Monday, 22 January 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 65

(விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பதத்தை அடைந்த கதையை சதானந்தர் சொல்லி முடிக்கிறார்.)


अथ हैमवतीं राम दिशं त्यक्त्वा महामुनि:।
पूर्वां दिशमनुप्राप्य तपस्तेपे सुदारुणम्।।1.65.1।।

“ராமரே! அதன் பின்னர் விஸ்வாமித்திர மகாமுனிவர் இமயமலையின் வடக்குப் பகுதியை விட்டுக் கிழக்குப் பகுதிக்குச் சென்று கடுந்தவம் இயற்றலானார்.

 

मौनं वर्षसहस्रस्य कृत्वा व्रतमनुत्तमम्।
चकाराप्रतिमं राम तप: परमदुष्करम्।।1.65.2।।

ஆயிரம் ஆண்டுகள் மௌன விரதம் அனுஷ்டித்து, யாராலும் செய்ய முடியாத கடுமையான தவத்தைச் செய்தார்.

 

पूर्णे वर्षसहस्रे तु काष्ठभूतं महामुनिम्।
विघ्नैर्बहुभिराधूतं क्रोधो नान्तर आविशत्।।1.65.3।।

स कृत्वा निश्चयं राम तप आतिष्टदव्ययम्।

ராமரே! இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் முடிந்த பிறகு, குச்சி போல் ஆகி விட்ட விஸ்வாமித்திரர், தன் தவத்துக்கு எத்தனையோ தடைகள் ஏற்பட்ட போதும், சிறிது கூடக் கோபப்படாமல் தொடர்ந்து தவம் புரிந்தார்.

 

तस्य वर्षसहस्रस्य व्रते पूर्णे महाव्रत:।।1.65.4।।

भोक्तुमारब्धवानन्नं तस्मिन् काले रघूत्तम।

इन्द्रो द्विजातिर्भूत्वा तं सिद्धमन्नमयाचत।।1.65.5।।

ரகு நந்தனரே! ஆயிரம் ஆண்டுகள் இவ்வாறு தவம் இயற்றிய பின்னர், தன்னுடைய மகாவிரதத்தை முடித்துக்கொண்டு, சமைத்த அன்னத்தை உண்ணத் தயாரான விஸ்வாமித்திரரின் முன்னர், இந்திரன் ஒரு அந்தணனின் வடிவத்தில் வந்து அந்த அன்னத்தை யாசித்தான்.

 

तस्मै दत्वा तदा सिद्धं सर्वं विप्राय निश्चित:।
निश्शेषितेऽन्ने भगवानभुक्तैव महातपा:।।1.65.6।।

न किञ्चिदवदद्विप्रं मौनव्रतमुपस्थित:।
अथ वर्षसहस्रं वै नोच्छ्वसन्मुनिपुङ्गव:।।1.65.7।।

அந்த முனிபுங்கவர் மௌன விரத்ததில் இருந்ததால், ஒன்றும் பேசாமல், அந்த அன்னத்தை அந்த  அந்தணருக்குக் கொடுத்து விட்டார். அந்த அந்தணர் அதை உண்டு முடித்து விட்டதால், தான் எதுவும் உண்ணாமலே இருக்க வேண்டி வந்த போதும், விஸ்வாமித்திரர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.  அதன் பின்னர், அந்த மகாமுனிவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மூச்சை அடக்கித் தவம் புரிந்தார்.

 

तस्यानुच्छ्वसमानस्य मूर्ध्नि धूमो व्यजायत।
त्रैलोक्यं येन सम्भ्रान्तमादीपितमिवाभवत्।।1.65.8।।

அவர் அவ்வாறு மூச்சை அடக்கிக் கொண்டிருந்த போது, அவருடைய தலைக்கு மேலே புகை கிளம்பியது. மூன்று உலகங்களிலும் கலவரம் ஏற்பட்டது. எங்கும் தீப்பிடித்தது போல் ஆயிற்று.

 

ततो देवास्सगन्धर्वा: पन्नगोरगराक्षसा:।
मोहितास्तेजसा तस्य तपसा मन्दरश्मय:।।1.65.9।।

कश्मलोपहता स्सर्वे पितामहमथाब्रुवन्।

அதன் பின்னர் தேவர்களும், கந்தர்வர்களும், பன்னகர்களும், உரகர்களும், ராக்ஷஸர்களும், அவருடைய தவத்தின் சக்தியால் தகிக்கப் பெற்று, தங்கள் ஒளி மங்கியவர்களாய், மிகுந்த கவலை கொண்டு, பிரம்மாவிடம் சென்று இவ்வாறு கூறினார்கள்:

 

बहुभि: कारणैर्देव विश्वामित्रो महामुनि:।।1.65.10।।
लोभित: क्रोधितश्चैव तपसा चाभिवर्धते।

“தேவரே! மகாமுனிவராகிய விஸ்வாமித்திரருக்குப் பல வகையிலும், மோகமும், கோபமும் உண்டாக்கி, அவருடைய தவத்தைக் கலைக்க முயற்சித்தும் , அவர் தளராமல், தொடர்ந்து தவத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

न ह्यस्य वृजिनं किञ्चिद्दृश्यते सूक्ष्ममप्यथ।।1.65.11।।

न दीयते यदि त्वस्य मनसा यदभीप्सितम्।
विनाशयति त्रैलोक्यं तपसा सचराचरम्।।1.65.12।।

அவர் தூய்மையான தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், அவருடைய தவ வலிமையால் இந்த மூவுலகங்களும், அவற்றில் உள்ள அசையும் பொருட்கள் மற்றும் அசையாப் பொருட்களுடன் அழிந்து போகும்.

 

व्याकुलाश्च दिशस्सर्वा न च किञ्चित्प्रकाशते।
सागरा: क्षुभितास्सर्वे विशीर्यन्ते च पर्वता:।।1.65.13।।

எல்லாத் திசைகளிலும், குழப்பம் நிறைந்திருக்கிறது. எங்கும் இருட்டாக இருக்கிறது. கடல்கள் எல்லாம் கலக்கப் பட்டிருக்கின்றன. மலைகள் வெடித்துப் பிளந்து விட்டிருக்கின்றன.

प्रकम्पते च पृथिवी वायुर्वाति भृशाकुल:।
बृह्मन्न प्रतिजानीमोनास्तिको जायते जन:।।1.65.14।।

பிரம்ம தேவரே! இந்தப் பூமி நடுங்குகிறது. காற்று பெரும் வேகத்துடன் வீசுகிறது. மக்கள் இறைவன் மேல் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். என்ன செய்வது என்றே எங்களுக்குப் புரியவில்லை.

 

सम्मूढमिव त्रैलोक्यं सम्प्रक्षुभितमानसम्।
भास्करो निष्प्रभश्चैव महर्षेस्तस्य तेजसा।।1.65.15।।

மூன்று உலகத்தைச் சேர்ந்த மக்களும், கலவரமும், குழப்பமும் அடைந்திருக்கிறார்கள். சூரியன் கூட, இந்த மகரிஷியின் தேஜஸ்ஸின் முன்பு ஒளி குன்றியதைப் போல் இருக்கிறான்.

 

बुद्धिं न कुरुते यावन्नाशे देव महामुनि:।
तावत्प्रसाद्यो भगवा नग्निरूपोमहाद्युति:।।1.65.16।।

நெருப்பைப் போல் ஒளி வீசுகின்ற இந்த விஸ்வாமித்திர மஹாமுனிவர், இந்த மூன்று உலகங்களையும் அழித்துவிடத் தீர்மானிக்கும் முன் அவரை சமாதானப்படுத்த வேண்டும்.

 

कालाग्निना यथापूर्वं त्रैलोक्यं दह्यतेऽखिलम्।
देवराज्यं चिकीर्षेत दीयतामस्य यन्मतम्।।1.65.17।।

பிரளய காலத்தில் எரிந்து அழிவது போல, மூன்று உலகங்களும் நெருப்பால் எரிந்து கொண்டிருக்கின்றன.  தேவலோகத்தையே ஆள்வது அவருடைய விருப்பம் ஆயினும், அதை நிறைவேற்ற வேண்டும்.

 

ततस्सुरगणास्सर्वे पितामहपुरोगमा:।
विश्वामित्रं महात्मानं मधुरं वाक्यमब्रुवन्।।1.65.18।।

அதன் பிறகு, தேவர்கள் அனைவரும், பிரம்மாவை முன்னிறுத்தி, அவரைத் தொடர்ந்து விஸ்வாமித்திரரிடம் சென்று, இவ்வாறு  இனிமையாகப் பேசினார்கள்.

 

ब्रह्मर्षे स्वागतं तेऽस्तु तपसा स्म सुतोषिता:।
ब्राह्मण्यं तपसोग्रेण प्राप्तवानसि कौशिक ।।1.65.19।।

“பிரம்மரிஷியே! தங்களை வரவேற்கிறோம், தங்கள் தவத்தால் மிகவும் மகிழ்ந்தோம்.கௌசிகரே! தங்களுடைய கடுமையான தவத்தால், தாங்கள் அந்தணர் ஆகி விட்டீர்கள்.

 

दीर्घमायुश्च ते ब्रह्मन् ददामि समरुद्गण:।
स्वस्ति प्राप्नुहि भद्रं ते गच्छ सौम्य यथासुखम्।।1.65.20।।

அந்தணரே! மருத்துக்களுடன் சேர்ந்து நானும் தங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குகிறேன். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும்! இனிமையானவரே! சந்தோஷமாகச் செல்லுங்கள்!”

 

पितामहवचश्शृत्वा सर्वेषां च दिवौकसाम्।
कृत्वा प्रणामं मुदितो व्याजहार महामुनि:।।1.65.21।।

இதைக் கேட்ட விஸ்வாமித்திர மகாமுனிவர், பிரம்மாவையும், பிற தேவர்களையும் வணங்கிப் பேசலானார்:

 

ब्राह्मण्यं यदि मे प्राप्तं दीर्घमायुस्तथैव च।
ओङ्कारश्च वषट्कारो वेदाश्च वरयन्तु माम्।।1.65.22।।

“தங்கள் அருளால், எனக்கு அந்தணர் என்ற நிலை கிடைத்திருக்கிறது என்றால், ஓம்காரமும், வஷட்காரமும், வேதங்களும் என்னை பிரம்மரிஷியென்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

क्षत्रवेदविदां श्रेष्ठो ब्रह्मवेदविदामपि।
ब्रह्मपुत्रो वसिष्ठो मामेवं वदतु देवता:।।1.65.23।।

यद्ययं परम: काम: कृतो यान्तु सुरर्षभा:।

‘தேவர்களே! அந்தணர்களுக்குரிய வேதங்களிலும், க்ஷத்திரியர்களுக்குரிய அஸ்திர வித்தையிலும், கை தேர்ந்த, பிரம்மாவின் புத்திரரான வசிஷ்டமகரிஷி என்னை ‘பிரம்மரிஷி’ என்று அழைக்க வேண்டும். என்னுடைய இந்த மேலான விருப்பத்தை நிறைவேற்றி விட்டால், தாங்கள் போகலாம். “

 

तत: प्रसादितो देवैर्वसिष्ठो जपतां वर:।।1.65.24।।
सख्यं चकार ब्रह्मर्षिरेवमस्त्विति चाब्रवीत्।

அதன் பிறகு, தேவர்கள் வேண்டிக்கொண்ட படி, தவமுனிவர்களுள் சிறந்த வசிஷ்டர், அன்புடன் விஸ்வாமித்திரரைப் பார்த்து, “ நீங்கள் பிரம்மரிஷி தான்! “ என்று கூறினார்.

 

ब्रह्मर्षिस्त्वं न सन्देहस्सर्वं सम्पत्स्यते तव।।1.65.25।।

इत्युक्त्वा देवताश्चापि सर्वा जग्मुर्यथागतम्।

தேவர்களும், “தாங்கள் பிரம்மரிஷி என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. தவத்தில் முழுமையான நிலையை நீங்கள் அடைவீர்கள்!” என்று கூறித் தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள்.

 

विश्वामित्रोऽपि धर्मात्मा लब्ध्वा ब्राह्मण्यमुत्तमम्।।1.65.26।।

पूजयामास ब्रह्मर्षिं वसिष्ठं जपतां वरम्।

தர்மாத்மாவான விஸ்வாமித்திரர், உத்தமமான பிராம்மணத்துவத்தை (அந்தணர் என்ற நிலை), அடைந்து, மந்திர ஜபம் செய்வதில் சிறந்தவரான வசிஷ்டரைப் பூஜித்தார்.

 

कृतकामो महीं सर्वां चचार तपसि स्थित:।।1.65.27।।

एवं त्वनेन ब्राह्मण्यं प्राप्तं राम महात्मना।

அதன் பிறகு, மகாத்மா விஸ்வாமித்திரர், தவத்தின் மகிமையால் தன் விருப்பம் நிறைவேறியவராய், இந்த பூமியில் சஞ்சரிக்கலானார். இப்படித்தான், விஸ்வாமித்திரர் பிராம்மணத்துவத்தை அடைந்தார்.

 

एष राम मुनिश्रेष्ठ एष विग्रहवांस्तप:।।1.65.28।।

एष धर्मपरो नित्यं वीर्यस्यैष परायणम्।

“ராமரே! விஸ்வாமித்திரர் தவம் செய்பவர்களுள் சிறந்தவர், தவமே உருவானவர், எப்போதும் தர்ம வழியில் நடப்பவர். தவத்தின் வலிமைக்கு ஒரு எல்லை என்று கொள்ளத்தக்கவர்.”

 

एवमुक्त्वा महातेजा विरराम द्विजोत्तम:।।1.65.29।।

शतानन्दवच: श्रुत्वा रामलक्ष्मणसन्निधौ।
जनक: प्राञ्जलिर्वाक्यमुवाच कुशिकात्मजम्।।1.65.30।।

அந்தணர்களுள் சிறந்த சதானந்தர் இவ்வாறு கூறி விட்டு அமைதியாகி விட்டார். ராமன் மற்றும் லக்ஷ்மணன் முன்னிலையில் ஜனக மன்னர் சதானந்தர் கூறியவற்றைக் கேட்ட பின்னர், கைகளைக் கூப்பிக் கொண்டு, விஸ்வாமித்திரரிடம் கூறினார்:

 

धन्योऽस्म्यनुगृहीतोऽस्मि यस्य मे मुनिपुङ्गव।
यज्ञं काकुत्स्थसहित: प्राप्तवानसि धार्मिक।।1.65.31।।

தர்ம வழியில்  நடக்கும் முனி புங்கவரே! காகுஸ்தர்களான ராம லக்ஷ்மணர்களை அழைத்துக் கொண்டு தாங்கள் என் வேள்வியில் பங்கெடுக்க வந்தது எனக்கு ஒரு பெரிய ஆசீர்வாதம்; அனுக்கிரகம்!

 

पावितोऽहं त्वया ब्रह्मन् दर्शनेन महामुने।
गुणा बहुविधा: प्राप्तास्तव सन्दर्शनान्मया।।1.65.32।।

மகாமுனிவரே! பிராம்மணரே! தங்கள் முன்னிலையில் நான் புனிதம் அடைந்து விட்டேன். தங்கள் வருகையால் எனக்கு அநேக நன்மைகள் கிடைத்திருக்கின்றன.

 

विस्तरेण च ते ब्रह्मन् कीर्त्यमानं महत्तप:।
श्रुतं मया महातेजो रामेण च महात्मना।।1.65.33।।

வலிமை நிறைந்த பிரம்மரிஷியே! ராமனும், நானும், தங்கள் தவத்தைப் பற்றிய விவரங்களைக் ( சதானந்தர் சொல்லக் ) கேட்டோம்.

 

सदस्यै: प्राप्य च सद: श्रुतास्ते बहवो गुणा:।
अप्रमेयं तपस्तुभ्यमप्रमेयं च ते बलम्।।1.65.34।।

अप्रमेया गुणाश्चैव नित्यं ते कुशिकात्मज ।

கௌசிகரே! இந்த வேள்விச்சாலையில் கூடியுள்ள பலரும் இந்த விவரங்களைக் கேட்டிருக்கிறார்கள். தங்களுடைய தவம் அளவிடமுடியாதது. தங்களுடைய சக்தி அளவிடமுடியாதது. தங்களுடைய பண்புகளும் அளவிடமுடியாதவை.

 

तृप्तिराश्चर्यभूतानां कथानां नास्ति मे विभो।।1.65.35।।

कर्मकालो मुनिश्रेष्ठ लम्बते रविमण्डलम्।

ப்ரபோ! தங்களுடைய அற்புதமான செயல்களைக் கேட்பதில் எனக்குச் சலிப்பே ஏற்படுவதில்லை. சூரியன் அஸ்தமித்து விட்டான். மாலை நேரத்தில் செய்ய வேண்டிய சடங்குகளுக்கு நேரம் ஆகிவிட்டது.

 

श्व: प्रभाते महातेजो द्रष्टुमर्हसि मां पुन:।।1.65.36।।

स्वागतं तपतां श्रेष्ठ मामनुज्ञातुमर्हसि।

மகாதேஜஸ் உடையவரே! நாளைக் காலையில் மீண்டும் வாருங்கள். தங்களுக்கு நல்வரவு. இப்போது எனக்கு விடை கொடுங்கள்.”

 

एवमुक्तो मुनिवर: प्रशस्य पुरुषर्षभम्।।1.65.37।।

विससर्जाशु जनकं प्रीतं प्रीतमनास्तदा।

இவ்வாறு ஜனக மன்னர் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த விஸ்வாமித்திரர், மன்னரை அன்புடன் அங்கிருந்து செல்வதற்கு அனுமதித்தார்.

 

एवमुक्त्वा मुनिश्रेष्ठं वैदेहो मिथिलाधिप:।।1.65.38।।

प्रदक्षिणं चकाराशु सोपाध्यायस्सबान्धव:।

உடனேயே, விதேஹ மன்னரான ஜனகர், தனது மந்திரிகளுடனும், குருமார்களுடனும், உறவினர்களுடனும், விஸ்வாமித்திரரை வலம் வந்தார்.

 

विश्वामित्रोऽपि धर्मात्मा सहरामस्सलक्ष्मण:।।1.65.39।।

स्ववाटमभिचक्राम पूज्यमानो महर्षिभि:।

தர்மாத்மாவான விஸ்வாமித்திரர், மகரிஷிக்களால் பூஜிக்கப்பட்டு, ராம லக்ஷ்மணர்களுடன் தங்களுடைய தங்குமிடத்துக்குச் சென்றார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे पञ्चषष्टितमस्सर्ग:।।

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  அறுபத்தைந்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...