ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 76
( ராமன் விஷ்ணுவின் வில்லை வளைத்து நாணேற்றி விடுகிறான்.
பரசுராமர் மகேந்திர மலைக்குத் திரும்பிச் செல்கிறார்.)
श्रुत्वा तज्जामदग्न्यस्य वाक्यं दाशरथिस्तदा।
गौरवाद्यंन्त्रितकथ: पितू राममथाब्रवीत्।।1.76.1।।
ஜமதக்னியின்
புதல்வராகிய பரசுராமரின் வார்த்தைகளைக் கேட்ட ராமன், தன் தந்தையார் மேல் இருக்கும்
மரியாதையினால், மேற்கொண்டு பேச்சை வளர்த்தாமல் பரசுராமரிடம் கூறினான்:
श्रुतवानस्मि यत्कर्म
कृतवानसि भार्गव।
अनुरुंध्यामहे ब्रह्मन् पितुरानृण्यमास्थितम्।।1.76.2।।
“ப்ருகு வம்சத்தில்
உதித்தவரே! தங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன். தங்கள்
தந்தையாருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழி தீர்க்கும் விதமாகத் தாங்கள் செய்த
செயலையும் பாராட்டுகிறேன்.
वीर्यहीनमिवाशक्तं
क्षत्रधर्मेण भार्गव।
अवजानासि मे तेज: पश्य मेऽद्य पराक्रमम्।।1.76.3।।
“பார்க்கவரே! நான்
வீரமும் வலிமையும் இல்லாதவன் என்றும், எனது க்ஷத்திரிய வம்சத்தின் கடமைகளை ஆற்ற
இயலாதவன் என்றும் எண்ணிக்கொண்டு என்னை அவமானப் படுத்துகிறீர்கள். இப்போது, எனது
வலிமையையும், வீரத்தையும் பாருங்கள்!”
इत्युक्त्वा राघव: क्रुद्धो भार्गवस्य शरासनम्।
शरं च प्रतिजग्राह हस्ताल्लघुपराक्रम:।।1.76.4।।
என்று கூறி, ராமன்,
சினம் மிகுந்து பரசுராமரிடம் இருந்து வில்லையும் அம்பையும் விரைவாக
எடுத்துக்கொண்டான்.
आरोप्य स धनू राम श्शरं
सज्यं चकार ह।
जामदग्न्यं ततो रामं राम: क्रुद्धोऽब्रवीद्वच:।।1.76.5।।
சினத்துடன், அந்த
வில்லை வளைத்து, நாணேற்றி, அதில் அம்பைப் பொருத்திப் பரசுராமரிடம் ராமன் கேட்டான்:
ब्राह्मणोऽसीति पूज्यो
मे विश्वामित्रकृतेन च।
तस्माच्छक्तो न ते राम मोक्तुं प्राणहरं शरम्।।1.76.6।।
“பரசுராமரே! தாங்கள்
ஒரு அந்தணர். தாங்கள் விஸ்வாமித்திரருக்கு உறவினரும் கூட. ஆகவே,
மரியாதைக்குரியவர். இந்த அம்பைத் தங்கள் உயிரைக் கவர்வதற்காக என்னால் விடுவிக்க
முடியாது.
इमां पादगतिं राम
तपोबलसमार्जिताम्।
लोकानप्रतिमान्वा ते हनिष्यामि यदिच्छसि ।।1.76.7।।
“தங்கள் கால்களை இயங்க
முடியாத படி என்னால் செய்ய முடியும். அல்லது தாங்கள் தங்கள் தவ வலிமையால்
வென்றுள்ள உலகங்களை அழித்து விட முடியும். இவையிரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.
न ह्ययं वैष्णवो दिव्य
श्शर: परपुरञ्जय:।
मोघ: पतति वीर्येण बलदर्पविनाशनः।।1.76.8।।
எதிரிகளின்
நகரங்களையும், அவர்களுடைய அகந்தையையும், வலிமையையும் அழிக்கக்கூடிய, இந்த தெய்வீக
வில்லில் இருந்து புறப்படப் போகும் இந்த அம்பு இலக்கு இன்றி வீணாகலாகாது.
वरायुधधरं रामं
द्रष्टुं सर्षिगणा स्सुरा:।
पितामहं पुरस्कृत्य समेतास्तत्र सङ्घश:।।1.76.9।।
गन्धर्वाप्सरसश्चैव सिद्धचारणकिन्नरा:।
यक्षराक्षसनागाश्च तद्द्रष्टुं महदद्भुतम्।।1.76.10।।
ராமன் அந்த மகத்தான
வலிமையுடைய வில்லைக் கையில் ஏந்தி நிற்கும் அற்புதத்தைக் காண, பிரம்மதேவரும், பிற
தேவர்கள்களும், முனிவர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், சித்தர்களும்,
சாரணர்களும், கின்னரர்களும், யக்ஷர்களும், ராக்ஷஸர்களும், நாகர்களும், அங்கு வந்து
குழுமினர்.
जडीकृते तदाऽलोके रामे
वरधनुर्धरे।
निर्वीर्यो जामदग्न्योऽसौ रामो राममुदैक्षत।।।1.76.11।।
ராமன் வில்லை இழுத்த
பொழுது, உலகம் முழுவதும் செயலிழந்தது. ஜமதக்னியின் புதல்வரான பரசுராமர், தன் வலிமையையெல்லாம்
இழந்தவராய், ராமனை அதிசயத்துடன் நோக்கினார்.
तेजोभिहतवीर्यत्वाज्जामदग्न्यो
जडीकृत:।
रामं कमलपत्राक्षं मन्दं मन्दमुवाच ह।।1.76.12।।
ராமனின் வீரத்தால்,
தனது வலிமையடங்கிப் போன பரசுராமர், அசைய முடியாமல், தாமரைக் கண்ணனான ராமனிடம்
இவ்வாறு மென்மையாகப் பேசினார்.
काश्यपाय मया दत्ता यदा
पूर्वं वसुन्धरा।
विषये मे न वस्तव्यमिति मां काश्यपोऽब्रवीत्।।1.76.13।।
“முன்னர், நான் இந்த பூமியைக் காஸ்யபருக்குக் கொடுத்த போது, ‘என்னுடைய நாட்டில்
தாங்கள் வசிக்கக் கூடாது’ என்று அவர் என்னிடம் சொன்னார்.
सोऽहं गुरुवच: कुर्वन्
पृथिव्यां न वसे निशाम्।
कृता प्रतिज्ञा काकुत्स्थ कृता भू: काश्यपस्य हि।।1.76.14।।
காகுஸ்தனே! நானும்
குருவின் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் விதமாக, இரவு நேரத்தில் நான் பூமியில் தங்க
மாட்டேன் என்று காஸ்யபருக்கு வாக்களித்தேன். ஏனென்றால், இப்போது, இந்த பூமி,
அவருக்குச் சொந்தம்.
तदिमां त्वं गतिं वीर
हन्तुं नार्हसि राघव।
मनोजवं गमिष्यामि महेन्द्रं पर्वतोत्तमम्।।1.76.15।।
ஆகவே, என் கால்களின்
சக்தியை நீ அழித்து விடக்கூடாது. ரகுவம்சத்தில் பிறந்த வீரனே! நான் மனோவேகத்தில்
மகேந்திர மலைக்குச் சென்றுவிடுகிறேன்.
लोकास्त्वप्रतिमा राम
निर्जितास्तपसा मया ।
जहि तान् शरमुख्येन मा भूत्कालस्य पर्यय:।।1.76.16।।
“இந்த அற்புதமான
அம்பினால், என்னால் வெல்லப்பட்ட அற்புதமான உலகங்களை அழித்து விடு. தாமதம்
செய்யாதே!”
अक्षय्यं मधुहन्तारं
जानामि त्वां सुरेश्वरम्।
धनुषोऽस्य परामर्शात् स्वस्ति तेऽस्तु परंतप।।1.76.17।।
நீ இந்த வில்லை நீட்டி,
வளைத்து விட்டதால், நீ மது என்னும் அரக்கனை அழித்த விஷ்ணுவே தான் என்று அறிந்து
கொண்டு விட்டேன். எதிரிகளை தகிப்பவனே! உனக்கு நன்மை உண்டாகட்டும்!”
एते सुरगणास्सर्वे
निरीक्षन्ते समागता:।
त्वामप्रतिमकर्माणमप्रतिद्वन्द्वमाहवे।।1.76.18।।
உனது செயல்கள் அனைத்தும்
இணையற்றவை. போரில் உன்னை யாரும் வெல்ல முடியாது. இங்கு குழுமியுள்ள இந்தத்
தேவர்கள் எல்லாரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
न चेयं मम काकुत्स्थ
व्रीडा भवितुमर्हति।
त्वया त्रैलोक्यनाथेन यदहं विमुखीकृत:।।1.76.19।।
காகுஸ்தனே! இந்த
மூவுலகிற்கும் தலைவனாகிய உன்னால் தோற்கடிக்கப் பட்டதற்காக, நான் வெட்கப்பட வேண்டியதில்லை.
शरमप्रतिमं राम
मोक्तुमर्हसि सुव्रत।
शरमोक्षे गमिष्यामि महेन्द्रं पर्वतोत्तमम्।।1.76.20।।
விரதங்களைப்
பரிபாலிப்பவனே! இந்த அம்பின் வலிமைக்கு இணையேதும் இல்லை. இதை என்னை நோக்கிச்
செலுத்து. நான் மகேந்திர மலைக்குச் சென்று விடுகிறேன். “
तथा ब्रुवति रामे तु
जामदग्नये प्रतापवान्।
रामो दाशरथि श्श्रीमान् चिक्षेप शरमुत्तमम्।।1.76.21।।
இவ்வாறு பரசுராமர்
கூறியதும், புகழ்பெற்ற தாசரதியாகிய ராமன் அந்த அம்பை விடுவித்தான்.
स हतान् दृश्य रामेण
स्वांल्लोकांस्तपसार्जितान्।
जामदग्न्यो जगामाशु महेन्द्रं पर्वतोत्तमम्।।1.76.22।।
தவ வலிமையால் தான்
வென்ற உலகங்கள் யாவும், ராமன் செலுத்திய அம்பினால் அழிந்ததைக் கண்ணுற்ற பரசுராமர் மகேந்திர
மலையை நோக்கி விரைந்து சென்றார்.
ततो वितिमिरास्सर्वा
दिशश्चोपदिशस्तथा।
सुरा स्सर्षिगणा रामं प्रशशंसुरुदायुधम्।।1.76.23।।
அதன் பின்னர் இருள்
சூழ்ந்திருந்த அந்தப் பகுதிகளில் இருந்த இருள் அகன்று விட்டது. ரிஷிகணங்களும்,
தேவர்களும், வில்லை ஏந்தி நின்ற ராமனைக் கொண்டாடினார்கள்.
रामं दाशरथिं रामो
जामदग्न्य: प्रशस्य च।
तत: प्रदक्षिणी कृत्य जगामात्मगतिं प्रभु:।।1.76.24।।
அங்கிருந்து
புறப்படுவதற்கு முன், ஜமதக்னியின் திறமைமிக்க புதல்வராகிய பரசுராமர், ராமனைப்
புகழ்ந்து, அவனை வலம் வந்து, பின்னர், தனது இருப்பிடத்துக்குத் திரும்பினார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे षट्सप्ततितमस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் எழுபத்தாறாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment