ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 66
(ஜனகர், சபையில்
விஸ்வாமித்திரருக்கும் ராம லக்ஷ்மணர்களுக்கும் மரியாதை செய்கிறார். பின்னர்,
சிவனின் வில்லைப் பற்றிய கதையைக் கூறி, அதை வளைத்து நாணேற்றி விட்டால், தன் மகள்
சீதையை ராமனுக்குத் திருமணம் செய்து தருவதாக அறிவிக்கிறார்.)
तत: प्रभाते विमले कृतकर्मा नराधिप:।
विश्वामित्रं महात्मानं आजुहाव सराघवम्।।1.66.1।।
மறு நாள் காலை
விடிந்ததும், அதன் தூய்மையான வெளிச்சத்தில், அன்றைய காலைக் கடன்களை முடித்த ஜனக
மன்னர், ராம லக்ஷ்மணர்களுடன், விஸ்வாமித்திரரை வரவேற்றார்.
तमर्चयित्वा धर्मात्मा
शास्त्रदृष्टेन कर्मणा।
राघवौ च महात्मानौ तदा वाक्यमुवाच ह।।1.66.2।।
தர்மாத்வான ஜனகர்,
மகாத்மாவான விஸ்வாமித்திரரையும், ராம லக்ஷ்மணர்களையும், சாஸ்திரப்படி பூஜை செய்து வணங்கிய பின்,
இவ்வாறு பேசலானார்.
भगवन् स्वागतं तेऽस्तु
किं करोमि तवानघ।
भवानाज्ञापयतु मामाज्ञाप्यो भवता ह्यहम्।।1.66.3।।
“பகவானே! தங்களுக்கு
நல்வரவு! குற்றமற்றவரே! நான் தங்களுக்காக
என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள்!”
एवमुक्तस्स धर्मात्मा
जनकेन महात्मना।
प्रत्युवाच मुनिर्वीरं वाक्यं वाक्यविशारद:।।1.66.4।।
மகாத்மாவான ஜனகரின்
இந்த வார்த்தைகளைக் கேட்டுப், பேசுவதில் நிபுணரான விஸ்வாமித்திரர், அந்த வீரம்
நிறைந்த மன்னரைப் பார்த்து இவ்வாறு பதில்
கூறினார்.
पुत्रौ दशरथस्येमौ
क्षत्रियौ लोकविश्रुतौ।
द्रुष्टुकामौ धनु श्श्रेष्ठं यदेतत्वयि तिष्ठति।।1.66.5।।
“தசரதருடைய
புதல்வர்களான இந்த க்ஷத்திரியர்கள் இருவரும், தங்களிடமுள்ள சிவனுடைய வில்லைப்
பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
एतद्दर्शय भद्रं ते
कृतकामौ नृपात्मजौ।
दर्शनादस्य धनुषो यथेष्टं प्रतियास्यत:।।1.66.6।।
“உங்களுக்கு நன்மை
உண்டாகட்டும்! அந்த வில்லை இவர்களுக்குக் காட்டுங்கள். அதைப் பார்த்தவுடன், தங்கள்
விருப்பம் நிறைவேறியவர்களாய், அவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். “
एवमुक्तस्तु जनक:
प्रत्युवाच महामुनिम्।
श्रूयतामस्य धनुषो यदर्थमिह तिष्ठति।।1.66.7।।
இவ்வாறு
விஸ்வாமித்திரர் கூறியதைக் கேட்ட ஜனக மன்னர், “ இந்த வில் இங்கே ஏன் இருக்கிறது
என்பதைக் கூறுகிறேன், கேளுங்கள்!” என்று பதில் சொன்னார்.
देवरात इति ख्यातो
निमेष्षष्ठो महीपति:।
न्यासोऽयं तस्य भगवन् हस्ते दत्तो महात्मना।।1.66.8।।
“பகவானே! நிமி என்ற
அரசனுடைய ஆறாவது தலைமுறையில் தேவரதன் என்றொரு புகழ் பெற்ற அரசர் இருந்தார்.
சிவபெருமானுடைய இந்த வில்லை வைத்திருக்குமாறு அவரிடம் கொடுத்து வைத்திருந்தனர்.
दक्षयज्ञवधे पूर्वं
धनुरायम्य वीर्यवान्।
रुद्रस्तु त्रिदशान् रोषात्सलीलमिदमब्रवीत्।।1.66.9।।
அதற்கு முன்னர், தக்ஷ
யக்ஞத்தை அழித்த பின், மிகவும் கோபத்துடன் இருந்த சிவ பெருமான், தேவர்களிடம்
விளையாட்டாகக் கூறினார்:
यस्माद्भागार्थिनो
भागान्नाकल्पयत मे सुरा:।
वराङ्गाणि महार्हाणि धनुषा शातयामि व:।।1.66.10।।
“தேவர்களே!
உங்களுக்குச் சேரவேண்டிய ஹவிர்பாகத்தைப் பெறும் அவசரத்தில், எனக்குச் சேரவேண்டிய
பாகத்தைக் கொடுக்கத் தவறிவிட்டீர்கள். ஆகவே, உங்கள் அனைவருடைய அழகான அங்கங்களை
இந்த வில்லால் துண்டிக்கப் போகிறேன். “
ततो विमनसस्सर्वे देवा
वै मुनिपुङ्गव।
प्रसादयन्ति देवेशं तेषां प्रीतोऽभवद्भव:।।1.66.11।।
முனி புங்கவரே!
தேவர்கள் அனைவரும் மிகவும் கவலையுற்று, தேவர்களின் தலைவனாகிய சிவனிடம் வேண்டிக் கொண்டதில்
மகிழ்ந்த சிவன் தன் கோபம் தணிந்தார்.
प्रीतियुक्तस्स
सर्वेषां ददौ तेषां महात्मनाम्।
तदेतद्देवदेवस्य धनूरत्नं महात्मन:।
न्यासभूतं तदा न्यस्तमस्माकं पूर्व के विभो।।1.66.12।।
ப்ரபோ! மணி போன்ற, தனது
வில்லைச் சிவபெருமான் தேவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் அதை என்னுடைய
முன்னோருக்குக் (தேவரதனுக்கு) கொடுத்தனர்.
अथ मे कृषत: क्षेत्रं
लाङ्गूलादुत्थिता मया।
क्षेत्रं शोधयता लब्धा नाम्ना सीतेति विश्रुता।।1.66.13।।
பின்னர், ஒரு நாள், யாக
பூமியை நான கலப்பையால் உழுது கொண்டிருந்த போது, அந்தக் கலப்பையின் முனையால் ஒரு
குழந்தை பூமியில் இருந்து எடுக்கப்பட்டது. சீதை என்ற பெயரில் இப்போது புகழ் பெற்ற
அந்தக் குழந்தையை நான் என் மகளாக ஏற்றுக்கொண்டேன். இப்படித்தான் எனக்கு சீதை
கிடைத்தாள்.
भूतलादुत्थिता सा तु
व्यवर्धत ममात्मजा।
वीर्यशुल्केति मे कन्या स्थापितेयमयोनिजा।।1.66.14।।
தாயின் கருவில்
உதிக்காமல், பூமியில் இருந்து உதித்த அவள் என் மகளாக வளர்ந்தாள். தனது வீரத்தை நிரூபிக்கும் ஒருவனுக்கே இவளைத்
திருமணம் செய்து கொடுப்பது என்று நான் நிச்சயித்திருக்கிறேன்.
भूतलादुत्थितां तां तु
वर्धमानां ममात्मजाम्।
वरयामासुरागम्य राजानो मुनिपुंगव।।1.66.15।।
முனி புங்கவரே!
பூமியில் இருந்து உதித்த என் மகளைத் திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுப் பல
மன்னர்கள் வந்தனர்.
तेषां वरयतां कन्यां
सर्वेषां पृथिवीक्षिताम्।
वीर्यशुल्केति भगवन् न ददामि सुतामहम्।।1.66.16।।
பகவானே! அப்படி வந்த
அரசர்களுக்கு என் மகளை நான் கொடுக்கவில்லை. அவர்கள் தனது வீரத்தை நிரூபித்தால்
தான் அவளைக் கொடுப்பேன் என்று கூறிவிட்டேன்.
ततस्सर्वे नृपतय
स्समेत्य मुनिपुंगव।
मिथिलामभ्युपागम्य वीर्यजिज्ञासवस्तदा।।1.66.17।।
அதன் பின்னர் பல
மன்னர்கள் சேர்ந்து, தங்கள் வீரத்தை நிரூபிப்பதற்காக மிதிலைக்கு வந்தார்கள்.
तेषां जिज्ञासमानानां
वीर्यं धनुरुपाहृतम्।
न शेकुर्ग्रहणे तस्य धनुषस्तोलनेऽपि वा।।1.66.18।।
அவ்வாறு தனது
வீரத்தையும், பலத்தையும் நிரூபிக்க வந்தவர்களால், அங்கு கொண்டு வரப்பட்ட வில்லைத்
தூக்கவோ, அதன் கனத்தைப் பரிசோதிக்கவோ கூட இயலவில்லை.
तेषां वीर्यवतां
वीर्यमल्पं ज्ञात्वा महामुने ।
प्रत्याख्याता नृपतयस्तन्निबोध तपोधन।।1.66.19।।
மகாமுனிவரே! அந்த
மன்னர்களின் வலிமை மிகவும் குறைவு என்று அறிந்து கொண்ட நான் அவர்களுக்கு என்
பெண்ணைக் கொடுக்க மறுத்து விட்டேன்.
तत: परमकोपेन राजानो
नृपपुङ्गव।
न्यरुंधन्मिथिलां सर्वे वीर्यसंदेहमागता:।।1.66.20।।
அந்த மன்னர்கள்,
தங்களது வலிமையின் மேல் சந்தேகம் கொண்டு, மிகுந்த கோபத்துடன் மிதிலையை
முற்றுகையிட்டனர்.
आत्मानमवधूतं ते
विज्ञाय नृपपुङ्गवा:।
रोषेण महताऽऽविष्टा: पीडयन्मिथिलां पुरीम्।।1.66.21।।
அந்தப் புகழ் பெற்ற
மன்னர்கள் யாவரும், தாங்கள் அவமானப் படுத்தப் பட்டதாக எண்ணிக் கொண்டு, மிகுந்த
கோபத்துடன் மிதிலை நகருக்குத் துன்பம் கொடுக்கத் தொடங்கினார்கள்.
ततस्संवत्सरे पूर्णे
क्षयं यातानि सर्वश:।
साधनानि मुनिश्रेष्ठ ततोऽहं भृशदु:खित:।।1.66.22।।
ஒரு வருடம் அவ்வாறு
கழிந்தது. முற்றுகை செய்யப் பட்டிருந்ததால், உள்ளே இருந்த வாழ்க்கைக்குத் தேவையான
பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. நான் மிகவும் துயருற்றேன்.
ततो देवगणान् सर्वान्
तपसाऽहं प्रसादयम्।
ददुश्च परमप्रीता श्चतुरङ्गबलं सुरा:।।1.66.23।।
அதன் பிறகு, நான்
கடுந்தவம் புரிந்தேன். அதில் மகிழ்ந்த ,
தேவர்கள் , எனக்குச் சதுரங்கப் படையை( தேர், யானை, குதிரை, ஆட்கள் அடங்கியது)
அளித்தார்கள்.
ततो भग्ना नृपतयो
हन्यमाना दिशो ययु:।
अवीर्या वीर्यसन्दिग्धा स्सामात्या: पापकर्मण:।।1.66.24।।
பின், அந்தப் படையின்
உதவியால், அந்த மன்னர்களை நான் தோற்கடித்ததில், அவர்கள் தங்கள் மந்திரிகளுடன், திசைக்கொருவராய்
ஓடி விட்டார்கள்.
तदेतन्मुनिशार्दूल धनु:
परमभास्वरम्।
रामलक्ष्मणयोश्चापि दर्शयिष्यामि सुव्रत।।1.66.25।।
விரதத்தை
நிறைவேற்றுவதில் உறுதியுடையவரே! ராம லக்ஷ்மணர்களுக்கும், அந்த ஒளி மிகுந்த
வில்லைக் காட்டுகிறேன்.
यद्यस्य धनुषो राम:
कुर्यादारोपणं मुने।
सुतामयोनिजां सीतां दद्यां दाशरथेरहम्।।1.66.26।।
ராமன் இந்த வில்லைத்
தூக்கி, அதற்கு நாணேற்றி விட்டானானால்,
ஒரு பெண்ணின் கருவில் பிறக்காத என் மகள் சீதையை அவனுக்குத் திருமணம் செய்து
கொடுக்கிறேன்.”
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे षट्षष्टितमस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் அறுபத்தாறாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment