Friday, 8 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 18

(தசரதர் ருஷ்யஸ்ருங்கருக்கும், யாகத்துக்கு வந்திருந்த அரசர்களுக்கும் விடை கொடுத்து அவரவர்களுடைய இடத்துக்கு அனுப்பி வைக்கிறார். தானும், தன் மனைவிகளுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். –– ராமன், லட்சுமணன், பரதன் , சத்ருக்னன் ஆகியோரின் பிறப்பு, பெயர்ச்சூட்டு விழா, அவர்களுடைய குண நலன்களின் வர்ணனை, விஸ்வாமித்திரர் தசரதரைச் சந்திக்க அயோத்திக்கு வருகை.)


निर्वृत्ते तु क्रतौ तस्मिन्हयमेधे महात्मन:।
प्रतिगृह्य सुरा भागान्प्रतिजग्मुर्यथागतम्।।1.18.1।।

மகாத்மாவான தசரத மன்னர், அஸ்வமேத யாகத்தை  நிறைவேற்றியதும், தேவர்கள் தங்களுக்குரிய ஹவிர்பாகங்களைப் பெற்றுக்கொண்டு, தங்கள் தங்கள் இடத்துக்குத் திரும்பினார்கள்.


समाप्तदीक्षानियम: पत्नीगणसमन्वित:।
प्रविवेश पुरीं राजा सभृत्यबलवाहन:।।1.18.2।।

அஸ்வமேத யாகத்துக்குரிய சடங்குகளை நிறைவேற்றிய பின்னர், தசரத மன்னர் தன் மனைவிமார்களுடனும், தனது உதவியாட்களுடனும், படை, தேர் ஆகியவற்றுடனும் அயோத்திக்குத் திரும்பினார்.

 

यथार्हं पूजितास्तेन राज्ञा वै पृथिवीश्वरा:।
मुदिता: प्रययुर्देशान्प्रणम्य मुनिपुङ्गवम्।।1.18.3।।

தசரதரால், தக்க முறையில் கௌரவிக்கப்பட்ட அரசர்கள், முனிவர்களுள் சிறந்த வசிஷ்டரை வணங்கிய பின், தங்கள் நாட்டுக்குத் திரும்பினார்கள்.

 

श्रीमतां गच्छतां तेषां स्वपुराणि पुरात्तत:।
बलानि राज्ञां शुभ्राणि प्रहृष्टानि चकाशिरे।।1.18.4।।

அந்த அரசர்கள் அயோத்தியில் இருந்து தங்களுடைய நாட்டுக்குத் திரும்பிய போது, அவர்களுடைய படைகள் மகிழ்ச்சியில் திளைத்தன.

 

गतेषु पृथिवीशेषु राजा दशरथस्तदा।
प्रविवेश पुरीं श्रीमान् पुरस्कृत्य द्विजोत्तमान्।।1.18.5।।

அரசர்கள் எல்லாரும் அவரவர் நாட்டுக்குத் திரும்பிய பிறகு, சிறந்த அந்தணர்கள் முன்னே செல்ல, தசரத மன்னர் அயோத்தியில் பிரவேசித்தார்.

 

शान्तया प्रययौ सार्धमृश्यशृङ्गस्सुपूजित:।
अन्वीयमानो राज्ञाऽथ सानुयात्रेण धीमता।।1.18.6।।

பிறகு, அரசரால் உரிய முறையில் கௌரவிக்கப்பட்ட ருஷ்யஸ்ருங்க முனிவர், தன் மனைவி சாந்தாவுடனும், ரோமபாத மன்னர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களுடனும், தன் நாட்டுக்குத் திரும்பினார்.

 

एवं विसृज्य तान्सर्वान्राजा सम्पूर्णमानस:।
उवास सुखितस्तत्र पुत्रोत्पत्तिं विचिन्तयन्।।1.18.7।।

விருந்தினர்கள் அனைவரும் திரும்பிச் சென்ற பிறகு, புத்திரர்களை வேண்டித் தான் செய்த வேள்வி பூர்ணமடைந்த திருப்தியுடன், தசரத மன்னர், தனக்குப் பிறக்கப்போகும் புத்திரர்களைப் பற்றி யோசித்துக்கொண்டு,  சுகமாக வசிக்கலானார்.

