Monday, 29 January 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 68

(ஜனகமன்னரிடம் இருந்து வந்த செய்தியைக் கேட்டு, அயோத்தி  மன்னர் தசரதர் தனது மந்திரிகளுடன், மிதிலைக்கு வந்து சேருகிறார்.)


जनकेन समादिष्टा दूतास्ते क्लान्तवाहना:।
त्रिरात्रमुषिता मार्गे तेऽयोध्यां प्राविशन् पुरीम्।।1.68.1।।

ஜனகரின் கட்டளைப் படி, அந்தத் தூதுவர்கள் மூன்று நாட்கள் பகலில் பயணித்து, மூன்று இரவுகள் அங்கங்கே தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு, ஓடிக் களைத்த குதிரைகளுடன் அயோத்தி நகரில் பிரவேசித்தனர்.

 

राज्ञो भवनमासाद्य द्वारस्थानिदमब्रुवन्।
शीघ्रं निवेद्यतां राज्ञे दूतान्नो जनकस्य च।।1.68.2।।

அரசருடைய அரண்மனையை அடைந்து, அங்கிருந்த வாயிற் காப்போர்களிடம், “ஜனக மன்னரிடம் இருந்து தூதுவர்கள் வந்திருக்கிறார்கள் என்று உடனே மன்னரிடம் சென்று கூறவும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

 

इत्युक्ता द्वारपालास्ते राघवाय न्यवेदयन्।
ते राजवचनाद्दूता राजवेश्मप्रवेशिता:।

ददृशुर्देवसङ्काशं वृद्धं दशरथं नृपम्।।1.68.3।।

அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்ட வாயிற்காப்போர்கள் உடனே தசரதருக்கு அந்த செய்தியைச் சொல்லவும், தசரதரின் கட்டளைப்படி, அந்தத் தூதுவர்களை அரசவைக்கு அழைத்துச் சென்றனர். அந்தத் தூதுவர்கள் , ஒரு தேவரைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்த, வயது முதிர்ந்த தசரத மன்னரை அங்கே, கண்டனர்.

 

बद्धाञ्जलिपुटा स्सर्वे दूता विगतसाध्वसा:।
राजानं प्रयता वाक्यमब्रुवन्मधुराक्षरम्।।1.68.4।।

அந்தத் தூதர்கள் அனைவரும், கைகளைக் கூப்பிக் கொண்டு, மன மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும், அரசரிடத்தில் இனிமையான வார்த்தைகளில் இவ்வாறு கூறினார்கள்:

 

मैथिलो जनको राजा साग्निहोत्रपुरस्कृतम् ।
कुशलं चाव्ययं चैव सोपाध्यायपुरोहितम्।।1.68.5।।

मुहुर्मुहुर्मधुरया स्नेहसंयुक्तया गिरा।
जनकस्त्वां महाराज पृच्छते सपुरस्सरम्।।1.68.6।।

“பேரரசரே! மிதிலையின் தலைவரான ஜனக மன்னர், தூய வேள்வித்தீயின் முன் நின்று கொண்டு, இனிமையும், அன்பும் நிறைந்த சொற்களால், தங்களுடைய நலத்தையும், தங்கள் ஆன்மீக குருமார்கள் மற்றும் புரோகிதர்களுடைய நலத்தையும், மீண்டும், மீண்டும் விசாரிக்கிறார்.

 

पृष्ट्वा कुशलमव्यग्रं वैदेहो मिथिलाधिप:।
कौशिकानुमते वाक्यं भवन्तमिदमब्रवीत्।।1.68.7।।

மிதிலையின் தலைவரான ஜனக மன்னர், தங்கள் நலத்தை விசாரித்த பின்னர், கௌசிக விஸ்வாமித்திரரின் அனுமதியுடன் தங்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறார்.

 

पूर्वं प्रतिज्ञा विदिता वीर्यशुल्का ममात्मजा।
राजानश्च कृतामर्षानिर्वीर्या विमुखीकृता:।।1.68.8।।

“அரசே! முன்பே, என் மகள் சீதையை வீரச்செயல் செய்வோருக்குப் பரிசாகத் திருமணம் செய்து கொடுப்பதாக அறிவித்திருந்தேன். பல மன்னர்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க முடியாமல், ஏமாற்றமடைந்து என்னை எதிர்த்தார்கள்.

 

सेयं मम सुता राजन् विश्वामित्रपुरस्सरै:।
यदृच्छयागतैर्वीरैर्निर्जिता तव पुत्रकै:।।1.68.9।।

“அரசே! அப்படிப் பட்ட என் மகள் சீதையை, எதிர்பாராமல், விஸ்வாமித்திரரைப் பின் தொடர்ந்து மிதிலைக்கு வந்த தங்களது புதல்வன் வென்றிருக்கிறான்.

 

तच्च राजन् धनुर्दिव्यं मध्ये भग्नं महात्मना।
रामेण हि महाराज महत्यां जनसंसदि।।1.68.10।।

“பேரரசே! சபையோர் முன்னிலையில், எல்லையற்ற புகழ் வாய்ந்த சிவனுடைய வில்லானது மத்தியில் உடைக்கப்பட்டது.“

 

अस्मै देया मया सीता वीर्यशुल्का महात्मने।
प्रतिज्ञां कर्तुमिच्छामि तदनुज्ञातुमर्हसि।।1.68.11।।

அந்த வீரத்துக்குப் பரிசாக, சீதையை ராமனுக்கு மணமுடித்துக் கொடுத்து, எனது வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்ளத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்.”

 

सोपाध्यायो महाराज पुरोहितपुरस्सर:।
शीघ्रमागच्छ भद्रं ते द्रष्टुमर्हसि राघवौ ।।1.68.12।।

“பேரரசே! தாங்கள் தங்கள் குருமார்களுடனும், புரோகிதர்களுடனும், விரைந்து மிதிலைக்கு வந்து, ராம லக்ஷ்மணர்களைக் காண வேண்டும். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும்!”

 

प्रीतिं च मम राजेन्द्र निर्वर्तयितुमर्हसि।
पुत्रयोरुभयोरेव प्रीतिं त्वमपि लप्स्यसे।।1.68.13।।

“அரசர்களுக்குள் இந்திரன் போன்றவரே! இதனால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், தங்கள் புதல்வர்களைக் கண்டு, தாங்களும், மகிழ்ச்சி அடைவீர்கள்.”

 

एवं विदेहाधिपतिर्मधुरं वाक्यमब्रवीत्।।1.68.14।।

विश्वामित्राभ्यनुज्ञात श्शतानन्दमते स्थित:।
इत्युक्त्वा विरता दूता राजगौरवशङ्किता:।।1.68.15।।

விதேஹ மன்னர் ஜனகர், விஸ்வாமித்திரரின் கட்டளைப் படியும், தன் குருவாகிய சதானந்தரின் அனுமதியுடனும், இவ்வாறு இனிமையான சொற்களைத் தங்களிடம் கூறச் சொன்னார்” என்று கூறி, அந்தத் தூதர்கள், பயம் கலந்த மரியாதையுடன் தங்கள் செய்தியைச் சொல்லி முடித்தார்கள்.

 

दूतवाक्यं च तच्छ्रुत्वा राजा परमहर्षित:।
वसिष्ठं वामदेवं च मन्त्रिणोऽन्यांश्च सोऽब्रवीत्।।1.68.16।।

தூதுவர்களின் சொற்களைக் கேட்டு, மிகவும் மகிழ்ந்த தசரத மன்னர், வசிஷ்டரிடமும், வாமதேவரிடமும், பிற அமைச்சர்களிடமும், கூறினார்:

 

गुप्त: कुशिकपुत्रेण कौसल्यानन्दवर्धन:।
लक्ष्मणेन सह भ्रात्रा विदेहेषु वसत्यसौ।।1.68.17।।

“கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிக்கச் செய்யும், ராமன், தன் தம்பியான லக்ஷ்மணனுடன், விஸ்வாமித்திரரின் பாதுகாப்பில் விதேஹ தேசத்தில் இருக்கிறான்.

 

दृष्टवीर्यस्तु काकुत्स्थो जनकेन महात्मना।
सम्प्रदानं सुतायास्तु राघवे कर्तुमिच्छति।।1.68.18।।

காகுஸ்தனான ராமனின் வீரச் செயலைப் பார்த்து, ஜனக மன்னர், தனது மகளை ராமனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறார்.

 

यदि वो रोचते वृत्तं जनकस्य महात्मन:।
पुरीं गच्छामहे शीघ्रं मा भूत्कालस्य पर्यय:।।1.68.19।।

ஜனகரின் வேண்டுகோளைத் தாங்கள் அனுமதித்தால்,  நேரத்தை வீணாக்காமல், விரைந்து மிதிலைக்குச் செல்வோம்!”

 

मन्त्रिणो बाढमित्याहु: सह सर्वैर्महर्षिभि:।
सुप्रीतश्चाब्रवीद्राजा श्वो यात्रेति स मन्त्रिण:।।1.68.20।।

அனைத்து மகரிஷிகளும், அமைச்சர்களும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறியவுடன், மிகவும் மகிழ்ந்த தசரத மன்னர், “நாளை மிதிலைக்குப் புறப்படுவோம்” என்று கூறினார்.

 

मन्त्रिणस्तु नरेन्द्रस्य रात्रिं परमसत्कृता:।
ऊषु स्तेमुदिता स्सर्वे गुणै स्सर्वैस्समन्विता:।।1.68.21।।

தசரத மன்னரின் நற்குணங்கள் பொருந்திய அமைச்சர்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த இரவைக் கழித்தனர். 


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे अष्टषष्टितमस्सर्ग:।।Thus ends

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  அறுபத்தெட்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...