Saturday, 30 December 2023

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 43

(பகீரதனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், கங்கை கீழிறங்கும் போது, அவளைத் தன் தலையில் தாங்கிக் கொள்கிறார். கங்கை ஏழு பிரிவுகளாகப் பிரிந்து பகீரதனைப் பின் தொடர்கிறாள். பாதாள லோகத்தை அடைந்து சகரபுத்திரர்களின் ஆத்மாவுக்கு மோக்ஷம் அளிக்கிறாள்.)


देवदेवे गते तस्मिन् सोऽङ्गुष्ठाग्रनिपीडिताम्।
कृत्वा वसुमतीं राम संवत्सरमुपासत।।1.43.1।।

“ராமா! பிரம்மதேவர் புறப்பட்டுச் சென்ற பிறகு பகீரதர் பூமியின் மேல் தன் காலின் பெருவிரல் நுனியில் நின்று கொண்டு ஒரு வருடம் தவம் புரிந்தார்.

 

अथ संवत्सरे पूर्णे सर्वलोकनमस्कृत:।
उमापति: पशुपती राजानमिदमब्रवीत्।।1.43.2।।

இவ்வாறு ஒரு வருடம் கழிந்த பின்னர், அனைத்து உலகங்களாலும் வணங்கப்படுகின்ற உமாபதியான சிவபெருமான் அங்கு வந்து ராஜா பகீரதனிடம் இவ்வாறு கூறினார்:


प्रीतस्तेऽहं नरश्रेष्ठ करिष्यामि तव प्रियम्।
शिरसा धारयिष्यामि शैलराजसुतामहम्।।1.43.3।।

“ மனிதருள் சிறந்தவனே! நான் உனது தவத்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். உனக்கு வேண்டியதைச் செய்கிறேன். பர்வதராஜனின் புதல்வியான கங்கையை, என் தலையில் தாங்கிக் கொள்கிறேன்.”

 

ततो हैमवती ज्येष्ठा सर्वलोकनमस्कृता।
तदा सातिमहद्रूपं कृत्वा वेगं च दुस्सहम्।।1.43.4।।

आकाशादपतद्राम शिवे शिवशिरस्युत।

அதன் பிறகு, ஹிமவானின் மூத்த மகளும், அனைத்து உலகங்களாலும் மதிக்கப் படுபவளுமான கங்கை, மிகவும் பலம் பொருந்தியவளாய், ஆகாயத்திலிருந்து, தாங்க முடியாத வேகத்துடன், சிவபெருமானின் தலை மீது விழுந்தாள்.

 

अचिन्तयच्च सा देवी गङ्गा परमदुर्धरा।।1.43.5।।


विशाम्यहं हि पातालं स्रोतसा गृह्य शङ्करम्।

அடக்க முடியாத வேகத்துடன் இருந்த கங்கை, தன் வேகத்தால், சிவபெருமானையும் பிடித்துக்கொண்டு பாதாள உலகை அடைய எண்ணினாள்.

 

तस्यावलेपनं ज्ञात्वा क्रुद्धस्तु भगवान् हर:।।1.43.6।।


तिरोभावयितुं बुद्धिं चक्रे त्रिनयनस्तदा।

மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமான் கங்கையின் அகந்தையான எண்ணத்தை அறிந்து, மிகுந்த சினம் கொண்டு, அவளைக் காணாமலே போகும் படி மறைத்து விட்டார்.

 

सा तस्मिन् पतिता पुण्या पुण्ये रुद्रस्य मूर्धनि।।1.43.7।।

हिमवत्प्रतिमे राम जटामण्डलगह्वरे।

ராமா! இமயமலையைப் போல் இருந்த சிவபெருமானின் ஜடாமுடியாகிய குகைக்குள் புண்ணிய நதியான கங்கை விழுந்தாள்.

 

सा कथञ्चिन्महीं गन्तुं नाशक्नोद्यत्नमास्थिता।।1.43.8।।

नैव निर्गमनं लेभे जटामण्डलमोहिता।

சிவபெருமானின் ஜடைக்குள் சிக்கிக் கொண்ட கங்கையால் அதை விட்டு வெளியே வர முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தாலும், அவளால் பூமியை நோக்கி வர முடியவில்லை.

 

तत्रैवाबम्भ्रमद्देवी संवत्सरगणान् बहून्।।1.43.9।।

तामपश्यन्पुनस्तत्र तप: परममास्थित:।

கங்கை அங்கேயே பல வருடங்கள் சுற்றிச் சுற்றி வந்தாள். கங்கை சிவ பெருமானின் தலையில் இருந்து வெளியில் வராததைக் கண்ட பகீரதர் மீண்டும் தவம் செய்யத் தொடங்கினார்.

