Wednesday, 20 December 2023

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 34

 ( காதியின் பிறப்பு; கௌசிகியின் சிறப்பு; நடு இரவின் வர்ணனை)

कृतोद्वाहे गते तस्मिन् ब्रह्मदत्ते च राघव।
अपुत्र: पुत्रलाभाय पौत्रीमिष्टिमकल्पयत्।।1.34.1।।

“ராகவனே! பிரம்ம தத்தன் தனது புதல்வியரை மணம் செய்து கொண்டு போன பிறகு, புத்திரன் இல்லாமல் இருந்த குச நாபன் புத்திரனை வேண்டி, ஒரு யாகம் செய்தார்.

 

इष्ट्यां तु वर्तमानायां कुशनाभं महीपतिम्।
उवाच परमोदार: कुशो ब्रह्मसुतस्तदा।।1.34.2।।

அந்த யாகம் நடந்து கொண்டிருந்தபோது, பிரம்மனுடைய புத்திரான(குச நாபனுடைய தந்தையுமான) கம்பீரமான குசன் (அங்கு தோன்றி)ராஜா குச நாபனிடத்தில் இவ்வாறு கூறினார்:


पुत्रस्ते सदृश: पुत्र भविष्यति सुधार्मिक:।
गाधिं प्राप्स्यसि तेन त्वं कीर्तिं लोके च शाश्वतीम्।।1.34.3।।

“மகனே! மிகுந்த நற்குணமுள்ள ‘காதி’ என்ற மகன் உனக்குப் பிறப்பான். அவனால், இந்த உலகில் நிலையான கீர்த்தியை நீ அடைவாய்!”

 

एवमुक्त्वा कुशो राम कुशनाभं महीपतिम्।
जगामाकाशमाविश्य ब्रह्मलोकं सनातनाम्।।1.34.4।।

“ராமா! இவ்வாறு ராஜா குச நாபனிடம் கூறி விட்டு, குசன் ஆகாய மார்க்கமாக பிரம்மலோகத்துக்குத் திரும்பினார்.

 

कस्य चित्त्वथ कालस्य कुशनाभस्य धीमत:।
जज्ञे परमधर्मिष्ठो गाधिरित्येव नामत:।।1.34.5।।

சிறிது காலத்துக்குப் பிறகு, அறிவாற்ற்றல் மிகுந்த குச நாபனுக்குப், பரம தர்மிஷ்டனான காதி என்ற மகன் பிறந்தான்.

 

स पिता मम काकुत्स्थ गाधि: परमधार्मिक:।
कुशवंशप्रसूतोऽस्मि कौशिको रघुनन्दन ।।1.34.6।।

காகுஸ்தனே! ரகு நந்தனா! பரம தார்மிகரான காதி என்னுடைய தந்தையார். குசரின் வம்சத்தில் பிறந்ததனால், நான் கௌசிகன் ஆகிறேன்.


पूर्वजा भगिनी चापि मम राघव सुव्रता।
नाम्ना सत्यवती नाम ऋचीके प्रतिपादिता।।1.34.7।।

ராகவா! நல்ல முறையில் விரதங்களை அனுஷ்டிக்கும், சத்யவதி என்ற பெயர் கொண்ட ஒரு தமக்கை எனக்கு இருக்கிறாள். அவளை ரிசிகர் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.

 

सशरीरा गता स्वर्गं भर्तारमनुवर्तिनी।
कौशिकी परमोदारा प्रवृत्ता च महानदी।।1.34.8।।

அவள் தன்னுடைய கணவனைத்தொடர்ந்து, தன் சரீரத்துடனேயே ஸ்வர்க்கத்துக்குப் போனாள். பின்னர் கௌசிகி என்ற பெயரில் ஒரு புனித நதியாக உருக்கொண்டாள்.

दिव्या पुण्योदका रम्या हिमवन्तमुपाश्रिता।
लोकस्य हितकामार्थं प्रवृत्ता भगिनी मम।।1.34.9।।

தெய்வீகமும் அழகும் வாய்ந்த கௌசிகி, புண்ணிய தீர்த்தத்தை ஏந்தியவளாய், உலக மக்களுக்கு நன்மை பயக்கவும், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவும், இமயமலையை அடைந்து, அங்கிருந்து பாயத்தொடங்கினாள்.

 

ततोऽहं हिमवत्पार्श्वे वसामि निरतस्सुखम्।
भगिन्यां स्नेहसंयुक्त: कौशिक्यां रघुनन्दन।।1.34.10।।

ரகு நந்தனா! அப்போதிருந்து, என் தமக்கையின் மீதுள்ள பாசத்தினால், நான் இமயமலையின் அருகிலேயே சுகமாக வசித்து வருகிறேன்.

 

सा तु सत्यवती पुण्या सत्ये धर्मे प्रतिष्ठिता।
पतिव्रता महाभागा कौशिकी सरितां वरा।।1.34.11।।

அந்த சத்யவதி புண்ணியம் நிறைந்தவள். சத்தியத்தையும், தர்மத்தையும் கடைபிடிப்பவள். தூய்மையும் புனிதமும் நிறைந்த அந்த உத்தமமான நதியானவள் கௌசிகி என்று அழைக்கப்படுகிறாள்.

 

अहं हि नियमाद्राम हित्वा तां समुपागत:।
सिद्धाश्रममनुप्राप्य सिद्धोऽस्मि तव तेजसा।।1.34.12।।

ராமா! என்னுடைய தவத்திற்காக நான் அவளை விட்டு விட்டு சித்தாஸ்ரமத்துக்கு வந்தேன். இங்கு வந்த பின், உன்னுடைய வீரத்தால், என்னுடைய குறிக்கோளில் சித்தி பெற்றேன்.

 

एषा राम ममोत्पत्तिस्स्वस्य वंशस्य कीर्तिता।
देशस्य च महाबाहो यन्मां त्वं परिपृच्छसि।।1.34.13।।

வலிமையான கரங்களையுடைய ராமா! நீ கேட்டுக்கொண்ட படி என்னுடைய குடும்பத்தைப் பற்றியும், இந்த இடத்தின் வரலாற்றையும் கூறிவிட்டேன்.

 

गतोऽर्धरात्र: काकुत्स्थ कथा: कथयतो मम।
निद्रामभ्येहि भद्रं ते मा भूद्विघ्नोऽध्वनीह न:।।1.34.14।।

காகுஸ்தனே! நான் கதை சொல்லிக் கொண்டிருந்ததில் பாதி இரவு கழிந்து விட்டது. இனி உறங்கு! உனக்கு நன்மை உண்டாகட்டும்! நாம் போகும் வழியில் விக்னம் ஒன்றும் இல்லாமல் இருக்கட்டும்!


निष्पन्दास्तरवस्सर्वे निलीनमृगपक्षिण:।
नैशेन तमसा व्याप्ता दिशश्च रघुनन्दन।।1.34.15।।

ரகு நந்தனா! மரங்கள் எல்லாம் அசையாமல் நிற்கின்றன. விலங்குகள், பறவைகள் அனைத்தும் அமைதியாகி விட்டன. எல்லா திசைகளிலும், இரவு பரவியிருக்கிறது.

 

शनैर्वियुज्यते सन्ध्या नभो नेत्रैरिवावृतम् ।
नक्षत्रतारागहनं ज्योतिर्भिरिव भासते।।1.34.16।।

மாலை முழுவதும் மெல்ல மெல்ல, விலகி விட்டது. ஆகாயம் முழுவதும் நக்ஷத்திரங்களும், கிரகங்களும் நிறைந்து, ஆகாயத்தின் கண்களைப் போல் ஒளி வீசுகின்றன.

 

उत्तिष्ठति च शीतांशुश्शशी लोकतमोनुद:।
ह्लादयन् प्राणिनां लोके मनांसि प्रभया विभो।।1.34.17।।

ராமா! இந்த உலகின் இருட்டை அகற்றிக்கொண்டும், இங்கு வாழும் உயிர்களின் மனத்தை மகிழ்வித்துக்கொண்டும், குளிர்ச்சியான கிரணங்களுடன், சந்திரன் மேல் எழும்பிக்கொண்டிருக்கிறான்.

 

नैशानि सर्वभूतानि प्रचरन्ति ततस्तत:।
यक्षराक्षससङ्घाश्च रौद्राश्च पिशिताशना:।।1.34.18।।

இரவில் உலவுபவர்களான யக்ஷர்களும், ராக்ஷஸ கணங்களும், மனித மாமிசத்தை உண்ணுபவர்களும், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

 

एवमुक्त्वा महातेजा विरराम महामुनि:।
साधु साध्विति तं सर्वे ऋषयो ह्यभ्यपूजयन्।।1.34.19।।

இவ்வாறு கூறிவிட்டு, மகாதேஜஸ் உடைய மகாமுனிவரான விஸ்வாமித்திரர் ஓய்வெடுக்கத் தொடங்கினார். முனிவர்கள் எல்லாம், ‘நன்று! நன்று!’ என்று கூறி அவரைப் பாராட்டினார்கள்.

 

कुशिकानामयं वंशो महान् धर्मपरस्सदा।
ब्रह्मोपमा महात्मान: कुशवंश्या नरोत्तमा:।।1.34.20।।

“இந்தக் குச வம்சம் எப்போதும் தர்மத்தில் நிலை பெற்றிருக்கும், மிகச்சிறந்த, பிரம்மாவைப் போன்ற மதிப்பிற்குரிய மனிதர்களைக்கொண்டது..

 

विशेषेण भवानेव विश्वामित्रो महायशा:।
कौशिकी सरितां श्रेष्ठा कुलोद्योतकरी तव।।1.34.21।।

மிகுந்த புகழுடைய விஸ்வாமித்திரரே! அதிலும், சிறப்பாகத் தாங்கள் பிரம்மாவுக்கு ஒப்பானவர். நதிகளுக்குள்ளே சிறந்த கௌசிகி நதியும், தங்கள் வம்சத்தின் சிறப்பை அதிகரித்து வருகிறது.”

 

इति तैर्मुनिशार्दूलै: प्रशस्त: कुशिकात्मज: ।
निद्रामुपागमच्छ्रीमान् अस्तंगत इवांशुमान्।।1.34.22।।

இவ்வாறு, அந்தச் சிறந்த முனிவர்களால் புகழப்பட்ட குசரின் வம்சத்தைச் சேர்ந்த விஸ்வாமித்திரர், ஒளி பொருந்திய சூரியன் அஸ்தமனம் அடைந்ததைப் போல நித்திரையில் ஆழ்ந்தார்.

 

रामोऽपि सहसौमित्रि: किञ्चिदागतविस्मय:।
प्रशस्य मुनिशार्दूलं निद्रां समुपसेवते।।1.34.23।।

ராமனும், லக்ஷ்மணனுடன், விஸ்வாமித்திரரைப் பற்றிய  ஆச்சரியம் கலந்த மெச்சுதலுடன் உறங்கலானான்.

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे चतुस्त्रिंशस्सर्ग:।।


இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் முப்பத்து நான்காவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...