ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 64
(விஸ்வாமித்திரர் தன் தவத்தைக் கலைக்க முயற்சித்த ரம்பையைச்
சபிக்கிறார்.)
सुरकार्यमिदं रम्भे
कर्तव्यं सुमहत्त्वया।
लोभनं कौशिकस्येह काममोहसमन्वितम्।।1.64.1।।
“ரம்பையே! இப்போது நீ
விஸ்வாமித்திரருக்கு காம இச்சையை உண்டாக்கி அவரை மயக்க வேண்டும். இந்த முக்கியமான
காரியத்தை நீ தேவர்களுக்காகச் செய்ய வேண்டும். “
तथोक्ता साऽप्सरा राम
सहस्राक्षेण धीमता।
व्रीडिता प्राञ्जलिर्वाक्यं प्रत्युवाच सुरेश्वरम्।।1.64.2।।
ராமரே! தேவேந்திரனின்
இந்த வார்த்தைகளைக் கேட்ட ரம்பை கைகளைக் கூப்பிக் கொண்டு, நாணத்துடன் கூறினாள்:
अयं सुरपते घोरो
विश्वामित्रो महामुनि:।
घोरमुत्सृजते क्रोधं मयि देव न संशय:।।1.64.3।।
ततो हि मे भयं देव प्रासादं कर्तुमर्हसि।
“தேவர்களின் தலைவனே!
இந்த விஸ்வாமித்திர முனிவர் பயங்கரமானவர். என் மேல் அவருடைய கோபத்தைக் காட்டுவார்
என்பதில் சந்தேகமில்லை. எனக்கு பயமாக இருக்கிறது.
என்னை மன்னித்து விடுங்கள்.”
एवमुक्तस्तया राम
रम्भया भीतया तदा।।1.64.4।।
तामुवाच सहस्राक्षो वेपमानां कृताञ्जलिम्।
ராமரே! பயந்து
நடுங்கிக்கொண்டு, கைகளைக் கூப்பிக்கொண்டு, ரம்பை கூறிய இந்த சொற்களைக் கேட்ட
இந்திரன் கூறினான்:
माभैषी रम्भे भद्रं ते
कुरुष्व मम शासनम्।।1.64.5।।
कोकिलो हृदयग्राही माधवे रुचिरद्रुमे।
अहं कन्दर्पसहित स्स्थास्यामि तव पार्श्वत:।।1.64.6।।
ரம்பையே!
பயப்படாதே! நீ பத்திரமாக இருப்பாய். வசந்த
காலத்தில் மரங்கள் பூத்துக் குலுங்கும் போது, குயில் வடிவத்தில் நானும், மன்மதனோடு
அங்கு வந்து உன்னுடன் இருப்பேன்.
त्वं हि रूपं बहुगुणं
कृत्वा परमभास्वरम्।
तमृषिं कौशिकं रम्भे भेदयस्व तपस्विनम्।।1.64.7।।
ரம்பையே! மனதைக் கவரும்
உருவம் எடுத்துக் கொண்டு, காதல் நிறைந்த செய்கைகளால், அந்த வலிமை மிக்க தபஸ்வியான
விஸ்வாமித்திரரின் தவத்தை நீ கலைக்க வேண்டும்.”
सा श्रुत्वा वचनं तस्य
कृत्वा रूपमनुत्तमम्।
लोभयामास ललिता विश्वामित्रं शुचिस्मिता।।1.64.8।।
இந்திரனின் இந்த
சொற்களைக் கேட்ட ரம்பை, மிகவும் அழகான வடிவம் எடுத்துக்கொண்டு, அழகான
புன்னகையுடன், விஸ்வாமித்திரரைக் கவர முயற்சித்தாள்.
कोकिलस्य च शुश्राव
वल्गु व्याहरत: स्वनम्।
सम्प्रहृष्टेन मनसा तत एनामुदैक्षत।।1.64.9।।
குயிலின் இனிமையான
கூவலைக் கேட்டு, மகிழ்ந்த மனத்துடன், விஸ்வாமித்திரர் அவளைப் பார்த்தார்.
अथ तस्य च शब्देन
गीतेनाप्रतिमेन च।
दर्शनेन च रम्भाया मुनिस्सन्देहमागत:।।1.64.10।।
குயிலின் ஒப்பற்ற
குரலைக் கேட்டவுடன், ரம்பையையும் அங்கு கண்ட விஸ்வாமித்திரருக்குச் சந்தேகம்
உண்டாயிற்று.
सहस्राक्षस्य तत्कर्म
विज्ञाय मुनिपुङ्गव:।
रम्भां क्रोधसमाविष्ट श्शशाप कुशिकात्मज:।।1.64.11।।
இது இந்திரனின் காரியம்
தான் என்று புரிந்து கொண்ட விஸ்வாமித்திரர், மிகுந்த கோபம் கொண்டு, ரம்பையை சபித்து
விட்டார்.
यन्मां लोभयसे रम्भे
कामक्रोधजयैषिणम्।
दशवर्षसहस्राणि शैली स्थास्यसि दुर्भगे ।।1.64.12।।
“துர்ப்பாக்கியசாலியான
ரம்பையே! காமத்தையும், கோபத்தையும் வெற்றி கொள்ளும் விருப்பத்துடன் நான் செய்யும்
தவத்தைக் கலைக்க முயற்சித்த நீ, பத்தாயிரம் ஆண்டுகள் கல்லாக இருக்கக் கடவாய்!”
ब्राह्मण स्सुमहातेजा
स्तपोबलसमन्वित:।
उद्धरिष्यति रम्भे त्वां मत्क्रोधकलुषीकृताम्।।1.64.13।।
“என்னுடைய கோபத்தினால்
கல்லாகப் போகும் நீ ஒரு ஒளி பொருந்திய அந்தணனால் சாபத்திலிருந்து விடுவிக்கப்
படுவாய்!”
एवमुक्त्वा महातेजा
विश्वामित्रो महामुनि:।
अशक्नुवन् धारयितुं क्रोधं सन्तापमागत:।।1.64.14।।
இவ்வாறு சாபம் கொடுத்த பின், தன்னுடைய கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள
முடியவில்லையே என்று விஸ்வாமித்திரர் மிகவும் வருந்தினார்.
तस्य शापेन महता रम्भा
शैली तदाऽभवत्।
वचश्शृत्वा च कन्दर्पो महर्षेस्स च निर्गत:।।1.64.15।।
இந்த மகத்தான
சாபத்தால், ரம்பை உடனே கல்லாக மாறிவிட்டாள். மகரிஷியின் சொற்களைக் கேட்ட
இந்திரனும், மன்மதனும், அங்கிருந்து ஓடி விட்டார்கள்.
कोपेन स
महातेजास्तपोऽपहरणे कृते।
इन्द्रियैरजितै राम न लेभे शान्तिमात्मन:।।1.64.16।।
ராமரே! விஸ்வாமித்திரர்
தனது கோபத்தை அடக்க முடியாததால் தன் தவ வலிமையை இழந்து, அதனால் தனது நிம்மதியையும்
இழந்தார்.
बभूवास्य मनश्चिन्ता
तपोऽपहरणे कृते ।
नैव क्रोधं गमिष्यामि न च वक्ष्ये कथञ्चन।।1.64.17।।
தனது தவ வலிமையை இழந்த
விஸ்வாமித்திரர் , இனி மேல், என்ன ஆனாலும், கோபம் கொள்வதில்லை என்றும், எதையும்
பேசுவதில்லை என்றும் தீர்மானித்தார்.
अथवा नोच्छवसिष्यामि
संवत्सरशतान्यपि।
अहं विशोषयिष्यामि ह्यात्मानं विजितेन्द्रिय:।।1.64.18।।
மேலும், இன்னும் நூறு வருடங்களுக்கு, நான் மூச்சை அடக்கி, என்
புலன் களை வென்று, இந்த உடலை உலர்த்தப் போகிறேன்.
तावद्यावद्धि मे
प्राप्तं ब्राह्मण्यं तपसाऽऽर्जितम्।
अनुच्छवसन्नभुञ्जान स्तिष्ठेयं शाश्वतीस्समा:।।1.64.19।।
न हि मे तप्यमानस्य क्षयं यास्यन्ति मूर्तय:।
‘அந்தணர்’ என்ற நிலை
எனக்குக் கிடைக்கும் வரை, நான், மூச்சை அடக்கி, உணவை விலக்கிக் கணக்கற்ற ஆண்டுகள்
தவம் இருக்கப் போகிறேன். அப்படி நான் தவம் செய்யும் போது, என் உடலின்
அங்கங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது.
एवं वर्षसहस्रस्य
दीक्षां स मुनिपुङ्गव:।।1.64.20।।
चकाराप्रतिमां लोके प्रतिज्ञां रघुनन्दन।
ரகு நந்தனரே! இவ்வாறாக விஸ்வாமித்திர மகாமுனிவர், ஆயிரம் வருடங்களுக்கு, இதுவரை
யாரும் செய்திராத பயங்கரமான தவத்தைச் செய்வதாக பிரதிக்ஞை செய்து கொண்டார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये
बालकाण्डे चतुष्षष्टितमस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் அறுபத்து
நான்காவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment