ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 69
(தனது சேனை பின் தொடர, தசரத மன்னர் அயோத்தியில் பிரவேசிக்கிறார்.
ஜனக மன்னர் அவருக்கு மரியாதை செய்கிறார்.)
ततो रात्र्यां
व्यतीतायां सोपाध्याय: सबान्धव:।
राजा दशरथो हृष्ट स्सुमन्त्रमिदमब्रवीत्।।1.69.1।।
அந்த இரவு கழிந்த
பின்னர், ஆன்மீக குருமார்களும், உறவினர்களும், உடன் இருக்க, தசரதர் மிகுந்த
மகிழ்ச்சியுடன் சுமந்திரரிடம் இவ்வாறு கூறினார்:
अद्य सर्वे धनाध्यक्षा
धनमादाय पुष्कलम्।
व्रजन्त्वग्रे सुविहिता नानारत्नसमन्विता:।।1.69.2।।
“பொக்கிஷ அதிகாரிகள்
யாவரும், நிறைய செல்வத்தையும், பலவிதமான ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டு, முன்னே
செல்லுங்கள்.
चतुरङ्गबलं चापि शीघ्रं
निर्यातु सर्वश:।
ममज्ञासमकालं च यानयुग्यमनुत्तमम्।।1.69.3।।
நால்வகைப் படைகளும்,
என் கட்டளை கிடைத்த உடனேயே, மிகச் சிறந்த பல்லக்குகளுடன், நான்கு திசைகளில் இருந்தும் புறப்படட்டும்.
वसिष्ठो वामदेवश्च
जाबालिरथ काश्यप:।
मार्कण्डेयश्च दीर्घायु:ऋषि: कात्यायनस्तथा।।1.69.4।।
एते द्विजा: प्रयान्त्वग्रे स्यन्दनं योजयस्व मे।
यथा कालात्ययो न स्या द्दूता हि त्वरयन्ति माम्।।1.69.5।।
வசிஷ்டர், வாமதேவர்,
ஜாபாலி, காஷ்யபர், நீண்ட ஆயுளைக்கொண்ட மார்க்கண்டேயர், காத்யாயனர் ஆகிய அந்தணர்கள்
முன்பே புறப்பட்டுச் செல்லட்டும். என்னுடைய தேரைப் பூட்டித் தயார் நிலையில்
வைத்திருங்கள். தாமதம் செய்யாதீர்கள். வந்திருக்கும் தூதுவர்கள் விரைவாக
வரச்சொல்லி வேண்டுகிறார்கள். “
वचनात्तु नरेन्द्रस्य
सा सेना चतुरङ्गिणी।
राजानमृषिभि स्सार्धं व्रजन्तं पृष्ठतोऽन्वगात्।।1.69.6।।
தசரத மன்னர் தந்து
குருமார்களான ரிஷிகளுடன் புறப்பட்டவுடனே, அவருடைய நால்வகைப் படைகளும், அவருடைய
கட்டளைப் படி அவரைப் பின் தொடர்ந்து சென்றன.
गत्वा चतुरहं मार्गं
विदेहानभ्युपेयिवान्।
राजा तु जनक श्श्रीमान् श्श्रुत्वा पूजामकल्पयत्।।1.69.7।।
நான்கு நாட்கள்
பயணித்து, இவர்கள் அனைவரும் விதேஹ நாட்டைச் சென்றடைந்தார்கள். அந்தச் செய்தியைக்
கேள்விப்பட்ட ஜனக மன்னர், அவர்களை மிகவும் மரியாதையுடன் பூஜித்து வரவேற்பதற்கான
ஏற்பாடுகளைச் செய்தார்.
ततो राजानमासाद्य
वृद्धं दशरथं नृपम्।
जनको मुदितो राजा हर्षं च परमं ययौ।।1.69.8।।
ஜனக மன்னர் வயது
முதிர்ந்த தசரத மன்னரைச் சந்தித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
उवाच च नरश्रेष्ठो
नरश्रेष्ठं मुदाऽन्वित:।
स्वागतं ते महाराज दिष्ट्या प्राप्तोऽसि राघव।।1.69.9।।
पुत्रयोरुभयो: प्रीतिं लप्स्यसे वीर्यनिर्जिताम्।
மனிதருள் சிறந்தவரான
ஜனக மன்னர் தசரதரைப் பார்த்து, “ ரகு குலத்தில் பிறந்தவரே! பேரரசரே! தங்கள் வரவு
நல்வரவாகுக! தாங்கள் இங்கு வந்திருப்பது என்னுடைய பாக்கியம். தங்கள் குமாரர்களின்
வீரத்தால் அவர்களுக்குக் கிடைக்கப் போகும் பரிசினைப் பார்த்துத் தாங்கள்
மகிழ்வீர்கள்.
दिष्ट्या प्राप्तो
महातेजा वसिष्ठो भगवानृषि:।।1.69.10।।
सह सर्वैर्द्विजश्रेष्ठैर्देवैरिव शतक्रतु:।
நான் செய்த
பாக்கியத்தால், மஹா தேஜஸ் உடைய வசிஷ்ட மகரிஷியும் , பிற அந்தண ஸ்ரேஷ்டர்களுடன்,
தேவேந்திரன் பிற தேவர்களுடன் வந்திருப்பதைப் போல் வந்திருக்கிறார்.
दिष्ट्या मे निर्जिता
विघ्ना दिष्ट्या मे पूजितं कुलम्।।1.69.11।।
राघवै स्सह सम्बन्धाद्वीर्यश्रेष्ठैर्महात्मभि:।
கடவுள் அருளால்,
என்னுடைய தடைகள் அனைத்தும் நீங்கி விட்டன. ரகு வம்சத்தில் பிறந்த மிகச் சிறந்த
வீரர்களான ராம லக்ஷ்மணர்களுடன் ஏற்படப்
போகும் திருமண பந்தத்தால் என் குலத்துக்குப் பெருமை சேர்ந்துள்ளது.
श्व: प्रभाते
नरेन्द्रेन्द्र निर्वर्तयितुमर्हसि।।1.69.12।।
यज्ञस्यान्ते नरश्रेष्ठ विवाहमृषिसम्मतम्।
மனிதருள் சிறந்தவரே! நாளைக்
காலை, வேள்வி முழுமை பெற்றவுடனேயே, ரிஷிகளின் சம்மதத்துடன், இந்தத் திருமணத்தை
நடத்தி விடுங்கள். “
तस्य तद्वचनं श्रुत्वा
ऋषिमध्ये नराधिप:।।1.69.13।।
वाक्यं वाक्यविदां श्रेष्ठ: प्रत्युवाच महीपतिम्।
ஜனகரின் இந்த
வார்த்தைகளைக் கேட்ட தசரத மன்னர்
ரிஷிகளுக்கு மத்தியில்
இவ்வாறு கூறினார்:
प्रतिग्रहो दातृवश
श्श्रृतमेतन्मया पुरा।।1.69.14।।
यथा वक्ष्यसि धर्मज्ञ तत्करिष्यामहे वयम्।
தர்மாத்மாக்களிடம்
இருந்து பரிசினைப் பெற்றுக்கொள்வது இன்பத்தைக் தரும் என்று பெரியோர் சொல்லக்
கேட்டிருக்கிறேன். தாங்கள் எவ்வாறு சொல்கிறீர்களோ, அப்படியே செய்கிறோம்.”
धर्मिष्ठं च यशस्यं च
वचनं सत्यवादिन:।।1.69.15।।
श्रुत्वा विदेहाधिपति: परं विस्मयमागत:।।
சத்யவாதியும்,
தர்மிஷ்டரும், புகழுக்குரியவருமான தசரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ஜனகமன்னர்
மிகவும் வியப்படைந்தார்.
तत स्सर्वे मुनिगणा:
परस्परसमागमे।1.69.16।
हर्षेण महता युक्तास्तां निशामवसन् सुखम्।।
பின்னர், அந்த இரவை,
முனிவர்கள் அனைவரும், ஒருவருடன் ஒருவர் அளவளாவிக்கொண்டு, மகிழ்ச்சியாகக்
கழித்தார்கள்.
राजा च राघवौ पुत्रौ
निशाम्य परिहर्षित:।।1.69.17।।
उवास परमप्रीतो जनकेन सुपूजित:।
தனது புதல்வர்களான
ராமலக்ஷ்மணர்களைக் கண்ட தசரதமன்னர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஜனக மன்னரால்
சிறந்த முறையில் கௌரவிக்கப் பட்டதால், மிக்க திருப்தி அடைந்தவராய், அந்த இரவைக்
கழித்தார்.
जनकोऽपि महातेजा:
क्रियां धर्मेण तत्त्ववित्।।1.69.18।।
यज्ञस्य च सुताभ्यां च कृत्वा रात्रिमुवास ह ।
மகாதேஜஸ்
உடையவரும், சாஸ்திரத்தை நன்கு
அறிந்தவருமான ஜனகர், தன் வேள்விக்காகவும், தன் இரு புதல்விகளுக்காகவும், செய்ய
வேண்டிய சடங்குகளை இரவிலேயே முடித்து விட்டார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकोनसप्ततितमस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் அறுபத்தொன்பதாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment