ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 31
(இரண்டு அரச குமாரர்கள்
பின் தொடர், விஸ்வாமித்திரர் மிதிலையை நோக்கிச் செல்லும் போது வழியில் சோணை
நதிக்கரையில் தங்குகிறார்.)
अथ तां रजनीं तत्र कृतार्थौ रामलक्ष्मणौ।
ऊषतुर्मुदितौ वीरौ प्रहृष्टेनान्तरात्मना।।1.31.1।।
தங்கள் குறிக்கோளை
நிறைவேற்றிய வீரர்களான ராம லக்ஷ்மணர்கள், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அங்கே அந்த
இரவைக் கழித்தனர்.
प्रभातायां तु
शर्वर्यां कृतपौर्वाह्णिकक्रियौ।
विश्वामित्रमृषींश्चान्यान् सहितावभिजग्मतु:।।1.31.2।।
இரவு கழிந்து வைகறை
வந்ததும், காலையில் செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் முடித்து விட்டு, ராம
லக்ஷ்மணர்கள் விஸ்வாமித்திரரிடமும், மற்ற ரிஷிகளிடமும் சென்றார்கள்.
अभिवाद्य मुनिश्रेष्ठं ज्वलन्तमिव पावकम्।
ऊचतुर्मधुरोदारं वाक्यं मधुरभाषिणौ।।1.31.3।।
இனிமையாகப் பேசவல்ல
அந்த சகோதரர்கள், நெருப்பைப் போலப் பிரகாசித்துக்கொண்டிருந்த முனிஸ்ரேஷ்டரான விஸ்வாமித்திரை வணங்கி, இவ்வாறு மென்மையான
வார்த்தைகளைப் பேசலானார்கள்.
इमौ स्म मुनिशार्दूल
किङ्करौ समुपस्थितौ।
आज्ञापय यथेष्टं वै शासनं करवाव किम्।।1.31.4।।
“முனிவருள் சிறந்தவரே!
நாங்கள் இருவரும் தங்களுக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறோம். என்ன செய்ய
வேண்டும் என்று எங்களுக்கு ஆணையிடுங்கள். அதை உடனே செய்து முடிக்கிறோம்.”
एवमुक्ता स्ततस्ताभ्यां
सर्व एव महर्षय:।
विश्वामित्रं पुरस्कृत्य रामं वचनमब्रुवन्।।1.31.5।।
இவ்வாறு ராமலக்ஷ்மணர்கள்
கூறக்கேட்ட மகரிஷிகள், விஸ்வாமித்திரரை முன்னிருத்தி இவ்வாறு கூறினார்கள்.
मैथिलस्य नरश्रेष्ठ
जनकस्य भविष्यति।
यज्ञ: परमधर्मिष्ठस्तस्य यास्यामहे वयम्।।1.31.6।।
“மனிதருள்
சிறந்தவர்களே! மிதிலை அரசரும் , பரம தர்மிஷ்டரும் ஆகிய ஜனகர் ஒரு வேள்வி
செய்யப்போகிறார். நாம் அங்கே செல்வோம்.
त्वं चैव नरशार्दूल
सहास्माभिर्गमिष्यसि।
अद्भुतं धनुरत्नं च तत्र तद्रष्टुमर्हसि।।1.31.7।।
மனிதருள் புலி போன்றவனே!
நீயும் எங்களுடன் வரப்போகிறாய். அங்கே நீ நிச்சயம் பார்க்க வேண்டிய ஒருஅற்புதமான
ஒரு வில் இருக்கிறது.
तद्धि पूर्वं नरश्रेष्ठ
दत्तं सदसि दैवतै:।
अप्रमेयबलं घोरं मखे परमभास्वरम्।।1.31.8।।
மனிதருள் சிறந்தவனே!
அளவிடமுடியாத சக்தியுள்ள, பயத்தை உண்டாக்குகிற, மிகவும் பிரகாசமான அந்த வில்
முன்பு ஒரு வேள்வி நடக்கும் போது, சபையில் வைத்து, தேவர்களால் ஜனகருக்கு
வழங்கப்பட்டது.
नास्य देवा न गन्धर्वा नासुरा न च राक्षसा:।
कर्तुमारोपणं शक्ता न कथञ्चन मानुषा:।।1.31.9।।
தேவர்களாலோ, ,
கந்தர்வர்களாலோ, அசுரர்களாலோ, மனிதர்களாலோ, எவ்வாறாயினும் இந்த வில்லை வளைத்து
அதில் நாணேற்ற முடியாது.
धनुषस्तस्य वीर्यं तु
जिज्ञासन्तो महीक्षित:।
न शेकुरारोपयितुं राजपुत्रा महाबला:।।1.31.10।।
பல சக்திவாய்ந்த
அரசர்கள், எவ்வாறாயினும் இந்த வில்லிற்கு நாணேற்றி அதன் வீர்யத்தை அறிந்து கொள்ள
முயன்று, தோற்று விட்டனர்.
तद्धनुर्नरशार्दूल
मैथिलस्य महात्मन:।
तत्र द्रक्ष्यसि काकुत्स्थ यज्ञं चाद्भुतदर्शनम्।।1.31.11।।
மனிதருள் சிறந்தவனே!
ககுஸ்தவம்சத்தில் பிறந்தவனே! அங்கே, மகாத்மாவான மிதிலை மன்னருக்குச் சொந்தமான அந்த
வில்லையும், ஒரு அற்புதமான வேள்வியையும் பார்ப்பாய்.
तद्धि यज्ञफलं तेन
मैथिलेनोत्तमं धनु:।
याचितं नरशार्दूल सुनाभं सर्वदैवतै:।।1.31.12।।
உறுதியான நடுப்பாகம்
உடைய அந்த வில்லை , வேள்வியின் பலனாக, எல்லா தேவதைகளுடன் சேர்ந்து, மிதிலையின்
மன்னரான தேவரதர் , வேண்டிப் பெற்றார்.
आयागभूतं नृपतेस्तस्य
वेश्मनि राघव।
अर्चितं विविधैर्गन्धैर्धूपैश्चागरुगन्धिभि:।।1.31.13।।
ராமா! அந்த வில்
அரசனின் மாளிகையில் முக்கிய தேவதையாக வைக்கப்பட்டு, சந்தனத்தாலும், மணம் மிகுந்த
அகிலாலும், தூபங்களாலும், பூஜிக்கப்படுகிறது.”
एवमुक्त्वा मुनिवर:
प्रस्थानमकरोत्तदा।
सर्षिसङ्घ स्सकाकुत्स्थ: आमन्त्र्य वनदेवता:।।1.31.14।।
இவ்வாறு கூறி, மகரிஷி
விஸ்வாமித்திரர், வனதேவதைகளிடம் விடை பெற்றுக், காகுஸ்தர்களான
ராமலக்ஷ்மணர்களுடனும், பிற முனிவர்களுடனும், அங்கிருந்து புறப்பட்டார்.
स्वस्ति वोऽस्तु
गमिष्यामि सिद्वस्सिद्धाश्रमादहम्।
उत्तरे जाह्नवीतीरे हिमवन्तं शिलोच्चयम्।।1.31.15।।
“வன தேவதைகளே! நீங்கள்
பத்திரமாக இருங்கள். இந்த சித்தாஸ்ரமத்தில், எனது குறிக்கோள் நிறைவேறி விட்டது.
இங்கிருந்து, ஜான்ஹவியின் வடது புறம் உள்ள ஹிமவந்தம் என்னும் மலையை நோக்கிப்
போகிறேன்.”
प्रदक्षिणं तत: कृत्वा
सिद्धाश्रममनुत्तमम्।
उत्तरां दिशमुद्दिश्य प्रस्थातुमुपचक्रमे।।1.31.16।।
என்று கூறி, உத்தமமான
அந்த சித்தாஸ்ரமத்தை மரியாதையுடன் வலம் வந்து, விஸ்வாமித்திரரும்,
அரசகுமாரர்களும், வடக்கு நோக்கிப் பயணப்பட்டார்கள்.
तं प्रयान्तं
मुनिवरमन्वयादनुसारिणम्।
शकटीशतमात्रं तु प्रायेण ब्रह्मवादिनाम्।।1.31.17।।
தவஸ்ரேஷ்டரான
விஸ்வாமித்திரர் அங்கிருந்து பயணப்பட்ட போது, வேதங்கள் அறிந்த பலரும், கிட்டத்தட்ட
நூறு வண்டிகளில் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
मृगपक्षिगणाश्चैव
सिद्धाश्रमनिवासिन:।
अनुजग्मुर्महात्मानं विश्वामित्रं महामुनिम्।।1.31.18।।
निवर्तयामास तत: पक्षिसङ्घान् मृगानपि।
சித்தாஸ்ரமத்தில்
வசித்து வந்த விலங்குகளும் பறவைகளும் கூட வெகு தூரம், விஸ்வாமித்திரருடன் சென்றன.
பிறகு அவர் அவைகளைத் திருப்பி அனுப்பினார்.
ते गत्वा दूरमध्वानं
लम्बमाने दिवाकरे।
वासं चक्रुर्मुनिगणाः शोणाकूले समाहिता:।।1.31.19।।
அந்த முனிவர்கள்
வெகுதூரம் பயணம் செய்த பின்னர், சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில், சோணை நதிக்கரையில்
தங்கினர்.
तेऽस्तं गते दिनकरे
स्नात्वा हुतहुताशना:।
विश्वामित्रं पुरस्कृत्य निषेदुरमितौजस:।।1.31.20।।
சூரியன்
அஸ்தமித்தவுடன், அவர்கள் குளித்து விட்டு, அக்கினிஹோத்ரம் செய்த பின்னர்,
விஸ்வாமித்திரரின் முன் அமர்ந்தார்கள்.
रामोऽपि
सहसौमित्रिर्मुनीं स्तानभिपूज्य च।
अग्रतो निषसादाथ विश्वामित्रस्य धीमत:।।1.31.21।।
ராமனும், லக்ஷ்மணனும்
அந்த முனிவர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, அறிவாற்றல் மிகுந்த
விஸ்வாமித்திரரின் முன் அமர்ந்தார்கள்.
अथ रामो महातेजाः
विश्वामित्रं महामुनिम्।
पप्रच्छ नरशार्दूल: कौतूहलसमन्वित:।।1.31.22।।
பின்னர், மனிதர்களுள்
சிறந்தவனும், ஒளி மிகுந்தவனுமான ராமன், ஆர்வத்துடன் விஸ்வாமித்திரரிடம் கேட்டான்:
भगवन् कोऽन्वयं
देशस्समृद्धवनशोभित:।
श्रोतुमिच्छामि भद्रं ते वक्तुमर्हसि तत्त्वत:।।1.31.23।।
“வணக்கத்துக்குரியவரே!
செழிப்பான சோலைகள் நிறைந்த இந்த தேசம் யாருடையது என்று தெரிந்து கொள்ள
விரும்புகிறேன். தாங்கள் மனமுவந்து உள்ளபடி சொல்ல வேண்டும்.”
चोदितो रामवाक्येन
कथयामास सुव्रत:।
तस्य देशस्य निखिलमृषिमध्ये महातपा:।।1.31.24।।
நல்லமுறையில் விரதங்களை
அனுஷ்டிப்பவரும், தவஸ்ரேஷ்டரும் ஆன விஸ்வாமித்திரர், ராமன் இப்படி வினவியதும்,
அந்த ரிஷிகளின் மத்தியில், அந்த தேசத்தைப் பற்றிய முழு விவரத்தையும் கூறினார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकत्रिंशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் முப்பத்தொன்றாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment