Saturday, 30 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 44

(ராஜா பகீரதர் தனது முன்னோர்களுக்கு ஈமக்கிரியைகளை நிறைவேற்றுகிறார்.)

 
स गत्वा सागरं राजा गङ्गयाऽनुगतस्तदा ।

प्रविवेश तलं भूमेर्यत्र ते भस्मसात्कृता:।।1.44.1।।

அதன் பிறகு ராஜா பகீரதர், கங்கை பின் தொடர, சமுத்திரத்தை அடைந்து, அங்கிருந்து சகரபுத்திரர்கள் சாம்பலாக்கப்பட்ட பாதாளத்தில் பிரவேசித்தார்.

 

भस्मन्यथाऽप्लुते राम गङ्गायास्सलिलेन वै।
सर्वलोकप्रभुर्ब्रह्मा राजानमिदमब्रवीत्।।1.44.2।।

அங்கே, சகரபுத்திரர்களின் சாம்பல் கங்கை நீரால் கரைக்கப் பட்ட பிறகு,  அனைத்து உலகங்களுக்கும் தலைவரான பிரம்ம தேவர் பகீரதரின் முன் தோன்றி இவ்வாறு கூறினார்:

 

तारिता नरशार्दूल दिवं याताश्च देववत्।
षष्ठि: पुत्रसहस्राणि सगरस्य महात्मन:।।1.44.3।।

“மனிதருள் சிறந்தவனே! மகாத்மாவான சகரருடைய அறுபதினாயிரம் புதல்வர்களும், மோக்ஷம் அடைந்து தேவர்களைப் போல் ஸ்வர்க்கத்தை அடைந்து விட்டார்கள்.

 

सागरस्य जलं लोके यावत्स्थास्यति पार्थिव।
सगरस्यात्मजास्तावत्स्वर्गे स्थास्यन्ति देववत्।।1.44.4।।

“அரசே! இந்த உலகத்தில் சமுத்திரத்தின் நீர் இருக்கும் வரை சகரரின் புத்திரர்கள் தேவர்களைப் போல ஸ்வர்க்கத்தில் இருப்பார்கள்.

 

इयं च दुहिता ज्येष्ठा तव गङ्गा भविष्यति ।
त्वत्कृतेन च नाम्नाऽथ लोके स्थास्यति विश्रुता।।1.44.5।।

இந்த கங்கை உனது மூத்த மகளாகிறாள். நீ செய்த செயலால், இந்த உலகத்தில் அவள் உன்னுடைய பெயரால் (பாகீரதி என்று) நிலை பெற்றிருப்பாள்.

 

गङ्गा त्रिपथगा राजन् दिव्या भागीरथीति च।
त्रीन् पथो भावयन्तीति ततस्त्रिपथगा स्मृता।।1.44.6।।

அரசே! கங்கை ‘த்ரிபதகா’ என்றும் ‘பாகீரதி’ என்றும் அழக்கப்படுவாள். ஸ்வர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களிலும் பாய்வதால், கங்கை ‘த்ரிபதகா’ ( மூன்று வழியில் செல்பவள்) என்று அறியப்படுகிறாள்.

 

पितामहानां सर्वेषां त्वमत्र मनुजाधिप ।
कुरुष्व सलिलं राजन् प्रतिज्ञामपवर्जय।।1.44.7।।

அரசே! கங்கை நீரால் உன் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்து உன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்று.

 

पूर्वकेण हि ते राजंस्तेनातियशसा तदा।
धर्मिणां प्रवरेणापि नैष प्राप्तो मनोरथ:।।1.44.8।।

அரசே! உன்னுடைய முன்னோர்களால், மிகச்சிறந்த தர்மாத்மாவான சகரரால் கூட இந்த விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை.

 

तथैवांशुमता तात लोकेऽप्रतिमतेजसा।
गङ्गां प्रार्थयतानेतुं प्रतिज्ञा नापवर्जिता।।1.44.9।।

குழந்தாய்! அதே போல், இணையற்ற தேஜஸ் உடைய அம்சுமானால் கூட கங்கையை வேண்டி அழைத்து வந்து இந்த சபதத்தை நிறைவேற்ற முடியவில்லை.

 

राजर्षिणा गुणवता महर्षिसमतेजसा।
मत्तुल्यतपसा चैव क्षत्रधर्मस्थितेन च।।1.44.10।।

दिलीपेन महाभाग तव पित्राऽति तेजसा।
पुनर्न शङ्किताऽनेतुं गङ्गां प्रार्थयताऽनघ।।1.44.11।।

பாவமற்றவனே! ஆசீர்வதிக்கப்பட்டவனே! நற்குணங்கள் நிறைந்தவரும், எனக்கு நிகரான தபஸ்வியும், மகரிஷி போன்ற தேஜஸ் உடையவரும், க்ஷத்திரிய தர்மத்தில் நிலையாக நிற்பவருமான உனது தந்தையான திலீபரால் கூட கங்கையைப் பிரார்த்தித்து இங்கு அழைத்து வர முடியவில்லை.


सा त्वया समनुक्रान्ता प्रतिज्ञा पुरुषर्षभ।
प्राप्तोऽसि परमं लोके यश: परमसम्मतम्।।1.44.12।।

மனிதருள் சிறந்தவனே! அந்த சபதமானது உன்னால்  நிறைவேற்றப் பட்டுவிட்டது. இந்த உலகில் மகோன்னதமான புகழை நீ அடைந்துள்ளாய்.

 

यच्च गङ्गावतरणं त्वया कृतमरिन्दम।
अनेन च भवान् प्राप्तो धर्मस्यायतनं महत्।।1.44.13।।

எதிரிகளை அழிப்பவனே! கங்கையை பூமிக்கு அழைத்து வந்ததனால், மிகவும் பவித்திரமான இடத்தைப் பெற்று விட்டாய்.

 

प्लावयस्व त्वमात्मानं नरोत्तम सदोचिते।
सलिले पुरुषव्याघ्र शुचि: पुण्यफलो भव।।1.44.14।।

மனிதருள் சிறந்தவனே! இந்த கங்கை நீரில் மூழ்கிக் குளித்து, உன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டு, புண்ணிய பலனை அடைவாயாக!

 

पितामहानां सर्वेषां कुरुष्व सलिलक्रियाम्।
स्वस्ति तेऽस्तु गमिष्यामि स्वं लोकं गम्यतां नृप।।1.44.15।।

 அரசே! இந்தக் கங்கை நீரால், உனது முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்வாயாக! உனக்கு நன்மை உண்டாகட்டும்! நான் என்னுடைய உலகத்துக்குத் திரும்புகிறேன். நீயும் உனது நாட்டுக்குத் திரும்பிச் செல்!”

 

इत्येवमुक्त्वा देवेश: सर्वलोकपितामह:।
यथाऽऽगतं तथाऽगच्छत् देवलोकं महायशा:।।1.44.16।।
 

அனைத்து உலகங்களுக்கும் பிதாமகரான, சிறந்த புகழ் பெற்ற பிரம்மதேவர் இவ்வாறு கூறி விட்டுத் தான் வந்த வழியில் திரும்பிச் சென்றார்.

 

भगीरथोऽपि राजर्षि: कृत्वा सलिलमुत्तमम्।
यथाक्रमं यथान्यायं सागराणां महायशा:।।1.44.17।।

कृतोदकश्शुची राजा स्वपुरं प्रविवेश ह।
 समृद्धार्थो रघुश्रेष्ठ स्वराज्यं प्रशशास ह।।1.44.18।।

ராமா! ராஜரிஷியான பெரும்புகழ் பெற்ற பகீரதரும், பாரம்பரிய முறைப்படி, சகர புத்திரர்களுக்கு உத்தமமான நீர்க்கடங்களைச் செய்து, தன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டு, தனது விருப்பம் நிறைவேறியவராய், தனது ராஜ்ஜியத்துக்குத் திரும்பி ஆட்சி புரிந்து வந்தார்.



प्रमुमोद ह लोकस्तं नृपमासाद्य राघव।
नष्टशोकस्समृद्धार्थो बभूव विगतज्वर:।।1.44.19।।

ராகவா! பகீரதனை அரசனாகப் பெற்ற உலகம் மிகவும் மகிழ்ந்தது. தனது குறிக்கோள் நிறைவேறி விட்டதால், எந்தக் கவலையும் இன்றி, பகீரதர் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

 

एष ते राम गङ्गाया विस्तरोऽभिहितो मया।
स्वस्ति प्राप्नुहि भद्रं ते संध्याकालोऽतिवर्तते।।1.44.20।।

ராமா! உனக்கு கங்கையின் கதையை விரிவாகக் கூறிவிட்டேன். உனக்கு நன்மை உண்டாகட்டும். மாலை நேரம் நெருங்குகிறது. (இனி அதற்குண்டான கடமைகளைச் செய்ய வேண்டும்.)

 

धन्यं यशस्यमायुष्यं पुत्र्यं स्वर्ग्यमतीव च।
यश्श्रावयति विप्रेषु क्षत्रियेष्वितरेषु च।।1.44.21।।

प्रीयन्ते पितरस्तस्य प्रीयन्ते दैवतानि च।

கங்கையின் இந்தக் கதையை அந்தணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், பிற வர்ணத்தாருக்கும் சொல்பவர்கள் தங்கள் பித்ருக்களையும், தேவர்களையும் மகிழ்வித்து,

இவ்வுலகில் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், சந்ததிகள் ஆகியவைகளைப் பெற்று, மரணத்துக்குப்பின் ஸ்வர்க்கம் அடைவார்கள்.

 

इदमाख्यानमव्यग्रो गङ्गावतरणं शुभम्।।1.44.22।।

यश्शृणोति च काकुत्स्थ सर्वान् कामानवाप्नुयात्।

सर्वे पापा: प्रणश्यन्ति आयु: कीर्तिश्च वर्धते।।1.44.23।।

காகுஸ்தனே! கங்கை ஆகாயத்திலிருந்து கீழிறங்கிய இந்த மங்களகரமான கதையைக் கவனத்துடன் கேட்பவர்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்; பாவங்கள் அழியும். அவர்களுடைய  ஆயுளும், புகழும் அதிகரிக்கும்.

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे चतुश्चत्वारिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  நாற்பத்து நான்காவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...