Wednesday, 6 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 17

( பிரம்மாவின் ஆணைப்படி, தேவர்கள் பல விதமான வானரங்களாகவும், கரடிகளாகவும், பிறக்கிறார்கள். )

पुत्रत्वं तु गते विष्णौ राज्ञस्तस्य सुमहात्मन:।
उवाच देवतास्सर्वास्स्वयम्भूर्भगवानिदम्।।1.17.1।।

பகவான் விஷ்ணு, மன்னருள் சிறந்த தசரதரின் புதல்வனாகப் பிறக்கத் தீர்மானித்தவுடன், சுயம்புவாகிய பிரம்மதேவர், தேவர்களை அழைத்து இவ்வாறு கூறினார்.

 

सत्यसन्धस्य वीरस्य सर्वेषान्नो हितैषिण:।
विष्णोस्सहायान्बलिनस्सृजध्वं कामरूपिण:।।1.17.2।।

“சத்திய சந்தரும், வீரரும், நம் அனைவரின் நலம் விரும்புவருமான  விஷ்ணுவுக்குத் துணையாக, பலம் நிறைந்தவர்களாகவும், நினைத்தாற் போல் உருவம் எடுத்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாகவும் உள்ளவர்களைப் பிறக்கச்செய்யுங்கள்.

 

मायाविदश्च शूरांश्च वायुवेगसमाञ्जवे।
नयज्ञान्बुद्धिसम्पन्नान्विष्णुतुल्यपराक्रमान्।।1.17.3।।

असंहार्यानुपायज्ञान् दिव्यसंहननान्वितान्।
सर्वास्त्रगुणसम्पन्नानमृतप्राशनानिव।।1.17.4।।

अप्सरस्सु च मुख्यासु गन्धर्वाणां तनूषु च ।
सृजध्वं हरिरूपेण पुत्रांस्तुल्यपराक्रमान्।।1.17.5।।

மாய வித்தைகளில் தேர்ந்த, தைரியம் நிறைந்த, காற்றைப்  போன்ற வேகமுடைய, அறிவாற்றலும், அரசியல் ஞானமும் நிறைந்த, விஷ்ணுவுக்கு நிகரான பராக்கிரமம் உள்ள, துணிந்து செயலாற்றுகிற, போரில் வெல்வதற்கான எல்லா வகை உபாயங்களையும் அறிந்த, தெய்வீகமான உடல் கொண்ட, எல்லா வகையான ஆயுதங்களையும் தோற்கச்செய்யும் திறமை பொருந்திய, அமுதம் அருந்தியவர்களைப் போல் நீண்ட ஆயுள் உள்ள மகன்களை, அப்சர, கந்தர்வப் பெண்களின் தலைவிகளுடைய கர்ப்பத்தில், வானர வடிவத்தில் உருவாக்குங்கள்.

 

पूर्वमेव मया सृष्टो जाम्बवानृक्षपुङ्गव:।
जृम्भमाणस्य सहसा मम वक्त्रादजायत।।1.17.6।।

முன்னமேயே, ஒரு முறை நான் கொட்டாவி விட்ட பொழுது, என்னுடைய வாயில் இருந்து, ஜாம்பவான் என்னும் கரடிகளின் தலைவன் படைக்கப்பட்டான்.”

 

ते तथोक्ता भगवता तत्प्रतिश्रुत्य शासनम्।
जनयामासुरेवं ते पुत्रान्वानररूपिण:।।1.17.7।।.

 

பிரம்ம தேவரின் அறிவுறுத்தலின் படி, அந்த தேவர்கள் அனைவரும், வானர வடிவத்தில் புத்திரர்களைப் பிறப்பித்தார்கள்.


ऋषयश्च महात्मानस्सिद्धविद्याधरोरगा:।
चारणाश्च सुतान्वीरान्ससृजुर्वनचारिण:।।1.17.8।।

மகாத்மாக்களான ரிஷிகளும், சித்தர்களும், வித்யாதரர்களும், உரகர்களும், சாரணர்களும், வானர வடிவில் வீரம் நிறைந்த புதல்வர்களை உருவாக்கினார்கள். அந்த வானரர்கள் காட்டில் வசிக்கலானார்கள்.

 

वानरेन्द्रं महेन्द्राभमिन्द्रो वालिनमूर्जितम्।
सुग्रीवं जनयामास तपनस्तपतां वर:।।1.17.9।।

தேவேந்திரன் மகேந்திர மலையை ஒத்த வலிமையுடைய உடலைக்கொண்ட வாலி என்னும் வானரர்களின் தலைவனைப் படைத்தார். வெப்பம் கொடுப்பவைகளில் தலை சிறந்தவனாகிய சூரியன், சுக்கிரீவனைப் படைத்தார்.

 

बृहस्पतिस्त्वजनयत्तारं नाम महाहरिम्।
सर्ववानरमुख्यानां बुद्धिमन्तमनुत्तमम्।।1.17.10।।

வானர்களின் தலைவர்களுக்குள், அறிவாற்றலில் அவனுக்கு இணையில்லாத தாரன் என்னும் பெரிய வானரனை பிருஹஸ்பதி உருவாக்கினார்.

 

धनदस्य सुतश्श्रीमान् वानरो गन्धमादन:।
विश्वकर्मात्वजनयन्नलं नाम महाहरिम्।।1.17.11।।

குபேரனின் மகனாக கந்தமாதனன் என்னும் வானரனும், விஸ்வகர்மாவின் மகனாக நலன் என்னும் பெரிய வானரனும் பிறந்தார்கள்.

 

पावकस्य सुतश्श्रीमान् नीलोऽग्निसदृशप्रभ:।
तेजसा यशसा वीर्यादत्यरिच्यत वानरान्।।1.17.12।।

நெருப்பினை ஒத்த ஒளியுடையவனும், வலிமையிலும், திறமையிலும், பிறர் அனைவருக்கும் மேலானவனுமான  நீலன் என்னும் வானரனை அக்கினி உருவாக்கினார்.

 

रूपद्रविणसम्पन्नावश्विनौ रूपसम्मतौ।
मैन्दं च द्विविदं चैव जनयामासतुस्स्वयम्।।1.17.13।।

மிகச்சிறந்த அழகு பொருந்திய அஸ்வினி தேவர்கள், மைந்தனையும், த்விவிந்தனையும் உருவாக்கினார்கள்.

 

वरुणो जनयामास सुषेणं वानरर्षभम्।
शरभं जनयामास पर्जन्यस्तु महाबलम्।।1.17.14।।

வருணன் சுஷேணன் என்னும் பெரிய வானர வீரரையும், பர்ஜன்யன் என்னும் மழைக்கடவுள் வலிமை மிகுந்த சரபன் என்னும் வானரையும் பிறப்பித்தனர்.

 

मारुतस्यात्मजश्श्रीमान्हनुमान्नाम वीर्यवान् ।
वज्रसंहननोपेतो वैनतेयसमो जवे।।1.17.15।।

வாயு தேவன், அழகும், வலிமையும் நிறைந்த, வைரம் போல உறுதியான உடலைப்பெற்ற, வேகத்தில் கருடனுக்கு இணையான ஹனுமானைப் பிறப்பித்தார்.

 

ते सृष्टा बहुसाहस्रा दशग्रीववधे रता:।
अप्रमेयबला वीरा विक्रान्ता: कामरूपिण:।।1.17.16।।

இவ்வாறு, அளவில்லாத வலிமையும், தைரியமும், நினைத்தாற் போல் உருவத்தை மாற்றிக்கொள்ளும் திறமும் கொண்ட ஆயிரக்கணக்கான வீரர்கள் ராவணனைக் கொல்வதற்காக உருவாக்கப் பட்டார்கள்.

 

मेरुमन्दरसङ्काशा वपुष्मन्तो महाबला:।
ऋक्षवानरगोपुच्छा: क्षिप्रमेवाभिजज्ञिरे।।1.17.17।।

மேரு மலையையும், மந்தர மலையையும் ஒத்த வலிமையான உடலுடைய கரடிகளும், பசுவின் வாலைப்போன்ற வாலுடைய வானரர்களும் விரைவிலேயே உண்டானார்கள்.

 

यस्य देवस्य यद्रूपं वेषो यश्च पराक्रम:।
अजायत समस्तेन तस्य तस्य सुत: पृथक्।।1.17.18।।

(அப்படிப் பிறந்தவர்கள்) எந்தத் தேவர்களால் பிறப்பிக்கப் பட்டார்களோ, அந்தத் தேவர்களின் உருவத்தையும், வலிமையையும் படைத்திருந்தார்கள்.

 

गोलाङ्गूलीषु चोत्पन्ना: केचित्सम्मतविक्रमा:।
ऋक्षीषु च तथा जाता वानरा: किन्नरीषु च।।1.17.19।।

சில பிரசித்தமான வானரர்கள் வானரப் பெண்களுக்குப் பிறந்தார்கள். வேறு சிலர் கரடிப் பெண்களுக்கும், கின்னரப் பெண்களுக்கும் பிறந்தார்கள்.

 

देवा महर्षिगन्धर्वास्तार्क्ष्या यक्षा यशस्विन:।
नागा: किम्पुरुषाश्चैव सिद्धविद्याधरोरगा:।।1.17.20।।

बहवो जनयामासुर्हृष्टास्तत्र सहस्रश:।
वानरान्सुमहाकायान्सर्वान्वै वनचारिण:।।1.17.21।।

अप्सरस्सु च मुख्यासु तथा विद्याधरीषु च।
नागकन्यासु च तथा गन्धर्वीणां तनूषु च ।।1.17.22।।

தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், கருடர்களும், கிம்புருஷர்களும், சித்தர்களும், வித்யாதரர்களும், உரகர்களும், மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். முக்கியமான அப்சரஸ்களுக்கும், வித்யாதரிகளுக்கும், நாகப் பெண்களுக்கும், கந்தர்வப் பெண்களுக்கும் பிறந்த மிகப் பெரிய தோற்றம் கொண்ட வானரர்கள் காடெங்கிலும் அலைந்து திரிந்தார்கள் .

 

कामरूपबलोपेता यथाकामं विचारिण:।
सिंहशार्दूलसदृशा दर्पेण च बलेन च।।1.17.23।।

நினைத்த மாத்திரத்தில், நினைத்த உருவம் எடுத்துக் கொள்ளும் திறமையும், வலிமையும் பெற்றிருந்த அவர்கள் சிங்கங்களைப் போலவும், புலிகளைப் போலவும், காடெங்கிலும், கர்வத்துடன், சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருந்தார்கள்.

 

शिलाप्रहरणास्सर्वे सर्वे पादपयोधिन:।।1.17.24।।
नखदंष्ट्रायुधास्सर्वे सर्वे सर्वास्त्रकोविदा:।

அவர்கள் அனைவரும், பாறைகளைக்கொண்டும், மரங்களைக் கொண்டும், நகங்கள் மற்றும் பற்களைக் கொண்டும், போரிடுவதில் வல்லவராக இருந்தார்கள். (அது மட்டுமன்றி), எல்லாவித ஆயுதங்களையும் உபயோகிப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.

 

विचालयेयुश्शैलेन्द्रान्भेदयेयुस्स्थिरान्द्रुमान्।
क्षोभयेयुश्च वेगेन समुद्रं सरितां पतिम्।।1.17.25।।

மலைகளை அசைக்கவும், ஆழமான வேர்களையுடைய மரங்களை வேருடன் பிடுங்கவும், தங்கள் வேகத்தால், நதிகளின் தலைவனாகிய சமுத்திரத்தைக் கலக்கவும் தேவையான பலமும் திறமையும் அவர்களிடம் இருந்தன.

 

दारयेयु: क्षितिं पद्भ्यामाप्लवेयुर्महार्णवम्।
नभ:स्थलम् विशेयुश्च गृह्णीयुरपि तोयदान्।।1.17.26।।

அவர்களால் தங்கள் பாதங்களால் பூமியைப் பிளக்க முடியும்; பலம் பொருந்திய சமுத்திரத்தை ஒரே தாண்டலில் கடக்க முடியும்; வானத்துக்குள் நுழைய முடியும்; மேகங்களைக்கூடக் கையில் பிடிக்க முடியும்.

 

गृह्णीयुरपि मातङ्गान्मत्तान्प्रव्रजतो वने।
नर्दमानाश्च नादेन पातयेयुर्विहङ्गमान्।।1.17.27।।

காட்டில் வசிக்கும் மதம் பிடித்த யானைகளை அவர்களால் பிடிக்க முடியும். தங்களுடைய பலமான கர்ஜனையால், வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை வீழ்த்த முடியும்.

 

ईदृशानां प्रसूतानि हरीणां कामरूपिणाम्।
शतं शतसहस्राणि यूथपानां महात्मनाम्।।1.17.28।।

நினைத்த உருவத்தை எடுக்கும் ஆற்றலுடைய, சிறந்த படைத் தளபதிகளாக இருக்கும் திறமை உடைய,  இப்படிப்பட்ட ஒரு கோடி வானரர்கள் பிறந்தார்கள்.


ते प्रधानेषु यूथेषु हरीणां हरियूथपा:।
बभूवुर्यूथपश्रेष्ठा वीरांश्चाजनयन् हरीन्।।1.17.29।।

அவர்கள் முக்கியமான படைகளுக்குத் தலைவர்களாக ஆனார்கள். அவர்கள், சிறந்த படைத்தலைவர்களாகக் கூடிய, வீரம் நிறைந்த பல வானரர்களைப் பிறப்பித்தார்கள்.

 

अन्ये ऋक्षवत: प्रस्थानवतस्थु स्सहस्रश:।
अन्ये नानाविधान्शैलान्भेजिरे काननानि च।।1.17.30।।

கரடிகள் நிறைந்த பீடபூமிகளில் ஆயிரக்கணக்கான வானரர்கள் வசித்தார்கள். இன்னும் பலர் வேறு வேறு குன்றுகளிலும், காடுகளிலும் வாசம் செய்தார்கள்.

 

सूर्यपुत्रं च सुग्रीवं शक्रपुत्रं च वालिनम्।
भ्रातरावुपतस्थुस्ते सर्व एव हरीश्वरा:।।1.17.31।।

नलं नीलं हनूमन्तमन्यांश्च हरियूथपान्। 3

.

சகோதரர்களாகிய (இந்திரனின் புதல்வனாகிய) வாலிக்கும், (சூர்யனின் புதல்வனாகிய) சுக்கிரீவனுக்கும் அருகில், நலன், நீலன், ஹனுமான் மற்றும் பிற படைத்தலைவர்கள் வசித்தார்கள்.

 

ते तार्क्ष्यबलसम्पन्नास्सर्वे युद्धविशारदा:।
विचरन्तोऽर्दयन्दर्पात्सिंहव्याघ्रमहोरगान्।।1.17.32।।

கருடனைப் போன்ற வலிமை படைத்தவர்களும், யுத்தக் கலையில் தேர்ந்து விளங்கியவர்களுமான அவர்கள், கர்வத்துடன், கொடிய சிங்கங்களையும், புலிகளையும், பலம் பொருந்திய பாம்புகளையும் நசுக்கினார்கள்.

 

 

तांश्च सर्वान्महाबाहुर्वाली विपुलविक्रम:।
जुगोप भुजवीर्येण ऋक्षगोपुच्छवानरान्।।1.17.33।।

வலிமையான கரங்களும், எல்லையற்ற வலிமையும் உடைய வாலி, தனது வலிய கரங்களால் அந்தக் கரடிகளையும், (பசுவின் வாலைப் போல வாலுடைய) வானரர்களையும், பாதுகாத்து வந்தார்.

 

तैरियं पृथिवी शूरैस्सपर्वतवनार्णवा।
कीर्णा विविधसंस्थानैर्नानाव्यञ्जनलक्षणै:।।1.17.34।।

பலவிதமான உருவங்களுடனும், பலவிதமான குணங்களுடனும், பிறந்த அவர்கள் இந்த உலகில் உள்ள மலைகள், காடுகள், கடல்கள் அனைத்தையும் வியாபித்தார்கள்.

 

तैर्मेघबृन्दाचलकूटकल्पै:
महाबलैर्वानरयूथपालै:।

बभूव भूर्भीमशरीररूपै
स्समावृता रामसहायहेतो:।।1.17.35।।

ராமனுக்கு உதவியாக, இந்த உலகம் முழுவதும், மேகங்களைப் போன்றும், மலைகளைப்போன்றும் , அளவில்லாத வலிமையும், பயங்கரமான உருவங்களும், முகங்களும் உடைய அந்தப் படைத் தலைவர்களால் நிரம்பியது.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे सप्तदशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பதினேழாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

 

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...