ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 30
(ராமன் ராக்ஷஸர்களைக் கொன்று
யாகத்தைப் பாதுகாக்கிறான்.)
अथ तौ देशकालज्ञौ राजापुत्रावरिन्दमौ।
देशे काले च वाक्यज्ञावब्रूतां कौशिकं वच:।।1.30.1।।
எதிரிகளை
வெல்லக்கூடியவர்களும், காலமறிந்து, இடமறிந்து, பொருத்தமாகப் பேசத்
தெரிந்தவர்களுமான அந்த அரச குமாரர்கள் விஸ்வாமித்திரரிடம் இவ்வாறு கூறினார்கள்.
भगवन् श्रोतुमिच्छावो
यस्मिन् काले निशाचरौ।
संरक्षणीयौ तौ ब्रह्मन्नातिवर्तेत तत्क्षणम्।।1.30.2।।
“வணக்கத்துக்குரிய
ப்ரம்மரிஷியே! அந்த இரண்டு ராக்ஷஸர்களும் எப்போது இங்கே வருவார்கள்? அந்த
நேரத்தைத் தவற விடாமல், வேள்வியைப் பாதுகாக்க வேண்டும்.”
एवं ब्रुवाणौ
काकुत्स्थौ त्वरमाणौ युयुत्सया।
सर्वे ते मुनय: प्रीता: प्रशशंसुर्नृपात्मजौ।।1.30.3।।
ராக்ஷஸர்களுடன்
போரிடும் ஆவலுடன், இவ்வாறு கூறிய காகுஸ்தர்களான அரசகுமாரர்களை, அங்கிருந்த
முனிவர்கள், மிகவும் அன்புடன் பாராட்டினார்கள்.
अद्यप्रभृति षड्रात्रं
रक्षतं राघवौ युवाम्।
दीक्षां गतो ह्येष मुनिर्मौनित्वं च गमिष्यति।।1.30.4।।
“ரகு வம்சத் தோன்றல்களே!இன்றிலிருந்து
ஆறு இரவுகள் நீங்கள் இந்த வேள்வியைப் பாதுகாக்க வேண்டும். தீக்ஷை எடுத்துக் கொண்டு
விட்டதால், விஸ்வாமித்திர மகரிஷி மௌனவிரதம் அனுஷ்டிக்கத் தொடங்கி விடுவார்.”
तौ तु तद्वचनं श्रुत्वा
राजपुत्रौ यशस्विनौ।
अनिद्रौ षडहोरात्रं तपोवनमरक्षताम्।।1.30.5।।
புகழ் பெற்ற அந்த அரச
குமாரர்கள், முனிவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு, ஆறு பகல்களும், ஆறு இரவுகளும்,
உறக்கம் இன்றி, வேள்வியைப் பாதுகாத்தனர்.
उपासाञ्चक्रतुर्वीरौ
यत्तौ परमधन्विनौ।
ररक्षतुर्मुनिवरं विश्वामित्रमरिन्दमौ।।1.30.6।।
எதிரிகளை அழிக்கும்
ஆற்றல் உள்ள அந்தச் சிறந்த வில் வீரர்கள், முனிஸ்ரேஷ்டரான விஸ்வாமித்திரரைக்
கவனமாகப் பாதுகாத்தார்கள்.
अथ काले गते तस्मिन्
षष्ठेऽहनि समागते।
सौमित्रिमब्रवीद्रामो यत्तो भव समाहित:।।1.30.7।।
இவ்வாறு நாட்கள்
கழிந்தன. ஆறாம் நாள், ராமன் லக்ஷ்மணனிடம், ‘தயாராக இரு’ என்று எச்சரித்தான்.
रामस्यैवं ब्रुवाणस्य
त्वरितस्य युयुत्सया।
प्रजज्वाल ततो वेदिस्सोपाध्यायपुरोहिता।।1.30.8।।
இவ்வாறு யுத்தம்
செய்யும் ஆவலுடன் ராமன் பேசிய போது, குருமார்களும், புனித மந்திரங்கள்
ஓதுபவர்களும் சூழ, அந்த வேள்விக்குண்டம், கொழுந்துவிட்டெரிந்தது.
सदर्भचमसस्रुक्का
ससमित्कुसुमोच्चया।
विश्वामित्रेण सहिता वेदिर्जज्वाल सर्त्विजा।।1.30.9।।
வேள்விச்சாலையானது,
விஸ்வாமித்திரருடனும், வேள்விக்காக அங்கே அமர்ந்திருக்கும் ரித்விக்குடளுடனும்,
(புரோகிதர்களுடனும்), தர்ப்பைப் புல், கரண்டிகள், பாத்திரங்கள், சமித்துக்கள்,
பூக்கள் ஆகியவற்றுடனும், ஜ்வலித்தது.
मन्त्रवच्च यथान्यायं
यज्ञोऽसौ सम्प्रवर्तते।
आकाशे च महान् शब्द: प्रादुरासीद्भयानक:।।1.30.10।।
இவ்வாறு அந்த
வேள்வியானது முறைப்படி, மந்திரங்களுடன் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பொழுது,
ஆகாயத்திலிருந்து அச்சமூட்டக்கூடிய ஒரு பெரிய ஒலி கிளம்பியது.
आवार्य गगनं मेघो यथा
प्रावृषि निर्गत:।
तथामायां विकुर्वाणौ राक्षसावभ्यधावताम्।।1.30.11।।
மழைக்காலத்து மேகங்கள்
போலத் தங்கள் மாயாசக்தியால், ஆகாயத்தை மறைத்துக்கொண்டு, மாரீசன், சுபாஹு என்னும்
அந்த இரு ராக்ஷஸர்கள் வேள்விச்சாலையை நோக்கி ஓடி வந்தனர்.
मारीचश्च सुबाहुश्च
तयोरनुचराश्च ये।
आगम्य भीमसङ्काशा रुधिरौघमवासृजन्।।1.30.12।।
மாரீசனும், சுபாஹுவும்,
அவர்களைப் பின் தொடர்ந்து வருபவர்களும் அங்கு வந்து வேள்விக்குண்டத்தில் ரத்த மாரி
பொழிந்தார்கள்.
सा तेन रुधिरौघेण
वेदिर्जज्वाल मण्डिता।
सहसाऽभिद्रुतो रामस्तानपश्य त्ततो दिवि।।1.30.13।।
ரத்தம் வேள்வித்தீயில்
விழுந்ததும், தீ மேலும் படபடத்து எரிந்தது. அதைக்கண்ட ராமன் முன்னே ஓடி வந்த போது,
ஆகாயத்தில் அவர்களைப் பார்த்தான்.
तावापतन्तौ सहसा
दृष्ट्वा राजीवलोचन:।
लक्ष्मणं त्वभिसम्प्रेक्ष्य रामो वचनमब्रवीत्।।1.30.14।।
தாமரைக்கண்ணனான ராமன்,
திடீரென்று அங்கு வந்த ராக்ஷஸர்களைப் ( மாரீசன், சுபாஹு) பார்த்தவுடன், லக்ஷ்மணனை
நோக்கி, இவ்வாறு கூறினான்.
पश्य लक्ष्मण
दुर्वृत्तान् राक्षसान् पिशिताशनान्।
मानवास्त्रसमाधूताननिलेन यथा घनान्।।1.30.15।।
“லக்ஷ்மணா! பார்!
மானவாஸ்திரத்தை உபயோகித்துக் காற்றானது மேகங்களைச் சிதற அடிப்பது போல், மனித
மாமிசத்தை உண்ணும் இந்த ராக்ஷஸர்களை நான் சிதற அடிக்கிறேன்.”
मानवं परमोदारमस्त्रं
परमभास्वरम्।
चिक्षेप परमक्रुद्धो मारीचोरसि राघव:।।1.30.16।।
கோபத்தில்
கொதித்தெழுந்த ராமன் மிகவும் சக்திவாய்ந்த, பிரகாசமான மானவாஸ்திரத்தை மாரீசனின்
மார்பை நோக்கிச் செலுத்தினான்.
स तेन परमास्त्रेण
मानवेन समाहित:।
संपूर्णं योजनशतं क्षिप्तस्सागरसम्प्लवे।।1.30.17।।
அந்தச் சக்தி வாய்ந்த
மானவாஸ்திரத்தால் தாக்கப்பட்ட மாரீசன் நூறு யோஜனை தூரம் தாண்டி, அலைவீசும்
கடலுக்குள் வீசியெறியப்பட்டான்.
