Wednesday, 20 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 32

 (பிரம்மாவினுடைய நான்கு புதல்வர்கள் –– குசநாபனின் பரம்பரை – வாயுதேவன் குசநாபனின் புதல்வியருக்கு, கூன் முதுகு பெறுமாறு சாபம் கொடுத்தல்.)


ब्रह्मयोनिर्महानासीत्कुशो नाम महातपा:।
अक्लिष्टव्रतधर्मज्ञः सज्जनप्रतिपूजक:।।1.32.1।।

மகா தபஸ்வியும், உறுதியாக விரதங்களைப் பின்பற்றுபவனும், தர்மம் அறிந்தவனும், நல்லோரை மதிப்பவனுமான, குசன் என்ற பெயருடைய பிரம்மாவின் புதல்வர் ஒருவர் இருந்தார்.

 

स महात्मा कुलीनायां युक्तायां सुगुणोल्बणान्।
वैदर्भ्यां जनयामास चतुरस्सदृशान् सुतान्।।1.32.2।।

कुशाम्बं कुशनाभं च अधूर्तरजसं वसुम्।

அந்த மகாத்மா, உயர்ந்த குலத்தில் பிறந்த விதர்ப்ப நாட்டு இளவரசியை மணந்து, அவள் மூலம்,  குசாம்பன், குச நாபன், அதூர்த்தரஜஸ், வஸு என்ற நான்கு புதல்வர்களைப் பெற்றார்.

 

दीप्तियुक्तान् महोत्साहान् क्षत्रधर्मचिकीर्षया।।1.32.3।।


तानुवाच कुश: पुत्रान् धर्मिष्ठान् सत्यवादिन:।

அந்தக் குசன்,   க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விருப்பத்தால், ஒளி மிகுந்த, மிகுந்த உற்சாகமுடைய, தர்மவழியில் செல்லுகிற, உண்மையே பேசுகிற தனது புதல்வர்களிடம் பேசினார்:


क्रियतां पालनं पुत्रा: धर्मं प्राप्स्यथ पुष्कलम्।।1.32.4।।

ऋषेस्तु वचनं श्रुत्वा चत्वारो लोकसम्मता:।
निवेशं चक्रिरे सर्वे पुराणां नृवरास्तदा।।1.32.5।।

 “புதல்வர்களே! தர்ம வழியில் ஆட்சி செய்து, நிறைய புண்ணியத்தை அடையுங்கள்!” என்று ரிஷியான குசன் கூறியதன் படி, மனிதருள் சிறந்தவரான அவரது புதல்வர்கள் நான்கு நகரங்களை உண்டாக்கி அவற்றில் வசிக்கலானார்கள்.

 

कुशाम्बस्तु महातेजा: कौशाम्बीमकरोत्पुरीम् ।
कुशनाभस्तु धर्मात्मा पुरं चक्रे महोदयम्।।1.32.6।।

குசாம்பன் ‘கௌசாம்பி’ என்னும் நகரையும், குசநாபன் ‘மஹோதயம்’ என்னும் நகரையும் தங்கள் தலை நகராகக் கொண்டார்கள்.

 

अधूर्तरजसो राम धर्मारण्यं महीपति:।
चक्रे पुरवरं राजा वसुश्चक्रे गिरिव्रजम्।।1.32.7।।

ராமா! அதூர்த்த ரஜஸ் என்னும் அரசன் ‘தர்மாரண்யம்’ என்னும் சிறந்த நகரத்தையும், வசு என்னும் அரசன் ‘கிரிவ்ரஜம்’ என்னும் நகரையும் உண்டாக்கிக் கொண்டார்கள்.

 

एषा वसुमती राम वसोस्तस्य महात्मन:।
एते शैलवरा: पञ्च प्रकाशन्ते समन्तत:।।1.32.8।

ராமா! நாம் இப்போது இருக்கும்‘வசுமதி’ என்ற இடம், மகாத்மாவான வசுவிற்குச் சொந்தமானது. இது, ஐந்து சிறந்த மலைகளால் சூழப்பட்டு விளங்குகிறது.

 

सुमागधी नदी रम्या मगधान् विश्रुताययौ।
पञ्चानां शैलमुख्यानां मध्ये मालेव शोभते।।1.32.9।।

இந்த அழகான, பிரசித்தி பெற்ற ‘ஸுமாகதி’ என்னும் நதி மகத தேசங்களைச் சுற்றி ஓடுகிறது. ஐந்து சிறந்த மலைகளின் மத்தியில், ஒரு மாலை போல இது விளங்குகிறது.

 

सैषा हि मागधी राम वसोस्तस्य महात्मन:।
पूर्वाभिचरिता राम सुक्षेत्रा सस्यमालिनी।।1.32.10।।

ராமா! மகாத்மாவான வசுவுடன் சம்பந்தப்பட்ட இந்த மாகதி நதி, செழிப்பான வயல்களால் மாலைபோலச் சூழப்பட்டுக், கிழக்கு திசையில் இருந்து பாய்கிறது.

 

कुशनाभस्तु राजर्षि: कन्याशतमनुत्तमम्।
जनयामास धर्मात्मा घृताच्यां रघुनन्दन।।1.32.11।।

ரகு நந்தனா! தர்மாத்மாவான ராஜரிஷி குசநாபர், க்ரிதாக்ஷி என்னும் மனைவியின் மூலம் நூறு புதல்விகளைப் பெற்றார்.

 

तास्तु यौवनशालिन्यो रूपवत्य स्स्वलङ्कृता:।
उद्यानभूमिमागम्य प्रावृषीव शतह्रदा:।।1.32.12।।

गायन्त्यो नृत्यमानाश्च वादयन्त्यश्च सर्वश:।
आमोदं परमं जग्मुर्वराभरणभूषिता:।।1.32.13।।

இளமையும், அழகும் பொருந்தி, நல்ல அலங்காரத்துடன் இருந்த அந்த மங்கையர், உத்யான வனத்துக்கு வந்து மழைக்காலத்தில் காணப்படும் மின்னல்களைப் போன்ற பிரகாசத்துடன், பாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும், வாத்தியங்களை வாசித்துக்கொண்டும், எல்லாத் திசைகளிலும் திரிந்து, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

 

अथ ताश्चारुसर्वाङ्ग्यो रूपेणाप्रतिमा भुवि।
उद्यानभूमिमागम्य तारा इव घनान्तरे।।1.32.14।।

அழகான அங்கங்களுடன், இந்த உலகில் தங்கள் அழகுக்கு இணையானவர் யாரும் இல்லாத அந்த மங்கையர், உத்யான பூமிக்கு வந்து, மேகத்துக்கிடையே காணப்படும் நக்ஷத்திரங்களைப் போல விளங்கினர்.

 

तास्सर्वगुणसम्पन्ना रूपयौवनसंयुता:।
दृष्ट्वा सर्वात्मको वायुरिदं वचनमब्रवीत्।।1.32.15।।

அனைத்து நற்குணங்களும் அமையப்பெற்ற, அழகும் இளமையும் பொருந்திய அந்த மங்கையரைப் பார்த்து, எல்லா இடங்களிலும் பரவியிருக்கும், வாயுதேவன் இவ்வாறு கூறினார்.:

 

अहं व: कामये सर्वा भार्या मम भविष्यथ।
मानुषस्त्यज्यतां भावः दीर्घमायुरवाप्स्यथ।।1.32.16।।

“நீங்கள் அனைவரும் என் மனைவிகளாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படிச் செய்தீர்களானால், மனிதர்களைப் போன்று மரணம் அடையாமல், நீண்ட காலம் வாழ்ந்திருப்பீர்கள்.

 

चलं हि यौवनं नित्यं मानुषेषु विशेषत:।
अक्षय्यं यौवनं प्राप्ताः अमर्यश्च भविष्यथ।।1.32.17।।

இளமை என்பது எப்போதும் நிலையில்லாதது, அதுவும் குறிப்பாக, மனிதர்களில் நிலையற்று மாறிக்கொண்டிருப்பது. (என்னை மணந்தால்) நீங்கள் மாறாத இளமையுடன், தேவமகளிர் போன்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வீர்கள்.”

 

तस्य तद्वचनं श्रुत्वा वायोरक्लिष्टकर्मण:।
अपहास्य ततो वाक्यं कन्याशतमथाब्रवीत् ।।1.32.18।।

யாராலும் தடுக்க முடியாமல் எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் வாயுதேவரின் அந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்த மங்கையர் இவ்வாறு பரிகாசத்துடன் கூறினார்கள்:

अन्तश्चरसि भूतानां सर्वेषां त्वं सुरोत्तम ।
प्रभावज्ञा: स्म ते सर्वा: किमस्मानवमन्यसे।।1.32.19।।

“தேவர்களுள் சிறந்தவரே! அனைது உயிர்களின் உடலுக்குள்ளும் புகுந்து சஞ்சரிப்பவரே! உங்களுடைய பிரபாவத்தைப் பற்றி நாங்கள் அறிவோம். எங்களை ஏன் இவ்விதம் அவமானப்படுத்துகிறீர்கள்?”

 

कुशनाभसुतास्सर्वा: समर्थास्त्वां सुरोत्तम।
स्थानाच्च्यावयितुं देवं रक्षामस्तु तपो वयम्।।1.32.20।।

“தேவர்களுள் சிறந்தவரே! நாங்கள் அனைவரும் குசநாபரின் புதல்விகள். உங்களை உங்கள் நிலையில் இருந்து கீழே இறக்க எங்களால் முடியும். ஆயினும், எங்களுடைய தவத்தின் சக்தியை வீணாக்க வேண்டாம் என்று பேசாமல் இருக்கிறோம்.

 

माभूत्स कालो दुर्मेध: पितरं सत्यवादिनम्।
नावमन्यस्व धर्मेण स्वयं वरमुपास्महे।।1.32.21।।

துர்புத்தி உடையவரே! உண்மையே பேசும் எங்கள் தந்தையாரை அவமதிக்காதீர்கள். அவர் எங்களுக்கான கணவர்களைத் தர்மப்படி தேர்ந்தெடுப்பார். மரணத்தை வரவழைத்துக் கொள்ளாதீர்கள்.( எங்கள் தந்தையார் உங்கள் மேல் கோபம் கொண்டால், உங்களுக்கு மரணம் ஏற்படும்.)

 

पिता हि प्रभुरस्माकं दैवतं परमं हि न:।
यस्य नो दास्यति पिता स नो भर्ता भविष्यति।।1.32.22।।

எங்களுடைய தந்தையார் தான் எங்களுக்குத் தலைவர். அவரே எங்களுக்குக் கடவுள். அவர் யாருக்கு எங்களைக் கொடுக்கிறாரோ, அவர் தான் எங்கள் கணவராக ஆகமுடியும்.

 

तासां तद्वचनं श्रुत्वा वायु: परमकोपन:।
प्रविश्य सर्वगात्राणि बभञ्ज भगवान् प्रभु:।।1.32.23।।

அந்த மங்கையரின் சொற்களைக் கேட்ட வாயுதேவர், மிகுந்த கோபம் கொண்டு, அவர்கள் உடலுக்குள் நுழைந்து அவர்களின் உருவத்தைச் சிதைத்தார்.

 

ता: कन्या वायुना भग्ना विविशुर्नृपतेर्गृहम्।
प्रापतन् भुवि सम्भ्रान्तास्सलज्जा स्सास्रलोचना:।।1.32.24।।

வாயுவால் இவ்வாறு சிதைக்கப் பட்ட அந்தக் கன்னிகைகள் மிகுந்த கலக்கத்துடனும், வெட்கத்துடனும், அரண்மனையை அடைந்து அங்கே, நிலத்தில் விழுந்தார்கள்.

 

स च ता दयिता दीना: कन्या: परमशोभना:।
दृष्ट्वा भग्नास्तदा राजा सम्भ्रान्त इदमब्रवीत्।।1.32.25।।

தனக்கு மிகவும் பிரியமான, தன்னுடைய பேரழகிகளான புதல்விகள் இவ்வாறு உருவம் சிதைந்து வந்திருப்பதைக் கண்டு மனம் கலங்கி, அந்த அரசர் இவ்வாரு கூறினார்:

 

किमिदं कथ्यतां पुत्र्य: को धर्ममवमन्यते।


कुब्जा: केन कृता: सर्वा वेष्टन्त्यो नाभिभाषथ।
एवं राजा विनिश्श्वस्य समाधिं सन्दधे तत:।।1.32.26।।

“புதல்வியரே! இது என்ன? யார் இவ்வாறு தர்மத்தை அவமதித்தார்கள்? சொல்லுங்கள்! உங்கள் அனைவரையும் யார் கூன் முதுகுடையவர்களாக ஆக்கினார்கள்? என்னைச் சுற்றி நின்று கொண்டு ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? என்று கூறி ஒரு நீண்ட மூச்சு விட்டுச் சமாதியில் ஆழ்ந்தார்.

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे द्वात्रिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் முப்பத்திரண்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...