Monday, 29 January 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 67

(ராமன் வில்லுக்கு நாணேற்றி, அதை உடைத்து விடுகிறான். ஜனகர், தசரத மன்னரை அழைத்து வர அமைச்சர்களை அயோத்திக்கு அனுப்புகிறார்.)

जनकस्य वचश्श्रुत्वा विश्वामित्रो महामुनि: ।
धनुर्दर्शय रामाय इति होवाच पार्थिवम्।।1.67.1।।

ஜனகர் கூறியதைக்கேட்ட விஸ்வாமித்திரர், “ வில்லை ராமனுக்குக் காட்டுங்கள்!” என்று கூறினார்.

 

ततस्स राजा जनक: सामन्तान्व्यादिदेश ह।
धनुरानीयतां दिव्यं गन्धमाल्यविभूषितम्।।1.67.2।।

பின்னர், ஜனக மன்னர், தனது மந்திரிகளைப் பார்த்து, அந்த வில்லைச்  சந்தனம், மலர் மாலைகள் ஆகியவற்றால் அலங்கரித்து, அங்கே கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.


जनकेन समादिष्टा: सचिवा प्राविशन् पुरीम्।
तद्धनु: पुरत: कृत्वा निर्जग्मु: पार्थिवाज्ञया।।1.67.3।।

அரசனின் கட்டளைப்படி அந்த மந்திரிகள் நகரத்துக்குச் சென்று, அந்த வில்லை முன்னே வைத்து, அதைப் பின் தொடர்ந்து வந்தார்கள்.

 

नृणां शतानि पञ्चाशद्व्यायतानां महात्मनाम्।
मञ्जूषामष्टचक्रां तां समूहुस्ते कथञ्चन।।1.67.4।।

எட்டு சக்கரங்கள் பூட்டிய ஒரு பெட்டியில் வைக்கப் பட்டிருந்த அந்த வில்லை, பலம் பொருந்திய ஐம்பதாயிரம் வீரர்கள், மிகவும் சிரமப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.

 

तामादाय तु मञ्जूषामायसीं यत्र तद्धनु:।
सुरोपमं ते जनकमूचुर्नृपतिमन्त्रिण:।।1.67.5।।

இரும்புப் பெட்டியில் வைக்கப் பட்டிருந்த அந்த வில்லை அங்கே கொண்டு வந்த மன்னரின் மந்திரிகள், ஜனகரிடம் இவ்வாறு கூறினார்கள்:

इदं धनुर्वरं राजन् पूजितं सर्वराजभि:।
मिथिलाधिप राजेन्द्र दर्शनीयं यदिच्छसि।।1.67.6।।

“அரசர்க்கரசே! இதோ! தாங்கள் ராமருக்குக் காட்ட விரும்பிய அனைத்து அரசர்களாலும் பூஜிக்கப் படுகிற மிகச் சிறந்த வில்.”

 

तेषां नृपो वच: श्रुत्वा कृताञ्जलिरभाषत।
विश्वामित्रं महात्मानं तौ चोभौ रामलक्ष्मणौ।।1.67.7।।

இதைக் கேட்ட ஜனக மன்னர், கைகளைக் கூப்பிக்கொண்டு, ராம லக்ஷ்மணர்களுடன் அமர்ந்திருந்த விஸ்வாமித்திரரிடம் இவ்வாறு கூறினார்:

 

इदं धनुर्वरं ब्रह्मन् जनकैरभिपूजितम्।
राजभिश्च महावीर्यै: अशक्तै: पूरितुं पुरा।।1.67.8।।

“பகவானே! இந்த மகிமை பொருந்திய வில்லை, என்னுடைய முன்னோர்கள் பூஜித்து வந்தனர். மிகவும் வலிமை படைத்த அரசர்களால் கூட, இதை வளைத்து நாணேற்ற முடியவில்லை.

 

नैतत्सुरगणास्सर्वे नासुरा न च राक्षसा:।
गन्धर्वयक्षप्रवरा: सकिन्नरमहोरगा:।।1.67.9।।

தேவர்களும், அசுரர்களும், ராக்ஷஸர்களும், கின்னரர்களும், பெரிய  நாகர்களும், கந்தர்வர்களில் சிறந்தவர்களும், யக்ஷர்களும் கூட, இதை வளைத்து நாணேற்ற முயன்று தோற்றுவிட்டார்கள்.

 

क्व गतिर्मानुषाणां च धनुषोऽस्य प्रपूरणे।
आरोपणे समायोगे वेपने तोलनेऽपि वा।।1.67.10।।

அவ்வாறிருக்க, மனிதர்களால், இதை வளைத்து, நாணேற்றி, அம்பைப் பொருத்தி, நாணை இழுத்து, அதைத் தூக்க  எவ்வாறு இயலும்?

 

तदेतद्धनुषां श्रेष्ठमानीतं मुनिपुङ्गव।
दर्शयैतन्महाभाग अनयो: राजपुत्रयो:।।1.67.11।।

முனி புங்கவரே! மிகவும் கனமான இந்த வில் இங்கே கொண்டுவரப்பட்டுள்ளது. இதை இந்த இரண்டு அரச குமாரர்களுக்கும் காண்பியுங்கள்!”

 

विश्वामित्रस्तु धर्मात्मा श्रुत्वा जनकभाषितम्।
वत्स राम धनु: पश्य इति राघवमब्रवीत्।।1.67.12।।

ஜனகருடைய இந்த சொற்களைக் கேட்ட தர்மாத்மாவான விஸ்வாமித்திரர், ராமனைப் பார்த்து, “ குழந்தாய்! ராமா! இந்த வில்லைப் பார்!” என்றார்.

 

ब्रह्मर्षेर्वचनाद्रामो यत्र तिष्ठति तद्धनु:।
मञ्जूषां तामपावृत्य दृष्ट्वा धनुरथाब्रवीत्।।1.67.13।।

பிரம்மரிஷியான விஸ்வாமித்திரர் இவ்வாறு கூறியதும், ராமன் அந்த வில் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று, அந்தப் பெட்டியைத் திறந்து, அந்த வில்லைப் பார்த்து, இவ்வாறு கூறினான்:

इदं धनुर्वरं ब्रह्मन् संस्पृशामीह पाणिना।
यत्नवांश्च भविष्यामि तोलने पूरणेऽपि वा।।1.67.14।।

“பகவானே! இந்த மகிமை பொருந்திய வில்லை என் கைகளால் தொட்டுத் தூக்கி, அதற்கு நாணேற்ற முயற்சி செய்கிறேன்.”

 

बाढमित्येव तं राजा मुनिश्च समभाषत।
लीलया स धनुर्मध्ये जग्राह वचनान्मुने:।।1.67.15।

அரசரும், விஸ்வாமித்திரரும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறியவுடன், அந்த வில்லை, அதன் மத்தியில் பிடித்து, மிகவும் எளிதாகத் தூக்கினான்:

 

पश्यतां नृपसहस्राणां बहूनां रघुनन्दन: ।
आरोपयत्स धर्मात्मा सलीलमिव तद्धनु:।।1.67.16।।

ரகு நந்தனனான ராமன், ஆயிரக்கணக்கான அரசர்கள் முன்னிலையில், அந்த வில்லை வளைத்து அதற்கு நாணேற்றி, அதை இழுத்தான்.

 

आरोपयित्वा धर्मात्मा पूरयामास तद्धनु:।
तद्बभञ्ज धनुर्मध्ये नरश्रेष्ठो महायशा:।।1.67.17।।

தர்மாத்மாவான ராமன், அந்த வில்லைக் கையில் எடுத்து, அதன் நாணை இழுத்த போது, பேரோசையுடன், அந்த வில் அதன் மத்தியில் உடைந்தது.

 

तस्य शब्दो महानासीत् निर्घातसमनिस्वन:।
भूमिकम्पश्च सुमहान् पर्वतस्येव दीर्यत:।।1.67.18।।

அது எழுப்பிய ஒலி, இடி இடித்தது போலவும், பூகம்பம் ஏற்பட்டது போலவும், மலை வெடித்துப் பிளந்தது போலவும் இருந்தது.

 

निपेतुश्च नरा स्सर्वे तेन शब्देन मोहिता:।
वर्जयित्वा मुनिवरं राजानं तौ च राघवौ।।1.67.19।।

அந்த சத்தத்தைக் கேட்டு, ஜனகமன்னர், விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்கள் தவிர, மற்ற அனைவரும், மயங்கி விழுந்தார்கள்.

 

प्रत्याश्वस्ते जने तस्मिन्राजा विगतसाध्वस:।
उवाच प्राञ्जलिर्वाक्यं वाक्यज्ञो मुनिपुङ्गवम्।।1.67.20।।

மயங்கி விழுந்தவர்கள் மீண்டும், சுய நினைவு அடைந்தவுடன், அழகாகப் பேசக்கூடிய ஜனகர், தன் கவலை நீங்கியவராய், முனிபுங்கவரான விஸ்வாமித்திரரைப் பார்த்து, இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, இவ்வாறு கூறினார்:

 

भगवन् दृष्टवीर्यो मे रामो दशरथात्मज:।
अत्यद्भुतमचिन्त्यं च न तर्कितमिदं मया।।1.67.21।।

“பகவானே! தசரதரின் மைந்தனான ராமனின் அதியற்புதமான, வீரச் செயலைக் கண்டேன். இப்படி ஒருவரால் செய்ய முடியும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

 

जनकानां कुले कीर्तिमाहरिष्यति मे सुता।
सीता भर्तारमासाद्य रामं दशरथात्मजम्।।1.67.22।।

தசரத குமாரனான ராமனை மணந்து, என் மகள் சீதை, என்னுடைய குலத்திற்கு மேலும் புகழ் சேர்ர்ப்பாள்.

 

मम सत्या प्रतिज्ञा च वीर्यशुल्केति कौशिक।
सीता प्राणैर्बहुमता देया रामाय मे सुता।।1.67.23।।

“கௌசிகரே! வீரத்துக்குப் பரிசாக சீதையைத் தருவதாக அறிவித்திருந்தேன். என்னுடைய வாக்கு உண்மையாயிற்று. என் உயிரைக் காட்டிலும், மேலான சீதை ராமனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட வேண்டியவள்.

 

भवतोऽनुमते ब्रह्मन् शीघ्रं गच्छन्तु मन्त्रिण:।
मम कौशिक भद्रं ते अयोध्यां त्वरिता रथै:।।1.67.24।।

பிரம்மரிஷி கௌசிகரே! தங்கள் அனுமதியுடன், எனது அமைச்சர்கள் தேர்களில் ஏறி, அயோத்திக்கு விரைந்து செல்வார்கள்.

 

राजानं प्रश्रितैर्वाक्यैरानयन्तु पुरं मम।
प्रदानं वीर्यशुल्काया: कथयन्तु च सर्वश:।।1.67.25।।

அவர்கள் தசரதரிடம், ராமனின் வீரத்துக்குரிய பரிசாக, சீதை அவனுக்கு அளிக்கப்படப் போகிறாள் என்னும் செய்தியை, மரியாதையுடன் விவரமாகக் கூறி, அவரை என்னுடைய நகரத்துக்கு அழைத்து வரட்டும்.

 

मुनिगुप्तौ च काकुत्स्थौ कथयन्तु नृपाय वै।
प्रीयमाणं तु राजानमानयन्तु सुशीघ्रगा:।।1.67.26।।

ராமனும் லக்ஷ்மணனும், விஸ்வாமித்திரருடைய பாது காப்பில் நலமாக இருக்கிறார்கள் என்னும் செய்தியும் அரசருக்குச் சொல்லப் படவேண்டும். பின்னர், விரைந்து செல்லக்கூடிய ஆட்களால், தசரதர் இங்கு அழைந்து வரப்பட வேண்டும். “

 

कौशिकश्च तथेत्याह राजा चाभाष्य मन्त्रिण:।।1.67.27।।

अयोध्यां प्रेषयामास धर्मात्मा कृतशासनान्।
यथावृत्तं समाख्यातुमानेतुं च नृपं तदा।।1.67.28।।

கௌசிக விஸ்வாமித்திரர், “ அப்படியே ஆகட்டும்!” என்று கூறியவுடன், தர்மாத்மாவான மன்னர், நடந்தவற்றை எல்லாம், அப்படியே தசரத மன்னருக்கு விவரித்து விட்டு அவரை அழைத்து வரச் சொல்லி மந்திரிகளுக்குக் கட்டளையிட்டு, அவர்களை அயோத்திக்கு அனுப்பி வைத்தார்.

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे सप्तषष्टितमस्सर्ग:।।Thus ends

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  அறுபத்தேழாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...