विचेतनं विघूर्णन्तं
शीतेषु बलताडितम्।
निरस्तं दृश्य मारीचं रामो लक्ष्मणमब्रवीत्।।1.30.18।।
குளிர்ச்சி நிறைந்த
மானவாஸ்திரத்தால் பலமாகத் தாக்கப் பட்டுத் தன் சுய நினைவையிழந்து, வெகு தூரம்
வீசியெறியப்பட்ட மாரீசனைப் பார்த்த ராமன், லக்ஷ்மணனிடம் இவ்வாறு கூறினான்:
पश्य लक्ष्मण शीतेषुं
मानवं धर्मसंहितम्।
मोहयित्वा नयत्येनं न च प्राणैर्व्ययुज्यत।।1.30.19।।
“பார், லக்ஷ்மணா! குளிர்ச்சியான அம்புடன் கூடிய,
தர்மத்துக்குக் கட்டுப்பட்ட இந்த மானவாஸ்திரம், அவனை( மாரீசனை)
மயக்கத்துக்குட்படுத்தி, வெகுதூரம் தூக்கி எறிந்ததே தவிர, அவனுடைய உயிரைப்
பறிக்கவில்லை.
इमानपि वधिष्यामि निर्घृणान् दुष्टचारिण:।
राक्षसान् पापकर्मस्थान् यज्ञघ्नान् रुधिराशनान्।।1.30.20।।
இரக்கமற்ற, ரத்தவெறி
பிடித்த, பாவச்செயல்களைச் செய்யக்கூடிய, வேள்வியை நாசம் செய்யும் இந்த
ராக்ஷஸர்களைக் கொல்வேன்.”
सङ्गृह्यास्त्रं ततो
रामो दिव्यमाग्नेयमद्भुतम्।
सुबाहूरसि चिक्षेप सविद्ध: प्रापतद्भुवि।।1.30.21।।
பின்னர், தெய்வீகம்
நிறைந்த, அற்புதமான ஆக்னேயாஸ்திரத்தை ராமன் சுபாஹுவின் மார்பைக் குறி வைத்து
எறிந்தான். அதனால் தாக்கப்பட்ட சுபாஹு கீழே இறந்து விழுந்தான்.
शेषान् वायव्यमादाय
निजघान महायशा:।
राघव: परमोदारो मुनीनां मुदमावहन्।।1.30.22।।
பெரும்புகழ் பெற்ற,
நல்ல மனங்கொண்ட ராமன், முனிவர்கள் மனமகிழும் படி, வாயவ்யாஸ்திரத்தைக்கொண்டு மற்ற
ராக்ஷஸர்களையும் கொன்றான்.
स हत्वा राक्षसान्
सर्वान् यज्ञघ्नान् रघुनन्दन:।
ऋषिभि: पूजितस्तत्र यथेन्द्रो विजये पुरा।।1.30.23।।
வேள்விக்கு இடைஞ்சல்
செய்யும் ராக்ஷஸர்களையெல்லாம் கொன்று முடித்த பின்னர், முன்பு யுத்தத்தில் வெற்றி
பெற்ற இந்திரனைக் கௌரவித்தது போல, ரிஷிகள் எல்லாரும் ரகு நந்தனனாகிய ராமனைப்
பூஜித்தார்கள்.
अथ यज्ञे समाप्ते तु
विश्वामित्रो महामुनि:।
निरीतिका दिशो दृष्टवा काकुत्स्थमिदमब्रवीत्।।1.30.24।।
பிறகு, வேள்வி நல்லவிதமாக முழுமையடைந்தவுடன், எல்லா
திசைகளும், தீமைகளில் இருந்து விடுபட்டிருப்பதைக் கண்ட விஸ்வாமித்திரர் ராமனிடம்
கூறினார்:
कृतार्थोऽस्मि महाबाहो
कृतं गुरुवचस्त्वया।
सिद्धाश्रममिदं सत्यं कृतं राम महायश:।।1.30.25।।
“வலிமையான கரங்களுடைய
ராமனே! என் கடமையைச் செய்து முடித்து விட்டேன். உன் தந்தையாரின் ஆணையை நீ நிறைவேற்றி
விட்டாய்! புகழ் பெற்ற ராமனே! உன் செயலால் சித்தாஸ்ரமம், என்ற இந்த ஆஸ்ரமத்தின்
பெயர் உண்மையாகிவிட்டது. “
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे त्रिंशस्सर्ग:।।02
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் முப்பதாவது ஸர்க்கம், நிறைவு
பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment