்டு பேருக்கிடையில் நடப்பது) செய்யப்போகிறேன்.
तस्य तद्वचनं श्रुत्वा
राजा दशरथस्तदा।
विषण्णवदनो दीन: प्राञ्जलिर्वाक्यमब्रवीत्।।1.75.5।।
பரசுராமருடைய இந்த
வார்த்தைகளைக் கேட்டவுடன், தசரத மன்னரின் முகம் வாடிவிட்டது. மிகுந்த வருத்தத்துடன்
கைகளைக் கூப்பிக்கொண்டு அவர் (பரசுராமரிடம்) கூறினார்:
क्षत्ररोषात्प्रशान्तस्त्वं
ब्राह्मणश्च महायशा:।
बालानां मम पुत्राणामभयं दातुमर्हसि।।1.75.6।।
“பெரும்புகழ் பெற்ற
அந்தணராகிய தாங்கள் இப்போது க்ஷத்திரியர்கள் மேலுள்ள கோபம் தணிந்து
இருக்கிறீர்கள். தயவு செய்து இளைஞர்களாகிய என் புதல்வர்களுக்கு அபயம் அளியுங்கள்.
भार्गवाणां कुले जात:
स्वाध्यायव्रतशालिनाम्।
सहास्राक्षे प्रतिज्ञाय शस्त्रं निक्षिप्तवानसि।।1.75.7।।
ப்ருகு முனிவரின்
குலத்தில் பிறந்து, வேத சாஸ்திரத்தில் விற்பன்னராகி, விரதத்தைத் தீவிரமாகக் கடைபிடிக்கக்
கூடிய தாங்கள், இந்திரனின் மேல் ஆணையிட்டு, ஆயுதங்களைத் துறந்துள்ளீர்கள்.
स त्वं धर्मपरो भूत्वा
काश्यपाय वसुन्धराम् ।
दत्त्वा वनमुपागम्य महेन्द्रकृतकेतन:।।1.75.8।।
தர்மத்தின் வழி நின்று,
இந்தப் பூமியை காஸ்யபருக்கு அளித்து விட்டு, வனம் சென்று, மஹேந்திர மலையின் மேல்
தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டுள்ளீர்கள்.
मम सर्वविनाशाय
सम्प्राप्तस्त्वं महामुने।
न चैकस्मिन् हते रामे सर्वे जीवामहे वयम् ।।1.75.9।।
மகாமுனிவரே! என்னுடைய
குலத்தை முழுவதுமாக அழிப்பதற்காகத் தாங்கள் வந்துள்ளீர்கள். ஏனென்றால், ராமன்
ஒருவன் கொல்லப்பட்டால், நாங்கள் யாரும் உயிருடன் இருக்க மாட்டோம். “
ब्रुवत्येवं दशरथे
जामदग्न्य: प्रतापवान्।
अनादृत्यैव तद्वाक्यं राममेवाभ्यभाषत।।1.75.10।।
தசரதரின் இந்த
வார்த்தைகளை அலட்சியப்படுத்தி விட்டு, ஜமதக்னியின் வீரமிக்க புதல்வரான பரசுராமர்
ராமனிடம் கூறினார்:
इमे द्वे धनुषी
श्रेष्ठे दिव्ये लोकाभिविश्रुते।
दृढे बलवती मुख्ये सुकृते विश्वकर्मणा।।1.75.11।।
“இந்த இரண்டு
தனுசுகளும், மிகச்சிறந்தவை என்பதையும், தெய்வீகமானவை என்பதையும், உலகம் முழுவதும்
அறியும். இவை உறுதியானவை, வலிமை பொருந்தியவை, மிகவும் முக்கியமானவை. இவையிரண்டும்
விஸ்வகர்மாவால் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப் பட்டவை.
अतिसृष्टं सुरैरेकं त्र्यम्बकाय युयुत्सवे।
त्रिपुरघ्नं नरश्रेष्ठ
भग्नं काकुत्स्थ यत्त्वया।।1.75.12।।
மனிதர்களுள் சிறந்தவனே!
காகுஸ்தனான ராமா! உன்னால் உடைக்கப்பட்ட அந்த வில், மூன்று கண்களையுடைய
சிவபெருமானுக்குத் தேவர்களால் கொடுக்கப் பட்டது. அதை உபயோகித்து அவர்
திரிபுராசுரனை அழித்தார்.
इदं द्वितीयं दुर्धर्षं
विष्णोर्दत्तं सुरोत्तमै:।
तदिदं वैष्णवं राम धनु: परमभास्वरम्।
समानसारं काकुत्स्थ रौद्रेण धनुषा त्विदम्।।1.75.13।।
இந்த இரண்டாவது
வில்லானது தேவோத்தமர்களால், விஷ்ணுவுக்குக் கொடுக்கப்பட்டது. காகுஸ்தனான ராமா!
இந்தப் பிரகாசமான வில் சிவனின் வில்லைப் போலவே வலிமையுடையது.
तदा तु देवतास्सर्वा:
पृच्छन्ति स्म पितामहम्।
शितिकण्ठस्य विष्णोश्च बलाबलनिरीक्षया।।1.75.14।।
பின்னர், தேவர்கள்,
சிவனுக்கு வலிமை அதிகமா அல்லது விஷ்ணுவுக்கு வலிமை அதிகமா என்று அறிந்து கொள்ள
விரும்பிப் பிரம்மதேவரிடம் கேட்டார்கள்:
अभिप्रायं तु विज्ञाय
देवतानां पितामह:।
विरोधं जनयामास तयो स्सत्यवतां वर:।।1.75.15।।
சத்தியவாதிகளில்
முதன்மையானவராகிய பிரம்மதேவர், தேவர்களின் கருத்தை அறிந்து கொண்டு, சிவனுக்கும்,
விஷ்ணுவுக்கும் இடையில் விரோதத்தை உண்டாக்கினார்.
विरोधे च
महद्युद्धमभवद्रोमहर्षणम् ।
शितिकण्ठस्य विष्णोश्च परस्परजिगीषुणो:।।1.75.16।।
சிவனுக்கும்,
விஷ்ணுவுக்கும், ஒருவரை ஒருவர் வெற்றி கொண்டுவிடவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால்,
மயிர்க்கூச்செறியும் படியான மகத்தான யுத்தம் நடந்தது.
तदा तु जृम्भितं शैवं
धनुर्भीमपराक्रमम्।
हुङ्कारेण महादेव स्तम्भितोऽथ त्रिलोचन:।।1.75.17।।
அப்போது, விஷ்ணு
எழுப்பிய ஹூங்காரத்வனியில் மகத்தான வலிமை கொண்ட சிவனுடைய வளைந்திருந்த வில் நீண்டு
விட்டது. முக்கண்ணனான மகாதேவர் செயலிழந்து நின்று விட்டார்.
देवैस्तदा समागम्य
सर्षिसघै स्सचारणै:।
याचितौ प्रशमं तत्र जग्मतुस्तौ सुरोत्तमौ।।1.75.18।।
அப்போது
ரிஷிகணங்களுடனும், சாரணர்களுடனும் அங்கு வந்த தேவர்கள் சிவனையும், விஷ்ணுவையும்
அமைதியடையும் படி வேண்டிக்கொள்ளவே, இருவரும், சண்டையை மறந்து சமாதானமாகினர்.
जृम्भितं
तद्धनुर्द्रृष्ट्वा शैवं विष्णुपराक्रमै:।
अधिकं मेनिरे विष्णुं देवा स्सर्षिगणास्तदा ।।1.75.19।।
சிவனுடைய வில்லைச்
செயலிழக்க வைத்ததால், விஷ்ணுவின் பராக்கிரமம் சிவனுடையதை விட அதிகம் என்று
ரிஷிகணங்களும் தேவர்களும் கருதினர்.
धनू रुद्रस्तु
सङ्कृद्धो विदेहेषु महायशा:।
देवरातस्य राजर्षेर्ददौ हस्ते ससायकम्।।1.75.20।।
அதனால் கோபமுற்ற சிவன்,
விதேஹ நாட்டு அரசனான ராஜரிஷி தேவரதனின் கையில் தனது வில்லையும் அம்பையும் கொடுத்து
விட்டுச் சென்று விட்டார்.
इदं च वैष्णवं राम धनु:
परपुरञ्जयम्।
ऋचीके भार्गवे प्रादाद्विष्णु: स न्यासमुत्तमम्।।1.75.21।।
எதிரிகளின் நாடுகளை
அழிக்கக்கூடிய விஷ்ணுவினுடைய இந்த வில்லானது, ப்ருகு வம்சத்தைச் சேர்ந்த ருசிக
ரிஷியிடம் கொடுக்கப்பட்டது.
ऋचीकस्तु महातेजा: पुत्रस्याप्रतिकर्मण:।
पितुर्मम ददौ दिव्यं जमदग्नेर्महात्मन:।।1.75.22।।
மகாதேஜஸ் உடைய ருசிகர்,
இணையற்ற வீரம் பொருந்திய எனது தந்தையாரான ஜமதக்கினியிடம் இதைக் கொடுத்தார்.
न्यस्तशस्त्रे पितरि मे
तपोबलसमन्विते।
अर्जुनो विदधे मृत्युं प्राकृतां बुद्धिमास्थित:।।1.75.23।।
தவவலிமை மிக்க எனது
தந்தையார், தனது ஆயுதங்களைத் துறந்து விட்டுத் தவத்தில் ஈடுபட்டிருந்த போது
கார்த்தவீர்யார்ஜுனனால், கீழ்த்தரமான முறையில் கொல்லப்பட்டார்.
वधमप्रतिरूपं तु पितु
श्शृत्वा सुदारुणम्।
क्षत्रमुत्सादयन्रोषाज्जातं जातमनेकश:।।1.75.24।।
पृथिवीं चाखिलां प्राप्य काश्यपाय महात्मने ।
यज्ञस्यान्ते तदा राम दक्षिणां पुण्यकर्मणे ।
दत्त्वा महेन्द्रनिलयस्तपोबलसमन्वित:।।1.75.25।।
ராமா! என் தந்தையார்
இவ்வாறு கொடூரமான முறையில் கொல்லப்பட்டதைக் கேட்டுத் தாங்க முடியாத கோபத்தில்
க்ஷத்திரிய வம்சத்தினரை மீண்டும் மீண்டும் அழித்து, இந்த உலகம் முழுவதையும்
வென்றேன். அவ்வாறு வென்ற இந்த பூமி முழுவதையும் கஸ்யபரிடம் ஒப்படைத்து விட்டு,
மகேந்திர மலையில் வசிக்கச் சென்று விட்டேன்.
अद्यतूत्तमवीर्येण
त्वया राम महाबल।
श्रुतवान् धनुषो भेदं ततोऽहं द्रुतमागत:।।1.75.26।।
வலிமை மிக்க ராமா!
இன்று தான் நீ சிவனுடைய வில்லை உனது அபூர்வமான வலிமையால் உடைத்து விட்டாய் என்று
கேள்விப்பட்டேன். உடனே, இங்கே விரைந்து வந்தேன்.
तदिदं वैष्णवं राम
पितृपैतामहं महत्।
क्षत्रधर्मं पुरस्कृत्य गृह्णीष्व धनुरुत्तमम्।।1.75.27।।
ராமா!
க்ஷத்திரியர்களுக்குரிய கடமைக்கு மரியாதை கொடுத்து, என் முன்னோர்களிட்ம இருந்து
நான் பெற்ற இந்த அதிசயமான வில்லைப் பிடி.
योजयस्व धनुश्श्रेष्ठे
शरं परपुरञ्जयम्।
यदि शक्नोषि काकुत्स्थ द्वन्द्वं दास्यामि ते तत:।।1.75.28।।
காகுஸ்தனே! இந்த
உத்தமமான வில் எதிரிகளின் நகரத்தை அழிக்கக் கூடியது. இதை வளைத்து நாணேற்றி, அம்பை
எறிய உன்னால் முடிந்தால், அதன் பின்னர், உன்னுடன் நான் துவந்த யுத்தத்துக்கு
வருகிறேன்.”
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे पञ्चसप्ततितमस्सर्ग: ।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் எழுபத்தைந்தாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment