ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 26
(ராமன் தாடகையை வதம் செய்தல்)
मुनेर्वचनमक्लीबं
श्रुत्वा नरवरात्मज:।
राघव: प्राञ्जलिर्भूत्वा प्रत्युवाच दृढव्रत:।।1.26.1।।
மனிதருள் சிறந்த
தசரதரின் புதல்வனும், தன்னுடைய விரதத்தில் திடமாக இருப்பவனுமான ராமன் , உறுதி
மிகுந்த விஸ்வாமித்திரரின் வார்த்தைகளைக் கேட்டுக் கைகளைக் கூப்பிக்கொண்டு பதில்
கூறினான்.
पितुर्वचननिर्देशात्पितुर्वचनगौरवात्।
वचनं कौशिकस्येति कर्तव्यमविशङ्कया।।1.26.2।।
“எனது தந்தையாரின்
ஆணைக்குக் கீழ்ப்படியும் விதமாகவும், அவருடைய வார்த்தைகளுக்குக் கௌரவம் அளிக்கும்
விதமாகவும், கௌசிகராகிய தங்களுடைய வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டும், எந்தத்
தயக்கமும் இன்றி, இந்தக் காரியம் செய்யப்படவேண்டும்.
.
अनुशिष्टोऽस्म्ययोध्यायां
गुरुमध्ये महात्मना।
पित्रा दशरथेनाहं नावज्ञेयं हि तद्वच:।।1.26.3।।
அயோத்தியில், பெரியோர்களுக்கும்,
குருமார்களுக்கும் மத்தியில் மகாத்மாவான
என் தந்தையார் தங்கள் சொற்கேட்டு நடக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.
அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கமுடியாது.
सोऽहं
पितुर्वचश्श्रुत्वा शासनाद्ब्रह्मवादिन:।
करिष्यामि न सन्देहस्ताटकावधमुत्तमम्।।1.26.4।।
எனது தந்தையாரின்
சொற்படியும், வேதங்களையுணர்ந்த விஸ்வாமித்திரரின் ஆணைப்படியும், தாடகையின் வதம்
என்னும் உத்தமமான காரியத்தை சந்தேகமில்லாமல் நிறைவேற்றுவேன்.
गोब्राह्मणहितार्थाय
देशस्यास्य सुखाय च।
तव चैवाप्रमेयस्य वचनं कर्तुमुद्यत:।।1.26.5।।
பசுக்களையும்
அந்தணர்களையும் பாதுகாப்பதற்காகவும், இந்த
நாட்டு மக்களின் நன்மைக்காகவும், எல்லையற்ற ஆற்றல் மிகுந்த தங்கள் ஆணைப்படி
நடக்கச் சித்தமாக உள்ளேன்.”
एवमुक्त्वा धनुर्मध्ये
बध्वा मुष्टिमरिन्दम:।
ज्याशब्दमकरोत्तीव्रं दिशश्शब्देन नादयन्।।1.26.6।।
எதிரிகளை அடக்கும்
ராமன் இவ்வாறு சொல்லி, வில்லை அதன் மத்தியில் முஷ்டியால் உறுதியாகப் பிடித்து,
நாணேற்றி, எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்கும் படியாக ஓசை எழுப்பினார்.
तेन शब्देन वित्रस्तास्ताटकावनवासिन:।
ताटका च सुसंक्रुद्धा तेन शब्देन मोहिता।।1.26.7।।
தாடகையின் வனத்தில்
வசித்த அனைத்து உயிர்களும், அந்த ஒலியைக்கேட்டு அச்சம் கொண்டன. தாடகை அதைக் கேட்டு
ஆச்சரியமும், கோபமும் அடைந்தாள்.
तं शब्दमभिनिध्याय
राक्षसी क्रोधमूर्छिता।
श्रुत्वा चाभ्यद्रवद्वेगाद्यतश्शब्दो विनिस्सृत:।।1.26.8।।
அந்த ஒலியைக்கேட்ட அந்த ராக்ஷஸி, சிறிது நேரம் யோசித்து விட்டு,
அது வந்த திக்கை நோக்கிக் கண்மூடித்தனமான கோபத்துடன் பாய்ந்தாள்.
तां दृष्ट्वा राघव:
क्रुद्धां विकृतां विकृताननाम्।
प्रमाणेनातिवृद्धां च लक्ष्मणं सोऽभ्यभाषत।।1.26.9।।
மிகுந்த
கோபமுடையவளாகவும், கோரமான வடிவமும், கோரமான முகமும் உடையவளாகவும், மிகப்பெரிய
உயரத்துடனும், உடலுடனும் இருந்த அவளைக் (தாடகையைக்) கண்ட ராமன் லக்ஷ்மணனை நோக்கி
இவ்வாறு கூறினான்:
पश्य लक्ष्मण यक्षिण्या
भैरवं दारुणं वपु:।
भिद्येरन् दर्शनादस्या भीरूणां हृदयानि च।।1.26.10।।
“லக்ஷ்மணா! இந்த
பயங்கரமான, கோர வடிவம் கொண்ட யக்ஷிணியைப் பார். பயந்த சுபாவமுள்ளவர்கள் இவளைப்
பார்த்தாலே, அவர்களுடைய நெஞ்சம் பிளந்து
விடும்.
एनां पश्य दुराधर्षां
मायाबलसमन्विताम्।
विनिवृत्तां करोम्यद्य हृतकर्णाग्रनासिकाम्।।1.26.11।।
யாராலும் தாக்க
முடியாத, மாயாசக்தி கொண்ட இவளுடைய காதுகளையும், மூக்கு நுனியையும் அறுத்து, இவளைத்
திரும்பிப் போகச் செய்கிறேன், பார்!
न ह्येनामुत्सहे हन्तुं
स्त्रीस्वभावेन रक्षिताम्।
वीर्यं चास्यां गतिं चापि हनिष्यामीति मे मति:।।1.26.12।।
இவள் பெண்ணாகையால்,
பாதுகாக்கப்பட வேண்டியவள். இவளைக்கொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. இவளுடைய
ஆற்றலை அழித்து, இவளை நடமாட முடியாமல் செய்து விட நினைக்கிறேன்.”
एवं ब्रुवाणे रामे तु
ताटका क्रोधमूर्छिता।
उद्यम्य बाहू गर्जन्ती राममेवाभ्यधावत।।1.26.13।।
ராமன் இவ்வாறு
பேசிக்கொண்டிருக்கும் போதே, கோபம் தலைக்கேறியவளாய்த் தாடகை தன் இரண்டு கைகளையும்
தூக்கிக் கொண்டு, கர்ஜித்துக் கொண்டே அவனை நோக்கி ஓடி வந்தாள்.
विश्वामित्रस्तु
ब्रह्मर्षिर्हुङ्कारेणाभिभर्त्स्यताम्।
स्वस्ति राघवयोरस्तु जयं चैवाभ्यभाषत।।1.26.14।।
பிரம்மரிஷி
விஸ்வாமித்திரர் அவளை நோக்கிக் கோபத்துடன் ஹூங்காரம் செய்து, ராம லக்ஷ்மணர்களைப்
பார்த்து, “உங்களுக்கு மங்களமும் வெற்றியும் உண்டாகட்டும்” என்று வாழ்த்தினார்.
उद्धून्वाना रजो घोरं
ताटका राघवावुभौ।
रजोमोहेन महता मुहूर्तं सा व्यमोहयत्।।1.26.15।।
அந்தத் தாடகை பயங்கரமான
புழுதிப் புயலை உண்டாக்கி சிறிது நேரம் ராமலக்ஷ்மணர்களுக்கு எதுவுமே புலப்படாதவாறு
செய்தாள்.
ततो मायां समास्थाय
शिलावर्षेण राघवौ।
अवाकिरत्सुमहता ततश्चुक्रोध राघव:।।1.26.16।।
பின்னர், தன் மாயா
சக்தியை உபயோகித்து ராம லக்ஷ்மணர்கள் மேல் கல்மழை பொழிவித்தாள். அப்போது ராமனுக்கு
அவள் மேல் மிகுந்த கோபம் வந்தது.
शिलावर्षं महत्तस्याश्शरवर्षेण
राघव:।
प्रतिहत्योपधावन्त्या: करौ चिच्छेद पत्रिभि: ।।1.26.17।।
அந்தப் பெரிய கல்மழையைத்
தனது அம்பு மழையால் எதிர்கொண்ட ராகவன், தன்னை நோக்கி முன்னேறி வந்த அவளுடைய
கைகளிரண்டையும், தன் அம்புகளால் துணித்து எறிந்தான்.
ततश्छिन्नभुजां
श्रान्तामभ्याशे परिगर्जतीम्।
सौमित्रिरकरोत्क्रोधाद्धृतकर्णाग्रनासिकाम्।।1.26.18।।
கைகளை இழந்து அவள்
களைப்புற்று, கர்ஜித்துக் கொண்டிருந்த போது, லக்ஷ்மணன் அவளுடைய காதுகளையும்,
மூக்கு நுனியையும் தன் அம்புகளால் வெட்டி வீழ்த்தினான்.
कामरूपधरा सद्य: कृत्वा
रूपाण्यनेकश: ।
अन्तर्धानं गता यक्षी मोहयन्तीव मायया ।।1.26.19।।
अश्मवर्षं विमुञ्चन्ती भैरवं विचचार ह ।
நினைத்த வடிவம்
எடுக்கும் ஆற்றல் கொண்ட அந்த யக்ஷிணி, சிறிது நேரம் கண்ணில் இருந்து மறைந்து
விட்டாள். பிறகு பலவிதமான வடிவங்கள் எடுத்துக்கொண்டு ராமலக்ஷ்மணர்கள் மேல் பாறைகளை
மலை போலப் பொழியலனாள்.
ततस्तावश्मवर्षेण
कीर्यमाणौ समन्तत:।।1.26.20।।
दृष्ट्वा गाधिसुतश्श्रीमानिदं वचनमब्रवीत्।
எல்லப் பக்கங்களிலும்,
பாறைகளால் தாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட
ராமலக்ஷ்மணர்களைப் பார்த்து, காதியின் புதல்வராகிய விஸ்வாமித்திரர்
கூறினார்:
अलं ते घृणया राम
पापैषा दुष्टचारिणी।।1.26.21।।
यज्ञविघ्नकरी यक्षी पुरावर्धति मायया।
“ராமா!
(பெண்ணைக்கொல்லக்கூடாது என்ற) அருவருப்பால் நீ தாமதித்தது போதும். பாவம் நிறைந்தவளும், துஷ்ட சுபாவமுடையவளும்,
யக்ஞங்களுக்கு இடைஞ்சல் உண்டாக்குபவளும் ஆன இந்த யக்ஷி, தன் மாய சக்தியால் இழந்த
சக்தியை மீண்டும் பெற்று விடுவாள்.
वध्यतां तावदेवैषा पुरा
सन्ध्या प्रवर्तते।।1.26.22।।
रक्षांसि सन्ध्याकालेषु दुर्धर्षाणि भवन्ति वै।
மாலை நேரம்
நெருங்குகிறது. அதற்குள் அவளைக் கொன்று விடு. மாலை ஆகி விட்டால் ராக்ஷஸர்கள் அதிக
பலம் பெற்றுக் கொல்ல முடியாதவர்கள் ஆகிவிடுவார்கள்.
इत्युक्तस्तु तदा यक्षी अश्मवृष्ट्याभिवर्षतीम्।।1.26.23।।
दर्शयन् शब्दवेधित्वं तां रुरोध स सायकै:।
இவ்வாறு
விஸ்வாமித்திரர் கூறியதும், ‘சப்தபேதி’ என்னும் முறையைப் பயன்படுத்தி அவள் பாறை
மழை பெய்யும் ஒலி வரும் இடத்தை நோக்கி அம்புகளைப் பாய்ச்சி, ராமன் அவளைத்
தடுத்தான்.
सा रुद्धा शरजालेन
मायाबलसमन्विता।।1.26.24।।
अभिदुद्राव काकुत्स्थं लक्ष्मणं च विनेदुषी।
அம்பு மழையால் தடுக்கப்
பட்ட அவள் தன் மாயா சக்தியை உபயோகித்து, ராம லக்ஷ்மணர்களை நோக்கிக் கர்ஜித்துக்
கொண்டே முன்னேறினாள்.
तामापतन्तीं वेगेन
विक्रान्तामशनीमिव।।1.26.25।।
शरेणोरसि विव्याथ सा पपात ममार च।
இடியைப் போல பலத்துடனும்,
வேகமாகவும் தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் தாடகையின் மார்பை ராமன் அம்பினால் துளைத்தான்.
அவளும் கீழே விழுந்து இறந்தாள்.
तां हतां भीमसङ्काशां
दृष्ट्वा सुरपतिस्तदा।।1.26.26।।
साधु साध्विति काकुत्स्थं सुराश्च समपूजयन्।
பயங்கரமான உருவம் கொண்ட
அந்த யக்ஷிணி இவ்வாறு கொல்லப் பட்டதைக் கண்ட தேவேந்திரன் முதலானோர் ராமனை
வாழ்த்தி, “ நன்று! நன்று!” என்று பாராட்டினர்.
उवाच परमप्रीत
स्सहस्राक्ष: पुरन्दर:।।1.26.27।।
सुराश्च सर्वे संहृष्टा विश्वामित्रमथाब्रुवन्।
பின்னர், மிகவும்
மகிழ்ந்த ஆயிரம் கண்ணுடைய இந்திரனும் மற்ற தேவர்களும், விஸ்வாமித்திரரிடம் இவ்வாறு
கூறினர்:
मुने कौशिक भद्रं ते
सेन्द्रास्सर्वे मरुद्गणा:।।1.26.28।।
तोषिता: कर्मणाऽनेन स्नेहं दर्शय राघवे।
“கௌசிக முனிவரே!
தங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்! தேவர்கள் அனைவரும் ராமனுடைய இந்தச் செய்கையால்
மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். ராகவனுக்கு எங்களுடைய் அன்பு
உரித்தாகுக!”
प्रजापतेर्भृशाश्वस्य
पुत्रान् सत्यपराक्रमान्।।1.26.29।।
तपोबलभृतो ब्रह्मन् राघवाय निवेदय।
பிரம்மரிஷியே! தாங்கள்
பிரஜாபதி ப்ரிஷாஸ்வருடைய புதல்வர்களாகக் கருதப்படும், சத்ய பராக்கிரமும்,
தபோபலமும் உடைய அஸ்திரங்களை, ராகவனுக்குக் கொடுத்தருளுங்கள்.
पात्रभूतश्च ते
ब्रह्मंस्तवानुगमने धृत:।।1.26.30।।
कर्तव्यं च महत्कर्म सुराणां राजसूनुना।
பிரம்மரிஷியே! உறுதியான உள்ளத்துடன் தங்களைப் பின் தொடரும் ராமன் இந்த
அஸ்திரங்களைப் பெறுவதற்குத் தகுதி ஆனவன். அரச குமாரனான அவன் இன்னும் இதைப் போன்ற
பல மகத்தான காரியங்களைத் தேவர்களின் நன்மைக்காகச் செய்ய வேண்டியிருக்கிறது.
एवमुक्त्वा सुरास्सर्वे
हृष्टा जग्मुर्यथागतम्।।1.26.31।।
विश्वामित्रं पुरस्कृत्य ततस्सन्ध्या प्रवर्तते।
இந்த வார்த்தைகளைக்
கூறிவிட்டு, விஸ்வாமித்திரருக்கு மரியாதை செய்த பின்னர், தேவர்கள் தங்கள்
இடத்துக்குத் திரும்பினர். மாலையும் வந்தது.
ततो मुनिवर:
प्रीतस्ताटकावधतोषित:।।1.26.32।।
मूर्ध्नि राममुपाघ्राय इदं वचनमब्रवीत्।
பின்னர்,
தவஸ்ரேஷ்டராகிய விஸ்வாமித்திரர், தாடகையின் வதத்தால் மகிழ்ந்து, ராமனை அன்புடன்
உச்சி முகந்து இந்த வார்த்தைகளைக் கூறினார்:
इहाद्य रजनीं राम वसेम
शुभदर्शन।।1.26.33।।
श्व: प्रभाते गमिष्यामस्तदाश्रमपदं मम।
“மங்களகரமான ராமனே!
இன்றிரவை இங்கேயே கழிப்போம். நாளைக் காலை என்னுடைய ஆசிரமத்துக்குப் புறப்படுவோம்.”
विश्वामित्रवच:
श्रुत्वा हृष्टो दशरथात्मज:।।1.26.34।।
उवास रजनीं तत्र ताटकाया वने सुखम्।
விஸ்வாமித்திரரின் இந்த
வார்த்தைகளைக் கேட்ட ராமன் மிகவும் மகிழ்ந்து, தாடகையின் வனத்தில் அன்றிரவு சுகமாக
ஓய்வெடுத்தான்.
मुक्तशापं वनं तच्च
तस्मिन्नेव तदाहनि।।1.26.35।।
रमणीयं विबभ्राज यथा चैत्ररथं वनम्।
சாபத்திலிருந்து
விடுபட்ட அந்த வனம் அன்றே, குபேரனின் உத்யானவனமாகிய சித்ர ரதம் போல், அழகாகவும்,
மனத்தைக் கவரும் விதமாகவும் பிரகாசித்தது.
निहत्य तां यक्षसुतां स
राम:
प्रशस्यमानस्सुरसिद्धसङ्घै:।
उवास तस्मिन्मुनिना सहैव
प्रभातवेलां प्रतिबोध्यमान:।।1.26.36।।
யக்ஷனின் மகளாகிய
தாடகையைக் கொன்ற ராமன் தேவகணங்களாலும், சித்தர்களாலும் புகழப்பட்டு, அந்த வனத்தில்
ரிஷியுடன் தங்கினான். அதிகாலை உதயமானதும், விஸ்வாமித்திரர் அவனை எழுப்பினார்.
इत्यार्षे
श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे षड्विंशस्सर्ग:।।7
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் இருபத்தாறாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment