Saturday, 20 January 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 63

(விஸ்வாமித்திரர் மகரிஷி என்ற பட்டத்தைப் பெறுகிறார். மேனகை அவருடைய தவத்தைக் கலைப்பதில் வெற்றி பெறுகிறாள். பின்னர் தன் தவற்றை உணர்ந்த விஸ்வாமித்திரர், பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்காக, மீண்டும் கடும் தவம் புரிகிறார்)


पूर्णे वर्षसहस्रे तु व्रतस्नातं महामुनिम्।
अभ्यागच्छन् सुरास्सर्वे तप: फलचिकीर्षव:।।1.63.1।।

விஸ்வாமித்திரர் அவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்த பின்னர், விரதத்தை முடித்து, ஸ்னானம் செய்து விட்டு வந்த போது, தேவர்கள் அனைவரும், தவத்தின் பலனை அவருக்கு அளிப்பதற்காக அவரிடம் சென்றார்கள்.

 

अब्रवीत्सुमहातेजा ब्रह्मा सुरुचिरं वच:।
ऋषिस्त्वमसि भद्रं ते स्वार्जितै: कर्मभिश्शुभै:।।1.63.2।।

மகா தேஜஸ் உடைய பிரம்ம தேவர் விஸ்வாமித்திரரிடம் கூறினார், “உங்கள் சொந்த முயற்சியால், நல்ல காரியங்களைச் செய்து நீங்கள் ரிஷிப் பதவியை அடைந்து விட்டீர்கள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்!”

 

तमेवमुक्त्वा देवेशस्त्रिदिवं पुनरभ्यगात् ।
विश्वामित्रो महातेजा भूयस्तेपे महत्तप:।।1.63.3।।

இவ்வாறு கூறி விட்டுத் தேவர்களின் தலைவரான பிரம்ம தேவர், ஸ்வர்க்கத்துக்குத் திரும்பிச் சென்றார். ஒளி மிகுந்த விஸ்வாமித்திரர் மீண்டும் தவம் செய்யத் தொடங்கினார்.

 

 

तत: कालेन महता मेनका परमाऽप्सरा:।
पुष्करेषु नरश्रेष्ठ स्नातुं समुपचक्रमे।।1.63.4।।

மனிதருள் சிறந்தவரே! இவ்வாறு வெகு காலம் கடந்த பிறகு, ஒரு நாள், அப்சரஸ்களில் சிறந்தவளான மேனகை, அங்கே, புஷ்கரத்துக்கு வந்து அங்கே நீராடத் தொடங்கினாள்.

 

तां ददर्श महातेजा मेनकां कुशिकात्मज:।
रूपेणाप्रतिमां तत्र विद्युतं जलदे यथा।।1.63.5।।

ஒளி பொருத்திய விஸ்வாமித்திரர், இணையற்ற அழகியான மேனகையைப் பார்த்தார். அவள் மேகங்களுக்கிடையே தோன்றும் மின்னலைப் போலக் காணப்பட்டாள்.

 

दृष्ट्वा कन्दर्पवशगो मुनिस्तामिदमब्रवीत्।
अप्सरस्स्वागतं तेऽस्तु वस चेह ममाश्रमे।।1.63.6।।

अनुगृह्णीष्व भद्रं ते मदनेन सुमोहितम्।

மேனகையைப் பார்த்த விஸ்வாமித்திரர், காம வசப்பட்டு அவளிடம் சொன்னார்: “ஓ அப்ஸராவே! என்னுடைய ஆசிரமத்துக்கு வந்து வசிப்பாயாக! உன் மேல் மோகம் கொண்ட எனக்கு அனுக்கிரகம் செய்வாயாக!”

 

इत्युक्ता सा वरारोहा तत्र वासमथाकरोत्।।1.63.7।।

तस्यां वसन्त्यां वर्षाणि पञ्च पञ्च च राघव ।
विश्वामित्राश्रमे राम सुखेन व्यतिचक्रमु:।।1.63.8।।

ராமரே! உயர்ந்த குலத்தில் பிறந்த அந்த மங்கை விஸ்வாமித்திரர் சொன்னதைக் கேட்டு, அவருடைய ஆசிரமத்தில் வந்து வசிக்கலானாள். அவ்வாறு பத்து ஆண்டுகள் கழிந்தன.