 

ततो यज्ञे समाप्ते तु ऋतूनां षट्समत्ययु:।
ततश्च द्वादशे मासे चैत्रे नावमिके तिथौ।।1.18.8।।

नक्षत्रेऽदितिदैवत्ये स्वोच्चसंस्थेषु पञ्चसु।
ग्रहेषु कर्कटे लग्ने वाक्पताविन्दुना सह।।1.18.9।।

प्रोद्यमाने जगन्नाथं सर्वलोकनमस्कृतम्।
कौसल्याऽजनयद्रामं सर्वलक्षणसंयुतम्।।1.18.10।।

विष्णोरर्धं महाभागं पुत्रमैक्ष्वाकुवर्धनम्।

யாகம் முடிந்து ஒரு வருடம் ஆயிற்று. சித்திரை மாதத்தில் , சுக்லபக்ஷத்தில், புனர்வசு நக்ஷத்திரத்தில், நவமி திதியில், கர்க்கடக லக்னத்தில், ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருக்க, குரு, சந்திரனுடன் உதயமாகும் போது, உலகுக்கெல்லாம் தலைவரும், உலகனைத்தாலும் வணங்கப் படுபவருமான விஷ்ணுவின் பாதி அம்சத்துடன், மங்களகரமான ராமனை, இக்ஷ்வாகு வம்சத்தை விளங்கச் செய்வதற்காக, கௌசல்யை பெற்றெடுத்தாள்.

 

कौसल्या शुशुभे तेन पुत्रेणामिततेजसा।।1.18.11।।


यथा वरेण देवानामदितिर्वज्रपाणिना।

கௌசல்யை தன் மகனின் எல்லையற்ற பிரகாசத்தில், வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனைப் பெற்ற அதிதியைப் போலப் பிரகாசித்தாள்.

 

भरतो नाम कैकेय्यां जज्ञे सत्यपराक्रम:।।1.18.12।।
साक्षाद्विष्णोश्चतुर्भागस्सर्वैस्समुदितो गुणै:।

விஷ்ணுவின்  நான்கில் ஒரு அம்சமாய், சத்தியத்தின் வலிமையுடன், அனைத்து குணங்களும் கூடியவனாய், கைகேயிக்கு, பரதன் பிறந்தான்.

 

अथ लक्ष्मणशत्रुघ्नौ सुमित्राऽजनयत्सुतौ।।1.18.13।।
वीरौ सर्वास्त्रकुशलौ विष्णोरर्धसमन्वितौ।

பின்னர், வீரம் பொருந்தியவர்களாகவும், எல்லாவித அஸ்திரங்களையும் உபயோகிப்பதில் திறமை பெற்றவர்களாகவும், விஷ்ணுவின் அம்சம் பொருந்தியவர்களாகவும் இருந்த, லக்ஷ்மண சத்துருக்கினர்களை சுமித்திரை பெற்றெடுத்தாள்.

 

पुष्ये जातस्तु भरतो मीनलग्ने प्रसन्नधी:।।1.18.14।।
सार्पे जातौ च सौमित्री कुलीरेऽभ्युदिते रवौ।

தூய்மையான அறிவு கொண்ட பரதன், பூச நக்ஷத்திரத்திலும், மீன லக்கினத்திலும் பிறந்தான். லக்ஷ்மணனும், சத்துருக்கினனும், ஆயில்ய நக்ஷத்திரத்திலும், கர்க்கடக லக்கினத்திலும் பிறந்தார்கள்.

 

 राज्ञ: पुत्रा महात्मानश्चत्वारो जज्ञिरे पृथक्।।1.18.15।।

गुणवन्तोऽनुरूपाश्च रुच्या प्रोष्ठपदोपमा:।

இவ்வாறு, மகாத்மாவான அரசருக்கு, நற்குணங்கள் நிறைந்த, பூரட்டாதி, உத்திரட்டாதி நக்ஷத்திரங்களைப்போலப் பிரகாசமாக, நான்கு புதல்வர்கள் அடுத்தடுத்துப் பிறந்தார்கள்.

 

जगु: कलं च गन्धर्वा ननृतुश्चाप्सरोगणा:।।1.18.16।।
देवदुन्दुभयो नेदु: पुष्पवृष्टिश्च खाच्च्युता।

उत्सवश्च महानासीदयोध्यायां जनाकुल:।।1.18.17।।

(அந்த மகிழ்ச்சியில் ) கந்தர்வர்கள் தங்கள் இனிமையான குரலில் பாடினார்கள்; அப்ஸரப் பெண்கள்  நடனமாடினார்கள்; தேவதுந்துபிகள் ஒலியெழுப்பின; வானத்திலிருந்து மலர்மாரி பொழிந்தது; அயோத்தி நகரத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களைக் காண பெருங்கூட்டமாக மக்கள் கூடினார்கள்.

 

रथ्याश्च जनसम्बाधा नटनर्तकसङ्कुला: ।
गायनैश्च विराविण्यो वादनैश्च तथाऽपरै:।।1.18.18।।

சாலைகள் எங்கும், மக்கள், நடிகர்கள், நடனமாடுபவர்கள் ஆகியோர் நிறைந்திருந்தார்கள். பாடுபவர்கள், நடனமாடுபவர்கள், வாத்தியங்களை வாசிப்பவர்கள், மற்றும் பிறரால் எழுந்த பேரொலி அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

 

प्रदेयांश्च ददौ राजा सूतमागधवन्दिनाम्।
ब्राह्मणेभ्यो ददौ वित्तं गोधनानि सहस्रश:।।1.18.19।।

அரசர் தன்னைத் துதித்துப் பாடும் சூதர்களுக்கும், குலமுறை கூறிப்புகழும் மாகதர்களுக்கும், ஸ்தோத்திரம் செய்யும் வந்திகளுக்கும் நிறைய வெகுமதிகள் கொடுத்தார். அந்தணர்களுக்கு ஆயிரக்கணக்கில் பசுக்களையும், பிற விலை உயர்ந்த பரிசுகளையும் அளித்தார்.

 

अतीत्यैकादशाहं तु नामकर्म तथाऽकरोत्।
ज्येष्ठं रामं महात्मानं भरतं कैकयीसुतम्।।1.18.20।।

सौमित्रिं लक्ष्मणमिति शत्रुघ्नमपरं तथा।
वसिष्ठ: परमप्रीतो नामानि कृतवान् तदा ।।1.18.21।।

பதினோரு நாட்கள் கழிந்த பிறகு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. மிகுந்த மகிழ்ச்சியுடன், குரு வசிஷ்டர் கௌசல்யையின் புதல்வனுக்கு ராமன் என்றும், கைகேயியின் புதல்வனுக்கு பரதன் என்றும், சுமித்திரையின் புதல்வர்களுக்கு லக்ஷ்மணன், சத்துருக்கினன் என்றும் பெயர் சூட்டினார்.

 

ब्राह्मणान्भोजयामास पौराञ्जानपदानपि।
अददाद्ब्रह्मणानां च रत्नौघममितं बहु।।1.18.22।।

तेषां जन्मक्रियादीनि सर्वकर्माण्यकारयत्।

அந்தணர்களுக்கும், நகரத்திலும், கிராமங்களிலும் வசிப்போருக்கும் உணவு வழங்கப்பட்டது. தசரதர் அந்தணர்களுக்கு ஏராளமான ரத்தினங்களைத் தானமாக வழங்கினார். குழந்தை பிறந்த போது செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் முறையே நிறைவேற்றப்பட்டன.

 

तेषां केतुरिव ज्येष्ठो रामो रतिकर: पितु:।।1.18.23।।


बभूव भूयो भूतानां स्वयम्भूरिव सम्मत:।

அவர்களுள், மூத்தவனான ராமன் ஒரு த்வஜத்தைப் போல, தன் தந்தையாருக்கு மிகவும் பிரியமானவனாகவும், பிரம்மாவைப் போல, அனைத்து மக்களாலும், மதிக்கப் படுபவனாகவும் விளங்கினான்.

 

सर्वे वेदविदश्शूरास्सर्वे लोकहिते रता:।।1.18.24।।


सर्वे ज्ञानोपसम्पन्नास्सर्वे समुदिता गुणै:।

அனைத்துப் புதல்வர்களும், வேதங்களை நன்றாகக் கற்றவர்களாகவும், வீரம் நிரம்பியவர்களாகவும், நல்லறிவும், நற்குணங்களும், பொருந்தியவர்களாகவும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.

 

तेषामपि महातेजा रामस्सत्यपराक्रम:।।1.18.25।।


इष्टस्सर्वस्य लोकस्य शशाङ्क इव निर्मल:।

அவர்கள் அனைவரிலும், ராமன் மிகவும் ஒளி பொருந்தியவனாகவும், சத்தியத்தின் வலிமை நிறைந்தவனாகவும், தூய நடத்தை உள்ளவனாகவும், சந்திரனைப் போல இந்த உலகம் முழுவதற்கும், பிரியமானவனாக விளங்கினான்.

 

गजस्कन्धेऽश्वपृष्ठे च रथचर्यासु सम्मत:।।1.18.26।।


धनुर्वेदे च निरत: पितृशुश्रूषणे रत:।

ராமன் யானையேற்றம், குதிரையேற்றம், தேரோட்டுதல், வில் வித்தை ஆகியவற்றில் எப்போதும் ஈடுபட்டிருந்தாலும், தன் தாய் தந்தையருக்குப் பிரியமுடன் சேவை  செய்து வந்தான்.

 

बाल्यात्प्रभृति सुस्निग्धो लक्ष्मणो लक्ष्मिवर्धन:।।1.18.27।।


रामस्य लोकरामस्य भ्रातुर्ज्येष्ठस्य नित्यश:।

செல்வத்தை வளர்க்கச்செய்யும் லக்ஷ்மணன், சிறு வயது முதலே, உலகனைத்துக்கும் பிரியமான, தனது மூத்த சகோதரனான ராமனிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தான்.

 

सर्वप्रियकरस्तस्य रामस्यापि शरीरत:।।1.18.28।।


लक्ष्मणो लक्ष्मिसम्पन्नो बहि:प्राण इवापर:।

ராமன் மங்களகரமான லக்ஷ்மணன் பால், தன் உடலைக்காட்டிலும், அதிக அன்பு கொண்டவனாய்த், தன்னுடைய உயிரே லக்ஷ்மணன் வடிவில் வெளியில் இருப்பது போல் நடந்து கொண்டான்.

 

न च तेन विना निद्रां लभते पुरुषोत्तम:।।1.18.29।।


मृष्टमन्नमुपानीतमश्नाति न हि तं विना।

மனிதருள் சிறந்த ராமன் லக்ஷ்மணன் அருகில் இல்லாவிட்டால், உறங்க மாட்டான். மிகவும் சுவையாக சமைக்கப்பட்ட உணவைக் கூட லக்ஷ்மணன் இல்லாமல் உண்ண மாட்டான்.

 

यदा हि हयमारूढो मृगयां याति राघव:।।1.18.30।।


तदैनं पृष्ठतोऽन्वेति सधनु: परिपालयन्।

ராமன் குதிரை மேல் ஏறிக்கொண்டு வேட்டைக்குச் செல்லும் போதெல்லாம், லக்ஷ்மணனும் தனது வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு ராமனைப் பின் தொடர்ந்தான்.

 

भरतस्यापि शत्रुघ्नो लक्ष्मणावरजो हि स:।।1.18.31।।


प्राणै: प्रियतरो नित्यं तस्य चासीत्तथा प्रिय:।

அதே போல், லக்ஷ்மணனின் சகோதரனான சத்துருக்கினன், பரதனுக்குத் தன் உயிரைக்காட்டிலும் பிரியமானவனாக இருந்தான். சத்துருக்கினனுக்கும் பரதன் என்றால் உயிர்.

 

स चतुर्भिर्महाभागै:पुत्रैर्दशरथ: प्रियै:।।1.18.32।।


बभूव परमप्रीतो देवैरिव पितामह:।

தனது பாக்கியசாலிகளான நான்கு புதல்வர்களால், தேவர்களால் மகிழ்ந்திருந்த பிரம்ம தேவனைப் போல, தசரத மன்னர் மகிழ்ந்திருந்தார்.

 

ते यदा ज्ञानसम्पन्नास्सर्वैस्समुदिता गुणै:।।1.18.33।।

ह्रीमन्त: कीर्तिमन्तश्च सर्वज्ञा दीर्घदर्शिन:।
तेषामेवं प्रभावानां सर्वेषां दीप्ततेजसाम्।।1.18.34।।

पिता दशरथो हृष्टो ब्रह्मा लोकाधिपो यथा।

தசரதருடைய அனைத்துப் புதல்வர்களும், அறிவாற்றலிலும், நற்குணங்களிலும் சிறந்து விளங்கினார்கள். அடக்கம், புகழ், அனைத்தையும் அறிந்த திறமை, தொலை நோக்குப் பார்வை ஆகியவை அவர்களுள் நிறைந்து இருந்தன. தசரதர், இப்படிப்பட்ட  தன் புதல்வர்களை கண்டு, உலகத்தின் தலைவனான பிரம்மதேவனைப் போல் மகிழ்ந்தார்.

 

ते चापि मनुजव्याघ्रा वैदिकाध्ययने रता:।।1.18.35।।

पितृशुश्रूषणरता धनुर्वेदे च निष्ठिता:।

மனிதர்களுள் புலி போன்ற அவர்கள், வேதங்களைக் கற்பதிலும், தங்கள் தாய் தந்தையருக்குச் சேவை செய்வதிலும் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். வில் வித்தையிலும், மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

अथ राजा दशरथस्तेषां दारक्रियां प्रति।।1.18.36।।

चिन्तयामास धर्मात्मा सोपाध्यायस्सबान्धव:।

தர்மாத்மாவான தசரத மன்னர், தன் புரோகிதர்களுடனும், உறவினர்களுடனும், தனது புதல்வர்களுக்குத் திருமணம் செய்விப்பதைப் பற்றிக் கலந்தாலோசிக்கலானார்.

 

तस्य चिन्तयमानस्य मन्त्रिमध्ये महात्मन:।।1.18.37।।

अभ्यगच्छन्महातेजा विश्वामित्रो महामुनि:।

அவ்வாறு தசரத மன்னர் தனது ஆலோசகர்களுடன் கலந்து பேசிக்கொண்டிருந்த போது, ஒளி பொருந்திய விஸ்வாமித்திரர் என்னும் முனிவர் அங்கே வந்தார்.

 

स राज्ञो दर्शनाकाङ्क्षी द्वाराध्यक्षानुवाच ह।।1.18.38।।

शीघ्रमाख्यात मां प्राप्तं कौशिकं गाधिनस्सुतम्।

அரசரைப் பார்க்கும் விருப்பம் கொண்ட அந்த முனிவர், வாயிற்காப்போர்களின் தலைவர்களிடம், “விரைவில் சென்று, குசிக குலத்தில் பிறந்த, காதியின் புதல்வனான விஸ்வாமித்திரன் வந்திருக்கிறேன் என்று உங்கள் அரசரிடம் சொல்லுங்கள்” என்று கூறினார்.

 

तच्छ्रुत्वा वचनं त्रासाद्राज्ञो वेश्म प्रदुद्रुवु:।।1.18.39।।

सम्भ्रान्तमनसस्सर्वे तेन वाक्येन चोदिता:।

விஸ்வாமித்திரரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் அச்சத்துடனும், பரபரப்புடனும், வேக வேகமாக, அரசரின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்கள்.

 

ते गत्वा राजभवनं विश्वामित्रमृषिं तदा।।1.18.40।।

प्राप्तमावेदयामासुर्नृपायैक्ष्वाकवे तदा।

அரசவையை அடைந்ததும், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த தசரதரிடம் , ரிஷி விஸ்வாமித்திரர் வந்திருக்கிறார் என்னும் செய்தியைத் தெரிவித்தார்கள்.

