ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
அயோத்தியா
காண்டம்
ஸர்க்கம்
– 1
(ராமரின் நற்குணங்களைப்
பற்றிய வர்ணனை– தசரதர் ராமரைப் பட்டத்து இளவரசனாக ஆக்கும் எண்ணத்தில், அதைப் பற்றி
ஆலோசிக்க, நகரங்களிலிருந்தும், கிராமங்களில் இருந்தும், பெரியவர்களை
வரவழைக்கிறார்.)
गच्छता मातुलकुलं भरतेन तदाऽनघ।
शत्रुघ्नो नित्यशत्रुघ्नो नीतः प्रीतिपुरस्कृतः।।2.1.1।।
பரதன், தன் எதிரிகளை
அழிக்கும் திறன் மிக்கவனும், குற்றமற்றவனும், தனக்கு மிகவும் பிரியமானவனுமாகிய
சத்துருக்கினனையும் அழைத்துக் கொண்டு, தனது மாமனின் வீட்டுக்குச் சென்றான்.
तत्र न्यवसद्भ्रात्रा
सह सत्कारसत्कृतः।
मातुलेनाश्वपतिना पुत्रस्नेहेन लालितः।।2.1.2।।
பரதன் தனது பாட்டனாரான
அஸ்வபதி மன்னரும், தாய் மாமனான யுதாஜித்தும், அளித்த அன்பான உபசரிப்பில்
மகிழ்ந்து, தனது சகோதரனான சத்துருக்கினனுடன் அங்கேயே தங்கியிருந்தான்.
तत्रापि निवसन्तौ तौ
तर्प्यमाणौ च कामतः।
भ्रातरौ स्मरतां वीरौ वृद्धं दशरथं नृपम्।।2.1.3।।
அந்த இரு வீர
சகோதரர்களும் அங்கே, மிகவும் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும், தங்கியிருந்த
போதிலும், தங்களது வயதான தந்தையைப் பற்றியே, நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
राजाऽपि तौ महातेजा
स्सस्मार प्रोषितौ सुतौ।
उभौ भरतशत्रुघ्नौ महेन्द्रवरुणोपमौ।।2.1.4।।
மகாதேஜஸ் உடைய
தசரதரும், இந்திரனையும், வருணனையும் போன்ற தனது இரு புதல்வர்களையும் பற்றி,
நினைத்துக் கொண்டிருந்தார்.
सर्व एव तु तस्येष्टा
श्चत्वारः पुरुषर्षभाः।
स्वशरीराद्विनिर्वृत्ताश्चत्वार इव बाहवः।।2.1.5।।
மனிதருள் ஏறு போன்ற
தசரதர் தன்னுடைய நான்கு புதல்வர்களையும், தனது உடலில் இருந்து விளைந்த நான்கு
கரங்களைப் போல நினைத்து, ஒன்றே போல் அன்பு செலுத்தினார்.
तेषामपि महातेजा रामो
रतिकरःपितुः।
स्वयम्भूरिव भूतानां बभूव गुणवत्तरः।।2.1.6।।
அவர்கள்
நால்வருக்குள்ளும், மகாதேஜஸ் உடைய ராமர் , உயிர்களுக்கெல்லாம் பிரம்மதேவர்
எப்படியோ, அப்படியே, தனது தந்தையாருடைய பேரன்புக்குரியவரானார்.
स हि देवैरुदीर्णस्य
रावणस्य वधार्थिभिः।
अर्थितो मानुषे लोके जज्ञे विष्णुस्सनातनः।।2.1.7।।
தேவர்கள் வேண்டிக்கொண்டதன்
பேரில், அகந்தை பிடித்த ராவணனை வதம்
செய்வதற்காக, விஷ்ணுவே, ராமராக மனித உலகத்தில் அவதாரம் செய்திருந்தார் என்பது
உண்மை தான்.
कौशल्या शुशुभे तेन
पुत्रेणामिततेजसा।
यथा वरेण देवानामदितिर्वज्रपाणिना।।2.1.8।।
எல்லையற்ற ஆற்றல் உடைய
தன் மகன் ராமனுடன், கௌசல்யை, வஜ்ராயுதத்தை ஏந்திய தன் மகன் இந்திரனுடன் அதிதி
பிரகாசிப்பதைப் போல் பிரகாசித்தாள்.
स हि रूपोपपन्नश्च
वीर्यवाननसूयकः।
भूमौवनुपमस्सूनुर्गुणैर्दशरथोपमः।।2.1.9।।
மிக அழகிய
தோற்றப்பொலிவும், உடல் வலிமையும், பொறாமையில்லாத குணமும், தசரதனுடையதைப் போன்ற நற்பண்புகளும்
உடைய ராமன் இந்த உலகில் ஒப்புவமை இல்லாத புதல்வனாக இருந்தான்.
स तु नित्यं प्रशान्तात्मा मृदुपूर्वं च भाषते।
उच्यमानोऽपि परुषं
नोत्तरं प्रतिपद्यते।।2.1.10।।
எப்பொழுதும் சாந்தமான
மன நிலையில் இருக்கும் ராமர் ஒரு பொழுதும், கடுமையான வார்த்தைகளுக்குப் பதிலாகக்
கடுமையான வார்த்தைகளைப் பேசியதில்லை.
कथञ्चिदुपकारेण
कृतेनैकेन तुष्यति।
न स्मरत्यपकाराणां शतमप्यात्मवत्तया।।2.1.11।।
தன்னடக்கம் பொருந்திய
ராமர் ஒருவர் செய்த ஒரு உதவியால் கூட மிகவும் மகிழ்வார்; ஆயினும், அவர் செய்த நூறு
குற்றங்களையும் நினைவில் வைக்க மாட்டார்.
शीलवृद्धैर्ज्ञानवृद्धैर्वयोवृद्धैश्च
सज्जनैः।
कथयन्नास्त वै नित्यमस्त्रयोग्यान्तरेष्वपि।।2.1.12।।
ஆயுதப் பயிற்சி செய்து
கொண்டிருக்கும் போது கூட, இடையிடையே, ஓய்வு எடுக்கும் போது, வயதிலும், குணத்திலும்
அறிவிலும் மூத்தவர்களைக் கண்டால், நிச்சயம் அவர்களுடன் மரியாதையுடன் உரையாடுவார்.
बुद्धिमान्मधुराभाषी
पूर्वभाषी प्रियंवदः।
वीर्यवान्न च वीर्येण महता स्वेन विस्मितः।।2.1.13।।
அறிவு நிறைந்தவராகவும்,
மென்மையாகப் பேசக்கூடியவருமாக இருந்த ராமர், எல்லாரிடமும், தானே முதலில் சென்று
இனிமையாகப் பேசுவார்.
नचानृतकथो विद्वान्
वृद्धानां प्रतिपूजकः।
अनुरक्तः प्रजाभिश्च प्रजाश्चाप्यनुरञ्जते।।2.1.14।।
பொய்யே பேசாதவராகவும்,
கற்றறிந்தவராகவும் இருந்த ராமர் மூத்தவர்களிடம் மரியாதையுடையவராயும், குடிமக்களின்
அன்புக்குப் பாத்திரமானவராயும், குடிமக்களிடம் மிக்க அன்பு பூண்டவராயும்
இருந்தார்.
सानुक्रोशो जितक्रोधो
ब्राह्मणप्रतिपूजकः।
दीनानुकम्पी धर्मज्ञो नित्यं प्रग्रहवांश्चुचिः।।2.1.15।।
ராமர், இரக்கம்
நிரம்பியவராகவும், கோபத்தை வென்றவராகவும், அந்தணர்களைப் பூஜிப்பவராகவும்,
துன்பப்படுபவர்களிடத்தில் கருணை உடையவராகவும், தர்மம் அறிந்தவராகவும், புலனடக்கம்
உடையவராகவும், தூய்மையானவராகவும் இருந்தார்.
कुलोचितमतिः क्षात्रं
धर्मं स्वं बहुमन्यते।
मन्यते परया कीर्त्या महत्स्वर्गफलं ततः।।2.1.16।।
தன்னுடைய உயர்ந்த
குலத்துக்கேற்ற உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருந்த ராமர் க்ஷத்ஹ்டிரிய
வம்சத்துக்குரிய நடைமுறைகளின் மேல் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார். ஒருவர் தனது
சிறப்பான செயல்களாலேயே ஸ்வர்க்கத்தை அடைய முடியும் என்று அவர் கருதினார்.
नाऽऽश्रेयसि रतो विद्वान्नविरुद्धकथारुचिः।
उत्तरोत्तरयुक्तौ च वक्ता वाचस्पतिर्यथा।।2.1.17।।
நன்றாகக் கற்றறிந்த
அறிஞராக இருந்த ராமருக்கு, யாருக்கும் நன்மை செய்யாத விஷயங்களில் நாட்டம்
இருக்கவில்லை. அவருக்குப் பிறரைப் பற்றித் தவறாகப் பேசுவதிலும் விருப்பம்
இருக்கவில்லை. ஆயினும், தர்க்கம் என்று வந்து விட்டால், ப்ருஹஸ்பதியைப் போல
மிகவும் திறமையாக வாதிடுவார்.
अरोगस्तरुणो वाग्मी
वपुष्मान्देशकालवित्।
लोके पुरुषसारज्ञ स्साधुरेको विनिर्मितः।।2.1.18।।
இளமையும், நல்ல உடல் நலமும் , வாக்குச்
சாதுர்யமும், நோயற்ற ஆரோக்கியமும் உடைய ராமர், எங்கு, எப்பொழுது எதைச் செய்ய
வேண்டும் என்பதையும், மனிதர்களின் உண்மையான தகுதியை அறியக்கூடியவராயும், இந்த
உலகில் பிறக்கும் போதே ஒரு சிறந்த ரிஷியைப் போல் பிறந்திருந்தார்.
स तु
श्रेष्ठैर्गुणैर्युक्तः प्रजानां पार्थिवात्मजः।
बहिश्चर इव प्राणो बभूव गुणतः प्रियः।।2.1.19।।
இத்தகைய மகத்தான
பண்புகளுடன் கூடிய ராமர் தனது குடிமக்களுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார்.
அவர்களுடைய உடல்களுக்கு வெளியே உலாவும் உயிரைப் போல் விளங்கினார்.
सम्यग्विद्याव्रतस्नातो
यथावत्साङ्गवेदवित्।
इष्वस्त्रे च पितु श्श्रेष्ठो बभूव भरताग्रजः।।2.1.20।।
பரதனின் மூத்த
சகோதரராகிய ராமர் அனைத்து வேதங்களையும், அவற்றின் அங்கங்களுடன் முறைப்படி நன் கற்றுத்தேர்ந்திருந்தார். வில் வித்தையிலோ, தனது தந்தையாரையும், மிஞ்சும்
திறமை பெற்றிருந்தார்.
कल्याणाभिजन स्साधुरदीन
स्सत्यवागृजुः।
वृद्धैरभिविनीतश्च
द्विजैर्धर्मार्थदर्शिभिः।।2.1.21।।
உயர்ந்த குலத்தில்
பிறந்த அவர் தெய்வீக குணங்களைப் பெற்றிருந்தார். சிறிய புத்தி என்பது அறவே
இல்லாது, சத்திய வாக்கு உடையவராய், தர்மத்தின் வழி நடப்பவராய், அறம், பொருள்
ஆகியவை பற்றி நன்கறிந்த அந்தணர்களால் வழி நடத்தப்பட்டதால் மிகச் சிறந்த
ஒழுக்கத்துடன் இருந்தார்.
धर्मकामार्थतत्त्वज्ञः
स्मृतिमान्प्रतिभानवान्।
लौकिके समयाचारे कृतकल्पो विशारदः।।2.1.22।।
அறம், பொருள், இன்பம்
ஆகிய புருஷார்த்தங்களின் இயல்பை அறிந்தவராகவும், மிகவும் கூர்மையான நினைவாற்றல்
உள்ளவராகவும், சிறந்த திறமைசாலியாகவும், சமுதாயப்பழக்க வழக்கங்களில்
தேர்ந்தவராகவும், வைதிக விஷயங்களில் தேர்ந்தவராகவும் ராமர் இருந்தார்.
निभृत स्संवृताकारो
गुप्तमन्त्र स्सहायवान्।
अमोघक्रोधहर्षश्च त्यागसंयमकालवित्।।2.1.23।।
ராமர் அடக்கம்
நிறைந்தவராகவும், தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவராகவும் இருந்தார். பிறருக்கு
அறிவுரை கூறுவதானானும், தனியாக அழைத்துக் கூறுவார். அவருக்கு மிக நல்ல நண்பர்கள்
இருந்தார்கள். அவருடைய கோபமோ, சந்தோஷமோ, எப்போதும் பயனின்றி வீணானதில்லை. அவர் எப்போது தியாகம் செய்ய வேண்டும்
என்பதையும், எப்போது கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்பதையும் அறிந்தவராக
இருந்தார்.
दृढभक्ति
स्स्थिरप्रज्ञो नासद्ग्राही न दुर्वचाः।
निस्तन्द्रिरप्रमत्तश्च स्वदोषपरदोषवित्।।2.1.24।।
ராமர், திடமான பக்தியுடையவராகவும், நிலையான அறிவுடையவராகவும்
இருந்தார். கீழான விஷயங்கள் எதுவாயினும் அவற்றை ஏற்காதவராகவும், கெட்ட வார்த்தைகளை
ஒரு போதும் சொல்லாதவராகவும், சோம்பல் இல்லாதவராகவும், உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்
படாதவராகவும், தன்னுடைய குறைகளையும், பிறருடைய குறைகளையும் நன்கு அறிந்தவராகவும்
இருந்தார்.
शास्त्रज्ञश्च कृतज्ञश्च
पुरुषान्तरकोविदः।
यः प्रग्रहानुग्रहयोर्यथान्यायं विचक्षणः।।2.1.25।।
சாஸ்திரங்களை நன்கு
கற்றுணர்ந்தவராகவும், நன்றியுணர்வு மிகுந்தவராகவும், மனிதருக்குள் இருக்கும்
வேறுபாடுகளை உணர்ந்தவராகவும், தவறு செய்பவர்களை தண்டித்தும், நல்லது
செய்பவர்களுக்கு நன்மை செய்தும், சட்டப்படி, நியாயமான தீர்ப்பு வழங்கும் திறம்
பெற்றவராகவும், ராமர் இருந்தார்.
सत्सङ्ग्रहप्रग्रहणे
स्थानविन्निग्रहस्य च।
आयकर्मण्युपायज्ञ स्सन्दृष्टव्ययकर्मवित्।।2.1.26।।
நல்லவர்களை அடையாளம் கண்டு அவர்களை
ஊக்கப்படுத்துவதிலும், தவறு செய்பவர்களைத் தண்டிப்பதிலும் திறமை பெற்றவர்.
யாரைத்தண்டிக்க வேண்டும் நெபதை அறிந்தவர். வருவாயை நியாயமான முறையில்
அதிகரிக்கவும், சரியான காரணங்களுக்காகச் செலவழிக்கவும் தெரிந்தவராக இருந்தார்,
ராமர்.
श्रैष्ठ्यं
शास्त्रसमूहेषु प्राप्तो व्यामिश्रकेषु च।
अर्थधमौ च सङ्गृह्य सुखतन्त्रो न चालसः।।2.1.27।।
சாஸ்திரங்களையும்,
சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம் ஆகிய மொழிகளில் இருந்த நூல்களையும், நல்ல முறையில்
கற்றிருந்தார். அறவழியில் நடப்பதையும், நல்ல முறையில் ஆட்சி செய்வதையும் அறிந்து
கொண்டு இன்பம் துய்ப்பவரான ராமர் எப்போதும் சோம்பல் இல்லாதவர்.
वैहारिकाणां शिल्पानां
विज्ञाताऽऽर्थविभागवित्।
आरोहे विनये चैव युक्तो वारणवाजिनाम्।।2.1.28।।
மன மகிழ்ச்சிக்கான
கலைகளையும், சிற்பம் முதலிய கலைகளையும் நன்கு புரிந்து கொள்ளக்கூடிய ராமர்,
செல்வத்தை எவ்வாறு நல்ல வழியில் செலவழிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்.
யானையேற்றம், குதிரையேற்றம் ஆகியவற்றில் தேர்ந்தவராக இருந்தது மட்டும் அல்லாது
அவைகளை அடக்கவும் வல்லவராக இருந்தார்.
धनुर्वेदविदां श्रेष्ठो
लोकेऽतिरथसम्मतः।
अभियाता प्रहर्ता च सेनानयविशारदः।।2.1.29।।
இந்த உலகில் வில்
வித்தையில் தேர்ந்தவர்களில் மிகச் சிறந்தவராகவும், திறமை மிக்க மகாரதர்களால்,
மிகச் சிறந்த மகாரதர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும், எதிரிகளை முன் சென்று
தாக்குபவராகவும், படைகளை நடத்திச்செல்வதில் நிபுணராகவும் ராமர் இருந்தார்.
अप्रधृष्यश्च सङ्ग्रामे
क्रुध्दैरपि सुरासुरैः।
अनसूयो जितक्रोधो न दृप्तो न च मत्सरी।
न चावमन्ता भूतानां न च कालवशानुगः।।।2.1.30।।
சினம் கொண்ட தேவர்களாலோ, அசுரர்களாலோ, அவரைப் போரிலே அடக்க முடியாது. பொறாமை
அற்றவரான ராமர் தனது கோபத்தையும், கர்வத்தையும் அடக்கியவர். எவர் மீதும், தீய
எண்ணம் அற்றவர். எவரையும், அவமானப் படுத்தாதவர். காலத்தின் அழுத்தத்துக்குத் தலை
வணங்காதவர்.
एवं
श्रेष्ठगुणैर्युक्तः प्रजानां पार्थिवात्मजः।
सम्मतस्त्रिषु लोकेषु वसुधायाः क्षमागुणैः।।2.1.31।।
बुद्ध्या बृहस्पतेस्तुल्यो वीर्येणापि शचीपतेः।
இப்படிப்பட்ட
நற்குணங்கள் நிறைந்த ராமரின் மேல் மூன்று உலகங்களிலும் இருந்த குடிமக்கள் மிக்க
மரியாதை கொண்டிருந்தார்கள். பொறுமையில் பூமியைப் போலும், அறிவில் ப்ருஹஸ்பதியைப்
போலும், வீரத்தில் இந்திரனைப் போலவும் இருந்தார், ராமர்.
तथा सर्वप्रजाकान्तैः
प्रीतिसंजननैः पितुः।।2.1.32।।
गुणैर्विरुरुचे रामो दीप्तस्सूर्य इवांशुभिः।
தன்னுடைய
நற்குணங்களால், குடிமக்களின் அன்பை சம்பாதித்திருந்த ராமர், தனது தந்தையாருக்குப்
பெருமகிழ்ச்சியை அளித்துத், தன் ஒளி வீசும் கதிர்களுடன் பிரகாசிக்கும் சூரியனைப்
போல் ஒளிர்ந்தார்.
तमेवं
व्रतसम्पन्नमप्रधृष्यपराक्रमम्।।2.1.33।।
लोक पालोपमं नाथमकामयत मेदिनी।
எல்லாராலும்,
ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்குணங்களுடனும், அடக்க முடியாத வீரத்துடனும், உலகனைத்தையும்
காக்கும் லோகபாலர்களுக்கு இணையான ஆற்றலுடன் திகழ்ந்த ராமரை, இந்தப் பூமி, தனது
தலைவனாக ஏற்றுக்கொள்ள விரும்பியது.
एतैस्तु बहुभिर्युक्तं
गुणैरनुपमैस्सुतम्।।2.1.34।।
दृष्ट्वा दशरथो राजा चक्रे चिन्तां परन्तपः।
தன்னுடைய மகனான
ராமரிடத்தில் காணப்பட்ட ஏராளமான ஒப்பற்ற பண்புகளைக் கண்ணுற்ற தசரத மன்னரது
மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது.
अथ राज्ञो बभूवैवं
वृद्धस्य चिरजीविनः।।2.1.35।।
प्रीतिरेषा कथं रामो राजा स्यान्मयि जीवति।
நீண்ட காலம் வாழ்ந்து
விட்ட அந்த அரசருக்குத் தோன்றியது, ‘நான் உயிருடன் இருக்கும் போது, என் மகன்
எப்படி அரசனாக முடியும்?”
एषा ह्यस्य परा
प्रीतिर्हृदि संपरिवर्तते।।2.1.36।।
कदा नाम सुतं द्रक्ष्याम्यभिषिक्तमहं प्रियम्।
தனது புதல்வன் ராமன்
மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த அவருக்குத், தன் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்து
பார்க்க வேண்டும் என்னும் விருப்பம் மீண்டும் மீண்டும் எழுந்தது.
वृद्धिकामो हि लोकस्य
सर्वभूतानुकम्पनः।।2.1.37।।
मत्तः प्रियतरो लोके पर्जन्य इव वृष्टिमान्।
(அவர் தனக்குத்தானே
கூறிக்கொண்டார்) ‘ராமனது ஒரே ஆசை இந்த
உலகம் வளமாக இருக்க வேண்டும் என்பது தான்.
அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் உடைய, மழை பெய்விக்கும் தெய்வத்தைப் போன்ற ராமன்,
மக்களுக்கு என்னைக் காட்டிலும் பிரியமானவனாக இருக்கிறான்.
यमशक्रसमो वीर्ये
बृहस्पतिसमो मतौ।।2.1.38।।
महीधरसमो धृत्यां मत्तश्च गुणवत्तरः।
யமனைப் போலவும்,
இந்திரனைப் போலவும், வீர்யமும், ப்ருஹஸ்பதியைப் போன்ற அறிவாற்றலும், மலையைப் போன்ற
உறுதியும் கொண்ட ராமன் என்னைக்காட்டிலும், சிறந்த பண்புகளை உடையவன்.’
महीमहमिमां
कृत्स्नामधितिष्ठन्तमात्मजम्।।2.1.39।।
अनेन वयसा दृष्ट्वा यथास्वर्गमवाप्नुयाम्।
இந்தப் பூமியை
என்புதல்வன் ஆட்சி செய்வதைப் பார்த்து, ஸ்வர்க்கத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை
இந்த வயதில், நான் அடைவேன்.’
इत्येतैर्विविधैस्तैस्तैरन्यपार्थिवदुर्लभैः।।2.1.40।।
शिष्टैरपरिमेयैश्च लोके लोकोत्तरैर्गुणैः।
तं समीक्ष्य महाराजो युक्तं समुदितैश्शुभैः।।2.1.41।।
निश्चित्य सचिवैस्सार्धं युवराजममन्यत।
தன்னுடைய
அமைச்சர்களிடத்திலும் கலந்து ஆலோசித்த பின்னர், பிற அரசர்களிடத்தில் காணப்படாத
அளப்பரிய நற்பண்புகள் ராமனிடம் இருப்பதைக் கண்ட தசரதருக்கு இந்த உலகத்தில் உள்ள
நற்குணங்கள் அனைத்தும் ராமரித்தில் ஒன்று சேர்ந்து விட்டன போல் தோன்றியது. ஆகவே,
அரசர் ராமரைப் பட்டத்து இளவரசராக்கத் தீர்மானித்தார்.
दिव्यन्तरिक्षे भूमौ च
घोरमुत्पातजं भयम्।।2.1.42।।
स़ञ्चचक्षेऽथ मेधावी शरीरे चात्मनो जराम्।
அதன் பின்னர் தசரதர்
தன்னுடைய உடல் மிகவும் மூப்பு அடைந்ததையும், ஸ்வர்க்கத்திலும், ஆகாயத்திலும்,
பூமியிலும், கவலையை ஏற்படுத்தக்கூடிய தீய நிமித்தங்கள் தோன்றுவதையும் கண்டார்.
पूर्णचन्द्राननस्याथ
शोकापनुदमात्मनः।।2.1.43।।
लोके रामस्य बुबुधे सम्प्रियत्वं महात्मनः।
பின்னர், முழுமதியை
ஒத்த முகத்தைக்கொண்டவரும், பிரஜைகளுக்கு மிகவும் பிரியமானவருமான ராமருக்குப்
பட்டம் சூட்டி விட்டால், தன்னுடைய கவலையும், துயரமும் விலகிவிடும் என்பதை
உணர்ந்தார்.
आत्मनश्च प्रजानां च
श्रेयसे च प्रियेण च।।2.1.44।।
प्राप्तकालेन धर्मात्मा भक्त्या त्वरितवान् नृपः।
.
தர்மாத்மாவான தசரதர்,
தனக்கும், தன்னுடைய பிரஜைகளுக்கும் நன்மை விளைவிக்கக்கூடிய அந்தச் செயலைச்
செய்வதற்கான நேரம் கனிந்து விட்டது என்று உணர்ந்து, ஆர்வத்துடன் துரிதமாகச்
செயல்பட்டார்.
नानानगरवास्तव्यान्पृथग्जानपदानपि।।2.1.45।।
समानिनाय मेदिन्याः प्रधानान्पृथिवीपतीन्।
இந்த உலகத்தில் உள்ள
அனேக நகரங்களிலும், கிராமங்களிலும் வசிக்கும் முக்கியமான மனிதர்களுக்கும்,
அரசர்களுக்கும், தனித்தனியே அழைப்பு விடுத்தார்.
न तु केकयराजानं जनकं
वा नराधिपः।।2.1.46।।
त्वरया चानयामास पश्चात्तौ श्रोष्यतः प्रियम्।
கேகய தேசத்து
மன்னரையும், ஜனகமன்னரையும், அவசரத்தில் அழைக்காமல் விட்டுவிட்டார். பின்னர் இந்த
நல்ல செய்தியைத் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைத்தார்.
तान्वेश्मनानाभरणैर्यथाऽर्हं
प्रतिपूजितान्।।2.1.47।।
ददर्शालङ्कृतो राजा प्रजापतिरिव प्रजाः।
.
தசரதர் வந்த
விருந்தினருக்கெல்லாம், நல்ல முறையில் தங்குமிடங்களையும், ஆபரணங்களையும் அளித்துப்
பிரஜைகளினால் சூழப்பட்ட பிரம்மாவைப் போல் இருந்தார்.
अथोपविष्टे नृपतौ
तस्मिन्परबलार्दने।।2.1.48।।
ततः प्रविविशु श्शेषा राजानो लोकसम्मताः।
எதிரிகளைத்
துன்புறுத்தக்கூடியவரும், மக்களுக்குப் பிரியமானவருமான தசரத மன்னர் அவைக்கு
வந்து, தனது இருக்கையில் அமர்ந்த பின்னர்,
பிற மன்னர்கள் அவையில் பிரவேசித்தார்கள்.
अथ राजवितीर्णेषु
विविधेष्वासनेषु च।।2.1.49।।
राजानमेवाभिमुखाः निषेदुर्नियता नृपाः।
அந்த மன்னர்கள்
அனைவரும், அரச மரியாதைப் படி, அரசரை நோக்கிய வண்ணம் அமர்ந்தார்கள்.
सलब्धमानैर्विनयान्वितैर्नृपैः
पुरालयैर्जानपदैश्च मानदैः।
उपोपविष्टैर्नृपतिर्वृतो बभौ
सहस्रचक्षुर्भगवानिवामरैः।।2.1.50।।
கௌரவத்துடன்
வரவேற்கப்பட்ட, தனக்கு அடங்கிய மன்னர்கள் அருகே அமர்ந்திருக்க, நகரத்து மக்களும்,
கிராம மக்களும், மரியாதைக்குரியவர்களும்,
தன்னைச் சுற்றி அமர்ந்திருக்க, தேவர்களால் சூழப்பட்ட இந்திரன் போல் தசரதர்
விளங்கினார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे प्रथमस्सर्गः।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின்
முதலாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
10.02.2024
No comments:
Post a Comment