Saturday, 30 December 2023

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 45

(தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். சிவபெருமான் அதிலிருந்து வரும் விஷத்தைப் பருகுகிறார். விஷ்ணு ஆமை வடிவம் எடுத்துக் கொண்டு மந்தர மலையைத் தன் முதுகில் தாங்குகிறார். தன்வந்திரி, அப்சரஸ்கள் வெளிப்படுகிறார்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடியே, அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் சண்டை ஏற்படுகிறது.)


विश्वामित्रवचश्श्रुत्वा राघव स्सहलक्ष्मण:।
विस्मयं परमं गत्वा विश्वामित्रमथाब्रवीत्।।1.45.1।।

லக்ஷ்மணனுடன் சேர்ந்து, விஸ்வாமித்திரர் கூறிய கதையைக் கேட்ட ராமன் மிகவும் வியப்பெய்தி, அவரிடம் கூறினான்:

 

अत्यद्भुतमिदं ब्रह्मन् कथितं परमं त्वया।
गङ्गावतरणं पुण्यं सागरस्यापि पूरणम्।।1.45.2।।

“பிரம்மத்தை உணர்ந்தவரே! கங்கை ஆகாயத்தில் இருந்து கீழே இறங்கி வந்து, அதனால் சமுத்திரம் நீர் நிறைந்து முழுமையடைந்த  கதை மிகவும் அற்புதமாக இருந்தது.”

 

तस्य सा शर्वरी सर्वा सह सौमित्रिणा तदा।
जगाम चिन्तयानस्य विश्वामित्रकथां शुभाम् ।।1.45.3।।

ராமன், லக்ஷ்மணனுடன் சேர்ந்து விஸ்வாமித்திரர் கூறிய அந்தக் கதையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததில் இரவும் கழிந்து விட்டது.

 

तत: प्रभाते विमले विश्वामित्रं महामुनिम्।
उवाच राघवो वाक्यं कृताह्निकमरिन्दम:।।1.45.4।।

தூய்மையான காலை விடிந்ததும், எதிரிகளை அழிக்கும் திறன் கொண்ட ராமன், காலையில் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமைகளை முடித்து விட்டு, விஸ்வாமித்திரரிடம் இவ்வாறு கூறினான்:

 

गता भगवती रात्रिश्श्रोतव्यं परमं श्रुतम्।

क्षणभूतेव नौ रात्रि स्सम्वृत्तेयं महातप:।।1.45.5।।

इमां चिन्तयतस्सर्वां निखिलेन कथां तव।

“மகத்தான தபஸ்வியே! தாங்கள் கூறிய இந்த அருமையான கதையைக் கேட்டதிலும், அதைப் பற்றிச் சிந்தித்ததிலும், இந்த மங்களமான இரவு நொடிப் பொழுதில் கழிந்தது போல் இருக்கிறது.

 

तराम सरितां श्रेष्ठां पुण्यां त्रिपथगां नदीम्।।1.45.6।।

नौरेषा हि सुखास्तीर्णा ऋषीणां पुण्यकर्मणाम्।

भगवन्तमिह प्राप्तं ज्ञात्वा त्वरितमागता।।1.45.7।।

மரியாதைக்குரிய தாங்கள் இங்கு வந்திருப்பதை அறிந்து, ரிஷிகளுடைய வசதியான படகு வந்திருக்கிறது. (இதில் ஏறி) மூன்று திசைகளிலும் பாயும் புண்ணிய நதியான கங்கையைத் தாண்டுவோம். “

 

तस्य तद्वचनं श्रुत्वा राघवस्य महात्मन:।
सन्तारं कारयामास सर्षिसङ्घ स्सराघव:।।1.45.8।।

மகாத்மாவான ராமனின் சொற்களைக்கேட்ட விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்களுடனும், ஏராளமான ரிஷிகளுடனும் நதியைக் கடக்கலானார்.

 

उत्तरं तीरमासाद्य सम्पूज्यर्षिगणं तदा।
गङ्गाकूले निविष्टास्ते विशालां ददृशु: पुरीम्।।1.45.9।।

கங்கையின் வட கரையை அடைந்த அவர்கள், அங்கே தங்கியிருந்த முனிவர்களைப் பூஜித்து விட்டு அமர்ந்த போது ‘விசாலம்’ என்ற நகரத்தைக் கண்டார்கள்.

 

ततो मुनिवरस्तूर्णं जगाम सह राघव: ।
विशालां नगरीं रम्यां दिव्यां स्वर्गोपमां तदा।।1.45.10।।

பின்னர், ராமலக்ஷ்மணர்களுடன், தவஸ்ரேஷ்டரான விஸ்வாமித்திரர் ஸ்வர்க்கத்துக்கு நிகரான அழகுடன் விளங்கிய அந்த விசாலம் என்னும் நகரத்துக்கு விரைந்து சென்றார்.

 

अथ रामो महाप्राज्ञो विश्वामित्रं महामुनिम् ।
पप्रच्छ प्राञ्जलिर्भूत्वा विशालामुत्तमां पुरीम्।।1.45.11।।

அப்போது அறிவாற்றல் நிறைந்த ராமன், கைகளைக் கூப்பிக்கொண்டு மகாமுனிவரான விஸ்வாமித்திரரிடம் அந்த உத்தமமான விசால நகரத்தைப் பற்றி விசாரித்தான்.

 

कतरो राजवंशोऽयं विशालायां महामुने।
श्रोतुमिच्छामि भद्रं ते परं कौतूहलं हि मे।।.1.45.12।।

“மகாமுனிவரே! இந்த விசாலம் என்ற நகரத்தில் எந்த ராஜ வம்சம் ஆட்சி செய்து வருகிறது? அதைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். தயவு செய்து அதைப் பற்றிக் கூறுங்கள். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும்!”

 

तस्य तद्वचनं श्रुत्वा रामस्य मुनिपुङ्गव:।
आख्यातुं तत्समारेभे विशालस्य पुरातनम्।।1.45.13।।

ராமனின் சொற்களைக் கேட்ட முனிபுங்கவரான விஸ்வாமித்திரர் விசாலம் என்னும் புராதனமான நகரத்தின் வரலாற்றைக் கூறத் தொடங்கினார்.

 

श्रूयतां राम शक्रस्य कथां कथयतश्शुभाम्।
अस्मिन् देशे तु यद्वृत्तं तदपि शृणु राघव।।1.45.14।।

“ராமா! இந்திரனின் மங்களகரமான கதையையும், இந்த நகரத்தில் என்ன நடந்தது என்பதையும் சொல்கிறேன், கேள்!

 

पूर्वं कृतयुगे राम दिते: पुत्रा महाबला:।
अदितेश्च महाभाग वीर्यवन्तस्सुधार्मिका:।।1.45.15।।

பாக்கியசாலியான ராமனே! க்ருதயுகத்தில் திதியின் புத்திரர்களாகிய தைத்யர்கள் மிகவும் பலசாலிகளாகவும், அதிதியின் புத்திரர்களான ஆதித்யர்கள் மிகவும் வீர்யம் பொருந்திய தர்மாத்மாக்களாகவும் இருந்தார்கள்.

 

ततस्तेषां नरश्रेष्ठ बुद्धिरासीन्महात्मनाम् ।
अमरा अजराश्चैव कथं स्याम निरामया:।।1.45.16।।

மனிதருள் சிறந்தவனே! ஒரு சமயம் அவர்கள், மூப்பு, மரணம், நோய் ஆகியவை இல்லாமல் வாழ்வது எப்படி என்று யோசித்தார்கள்.

 

तेषां चिन्तयतां राम बुद्धिरासीन्महात्मनाम्।
क्षीरोदमथनं कृत्वा रसं प्राप्स्याम तत्र वै।।1.45.17।।

ராமா! அவ்வாறு அவர்கள் யோசித்துக்கொண்டிருந்த போது அவர்களுக்கு, பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற  ஒரு எண்ணம் வந்தது.

 

ततो निश्चित्य मथनं योक्त्रं कृत्वा च वासुकिम्।
मन्थानं मन्दरं कृत्वा ममन्थुरमितौजस:।।1.45.18।।

அதன் படி, எல்லையற்ற ஆற்றல் உடைய அவர்கள், வாசுகி என்னும் அரவத்தைக் கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு, பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.

 

अथ वर्षसहस्रेण योक्त्रसर्पशिरांसि च।
वमन्त्यति विषं तत्र ददंशुर्दशनैश्शिला:।।1.45.19।।

ஆயிரம் ஆண்டுகள் இவ்வாறு பாற்கடலைக் கடைந்த பிறகு வாசுகி மிக பயங்கரமான விஷத்தைக் கக்கியதுடன் மந்தர மலையைத் தன் பற்களால் கடிக்கத் தொடங்கியது.

 

उत्पपाताग्निसङ्काशं हालाहलमहाविषम्।
तेन दग्धं जगत्सर्वं सदेवासुरमानुषम्।।1.45.20।।

அக்கினியைப் போன்ற பயங்கரமான ஹாலாஹாலம் என்ற அந்த விஷத்தால், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உலகங்களும் எரிந்தன.

 

अथ देवा महादेवं शङ्करं शरणार्थिन:।
जग्मु: पशुपतिं रुद्रं त्राहि त्राहीति तुष्टुवु:।।1.45.21।।

அப்போது, தேவர்கள், அனைத்து உயிர்களுக்கும் தலைவரும், அனைவருக்கும் நன்மை செய்பவருமான சங்கரனைச் சரணடைந்து, தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள்.

 

एवमुक्तस्ततो देवैर्देवदेवेश्वर: प्रभु:।
प्रादुरासीत्ततोऽत्रैव शङ्खचक्रधरो हरि:।।1.45.22।।

அதே சமயத்தில், தேவர்களால் வேண்டிக்கொள்ளப் பட்ட விஷ்ணுவும் சங்க சக்கரங்களுடன் அங்கே தோன்றினார்.

 

उवाचैनं स्मितं कृत्वा रुद्रं शूलभृतं हरि:।
दैवतैर्मथ्यमाने तु यत्पूर्वं समुपस्थितम् ।।1.45.23।।

त्वदीयंहि सुरश्रेष्ठ सुराणामग्रजोऽसि यत् ।

अग्रपूजामिमां मत्वा गृहाणेदं विषं प्रभो।।1.45.24।।

ஹரியானவர், புன்னகையுடன் சூலம் ஏந்திய ருத்ரரிடம், “தேவர்களுக்குள் ஸ்ரேஷ்டமானவரே! முதன் முதலாகத் தோன்றிய தேவர் என்ற வகையில், பாற்கடலைக் கடைந்த போது முதலில் வந்தது எதுவானானும் அது தங்களுக்கு உரியது. ஆகவே, இந்த விஷத்தைத் தங்களுக்கு அளிக்கப்படும் முதல் மரியாதையாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.


इत्युक्त्वा च सुरश्रेष्ठस्तत्रैवान्तरधीयत।

देवतानां भयं दृष्टवाश्रुत्वा वाक्यं तु शार्ङ्गिण:।
हालाहलविषं घोरं स जग्राहामृतोपमम्।।1.45.25।।

தேவர்களுள் மிகச்சிறந்தவரான விஷ்ணு, இவ்வாறு கூறி விட்டு அங்கிருந்து மறைந்து விட்டார். சிவபெருமான், விஷ்ணுவின் வார்த்தைகளைக் கேட்டு, தேவர்களின் அச்சத்தைப் பார்த்து, பயங்கரமான அந்த ஹாலாஹலத்தை, அமிர்தத்தைப் போலக் கருதி ஏற்றுக்கொண்டார்.

 

देवान्विसृज्य देवेशो जगाम भगवान् हर:।
ततो देवासुरास्सर्वे ममन्थू रघुनन्दन ।।1.45.26।।

தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமான் பிறகு அங்கிருந்து சென்று விட்டார். ரகு நந்தனா! அதன் பிறகு, தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடையத் தொடங்கினர்.

 

प्रविवेशाथ पातालं मन्थान: पर्वतोऽनघ।
ततो देवास्सगन्धर्वास्तुष्टुवुर्मधुसूदनम्।।1.45.27।।

பாவமற்றவனே! சிறிது நேரத்தில், மந்தர மலையானது கீழிறங்கிப் பாதாளத்துக்குச் சென்று விட்டது. தேவர்களும் கந்தர்வர்களும், விஷ்ணுவைச் சரணடைந்து வேண்டிக்கொண்டனர்.

 

त्वं गति: सर्वभूतानां विशेषेण दिवौकसाम्।
पालयास्मान्महाबाहो गिरिमुद्धर्तुमर्हसि।।1.45.28।।

“வலிமையான கரங்களுடைய விஷ்ணுவே! தாங்கள் தான் அனத்து உயிர்களுக்கும், குறிப்பாக தேவர்களாகிய எங்களுக்கு அடைக்கலம். தயவு செய்து, இந்த மந்தர மலையை மேலே தூக்கி, எங்களைக் காப்பாற்றுங்கள்.”

 

इति श्रुत्वा हृषीकेश: कामठं रूपमास्थित:।
पर्वतं पृष्ठत: कृत्वा शिश्ये तत्रोदधौ हरि:।।1.45.29।।

தேவர்களின் இந்த வேண்டுகோளைக்கேட்ட ஹ்ரிஷீகேசனான (புலன்களுக்குத் தலைவன்) ஹரியானவர், ஆமையின் வடிவம் எடுத்துக் கொண்டு, மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டு, சமுத்திரத்தில் படுத்துக் கொண்டார்.

 

पर्वताग्रे तु लोकात्मा हस्तेनाक्रम्य केशव:।
देवानां मध्यत: स्थित्वा ममन्थ पुरुषोत्तम:।।1.45.30।।

பின்னர், லோகாத்மாவான விஷ்ணு, தேவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு மந்தர மலையின் சிகரத்தைக் கைகளால் பற்றிக் கொண்டு, பாற்கடலைக் கடைந்தார்.

 

अथ वर्षसहस्रेण सदण्डस्सकमण्डलु:।
पूर्वं धन्वन्तरिर्नाम अप्सराश्च सुवर्चस:।।1.45.31।।

ஆயிரம் ஆண்டுகள் இவ்வாறு கடைந்த பின்னர், கைகளில் தண்டத்தையும், கமண்டலத்தையும் ஏந்திக் கொண்டு, தன்வந்தரி வெளிப்பட்டார். பிறகு, மிகுந்த ஒளி பொருந்திய அப்சரஸ்கள் வெளியே வந்தார்கள்.

 

अप्सु निर्मथनादेव रसास्तस्माद्वरस्त्रिय:।
उत्पेतुर्मनुजश्रेष्ठ तस्मादप्सरसोऽभवन्।।1.45.32।।

மனிதருள் சிறந்தவனே! ராமா! அந்தப் பாற்கடலைக் கடையும் போது, அதன் ரஸத்தில் இருந்து தோன்றியதால், அந்த அழகான பெண்கள் அப்சரஸ்கள் எனப்பட்டார்கள்.

षष्टि: कोट्योऽभवंस्तासाम् अप्सराणां सुवर्चसाम्।
असङ्ख्येयास्तु काकुत्स्थ यास्तासां परिचारिका:।।1.45.33।।

காகுஸ்தனே! அறுபது கோடி அப்சரஸ்கள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டார்கள். அவர்களுக்குச் சேவை செய்வதற்காக, எண்ணிலடங்காத பணிப்பெண்களும் வெளியே வந்தார்கள்.

 

न तास्स्म परिगृह्णन्ति सर्वे ते देवदानवा:।
अप्रतिग्रहणात्ताश्च सर्वास्साधारणास्स्मृता:।।1.45.34।।

தேவர்களோ, தானவர்களோ, அவர்களைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, அவர்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள் என்று கருதப் பட்டார்கள்.

 

वरुणस्य तत: कन्या वारुणी रघुनन्दन ।
उत्पपात महाभागा मार्गमाणा परिग्रहम्।।1.45.35।।

ரகு நந்தனா! அதன் பின்னர், வருணனின் புதல்வியான வாருணியானவள், தனக்கேற்ற கணவனைத் தேடிப் பாற்கடலில் இருந்து வெளியே வந்தாள்.

 

दिते: पुत्रा न तां राम जगृहुर्वरुणात्मजाम्।
अदितेस्तु सुता वीर जगृहुस्तामनिन्दिताम्।।1.45.36।।

ராமா! களங்கமற்ற வாருணியைத் திதியின் புதல்வர்களாகிய தானவர்கள் ஏற்கவில்லை. ஆனால், அதிதியின் புதல்வர்களான தேவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

 

असुरास्तेन दैतेयास्सुरास्तेनादितेस्सुता:।
हृष्टा: प्रमुदिताश्चासन् वारुणीग्रहणात्सुरा:।।1.45.37।।

அதன் காரணமாக, திதியின் புதல்வர்கள் அசுரர்கள் என்றும், அதிதியின் புதல்வர்கள் சுரர்கள் என்றும் அறியப்பட்டார்கள். தேவர்கள், வாருணியைப் பெற்றதனால் மிகவும் மகிழ்ந்தார்கள்.

 

उच्चैश्श्रवा हयश्रेष्ठो मणिरत्नं च कौस्तुभम्।
उदतिष्ठन्नरश्रेष्ठ तथैवामृतमुत्तमम्।।1.45.38।।

மனிதருள் சிறந்தவனே! குதிரைகளுள் சிறந்த ‘உச்சைஸ்ரவஸ்’ என்னும் தெய்வீகக் குதிரையும், மணிகளுள் சிறந்த ‘கௌஸ்துபமும்’, இறுதியாக அமிர்தமும், அந்தப் பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்தன.

 

अथ तस्य कृते राम महानासीत्कुलक्षय:।
अदितेस्तु तत: पुत्रा दिते: पुत्रानसूदयन्।।1.45.39।।

ராமா! அந்த அமிர்தத்தைப் பங்கீட்டுக் கொள்வதில் ஏற்பட்ட சண்டையில், திதியின் புதல்வர்களிலும், அதிதியின் புதல்வர்களிலும் அநேகம் பேர் அழிந்தனர். பின்னர் அதிதியின் புதல்வர்களான தேவர்கள், திதியின் புதல்வர்களான தைத்யர்களைக் கொன்றனர்.

 

एकतोऽभ्यागमन् सर्वे ह्यसुरा राक्षसैस्सह।
युद्धमासीन्महाघोरं वीर त्रैलोक्यमोहनम्।।1.45.40।।

ராமனே! அசுரர்களும், ராக்ஷஸர்களும் ஒரு அணியில் சேர்ந்து கொண்டு தேவர்களுடன் பயங்கரமாகப் போரிட்டதில் மூன்று உலகங்களிலும் குழப்பம் ஏற்பட்டது.

 

यदा क्षयं गतं सर्वं तदा विष्णुर्महाबल:।
अमृतं सोऽहरत्त्तूर्णं मायामास्थाय मोहिनीम्।।1.45.41।।

எல்லாம் முழுமையாக அழிந்த பிறகு விஷ்ணுவானவர் மோஹினி என்ற மிக அழகான பெண்ணாக உருக்கொண்டு, அந்த அமிர்த கலசத்தைக் களவாடிச் சென்றார்.

 

ये गताऽभिमुखं विष्णुमक्षयं पुरुषोत्तमम्।
सम्पिष्टास्ते तदा युद्धे विष्णुना प्रभविष्णुना।।1.45.42।।

அழிவற்ற பரம புருஷனான விஷ்ணுவை எதிர்த்தவர்கள் அவரால் அழிக்கப் பட்டார்கள்.

 

अदितेरात्मजा वीरा दिते: पुत्रान्निजघ्निरे।
तस्मिन् घोरे महायुद्धे दैतेयादित्ययोर्भृशम्।।1.45.43।।

தைத்யர்களுக்கும், ஆதித்யர்களுக்கும் நடந்த கோரமான யுத்தத்தில்  அதிதியின் புதல்வர்கள் திதியின் புதல்வர்களைக் கொன்றார்கள்.


निहत्य दितिपुत्रांश्च राज्यं प्राप्य पुरन्दर:।
शशास मुदितो लोकान् सर्षिसङ्घान् सचारणान्।।1.45.44।।

திதியின் புதல்வர்களைக் கொன்றபின் ராஜ்ஜியத்தைப் பெற்ற இந்திரன் ரிஷிகளுடனும், தெய்வீகப் பாடகர்களுடனும், மகிழ்ச்சியாக தேவலோகத்தை ஆண்டுவந்தான்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे पञ्चचत्वारिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  நாற்பத்தைந்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 44

(ராஜா பகீரதர் தனது முன்னோர்களுக்கு ஈமக்கிரியைகளை நிறைவேற்றுகிறார்.)

 
स गत्वा सागरं राजा गङ्गयाऽनुगतस्तदा ।

प्रविवेश तलं भूमेर्यत्र ते भस्मसात्कृता:।।1.44.1।।

அதன் பிறகு ராஜா பகீரதர், கங்கை பின் தொடர, சமுத்திரத்தை அடைந்து, அங்கிருந்து சகரபுத்திரர்கள் சாம்பலாக்கப்பட்ட பாதாளத்தில் பிரவேசித்தார்.

 

भस्मन्यथाऽप्लुते राम गङ्गायास्सलिलेन वै।
सर्वलोकप्रभुर्ब्रह्मा राजानमिदमब्रवीत्।।1.44.2।।

அங்கே, சகரபுத்திரர்களின் சாம்பல் கங்கை நீரால் கரைக்கப் பட்ட பிறகு,  அனைத்து உலகங்களுக்கும் தலைவரான பிரம்ம தேவர் பகீரதரின் முன் தோன்றி இவ்வாறு கூறினார்:

 

तारिता नरशार्दूल दिवं याताश्च देववत्।
षष्ठि: पुत्रसहस्राणि सगरस्य महात्मन:।।1.44.3।।

“மனிதருள் சிறந்தவனே! மகாத்மாவான சகரருடைய அறுபதினாயிரம் புதல்வர்களும், மோக்ஷம் அடைந்து தேவர்களைப் போல் ஸ்வர்க்கத்தை அடைந்து விட்டார்கள்.

 

सागरस्य जलं लोके यावत्स्थास्यति पार्थिव।
सगरस्यात्मजास्तावत्स्वर्गे स्थास्यन्ति देववत्।।1.44.4।।

“அரசே! இந்த உலகத்தில் சமுத்திரத்தின் நீர் இருக்கும் வரை சகரரின் புத்திரர்கள் தேவர்களைப் போல ஸ்வர்க்கத்தில் இருப்பார்கள்.

 

इयं च दुहिता ज्येष्ठा तव गङ्गा भविष्यति ।
त्वत्कृतेन च नाम्नाऽथ लोके स्थास्यति विश्रुता।।1.44.5।।

இந்த கங்கை உனது மூத்த மகளாகிறாள். நீ செய்த செயலால், இந்த உலகத்தில் அவள் உன்னுடைய பெயரால் (பாகீரதி என்று) நிலை பெற்றிருப்பாள்.

 

गङ्गा त्रिपथगा राजन् दिव्या भागीरथीति च।
त्रीन् पथो भावयन्तीति ततस्त्रिपथगा स्मृता।।1.44.6।।

அரசே! கங்கை ‘த்ரிபதகா’ என்றும் ‘பாகீரதி’ என்றும் அழக்கப்படுவாள். ஸ்வர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களிலும் பாய்வதால், கங்கை ‘த்ரிபதகா’ ( மூன்று வழியில் செல்பவள்) என்று அறியப்படுகிறாள்.

 

पितामहानां सर्वेषां त्वमत्र मनुजाधिप ।
कुरुष्व सलिलं राजन् प्रतिज्ञामपवर्जय।।1.44.7।।

அரசே! கங்கை நீரால் உன் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்து உன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்று.

 

पूर्वकेण हि ते राजंस्तेनातियशसा तदा।
धर्मिणां प्रवरेणापि नैष प्राप्तो मनोरथ:।।1.44.8।।

அரசே! உன்னுடைய முன்னோர்களால், மிகச்சிறந்த தர்மாத்மாவான சகரரால் கூட இந்த விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை.

 

तथैवांशुमता तात लोकेऽप्रतिमतेजसा।
गङ्गां प्रार्थयतानेतुं प्रतिज्ञा नापवर्जिता।।1.44.9।।

குழந்தாய்! அதே போல், இணையற்ற தேஜஸ் உடைய அம்சுமானால் கூட கங்கையை வேண்டி அழைத்து வந்து இந்த சபதத்தை நிறைவேற்ற முடியவில்லை.

 

राजर्षिणा गुणवता महर्षिसमतेजसा।
मत्तुल्यतपसा चैव क्षत्रधर्मस्थितेन च।।1.44.10।।

दिलीपेन महाभाग तव पित्राऽति तेजसा।
पुनर्न शङ्किताऽनेतुं गङ्गां प्रार्थयताऽनघ।।1.44.11।।

பாவமற்றவனே! ஆசீர்வதிக்கப்பட்டவனே! நற்குணங்கள் நிறைந்தவரும், எனக்கு நிகரான தபஸ்வியும், மகரிஷி போன்ற தேஜஸ் உடையவரும், க்ஷத்திரிய தர்மத்தில் நிலையாக நிற்பவருமான உனது தந்தையான திலீபரால் கூட கங்கையைப் பிரார்த்தித்து இங்கு அழைத்து வர முடியவில்லை.


सा त्वया समनुक्रान्ता प्रतिज्ञा पुरुषर्षभ।
प्राप्तोऽसि परमं लोके यश: परमसम्मतम्।।1.44.12।।

மனிதருள் சிறந்தவனே! அந்த சபதமானது உன்னால்  நிறைவேற்றப் பட்டுவிட்டது. இந்த உலகில் மகோன்னதமான புகழை நீ அடைந்துள்ளாய்.

 

यच्च गङ्गावतरणं त्वया कृतमरिन्दम।
अनेन च भवान् प्राप्तो धर्मस्यायतनं महत्।।1.44.13।।

எதிரிகளை அழிப்பவனே! கங்கையை பூமிக்கு அழைத்து வந்ததனால், மிகவும் பவித்திரமான இடத்தைப் பெற்று விட்டாய்.

 

प्लावयस्व त्वमात्मानं नरोत्तम सदोचिते।
सलिले पुरुषव्याघ्र शुचि: पुण्यफलो भव।।1.44.14।।

மனிதருள் சிறந்தவனே! இந்த கங்கை நீரில் மூழ்கிக் குளித்து, உன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டு, புண்ணிய பலனை அடைவாயாக!

 

पितामहानां सर्वेषां कुरुष्व सलिलक्रियाम्।
स्वस्ति तेऽस्तु गमिष्यामि स्वं लोकं गम्यतां नृप।।1.44.15।।

 அரசே! இந்தக் கங்கை நீரால், உனது முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்வாயாக! உனக்கு நன்மை உண்டாகட்டும்! நான் என்னுடைய உலகத்துக்குத் திரும்புகிறேன். நீயும் உனது நாட்டுக்குத் திரும்பிச் செல்!”

 

इत्येवमुक्त्वा देवेश: सर्वलोकपितामह:।
यथाऽऽगतं तथाऽगच्छत् देवलोकं महायशा:।।1.44.16।।
 

அனைத்து உலகங்களுக்கும் பிதாமகரான, சிறந்த புகழ் பெற்ற பிரம்மதேவர் இவ்வாறு கூறி விட்டுத் தான் வந்த வழியில் திரும்பிச் சென்றார்.

 

भगीरथोऽपि राजर्षि: कृत्वा सलिलमुत्तमम्।
यथाक्रमं यथान्यायं सागराणां महायशा:।।1.44.17।।

कृतोदकश्शुची राजा स्वपुरं प्रविवेश ह।
 समृद्धार्थो रघुश्रेष्ठ स्वराज्यं प्रशशास ह।।1.44.18।।

ராமா! ராஜரிஷியான பெரும்புகழ் பெற்ற பகீரதரும், பாரம்பரிய முறைப்படி, சகர புத்திரர்களுக்கு உத்தமமான நீர்க்கடங்களைச் செய்து, தன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டு, தனது விருப்பம் நிறைவேறியவராய், தனது ராஜ்ஜியத்துக்குத் திரும்பி ஆட்சி புரிந்து வந்தார்.



प्रमुमोद ह लोकस्तं नृपमासाद्य राघव।
नष्टशोकस्समृद्धार्थो बभूव विगतज्वर:।।1.44.19।।

ராகவா! பகீரதனை அரசனாகப் பெற்ற உலகம் மிகவும் மகிழ்ந்தது. தனது குறிக்கோள் நிறைவேறி விட்டதால், எந்தக் கவலையும் இன்றி, பகீரதர் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

 

एष ते राम गङ्गाया विस्तरोऽभिहितो मया।
स्वस्ति प्राप्नुहि भद्रं ते संध्याकालोऽतिवर्तते।।1.44.20।।

ராமா! உனக்கு கங்கையின் கதையை விரிவாகக் கூறிவிட்டேன். உனக்கு நன்மை உண்டாகட்டும். மாலை நேரம் நெருங்குகிறது. (இனி அதற்குண்டான கடமைகளைச் செய்ய வேண்டும்.)

 

धन्यं यशस्यमायुष्यं पुत्र्यं स्वर्ग्यमतीव च।
यश्श्रावयति विप्रेषु क्षत्रियेष्वितरेषु च।।1.44.21।।

प्रीयन्ते पितरस्तस्य प्रीयन्ते दैवतानि च।

கங்கையின் இந்தக் கதையை அந்தணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், பிற வர்ணத்தாருக்கும் சொல்பவர்கள் தங்கள் பித்ருக்களையும், தேவர்களையும் மகிழ்வித்து,

இவ்வுலகில் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், சந்ததிகள் ஆகியவைகளைப் பெற்று, மரணத்துக்குப்பின் ஸ்வர்க்கம் அடைவார்கள்.

 

इदमाख्यानमव्यग्रो गङ्गावतरणं शुभम्।।1.44.22।।

यश्शृणोति च काकुत्स्थ सर्वान् कामानवाप्नुयात्।

सर्वे पापा: प्रणश्यन्ति आयु: कीर्तिश्च वर्धते।।1.44.23।।

காகுஸ்தனே! கங்கை ஆகாயத்திலிருந்து கீழிறங்கிய இந்த மங்களகரமான கதையைக் கவனத்துடன் கேட்பவர்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்; பாவங்கள் அழியும். அவர்களுடைய  ஆயுளும், புகழும் அதிகரிக்கும்.

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे चतुश्चत्वारिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  நாற்பத்து நான்காவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 43

(பகீரதனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், கங்கை கீழிறங்கும் போது, அவளைத் தன் தலையில் தாங்கிக் கொள்கிறார். கங்கை ஏழு பிரிவுகளாகப் பிரிந்து பகீரதனைப் பின் தொடர்கிறாள். பாதாள லோகத்தை அடைந்து சகரபுத்திரர்களின் ஆத்மாவுக்கு மோக்ஷம் அளிக்கிறாள்.)


देवदेवे गते तस्मिन् सोऽङ्गुष्ठाग्रनिपीडिताम्।
कृत्वा वसुमतीं राम संवत्सरमुपासत।।1.43.1।।

“ராமா! பிரம்மதேவர் புறப்பட்டுச் சென்ற பிறகு பகீரதர் பூமியின் மேல் தன் காலின் பெருவிரல் நுனியில் நின்று கொண்டு ஒரு வருடம் தவம் புரிந்தார்.

 

अथ संवत्सरे पूर्णे सर्वलोकनमस्कृत:।
उमापति: पशुपती राजानमिदमब्रवीत्।।1.43.2।।

இவ்வாறு ஒரு வருடம் கழிந்த பின்னர், அனைத்து உலகங்களாலும் வணங்கப்படுகின்ற உமாபதியான சிவபெருமான் அங்கு வந்து ராஜா பகீரதனிடம் இவ்வாறு கூறினார்:


प्रीतस्तेऽहं नरश्रेष्ठ करिष्यामि तव प्रियम्।
शिरसा धारयिष्यामि शैलराजसुतामहम्।।1.43.3।।

“ மனிதருள் சிறந்தவனே! நான் உனது தவத்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். உனக்கு வேண்டியதைச் செய்கிறேன். பர்வதராஜனின் புதல்வியான கங்கையை, என் தலையில் தாங்கிக் கொள்கிறேன்.”

 

ततो हैमवती ज्येष्ठा सर्वलोकनमस्कृता।
तदा सातिमहद्रूपं कृत्वा वेगं च दुस्सहम्।।1.43.4।।

आकाशादपतद्राम शिवे शिवशिरस्युत।

அதன் பிறகு, ஹிமவானின் மூத்த மகளும், அனைத்து உலகங்களாலும் மதிக்கப் படுபவளுமான கங்கை, மிகவும் பலம் பொருந்தியவளாய், ஆகாயத்திலிருந்து, தாங்க முடியாத வேகத்துடன், சிவபெருமானின் தலை மீது விழுந்தாள்.

 

अचिन्तयच्च सा देवी गङ्गा परमदुर्धरा।।1.43.5।।


विशाम्यहं हि पातालं स्रोतसा गृह्य शङ्करम्।

அடக்க முடியாத வேகத்துடன் இருந்த கங்கை, தன் வேகத்தால், சிவபெருமானையும் பிடித்துக்கொண்டு பாதாள உலகை அடைய எண்ணினாள்.

 

तस्यावलेपनं ज्ञात्वा क्रुद्धस्तु भगवान् हर:।।1.43.6।।


तिरोभावयितुं बुद्धिं चक्रे त्रिनयनस्तदा।

மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமான் கங்கையின் அகந்தையான எண்ணத்தை அறிந்து, மிகுந்த சினம் கொண்டு, அவளைக் காணாமலே போகும் படி மறைத்து விட்டார்.

 

सा तस्मिन् पतिता पुण्या पुण्ये रुद्रस्य मूर्धनि।।1.43.7।।

हिमवत्प्रतिमे राम जटामण्डलगह्वरे।

ராமா! இமயமலையைப் போல் இருந்த சிவபெருமானின் ஜடாமுடியாகிய குகைக்குள் புண்ணிய நதியான கங்கை விழுந்தாள்.

 

सा कथञ्चिन्महीं गन्तुं नाशक्नोद्यत्नमास्थिता।।1.43.8।।

नैव निर्गमनं लेभे जटामण्डलमोहिता।

சிவபெருமானின் ஜடைக்குள் சிக்கிக் கொண்ட கங்கையால் அதை விட்டு வெளியே வர முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தாலும், அவளால் பூமியை நோக்கி வர முடியவில்லை.

 

तत्रैवाबम्भ्रमद्देवी संवत्सरगणान् बहून्।।1.43.9।।

तामपश्यन्पुनस्तत्र तप: परममास्थित:।

கங்கை அங்கேயே பல வருடங்கள் சுற்றிச் சுற்றி வந்தாள். கங்கை சிவ பெருமானின் தலையில் இருந்து வெளியில் வராததைக் கண்ட பகீரதர் மீண்டும் தவம் செய்யத் தொடங்கினார்.

 

अनेन तोषितश्चाभूदत्यर्थं रघुनन्दन।।1.43.10।।

विससर्ज ततो गङ्गां हरो बिन्दुसर: प्रति।

ரகு நந்தனா! பகீரதரின் தவத்தால் மிகவும் மகிழ்ந்த சிவபெருமான், கங்கையை சொட்டு சொட்டாக, ஒரு முத்து மாலையைப் போல் விடுவித்தார்.

 

तस्यां विसृज्यमानायां सप्तस्रोतांसि जज्ञिरे।।1.43.11।।

ह्लादिनी पावनी चैव नलिनी च तथाऽपरा।

तिस्र: प्राचीं दिशं जग्मु: गङ्गाश्शिवजलाश्शुभा:।।1.43.12।।

கங்கை அவ்வாறு விடுவிக்கப்பட்ட பொழுது அவள் ஏழு சிறிய நதிகளாக ஆனாள். அவற்றுள், ஹ்லாதினி, பாவனி, நளினி ஆகிய மூன்று நதிகளும் கிழக்கு நோக்கிப் பாய்ந்தன.

 

सुचक्षुश्चैव सीता च सिन्धुश्चैव महानदी।

तिस्रस्त्वेता दिशं जग्मु: प्रतीचीं तु शुभोदका:।।1.43.13।।

மங்களகரமான சுசக்ஷு, சீதா மற்றும் சிந்து நதிகள் மேற்கு நோக்கிப் பாய்ந்தன.

 

सप्तमी चान्वगात्तासां भगीरथमथो नृपम्।

भगीरथोऽपि राजर्षिर्दिव्यं स्यन्दनमास्थित:।।1.43.14।।

प्रायादग्रे महातेजा गङ्गा तं चाप्यनुव्रजत्।

ஏழாவது பிரிவான கங்கை பகீரதனைப் பின் தொடர்ந்தாள். மகாதேஜஸ் உடைய ராஜரிஷியான பகீரதர் தனது தெய்வீகமான தேரில் முன்னே செல்ல, கங்கை அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.

 

गगनाच्छङ्करशिरस्ततो धरणिमाश्रिता।।1.43.15 ।।

व्यसर्पत जलं तत्र तीव्रशब्दपुरस्कृतम्।

ஆகாயத்திலிருந்து சிவபெருமானின் தலைக்கு வந்த கங்கை பின்னர் பூமிக்கு வந்து, பெருத்த ஓசையுடன் பாயத் தொடங்கினாள்.

 

मत्स्यकच्छपसङ्घैश्च शिंशुमारगणैस्तदा।।1.43.16।।

पतद्भि: पतितैश्चान्यैर्व्यरोचत वसुन्धरा।

 (பாய்ந்து வரும் ) நீரோடு வந்து விழுந்த மீன்கள், ஆமைகள் மற்றும் வித விதமான கடல் பிராணிகளால், பூமி அழகாக விளங்கியது.

 

ततो देवर्षिगन्धर्वा यक्षसिद्धगणास्तदा।।1.43.17।।

व्यलोकयन्त ते तत्र गगनाद्गां गतां तथा।

தேவரிஷிகளும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், சித்தர்களும், கங்கை ஆகாயத்தில் இருந்து பூமிக்கு இறங்குவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

विमानैर्नगराकारैर्हयैर्गजवरैस्तदा।।1.43.18।।

पारिप्लवगतैश्चापि देवतास्तत्र विष्ठिता:।

தேவர்கள், பெரிய நகரங்களைப் போல் காணப்பட்ட விமானங்களிலும், இடையறாது அசைந்து கொண்டிருக்கும் குதிரைகள் மேலும், சிறந்த யானைகள் மேலும் அமர்ந்திருந்தனர்.

 

तदद्भुततमं लोके गङ्गापतनमुत्तमम्।।1.43.19।।

दिदृक्षवो देवगणा: समीयुरमितौजस:।

மிகுந்த ஒளி வீசக்கூடிய தேவர்கள், கங்கை ஆகாயத்தில் இருந்து கீழிறங்கும் இந்த அற்புதமான காட்சியைக் காண வந்திருந்தார்கள்.

 

सम्पतद्भिस्सुरगणैस्तेषां चाभरणौजसा।।1.43.20।।

शतादित्यमिवाभाति गगनं गततोयदम्।

கங்கை இறங்குவதைக் காண வந்து குழுமியிருந்த தேவர்களின் ஆபரணங்களின் பிரகாசத்தால் ஒளிர்ந்த மேகங்களற்ற வானமானது, நூறு சூரியன்களால்  நிறைந்ததைப் போல் காணப்பட்டது.

 

शिंशुमारोरगगणैर्मीनैरपि च चञ्चलै:।।1.43.21।।

विद्युद्भिरिव विक्षिप्तमाकाशमभवत्तदा।

நீருடன் சேர்ந்து கீழே விழுந்து கொண்டிருந்த மீன் முதலாகிய நீர்ப் பிராணிகள் நெளிந்து கொண்டும், அசைந்து கொண்டும் இருந்தன. அதைப் பார்க்கும் போது வானத்தில் மின்னல் மின்னுவதைப் போல் இருந்தது.

 

पाण्डरैस्सलिलोत्पीडै: कीर्यमाणैस्सहस्रधा।।1.43.22।।

शारदाभ्रैरिवाकीर्णं गगनं हंससम्प्लवै:।

கங்கை வேகமாகக் கீழே இறங்கும் போது, ஆயிரம் விதமாகச் சிதறிப் பரவிய நீரின் நுரையானது, அன்னப்பறவைகளின் கூட்டங்களும், சரத் காலத்து மேகங்களும், எங்கும் பரவி இருந்ததைப் போல் காணப்பட்டது.

 

क्वचिद्द्रुततरं याति कुटिलं क्वचिदायतम्।।1.43.23।।

विनतं क्वचिदुद्धूतं क्वचिद्याति शनैश्शनै:।

கங்கையின் போக்கு,  சில இடங்களில் மிக வேகமாகவும், சில இடங்களில் வளைந்தும், சில இடங்களில் அகன்றும், சில இடங்களில் சாய்வாகவும், சில இடங்களில் உயர்ந்தும், சில இடங்களில் மிக மெதுவாகவும் இருந்தது.

 

सलिलेनैव सलिलं क्वचिदभ्याहतं पुन:।।1.43.24।।

मुहुरूर्ध्वमुखं गत्वा पपात वसुधातलम्।

சில சமயங்களில் கங்கை நீரின் அலைகள் அலைகளோடு மோதி அதனால் உயர்ந்து, பின்னர் மீண்டும் கீழே, நிலத்தில் விழுந்தன.

 

तच्छङ्करशिरोभ्रष्टं भ्रष्टं भूमितले पुन:।।1.43.25।।

व्यरोचत तदा तोयं निर्मलं गतकल्मषम्।

சங்கரனின் தலையில் இருந்து இறங்கிப் பூமியில் வந்து விழுந்த கங்கை, தனது அழுக்குகளெல்லாம் நீங்கி, மிகுந்த தூய்மையடைந்தவளாகக் காணப்பட்டாள்.

 

तत्र देवर्षिगन्धर्वा वसुधातलवासिन:।।1.43.26।।

भवाङ्गपतितं तोयं पवित्रमिति पस्पृशु:।

சிவபெருமானின் உடலில் இருந்து வந்த நீர் மிகவும் புனிதமானது என்று கூறி, தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், பூமியில் வசித்தவர்களும், மிகவும் மரியாதையுடன் அதை ஸ்பர்சித்தார்கள்.

 

शापात्प्रपतिता ये च गगनाद्वसुधातलम्।।1.43.27।।

कृत्वा तत्राभिषेकं ते बभूवुर्गतकल्मषा:।

ஸ்வர்க்கத்திலிருந்து சாபத்தால் கீழே விழுந்தவர்கள் கூட, கங்கை நீரில் குளித்துத் தங்கள் சாபம் நீங்கப்பெற்றார்கள்.

 

धूतपापा: पुनस्तेन तोयेनाथ सुभास्वता।।1.43.28।।

पुनराकाशमाविश्य स्वान् लोकान् प्रतिपेदिरे।

பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த நீரினால் தங்கள் பாபங்களில் இருந்து விடுபட்ட அவர்கள், மீண்டும் ஆகாயத்தின் வழியாகத் தங்களுடைய உலகத்தை அடைந்தார்கள்.

 

मुमुदे मुदितो लोकस्तेन तोयेन भास्वता।।1.43.29।।

कृताभिषेको गङ्गायां बभूव विगतक्लम:।

பிரகாசிக்கும் கங்கையின் நீரைக் கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அதன் நீரில் குளித்துத் தங்களுடைய களைப்பெல்லாம் நீங்கப் பெற்றார்கள்.

 

भगीरथोऽपि राजार्षिर्दिव्यं स्यन्दनमास्थित:।
प्रायादग्रे महातेजास्तं गङ्गा पृष्ठतोऽन्वगात्।।1.43.30।

மகாதேஜஸ் உடைய ராஜரிஷியான பகீரதர் தனது தெய்வீகமான ரதத்தில் ஏறி முன்னே செல்ல, கங்கை அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.

 

देवास्सर्षिगणा: सर्वे दैत्यदानवराक्षसा:।।1.43.31।।

गन्धर्वयक्षप्रवरास्सकिन्नरमहोरगा:।

सर्वाश्चाप्सरसो राम भगीरथरथानुगाम्।।1.43.32।।

गङ्गामन्वगमन् प्रीतास्सर्वे जलचराश्च ये।

ராமா! ரிஷிகணங்களும், தேவர்களும், தைத்யர்களும், தானவர்களும், ராக்ஷஸர்களும், கின்னரர்களும், நாகர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், நீரில் வாழும் பிராணிகளும், பகீரதனின் தேரைத் தொடர்ந்து செல்லும் கங்கையை மகிழ்வுடன் பின் தொடர்ந்தார்கள்.



यतो भगीरथो राजा ततो गङ्गायशस्विनी।।1.43.33।।

जगाम सरितां श्रेष्ठा सर्वपापप्रणाशिनी।

புகழ்பெற்றவளும்,அனைத்துப் பாவங்களையும் அழிப்பவளுமான கங்கை, பகீரதர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.

 

ततो हि यजमानस्य जह्नोरद्भुतकर्मण:।।1.43.34।।

गङ्गा सम्प्लावयामास यज्ञवाटं महात्मन:।

அவ்வாறு பாய்ந்து கொண்டிருந்த போது, கங்கையானவள் மகாத்மாவான ‘ஜன்ஹு’ என்னும் முனிவர் யாகம் செய்து கொண்டிருந்த பகுதியைத் தனது நீரால் நனைத்து விட்டாள்.

 

तस्यावलेपनं ज्ञात्वा क्रुद्धो यज्वा तु राघव।।1.43.35।।

अपिबच्च जलं सर्वं गङ्गाया: परमाद्भुतम्।

ராகவா! யாகம் செய்து கொண்டிருந்த ஜன்ஹு முனிவர், கங்கையின் கர்வத்தைக் கண்டு மிகுந்த சினம் கொண்டு, கங்கயின் நீர் முழுவதையும் அப்படியே குடித்து விட்டார். என்ன ஒரு ஆச்சரியம்!


ततो देवास्सगन्धर्वा ऋषयश्च सुविस्मिता:।।1.43.36।।

पूजयन्ति महात्मानं जह्नुं पुरुषसत्तमम्।

गङ्गां चापि नयन्ति स्म दुहितृत्वे महात्मन:।।1.43.37।।

தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும் அவருடைய இந்தச் செயலைக் கண்டு வியந்து, மகாத்மாவான ஜன்ஹு முனிவரைப் பூஜித்து, கங்கையை அவருடைய மகள் போன்று நினைத்துக் கொள்ளும் படி வேண்டினார்கள்.

 

ततस्तुष्टो महातेजाश्श्रोत्राभ्यामसृजत् पुन:।।1.43.38।।

तस्माज्जह्नुसुता गङ्गा प्रोच्यते जाह्नवीतिच।

மகாதேஜஸ் உடைய ஜன்ஹு முனிவர் அதைக் கேட்டு  மகிழ்ந்து, தன் இரு காதுகள் வழியே கங்கையை விடுவித்தார். அதிலிருந்து கங்கை, ஜன்ஹுவின் மகள் என்னும் பொருளில் ‘ஜான்ஹவி’ என்றழைக்கப் படுகிறாள்.

 

जगाम च पुनर्गङ्गा भगीरथरथानुगा।

सागरं चापि सम्प्राप्ता सा सरित्प्रवरा तदा।।1.43.39।।

रसातलमुपागच्छत्सिद्ध्यर्थं तस्य कर्मण:।

பின்னர், மறு படியும் பகீரதரைத் தொடர்ந்து சென்ற கங்கை சமுத்திரத்தை அடைந்தாள். ஆயினும், ( அங்கேயே நின்று விடாமல்) பகீரதரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகப் பாதாளத்துக்குள் புகுந்தாள்.

 

भगीरथोऽपि राजर्षि: गङ्गामादाय यत्नत:।
पितामहान् भस्मकृतानपश्यद्दीनचेतन:।।1.43.40।।

ராஜரிஷியாகிய பகீரதர், மகோன்னதமான முயற்சிக்குப் பிறகு கங்கையைப் பாதாளத்துக்கு அழைத்து வந்து, அங்கே தன்னுடைய முன்னோர்கள் சாம்பல் குவியலாக இருப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார்.

 

अथ तद्भस्मनां राशिं गङ्गासलिलमुत्तमम्।
प्लावयद्धूतपाप्मानस्स्वर्गं प्राप्ता रघूत्तम।।1.43.41।।

ரகூத்தமா! பிறகு, கங்கையின் புனித நீரால் நனைக்கப்பட்டுத் தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்ற சகர புத்திரர்கள், ஸ்வர்க்கம் புகுந்தார்கள்.”

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे त्रिचत्वारिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் நாற்பத்து மூன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...