 

तेषां तद्वचनं श्रुत्वा सपुरोधास्समाहित:।।1.18.41।।


प्रत्युज्जगाम तं हृष्टो ब्रह्माणमिव वासव:।

அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட தசரத மன்னர், மிகுந்த மகிழ்ச்சியுடன், பிரம்மதேவனை வரவேற்கும் தேவேந்திரனைப் போலத் தனது புரோகிதர்களுடன் அவரை வரவேற்க விரைந்தார்.

 

तं दृष्ट्वा ज्वलितं दीप्त्या तापसं संशितव्रतम्।।1.18.42।।

प्रहृष्टवदनो राजा ततोऽर्घ्यमुपहारयत्।

தவஸ்ரேஷ்டரான விஸ்வாமித்திரரைக் கண்டு, தசரத மன்னர், முகமலர்ச்சியுடனும், மிகுந்த மரியாதையுடனும், அர்க்கியம் முதலியவற்றை வழங்கினார்.

 

स राज्ञ: प्रतिगृह्यार्घ्यं शास्त्रदृष्टेन कर्मणा।।1.18.43।।

कुशलं चाव्ययं चैव पर्यपृच्छन्नराधिपम्।2

மன்னர் சாஸ்திர முறைப்படி, தனக்களித்த நிவேதனங்களை ஏற்றுக்கொண்ட விஸ்வாமித்திரர், மன்னருடைய தேசத்தின் நலன் மற்றும், செல்வ நிலை பற்றி விசாரித்தார்.

 

पुरे कोशे जनपदे बान्धवेषु सुहृत्सु च ।।1.18.44।।

कुशलं कौशिको राज्ञ: पर्यपृच्छत्सुधार्मिक:।

தர்ம நெறியில் நிற்கும் விஸ்வாமித்திரர், மன்னருடைய கருவூலம் நிறைந்து இருக்கிறதா என்றும், கிராமங்களில் மக்கள் தங்கள் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்றும் விசாரித்தார்.

 

अपि ते सन्नतास्सर्वे सामन्ता रिपवो जिता:।।1.18.45।।

दैवं च मानुषं चापि कर्म ते साध्वनुष्ठितम्।

கப்பம் கட்டும் அரசர்கள், தசரதருக்குப் பணிந்து நடந்து கொள்கிறார்களா என்றும், எதிரிகள் வெல்லப்பட்டு விட்டனரா என்றும், இறைவனை மகிழ்விப்பதற்குச் செய்ய வேண்டிய சடங்குகளும், மனிதர்களை நன்றாக வைப்பதற்கான சேவைகளும் சரியாக நடைபெறுகின்றனவா என்றும் விசாரித்தார்.

 

वसिष्ठं च समागम्य कुशलं मुनिपुङ्गव:।।1.18.46।।

ऋषींश्च तान्यथान्यायं महाभागानुवाच ह।


தவமுனிவர்களுள் தலை சிறந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் மற்றும் பிற முனிவர்களையும் முறைப்படி நலம் விசாரித்தார்.

 

ते सर्वे हृष्टमनसस्तस्य राज्ञो निवेशनम्।।1.18.47।।

विविशु: पूजितास्तत्र निषेदुश्च यथार्हत:।

அனைவரும், மிகுந்த மன மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குள் பிரவேசித்து, உரிய முறையில் கௌரவிக்கப் பட்டபின்னர், தங்களுக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார்கள்.

 

अथ हृष्टमना राजा विश्वामित्रं महामुनिम्।।1.18.48।।

उवाच परमोदारो हृष्टस्तमभिपूजयन्।

பின்னர், அந்தப் பெருந்தன்மையுள்ள தசரத மன்னர், விஸ்வாமித்திரரை, மகிழ்ச்சியுடன் பூஜித்து, இவ்வாறு கூறினார்:

 

यथाऽमृतस्य सम्प्राप्तिर्यथावर्षमनूदके।
यथा सदृशदारेषु पुत्रजन्माऽप्रजस्य च ।।1.18.49।।

प्रणष्टस्य यथालाभो यथा हर्षो महोदये।
तथैवागमनं मन्ये स्वागतं ते महामुने।।1.18.50।।

மகாமுனிவரே! தங்கள் வரவானது, ஒருவனுக்கு அமுதம் கிடைத்தாற்போலும், காய்ந்து கிடந்த நிலத்துக்குப் பெருமழை கிடைத்தாற்போலும், குழந்தையில்லாமல் இருந்தவனுக்குத் தன் மனையாளிடத்தில் புதல்வன் பிறந்தது போலும், இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கப் பெற்றது போலும், பெரிய உத்ஸவத்தின் போது ஏற்படும் ஆனந்தம் போலும்,  எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

कं च ते परमं कामं करोमि किमु हर्षित: ।।1.18.51।।

पात्रभूतोऽसि मे ब्रह्मन्दिष्टया प्राप्ताऽसि कौशिक ।
अद्य मे सफलं जन्म जीवितं च सुजीवितम्।।1.18.52।।

அந்தணரே! தங்கள் விருப்பம் யாது? அதைத் தாங்கள் திருப்தியடையும் விதம் நான் எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்? தர்மவழியில் வாழ்வதற்குத் தாங்கள் ஒரு உதாரணமாக உள்ளீர்கள். தாங்கள் இங்கே வந்தது எனது பாக்கியம். எனது பிறப்பு பயனுள்ளதாயிற்று. என் வாழ்க்கையின் குறிக்கோள் நிறைவேறியது.

 

पूर्वं राजर्षिशब्देन तपसा द्योतितप्रभः।
ब्रह्मर्षित्वमनुप्राप्त: पूज्योऽसि बहुधा मया।।1.18.53।।

முன்னம் ‘ராஜரிஷி’ என்று புகழப்பட்ட தாங்கள், தங்களுடைய தவத்தின் மகிமையால் ‘பிரம்மரிஷி’ என்னும் நிலையில் பிரகாசிக்கிறீர்கள். பல வகைகளிலும், தாங்கள் என்னால் பூஜிக்கப்படத் தக்கவர்.

 

तदद्भुतमिदं ब्रह्मन्पवित्रं परमं मम।
शुभक्षेत्रगतश्चाहं तव सन्दर्शनात्प्रभो।।1.18.54।।

ப்ரபுவே! அற்புதமான தங்கள் வருகை என்னைப் புனிதப் படுத்தியிருக்கிறது. உங்களைத் தரிசித்ததால், புண்யக்ஷேத்திரம் சென்று வந்த புண்ணியம் அடைந்து விட்டேன்.

 

ब्रूहि यत्प्रार्थितं तुभ्यं कार्यमागमनं प्रति।
इच्छाम्यनुगृहीतोऽहं त्वदर्थपरिवृद्धये।।1.18.55।।

தங்கள் வருகைக்கான காரணத்தைத் தயை கூர்ந்து கூறுங்கள். தங்கள் குறிக்கோள் நிறைவேறுவதில் என்னாலான சேவை செய்யும் பாக்கியத்தை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

 

कार्यस्य न विमर्शं च गन्तुमर्हसि कौशिक।
कर्ता चाहमशेषेण दैवतं हि भवान्मम।।1.18.56।।

விஸ்வாமித்திரரே! நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுவதில் தயக்கம் வேண்டாம். என்னால் முடிந்த அளவில் அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பேன். தாங்கள் எனக்குக் கடவுளைப் போன்றவர்.

 

मम चायमनुप्राप्तो महानभ्युदयो द्विज।
तवागमनज: कृत्स्नो धर्मश्चानुत्तमो मम।।1.18.57।।

அந்தணரே! எனக்கு இன்று இந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. நான் செய்த புண்ணியங்கள் அனைத்திற்கும் பலனாகத் தாங்கள் வருகை தந்துள்ளீர்கள்.

 

इति हृदयसुखं निशम्य वाक्यं
श्रुतिसुखमात्मवता विनीतमुक्तम्।

प्रथितगुणयशा गुणैर्विशिष्ट:
परमऋषि: परमं जगाम हर्षम्।।1.18.58।।

இவ்வாறு, விவேகமுள்ள தசரதர் காதுக்கும், மனதிற்கும் இனிமையான வார்த்தைகளைப் பணிவுடன் கூறியதைக் கேட்ட நற்குணங்கள் நிறைந்த விஸ்வாமித்திரர் மிகவும் மகிழ்ந்தார்.

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे अष्टादशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

***

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

 

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...