 

अनेन तोषितश्चाभूदत्यर्थं रघुनन्दन।।1.43.10।।

विससर्ज ततो गङ्गां हरो बिन्दुसर: प्रति।

ரகு நந்தனா! பகீரதரின் தவத்தால் மிகவும் மகிழ்ந்த சிவபெருமான், கங்கையை சொட்டு சொட்டாக, ஒரு முத்து மாலையைப் போல் விடுவித்தார்.

 

तस्यां विसृज्यमानायां सप्तस्रोतांसि जज्ञिरे।।1.43.11।।

ह्लादिनी पावनी चैव नलिनी च तथाऽपरा।

तिस्र: प्राचीं दिशं जग्मु: गङ्गाश्शिवजलाश्शुभा:।।1.43.12।।

கங்கை அவ்வாறு விடுவிக்கப்பட்ட பொழுது அவள் ஏழு சிறிய நதிகளாக ஆனாள். அவற்றுள், ஹ்லாதினி, பாவனி, நளினி ஆகிய மூன்று நதிகளும் கிழக்கு நோக்கிப் பாய்ந்தன.

 

सुचक्षुश्चैव सीता च सिन्धुश्चैव महानदी।

तिस्रस्त्वेता दिशं जग्मु: प्रतीचीं तु शुभोदका:।।1.43.13।।

மங்களகரமான சுசக்ஷு, சீதா மற்றும் சிந்து நதிகள் மேற்கு நோக்கிப் பாய்ந்தன.

 

सप्तमी चान्वगात्तासां भगीरथमथो नृपम्।

भगीरथोऽपि राजर्षिर्दिव्यं स्यन्दनमास्थित:।।1.43.14।।

प्रायादग्रे महातेजा गङ्गा तं चाप्यनुव्रजत्।

ஏழாவது பிரிவான கங்கை பகீரதனைப் பின் தொடர்ந்தாள். மகாதேஜஸ் உடைய ராஜரிஷியான பகீரதர் தனது தெய்வீகமான தேரில் முன்னே செல்ல, கங்கை அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.

 

गगनाच्छङ्करशिरस्ततो धरणिमाश्रिता।।1.43.15 ।।

व्यसर्पत जलं तत्र तीव्रशब्दपुरस्कृतम्।

ஆகாயத்திலிருந்து சிவபெருமானின் தலைக்கு வந்த கங்கை பின்னர் பூமிக்கு வந்து, பெருத்த ஓசையுடன் பாயத் தொடங்கினாள்.

 

मत्स्यकच्छपसङ्घैश्च शिंशुमारगणैस्तदा।।1.43.16।।

पतद्भि: पतितैश्चान्यैर्व्यरोचत वसुन्धरा।

 (பாய்ந்து வரும் ) நீரோடு வந்து விழுந்த மீன்கள், ஆமைகள் மற்றும் வித விதமான கடல் பிராணிகளால், பூமி அழகாக விளங்கியது.

 

ततो देवर्षिगन्धर्वा यक्षसिद्धगणास्तदा।।1.43.17।।

व्यलोकयन्त ते तत्र गगनाद्गां गतां तथा।

தேவரிஷிகளும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், சித்தர்களும், கங்கை ஆகாயத்தில் இருந்து பூமிக்கு இறங்குவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

विमानैर्नगराकारैर्हयैर्गजवरैस्तदा।।1.43.18।।

पारिप्लवगतैश्चापि देवतास्तत्र विष्ठिता:।

தேவர்கள், பெரிய நகரங்களைப் போல் காணப்பட்ட விமானங்களிலும், இடையறாது அசைந்து கொண்டிருக்கும் குதிரைகள் மேலும், சிறந்த யானைகள் மேலும் அமர்ந்திருந்தனர்.

 

तदद्भुततमं लोके गङ्गापतनमुत्तमम्।।1.43.19।।

दिदृक्षवो देवगणा: समीयुरमितौजस:।

மிகுந்த ஒளி வீசக்கூடிய தேவர்கள், கங்கை ஆகாயத்தில் இருந்து கீழிறங்கும் இந்த அற்புதமான காட்சியைக் காண வந்திருந்தார்கள்.

 

सम्पतद्भिस्सुरगणैस्तेषां चाभरणौजसा।।1.43.20।।

शतादित्यमिवाभाति गगनं गततोयदम्।

கங்கை இறங்குவதைக் காண வந்து குழுமியிருந்த தேவர்களின் ஆபரணங்களின் பிரகாசத்தால் ஒளிர்ந்த மேகங்களற்ற வானமானது, நூறு சூரியன்களால்  நிறைந்ததைப் போல் காணப்பட்டது.

 

शिंशुमारोरगगणैर्मीनैरपि च चञ्चलै:।।1.43.21।।

विद्युद्भिरिव विक्षिप्तमाकाशमभवत्तदा।

நீருடன் சேர்ந்து கீழே விழுந்து கொண்டிருந்த மீன் முதலாகிய நீர்ப் பிராணிகள் நெளிந்து கொண்டும், அசைந்து கொண்டும் இருந்தன. அதைப் பார்க்கும் போது வானத்தில் மின்னல் மின்னுவதைப் போல் இருந்தது.

 

पाण्डरैस्सलिलोत्पीडै: कीर्यमाणैस्सहस्रधा।।1.43.22।।

शारदाभ्रैरिवाकीर्णं गगनं हंससम्प्लवै:।

கங்கை வேகமாகக் கீழே இறங்கும் போது, ஆயிரம் விதமாகச் சிதறிப் பரவிய நீரின் நுரையானது, அன்னப்பறவைகளின் கூட்டங்களும், சரத் காலத்து மேகங்களும், எங்கும் பரவி இருந்ததைப் போல் காணப்பட்டது.

 

क्वचिद्द्रुततरं याति कुटिलं क्वचिदायतम्।।1.43.23।।

विनतं क्वचिदुद्धूतं क्वचिद्याति शनैश्शनै:।

கங்கையின் போக்கு,  சில இடங்களில் மிக வேகமாகவும், சில இடங்களில் வளைந்தும், சில இடங்களில் அகன்றும், சில இடங்களில் சாய்வாகவும், சில இடங்களில் உயர்ந்தும், சில இடங்களில் மிக மெதுவாகவும் இருந்தது.

 

सलिलेनैव सलिलं क्वचिदभ्याहतं पुन:।।1.43.24।।

मुहुरूर्ध्वमुखं गत्वा पपात वसुधातलम्।

சில சமயங்களில் கங்கை நீரின் அலைகள் அலைகளோடு மோதி அதனால் உயர்ந்து, பின்னர் மீண்டும் கீழே, நிலத்தில் விழுந்தன.

 

तच्छङ्करशिरोभ्रष्टं भ्रष्टं भूमितले पुन:।।1.43.25।।

व्यरोचत तदा तोयं निर्मलं गतकल्मषम्।

சங்கரனின் தலையில் இருந்து இறங்கிப் பூமியில் வந்து விழுந்த கங்கை, தனது அழுக்குகளெல்லாம் நீங்கி, மிகுந்த தூய்மையடைந்தவளாகக் காணப்பட்டாள்.

 

तत्र देवर्षिगन्धर्वा वसुधातलवासिन:।।1.43.26।।

भवाङ्गपतितं तोयं पवित्रमिति पस्पृशु:।

சிவபெருமானின் உடலில் இருந்து வந்த நீர் மிகவும் புனிதமானது என்று கூறி, தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், பூமியில் வசித்தவர்களும், மிகவும் மரியாதையுடன் அதை ஸ்பர்சித்தார்கள்.

 

शापात्प्रपतिता ये च गगनाद्वसुधातलम्।।1.43.27।।

कृत्वा तत्राभिषेकं ते बभूवुर्गतकल्मषा:।

ஸ்வர்க்கத்திலிருந்து சாபத்தால் கீழே விழுந்தவர்கள் கூட, கங்கை நீரில் குளித்துத் தங்கள் சாபம் நீங்கப்பெற்றார்கள்.

 

धूतपापा: पुनस्तेन तोयेनाथ सुभास्वता।।1.43.28।।

पुनराकाशमाविश्य स्वान् लोकान् प्रतिपेदिरे।

பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த நீரினால் தங்கள் பாபங்களில் இருந்து விடுபட்ட அவர்கள், மீண்டும் ஆகாயத்தின் வழியாகத் தங்களுடைய உலகத்தை அடைந்தார்கள்.

 

मुमुदे मुदितो लोकस्तेन तोयेन भास्वता।।1.43.29।।

कृताभिषेको गङ्गायां बभूव विगतक्लम:।

பிரகாசிக்கும் கங்கையின் நீரைக் கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அதன் நீரில் குளித்துத் தங்களுடைய களைப்பெல்லாம் நீங்கப் பெற்றார்கள்.

 

भगीरथोऽपि राजार्षिर्दिव्यं स्यन्दनमास्थित:।
प्रायादग्रे महातेजास्तं गङ्गा पृष्ठतोऽन्वगात्।।1.43.30।

மகாதேஜஸ் உடைய ராஜரிஷியான பகீரதர் தனது தெய்வீகமான ரதத்தில் ஏறி முன்னே செல்ல, கங்கை அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.

 

देवास्सर्षिगणा: सर्वे दैत्यदानवराक्षसा:।।1.43.31।।

गन्धर्वयक्षप्रवरास्सकिन्नरमहोरगा:।

सर्वाश्चाप्सरसो राम भगीरथरथानुगाम्।।1.43.32।।

गङ्गामन्वगमन् प्रीतास्सर्वे जलचराश्च ये।

ராமா! ரிஷிகணங்களும், தேவர்களும், தைத்யர்களும், தானவர்களும், ராக்ஷஸர்களும், கின்னரர்களும், நாகர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், நீரில் வாழும் பிராணிகளும், பகீரதனின் தேரைத் தொடர்ந்து செல்லும் கங்கையை மகிழ்வுடன் பின் தொடர்ந்தார்கள்.



यतो भगीरथो राजा ततो गङ्गायशस्विनी।।1.43.33।।

जगाम सरितां श्रेष्ठा सर्वपापप्रणाशिनी।

புகழ்பெற்றவளும்,அனைத்துப் பாவங்களையும் அழிப்பவளுமான கங்கை, பகீரதர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.

 

ततो हि यजमानस्य जह्नोरद्भुतकर्मण:।।1.43.34।।

गङ्गा सम्प्लावयामास यज्ञवाटं महात्मन:।

அவ்வாறு பாய்ந்து கொண்டிருந்த போது, கங்கையானவள் மகாத்மாவான ‘ஜன்ஹு’ என்னும் முனிவர் யாகம் செய்து கொண்டிருந்த பகுதியைத் தனது நீரால் நனைத்து விட்டாள்.

 

तस्यावलेपनं ज्ञात्वा क्रुद्धो यज्वा तु राघव।।1.43.35।।

अपिबच्च जलं सर्वं गङ्गाया: परमाद्भुतम्।

ராகவா! யாகம் செய்து கொண்டிருந்த ஜன்ஹு முனிவர், கங்கையின் கர்வத்தைக் கண்டு மிகுந்த சினம் கொண்டு, கங்கயின் நீர் முழுவதையும் அப்படியே குடித்து விட்டார். என்ன ஒரு ஆச்சரியம்!


ततो देवास्सगन्धर्वा ऋषयश्च सुविस्मिता:।।1.43.36।।

पूजयन्ति महात्मानं जह्नुं पुरुषसत्तमम्।

गङ्गां चापि नयन्ति स्म दुहितृत्वे महात्मन:।।1.43.37।।

தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும் அவருடைய இந்தச் செயலைக் கண்டு வியந்து, மகாத்மாவான ஜன்ஹு முனிவரைப் பூஜித்து, கங்கையை அவருடைய மகள் போன்று நினைத்துக் கொள்ளும் படி வேண்டினார்கள்.

 

ततस्तुष्टो महातेजाश्श्रोत्राभ्यामसृजत् पुन:।।1.43.38।।

तस्माज्जह्नुसुता गङ्गा प्रोच्यते जाह्नवीतिच।

மகாதேஜஸ் உடைய ஜன்ஹு முனிவர் அதைக் கேட்டு  மகிழ்ந்து, தன் இரு காதுகள் வழியே கங்கையை விடுவித்தார். அதிலிருந்து கங்கை, ஜன்ஹுவின் மகள் என்னும் பொருளில் ‘ஜான்ஹவி’ என்றழைக்கப் படுகிறாள்.

 

जगाम च पुनर्गङ्गा भगीरथरथानुगा।

सागरं चापि सम्प्राप्ता सा सरित्प्रवरा तदा।।1.43.39।।

रसातलमुपागच्छत्सिद्ध्यर्थं तस्य कर्मण:।

பின்னர், மறு படியும் பகீரதரைத் தொடர்ந்து சென்ற கங்கை சமுத்திரத்தை அடைந்தாள். ஆயினும், ( அங்கேயே நின்று விடாமல்) பகீரதரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகப் பாதாளத்துக்குள் புகுந்தாள்.

 

भगीरथोऽपि राजर्षि: गङ्गामादाय यत्नत:।
पितामहान् भस्मकृतानपश्यद्दीनचेतन:।।1.43.40।।

ராஜரிஷியாகிய பகீரதர், மகோன்னதமான முயற்சிக்குப் பிறகு கங்கையைப் பாதாளத்துக்கு அழைத்து வந்து, அங்கே தன்னுடைய முன்னோர்கள் சாம்பல் குவியலாக இருப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார்.

 

अथ तद्भस्मनां राशिं गङ्गासलिलमुत्तमम्।
प्लावयद्धूतपाप्मानस्स्वर्गं प्राप्ता रघूत्तम।।1.43.41।।

ரகூத்தமா! பிறகு, கங்கையின் புனித நீரால் நனைக்கப்பட்டுத் தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்ற சகர புத்திரர்கள், ஸ்வர்க்கம் புகுந்தார்கள்.”

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे त्रिचत्वारिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் நாற்பத்து மூன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...