Friday, 24 November 2023

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பால காண்டம் ஸர்க்கம் – 1

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 1


(நாரத முனிவர், வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வருகிறார். அப்போது எல்லா விதமான நல்ல குணங்களும் நிறைந்த முழுமையான மனிதன் யாராவது இருக்கிறானா என்று வால்மீகி நாரதரை விசாரிக்கிறார். முக்காலமும் உணர்ந்த நாரத முனிவர், அப்படிப்பட்ட மனிதன் ஸ்ரீ ராமனே என்று கூறி, அவனைப்பற்றிய விவரங்களைச் சுருக்கமாகக் கூறுகிறார்.)

तपस्स्वाध्यायनिरतं तपस्वी वाग्विदां वरम् ।
नारदं परिपप्रच्छ वाल्मीकिर्मुनिपुङ्गवम् ।।1.1.1।।

 

(வால்மீகி முனிவர்) தவத்திலும், வேத அத்யயனத்திலும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுபவரும், சிறந்த அறிவாளியும்,  மிகச் சிறப்பான வாக்கு வன்மை உடையவரும் , முனிவர்களுள் சிரேஷ்டரும் ஆன நாரத மகரிஷியைக் கேட்டார்.


कोन्वस्मिन्साम्प्रतं लोके गुणवान्कश्च वीर्यवान् ।
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रत:।।1.1.2।।


இப்போது, இந்த உலகத்தில், சிறந்த குண நலன்களுடனும், வீரத்துடனும், தர்மத்துடனும், நன்றியறிதலுடனும், உண்மையுடனும், கொடுத்த வாக்கைக்காப்பதில் உறுதியுடனும் உள்ளவன் யார்?



चारित्रेण च को युक्तस्सर्वभूतेषु को हित: ।
विद्वान्क: कस्समर्थश्च कश्चैकप्रियदर्शन: ।।1.1.3।।

நல்ல நடத்தையுடன் கூடியவனும், எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனும், அறிஞனும், திறமையுள்ளவனும், தன் அழகினால் பார்ப்பவர்களை மகிழச் செய்பவனும் யார்?

 

आत्मवान्को जितक्रोधो द्युतिमान्कोऽनसूयक: ।
कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य संयुगे ।।1.1.4।।
 

சுயக்கட்டுப்பாடு உள்ளவனும், சினத்தை வென்றவனும், ஒளி நிறைந்தவனும், பொறாமை இல்லாதவனும், கோபம் வந்து விட்டால், தேவர்கள் கூட அவனைக்கண்டு அஞ்சும் படியானவனும் யார்?

 

एतदिच्छाम्यहं श्रोतुं परं कौतूहलं हि मे ।
महर्षे त्वं समर्थोऽसि ज्ञातुमेवंविधं नरम् ।।1.1.5।।

மகரிஷியே! இப்படிப்பட்டகுண நலன்கள் கொண்ட மனிதனைப்பற்றி உங்களிடம் கேட்டு அறிய நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.


श्रुत्वा चैतत्ित्रलोकज्ञो वाल्मीकेर्नारदो वच: ।
श्रूयतामिति चामन्त्त्र्य प्रहृष्टो वाक्यमब्रवीत् ।।1.1.6।।
 

நாரத மகரிஷியை வரவேற்று இவ்வாறு கேட்ட வால்மீகியிடம், மகிழ்ச்சியுடன் நாரதர் கூறினார், ‘சொல்கிறேன், கேளுங்கள்!’

 

बहवो दुर्लभाश्चैव ये त्वया कीर्तिता गुणा: ।
मुने वक्ष्याम्यहं बुद्ध्वा तैर्युक्तश्श्रूयतान्नर: ।।1.1.7।।

 

“முனிவரே! நீங்கள் வர்ணித்த இந்தக் குணங்களைக்கொண்ட ஒரு மனிதன் கிடைப்பது மிகவும் துர்லபம் தான். ஆனாலும், நான் ஆராய்ந்தறிந்து கண்ட அப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றிக் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்!”

इक्ष्वाकुवंशप्रभवो रामो नाम जनैश्श्रुत: ।
नियतात्मा महावीर्यो द्युतिमान्धृतिमान् वशी ।।1.1.8।।

இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ராமன் என்பவனைப்பற்றி மக்கள் கேள்விப் பட்டிருக்கிறார்கள். ( ராமன் என்ற பெயருக்கே, பிறரை மகிழ்விப்பவன் என்று பொருள்.) அவன் எப்போதும் மாறாத இயல்புடையவன், மஹாவீரன், ஒளிமிகுந்தவன், தன்னைத் தானே ஆள்பவன், தன் புலன்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவன்.


बुद्धिमान्नीतिमान्वाग्मी श्रीमान् शत्रुनिबर्हण: ।
विपुलांसो महाबाहु: कम्बुग्रीवो महाहनु: ।।1.1.9।।

 

அவன் சிறந்த புத்திமான், நீதிகளை நன்கறிந்தவன்,பேச்சுத் திறமை மிக்கவன், மங்களகரமானவன், எதிரிகளை அழிப்பவன், அகன்ற தோள்களை உடையவன், வலிமையான கரங்களை உடையவன், சங்கு போன்ற கழுத்தை உடையவன், அழகிய வலிமையான தாடையை உடையவன்;

 

महोरस्को महेष्वासो गूढजत्रुररिन्दमः ।
आजानुबाहुस्सुशिरास्सुललाटस्सुविक्रमः ।।1.1.10।।
 

அவன் அகன்ற மார்பை உடையவன்; மிகப்பெரிய வில்லை ஏந்தியவன்; சதைப்பிடிப்புள்ள தோள் பட்டைகளைக் கொண்டவன்; எதிரிகளை அழித்தொழிப்பவன்; முழங்கால் வரை நீண்ட கைகளையும், அழகிய தலையையும், அகன்ற நெற்றியையும் உடையவன்; பராக்கிரமம் மிக்கவன்.

 

समस्समविभक्ताङ्गस्स्निग्धवर्ण: प्रतापवान् ।
पीनवक्षा विशालाक्षो लक्ष्मीवान् शुभलक्षणः ।। 1.1.11।।

அளவுக்கு மீறிய உயரமாகவோ, குட்டையாகவோ இல்லாமல் திட்டமான உயரமுடையவன்; சரியான அளவில் அமைந்துள்ள அங்கங்களைக் கொண்டவன்; ஒளிமிகுந்த முகத்தை உடையவன்; புகழ் பெற்றவன்; வலிமையான, நன்கு பரந்த மார்பை உடையவன்; அகன்ற கண்களைக்கொண்டவன். திருவுடையவன்; மங்களமான லட்சணங்கள் பொருந்தியவன்.

 


धर्मज्ञस्सत्यसन्धश्च प्रजानां च हिते रतः ।
यशस्वी ज्ञानसम्पन्नश्शुचिर्वश्यस्समाधिमान् ।।1.1.12।।

தர்மங்களை அறிந்தவன்; கொடுத்த வாக்கைக் காப்பதில் உறுதி பூண்டவன்; பிரஜைகளின் நன்மையில் ஈடுபாடு கொண்டவன்; மிகுந்த புகழ் பெற்றவன்; அனைத்தும் அறிந்தவன்; தூய்மையானவன்; தன்னை நாடுபவர்கள் எளிதாக அண்டக்கூடிய விதத்தில் இருப்பவன்; தன்னைப் புகலடைந்தவரைக் காப்பதிலேயே மனதைச் செலுத்துபவன்.

 

 

प्रजापतिसमश्श्रीमान् धाता रिपुनिषूदनः ।
रक्षिता जीवलोकस्य धर्मस्य परिरक्षिता ।।1.1.13।।

ப்ரம்மாவைப்போல மங்களகரமானவன்; இந்த உலக முழுவதையும் தாங்குபவன்; எதிரிகளை அழித்தொழிப்பவன்; இந்த உலகத்து உயிர்களனைத்தையும், தர்மத்தையும் நல்ல விதமாகக் காப்பாற்றுபவன்.



रक्षिता स्वस्य धर्मस्य स्वजनस्य च रक्षिता ।
वेदवेदाङ्गतत्त्वज्ञो धनुर्वेदे च निष्ठितः ।।1.1.14।।


தன்னுடைய தர்மத்தையும், தன் மக்களையும் காப்பாற்றுபவன்; வேத வேதாங்கங்களின் உண்மைப் பொருளை உணர்ந்தவன்; வில் வித்தையிலோ, மிகவும் திறமை பெற்றவன்.


सर्वशास्त्रार्थतत्त्वज्ञस्स्मृतिमान्प्रतिभानवान् ।
सर्वलोकप्रियस्साधुरदीनात्मा विचक्षणः ।।1.1.15।।

சாஸ்திரங்களினுடைய உண்மைப்பொருளை உணர்ந்து கொண்டவன்; மகா திறமைசாலி; எல்லா மக்களுக்கும் பிரியமானவன்; நற்குணங்கள் நிறைந்தவன்; துன்பம் வந்த போது கூட தைரியத்தை இழக்காதவன்; சரியான செயலைச் சரியான நேரத்தில் செய்யும் சாமர்த்தியசாலி.



सर्वदाभिगतस्सद्भिस्समुद्र इव सिन्धुभिः ।
आर्यस्सर्वसमश्चैव सदैकप्रियदर्शनः ।।1.1.16।।

நதிகள் எப்போது வேண்டுமானாலும் வந்து தன்னுடன் கலக்க அனுமதிக்கும் கடலைப் போல, நல்லவர்கள் எப்போதும் வந்து தன்னைச் சந்திக்க அனுமதிப்பவன். மிகச்சிறந்த குணநலன் கள் நிறைந்தவன்; எல்லாரிடத்தும் ஒரே விதமாக நடந்து கொள்பவன்; எப்போதும் இனிமையான முகபாவம் கொண்டவன்.

 

 

स च सर्वगुणोपेत: कौसल्यानन्दवर्धन: ।
समुद्र इव गाम्भीर्ये धैर्येण हिमवानिव ।।1.1.17।।


அனைத்து விதமான நற்குணங்களும் வாய்க்கப்பெற்ற இவன் தனது அன்னையான கௌசல்யாவின் மகிழ்ச்சியை அதிகரிப்பவன்.  அவனுடைய எண்ணங்களின் ஆழம் கடலைப் போன்றது.  சகிப்புத்தன்மையில் அவன் இமயமலை போன்றவன்.

 

विष्णुना सदृशो वीर्ये सोमवत्प्रियदर्शनः ।
कालाग्निसदृशः क्रोधे क्षमया पृथिवीसमः ।।1.1.18।।

 

வீர்யத்தில் விஷ்ணுவைப்போன்றவன்; அழகான தோற்றத்தில் சந்திரனைப்போன்றவன்; கோபத்தில் காலாக்னி போன்றவன்; பொறுமையில் பூமியை ஒத்தவன்;

 

धनदेन समस्त्यागे सत्ये धर्म इवापरः ।
तमेवं गुणसम्पन्नं रामं सत्यपराक्रमम् ।।1.1.19।।


தானம் செய்வதில் குபேரனுக்கு நிகரானவன்; நிலையாக இருப்பதில் மற்றுமொரு சூரியனைப்போன்றவன். நற்குணங்கள் நிறைந்தவன். உண்மையான பராக்கிரமம் உடையவன்.


ज्येष्ठं श्रेष्ठगुणैर्युक्तं प्रियं दशरथस्सुतम् ।
प्रकृतीनां हितैर्युक्तं प्रकृतिप्रियकाम्यया ।।1.1.20।।

यौवराज्येन संयोक्तुमैच्छत्प्रीत्या महीपति: ।

இப்படிப்பட்ட சிறந்த குணங்கள் பொருந்திய, பிரஜைகளுக்கு மிகவும் பிரியமான, தனது மூத்தமகனாகிய ஸ்ரீ ராமனை, தசரத மன்னன், பிரஜைகளின் நலனை முன்னிட்டு
அன்புடன், யுவராஜாவாக நியமிக்க விரும்பினார்.

 

तस्याभिषेकसम्भारान्दृष्ट्वा भार्याऽथ कैकयी ।।1.1.21।।

 

पूर्वं दत्तवरा देवी वरमेनमयाचत ।

विवासनं च रामस्य भरतस्याभिषेचनम् ।।1.1.22।।

அதற்கான ஏற்பாடுகளைக் கண்ட அவருடைய மனைவி கைகேயி, ராமன் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் மற்றும், பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற இரண்டு வரங்களை யாசித்தாள். (முன்னர் பல காலத்துக்கு முன்பு, தசரதர் அவளுக்கு இரண்டு வரங்கள் கொடுத்திருந்தார். தேவைப்படும் போது அவற்றை வாங்கிக் கொள்வதாகக் கைகேயி கூறியிருந்தாள்.)

 

स सत्यवचनाद्राजा धर्मपाशेन संयत: ।
विवासयामास सुतं रामं दशरथ: प्रियम् ।।1.1.23।।


தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டிய கடமையால் கட்டுண்ட தசரதர், தன் அன்புக்குரிய புதல்வனான ராமனைக் காட்டுக்கு அனுப்பினார்.

 

 

स जगाम वनं वीर: प्रतिज्ञामनुपालयन्।
पितुर्वचननिर्देशात्कैकेय्या: प्रियकारणात् ।।1.1.24।।

மகாவீரனான ராமன், கைகேயியை மகிழ்விப்பதற்காகவும், தன் தந்தையாரின் வாக்கைக் காப்பதற்காகவும், அவருடைய கட்டளைப்படி காட்டுக்குச் சென்றான்.


तं व्रजन्तं प्रियो भ्राता लक्ष्मणोऽनुजगाम ह ।
स्नेहाद्विनयसम्पन्नस्सुमित्रानन्दवर्धन: ।।1.1.25।।
भ्रातरं दयितो भ्रातुस्सौभ्रात्रमनुदर्शयन् ।


ராமன் மேல் மிகவும் அன்பும் மரியாதையும் கொண்ட, சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிக்கச் செய்யும் புதல்வனான லக்ஷ்மணன், சகோதர பாசத்தால், தானும், ராமனைப் பின் தொடர்ந்தான்.


रामस्य दयिता भार्या नित्यं प्राणसमा हिता ।।1.1.26।।
जनकस्य कुले जाता देवमायेव निर्मिता ।

 

 

सर्वलक्षणसम्पन्ना नारीणामुत्तमा वधू: ।।1.1.27।।

सीताप्यनुगता रामं शशिनं रोहिणी यथा ।

ஜனகரின் குலத்தில் பிறந்தவளும், தேவ மாயையால் உருவாக்கப்பட்டவள் போன்று, அனைத்து விதமான அழகுகளும் நிரம்பப்பெற்றவளும், மங்கையருக்குள் உத்தமமானவளும், தசரதரின் மருமகளும், ராமனின் உயிருக்குயிரான அன்பு மனைவியுமான சீதையும், தக்ஷனின் மகளாகிய ரோகிணி, தன் கணவனான சந்திரனைப் பின் தொர்டர்வதைப் போல ராமனைப் பின்தொடர்ந்தாள்.



पौरैरनुगतो दूरं पित्रा दशरथेन च ।।1.1.28।।

शृङ्गिबेरपुरे सूतं गङ्गाकूले व्यसर्जयत् ।
गुहमासाद्य धर्मात्मा निषादाधिपतिं प्रियम् ।।1.1.29।।

गुहेन सहितो रामो लक्ष्मणेन च सीतया ।

அயோத்தி நகர மக்களும், தசரதரும் வெகு தூரம் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.  தர்மாத்மாவான ராமன் கங்கைக் கரையில் ஸ்ருங்கிவேரபுரம் என்ற இடத்தில், நிஷாதர்களின் தலைவனான குகனைச் சந்த்தித்ததில் இருவருக்கும் இடையே மிகுந்த அன்பு உருவானது. பின்னர் ராமன் சுமந்திரரை அயோத்திக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, லக்ஷ்மணன் மற்றும் சீதையுடன், குகனின் உதவியால் கங்கையைக் கடந்தான்.

 

ते वनेन वनं गत्वा नदीस्तीर्त्वा बहूदका: ।।1.1.30।।
चित्रकूटमनुप्राप्य भरद्वाजस्य शासनात् ।

रम्यमावसथं कृत्वा रममाणा वने त्रय: ।।1.1.31।।
देवगन्धर्वसङ्काशास्तत्र ते न्यवसन् सुखम् ।
 

ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டுக்குச் சென்றும், பல நீர் நிரம்பிய நதிகளைக் கடந்தும், பரத்வாஜ முனிவரின் ஆணைப்படி சித்ரகூட மலையை அடைந்து, அங்கே தேவ கந்தர்வர்களைப் போல இந்த மூவரும் இன்பமாக வசித்து வந்தார்கள்.



चित्रकूटं गते रामे पुत्रशोकातुरस्तथा ।।1.1.32।।
राजा दशरथस्स्वर्गं जगाम विलपन्सुतम् ।

ராமன் சித்ரகூடத்தை அடைந்த அந்த சமயத்தில், ராமனைப் பிரிந்த புத்திர சோகம் தாங்க முடியாமல், அழுது அழுது, தசரதர் மரணம் அடைந்தார்.

 

मृते तु तस्मिन्भरतो वसिष्ठप्रमुखैर्द्विजै: ।। 1.1.33।।
नियुज्यमानो राज्याय नैच्छद्राज्यं महाबल:।
स जगाम वनं वीरो रामपादप्रसादक: ।। 1.1.34 ।।

 

தசரதர் இறந்த பிறகு, வசிஷ்டர் முதலான அந்தணர்கள், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி வற்புறுத்தியும், கைகேயியின் புதல்வனான பரதன் அதற்கு ஒப்பாமல், ராமனின் பாதம் பணிந்து, (அவனையே திரும்பி வந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி) வேண்டிக் கொள்வதற்காகக் காட்டுக்குச் சென்றான். 



गत्वा तु सुमहात्मानं रामं सत्यपराक्रमम् ।
अयाचद्भ्रातरं राममार्यभावपुरस्कृत: ।।1.1.35।।

त्वमेव राजा धर्मज्ञ इति रामं वचोऽब्रवीत् ।

ராமர் இருப்பிடம் சென்றடைந்து, மிகுந்த மரியாதையுடனும், பணிவுடனும் அவரைப்பணிந்த, பரதன், “நீங்கள் தர்மம் அறிந்தவர். நீங்கள் தான் அரசராக இருக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். ( மூத்தவன் இருக்கும் போது, இளைய மகன் அரசனாவதை தர்மம் அனுமதிக்காது.)

 

रामोऽपि परमोदारस्सुमुखस्सुमहायशा: ।
न चैच्छत्पितुरादेशाद्राज्यं रामो महाबल: ।।1.1.36।।

ஆனால் ராமன், அனைவரையும் மகிழ்விப்பவனாயினும், மிகவும் தாராள குணமுடையவனாயினும், இன்முகத்துடன் அனைவரிடமும் பேசக்கூடியவனாயினும், நற்புகழ் உடையவனாயினும், பெரிய பலசாலியாயினும், தந்தையாரின் கட்டளையை மீற விரும்பாததால், ராஜ்ஜியத்தை ஏற்க விரும்பவில்லை.



पादुके चास्य राज्याय न्यासं दत्वा पुन:पुन: ।
निवर्तयामास ततो भरतं भरताग्रज: ।।1.1.37।।

பரதனின் தமையனான ராமன், ராஜ்ஜியத்தை ஆள்வதற்காக, அதிகாரம் உள்ள ஒரு அடையாளமாகத் தன் பாதுகைகளை பரதனுக்கு அளித்து, அவனை மீண்டும், மீண்டும் வற்புறுத்தி அயோத்திக்குத் திருப்பி அனுப்பினான்.



स काममनवाप्यैव रामपादावुपस्पृशन् ।।1.1.38।।
नन्दिग्रामेऽकरोद्राज्यं रामागमनकाङ्क्षया ।

தன் விருப்பம் நிறைவேறாத ஏமாற்றத்துடன், பரதன் ராமனின் பாதுகைகளை மரியாதையுடன் ஏற்று, ராமன் திரும்பி வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு, நந்திக்கிராமத்தில் இருந்து அரசாண்டு வந்தான்.



गते तु भरते श्रीमान् सत्यसन्धो जितेन्द्रिय: ।।1.1.39।।

रामस्तु पुनरालक्ष्य नागरस्य जनस्य च ।
तत्रागमनमेकाग्रो दण्डकान्प्रविवेश ह ।।1.1.40।।

பரதன் திரும்பிச் சென்ற பிறகு, சத்யசந்தனும், புலன்களை வென்றவனுமான ராமன், சித்ர கூடத்திலேயே இருந்தால், அயோத்தி நகரத்து மக்கள் மீண்டும் தன்னைக்காண வருவார்கள் என்று உணர்ந்து, தனது நோக்கத்தில் உறுதியுடன், தண்டகாரண்யத்தை நோக்கிப் புறப்பட்டான்.

 

 

प्रविश्य तु महारण्यं रामो राजीवलोचनः ।
विराधं राक्षसं हत्वा शरभङ्गं ददर्श ह ।।1.1.41।।

सुतीक्ष्णं चाप्यगस्त्यं च अगस्त्यभ्रातरं तथा ।

தாமரைக்கண்ணனான ராமன் அந்தப் பெரிய காட்டில் நுழைந்து, விராதன் என்ற அரக்கனைக்கொன்று, பின்னர், சரபங்கர், சுதீக்ஷணர், அகஸ்தியர் மற்றும் அவருடைய சகோதரர் ஆகிய முனிவர்களைச் சந்தித்தான்.

 

 

अगस्त्यवचनाच्चैव जग्राहैन्द्रं शरासनम् ।।1.1.42।।
खड्गं च परमप्रीतस्तूणी चाक्षयसायकौ ।

அகஸ்தியர், தனக்கு இந்திரன் அளித்த வில்லையும், வாளையும், தீரவே தீராத அம்புகளைக்கொண்ட தூணியையும், ராமனுக்கு அளிக்க, அதை ராமன் பெருமகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டான்.



वसतस्तस्य रामस्य वने वनचरैस्सह ।
ऋषयोऽभ्यागमन्सर्वे वधायासुररक्षसाम् ।।1.1.43।।

ராமன் அங்கு சரபங்கமுனிவரின் ஆசிரமத்தில் தங்கி இருந்த போது, முனிவர்கள் எல்லாம், அந்தக் காட்டில் வசிக்கும் மக்களுடன் வந்து, அரக்கர்களிடமிருந்து தங்களைக் காக்குமாறு ராமனை வேண்டிக் கொண்டனர்.



स तेषां प्रतिशुश्राव राक्षसानां तथा वने ।।1.1.44।।

प्रतिज्ञातश्च रामेण वधस्संयति रक्षसाम् ।
ऋषीणामग्निकल्पानां दण्डकारण्यवासिनाम् ।।1.1.45।।


தண்டகாரண்யத்தில் வசிக்கும் அரக்கர்களைக் கொல்வதாக அக்கினி ஜ்வாலையைப்போல் பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த முனிவர்களுக்கு, ராமன் வாக்களித்தான்.

 

तेन तत्रैव वसता जनस्थाननिवासिनी ।
विरूपिता शूर्पणखा राक्षसी कामरूपिणी ।।1.1.46।।

அருகிலேயே, ஜனஸ்தானம் என்ற இடத்தில் வசித்து வந்த, நினைத்த வடிவம் எடுக்கும் சக்தியுள்ள சூர்ப்பனகை, ( இலக்குவனால்) அங்க பங்கம் செய்யப்பட்டாள்.

 

.

ततश्शूर्पणखावाक्यादुद्युक्तान्सर्वराक्षसान् ।
खरं त्रिशिरसं चैव दूषणं चैव राक्षसम् ।।1.1.47।।

निजघान वने रामस्तेषां चैव पदानुगान् ।

பின்னர், சூர்ப்பனகையின் தூண்டுதலின் பேரில், தன்னுடன் போரிட வந்த கரன், த்ரிசிரசன், தூஷணன் முதலாய அரக்கர்களை ராமன் கொன்றான்.

 

वने तस्मिन्निवसता जनस्थाननिवासिनाम् ।।1.1.48।।
रक्षसां निहतान्यासन्सहस्राणि चतुर्दश ।

அந்தக்காட்டில் ராமன் வசித்து வந்த போது, ஜனஸ்தானத்தில் இருந்த பதினான்காயிரம் அரக்கர்கள் அவனால் கொல்லப்பட்டார்கள்.


ततो ज्ञातिवधं श्रुत्वा रावणः क्रोधमूर्छितः ।।1.1.49।।
सहायं वरयामास मारीचं नाम राक्षसम् ।

தன் இனத்தவர் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டு, மிகுந்த கோபம் அடைந்த ராவணன், மாரீசன் என்னும் அரக்கனின் உதவியை நாடினான்.



वार्यमाणस्सुबहुशो मारीचेन स रावणः ।।1.1.50।।
न विरोधो बलवता क्षमो रावण तेन ते ।


மாரீசன், “ராவணா! மிகவும் பலசாலியான ராமனை விரோதித்துக் கொள்வது சரியல்ல’ என்று பலவாறு ராவணனுக்கு எடுத்துரைத்தான்.



अनादृत्य तु तद्वाक्यं रावण: कालचोदित: ।।1.1.51।।
जगाम सह मारीचस्तस्याश्रमपदं तदा ।


ஆனால், விதியினால் உந்தப்பட்ட ராவணன், மாரீசனின் சொற்களை அலட்சியப்படுத்தி, அவனுடன், ராமன் தங்கியிருந்த ஆசிரமத்தை நோக்கி வந்தான்.

 

 

तेन मायाविना दूरमपवाह्य नृपात्मजौ ।।1.1.52।।
जहार भार्यां रामस्य गृध्रं हत्वा जटायुषम् ।

மாயாவியாகிய மாரீசனின் சூழ்ச்சியால், ராமனும் லக்ஷ்மணனும் காட்டில் வெகு தூரம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது, சீதையைக் கவர்ந்து சென்ற ராவணன், வழியில் குறுக்கிட்டுப் போரிட்ட ஜடாயுவைக் கொன்று, அவளைத் தன்னிடத்துக்குக் கொண்டு சென்றான்.

 

गृध्रं च निहतं दृष्ट्वा हृतां श्रुत्वा च मैथिलीम् ।।1.1.53।।
राघवश्शोकसन्तप्तो विललापाकुलेन्द्रिय: ।

இறப்பதற்கு முன் பேசிய ஜடாயு மூலம், சீதை அபகரிக்கப்பட்டாள் என்பதைக் கேட்ட ராமன் தாங்க முடியாத சோகத்துடன் கதறினான்.



ततस्तेनैव शोकेन गृध्रं दग्ध्वा जटायुषम् ।।1.1.54।।
मार्गमाणो वने सीतां राक्षसं सन्ददर्श ह ।

कबन्धन्नाम रूपेण विकृतं घोरदर्शनम् ।।1.1.55।।

மிகுந்த சோகத்துடன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகள் செய்த பின்னர் சீதையைத் தேடிக் காட்டில் அலைந்த போது, பயங்கரமான உருவம் கொண்ட கபந்தன் என்னும் ராக்ஷஸனை ராமன் கண்டான்.



तं निहत्य महाबाहुर्ददाह स्वर्गतश्च स: ।
स चास्य कथयामास शबरीं धर्मचारिणीम् ।।1.1.56।।

श्रमणीं धर्मनिपुणामभिगच्छेति राघव । 1151

வலிமையான கரங்கள் கொண்ட ராமன் அந்தக் கபந்தனை வதம் செய்து, பின்னர் அவன் உடலைத் தகனம் செய்தான். ஸ்வர்க்கத்துக்குப் புறப்படும் முன் கபந்தன் ராமனிடம் ‘சபரி என்றொரு பெண்துறவி இருக்கிறாள். அவளைச் சென்று பார்’ என்று கூறிச் சென்றான்.



सोऽभ्यगच्छन्महातेजाश्शबरीं शत्रुसूदन: ।।1.1.57।।
शबर्या पूजितस्सम्यग्रामो दशरथात्मज: ।

மகத்தான ஒளி பொருந்தியவனும், எதிரிகளை அழிப்பவனுமான தசரதனின் மகனாகிய ராமன், சபரியைத் தேடிச் சென்றான். அவளும், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனைப் பூஜித்தாள்.



पम्पातीरे हनुमता सङ्गतो वानरेण ह ।।1.1.58।।
हनुमद्वचनाच्चैव सुग्रीवेण समागत: ।


பம்பை நதிக்கரையில் ஹனுமான் என்னும் வானரத்தைச் சந்தித்து, அவன் சொற்படி, சுக்கிரீவனுடன் நட்பு பூண்டான்.

 

 

सुग्रीवाय च तत्सर्वं शंसद्रामो महाबल: ।।1.1.59।।
आदितस्तद्यथावृत्तं सीतायाश्च विशेषत: ।

ராமன், சுக்கிரீவனுக்கும், ஹனுமானுக்கும், முதலில் இருந்து அனைத்தையும், முக்கியமாக, சீதையின் அபஹரணம் பற்றியும் கூறினான்.



सुग्रीवश्चापि तत्सर्वं श्रुत्वा रामस्य वानर: ।।1.1.60।।
चकार सख्यं रामेण प्रीतश्चैवाग्निसाक्षिकम् ।

நடந்ததையெல்லாம் கேட்ட சுக்கிரீவன், ராமன் மேல் அன்பு மீதூறி, அக்னி சாட்சியாக, அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான்.



ततो वानरराजेन वैरानुकथनं प्रति ।।1.1.61।।
रामायावेदितं सर्वं प्रणयाद्दु:खितेन च ।

பின்னர், சுக்கிரீவன், தனது தமையனுடன் தனக்கு ஏற்பட்ட விரோதத்தைப்பற்றி, மிகவும் துயரத்துடன், ராமனுக்கு எடுத்துரைத்தான்.



प्रतिज्ञातं च रामेण तदा वालिवधं प्रति ।।1.1.62।।
वालिनश्च बलं तत्र कथयामास वानर: ।

அப்போது, வாலியைக் கொல்வதாக ராமன் சபதம் செய்ய, வாலியின் வலிமை பற்றி சுக்கிரீவன் விவரித்தான்.


