Monday, 11 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 21

(தசரதர் தன் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்ததில், விஸ்வாமித்திரர் மிகுந்த சினம் கொள்கிறார்.)

 

तच्छ्रुत्वा वचनं तस्य स्नेहपर्याकुलाक्षरम्।
समन्यु: कौशिको वाक्यं प्रत्युवाच महीपतिम्।।1.21.1।।

தனது புதல்வனின் மீது உள்ள பாசத்தால், தசரதர் கூறிய குழப்பமான வார்த்தைகளைக் கேட்ட விஸ்வாமித்திரர் மிகுந்த கோபத்துடன் இவ்வாறு பதிலுரைத்தார்.

 

पूर्वमर्थं प्रतिश्रुत्य प्रतिज्ञां हातुमिच्छसि।
राघवाणामयुक्तोऽयं कुलस्यास्य विपर्यय:।।1.21.2।।

“முதலில் வாக்குக் கொடுத்து விட்டுப் பின்வாங்குகிறீர்கள். தங்களுடைய ரகு குலத்துக்கு இவ்வாறு வாக்குத் தவறுவது உகந்தது அல்ல.

 

यदीदं ते क्षमं राजन् गमिष्यामि यथाऽगतम्।
मिथ्याप्रतिज्ञ: काकुत्स्थ सुखीभव सबान्धव:।।1.21.3।।

அரசே! இவ்வாறு செய்வது உங்களுக்குச் சரி என்று பட்டால், நான் வந்த வழி திரும்பிச் செல்கிறேன். ககுஸ்த வம்சத்தவரே, நீங்கள் வாக்குத் தவறி விட்டீர்கள். உங்களுடைய உறவினர்களுடன் சுகமாக இருங்கள்!”

 

तस्य रोषपरीतस्य विश्वामित्रस्य धीमत:।
चचाल वसुधा कृत्स्ना विवेश च भयं सुरान्।।1.21.4।।

அறிவார்ந்த விஸ்வாமித்திரரின் கோபத்தைக் கண்டு, இந்த உலகம் முழுவதும் நடுங்கியது. தேவர்களும் அச்சம் கொண்டார்கள்.

 

त्रस्तरूपं तु विज्ञाय जगत्सर्वं महानृषि:।
नृपतिं सुव्रतो धीरो वसिष्ठो वाक्यमब्रवीत्।।1.21.5।।

தவ நெறியைத் தவறாமல் பின்பற்றுபவரும், நிலையான மன நிலை உடையவருமான வசிஷ்ட முனிவர், உலகம் முழுவதும் அச்சத்தில் இருப்பதைக் கண்டு, அரசரிடம் இவ்வாறு கூறினார்:

 

इक्ष्वाकूणां कुले जातस्साक्षाद्धर्म इवापर:।
धृतिमान् सुव्रत: श्रीमान्नधर्मं हातुमर्हसि।।1.21.6।।

இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்து, தர்மமே வடிவெடுத்தாற்போல இருக்கும், திடவிரதரான தாங்கள் இவ்வாறு கொடுத்த வாக்கை மீறுவது சரியல்ல.

 

त्रिषु लोकेषु विख्यातो धर्मात्मा इति राघव।
स्वधर्मं प्रतिपद्यस्व नाधर्मं वोढुमर्हसि।।1.21.7।।

ரகு குலத்தோன்றலான தாங்கள் இந்த மூவுலகங்களிலும், தர்மவான் என்று புகழப்படுகிறீர்கள். தாங்கள் நிச்சயம் தங்கள் சுயதர்மத்தை நிறைவேற்ற வேண்டும். அதர்ம வழியில் செல்வது உங்களுக்கு அழகல்ல.

 

संश्रुत्यैवं करिष्यामीत्यकुर्वाणस्य राघव।

इष्टापूर्तवधो भूयात्तस्माद्रामं विसर्जय।।1.21.8।।

ராகவரே! இவ்வாறு செய்கிறேன் என்று வாக்குக் கொடுத்து விட்டு, அதைச் செய்யாவிட்டால், தாங்கள் செய்த வேள்விகள் முதலிய நற்செயல்களால் வந்த புண்ணியம் எல்லாம் அழிந்து விடும்.  ஆகவே, ராமனை அவருடன் அனுப்பி வையுங்கள்.

 

कृतास्त्रमकृतास्त्रं वा नैनं शक्ष्यन्ति राक्षसा:।

गुप्तं कुशिकपुत्रेण ज्वलनेनामृतं यथा।।1.21.9।।

ஆயுதங்களில் பயிற்சி பெற்றிருக்கிறானோ, இல்லையோ, விஸ்வாமித்திரரால், பாதுகாக்கப்படும் ராமன், அக்கினி தேவனால் பாதுகாக்கப் படும் அமிர்தத்தைப் போல பத்திரமாக இருப்பான். யாராலும், அவனுடன் போட்டி போட முடியாது.

 

एष विग्रहवान् धर्म एष वीर्यवतां वर:।
एष बुध्याऽधिको लोके तपसश्च परायणम्।।1.21.10।।

இவர் (விஸ்வாமித்திரர்) தர்மமே உருவானவர். வீர்யமுடையவர்களில் சிறந்தவர். இந்த உலகத்தில் அறிவாற்றலில் இவருக்கு இணை யாருமே இல்லை. இவர் தவத்தின் எல்லை போன்றவர்.

 

एषोऽस्त्रान् विविधान्वेत्ति त्रैलोक्ये सचराचरे।
नैनमन्य: पुमान्वेत्ति न च वेत्स्यन्ति केचन।।1.21.11।।

ஆயுதங்களை உபயோகிக்கும் விதத்தை விஸ்வாமித்திரர் அறிந்த அளவு இந்த மூவுலகங்களிலும் உள்ள சராசரர்கள் யாரும் அறிய மாட்டார்கள். இனி வரும் காலங்களிலும் யாராலும் அறிய முடியாது.

 

न देवा नर्षय: केचिन्नासुरा न च राक्षसा:।
गन्धर्वयक्षप्रवरास्सकिन्नरमहोरगा:।।1.21.12।।

தேவர்களோ, ரிஷிகளோ, அசுரர்களோ, ராக்ஷஸர்களோ, கின்னரர்களோ, பலம் பொருந்திய சர்ப்பங்களோ, கந்தர்வர்கள், யக்ஷர்கள் ஆகியவர்களோ கூட அறியமாட்டார்கள்.

 

सर्वास्त्राणि भृशाश्वस्य पुत्रा: परमधार्मिका:।
कौशिकाय पुरा दत्ता यदा राज्यं प्रशासति।।1.21.13।।

இந்த அஸ்திரங்களையெல்லாம், பரம தார்மீகர்களான ப்ருஷாஸ்வரருடைய புதல்வர்கள், விஸ்வாமித்திரர் அரசராக ஆட்சி செய்து கொண்டிருந்த போது, அவருக்குக் கொடுத்தார்கள்.

 

तेऽपि पुत्रा भृशाश्वस्य प्रजापतिसुतासुता:।
नैकरूपा महावीर्या दीप्तिमन्तो जयावहा:।।1.21.14।।

ப்ருசாஸ்வரரின் புதல்வர்கள், பிரஜாபதியின் மகளுடைய புதல்வர்கள்.அவர்கள் பல விதமான வடிவமும், மிகுந்த வீர்யமும், பெருமையும் கொண்டவர்கள்; நிச்சயமாக வெற்றியைத் தரக்கூடியவர்கள்.


जया च सुप्रभा चैव दक्षकन्ये सुमध्यमे।
ते सुवातेऽस्त्रशस्त्राणि शतं परमभास्वरम्।।1.21.15।।

தக்ஷனின் (இடை சிறுத்த) மகள்களாகிய ஜயாவும், சுப்ரபாவும் நூறு ஒளி பொருந்திய அஸ்திரங்களையும், சஸ்திரங்களையும், புதல்வர்களாகப் பெற்றார்கள்.

 

पञ्चाशतं सुतान् लेभे जया नाम परान् पुरा।
वधायासुरसैन्यानाममेयान् कामरूपिण:।।1.21.16।।

முன்னமே, அசுரர்களின் படையை அழிப்பதற்காக, ஜயா ஒரு வரத்தின் பயனாக, எல்லையற்ற வலிமையும், நினைத்தாற்போல் உருவம் எடுத்துக்கொள்ளும் ஆற்றலும் கொண்ட ஐம்பது புதல்வர்களைப் பெற்றிருந்தாள்.

 

सुप्रभाऽजनयच्चापि पुत्रान्पञ्चाशतं पुन:।
संहारान्नामदुर्धर्षान् दुराक्रामान् बलीयस:।।1.21.17।।

சுப்ரபாவும், எவராலும், தாக்கவோ, வெல்லவோ முடியாத, வலிமை பொருந்திய ‘சம்ஹாரர்கள்’ என்னும், ஐம்பது (அஸ்திரங்களை)புதல்வர்களைப் பெற்றெடுத்தாள்.

 

तानि चास्त्राणि वेत्त्येष यथावत्कुशिकात्मज:।
अपूर्वाणां च जनने शक्तो भूयस्स धर्मवित्।।1.21.18।।

இந்த அஸ்திர சஸ்திரங்களையெல்லாம் உபயோகிக்கும் வல்லமை பொருந்தியவர் விஸ்வாமித்திரர். தர்மம் அனைத்தும் அறிந்த அவரால், மேலும், புதிய ஆயுதங்களையும் உருவாக்க முடியும்.

 

एवं वीर्यो महातेजा विश्वामित्रो महायशाः।
न रामगमने राजन् संशयं कर्तुमर्हसि।।1.21.19।।

அரசே! இப்படிப்பட்ட ஒளி மிகுந்த, பெரும் புகழ் படைத்த, வீரியம் நிறைந்த விஸ்வாமித்திரருடன் ராமனை அனுப்புவதில் தங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.

 

तेषां निग्रहणे शक्तस्स्वयं च कुशिकात्मज:।
तव पुत्रहितार्थाय त्वामुपेत्याभियाचते।।1.21.20।।

குசிகரின் மகனான விஸ்வாமித்திரரால் அந்த ராக்ஷஸர்களைத் தாமே அடக்க முடியும். ஆயினும், தங்களுடைய மகனுக்கு நன்மை செய்வதற்காக, அவனைத் தன்னுடன் அனுப்புமாறு,  தங்களை யாசிக்கிறார்.

 

इति मुनिवचनात्प्रसन्नचित्तो
रघुवृषभस्तु मुमोद भास्वराङ्ग:।

गमनमभिरुरोच राघवस्य
प्रथितयशा: कुशिकात्मजाय बुध्या।।1.21.21।।

வசிஷ்டருடைய இந்த வார்த்தைகளால் திருப்தியுற்ற ரகு வம்சத்து அரசனான, புகழ் மிக்க தசரதன், முழு மனத்துடன், தன் உடல் மகிழ்ச்சியில் பிரகாசிக்க, ராமனை விஸ்வாமித்திரருடன் அனுப்பச் சம்மதித்தார்.

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकविंशस्सर्ग:।।

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் இருபத்தொன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

 

( முப்பத்திரண்டு நாட்களில், ராமனின் அஸ்வமேத யாகத்தின் போது லவகுசர்களால் சொல்லப்பட்ட ராமாயணத்தின் முதல் 755 ஸ்லோகங்கள் ( 21 ஸர்க்கங்கள்) முதல் நாள் சொல்லப்பட்டன.)

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

 

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...