Monday, 11 December 2023

  

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 22

( தசரதர் ராம லக்ஷ்மணர்களை விஸ்வாமித்திரருடன் அனுப்பி வைக்கிறார். விஸ்வாமித்திரர் ராமனுக்கு, ‘பலை’, ‘அதிபலை’ என்னும் மந்திரங்களை உபதேசிக்கிறார்.)

 

तथा वसिष्ठे ब्रुवति राजा दशरथस्सुतम 
प्रहृष्टवदनो राममाजुहाव सलक्ष्मणम्।।1.22.1।।
 

வசிஷ்டர் இவ்வாறு கூறியதும், தசரதர், மலர்ந்த முகத்துடன் ராமனையும், லக்ஷ்மணனையும், அங்கே வரவழைத்தார்.

 

कृतस्वस्त्ययनं मात्रा पित्रा दशरथेन च।
पुरोधसा वसिष्ठेन मङ्गलैरभिमन्त्रितम्।।1.22.2।।

स पुत्रं मूर्ध्न्युपाघ्राय राजा दशरथ: प्रियम्।
ददौ कुशिकपुत्राय सुतेनान्तरात्मना।।1.22.3।।

ராமனின் பெற்றோரான தசரதரும் கௌசல்யையும், செல்வம் பெருகவும், தீமைகள் வராமலிருக்கவும் வேண்டி, மந்திரங்களை உச்சரித்தனர். பிறகு, குரு வசிஷ்டரும், மங்களமான மந்திரங்களை உச்சரித்த பின், தசரதர், ராமனை உச்சி மோந்து, குசிகபுத்திரரான விஸ்வாமித்திரரிடம் மனதார ஒப்படைத்தார்.

 

ततो वायुस्सुखस्पर्शो नीरजस्को ववौ तदा।
विश्वामित्रगतं दृष्ट्वा रामं राजीवलोचनम्।।1.22.4।।

தாமரைக் கண்ணனான ராமன் விஸ்வாமித்திரருடன் செல்வதைக் கண்ட காற்று கூடத் தூசு இன்றித் தூய்மையாகவும், மென்மையாகவும் வீசியது.

 

पुष्पवृष्टिर्महत्यासीद्देवदुन्दुभिनिस्वनै:।
शङ्खदुन्दुभिनिर्घोष: प्रयाते तु महात्मनि।।1.22.5।।

மகாத்மாவான விஸ்வாமித்திரர் அங்கிருந்து புறப்பட்டதும், இடையறாது மலர் மாரி பொழிந்தது. தெய்வீக முரசுகளும், சங்கங்களும் முழங்கின.

 

विश्वामित्रो ययावग्रे ततो रामो धनुर्धर:।
काकपक्षधरो धन्वी तं च सौमित्रिरन्वगात्।।1.22.6।।

விஸ்வாமித்திரன் முன்னே நடக்க, அவரைத் தொடர்ந்து, இரண்டு புறமும் முடிக்கற்றைகளும், கையில் வில்லுடனும் ராமன் நடந்து சென்றான். சுமித்திரையின் புதல்வனான லக்ஷ்மணன் அவனைப் பின் தொடர்ந்தான்.

 

कलापिनौ धनुष्पाणी शोभमानौ दिशो दश ।
विश्वामित्रं महात्मानं त्रिशीर्षाविव पन्नगौ।।1.22.7।।

अनुजग्मतुरक्षुद्रौ पितामहमिवाश्विनौ।

விற்களுடனும், அம்புறாத்தூணிகளுடனும், ராம லக்ஷ்மணர்கள் மூன்று தலை நாகங்களைப் போல் இருந்தார்கள். மிகச் சிறந்த வீர்யமுடைய அவர்கள், அஸ்வினி குமாரர்கள் பிரம்மாவைத் தொடர்வதைப் போல, மகாத்மாவான விஸ்வாமித்திரரைத் தொடர்ந்தார்கள்.

 

तदा कुशिकपुत्रं तु धनुष्पाणी स्वलङ्कृतौ।।1.22.8।।


बद्धगोधाङ्गुलित्राणौ खड्गवन्तौ महाद्युती ।
कुमारौ चारुवपुषौ भ्रातरौ रामलक्ष्मणौ ।।1.22.9।।

अनुयातौ श्रिया दीप्तौ शोभयेतामनिन्दितौ।
स्थाणुं देवमिवाचिन्त्यं कुमाराविव पावकी ।।1.22.10।।

கைகளில் வில்லை ஏந்திக்கொண்டு, நல்ல முறையில் உடை உடுத்திக்கொண்டு, வில்லின் நாணால் காயம் எற்படாதவாறு கைவிரல்களுக்கு உடும்புத்தோலினால் ஆன உறையை அணிந்து கொண்டு, கைகளில் வாளுடன், அழகான உடலமைப்பைக்கொண்ட, குற்றமற்ற சகோதரர்களான அந்த ராம லக்ஷ்மணர்கள், யாராலும் அறிந்து கொள்ள முடியாத சிவனை அக்கினியில் இருந்து பிறந்த ஸ்கந்தனும், விசாகனும் பின் தொடர்ந்து போவது போல், மிகுந்த ஒளி வீசிக்கொண்டு, விஸ்வாமித்திரரைத் தொடர்ந்து சென்றார்கள்.


अध्यर्धयोजनं गत्वा सरय्वा दक्षिणे तटे।
रामेति मधुरां वाणीं विश्वामित्रोऽभ्यभाषत।।1.22.11।।

அரை யோஜனை தூரத்துக்கு மேல் சென்ற பிறகு, ஸரயு நதியின் தெற்குக்கரையில், விஸ்வாமித்திரர், ‘ராமா!’ என்று அன்புடன் அழைத்து, இனிமையாகப் பேசத் தொடங்கினார்.

 

गृहाण वत्स सलिलं मा भूत्कालस्य पर्यय:।
मन्त्रग्रामं गृहाण त्वं बलामतिबलां तथा।।1.22.12।।

“ குழந்தாய்! தாமதம் செய்யாமல், கையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, நான் கொடுக்கும், மந்திரங்களை ஏற்றுக்கொள்.


न श्रमो न ज्वरो वा ते न रूपस्य विपर्यय:।
न च सुप्तं प्रमत्तं वा धर्षयिष्यन्ति नैऱृता:।।1.22.13।।

இந்த மந்திரங்களை ஏற்றுக்கொண்டால் உனக்குக் களைப்போ, ஜ்வரமோ, உன் உருவத்தில் மாற்றமோ ஏற்படாது. நீ உறங்கிக்கொண்டிருந்தாலும், கவனமின்றி இருந்தாலும், ராக்ஷஸர்களால் உனக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது.

 

न बाह्वोस्सदृशो वीर्ये पृथिव्यामस्ति कश्चन।
त्रिषु लोकेषु वै राम न भवेत्सदृशस्तव ।।1.22.14।।

“ராமனே! உன்னைப் போன்றவனோ, உன் கைகளைப் போன்ற வலிமையான கைகள் உடையவனோ, இந்த மூன்று உலகங்களிலும் இல்லை. 

 

न सौभाग्ये न दाक्षिण्ये न ज्ञाने बुद्धिनिश्चये।
नोत्तरे प्रतिवक्तव्ये समो लोके तवाऽनघ।।1.22.15।।

பாவமற்றவனே! உன்னைப் போல பாக்கியசாலியாகவும், அன்பிலும், அறிவிலும், தீர்மானிப்பதிலும், சரியான பதில் கொடுப்பதிலும் உனக்கு இணையானவராகவும், வேறு ஒருவர் இந்த உலகத்தில் இல்லை.

 

एतद्विद्याद्वये लब्धे भविता नास्ति ते सम:।
बलात्वतिबला चैव सर्वज्ञानस्य मातरौ।।1.22.16।।

அனைத்து விதமான ஞானங்களுக்கும் தாய் என்று சொல்லத்தக்க ‘பலை’ , ‘அதிபலை’ என்னும் இந்த மந்திரங்களின் ஞானம் உனக்குக் கிடைத்து விட்டால், உனக்கு நிகரானவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை. இனிமேலும் இருக்க மாட்டார்கள்.


क्षुत्पिपासे न ते राम भविष्येते नरोत्तम ।
बलामतिबलां चैव पठत: पथि राघव।।1.22.17।।

“ரகு வம்சத்தில் பிறந்த ராமா!  நீ வழியில் செல்லும் போது ‘பலை’ , ‘அதிபலை’ என்னும் இந்த மந்திரங்களை உச்சரிப்பாயானால், உனக்குப் பசியோ, தாகமோ ஏற்படாது.

 

विद्याद्वयमधीयाने यशश्चाप्यतुलं त्वयि।
पितामहसुते ह्येते विद्ये तेजस्समन्विते।।1.22.18।।

प्रदातुं तव काकुत्स्थ सदृशस्त्वं हि धार्मिक।

ககுஸ்த வம்சத்தில் பிறந்த ராமா! இந்த இரண்டு மந்திரங்களும், பிதாமகரான பிரம்மாவின் புத்திரிகள். இந்த மந்திரங்களை நீ உபயோகித்தால், இணையற்ற புகழைப் பெறுவாய்! இந்த மந்திரங்களைப் பெறுவதற்கு ஏற்றவன் நீ தான்.

 

कामं बहुगुणास्सर्वे त्वय्येते नात्र संशय:।
तपसा सम्भृते चैते बहुरूपे भविष्यत:।।1.22.19।।

உன்னிடம் நல்ல குணங்கள் ஏராளமாக இருக்கின்றன. இந்த மந்திரங்களை நல்ல முறையில் அனுஷ்டித்தாயானால், இவை பல வகைகளில் உனக்குப் பலன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. “

 

ततो रामो जलं स्पृष्ट्वा प्रहृष्टवदनश्शुचि:।
प्रतिजग्राह ते विद्ये महर्षेर्भावितात्मन:।।1.22.20।।

அதன் பிறகு, தண்ணீரைத்தொட்டுத் தன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டு, மலர்ந்த முகத்துடன், பரமாத்மாவை உணர்ந்த மகரிஷியிடம் இருந்து, அந்த இரண்டு மந்திரங்களையும் ராமன் பெற்றுக்கொண்டான்.

 

विद्यासमुदितो रामश्शुशुभे भूरिविक्रम:।
सहस्ररश्मिर्भगवान् शरदीव दिवाकर:।।1.22.21।।

गुरुकार्याणि सर्वाणि नियुज्य कुशिकात्मजे।
ऊषुस्तां रजनीं तत्र सरय्वां सुसुखं त्रय:।।1.22.22।।

சிறந்த வீரனான ராமன் அந்த இரண்டு மந்திரங்களின் ஞானத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, குருவான விஸ்வாமித்திரருக்குச் செய்ய வேண்டிய சேவைகளை எல்லாம் செய்து, சரத்காலத்தில் ஆயிரக்கணக்கான கிரணங்களுடன் ஜ்வலிக்கும் சூரியனைப் போல ஒளிர்ந்தான். அங்கே அந்த மூவரும், ஸரயு நதிக்கரையில் நிம்மதியாக அந்த இரவைக் கழித்தனர்.

 

दशरथनृपसूनुसत्तमाभ्यां
तृणशयनेऽनुचिते सहोषिताभ्याम्।

कुशिकसुतवचोऽनुलालिताभ्यां
सुखमिव सा विबभौ विभावरी च।।1.22.23।।
 

புற்களின் மேல் படுத்துப் பழக்கம் இல்லாதவர்களாயினும், தசரத மன்னரின் உன்னதமான புதல்வர்களாகிய ராம லக்ஷ்மணர்களுக்கு, விஸ்வாமித்திரரின் இதமான வார்த்தைகளால் அந்த இரவு சுகமாகவே கழிந்தது. 


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे द्वाविंशस्सर्ग:।।


இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் இருபத்திரண்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

(இரண்டாம் நாள் 22 ஆவது ஸர்க்கத்திலிருந்து 44 ஆவது ஸர்க்கம் வரை (ஸ்லோகங்கள் 756-1216) சொல்லப்பட்டது.)

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

 

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...