सुग्रीवश्शङ्कितश्चासीन्नित्यं वीर्येण राघवे ।।1.1.63।।

राघवप्रत्ययार्थं तु दुन्दुभे: कायमुत्तमम् ।
दर्शयामास सुग्रीवो महापर्वतसन्निभम् ।।1.1.64।।

சுக்கிரீவனுக்கு, என்ன இருந்தாலும், ராமனின் வலிமை பற்றிய சந்தேகம் இருந்து வந்தது. அவன் ஒரு பெரிய மலையைப் போன்ற உடலுடைய துந்துபி என்னும் அரக்கனின் உடலை, ராமனுக்குக் காண்பித்தான்.



उत्स्मयित्वा महाबाहु: प्रेक्ष्य चास्थि महाबल: ।
पादाङ्गुष्ठेन चिक्षेप सम्पूर्णं दशयोजनम् ।।1.1.65।।

பெருவலிமை பொருந்திய ராமன் அந்த உடலைக் கண்டு, சிறிதே நகைத்துத் தன் காலின் பெருவிரலால் அந்த உடலைப் பத்து யோஜனை தூரம் (80 மைல்கள்) உதைத்து எறிந்தான்.



बिभेद च पुनस्सालान्सप्तैकेन महेषुणा ।
गिरिं रसातलं चैव जनयन्प्रत्ययं तथा ।।1.1.66।।

மேலும் சுக்கிரீவனுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக, ராமன் தான் விட்ட ஒரே அம்பானது, ஏழு சால மரங்களையும், ஒரு மலையையும், பூமிக்கடியில் உள்ள ரஸாதலத்தையும் துளைத்துச் செல்லும் படி செய்தான்.

 

तत: प्रीतमनास्तेन विश्वस्तस्स महाकपि: ।
किष्किन्धां रामसहितो जगाम च गुहां तदा ।।1.1.67।।

அதன் பிறகு, ராமனின் வலிமையில் முழு நம்பிக்கை பெற்ற சுக்கிரீவன், மகிழ்ச்சியுடன் அவனை கிஷ்கிந்தையில் இருந்த ஒரு குகைக்கு அழைத்துச் சென்றான்.


ततोऽगर्जद्धरिवर: सुग्रीवो हेमपिङ्गल: ।
तेन नादेन महता निर्जगाम हरीश्वर: ।।1.1.68।।

பின்னர் பொன்னிறமான மேனி உடைய சுக்கிரீவன் பெருங்குரலில் கர்ஜிக்கவும், அந்தப் பேரொலி கேட்டு அந்தக் குகையில் இருந்து வாலி வெளியே வந்தான்.



अनुमान्य तदा तारां सुग्रीवेण समागत: ।
निजघान च तत्रैनं शरेणैकेन राघव: ।।1.1.69।।

தனது மனைவி தாரை எவ்வளவோ தடுத்தும், அவளைச் சம்மதிக்க வைத்து, சுக்கிரீவனுடன் போர் புரிந்த வாலியை ஒரே அம்பால், ராமன் கொன்றான்.


ततस्सुग्रीववचनाद्धत्वा वालिनमाहवे ।
सुग्रीवमेव तद्राज्ये राघव: प्रत्यपादयत् ।।1.1.70।।


சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கின் படி, வாலியைப்போரில்  கொன்ற பிறகு, ராமன், அந்த ராஜ்ஜியத்துக்கு சுக்கிரீவனையே அரசனாக்கினான்.

 

स च सर्वान्समानीय वानरान्वानरर्षभ: ।
दिश: प्रस्थापयामास दिदृक्षुर्जनकात्मजाम् ।।1.1.71।।

பின்னர், வானரர்களுள் சிறந்தவனான சுக்கிரீவன், தன் வானரங்களை அழைத்து, ஜனகனின் மகளாகிய சீதையை எல்லாத் திசைகளிலும் தேடுமாறு நியமித்துக் கட்டளையிட்டான்.  


ततो गृध्रस्य वचनात्सम्पातेर्हनुमान्बली।
शतयोजनविस्तीर्णं पुप्लुवे लवणार्णवम्।।1.1.72।।

அதன் பிறகு, சம்பாதி என்ற கழுகரசனின் யோசனைப்படி, நூறு யோஜனை அகலமுள்ள உப்புக்கடலை, ஹனுமான் குதித்துத் தாண்டினான்.

 

तत्र लङ्कां समासाद्य पुरीं रावणपालिताम् ।
ददर्श सीतां ध्यायन्तीमशोकवनिकां गताम् ।।1.1.73।।

ராவணனால், ஆளப்பட்ட லங்கையைச் சென்றடைந்து, அங்கே அசோக வனத்தில் தியானம் செய்து கொண்டிருந்த சீதையைக் கண்டான்.

 


निवेदयित्वाऽऽभिज्ञानं प्रवृत्तिं च निवेद्य च ।
समाश्वास्य च वैदेहीं मर्दयामास तोरणम् ।।1.1.74।।

ராமன் அடையாளமாகக் கொடுத்த மோதிரத்தைச் சீதையிடம் கொடுத்து, எல்லா விவரங்களையும் சொல்லி, அவளுக்கு ஆறுதல் அளித்து, அங்கிருந்து திரும்பும் முன்னர், அந்தத் தோட்டத்தின் மதில் சுவரை நசுக்கித் தகர்த்தான்.



पञ्च सेनाग्रगान्हत्वा सप्तमन्त्रिसुतानपि ।
शूरमक्षं च निष्पिष्य ग्रहणं समुपागमत् ।।1.1.75।।

ஹனுமான், ஐந்து சேனாதிபதிகளையும், ஏழு மந்திரிகுமாரர்களையும் கொன்று, ராவணனின் மகனாகிய வீரம் பொருந்திய அக்ஷகுமாரனையும் மிதித்துக் கொன்ற பின்னர், ராவணனின் ஆட்களிடம் பிடிபட்டான்.

 

 

अस्त्रेणोन्मुक्तमात्मानं ज्ञात्वा पैतामहाद्वरात् ।
मर्षयन्राक्षसान्वीरो यन्त्रिणस्तान्यदृच्छया ।।1.1.76।।

ततो दग्ध्वा पुरीं लङ्कामृते सीतां च मैथिलीम् ।
रामाय प्रियमाख्यातुं पुनरायान्महाकपि: ।।1.1.77।।

வீரனான அந்த மஹா வானரன், பிரம்மாவிடம் இருந்து பெற்ற ஒரு வரத்தால், தன்னை அஸ்திரத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும் என்றறிந்ததால், ராவணனை நேரில் காணவேண்டும் என்ற ஆசை நிறைவேறும் பொருட்டு, அந்த அரக்கர்கள் கயிற்றால் தன்னைக்கட்டிய போது பொறுத்துக்கொண்டான். தன் வேலை முடிந்த பின்னர், சீதையை மட்டும் விட்டு விட்டு, லங்காபுரி முழுவதையும் எரித்த பிறகு, ராமனுக்கு சீதையைக் கண்ட நற்செய்தியை சொல்லுவதற்காகத் திரும்பிச் சென்றான்.

 

सोऽधिगम्य महात्मानं कृत्वा रामं प्रदक्षिणम् ।
न्यवेदयदमेयात्मा दृष्टा सीतेति तत्त्वत: ।।1.1.78।।

எல்லையற்ற அறிவுக்கூர்மை படைத்த ஹனுமான், மகாத்மாவான ராமனைக் கண்டு, அவனை வலம் வந்து வணங்கித் தான் சீதையைக் கண்ட செய்தியைச் சொன்னான்.


ततस्सुग्रीवसहितो गत्वा तीरं महोदधे: ।
समुद्रं क्षोभयामास शरैरादित्यसन्निभै: ।।1.1.79।।

பின்னர் ராமன், சுக்கிரீவனுடன், பெருங்கடலின் கரைக்குச் சென்று, சூரிய கிரணங்களைப் போன்ற கூரிய அம்புகளால், அந்தக் கடலைக் கலக்கினான்.



दर्शयामास चात्मानं समुद्रस्सरितां पति: ।
समुद्रवचनाच्चैव नलं सेतुमकारयत् ।।1.1.80।।


சமுத்திர ராஜன் நேரில் தோன்றிக் கூறிய அறிவுரைப்படி நலன் என்ற வானரன் மூலம், சமுத்திரத்தின் மேல் பாலத்தைக் கட்டினான்.



तेन गत्वा पुरीं लङ्कां हत्वा रावणमाहवे ।
राम: सीतामनुप्राप्य परां व्रीडामुपागमत् ।।1.1.81।।

ராமன், அந்தப் பாலத்தின் மூலம் லங்காபுரியை அடைந்து, போரில் ராவணனைக்கொன்று, சீதையை திரும்ப அழைத்து வந்தான். ஆனாலும், சீதை இன்னொருவன் வீட்டில் இருந்திருக்கிறாள் என்பது அவனுக்கு மிகவும் சங்கடத்தைத் தந்தது.



तामुवाच ततो राम: परुषं जनसंसदि ।
अमृष्यमाणा सा सीता विवेश ज्वलनं सती ।।1.1.82।।

எல்லார் முன்னிலையிலும், சீதையை நோக்கிக் கடுமையான வார்த்தைகளை ராமன் கூறவே, அவற்றைத் தாங்க முடியாத சீதை தீக்குளித்தாள்.



ततोऽग्निवचनात्सीतां ज्ञात्वा विगतकल्मषाम् ।
बभौ रामस्सम्प्रहृष्ट: पूजितस्सर्वदैवतै: ।।1.1.83।।


அக்கினி தேவன் சீதை பரிசுத்தமானவள் என்று கூற, மிகவும் மகிழ்ந்த ராமன் தேவதைகளால் பூஜிக்கப்பட்டான்.



कर्मणा तेन महता त्रैलोक्यं सचराचरम् ।
सदेवर्षिगणं तुष्टं राघवस्य महात्मन: ।।1.1.84।।

மகாத்மாவான ராமனுடைய இந்தச் செயலினால், உயிருள்ளவைகளும், உயிரற்றவைகளும், தேவர்களும், முனிவர்களும், மூன்று உலகத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.



अभिषिच्य च लङ्कायां राक्षसेन्द्रं विभीषणम् ।
कृतकृत्यस्तदा रामो विज्वर: प्रमुमोद ह ।।1.1.85।।

ராமன், விபீஷணனை லங்காபுரியின் அரசனாகப் பட்டாபிஷேகம் செய்வித்துத் தான் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் செய்து முடித்த திருப்தியுடன், எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ந்திருந்தான்.



देवताभ्यो वरं प्राप्य समुत्थाप्य च वानरान् ।
अयोध्यां प्रस्थितो राम: पुष्पकेण सुहृद्वृत: ।।1.1.86।।


தேவதைகளிடம் பெற்ற வரத்தால், போரில் மடிந்திருந்த வானரங்களை உயிர்ப்பித்த பின்னர், நண்பர்களுடன் புஷ்பகவிமானத்தில் அயோத்தியை நோக்கிப் புறப்பட்டான்.



भरद्वाजाश्रमं गत्वा रामस्सत्यपराक्रम: ।
भरतस्यान्तिकं रामो हनूमन्तं व्यसर्जयत् ।।1.1.87।।

சத்ய பராக்ரமனும், காண்போரை மகிழ்விக்கச் செய்பவனுமான ராமன், பரத்வாஜ முனிவருடைய ஆசிரமத்துக்குச் சென்று, தன் வருகையை பரதனுக்குத் தெரிவிக்குமாறு ஹனுமானைத் தூதனுப்பினான்.

 

पुनराख्यायिकां जल्पन्सुग्रीवसहितश्च स: ।
पुष्पकं तत्समारुह्य नन्दिग्रामं ययौ तदा ।।1.1.88।।

பின்னர் சுக்கிரீவனுடன், நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, புஷ்பகவிமானம் ஏறி, நந்திக் கிராமத்துக்குச் சென்றான்.



नन्दिग्रामे जटां हित्वा भ्रातृभिस्सहितोऽनघ: ।
रामस्सीतामनुप्राप्य राज्यं पुनरवाप्तवान् ।।1.1.89।।

பாவங்களற்ற ராமன், நந்திக்கிராமத்தில் தன் சகோதரர்களுடன், ஜடாமுடியைக் களைந்து, சீதையுடன் அயோத்தி சென்று தன் ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெற்றான்.

.

प्रहृष्टमुदितो लोकस्तुष्ट: पुष्टस्सुधार्मिक: ।
निरामयो ह्यरोगश्च दुर्भिक्षभयवर्जित: ।।1.1.90।।

(ராமனுடைய ஆட்சியில்) உலகத்தார் அனைவரும், மகிழ்வுடனும், தங்கள் விருப்பங்கள் நிறைவேறிய திருப்தியுடனும், வலிமையுடனும், தர்மத்துடனும், ஆரோக்கியத்துடனும், பஞ்சம் போன்ற துயரங்களைப் பற்றிய பயம் இல்லாமலும் வாழ்ந்தார்கள்.


न पुत्रमरणं किञ्चिद्द्रक्ष्यन्ति पुरुषा: क्वचित् ।
नार्यश्चाविधवा नित्यं भविष्यन्ति पतिव्रता: ।।1.1.91।।

ராமன் அரசாண்ட போது, எங்கும் புதல்வர்கள் மரணமடையவில்லை. பெண்கள் விதவைகளாகவில்லை. பெண்கள் அனைவரும் பதிவிரதைகளாக இருந்தார்கள்.



न चाग्निजं भयं किञ्चिन्नाप्सु मज्जन्ति जन्तव: ।
न वातजं भयं किञ्चिन्नापि ज्वरकृतं तथा ।।1.1.92।।

न चापि क्षुद्भयं तत्र न तस्करभयं तथा ।

அந்த ராஜ்ஜியத்தில் நெருப்பினாலோ, நீராலோ, காற்றாலோ, நோயாலோ, பசியாலோ, திருட்டாலோ துன்பம் ஏற்படக்கூடும் என்ற பயமே இல்லை.


नगराणि च राष्ट्राणि धनधान्ययुतानि च ।।1.1.93।।
नित्यं प्रमुदितास्सर्वे यथा कृतयुगे तथा ।

அந்த ராஜ்ஜியத்தின் நகரங்களிலும் கிராமங்களிலும் இருந்த மக்கள், செல்வமும், உணவுப்பொருட்களும் நிறைந்து, க்ருத யுகத்தில் இருந்ததைப் போல , மகிழ்வுடன் இருந்தார்கள்.



अश्वमेधशतैरिष्ट्वा तथा बहुसुवर्णकै: ।।1.1.94।।

गवां कोट्ययुतं दत्वा ब्रह्मलोकं प्रयास्यति ।
असंख्येयं धनं दत्वा ब्राह्मणेभ्यो महायशा: ।।1.1.95।।

நூற்றுக்கணக்கான அஸ்வமேத யாகங்களும், ஏராளமான சுவர்ணகா (தங்கத்தைத் தானமாகக் கொடுக்கும் வேள்வி) யாகங்களும் செய்து தெய்வங்களை மகிழ்வித்து, அந்தணர்களுக்குக் கோடிக்கணக்கான பசுக்களையும், செல்வத்தையும் தானம் செய்த பின்னர், ராமன் பிரம்ம லோகம் திரும்புவான்.


राजवंशान्शतगुणान्स्थापयिष्यति राघव: ।
चातुर्वर्ण्यं च लोकेऽस्मिन् स्वे स्वे धर्मे नियोक्ष्यति ।।1.1.96।।

ராகவன் நூறு மடங்கு அரச வம்சங்களை உருவாக்குவான். நான்கு வர்ணத்தோரும் அவரவருக்குண்டான கடமைகளைச் செய்யுமாறு பார்த்துக்கொள்வான்.



दशवर्षसहस्राणि दशवर्षशतानि च ।
रामो राज्यमुपासित्वा ब्रह्मलोकं प्रयास्यति ।। 1.1.97।।

ராமன் பதினோராயிரம் ஆண்டுகள் அரசாண்ட பின்னர் பிரம்ம லோகம்  சென்றடைவான்.



इदं पवित्रं पापघ्नं पुण्यं वेदैश्च सम्मितम् ।
य: पठेद्रामचरितं सर्वपापै: प्रमुच्यते ।।1.1.98।।


இந்த ராமனுடைய சரித்திரம் பவித்ரமானது. பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தருவது. வேதங்களுக்கு நிகரானது. இதை எவர் படிக்கிறாரோ, அவர், எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுவார்.

 

 

एतदाख्यानमायुष्यं पठन्रामायणं नर: ।
सपुत्रपौत्रस्सगण: प्रेत्य स्वर्गे महीयते ।। 1.1.99।।

இந்த ராமாயணத்தைப் படிப்பவருக்கும், சொல்லுபவருக்கும், ஆயுள் அதிகரிக்கும். தங்கள் புத்திரங்களுடனும், பௌத்திரர்களுடனும், சொந்த பந்தங்களுடனும், நலமாக வாழ்ந்து, மரணம் எய்தியபின் ஸ்வர்க்கத்தில் பூஜிக்கப் படுவார்கள்.

 

पठन्द्विजो वागृषभत्वमीयात्
स्यात्क्षत्रियो भूमिपतित्वमीयात् ।

वणिग्जन: पण्यफलत्वमीयात्
जनश्च शूद्रोऽपि महत्वमीयात् ।।1.1.100।।

இதைப்படிப்பதால் அந்தணர்கள் பதினெட்டு வகைக் கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள். க்ஷத்தியர்கள், நிலத்தின் மீது அதிகாரம் செலுத்துவார்கள். வைஸ்யர்கள் அவர்களுடைய வியாபாரத்தில் நல்ல பலன்களை அடைவார்கள். சூத்திரர்களும் மேல் நிலை அடைவார்கள். “



इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे (श्रीमद्रामायणकथासङ्क्षेपो नाम) प्रथम: सर्ग:।।

 

இத்துடன், ஆதிகாவியமாகிய ஸ்ரீமத் ராமாயணத்தின், பாலகாண்டத்தின், ஸ்ரீமத் ராமாயணச் சுருக்கம் என்னும் முதல் சர்க்கம் நிறைவு பெற்றது.



***

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...