ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 70
(ஜனகர் தனது சகோதரனான
குசத்வஜனை அழைத்து வரத் தூதுவர்களை அனுப்புகிறார். தசரதர் கேட்டுக்கொண்டதற் கிணங்க,
வசிஷ்டர் இக்ஷ்வாகு வம்சத்தின் கதையைக் கூறுகிறார்.)
तत: प्रभाते जनक:
कृतकर्मा महर्षिभि:।
उवाच वाक्यं वाक्यज्ञ श्शतानन्दं पुरोहितम्।।1.70.1।।
அதன் பின்னர், மறு நாள்
விடிந்ததும், மகரிஷிகள் அனைவரும் தங்களுடைய அன்றாடக் கடமைகளை முடித்தவுடன்,
வாக்குத்திறம் மிக்க ஜனக மன்னர், தலைமைப் புரோகிதராகிய சதானந்தரிடன் கூறினார்:
भ्राता मम महातेजा
यवीयानतिधार्मिक:।
कुशध्वज इति ख्यात: पुरीमध्यवसच्छुभाम्।।1.70.2।।
वार्याफलकपर्यन्तां पिबन्निक्षुमतीं नदीम्।
साङ्काश्यां पुण्यसङ्काशां विमानमिव पुष्पकम्।।1.70.3।।
“சிறந்த தார்மீகனும்,
என்னுடைய தம்பியுமான குசத்வஜன் புனிதமான
இக்ஷுமதி நதியின் கரைகளில், அம்புகளால் ஏற்படுத்தப் பட்டுள்ள தடுப்புச் சுவருடன்,
புஷ்பக விமானத்தைப் போல் காணப்படும் ‘சங்காஸ்யம்’ என்ற பெயருடைய தேசத்தை ஆண்டு
வருகிறான்.
तमहं द्रष्टुमिच्छामि
यज्ञगोप्ता स मे मत:।
प्रीतिं सोऽपि महातेजा इमां भोक्ता मया सह।।1.70.4।।
என்னுடைய யாகத்தைப் பாதுகாப்பவனாக
நான் ஏற்றுக்கொண்டுள்ள அவனைக் காண விரும்புகிறேன். என்னுடைய சகோதரனும், என்னுடைய
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.”
एवमुक्ते तु वचने
शतानन्दस्य सन्निधौ।
आगता: केचिदव्यग्रा जनकस्तान् समादिशत्।।1.70.5।।
சதானந்தரின் முன்னிலையில்
இந்த வார்த்தைகளை ஜனக மன்னர் கூறியதுமே, அங்கே வந்து நின்ற சேவகர்களுக்கு, ஜனகர் கட்டளை
பிறப்பித்தார்.
शासनात्तु नरेन्द्रस्य
प्रययुश्शीघ्रवाजिभि:।
समानेतुं नरव्याघ्रं विष्णुमिन्द्राज्ञया यथा।।1.70.6।।
ஜனக மன்னரின் கட்டளைப்
படி, இந்திரனின் ஆணைப்படி, அவனுடைய தம்பியாகிய உபேந்திரனை (விஷ்ணு) அழைத்து வருவது
போல், குசத்வஜ மன்னரை அழைத்து வர, அவர்கள் குதிரை மீதேறிப் புறப்பட்டார்கள்.
साङ्काश्यां ते समागत्य
ददृशुश्च कुशध्वजम्।
न्यवेदयन्यथावृत्तं जनकस्य च चिन्तितम्।।1.70.7।।
அந்தத் தூதுவர்கள்
சாங்காஸ்யம் என்ற நகரை அடைந்து குசத்வஜ மன்னரைச் சந்தித்து, நடந்தவனவற்றையெல்லாம்
விவரித்து, ஜனகமன்னரின் விருப்பத்தையும் எடுத்துரைத்தார்கள்.
तद्वृत्तं नृपति
श्शृत्वा दूतश्रेष्ठैर्महाबलै:।
अज्ञायाऽथ नरेन्द्रस्य आजगाम कुशध्वज:।।1.70.8।।
ஜனக மன்னரின் வலிமை
நிறைந்த விஸ்வாசமுள்ள தூதுவர்கள் சொன்னதைக் கேட்ட குசத்வஜ மன்னர், உடனே, ஜனகரின்
கட்டளைப் படி மிதிலைக்கு வந்து சேர்ந்தார்
स ददर्श महात्मानं जनकं
धर्मवत्सलम्।
सोऽभिवाद्य शतानन्दं राजानं चापि धार्मिकम्।।1.70.9।।
राजार्हं परमं दिव्यमासनं चाऽध्यरोहत।
அங்கே, தர்மத்தில் பெருவிருப்புக்கொண்ட
ஜனக மன்னரையும், குரு சதானந்தரையும் மரியாதையுடன் வணங்கி, அரசருக்கேற்ற சிறந்த
ஆசனத்தில் அமர்ந்தார்.
उपविष्टावुभौ तौ तु
भ्रातरावतितेजसौ।।1.70.10।।
प्रेषयामासतुर्वीरौ मन्त्रिश्रेष्ठं सुदामनम्।
மிகுந்த தேஜஸ் உடைய
அந்த இரண்டு சகோதரர்களும், அருகருகே அமர்ந்து, மந்திரிகளுள் சிறந்தவரான சுதாமனரைத்
தசரதரிடம் இவ்வாறு கூறி அனுப்பினார்கள்.
गच्छ मन्त्रिपते
शीघ्रमैक्ष्वाकुममितप्रभम्।।1.70.11।।
आत्मजैस्सह दुर्धर्षमानयस्व समन्त्रिणम्।
“மந்திரிகளின் தலைவரே!
விரைவாகச் சென்று, அளவற்ற தேஜஸ் உடைய இக்ஷ்வாகு வம்சத்து அரசரான தசரதரை, அவரது
அமைச்சர்களுடனும், தன் இரு புதல்வர்களுடனும், அழைத்து வாருங்கள்.”
औपकार्यां स गत्वा तु
रघूणां कुलवर्धनम्।।1.70.12।।
ददर्श शिरसा चैनमभिवाद्येदमब्रवीत्।
சுதாமனரும், தசரதர்
தங்கியிருந்த இடத்துக்குச் சென்று , ரகு குலத்தை வளர்த்து வரும் தசரதரைக் கண்டு,
தலை குனிந்து வணங்கி, இவ்வாறு கூறினார்.
अयोध्याधिपते वीर
वैदेहो मिथिलाधिप:।।1.70.13।।
स त्वां द्रष्टुं व्यवसितस्सोपाध्यायपुरोहितम्।
“மகாவீரரான அயோத்தி
மன்னரே! தங்களைத் தங்கள் குருமார்களுடனும், முதன்மைப் புரோகிதருடனும், விதேஹ
மன்னர் பார்க்க விரும்புகிறார். “
मंत्रिश्रेष्ठवच
श्शृत्वा राजा सर्षिगणस्तदा।।1.70.14।।
सबंधुरगमत्तत्र जनको यत्र वर्तते।
மந்திரிஸ்ரேஷ்டரின்
வார்த்தைகளைக் கேட்ட தசரத மன்னர், ரிஷிகளுடனும், உறவினர்களுடனும், ஜனக மன்னர்
காத்திருந்த இடத்தைச் சென்றடைந்தார்.
स राजा मन्त्रिसहित
स्सोपाध्याय: सबान्धव:।।1.70.15।।
वाक्यं वाक्यविदां श्रेष्ठो वैदेहमिदमब्रवीत्।
பேச்சுத்திறமை மிக்க
தசரதர், தனது அமைச்சர்களுடனும், உறவினர்களுடனும் அங்கு வந்து, விதேஹ மன்னரிடம்
கூறினார்:
विदितं ते महाराज
इक्ष्वाकुकुलदैवतम्।।1.70.16।।
वक्ता सर्वेषु कृत्येषु वसिष्ठो भगवानृषि:।
‘பேரரசே! பகவான்
வசிஷ்டர் தான் இக்ஷ்வாகு குலத்தின் ஆன்மீக குரு என்பதையும், அவர் தான் எங்கள்
சார்பில் பேசுவார் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
विश्वामित्राभ्यनुज्ञातस्सह
सर्वैर्महर्षिभि:।।1.70.17।।
एष वक्ष्यति धर्मात्मा वसिष्ठो मे यथाक्रमम्।
அனைத்து மகரிஷிகளுடைய
அனுமதியையும், விஸ்வாமித்திரரின் அனுமதியையும் பெற்றபின், வசிஷ்ட மகரிஷி என்னுடைய
குலத்தைப் பற்றிக் கூறுவார்.”
एवमुक्त्वा नरश्रेष्ठे
राज्ञां मध्ये महात्मनाम्।।1.70.18।।
तूष्णींभूते दशरथे वसिष्ठो भगवानृषि:।
उवाच वाक्यं वाक्यज्ञो वैदेहं सपुरोधसम्।।1.70.19।।
இவ்வாறு தசரத மன்னர்
கூறியபின் பேச்சுத்திறமை மிக்க வசிஷ்டர், விதேஹ மன்னர் ஜனகரையும், அவருடைய
புரோகிதர்களையும் பார்த்து இவ்வாறு கூறினார்:
अव्यक्तप्रभवो ब्रह्मा
शाश्वतो नित्य अव्यय:।
तस्मान्मरीचि स्संजज्ञे मरीचे: काश्यप: सुत:।।1.70.20।।
“உருவமற்ற பரம்பொருள்
தன்னை சாஸ்வதமான, அழிவற்ற பிரம்மனாகப் படைத்துக் கொண்டது. பிரம்மாவிடம் இருந்து
மரீசியும், மரீசியிடம் இருந்து காஸ்யபரும் பிறந்தார்கள்.
विवस्वान्
काश्यपाज्जज्ञे मनुर्वैवस्वत स्स्मृत:।
मनु: प्रजापति: पूर्वमिक्ष्वाकुस्तु मनोस्सुत:।।1.70.21।।
காஸ்யபருக்கு
விவஸ்வானும், விவஸ்வானுக்கு மனுவும் பிறந்தனர். பிரஜாபதி என்றும், வைவஸ்வதன்
என்றும் அழைக்கப்பட்ட மனுவின் புதல்வர் தான் இக்ஷ்வாகு.
तमिक्ष्वाकुमयोध्यायां
राजानं विद्धि पूर्वकम्।
इक्ष्वाकोस्तु सुतश्श्रीमान् कुक्षिरित्येव विश्रुत:।।1.70.22।।
அந்த இக்ஷ்வாகு தான்
அயோத்தியின் மூத்த அரசர். அவருடைய புதல்வர் தான் புகழ் பெற்ற குக்ஷி என்பவர்.
कुक्षेरथात्मज:
श्रीमान् विकुक्षिरुदपद्यत।
विकुक्षेस्तु महातेजा बाण: पुत्र: प्रतापवान्।।1.70.23।।
குக்ஷியின் புதல்வர்
விகுக்ஷி என்பவர். அவருடைய அறிவாற்றலும், வலிமையும் மிக்க புதல்வர் தான் பாணர்
என்பவர்.
बाणस्य तु महातेजा
अनरण्य: प्रतापवान्।
अनरण्यात्पृथुर्जज्ञे त्रिशङ्कुस्तु पृथोस्सुत:।।1.70.24।।
பாணரின் புதல்வர்
மகாதேஜஸும் புகழும் உடைய அனரண்யர் என்பவர். அனரண்யரின் புதல்வர் ப்ருது. ப்ருதுவின்
புதல்வர் திரிசங்கு.
त्रिशङ्कोरभवत्पुत्रो
दुन्दुमारो महायशा:।
युवनाश्वसुतस्त्वासीन्मान्धाता पृथिवीपति:।।1.70.25।।
திரிசங்குவின் புகழ்
பெற்ற புதல்வர் துந்துமாரர். அவருக்கு யுவனாஸ்வர் என்ற பெயரும் உண்டு. அந்த
யுவனாஸ்வரின் புதல்வர் தான் மாந்தாதா என்னும் அரசர்.
मान्धातुस्तु सुत
श्श्रीमान् सुसन्धिरुदपद्यत।
सुसन्धेरपि पुत्रौ द्वौ ध्रुवसन्धि: प्रसेनजित्।।1.70.26।।
மாந்தாதாவின் புதல்வர்
செல்வச்செழிப்பு மிக்க சுசந்தி என்பவர். சுசந்திக்கு த்ருவசந்தி, ப்ரசேனஜித் என்ற
இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
यशस्वी ध्रुवसन्धेस्तु
भरतो नाम नामत:।
भरतात्तु महातेजा असितो नाम जातवान्।।1.70.27।।
த்ருவசந்தியின்
புதல்வர் புகழ் பெற்ற பரதர். அந்தப் பரதரின் புதல்வர் அசிதர்.
यस्यैते प्रतिराजान
उदपद्यन्त शत्रव:।
हैहयास्तालजंघाश्च शूराश्च शशिबिन्दव:।।1.70.28।।
ஹைஹயர்கள், தாலஜங்கர்கள், சசிபிந்துக்கள் ஆகியோர் அசிதரின் பகைவர்கள் ஆனார்கள்.
तांस्तु स प्रतियुध्यन्
वै युद्धे राजा प्रवासित:।
हिमवन्तमुपागम्य भृगुप्रस्रवणेऽवसत्।।1.70.29।।
असितोऽल्पबलो राजा मन्त्रिभिस्सहितस्तदा।
குறைந்த படைபலம் கொண்ட
அசித மன்னர், அவர்களிடையே நடந்த போரில் தோல்வியடைந்து, அமைச்சர்களுடனும்,
ஆலோசகர்களுடனும், இமயமலைக்குச் சென்று அங்கே ப்ருகுப்ரஸ்ரவணம் என்ற இடத்தில்
வசிக்கத் தொடங்கினார்.
द्वे चास्य भार्ये
गर्भिण्यौ बभूवतुरिति श्रुतम्।।1.70.30।।
एका गर्भविनाशाय सपत्न्यै सगरं ददौ।
அசிதரின் இரு
மனைவிகளும் கருவுற்றிருந்தார்கள். அவர்கள் இருவரும், மற்றவளின் கருவை அழிப்பதற்காக,
ஒருவர் மற்றொருவரின் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்து விட்டார்கள்.
तत श्शैलवरं रम्यं
बभूवाभिरतो मुनि:।।1.70.31।।
भार्गवश्च्यवनो नाम हिमवन्तमुपाश्रित:।
அந்தக் காலத்தில்,
ப்ருகு வம்சத்தில் பிறந்த ச்யவனர் என்பவர் அழகிய இமயமலையில் வசிக்க விரும்பினார்.
तत्रैका तु महाभागा
भार्गवं देववर्चसम्।।1.70.32।।
ववन्दे पद्मपत्राक्षी काङ्क्षन्ती सुतमात्मन:।
அந்த இருவரில் ஒரு
அரசி, தேவர்களைப் போன்ற ஒளியுடைய ச்யவனரை அணுகித் தனக்கு நல்லபடியாக மகன் பிறக்க
ஆசீர்வதிக்க வேண்டி, அவரை வணங்கினாள்.
तमृषिं साऽभ्युपागम्य
कालिंदी चाभ्यवादयत्।।1.70.33।।
स तामभ्यवदद्विप्र: पुत्रेप्सुं पुत्रजन्मनि।
காளிந்தி என்ற பெயருடைய
அவள், அந்த ரிஷியை வணங்கித் தனக்குப் புதல்வன் பிறப்பதைப் பற்றி அவரிடம் கேட்டாள்.
तव कुक्षौ महाभागे
सुपुत्रस्सुमहाबल:।।1.70.34।।
महावीर्यो महातेजा अचिरात्सञ्जनिष्यति।
गरेण सहित श्श्रीमान् मा शुच: कमलेक्षणे।।1.70.35।।
“மகாபாக்கியசாலியே!
உன்னுடைய கர்ப்பத்தில் இருந்து மகாபலசாலியாகவும், மகா தேஜஸ் உடையவனாகவும் ஒரு
புதல்வன், விஷத்துடனேயே, விரைவில் பிறப்பான். கவலைப்படாதே!” என்று அவர் கூறினார்.
च्यवनं तु नमस्कृत्य राजपुत्री पतिव्रता।
पतिशोकातुरा तस्मात्पुत्रं देवी व्यजायत।।1.70.36।।
தனது கணவனை இழந்த
சோகத்திலிருந்த அந்த மூத்த அரசி, ச்யவனரின் ஆசியால் ஒரு புதல்வனைப்
பெற்றெருத்தாள்.
सपत्न्या तु गरस्तस्यै
दत्तो गर्भजिघांसया।
सह तेन गरेणैव जात: स सगरोऽभवत्।।1.70.37।।
அவளுடைய சக்களத்தியால்
விஷம் கொடுக்கப்பட்டதால், அந்த விஷத்துடனேயே பிறந்த அந்தக் குழந்தை ‘சகரன்’ என்று
அழைக்கப்பட்டான். (கரம் என்றால் விஷம். சகரன் என்றால், விஷத்துடன் கூடியவன்,)
सगरस्यासमञ्जस्तु असमञ्जात्तथांऽशुमान्।
दिलीपोंऽशुमत: पुत्रो दिलीपस्य भगीरथ:।।1.70.38।।
भगीरथात्ककुत्स्थश्च
ककुत्स्थस्य रघुस्सुत:।
அந்தச் சகர மன்னனின்
புதல்வன் அஸமஞ்சஸ். அஸமஞ்சஸின் புதல்வன் அம்சுமான். அம்சுமானின் புதல்வன் பகீரதன்.
रघोस्तु पुत्रस्तेजस्वी प्रवृद्ध: पुरुषादक:।।1.70.39।।
कल्माषपादो ह्यभवत्तस्माज्जातस्तु शंखण:।
பகீரதனின் புதல்வன்
ககுஸ்தன். ககுஸ்தனின் புதல்வன் ரகு. ரகுவின் புதல்வனாகிய ப்ரவ்ருத்தன்,
தேஜஸ்வியாயிருந்தும், குரு வசிஷ்டரின் சாபத்தால் நர மாமிசம் உண்பவனாகவும்,
கருப்பான பாதங்கள் உடையவனாகவும் ஆனான். ப்ரவ்ருத்தனுக்கு சங்கணன் என்ற புதல்வன்
பிறந்தான்.
सुदर्शन: शङ्घणस्य
अग्निवर्ण स्सुदर्शनात्।।1.70.40।।
शीघ्रगस्त्वग्निवर्णस्य शीघ्रगस्य मरु स्सुत:।
मरो: प्रशुश्रुकस्त्वासीदम्बरीष: प्रशुश्रृकात्।।1.70.41।।
சங்கணனின் புதல்வன்
சுதர்சனன். சுதர்சனனின் புதல்வன் அக்னிவர்ணன். அக்னிவர்ணனின் புதல்வன் சீக்ரகன்.
சீக்ரகனின் புதல்வன் மரு. மருவின் புதல்வன்
ப்ரசுஸ்ருகன்.
ப்ரசுஸ்ருகனின் புதல்வன் அம்பரீசன்.
अम्बरीषस्य
पुत्रोऽभून्नहुष: पृथिवीपति:।
नहुषस्य ययातिस्तु नाभागस्तु ययातिज:।।1.70.42।।
அம்பரீசனுக்கு நகுஷன்
என்ற புதல்வன் பிறந்தான். நகுஷனின் புதல்வன் யயாதி. யயாதியின் புதல்வன் நாபாகன்.
नाभागस्य बभूवाज:
अजाद्दशरथोऽभवत्।
अस्माद्दशरथाज्जातौ भ्रातरौ रामलक्ष्मणौ।।1.70.43।।
நாபாகனின் புதல்வன்
அஜன். அஜனின் புதல்வனான தசரதன் தான் ராம லக்ஷ்மணரின் தந்தையார்.
आदिवंशविशुद्धानां
राज्ञां परमधर्मिणाम्।
इक्ष्वाकुकुलजातानां वीराणां सत्यवादिनाम्।।1.70.44।।
रामलक्ष्मणयोरर्थे त्वत्सुते वरये नृप।
सदृशाभ्यां नृपश्रेष्ठ सदृशे दातुमर्हसि।।1.70.45।।
மனிதருள் சிறந்தவரே!
இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த, தூய்மையும், தர்மமும், வீரமும் நிறைந்த ராம
லக்ஷ்மணர்கள், அதே அளவு சிறப்புள்ள தங்களது இரு புதல்விகளையும், தங்கள்
மனைவிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களைத் தயை கூர்ந்து ராம
லக்ஷ்மணர்களுக்குத் திருமணம் செய்து கொடுங்கள்.”
इत्यार्षे
श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे सप्ततितमस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் எழுபதாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/