ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 29
( விஸ்வாமித்திரன்
சித்தாசிரமத்தின் கதையைக்கூறுகிறார். அனத்து ரிஷிகளும் அவரை வணங்குகிறார்கள்.)
अथ तस्याप्रमेयस्य तद्वनं परिपृच्छत:।
विश्वामित्रो महातेजा व्याख्यातुमुपचक्रमे।।1.29.1।।
அளவிடமுடியாத ஆற்றல்
மிகுந்த ராமன் இவ்வாறு கேட்டதும், ஒளி மிகுந்த விஸ்வாமித்திரர் விளக்கத்
தொடங்கினார்.
इह राम महाबाहो
विष्णुर्देववर: प्रभु:।
वर्षाणि सुबहूनीह तथा युगशतानि च।।1.29.2।।
तपश्चरणयोगार्थमुवास सुमहातपा:।
வலிமையான கரங்கள் உடைய
ராமா! தேவர்களுள் சிறந்தவரும், சிறந்த தபஸ்வியும் ஆன பிரபு விஷ்ணு,
நூற்றுக்கணக்கான யுகங்கள் இங்கு தவம் செய்து கொண்டு வசித்து வந்தார்.
एष पूर्वाश्रमो राम
वामनस्य महात्मन:।।1.29.3।।
सिद्धाश्रम इति ख्यातस्सिद्धो ह्यत्र महातपा:।
ராமா! இந்த ஆசிரமம்
முன்பு வாமனருடைய ஆசிரமாகவும் இருந்தது. இங்கே தவம் செய்து தவமுனிவர்கள் சித்தி
அடைந்திருக்கிறார்கள். ஆகவே, இது ‘சித்தாஸ்ரமம்’ என்று அழைக்கப்படுகிறது.
एतस्मिन्नेव काले तु
राजा वैरोचनिर्बलि:।।1.29.4।।
निर्जित्य दैवतगणान् सेन्द्रांश्च समरुद्गणान्।
कारयामास तद्राज्यं त्रिषु लोकेषु विश्रुत:।।1.29.5।।
அந்த சமயத்தில், விரோசனனின் புதல்வனான மகாபலியானவன், இந்திரன், மருதர்கள் மற்றும்
தேவர்களைத் தோற்கடித்து மூன்று உலகத்திலும் புகழ் பெற்று அரசாண்டு வந்தான்.
बलेस्तु यजमानस्य
देवास्साग्निपुरोगमा:।
समागम्य स्वयं चैव विष्णुमूचुरिहाश्रमे।।1.29.6।।
அந்த பலியானவன், ஒரு
யாகம் செய்து கொண்டிருந்த போது, தேவர்கள் அனைவரும், தாங்களே விஷ்ணுவை நாடிவந்து, அக்கினியை
முன் நிறுத்தி, இவ்வாறு கூறினார்கள்.
बलिर्वैरोचनिर्विष्णो यजते यज्ञमुत्तमम्।
असमाप्ते क्रतौ तस्मिन् स्वकार्यमभिपद्यताम्।।1.29.7।।
“விஷ்ணுவே! விரோசனனின் மகன்
ஒரு பெரிய யாகம் செய்து கொண்டிருக்கிறான். அது முழுமையடைவதற்கு முன், எங்களுடைய
குறிக்கோள் நிறைவேற வேண்டும்.”
ये चैनमभिवर्तन्ते
याचितार इतस्तत:।
यच्च यत्र यथावच्च सर्वं तेभ्य: प्रयच्छति।।1.29.8।।
அவன் தன்னை நாடி வந்து
யாசிப்பவர்களுக்கு, எதைக் கேட்டாலும், எப்படிக் கேட்டாலும், கொடுக்கிறான்.
स त्वं सुरहितार्थाय
मायायोगमुपागत:।
वामनत्वं गतो विष्णो कुरु कल्याणमुत्तमम्।।1.29.9।।
விஷ்ணுவே! தாங்கள்,
தேவர்களுடைய நன்மைக்காக, மாயாசக்தியால், வாமனனாக உருவெடுத்துக்கொண்டு, இந்த
மங்களகரமான செயலைச் செய்யவேண்டும்.
एतस्मिन्नन्तरे राम कश्यपोऽग्निसमप्रभ:।
अदित्या सहितो राम दीप्यमान इवौजसा।।1.29.10।।
देवीसहायो भगवान् दिव्यं वर्षसहस्रकम् ।
व्रतं समाप्य वरदं तुष्टाव मधुसूदनम्।।1.29.11।।
அந்த சமயத்தில்,
அக்கினியைப் போல ஒளி வீசிக்கொண்டிருக்கும் கஷ்யபர், தன் மனைவி அதிதியுடன் ஆயிரம்
ஆண்டுகள் தெய்வீகமான தவம் செய்து, வரங்களை அள்ளி வழங்கும் மதுசூதனனாகிய விஷ்ணுவை
மகிழ்வித்து, அவரிடம் கூறினார்:
तपोमयं तपोराशिं
तपोमूर्तिं तपात्मकम्।
तपसा त्वां सुतप्तेन पश्यामि पुरुषोत्तमम्।।1.29.12।।
“உடலெல்லாம் தவமாக,
தவத்தின் குவியல் போன்ற, தவத்துக்கு ஒரு உருவம் கொடுத்தாற்போல, தவத்தினாலேயே ஆகிய
புருஷோத்தமனே! நான் செய்த நற்றவப் பயனாய்த் தங்களைத் தரிசிக்கின்றேன்.
शरीरे तव पश्यामि
जगत्सर्वमिदं प्रभो।
त्वमनादिरनिर्देश्यस्त्वामहं शरणं गत:।।1.29.13।।
ப்ரபோ! தங்களுடைய
உடலுக்குள் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் காண்கிறேன். தாங்கள் தொடக்கமற்றவர்;
இன்னதென்று வர்ணிக்கமுடியாதவர். தங்களையே சரணடைகிறேன்.
तमुवाच हरि: प्रीत:
कश्यपं धूतकल्मषम्।
वरं वरय भद्रं ते वरार्होऽसि मतो मम ।।1.29.14।।
குற்றங்கள் அனைத்தும்
நீக்கப்பட்டுத் தவத்தால் புனிதமான கஷ்யபரைப் பார்த்து விஷ்ணு அவரிடம் கூறினார்:
“உங்களுக்கு நன்மையுண்டாகட்டும்!
நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர். வரம் கேட்கத் தகுதி படைத்தவர். வேண்டிய
வரத்தைக் கேளுங்கள்.”
तच्छ्रुत्वा वचनं तस्य
मारीच: कश्यपोऽब्रवीत्।
अदित्या देवतानां च मम चैवानुयाचत:।।1.29.15।।
वरं वरद सुप्रीतो दातुमर्हसि सुव्रत।
விஷ்ணுவின் இந்த
வார்த்தைகளைக்கேட்ட மரீசி குமாரனான கஷ்யபர் கூறினார்: “ வரங்களைத் தருபவரே!
விரதத்தில் திடமானவரே! அதிதிக்காகவும், தேவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்கவும்,
எனக்காகவும், ஒரு வரம் தாருங்கள்.”
पुत्रत्वं गच्छ भगवन्नदित्या
मम चानघ।।1.29.16।।
भ्राता भव यवीयांस्त्वं शक्रस्यासुरसूदन ।
शोकार्तानां तु देवानां साहाय्यं कर्तुमर्हसि।।1.29.17।।
பாவங்களற்ற பகவானே!
அசுரர்களை அழிப்பவரே! எனக்கும் அதிதிக்கும் மகனாகப் பிறந்து, இந்திரனின்
தம்பியாகி, துயரத்தில் இருக்கும் தேவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
अयं सिद्धाश्रमो नाम
प्रसादा त्ते भविष्यति।
सिद्धे कर्मणि देवेश उत्तिष्ठ भगवन्नित:।।1.29.18।।
தேவர்களின் தலைவரே!
தங்கள் அருளால், என்னுடைய தவம் சித்தி அடையப் போவதால், இந்த ஆஸ்ரமம்
‘சித்தாஸ்ரமம்’ என்ற பெயரை அடையும். பகவானே! இங்கிருந்து எழுந்திருங்கள்.”
अथ विष्णुर्महातेजा
अदित्यां समजायत।
वामनं रूपमास्थाय वैरोचनिमुपागमत्।।1.29.19।।
பின்னர், ஒளி மிகுந்த
விஷ்ணுவானவர், அதிதியின் கர்ப்பத்தில் இருந்து பிறந்தார். வாமனனாக உருவம்
எடுத்துக்கொண்டு, விரோசனனின் புதல்வனாகிய பலியை நோக்கிச் சென்றார்.
त्रीन् क्रमानथ
भिक्षित्वा प्रतिगृह्य च मानद:।
आक्रम्य लोकान् लोकात्मा सर्वभूतहिते रत:।।1.29.20।।
महेन्द्राय पुन: प्रादान्नियम्य बलिमोजसा।
त्रैलोक्यं स महातेजाश्चक्रे शक्रवशं पुन:।।1.29.21।।
பின்னர், இந்தப்
பிரபஞ்சத்தின் ஆத்மாவாவும், அனைவருக்கும் கௌரவம் வழங்குபவரும் ஆகிய விஷ்ணு,
அனைத்து உயிர்களின் நன்மைக்காக, பலியிடம், மூன்றடி நிலம் வேண்டிப் பெற்று, இந்த
உலகங்களையெல்லாம் ஆக்கிரமித்து, பலியைத் தன் சக்தியால் அடக்கி, மீண்டும் இந்த
மூவுலகங்களின் தலைமையையும் தேவேந்திரனுக்குக் கொடுத்தார்.
तेनैष पूर्वमाक्रान्त
आश्रमश्श्रमनाशन:।
मयापि भक्तय तस्यैष वामनस्योपभुज्यते।।1.29.22।।
சிரமங்களைப்
போக்கக்கூடிய இந்த ஆஸ்ரமம் முதலில் வாமனருக்குச் சொந்தமாக இருந்தது. அந்த வாமனர்
மீது இருக்கும் பக்தியால், நான் இங்கு வசித்து வருகிறேன்.
एतमाश्रममायान्ति राक्षसा विघ्नकारिण:।
अत्रैव पुरुषव्याघ्र हन्तव्या दुष्टचारिण:।।1.29.23।।
மனிதருள் சிறந்தவனே!
கொடிய ராக்ஷஸர்கள் இங்கு வந்து வேள்விகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கிறார்கள். நீ
அவர்களை இங்கு தான் கொல்ல வேண்டும்.
अद्य गच्छामहे राम
सिद्धाश्रममनुत्तमम्।
तदाश्रमपदं तात तवाप्येतद्यथा मम।।1.29.24।।
ராமனே! இப்போது நாம்
அந்த உத்தமமான சித்தாஸ்ரமத்துக்குச் செல்லலாம். குழந்தாய்! இந்த ஆஸ்ரமம் எப்படி
என்னுடையதோ, அப்படியே, உன்னுடையதும் ஆகும்.
(இதை உன்னுடையது போல்
நினைத்துக்கொள்.)
प्रविशन्नाश्रमपदं
व्यरोचत महामुनि:।
शशीव गतनीहार:
पुनर्वसुसमन्वित:।।1.29.25।।
ராம லக்ஷ்மணர்களுடன்
ஆஸ்ரமத்துக்குள் நுழைந்த விஸ்வாமித்திரர், பனி விலகிய பின், புனர்வசு
நக்ஷத்திரத்துடன் கூடிய சந்திரன் ஒளிர்வதைப் போல் ஒளிர்ந்தார்.
तं दृष्ट्वा
मुनयस्सर्वे सिद्धाश्रमनिवासिन:।
उत्पत्त्योत्पत्त्य सहसा विश्वामित्रमपूजयन्।।1.29.26।।
அந்த ஆஸ்ரமத்தில்
இருந்த தபஸ்விகள், விஸ்வாமித்திரரைக் கண்டவுடன், குதித்தெழுந்து வந்து அவரை
வணங்கினார்கள்.
यथार्हं चक्रिरे पूजां
विश्वामित्राय धीमते।
तथैव राजपुत्राभ्यामकुर्वन्नतिथिक्रियाम्।।1.29.27।।
அவர்கள் அறிவாற்றல்
நிறைந்த விஸ்வாமித்திரருக்குத் தகுந்த வகையில் பூஜைகள் செய்தார்கள். அதே போல்,
அரசகுமாரர்களையும், அவர்களுக்கு ஏற்றபடி உபசரித்தார்கள்.
मुहूर्तमथ विश्रान्तौ
राजपुत्रावरिन्दमौ।
प्राञ्जली मुनिशार्दूलमूचतू रघुनन्दनौ।।1.29.28।।
ரகு வம்சத்தில் பிறந்த,
எதிரிகளை அழிக்கக்கூடிய அந்த இரண்டு அரசகுமாரர்களும், சிறிது நேரம் ஓய்வெடுத்த
பின்னர், கைகளைக் கூப்பிக்கொண்டு, முனிவருள் சிறந்த விஸ்வாமித்திரரிடம் இவ்வாறு
கூறினார்கள்:
अद्यैव दीक्षां प्रविश
भद्रं ते मुनिपुङ्गव।
सिद्धाश्रमोऽयं सिद्धस्स्यात् सत्यमस्तु वचस्तव।।1.29.29।।
“முனிபுங்கவரே! இன்றே தீக்ஷை
எடுத்துக்கொண்டு விடுங்கள். தங்களுக்கு நன்மை உண்டாகும். இந்த
சித்தாஸ்ரமத்துக்கும் சித்தி கிடைக்கும். தங்கள் வாக்கு உண்மையாகும்.
एवमुक्तो महातेजा
विश्वामित्रो महान् ऋषि: ।
प्रविवेश तदा दीक्षां नियतो नियतेन्द्रिय:।।1.29.30।।
அதைக் கேட்ட ஒளி
பொருந்திய விஸ்வாமித்திரர் முறைப்படி, தனது புலன்களை அடக்கிக் கொண்டு, தீக்ஷை
எடுத்துக் கொண்டார்.
कुमारावपि तां
रात्रिमुषित्वा सुसमाहितौ।
प्रभातकाले चोत्थाय पूर्वां सन्ध्यामुपास्य च।।1.29.31।।
स्पृष्टोदकौ शुची जप्यं समाप्य नियमेन च ।
हुताग्निहोत्रमासीनं विश्वामित्रमवन्दताम् ।।1.29.32।।
அரச குமாரர்களும் அந்த
இரவை நிம்மதியாகக் கழித்து விட்டு, விடியற்காலையில் எழுந்து, தண்ணீரைத் தொட்டுத் தங்களைத்
தூய்மைப் படுத்திக் கொண்டபின்னர், பூர்வா சந்த்யையில் செய்யவேண்டிய வந்தனைகளைச்
செய்து விட்டு, நியமப்படி ஜபங்களைச் செய்து முடித்து, புனிதமான அக்கினியின் முன்
அமர்ந்திருந்த விஸ்வாமித்திரரை வணங்கினார்கள்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकोनत्रिंशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் இருபத்தொன்பதாவது ஸர்க்கம்,
நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment