ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 16
(தேவர்கள் விஷ்ணுவிடம் ராவணனை வதம் செய்வதற்காக மனிதனாக
அவதாரம் எடுக்கச் சொல்லிப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். அப்போது ஒரு தேவன் வேள்வித்தீயில்
இருந்து தோன்றி, பாயசம் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொடுக்கிறார். தசரதரின் மனைவிகள் அதை
உண்கிறார்கள். காலப்போக்கில் கருவுருகிறார்கள்.)
ततो नारायणो देवो नियुक्तस्सुरसत्तमै:।
जानन्नपि सुरानेवं श्लक्ष्णं वचनमब्रवीत्।।1.16.1।।
தேவர்களால் இவ்வாறு
வேண்டிக்கொள்ளப்பட்ட நாராயணனாகிய விஷ்ணு, எவ்வாறு அவதாரம் எடுக்க வேண்டும் என்பதை
அறிந்தவராயினும், தேவர்களிடம் இவ்வாறு மென்மையாகக் கேட்டார்.
उपाय: को वधे तस्य
रावणस्य दुरात्मन:।
यमहं तं समास्थाय निहन्यामृषिकण्टकम्।।1.16.2।।
“ரிஷிகளுக்குத்
துன்பத்தைத்தரும் அந்த ராவணனை வதம் செய்ய எவ்விதமான உபாயங்களைக் கைக்கொள்ள
வேண்டும்?”
एवमुक्तास्सुरास्सर्वे
प्रत्यूचुर्विष्णुमव्ययम्।
मानुषीं तनुमास्थाय रावणं जहि संयुगे।।1.16.3।।
இவ்வாறு விஷ்ணு கேட்டவுடன்,
தேவர்கள் அனைவரும், “மனித உருவம் எடுத்துப் போரில் ராவணனைக் கொல்லுங்கள்” என்று
பதிலிறுத்தார்கள்.
स हि तेपे तपस्तीव्रं दीर्घकालमरिन्दम
।
येन तुष्टोऽभवद्ब्रह्मा लोककृल्लोकपूर्वज:।।1.16.4।।
“எதிரிகளை அழிப்பவரே!
ராவணன் நீண்ட காலம் செய்த தவத்தால், இந்த உலகம் உருவாவதற்கு முன்பே தோன்றிய படைப்புக்கடவுளான பிரம்மா மிகவும் மகிழ்ந்தார்.
सन्तुष्ट: प्रददौ तस्मै
राक्षसाय वरं प्रभु:। 04
नानाविधेभ्यो भूतेभ्यो भयं नान्यत्र मानुषात्।।1.16.5।।
अवज्ञाता: पुरा तेन वरदाने हि मानवा:। 105
மனிதர்களை ஒரு
பொருட்டாக மதிக்காத ராவணன், மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினத்தாலும், தனக்கு மரணம்
ஏற்படக்கூடாது என்று பிரம்மாவிடம் வரம் கேட்க, அவனுடைய தவத்தால் மகிழ்ந்த பிரம்மா,
அவன் கேட்ட படி, வரத்தை அருளினார்.
एवं
पितामहात्तस्माद्वरं प्राप्य स दर्पित:।।1.16.6।।
उत्सादयति लोकान्त्रीन् स्त्रियश्चाप्यपकर्षति ।
तस्मात्तस्य वधो दृष्टो मानुषेभ्य: परन्तप।।1.16.7।।
இந்த வரத்தைப்
பிரம்மாவிடம் இருந்து பெற்றபின்னர், அவனுடைய ஆணவம் அளவுக்கு மீறிப் போய், அவன்
மூன்று உலகங்களையும் அழிக்கப் புகுந்தான். பெண்களைப் பலவந்தமாகக் கவர்ந்து
சென்றான். ஆகவே, எதிரிகளைத் துன்புறுத்துபவரே! அவனுடைய மரணம் மனிதனால் தான்
சாத்தியம்.
इत्येतद्वचनं श्रुत्वा
सुराणां विष्णुरात्मवान्।
पितरं रोचयामास तदा दशरथं नृपम्।।1.16.8।।
இவ்வாறு தேவர்கள்
கூறியதைக்கேட்ட பகவான் விஷ்ணு, தசரத மன்னரைத் தனது தந்தையாராகத் தேர்ந்தெடுத்தார்.
स चाप्यपुत्रो
नृपतिस्तस्मिन्काले महाद्युति:।
अयजत्पुत्रियामिष्टिं पुत्रेप्सुररिसूदन:।।1.16.9।।
அதே நேரத்தில், ஒளி
பொருந்தியவரும், எதிரிகளை அழிக்கும் ஆற்றல் உடையவருமான தசரத மன்னர், புதல்வர்கள்
இல்லாததாலும், புதல்வர்களை வேண்டியும், புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தார்.
स कृत्वा निश्चयं
विष्णुरामन्त्र्य च पितामहम्।
अन्तर्धानं गतो देवै: पूज्यमानो महर्षिभि:।।1.16.10।।
இவ்வாறு (தசரதருக்கு மகன்களாகப்
பிறப்பதாக) தீர்மானித்த பிறகு, தேவர்களால் பூஜிக்கப்பட்ட விஷ்ணு, பிரம்ம தேவரிடம்
விடைபெற்றுக் கொண்டபின், அங்கிருந்து மறைந்தார்.
तो वै यजमानस्य पावकादतुलप्रभम्।
प्रादुर्भूतं महद्भूतं
महावीर्यं महाबलम्।।1.16.11।।
कृष्णं रक्ताम्बरधरं रक्तास्यं दुन्दुभिस्वनम्।
स्निग्धहर्यक्षतनुजश्मश्रुप्रवरमूर्धजम्।।1.16.12।।
शुभलक्षणसम्पन्नं दिव्याभरणभूषितम्।
शैलशृङ्गसमुत्सेथं दृप्तशार्दूलविक्रमम्।।1.16.13।।
दिवाकरसमाकारं दीप्तानलशिखोपमम्।
तप्तजाम्बूनदमयीं राजतान्तपरिच्छदाम्।।1.16.14।।
दिव्यपायससम्पूर्णां पात्रीं पत्नीमिव प्रियाम्।
प्रगृह्य विपुलां दोर्भ्यां स्वयं मायामयीमिव।।1.16.15।।
அந்த யாகம்
நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அந்த யாகத்தீயில் இருந்து, மாயா ஜாலம் போன்று, ஒப்பற்ற
ஒளிபொருந்திய, மகா பலசாலியான ஒருவர் வெளிவந்தார். அவர், கருப்பும் சிவப்பும் கலந்த
ஆடையை உடுத்துக் கொண்டிருந்தார். சிவந்த முகத்துடனும், முரசு போன்ற குரலுடனும், சிங்கத்தின்
பிடரியைப்போல மின்னுகின்ற பழுப்பு நிற ரோமங்களுடனும், தலையில் நல்ல முடியுடனும்
இருந்தார். மங்களகரமாகத் தோற்றமளித்த அவர், அற்புதமான அணிகலன் களை அணிந்திருந்தார்.
மலையின் உச்சியைப்போன்ற உயரத்துடனும், கம்பீரமான புலியைப்போன்ற நடையுடனும், சூரியனைப்போன்ற பிரகாசத்துடனும்,
எரியும் நெருப்பின் உச்சியைப் போன்று ஒளிர்ந்து கொண்டிருந்தார். இந்தத் தெய்வீக புருஷர்,
தன் இரு கைகளிலும், பாயசம் நிரம்பிய, வெள்ளி மூடி இட்ட, சொக்கத் தங்கத்தினால் ஆன
ஒரு பாத்திரத்தைத், தன் மனைவியை அன்புடன் அணைப்பதைப் போல, ஏந்திக்கொண்டிருந்தார்.
समवेक्ष्याब्रवीद्वाक्यमिदं
दशरथं नृपम्।
प्राजापत्यं नरं विद्धि मामिहाभ्यागतं नृप।।1.16.16।।
தசரத மன்னரைப் பார்த்து
அவர் கூறினார்: “அரசே! பிரஜாபதியான பிரம்ம தேவரால் அனுப்பப் பட்டு நான் இங்கு
வந்துள்ளேன். “
तत: परं तदा राजा
प्रत्युवाच कृताञ्जलि:।
भगवन् स्वागतं तेऽस्तु किमहं करवाणि ते।।1.16.17।।
இரு கைகளையும்
கூப்பிக்கொண்டு தசரத மன்னர் கூறினார்:
“பகவானே! தங்கள் வரவு
நல் வரவாகுக! நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?”
अथो पुनरिदं वाक्यं
प्राजापत्यो नरोऽब्रवीत्।
राजन्नर्चयता देवानद्य प्राप्तमिदं त्वया।।1.16.18।।
பிரஜாபதி பிரம்மாவால்
அனுப்பப்பட்ட அந்தத் தேவர் கூறினார்: “அரசே! தாங்கள் தேவதைகளுக்குச் செய்த
பூஜையின் பலனாக, இந்தப் பாயசம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
इदं तु नृपशार्दूल
पायसं देवनिर्मितम्।
प्रजाकरं गृहाण त्वं धन्यमारोग्यवर्धनम्।।1.16.19।।
மன்னருள் சிறந்தவரே!
புதல்வர்கள் உண்டாவதற்காகவும், செல்வச்செழிப்பும், ஆரோக்கியமும் விருத்தி
அடைவதற்காகவும், தேவர்களால் தயாரிக்கப்பட்ட இந்தப் பாயசத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
भार्याणामनुरूपाणामश्नीतेति प्रयच्छ वै।
तासु त्वं प्राप्स्यसे पुत्रान्यदर्थं यजसे नृप।।1.16.20।।
“அரசே! புதல்வர்களை
வேண்டி இந்த யாகம் செய்திருக்கிறீர்கள். இந்தப் பாயசத்தைத் தங்களுடைய மனைவிகளுக்கு
உண்ணக் கொடுங்கள். அவர்கள் மூலம் தங்களுக்குப் புதல்வர்கள் பிறப்பார்கள்.
तथेति नृपति:
प्रीतश्शिरसा प्रतिगृह्यताम्।
पात्रीं देवान्नसम्पूर्णां देवदत्तां हिरण्मयीम्।।1.16.21।।
அரசரும், “அப்படியே
ஆகட்டும்” என்று கூறித் தங்கப்பாத்திரத்தில் இருந்த, தேவர்களால் தயாரித்து
வழங்கப்பட்ட அந்தப் பாயசத்தைத் தலை குனிந்து வணங்கி, மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்.
अभिवाद्य च तद्भूतमद्भुतं प्रियदर्शनम्।
मुदा परमया युक्तश्चकाराभिप्रदक्षिणम्।।1.16.22।।
அளவுக்கு மீறிய
மகிழ்ச்சியுடன், அந்த அற்புதமான தேவருக்கு நமஸ்காரம் செய்து, அவரை வலம் வந்தார்.
ततो दशरथ: प्राप्य
पायसं देवनिर्मितम्।
बभूव परमप्रीत: प्राप्य वित्तमिवाधन:।।1.16.23।।
அந்தப் பாயசத்தைப்
பெற்றுக்கொண்ட தசரதர், வறியவனுக்குச் செல்வம் கிடைத்தாற்போல் மிகவும் மகிழ்ந்தார்.
ततस्तदद्भुतप्रख्यं भूतं परमभास्वरम्।
संवर्तयित्वा तत्कर्म तत्रैवान्तरधीयत।।1.16.24।।
அந்த ஒளி பொருந்திய தேவர்,
அந்தப் பாயசப் பாத்திரத்தை மன்னருக்குக் கொடுக்கும் கடமையை முடித்த பின்னர்,
அங்கிருந்து மறைந்தார்.
हर्षरश्मिभिरुद्योतं
तस्यान्त:पुरमाबभौ।
शारदस्याभिरामस्य चन्द्रस्येव नभोंऽशुभि:।।1.16.25।।
தசரதருடைய
அந்தப்புரமானது, மகிழ்ச்சிக் கிரணங்களால் பிரகாசமடைந்து, சரத்காலத்துச்
சந்திரனைப்போல் ஒளிர்ந்தது.
सोऽन्त:पुरं प्रविश्यैव
कौसल्यामिदमब्रवीत्।
पायसं प्रतिगृह्णीष्व पुत्रीयं त्विदमात्मन:।।1.16.26।।
அந்தப்புரத்துக்குள்
நுழைந்து, கௌசல்யையை அழைத்து,
“உனக்குப் புத்திரர்களை
அளிக்கும் சக்தியுடைய இந்தப் பாயஸத்தைப் பெற்றுக்கொள்.” என்று கூறினார்.
कौसल्यायै नरपति:
पायसार्धं ददौ तदा।
अर्धादर्धं ददौ चापि सुमित्रायै नराधिप:।।1.16.27।।
कैकेय्यै चावशिष्टार्धं ददौ पुत्रार्थकारणात्।
प्रददौ चावशिष्टार्धं पायसस्यामृतोपमम्।।1.16.28।।
अनुचिन्त्य सुमित्रायै पुनरेव महीपति:।
एवं तासां ददौ राजा भार्याणां पायसं पृथक् ।।1.16.29।।
பின்னர், தசரதர்,
அந்தப் பாயசத்தில் பாதியைக் கௌசல்யைக்கும், மீதியிருந்ததில் பாதியை (நாலில் ஒரு
பங்கு) சுமித்திரைக்கும், பின்னும் மீதியிருந்ததில் பாதியைக்( எட்டில் ஒரு பங்கு)
கைகேயிக்கும் கொடுத்தார். மீண்டும் யோசித்து, இன்னமும் மீதமிருந்த எட்டில் ஒரு
பங்கு பாயசத்தை, மீண்டும் சுமித்திரைக்குக் கொடுத்தார். இவ்வாறு அந்தப் பாயசம்
முழுவதையும் தன் மனைவியருக்குத் தனித்தனியே பங்கிட்டுக் கொடுத்தார்.
तास्त्वेतत्पायसं
प्राप्य नरेन्द्रस्योत्तमास्स्त्रय:।
सम्मानं मेनिरे सर्वां: प्रहर्षोदितचेतस:।।1.16.30।।
மகிழ்ச்சியுடன் அந்தப்
பாயசத்தைப் பெற்றுக்கொண்ட தசரதரின் நல்லொழுக்க மிக்க மூன்று மனைவிகளும், தாங்கள்
கௌரவிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள்.
ततस्तु ता: प्राश्य
तदुत्तमास्त्रियो
महीपतेरुत्तमपायसं पृथक्।
हुताशनादित्यसमानतेजसो
ऽचिरेण गर्भान्प्रतिपेदिरे तदा।।1.16.31।।
தசரதனின் மிகச்சிறந்த
அந்த மனைவியர் மூவரும், அந்த அற்புதமான பாயசத்தை உண்டவுடன், நெருப்பைப் போலவும்,
சூரியனைப் போலவும் பிரகாசித்தனர். சிறிது காலத்தில் மூவரும் கருவுற்றனர்.
ततस्तु राजा
प्रसमीक्ष्य ता: स्त्रिय:
प्ररूढगर्भा: प्रतिलब्धमानस:।
बभूव हृष्टस्त्रिदिवे यथा हरि:
सुरेन्द्रसिद्धर्षिगणाभिपूजित:।।1.16.32।।
தன்னுடைய மனைவிகள்
கருவுற்றிருப்பதைக் கண்ட தசரத மன்னர், இந்திரனாலும், சித்தர்களாலும், ரிஷிகளாலும்,
பூஜிக்கப் பட்ட விஷ்ணுவைப் போல் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे षोडशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பதினாறாவது ஸர்க்கம், நிறைவு
பெறுகிறது.
***
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment