Monday, 11 December 2023

  

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 24

 (நதியைக்கடக்கும் போது,”கங்கையிலிருந்து வரும் இந்தக் கொந்தளிக்கும் சத்தம் யாது?” என்று ராமன் கேட்க, அதற்குப் பதில் கூறிய பின்னர்,விஸ்வாமித்திரர் தாடகையின் கதையைச் சொல்லுகிறார்.)

तत: प्रभाते विमले कृताह्निकमरिन्दमौ।
विश्वामित्रं पुरस्कृत्य नद्यास्तीरमुपागतौ।।1.24.1।।

எதிரிகளை அழிக்கும் ராமலக்ஷ்மணர்கள், தூய்மையான அந்தக் காலை நேரத்தில், காலையில் செய்ய வேண்டிய தெய்வீகக்கடன்களை முடித்த பின்னர், விஸ்வாமித்திரர்  முன்னே நடக்க, அவர் பின்னே, நதிக்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

 

ते च सर्वे महात्मानो मुनयस्संश्रितव्रता:।
उपस्थाप्य शुभां नावं विश्वामित्रमथाब्रुवन्।।1.24.2।।

மகாத்மாக்களும், சிறந்த தவசிகளுகான அந்த ரிஷிகள், ஒரு மங்களகரமான படகைத் தயாராக வைத்து, விஸ்வாமித்திரரிடம் இவ்வாறு கூறினார்கள்:

 

आरोहतु भवान्नावं राजपुत्रपुरस्कृत:।
अरिष्टं गच्छ पन्थानं मा भूत्कालविपर्यय:।।1.24.3।।

“இந்த அரச குமாரர்களை முன்னிறுத்திப் படகில் ஏறுங்கள். நேரத்தை வீணாக்காமல், பத்திரமாகப் போய்வாருங்கள். “

 

विश्वामित्रस्तथेत्युक्तवा तानृषीनभिपूज्य च।
ततार सहितस्ताभ्यां सरितं सागरङ्गमाम्।।1.24.4।।

 ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறிய விஸ்வாமித்திரர், அந்த ரிஷிகளை வணங்கிவிட்டு, ராமலக்ஷ்மணர்களுடன், சமுத்திரத்தை நோக்கிப் பாயும் கங்கையைக் கடக்கலானார்.

 

ततश्शुश्राव वै शब्दमतिसंरम्भवर्धितम्।
मध्यमागम्य तोयस्य सह राम:कनीयसा।।1.24.5।।

நதியின் நடுப்பாகத்தை அடைந்த போது, ராமனும், அவனுடைய தம்பியும், ஒரு மிகப் பெரிய சத்தத்தைக் கேட்டனர். நதியின் வேகத்தால் அது இன்னும் அதிகரித்தது.

 

अथ रामस्सरिन्मध्ये पप्रच्छ मुनिपुङ्गवम्।
वारिणो भिद्यमानस्य किमयं तुमुलो ध्वनि:।।1.24.6।।

அதைக் கேட்ட ராமன் விஸ்வாமித்திரரிடம் “இவ்வாறு தண்ணீரைப் பிளந்து கொண்டு வரும் இந்தக் கொந்தளிக்கும் சத்தம் யாது?” என்று வினவினான். 

 

राघवस्य वचश्श्रुत्वा कौतूहलसमन्वित:।
कथयामास धर्मात्मा तस्य शब्दस्य निश्चयम्।।1.24.7।।

 

ஆர்வமிகுந்து, ராகவன் அவ்வாறு கேட்டதும்,  அந்தச் சத்தத்தின் உண்மைக் காரணத்தை விஸ்வாமித்திரர் விளக்கலானார்.

 

कैलासपर्वते राम मनसा निर्मितं सर:।
ब्रह्मणा नरशार्दूल तेनेदं मानसं सर:।।1.24.8।।

மனிதர்களுள் சிறந்தவனே! ராமா! கைலாஸ பர்வதத்தில், பிரம்மதேவனால், மனதால் நினைத்தே உருவாக்கப்பட்ட ‘மானஸம்’ ( மான ஸரோவரம்) என்னும் ஏரி இருக்கிறது.

 

तस्मात्सुस्राव सरसस्सायोध्यामुपगूहते ।
सर प्रवृत्ता सरयू: पुण्या ब्रह्मसरश्च्युता।।1.24.9।।

பிரம்மதேவனால் உருவாக்கப்பட்ட அந்தப் புனிதமான ஏரியில் இருந்து தோன்றி, அயோத்தியைச் சுற்றிப் பாயும் நதிக்கு, ஸரயு என்று பெயர். (ஸரம் – ஏரி; ஸரத்தில் இருந்து வந்ததால் ஸரயு).

 

तस्यायमतुलश्शब्दो जाह्नवीमभिवर्तते।
वारिसङ्क्षोभजो राम प्रणामं नियत:कुरु।।1.24.10।।

கங்கை நதி இந்த ஸரயுவை நெருங்கி, அதில் கலக்கும் போது, இரண்டு நதிகளின் தண்ணீரும் ஒன்றுடன் ஒன்று மோதி, இப்படிப்பட்ட ஓசையை உண்டாக்குகின்றன. மனதை ஒருமுகப் படுத்தி, இந்த நதிகளை வணங்கு.

 

ताभ्यां तु तावुभौ कृत्वा प्रणाममतिधार्मिकौ।
तीरं दक्षिणमासाद्य जग्मतुर्लघुविक्रमौ।।1.24.11।।

சிறந்த தார்மீகர்களாகிய அவர்கள் இருவரும், அந்த நதிகளை வணங்கிவிட்டு, அதன் தெற்குக் கரையை அடைந்து வேகமாக நடந்து முன்னேறினார்கள்.

 

स वनं घोरसङ्काशं दृष्ट्वा नृपवरात्मज:।
अविप्रहतमैक्ष्वाक: पप्रच्छ मुनिपुङ्गवम्।।1.24.12।।

இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவனும், மிகச்சிறந்த அரசனின் புதல்வனுமாகிய அவன் (ராமன்) யாருடைய காலும் படாத பயங்கரமான காட்டைப் பார்த்து, முனிபுங்கவரான விஸ்வாமித்திரரைக் கேட்டான்:

 

अहो वनमिदं दुर्गं झिल्लिकागणनादितम्।
भैरवैश्शपदै: पूर्णं शकुन्तैर्दारुणारुतै:।।1.24.13।।

என்ன ஆச்சரியம்! யாராலும் உள்ளே நுழைய முடியாத இந்தக் காடு , சில்வண்டுகளின் இடையறாத ஓசையினாலும், பயங்கரமான விலங்குகளின் கர்ஜனைகளாலும்,  பறவைகள் எழுப்பும் அச்சமூட்டக்கூடிய ஒலிகளாலும் நிரம்பியிருக்கிறது.

 

नानाप्रकारैश्शकुनै र्वाश्यद्भिर्भैरवस्वनै:।
सिंहव्याघ्रवराहैश्च वारणैश्चोपशोभितम्।।1.24.14।।

பலவிதமான பறவைகளின் பயங்கரமான கூக்குரலால் இந்த வனம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சிங்கங்களும், புலிகளும், பன்றிகளும், யானைகளும், இங்குமங்கும் உலவிக் கொண்டிருக்கின்றன.

 

धवाश्वकर्णककुभैर्बिल्वतिन्दुकपाटलै:।
सङ्कीर्णं बदरीभिश्च किन्न्वेतद्दारुणं वनम्।।1.24.15।।

தவா, அஸ்வகர்ணம், ககுபம், வில்வம், திந்துகம், பாடலம், பதரி( இலந்தை) போன்ற மரங்கள் நிறந்த இந்த வனம் எவ்வளவு அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது?”

 

तमुवाच महातेजा विश्वामित्रो महामुनि:।
श्रूयतां वत्स काकुत्स्थ यस्यैतद्दारुणं वनम्।।1.24.16।।

மகாதேஜஸ் உடைய விஸ்வாமித்திரர் ராமனைப் பார்த்து,

“காகுஸ்தனே! இந்தப் பயங்கரமான காடு யாருடையது என்று சொல்கிறேன், கேள்!”

 

एतौ जनपदौ स्फीतौ पूर्वमास्तां नरोत्तम।
मलदाश्च करूशाश्च देवनिर्माणनिर्मितौ।।1.24.17।।

“மனிதருள் சிறந்தவனே! முன்பு, தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட பெரிய, செல்வம் நிறைந்த, மலதா, கரூஷா என்ற இரண்டு நகரங்கள் இருந்தன.

 

पुरा वृत्रवधे राम मलेन समभिप्लुतम्।
क्षुधा चैव सहस्राक्षं ब्रह्महत्या समाविशत्।।1.24.18।।

ராமா! முற்காலத்தில், விருத்திராசுரனைக் கொன்ற பிறகு, பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட தேவேந்திரன், அசுத்தத்தாலும், பசியாலும் துன்புற்றான்.

 

तमिन्द्रं स्नापयन् देवा ऋषयश्च तपोधना:।
कलशैस्स्नापयामासुर्मलं चास्य प्रमोचयन्।।1.24.19।।

தேவர்களும், தவத்தில் சிறந்த முனிவர்களும், கலசங்களில் கொண்டுவந்த புனித நீரால் இந்திரனைக் குளிப்பாட்டி அவனைத் தூய்மைப்படுத்தினார்கள்.

 

इह भूम्यां मलं दत्वा दत्वा कारूशमेव च।
शरीरजं महेन्द्रस्य ततो हर्षं प्रपेदिरे।।1.24.20।।

இந்திரனின் தோஷமும், அவனுடைய  உடலில் இருந்த அசுத்தங்களும், அவனுடைய பசியும்  இந்த இடத்தில்  நீங்கியதால், தேவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.

 

निर्मलो निष्करूशश्च शुचिरिंन्द्रो यदाभवत्।
ददौ देशस्य सुप्रीतो वरं प्रभुरनुत्तमम्।।1.24.21।।

தனது அசுத்தங்களும், பசியும் நீங்கப் பெற்று, மீண்டும் தூயவனாக ஆன இந்திரன், மன மகிழ்ந்து இந்த இடத்துக்கு ஒரு அருமையான வரம் அளித்தான்.

 

इमौ जनपदौ स्फीतौ ख्यातिं लोके गमिष्यत:।
मलदाश्च करूशाश्च ममाङ्गमलधारिणौ।।1.24.22।।

‘என்னுடைய உடலின் இருந்த அசுத்தங்களையெல்லாம் ஏற்றுக்கொண்ட இந்த இடம் மிகுந்த செழிப்புடனும், செல்வச்சிறப்புடனும், ‘மலதா’, ‘கரூஷா’ என்ற பெயரில் இந்த உலகில் புகழ் அடையட்டும்”.

 

साधु साध्विति तं देवा: पाकशासनमब्रुवन्।
देशस्य पूजां तां दृष्ट्वा कृतां शक्रेण धीमता।।1.24.23।।

இந்த இடத்துக்கு இந்திரன் அளித்த கௌரவத்தைக்கண்ட தேவர்கள், “நன்று! நன்று!’ என்று அவனைப் பாராட்டினார்கள்.

 

एतौ जनपदौ स्फीतौ दीर्घकालमरिन्दम।
मलदाश्च करूशाश्च मुदितौ धनधान्यत:।।1.24.24।।

எதிரிகளை அழிப்பவனே! இந்தச் செல்வச் செழிப்பு மிக்க மலதா, கரூஷா என்ற இரண்டு நகரங்களும், நீண்ட காலம் தன தான்யங்களால் நிரம்பப் பெற்று, மகிழ்ச்சி நிறைந்து விளங்கின.

 

कस्यचित्त्वथ कालस्य यक्षी वै कामरूपिणी।
बलं नागसहस्रस्य धारयन्ती तदा ह्यभूत्।।1.24.25।।

ताटका नाम भद्रं ते भार्या सुन्दस्य धीमत:। 2
मारीचो राक्षस: पुत्रो यस्याश्शक्रपराक्रम:।।1.24.26।।

உனக்கு நன்மை உண்டாகட்டும்! பல வருடங்களுக்குப் பிறகு, புத்திசாலியான சுந்தன் என்பவனின் மனைவியும், நினைத்தாற்போல் உருவம் எடுத்துக் கொள்ளும் திறமை கொண்டவளும், ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவளும், இந்திரனைப் போன்ற சக்தியுள்ள மாரீசன் என்பவனின் தாயாருமான தாடகை என்ற பெயருள்ள ஒரு யக்ஷிணி இந்த இடத்தைக் கைப்பற்றினாள்.

 

वृत्तबाहुर्महावीर्यो विपुलास्य तनुर्महान्।
राक्षसो भैरवाकारो नित्यं त्रासयते प्रजा:।।1.24.27।।

வலிமையான கரங்களும், மிகுந்த ஆற்றலும், அகன்ற முகமும், பெரிய உடலும் கொண்டு பயங்கரமாக விளங்கிய அந்த ராக்ஷஸன் (மாரீசன்)அங்கு வசித்தவர்களை மிகவும் துன்புறுத்தினான்.

 

इमौ जनपदौ नित्यं विनाशयति राघव।
मलदांश्च करूशांश्च ताटका दुष्टचारिणी।।1.24.28।।

ராகவா! தீய நடத்தையுள்ள அந்தத் தாடகை தொடர்ந்து மலதா, கரூஷா என்னும் அந்த நகரங்களை நாசப்படுத்தி வருகிறாள்.

 

सेयं पन्थानमावृत्य वसत्यध्यर्धयोजने।
अत एव न गन्तव्यं ताटकाया वनं यत:।।1.24.29।।

இங்கிருந்து ஒன்றரை யோஜனை தூரத்தில் வழியை மறித்துக்கொண்டு, அந்தத் தாடகை வசிக்கிறாள். ஆகவே அங்கு யாரும் போகக்கூடாது.

 

स्वबाहुबलमाश्रित्य जहीमां दुष्टचारिणीम्।
मन्नियोगादिमं देशं कुरु निष्कण्टकं पुन:।।1.24.30।।

இந்தத் தீய நடத்தையுள்ளவளை உனது வலிமை நிறைந்த கைகளால், கொன்று விடு. என் ஆணையை நிறைவேற்றி, இந்த இடத்தை மீண்டும்  பாதுகாப்பானதாக மாற்றி விடு.

 

 

न हि कश्चिदिमं देशं शक्नोत्यागन्तुमीदृशम्।
यक्षिण्या घोरया राम उत्सादितमसह्यया।।1.24.31।।

ராமா! இப்படிப்பட்ட கோரமான, பொறுக்கமுடியாத யக்ஷிணியால் நாசப்படுத்தப்படும் இந்தக் காட்டை யாராலும் நெருங்க முடியாது.

 

एतत्ते सर्वमाख्यातं यथैतद्दारुणं वनम्।
यक्ष्या चोत्सादितं सर्वमद्यापि न निवर्तते।।1.24.32।।

இந்தக் காடு முழுவதும் இந்தக் கொடுமையான யக்ஷிணியால் எவ்வாறு நாசப்படுத்தப் பட்டது என்பதை உனக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். இன்னும் இந்தக் காட்டை விட்டு அவள் செல்லவில்லை. “


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे चतुर्विंशतिस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் இருபத்து நான்காவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

  

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...