Monday, 11 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 23

(ராமனும் லக்ஷ்மணனும் பின் தொடர, விஸ்வாமித்திரர் ஸரயுவும், கங்கையும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள காமாஸ்ரமத்தை அடைகிறார்.)

प्रभातायां तु शर्वर्यां विश्वामित्रो महामुनि:।
अभ्यभाषत काकुत्स्थौ शयानौ पर्णसंस्तरे।।1.23.1।।

இரவு முடிந்து காலை விடியும் நேரத்தில், மகா முனிவரான விஸ்வாமித்திரர், தர்ப்பைப் படுக்கையில் படுத்திருந்த ராம லக்ஷ்மணர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்:


कौसल्या सुप्रजा राम पूर्वा सन्ध्या प्रवर्तते।
उत्तिष्ठ नरशार्दूल कर्तव्यं दैवमाह्निकम्।।1.23.2।।

“கௌசல்யையின் அன்பு மகனே, ராமா! இன்று காலை விடியப் போகிறது. மனிதருள் சிறந்தவனே! எழுந்து, தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய புனிதச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.”

 

तस्यर्षे: परमोदारं वचश्श्रुत्वा नृपात्मजौ ।
स्नात्वा कृतोदकौ वीरौ जेपतु: परमं जपम्।।1.23.3।।

விஸ்வாமித்திரரின் இந்த அன்பான வார்த்தைகளைக் கேட்ட அரசகுமாரர்களான ராமலக்ஷ்மணர்கள், எழுந்து, குளித்து விட்டுத் தண்ணீரில் நின்று கொண்டு, சூரியனுக்குத் தண்ணீரை அர்ப்பித்து விட்டுப் புனிதமான ஜபங்களைச் செய்தார்கள்.

 

कृताह्निकौ महावीर्यौ विश्वामित्रं तपोधनम्।
अभिवाद्याभिसंहृष्टौ गमनायाभितस्थतु:।।1.23.4।।

மகாவீர்யமுடைய ராமலக்ஷ்மணர்கள், தினமும் செய்ய வேண்டிய கடமைகளை முடித்தபின்னர், தவத்தையே செல்வமாகக்கொண்ட விஸ்வாமித்திரரை விழுந்து வணங்கி, மேற்கொண்டு செய்ய வேண்டிய பயணத்துக்குத் தயாராக, அவர் முன் நின்றனர்.

 

तौ प्रयातौ महावीर्यौ दिव्यां त्रिपथगां नदीम्।
ददृशाते ततस्तत्र सरय्वास्सङ्गमे शुभे।।1.23.5।।

பின்னர், மகாவீரர்களான ராமலக்ஷ்மணர்கள், சற்றுத் தொலைவு நடந்த பிறகு, அந்தப் புனிதமான ஸரயு நதி, தெய்வீகமான கங்கையுடன் கலந்து, மூன்றாகப் பிரிந்து செல்வதைக் கண்டனர்.

 

तत्राश्रमपदं पुण्यमृषीणामग्य्रतेजसाम् ।
बहुवर्षसहस्राणि तप्यतां परमं तप:।।1.23.6।।

அங்கே அவர்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்களாகத், தீவிரமாகத் தவத்தில் ஈடுபட்டுள்ள மகா தேஜஸ் உடைய ரிஷிகளின் புனிதமான ஆசிரமத்தைக் கண்டார்கள்.

 

तं दृष्ट्वा परमप्रीतौ राघवौ पुण्यमाश्रमम्।
ऊचतुस्तं महात्मानं विश्वामित्रमिदं वच:।।1.23.7।।

அந்தப் புனிதமான ஆசிரமத்தைக்கண்ட ராகவர்கள் (ராமலக்ஷ்மணர்கள்) மிகவும் மகிழ்ந்து, மகாத்மாவான விஸ்வாமித்திரரிடம் இவ்வாறு கேட்டார்கள்:

 

कस्यायमाश्रम: पुण्य: कोन्वस्मिन्वसते पुमान्।
भगवन् श्रोतुमिच्छाव: परं कौतूहलं हि नौ।।1.23.8।।

“வணக்கத்துக்குரியவரே! இந்தப் புனிதமான ஆசிரமத்தில் யார் வசிக்கிறார்கள்? அதை அறிய வேண்டும் என்று நாங்கள் இருவரும் ஆவலாக இருக்கிறோம்.”

 

तयोस्तद्वचनं श्रुत्वा प्रहस्य मुनिपुङ्गव:।
अब्रवीच्छ्रूयतां राम यस्यायं पूर्व आश्रम:।।1.23.9 ।।

“அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு, விஸ்வாமித்திரர், சற்றே புன்னகைத்துக் கூறலானர்: இந்த ஆசிரமம் முன்பு யாருடையதாக இருந்தது என்று சொல்கிறேன், கேளுங்கள்.

 

कन्दर्पो मूर्तिमानासीत्काम इत्युच्यते बुधै:।
तपस्यन्तमिह स्थाणुं नियमेन समाहितम्।।1.23.10।।

कृतोद्वाहं तु देवेशं गच्छन्तं समरुद्गगणम्।
धर्षयामास दुर्मेधा हुङ्कृतश्च महात्मना।।1.23.11।।

காதலின் கடவுளான கந்தர்ப்பன் ஒரு காலத்தில் இங்கே மனித உருவில் வசித்து வந்தான். அவனை அறிஞர்கள் காமன் என்று அழைக்கிறார்கள்.  அப்போது ஒரு சமயம், புதிதாக மணந்த தன் மனைவியுடன் தீவிரமான தவத்தில் ஈடுபட்டிருந்த சிவனை, மூடனான காமன், மருதர்களுடன் சென்று,  சலனப்படுத்த முயன்றான்.  சிவன் மிகுந்த கோபத்துடன் அவனைப் பார்த்தார்

.

अवदग्धस्य रौद्रेण चक्षुषा रघुनन्दन।
व्यशीर्यन्त शरीरात्स्वात्सर्वगात्राणि दुर्मते:।।1.23.12।।

ரகுவம்சத்தின் பிறந்தவனே! சிவனுடைய கோபத்தீயில் , தீய எண்ணம் கொண்ட மன்மதனுடைய உடலின் அங்கங்கள் எல்லாம் முழுவதுமாக எரிந்து விட்டன.

 

तस्य गात्रं हतं तत्र निर्दग्थस्य महात्मना।
अशरीर: कृत: काम: क्रोधाद्देवेश्वरेण हि।।1.23.13।।

மிகுந்த கோபம் கொண்ட சிவனால் மன்மதனுடைய உடல் முழுவதுமாக எரிக்கப்பட்டு விட்டதால், அவன் உடல் அற்றவன் ஆனான்.

 

अनङ्ग इति विख्यातस्तदाप्रभृति राघव।
स चाङ्गविषयश्श्रीमान्यत्राङ्गं प्रमुमोच ह।।1.23.14।।

ராகவனே! அப்போதிருந்து மன்மதன் ‘அனங்கன்’ (அங்கங்கள் அற்றவன்) என்று அழைக்கப்படுகிறான். அவன் உடலை இழந்த இந்த இடம் அங்க தேசம் என்று அழைக்கப்படுகிறது.

 

तस्यायमाश्रम: पुण्यस्तस्येमे मुनय: पुरा।
शिष्या धर्मपरा नित्यं तेषां पापं न विद्यते।।1.23.15।।

இந்தப் புனிதமான ஆசிரமம் காமனுக்குச் சொந்தமானது. இந்த முனிவர்கள் அவனுடைய சீடர்கள். இவர்கள் தர்மாத்மாக்கள்; பாவமற்றவர்கள்.

 

इहाद्य रजनीं राम वसेम शुभदर्शन।
पुण्ययोस्सरितोर्मध्ये श्वस्तरिष्यामहे वयम्।।1.23.16।।

மங்களமாகக் காட்சி கொடுக்கும் ராமனே! புண்ணிய நதிகளான ஸரயுவும் கங்கையும் சங்கமிக்கும் இந்த இடத்தில் இன்று தங்குவோம்.  நாளை, நதியைக் கடந்து செல்வோம்.

 

अभिगच्छामहे सर्वे शुचय: पुण्यमाश्रमम्।
स्नाताश्च कृतजप्याश्च हुतहव्या नरोत्तम।।1.23.17।।

மனிதருள் சிறந்தவனே! குளித்து விட்டுக் காலை நேரத்தில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து விட்டு, அக்கினிக்கு ஹோமம் செய்து விட்டுப் புனிதமானவர்களாய், இந்த ஆசிரமத்தில் பிரவேசிப்போம்.”

 

तेषां संवदतां तत्र तपोदीर्घेण चक्षुषा।
विज्ञाय परमप्रीता मुनयो हर्षमागमन्।।1.23.18।।

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது, தங்கள் நீண்டகாலத்  தவத்தால் அறிவுக்கண் பெற்ற அந்த ரிஷிகள், அவர்களை யாரென்று அடையாளம் தெரிந்து கொண்டு, மிகவும் மகிழ்ந்தார்கள்.

 

अर्घ्यं पाद्यं तथाऽतिथ्यं निवेद्य कुशिकात्मजे।
रामलक्ष्मणयो: पश्चादकुर्वन्नतिथिक्रियाम्।।1.23.19।।

அவர்கள் குசிகபுத்திரரான விஸ்வாமித்திரருக்கு அர்க்கியம் கொடுத்து, அவர் கால்களை நீரால் கழுவி, அவரை நன்கு உபசரித்த பின்னர் ராம லக்ஷ்மணர்களை உபசரித்தார்கள்.

 

सत्कारं समनुप्राप्य कथाभिरभिरञ्जयन्।
यथार्हमजपन् सन्ध्यामृषयस्ते समाहिता:।।1.23.20।।

அந்த ரிஷிகள் நல்ல விதமாக விருந்தோம்பலை அளித்து, , கதைகள் சொல்லி அவர்களை மகிழ்வித்த பின்னர், மாலை வந்த போது, முழு கவனத்துடன் முறைப்படி ஸந்தியாவந்தனம், ஜபம் ஆகியவைகளையும் செய்தார்கள்.

 

तत्र वासिभिरानीता मुनिभिस्सुव्रतै: सह।
न्यवसन् सुसुखं तत्र कामाश्रमपदे तदा।।1.23.21।।

அந்த காமாசிரமத்தில் வசித்து வந்த முனிவர்களால், ஆசிரமத்துக்குள் அழைத்து வரப்பட்ட அவர்கள்( விஸ்வாமித்திரர் மற்றும், ராமலக்ஷ்மணர்கள்) அங்கேயே சுகமாகத் தங்கினார்கள்.

 

कथाभिरभिरामाभिरभिरामौ नृपात्मजौ।
रमयामास धर्मात्मा कौशिको मुनिपुङ्गव:।।1.23.22।।

தர்மாத்மாவும், முனிபுங்கவரும் ஆன கௌசிகர்

(விஸ்வாமித்திரர்) மனதைக் கவரும் அரசபுத்திரர்களான ராமலக்ஷ்மணர்களுக்கு, மனத்தைக் கவரும் கதைகளைச் சொல்லி மகிழ்வித்தார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे त्रयोविंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் இருபத்து மூன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...