ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 25
(ராமன் மேற்கொண்டு
விவரங்கள் கேட்கவும், விஸ்வாமித்திரர் தாடகையின் பிறப்பு, அவளது திருமணம்,
அவளுக்குக் கிடைத்த சாபம் ஆகியவற்றைப் பற்றிக் கூறி, அவளை வதம் செய்வது தவறல்ல
என்று ராமனை ஒத்துக்கொள்ள வைக்கிறார்.)
மனிதர்களுள் சிறந்த
ராமன், அளவற்ற திறமையுடைய விஸ்வாமித்திரரின் உத்தமமான வார்த்தைகளைக் கேட்டு,
மென்மையான குரலில் பதில் கூறினான்.
“முனி புங்கவரே!
யக்ஷர்கள் அவ்வளவு பலம் பொருந்தியவர்கள் அல்ல என்று நான் கேள்விப்
பட்டிருக்கிறேன். அப்படியிருக்க, பலம் குறைந்த ஒரு பெண்ணுக்கு எப்படி ஆயிரம்
யானைகளின் பலம் இருக்கக்கூடும்?”
விஸ்வாமித்திரர்
கூறினார்: “எவ்வாறு அபலையான ஒரு பெண் இப்படிப்பட்ட வீர்யத்தையும் , பலத்தையும் ஒரு
வரத்தால் அடைந்தாள் என்பதைக் கூறுகிறேன், கேள்!
முன்னொரு காலத்தில்
பெரும் வலிமை படைத்த, ஸுகேது என்ற பெயர் கொண்ட ஒரு மகாயக்ஷன் இருந்தான்.
அவனுக்குக் குழந்தைகள் இருக்கவில்லை. நன்னடத்தையுள்ள அவன் மிகவும் தீவிரமாகத் தவம்
இருந்தான்.
ராமா! அவனுடைய தவத்தால்
மிகவும் மகிழ்ந்த பிரம்மதேவர், அந்த யக்ஷராஜனுக்குத் தாடகை என்ற பெயருள்ள மணி
போன்ற புதல்வியை வரமாக அளித்தார்.
மிகுந்த புகழ்
பெற்றபிதாமகரான பிரம்ம தேவர், ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட புதல்வியை அவனுக்கு அளித்தாரேயன்றிப்
புதல்வர்களை அளிக்கவில்லை.
(ஸுகேது)அவள் வளர்ந்து,
அழகும் இளமையும் சேர்ந்து ஒளிர்ந்து கொண்டிருந்த போது, ஜர்ஜனின்புதல்வனாகிய
சுந்தனுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்தான்.
சிறிது காலத்துக்குப்
பிறகு, அந்த யக்ஷி, யாராலும் தாக்கப் படமுடியாத, மாரீசன் என்ற ஒரு மகனைப்
பெற்றாள். ஆனால், ஒரு சாபத்தின் விளைவாக அவன் ராக்ஷஸனாக மாறிவிட்டான்.
சுந்தன் இறந்த பிறகு,
தாடகை, தன் மகன் மாரீசனுடன் சேர்ந்து, ரிஷிகளுள் சிறந்தவரான அகஸ்தியரைத் தாக்க
விரும்பினாள்.
அகஸ்தியரை நோக்கிக்
கர்ஜித்துக்கொண்டே அவரை உண்பதற்காகத் தாடகை பாய்ந்தாள். அதைக்கண்ட அகஸ்தியர்,
அவளுடைய மகன் மாரீசனை ராக்ஷஸனாகும் படி சபித்தார்.
इदं रूपं विहायाथ दारुणं रूपमस्तु ते।।1.25.12।।
மிகுந்த கோபம் கொண்ட
அகஸ்தியர் தாடகையையும் “இந்த யக்ஷிணியின் வடிவத்தைத் துறந்து, பயங்கரமான உருவத்துடனும், அருவருப்பான
முகத்துடனும், நரமாமிசம் உண்ணும் ராக்ஷஸியாக மாறுவாய்’ என்று சபித்தார்.
அந்த சாபத்தால் மிகவும்
கோபமுற்ற தாடகை, மதியிழந்து, அகஸ்தியர் நடமாடிய இந்தப் புனிதபூமியைப் பாழாக்கிக்
கொண்டிருக்கிறாள்.
ராமா! தீய நடவடிக்கைகள்
கொண்ட, குரூரமான, மிகுந்த கெடுதல் செய்யும் சக்தி கொண்ட இந்த யக்ஷியை,
அந்தணர்களையும், பசுக்களையும் காக்கும் பொருட்டு வதம் செய்வாய்.
ரகு நந்தனனே!
சாபத்திற்குட்பட்ட இந்த யக்ஷிணியைக் கொல்ல, இந்த மூவுலகிலும், உன்னைத் தவிர
யாராலும் முடியாது.
நரோத்தமனே! ஒரு
பெண்ணைக்கொல்வதா என்று நீ தயங்க வேண்டாம். ஒரு அரசகுமாரனான உனக்கு, நால்வகை
வர்ணத்தவரையும் பாதுகாக்கும் கடமை இருக்கிறது.
ஒரு செயல், கொடுமையானதாயினும்,
நன்மை பயப்பதாயினும், பாவம் நிறைந்ததாயினும், தவறேயாயினும், தர்மவானான ஒரு அரசன், பிரஜைகளைக்
காப்பதன் பொருட்டு, அதைச் செய்தே ஆகவேண்டும்.
ராஜ்ஜிய பாரத்தைச்
சுமப்பவர்கள் எப்போதும் நிறைவேற்ற வேண்டிய தர்மம் இது தான். காகுஸ்தனே! அவளைக்
கொன்று விடு. அவளுக்குத் தர்மம் என்பதே கிடையாது.
அரசகுமாரனே! முன்பு ஒரு
முறை, இந்தப் பூமியை அழிக்க முயன்ற விரோசனனின் மகளாகிய மந்தரை என்பளை இந்திரன்
கொன்றார் என்று கேட்டிருக்கிறோம்.
அதே போல், முன்
காலத்தில், சுக்கிராச்சாரியாரின் தாயும், ப்ருகு ரிஷியின் மனைவியும் ஆன காவ்யா,
இந்திரனை அழிக்க விரதம் பூண்டிருந்ததால், விஷ்ணு அவளை அழித்தார்.
அரச குமாரனே! இவ்வாறு
மகாத்மாக்களாலும், சிறந்த மனிதர்களாலும், தர்மத்துக்கு விரோதமான பெண்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment