ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
பால காண்டம்
ஸர்க்கம் – 2
( வால்மீகி மகரிஷி காலைக்கடன்களைக் கழிக்க தமஸா
நதிக்குச் செல்கிறார். அப்போது ஒரு ஆண் க்ரௌஞ்சப் பறவையை ஒரு வேடன் அம்பினால் கொன்று
வீழ்த்துவதைப் பார்க்கிறார். தன் இணையைப் பிரிந்த பெண் பறவையின் துயரத்திற்காக வருந்தி,
அவர் கூறிய சொற்கள் ஒரு அழகான சந்தத்தில் அமைந்த ஸ்லோகமாக வெளிவருகின்றன. அவர் ஆசிரமத்துக்கு
வந்ததும் படைப்புக் கடவுள் பிரம்மா அங்கே வருகிறார். அவர் வாயில் இருந்து வந்த ஸ்லோகத்தின்
சந்தத்திலேயே நாரதர் அவருக்குச் சொன்ன ராமனின் கதையை இயற்றுமாறு கூறுகிறார். வால்மீகி
மகரிஷிக்கு திவ்ய த்ருஷ்டியையும் அளிக்கிறார்.)
नारदस्य तु तद्वाक्यं श्रुत्वा वाक्यविशारद:।
पूजयामास धर्मात्मा सहशिष्यो महामुनि: ।।1.2.1।।
நாரதர் கூறியவைகளைக்
கேட்டபின், தர்மாத்வான வால்மீகி மகரிஷி தன் சீடர்களுடன் நாரதரைப் பூஜித்தார்.
यथावत्पूजितस्तेन
देवर्षिर्नारदस्तदा ।
आपृष्ट्वैवाभ्यनुज्ञातस्स जगाम विहायसम् ।।1.2.2।।
வால்மீகி மகரிஷியால்
பூஜிக்கப்பட்ட பின், நாரதர் அவரிடம் விடை பெற்று, தேவலோகம் திரும்பினார்.
स मुहूर्तं गते तस्मिन्देवलोकं मुनिस्तदा ।
जगाम तमसातीरं जाह्नव्यास्त्वविदूरत: ।।1.2.3।।
நாரதர் அங்கிருந்து
சென்றதும், வால்மீகி மகரிஷி, காலைக்கடன்களைக் கழிப்பதற்காக, கங்கை நதிக்கு
அருகிலேயே பாய்ந்து கொண்டிருந்த தமஸா நதிக்கரைக்குச் சென்றார்.
स तु तीरं समासाद्य
तमसाया महामुनि: ।
शिष्यमाह स्थितं पार्श्वे दृष्ट्वा तीर्थमकर्दमम् ।।1.2.4।।
நதிக்கரையை அடைந்து,
கலங்கல் இல்லாத தூய நீர் இருந்த ஒரு பகுதி இருப்பதைக் கண்டு, அருகில் நின்றிருந்த
தன் சீடனிடம் கூறினார்.
अकर्दममिदं तीर्थं
भरद्वाज निशामय ।
रमणीयं प्रसन्नाम्बु सन्मनुष्यमनो यथा ।।1.2.5।।
“பரத்வாஜா! இந்தப்
புனிதமான இடத்தைப் பார்! நல்ல மனிதர்களின் உள்ளம் போலக் கலங்கல் இல்லாமல்
தூய்மையான, இனிமையான நீரைக்கொண்டிருக்கிறது.
न्यस्यतां कलशस्तात
दीयतां वल्कलं मम ।
इदमेवावगाहिष्ये तमसातीर्थमुत्तमम् ।।1.2.6।।
மகனே! நீர் எடுக்கும்
கலசத்தைக் கீழே வைத்து விட்டு, என்னுடைய மரவுரியைக் கொடு. புனிதமான இந்தத் தமஸா
நதியில் நான் குளிக்கப் போகிறேன்.
एवमुक्तो भरद्वाजो
वाल्मीकेन महात्मना ।
प्रायच्छत मुनेस्तस्य वल्कलं नियतो गुरो: ।।1.2.7।।
மகாத்மாவான வால்மீகி
மகரிஷியின் ஆணைக்குட்பட்டு, அவருடைய பணிவுள்ள சீடனான பரத்வாஜன், முனிவரின் மரவுரியை
அவரிடம் கொடுத்தான்.
स शिष्यहस्तादादाय
वल्कलं नियतेन्द्रिय: ।
विचचार ह पश्यंस्तत्सर्वतो विपुलं वनम् ।।1.2.8।।
புலன்களை வென்ற
வால்மீகி மகரிஷி, தன் சீடனிடமிருந்து மரவுரியைப் பெற்றுக்கொண்டு, பரந்து
விரிந்திருந்த அந்த வனத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே நடக்கலானார்.
तस्याभ्याशे तु मिथुनं
चरन्तमनपायिनम् ।
ददर्श भगवांस्तत्र क्रौञ्चयोश्चारुनिस्वनम् ।।1.2.9।।
அப்போது அங்கே அவர்,
ஒரு நிமிடம் கூட ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் இருக்கும், இனிய குரலைக்கொண்ட,
க்ரௌஞ்சப் பறவைகளின் (அன்றில் பறவைகள்) ஜோடியைக் கண்டார்.
तस्मात्तु मिथुनादेकं
पुमांसं पापनिश्चय: ।
जघान वैरनिलयो निषादस्तस्य पश्यत: ।।1.2.10।।
அவர் பார்த்துக்
கொண்டிருக்கும் போதே, பாவ எண்ணங்களுடைய கொடூரமான வேடனொருவன் அந்த இரு பறவைகளில்,
ஆண் பறவையைக் கொன்று வீழ்த்தினான்.
तं शोणितपरीताङ्गं
वेष्टमानं महीतले ।
भार्या तु निहतं दृष्ट्वा रुराव करुणां गिरम् ।।1.2.11।।
वियुक्ता पतिना तेन द्विजेन सहचारिणा ।
ताम्रशीर्षेण मत्तेन पत्रिणा सहितेन वै ।।1.2.12।।
தாமிர நிறக்கொண்டையுடைய
தன் கணவன் மீது மிகுந்த அன்பு கொண்ட அந்தப் பெண் பறவை, உடல் முழுவதும் இரத்தத்தில் நனைந்து, இறந்து
கிடக்கும் அவன் உடலைப் பார்த்துப் பரிதாபமாகக் கதறி அழுதது.
तदा तु तं द्विजं
दृष्ट्वा निषादेन निपातितम् ।
ऋषेर्धर्मात्मनस्तस्य कारुण्यं समपद्यत ।।1.2.13।।
வேடனால் வீழ்த்தப்பட்ட
அந்தப் பறவையைக்கண்ட தர்மாத்வான வால்மீகி மகரிஷியின் உள்ளத்தில் கருணை பொங்கியது.
तत:
करुणवेदित्वादधर्मोऽयमिति द्विज: ।
निशाम्य रुदतीं क्रौञ्चीमिदं वचनमब्रवीत् ।।1.2.14।।
அழுதுகொண்டிருக்கும்
அந்தப் பெண் க்ரௌஞ்சப் பறவையைக் கண்டு, கருணை மீதூற, இவ்வாறு இரு பறவைகள்
இணைந்திருக்கும் வேளை, அவைகளைக் கொல்வது அதர்மம் என்று கீழ்க்கண்ட சொற்களைக்
கூறினார்.
मा निषाद प्रतिष्ठां
त्वमगमश्शाश्वतीस्समा: ।
यत्क्रौञ्चमिथुनादेकमवधी: काममोहितम् ।।1.2.15।। 15
“ஏ வேடனே! அன்பு கொண்ட
இந்த இணைப் பறவைகளில் ஒன்றைக் கொன்ற நீ உனக்கான நிலையை அடையவே மாட்டாய்.”
तस्यैवं ब्रुवतश्चिन्ता
बभूव हृदि वीक्षतः ।
शोकार्तेनास्य शकुने: किमिदं व्याहृतं मया ।।1.2.16।।
அந்த வார்த்தைகளைக்
கூறிய பிறகு, வால்மீகி மகரிஷி, ‘அந்தப் பறவையின் துயரத்தைக் கண்ட நான் ஏன் இவ்வாறு
கூறினேன்’ என்று யோசித்தார்.
चिन्तयन्स
महाप्राज्ञश्चकार मतिमान्मतिम् ।
शिष्यं चैवाऽब्रवीद्वाक्यमिदं स मुनिपुङ्गव: ।।1.2.17।।
கற்றறிந்த அறிஞரும்,
முனிவர்களுள் சிறந்தவருமான வால்மீகி மகரிஷி, தனது சீடனை நோக்கி இவ்வாறு கூறினார்.
.
पादबद्धोऽक्षरसमस्तन्त्रीलयसमन्वित:
।
शोकार्तस्य प्रवृत्तो मे श्लोको भवतु नान्यथा ।।1.2.18।।
பறவையின் துயரம்
தாளாமல், நான் சொன்ன சொற்கள் ஒரே எண்ணிக்கையுள்ள எழுத்துக்களுடன் நான்கு அடிகளில்,
தந்தி வாத்தியங்களுடன்
பாடத்தகுந்த விதத்தில் அமைந்துள்ளன. இது ஸ்லோகம் என்று அழைக்கப்படட்டும். வேறு
எந்தப் பெயரிலும் அல்ல.
शिष्यस्तु तस्य ब्रुवतो
मुनेर्वाक्यमनुत्तमम् ।
प्रतिजग्राह संहृष्टस्तस्य तुष्टोऽभवद्गुरु: ।।1.2.19।।
அவருடைய சீடரும், தன்
குருவின் வார்த்தைகளைக்கேட்டு, உடனே அந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து விட்டார்.
அதைக் கண்ட குரு மிக்க மகிழ்ச்சி கொண்டார்.
.
सोऽभिषेकं तत: कृत्वा
तीर्थे तस्मिन्यथाविधि ।
तमेव चिन्तयन्नर्थमुपावर्तत वै मुनि: ।।1.2.20।।
அந்தப் புனிதமான
நதியில் நீராடிவிட்டு, முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்துவிட்டு, இந்த
விஷயத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டு, மகரிஷி ஆசிரமத்தை நோக்கி நடந்தார்.
भरद्वाजस्ततश्शिष्यो
विनीतश्श्रुतवान्मुनेः ।
कलशं पूर्णमादाय पृष्ठतोऽनुजगाम ह ।।1.2.21।।
பின்னர், கற்றறிந்த
முனிவரும், அவருடைய, பணிவுள்ள சீடருமான பரத்வாஜர், நீர் நிறைந்த கலசத்தை
எடுத்துக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்தார்.
स प्रविश्याश्रमपदं
शिष्येण सह धर्मवित् ।
उपविष्ट: कथाश्चान्याश्चकार ध्यानमास्थित: ।।1.2.22।।
தர்மங்களையெல்லாம்
அறிந்த வால்மீகி மகரிஷி, தனது சீடருடன் ஆசிரமத்துக்கு வந்து அங்கேயே தியானத்தில்
அமர்ந்து, மற்ற கதைகளை இயற்றினார்.
आजगाम ततो ब्रह्मा
लोककर्ता स्वयं प्रभु: ।
चतुर्मुखो महातेजा द्रष्टुं तं मुनिपुङ्गवम् ।।1.2.23।।
அப்போது, மிகுந்த
பிரகாசம் உடையவரும், இந்த உலகைப் படைப்பவருமான, நான்முகப் பிரம்மா முனிபுங்கவரான
வால்மீகி மகரிஷியைக் காணத் தாமே அங்கு வந்தார்.
वाल्मीकिरथ तं दृष्ट्वा
सहसोत्थाय वाग्यत: ।
प्राञ्जलि: प्रयतो भूत्वा तस्थौ परमविस्मित: ।।1.2.24।।
தவத்தினால் தூய்மையடைந்தவரும்,
பேசுவதில் கட்டுப்பாடு உடையவருமான வால்மீகி மகரிஷி, அவரைக்கண்டு, மிகுந்த
வியப்படைந்து, உடனே எழுந்து, கைகளைக் குவித்து
வணங்கி நின்றார்.
पूजयामास तं देवं
पाद्यार्घ्यासनवन्दनै: ।
प्रणम्य विधिवच्चैनं पृष्ट्वाऽनामयमव्ययम् ।।1.2.25।।
அந்த பிரம்ம தேவரை
முறைப்படி காலில் விழுந்து வரவேற்று, அவருடைய நலம் விசாரித்து, கால்களை அலம்பவும்,
கைகளை அலம்பவும் நீர் அளித்து, அமர்வதற்கு ஆஸனம் (பாத்யம், அர்க்யம், ஆஸனம்)
அளித்துப் பூஜித்தார்.
अथोपविश्य भगवानासने
परमार्चिते ।
वाल्मीकये महर्षये सन्दिदेशासनं तत: ।।1.2.26।।
அனைத்தும் அறிந்த
பிரம்ம தேவர், வால்மீகியால் வணங்கப்பட்ட பின், அவர் அளித்த ஆசனத்தில் அமர்ந்து
கொண்டு, வால்மீகியையும் அமரச் சொன்னார்.
ब्रह्मणा
समनुज्ञातस्सोऽप्युपाविशदासने ।
उपविष्टे तदा तस्मिन्सर्वलोकपितामहे।
तद्गतेनैव मनसा वाल्मीकिर्ध्यानमास्थित: ।।1.2.27।।
பிரம்மதேவரின்
கட்டளைப்படி அவர் முன்னே அமர்ந்த போதிலும், வால்மீகி, நடந்த நிகழ்ச்சிகளையே (க்ரௌஞ்சவதம்
சம்பந்தமான)அசை போட்டுக்கொண்டு இருந்தார்.
पापात्मना कृतं कष्टं
वैरग्रहणबुद्धिना ।
यस्तादृशं चारुरवं क्रौञ्चं हन्यादकारणात् ।।1.2.28।।
அந்தக் க்ரௌஞ்சத்தைக்
கொன்று எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட அந்த வேடனால், இனிமையான
குரலுடைய அந்தப் பறவை, அநியாயமாகக் கொல்லப்பட்டது.
शोचन्नेव मुहु:
क्रौञ्चीमुपश्लोकमिमं पुन: ।
जगावन्तर्गतमना भूत्वा शोकपरायण: ।।1.2.29।।
துயரத்தில்
ஆழ்ந்திருந்த வால்மீகி, மீண்டும் மீண்டும், அழுது புலம்பிக்கொண்டிருந்தஅந்தப் பெண்
பறவையைப் பற்றித் தனக்குள்ளேயே யோசித்துக்கொண்டு, அந்த ஸ்லோகத்தை உரக்கக்
கூறினார்.
तमुवाच ततो ब्रह्मा
प्रहसन्मुनिपुङ्गवम् ।
श्लोक एव त्वया बद्धो नात्र कार्या विचारणा ।।1.2.30।।
அதைக் கேட்ட பிரம்ம
தேவர், முனி புங்கவரான வால்மீகியைப் பார்த்து, ‘நீங்கள் இயற்றியுள்ளது ஓரு
ஸ்லோகத்தைத் தான். அதில் எந்த ஐயமும் இல்லை.
मच्छन्दादेव ते ब्रह्मन् प्रवृत्तेयं सरस्वती ।
रामस्य चरितं सर्वं कुरु त्वमृषिसत्तम ।।1.2.31।।
முனிவர்களுள்
சிறந்தவரே! என்னுடைய விருப்பத்தாலேயே உங்கள் வாக்கிலிருந்து இந்த ஸ்லோகம்
உருப்பெற்றது. இந்தச் சந்தத்திலேயே, ராமனுடைய சரித்திரம் முழுவதையும் நீங்கள்
இயற்ற வேண்டும்.”
धर्मात्मनो गुणवतो लोके
रामस्य धीमत: ।
वृत्तं कथय धीरस्य यथा ते नारदाच्छ्रुतम् ।।1.2.32।।
இந்த உலகத்தில், மிகச்
சிறந்த தர்மாத்மாவும், குணசாலியாகவும், ஞானியாகவும், மன உறுதி உடையவனாகவும் உள்ள
ராமனின் சரித்திரத்தை, நாரதரிடம் இருந்து எவ்வாறு கேட்டீர்களோ, அவ்வாறே
இயற்றுங்கள்.”
रहस्यं च प्रकाशं च
यद्वृत्तं तस्य धीमत: ।
रामस्य सहसौमित्रेः राक्षसानां च सर्वश: ।।1.2.33।।
वैदेह्याश्चैव यद्वृत्तं प्रकाशं यदि वा रह: ।
तच्चाप्यविदितं सर्वं विदितं ते भविष्यति ।।1.2.34।।
புத்திமானாகிய ராமன்,
லட்சுமணன், சீதை, அரக்கர்கள், மற்றும் பிறருடைய எண்ணங்கள் மற்றும் செயல்கள்,
உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டலும், அவையனைத்தும் உங்களுக்கு, என்
அருளால் காட்டப்படும்.
न ते वागनृता काव्ये काचिदत्र भविष्यति ।
कुरु रामकथां पुण्यां श्लोकबद्धां मनोरमाम् ।।1.2.35।।
இந்தக் காவியத்தில் ஒரு
வார்த்தை கூட பொய்யாக இருக்காது. புண்ணியமானதும், மனதிற்கு இனிமையானதும் ஆன
ராமனின் கதையை ஸ்லோகங்கள் வடிவில் இயற்றுங்கள்.
यावत् स्थास्यन्ति गिरयस्सरितश्च महीतले ।
तावद्रामायणकथा लोकेषु प्रचरिष्यति ।।1.2.36।।
இந்தப் பூமியில்,
மலைகளும், நதிகளும் இருக்கும் வரை, ராமாயணக்கதையும் மக்களிடையே பிரபலமாக
இருக்கும்.
यावद्रामायणकथा
त्वत्कृता प्रचरिष्यति ।
तावदूर्ध्वमधश्च त्वं मल्लोकेषु निवत्स्यसि ।।1.2.37।।
ராமாயணக்கதை இந்தப்
பூமியில் இருக்கும் வரை, நீங்கள் மேல் உலகத்திலும், கீழ் உலகத்திலும், என்னுடைய
பிரம்ம லோகத்திலும் இருப்பீர்கள்.”
इत्युक्त्वा भगवान्ब्रह्मा तत्रैवान्तरधीयत ।
ततस्सशिष्यो भगवान्मुनिर्विस्मयमाययौ ।।1.2.38।।
இவ்வாறு கூறி, பிரம்ம
தேவன் அங்கிருந்து மறைந்து விட்டார். வால்மீகி மகரிஷியும் அவருடைய சீடர்களும்
மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளானார்கள்.
तस्य शिष्यास्ततस्सर्वे
जगुश्श्लोकमिमं पुन: ।
मुहुर्मुहु: प्रीयमाणा: प्राहुश्च भृशविस्मिता: ।।1.2.39।।
பின்னர் அவருடைய சீடர்கள் மீண்டும் மீண்டும், அந்த ஸ்லோகத்தை முழங்கிக்
கொண்டிருந்தார்கள். மிகுந்த வியப்புடன், நடந்தவைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
समाक्षरैश्चतुर्भिर्य:
पादैर्गीतो महर्षिणा ।
सोऽनुव्याहरणाद्भूयश्श्लोकश्श्लोकत्वमागत: ।।1.2.40।।
மகரிஷி, ஒரே
எண்ணிக்கையில் எழுத்துக்களைக் கொண்ட, நான்கு வரிகளில் அமைந்த அந்த ஸ்லோகத்தை மீண்டும் உச்சரித்தார். மீண்டும் மீண்டும்
உச்சரிக்கப்பட்டதால் அந்த ஸ்லோகம் மேன்மை பெற்றது.
तस्य बुद्धिरियं जाता वाल्मीकेर्भावितात्मन:
।
कृत्स्नं रामायणं काव्यमीदृशै: करवाण्यहम् ।।1.2.41।।
எண்ணங்களைச்
செயலாக்கும் திறமை பெற்ற வால்மீகியின் மனத்தில் ராமாயண காவியத்தை, முழுக்க முழுக்க
இந்தச் சந்தத்திலேயே இயற்ற வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.’
उदारवृत्तार्थपदैर्मनोरमैः
तदास्य रामस्य चकारकीर्तिमान् ।
समाक्षरैश्श्लोकशतैर्यशस्विनो
यशस्करं काव्यमुदारधीर्मुनि: ।।1.2.42।।
புகழ் நிறைந்தவரும், புத்திமானுமான வால்மீகி மகரிஷி, எல்லாராலும் போற்றப்பட்ட
ராமனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், ஒரே எண்ணிக்கையுடன் நான்கு
வரிகளில் அமைந்த அந்த இனிமையான சந்தத்தில், நூற்றுக்கணக்கான ஸ்லோகங்களில்,
ராமாயணத்தை இயற்றினார்.
तदुपगतसमाससन्धियोगं
सममधुरोपनतार्थवाक्यबद्धम् ।
रघुवरचरितं मुनिप्रणीतं
दशशिरसश्च वधं निशामयध्वम् ।।1.2.43।।
ஸமாஸம் ( தொகை), சந்தி
( புணர்ச்சி) ஆகியவைகளுடன், இனிமையான, வார்த்தைகளும் சொற்றொடர்களும் சேர்த்து,
வால்மீகி மகரிஷியால் இயற்றப்பட்ட, பத்து தலை உடைய ராவணனைக்கொன்ற ரகுவரனின்
சரித்திரத்தைக்கேளுங்கள்.
इत्यार्षे
श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे द्वितीयस्सर्ग:।।
இத்துடன், ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின், இரண்டாவது சர்க்கம் நிறைவு பெற்றது.
***

No comments:
Post a Comment