अथ काले गते तस्मिन्विश्वामित्रो महामुनि:।
सव्रीड इव सम्वृत्तश्चिन्ताशोकपरायण:।।1.63.9।।

அவ்வாறு காலம் கழிந்து கொண்டிருந்த போது ஒரு நாள், விஸ்வாமித்திரர் தனது செயலை எண்ணித் துயரமும், கவலையும், பச்சாத்தாபமும் அடைந்தார்.

 

बुद्धिर्मुनेस्समुत्पन्ना सामर्षा रघुनन्दन।
सर्वं सुराणां कर्मैतत्तपोपहरणं महत्।।1.63.10।।

ரகு நந்தனரே! விஸ்வாமித்திரரின் மனதில் வெறுப்பு நிரம்பியது. “இவையெல்லாம் என்னுடைய தவத்தைக் கலைப்பதற்காக தேவர்கள் செய்த சதி” என்று நினைத்தார்.

 

अहोरात्रापदेशेन गतास्संवत्सरा दश।
काममोहाभिभूतस्य विघ्नोऽयं समुपस्थित:।।1.63.11।।

‘காமத்தாலும், மோகத்தாலும் ஏற்பட்ட இந்த இடையூறால், என்னுடைய தவத்தில் பத்து ஆண்டுகள் வீணாகிவிட்டன.

 

विनिश्श्वसन्मुनिवर: पश्चात्तापेन दु:खित:।
भीतामप्सरसं दृष्ट्वा वेपन्तीं प्राञ्जलिं स्थिताम्।।1.63.12।।

मेनकां मधुरैर्वाक्यैर्विसृज्य कुशिकात्मज:।
उत्तरं पर्वतं राम विश्वामित्रो जगाम ह।।1.63.13।।

“ராமரே! பச்சாத்தாபத்தால் பெருமூச்செறிந்து கொண்டு, மிகுந்த துயரத்தில் இருந்த விஸ்வாமித்திரரைப் பார்த்து, கைகளைக் கூப்பிக்கொண்டு, பயந்து நடுங்கிக்கொண்டு நின்று கொண்டிருந்த மேனகையைப் பார்த்து, மென்மையான வார்த்தைகளால் அவளைப் போகச் சொல்லி விட்டு, அவர் வடக்குத்திசையில் இருந்த மலையை நோக்கிப் புறப்பட்டார்.

स कृत्वा नैष्ठिकीं बुद्धिं जेतुकामो महायशा:।
कौशिकीतीरमासाद्य तपस्तेपे सुदारुणम्।।1.63.14।।

இனி காலம் முழுவதும், தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற முடிவுடன், காமத்தை அடக்க வேண்டிக், கௌசிகி நதியின் கரையில் மிகக் கடினமான தவத்தை மேற்கொண்டார்.

 

तस्य वर्षसहस्रं तु घोरं तप उपासत:।
उत्तरे पर्वते राम देवतानामभूद्भयम्।।1.63.15।।

ராமரே! ஆயிரம் வருடங்களாக, அவர் கடுமையான தவம் செய்வதைப் பார்த்த தேவர்கள் அச்சம் கொண்டனர்.

 

आमन्त्रयन् समागम्य सर्वे सर्षिगणा स्सुरा:।
महर्षिशब्दं लभतां साध्वयं कुशिकात्मज:।।1.63.16।।

தங்களுக்குள் ஆலோசனை செய்த பிறகு, ரிஷிகளும், தேவர்களும் சேர்ந்து, விஸ்வாமித்திரர் மகரிஷி என்ற பதவிக்குத் தகுதி உடையவராகி விட்டார் என்று தீர்மானித்தனர்.

 

देवतानां वच श्शृत्वा सर्वलोकपितामह:।
अब्रवीन्मधुरं वाक्यं विश्वामित्रं तपोधनम्।।1.63.17।।

தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட பிரம்மதேவர், தவச்செல்வரான விஸ்வாமித்திரரிடம் வந்து இனிமையாகப் பேச ஆரம்பித்தார்.

 

महर्षे स्वागतं वत्स तपसोग्रेण तोषित:।
महत्त्वमृषिमुख्यत्वं ददामि तव कौशिक ।।1.63.18।।

“மகரிஷியே! குழந்தாய்! கௌசிகனே! உன்னுடைய உக்கிரமான தவத்தால் மகிழ்ந்து, ரிஷிகளுக்குள் முக்கியமானவர் என்று பொருள் படும் ‘மகரிஷி’ என்ற அந்தஸ்தை உனக்குக் கொடுக்கிறேன்.


ब्रह्मणस्स वचश्श्रुत्वा सर्वलोकेश्वरस्य ह।
न विषण्णो न सन्तुष्टो विश्वामित्रस्तपोधन:।।1.63.19।।

தவச்செல்வரான விஸ்வாமித்திரர், பிரம்மதேவரின் வார்த்தைகளைக் கேட்டு, வருத்தப் படவும் இல்லை; மகிழ்ச்சியடையவும் இல்லை.

 

प्राञ्जलि: प्रणतो भूत्वा सर्वलोकपितामहम्।
प्रत्युवाच ततो वाचं विश्वामित्रो महामुनि:।।1.63.20।।

கைகளைக் கூப்பிக்கொண்டு, அனைத்து உலகத்துக்கும், பிதாமகரான பிரம்ம தேவரை வணங்கி, அவருக்குப் பதில் அளித்தார்.

 

महर्षिशब्दमतुलं स्वार्जितै: कर्मभिश्शुभै:।
यदि मे भगवानाह ततोऽहं विजितेन्द्रिय:।।1.63.21।।

“பகவானே! என்னுடைய தவத்தாலும், நற்செயல்களாலும் மகிழ்ந்து, எனக்குத் தாங்கள் அளித்த ‘மகரிஷி’ என்ற பதவியில் இருந்து, நான் எனது புலன்களை வென்று விட்டேன் என்று தோன்றுகிறது.”

 

तमुवाच ततो ब्रह्मा न तावत् त्त्वं जितेन्द्रिय:।
यतस्व मुनिशार्दूल इत्युक्त्वा त्रिदिवं गत:।।1.63.22।।

அதைக் கேட்ட பிரம்ம தேவர் , “நீ இன்னும் உன் புலன்களை வெல்லவில்லை. முனிவருள் சிறந்த விஸ்வாமித்திரா! நீ இன்னும் முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறி விட்டுத் தேவலோகம் திரும்பினார்.

विप्रस्थितेषु देवेषु विश्वामित्रो महामुनि:।
ऊर्ध्वबाहुर्निरालम्बो वायुभक्षस्तपश्चरन्।।1.63.23।।

தேவர்கள் திரும்பிச் சென்ற பிறகு, விஸ்வாமித்திரர், கைகள் இரண்டையும் உயரே தூக்கிக் கொண்டு, எந்த உதவியும் இல்லாமல் நின்று கொண்டு, காற்றை மட்டும் உணவாகக் கொண்டு, கடுந்தவம் இயற்றினார்.

 

घर्मे पञ्चतपा भूत्वा वर्षास्वाकाशसंश्रय:।
शिशिरे सलिलस्थायी रात्र्यहानि तपोधन:।।1.63.24।।

एवं वर्षसहस्रं हि तपो घोरमुपागमत्।

தவத்தையே செல்வமாகக் கொண்ட விஸ்வாமித்திரர், கோடையில் பஞ்சாக்கினிகள் மத்தியில் நின்று கொண்டும், மழைக்காலத்தில் ஆகாயத்துக்கடியில் நின்று கொண்டும், பனிக்காலத்தில் இரவும் பகலும், நீரிலேயே நின்று கொண்டும், கோரமான தவம் புரிந்தார்.

 

तस्मिन् सन्तप्यमाने तु विश्वामित्रे महामुनौ।।1.63.25।।
सम्भ्रमस्सुमहानासीत्सुराणां वासवस्य च।

மகாமுனிவரான விஸ்வாமித்திரரின் இந்தக் கடுமையான தவத்தால், தேவேந்திரனுக்குக் கவலை ஏற்பட்டது.

 

रम्भामप्सरसं शक्र स्सह सर्वैर्मरुद्गणै:।
उवाचात्महितं वाक्यमहितं कौशिकस्य च।।1.63.26।।

இந்திரன், மருத்கணங்களுடன் சேர்ந்து, ரம்பா என்னும் அப்ஸரஸ் இடத்தில், தங்களுக்கு நன்மையும், விஸ்வாமித்திரருக்குத் தீங்கும் ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகளைக் கூறினார்.

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे त्रिषष्टितमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  அறுபத்து மூன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...