ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 35
(விஸ்வாமித்திரர் புனிதமான கங்கையின் கதையைக் கூறுகிறார்.)
उपास्य रात्रिशेषं तु शोणाकूले महर्षिभि:।
निशायां सुप्रभातायां विश्वामित्रोऽभ्यभाषत।।1.35.1।।
விஸ்வாமித்திரர் இரவு
முழுவதும், முனிவர்களுடன் சோணை நதிக்கரையில் படுத்திருந்து விட்டு, விடிந்தவுடன்
பேசத் தொடங்கினார்:
सुप्रभाता निशा राम
पूर्वा सन्ध्या प्रवर्तते।
उत्तिष्ठोत्तिष्ठ भद्रं ते गमनायाभिरोचय ।।1.35.2।।
ராமா! இரவு முடிந்து
நற்காலை விடிந்து விட்டது. எழுந்திரு!
பூர்வா ஸந்த்யா நேரத்தில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தயாராகு!”
तच्छ्रुत्वा वचनं तस्य
कृत्वा पौर्वाह्णिकीं क्रियाम् ।
गमनं रोचयामास वाक्यं चेदमुवाच ह।।1.35.3।।
அவருடைய அந்த
வார்த்தைகளைக் கேட்ட ராமன் எழுந்து, காலை நேரத்தில் செய்ய வேண்டிய கிரியைகளைச்
செய்து முடித்துப் பயணத்துக்குத் தயாராகி, இவ்வாறு கேட்டான்:
अयं शोणश्शुभजलोऽगाध:
पुलिनमण्डित:।
कतरेण पथा ब्रह्मन् सन्तरिष्यामहे वयम्।।1.35.4।।
“பிரம்மத்தை அறிந்தவரே! தூய நீரைக்கொண்ட இந்தச்
சோணை நதியில் தண்ணீர் அதிகம் இல்லை. ஆங்காங்கே மணற்திட்டுகள் காணப்படுகின்றன. நாம்
எவ்வாறு நதியைக் கடக்கப் போகிறோம்?”
एवमुक्तस्तु रामेण
विश्वामित्रोऽब्रवीदिदम् ।
एष पन्था मयोद्दिष्टो येन यान्ति महर्षय:।।1.35.5।।
இவ்வாறு ராமன் கேட்டவுடன்
விஸ்வாமித்திரர் கூறினார், “நமக்கு முன் மகரிஷிகள் எந்த வழியில் சென்றார்களோ, அந்த
வழியிலேயே செல்ல நான் உத்தேசித்திருக்கிறேன்.”
एवमुक्ता महर्षयो
विश्वामित्रेण धीमता।
पश्यन्तस्ते प्रयाता वै वनानि विविधानि च।।1.35.6।।
விஸ்வாமித்திரர்
இவ்வாறு கூறியதையடுத்து, அந்த மகரிஷிகள், பலவகையான காடுகளைப் பார்த்துக்கொண்டு,
மேற்கொண்டு பயணப்பட்டார்கள்.
ते गत्वा दूरमध्वानं
गतेऽर्धदिवसे तदा।
जाह्नवीं सरितां श्रेष्ठां ददृशुर्मुनिसेविताम्।।1.35.7।।
வெகு தூரம் நடந்து,
பாதி நாள் கடந்த பிறகு, முனிவர்களால் வணங்கப்படுகின்ற, மிகச்சிறந்த நதியான
ஜான்ஹவியைக்(கங்கை) கண்டார்கள்.
तां दृष्ट्वा
पुण्यसलिलां हंससारससेविताम्।
बभूवुर्मुदिता स्सर्वे मुनयस्सह राघवा:।।1.35.8।।
அன்னப் பறவைகளும், கொக்குகளும் நிறைந்திருந்த அந்தப் புனித நதியைப் பார்த்த
முனிவர்களும், ராமலக்ஷ்மணர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள்.
तस्यास्तीरे
ततश्चक्रुस्त आवासपरिग्रहम्।
ततस्स्नात्वा यथान्यायं सन्तर्प्य पितृदेवता:।।1.35.9।।
हुत्वा चैवाग्निहोत्राणि प्राश्य चामृतवद्धवि: ।
विविशुर्जाह्नवीतीरे शुचौ मुदितमानसा:।।1.35.10।।
विश्वामित्रं महात्मानं परिवार्य समन्तत:।
அந்தக்கரையில்
தங்குமிடத்தை அமைத்துக் கொண்டபின், குளித்து, முறைப்படி பித்ருக்களுக்குத்
தர்ப்பணம் செய்து விட்டு, அக்னிஹோத்ரம் செய்து, அமுதத்தைப் போன்ற ஹவிஸைப்
(அக்கினியில் ஆஹுதி செய்யப்பட்ட நிவேதனம்)புசித்து, அந்தத் தூய்மையான கங்கைக்
கரையில் விஸ்வாமித்திரரைச் சுற்றி, மகிழ்வுடன் அமர்ந்தார்கள்.
अथ तत्र तदा रामो विश्वामित्रमथाब्रवीत्।।1.35.11।।
भगवन् श्रोतुमिच्छामि गङ्गां त्रिपथगां नदीम्।
त्रैलोक्यं कथमाक्रम्य गता नदनदीपतिम्।।1.35.12।।
பின்னர், ராமன்
விஸ்வாமித்திரரிடம் கேட்டான்: “பூஜிக்கத் தகுந்தவரே! மூன்று திசைகளில் பாயும்
கங்கை நதி எவ்வாறு மூன்று உலகங்களையும் வியாபித்துப் பின் சமுத்திரத்தை அடைகிறது
என்பதைப் பற்றி அறிய விரும்புகிறேன்.”
चोदितो रामवाक्येन
विश्वामित्रो महामुनि:।
वृद्धिं जन्म च गङ्गाया वक्तुमेवोपचक्रमे।।1.35.13।।
ராமன் இவ்வாறு
கேட்டதும், மகரிஷி விஸ்வாமித்திரர் கங்கை நதியின் பிறப்பைப் பற்றியும், அது
வளர்ந்து பெருகிய விதத்தைப் பற்றியும் சொல்லத் தொடங்கினார்.
शैलेन्द्रो हिमवान्नाम
धातूनामाकरो महान्।
तस्य कन्याद्वयं राम रूपेणाप्रतिमं भुवि।।1.35.14।।
“ராமா! அனைத்து
உலோகங்களுக்கும் மூலஸ்தானமாக இருக்கும் ஹிமவான் என்னும் பர்வதராஜனுக்கு, இணையற்ற
அழகிகளான இரண்டு புதல்விகள் இருந்தார்கள்.
या मेरुदुहिता राम
तयोर्माता सुमध्यमा।
नाम्ना मनोरमा नाम पत्नी हिमवत: प्रिया।।1.35.15।।
ராமா! மேரு மலையின்
மகளாகிய, சிறுத்த இடையுடைய மனோரமா என்பவள் ஹிமவானின் அன்பான மனைவியும் அந்த இரண்டு
புதல்விகளின் தாயாரும் ஆவாள்.
तस्यां
गङ्गेयमभवज्ज्येष्ठा हिमवतस्सुता।
उमा नाम द्वितीयाभून्नाम्ना तस्यैव राघव।।1.35.16।।
ராமா! மனோரமாவுக்கு
மூத்த மகளாக கங்கையும், இளைய மகளாக உமாவும் பிறந்தனர்.
अथ ज्येष्ठां
सुरास्सर्वे देवतार्थचिकीर्षया।
शैलेन्द्रं वरयामासुर्गङ्गां त्रिपथगां नदीम्।।1.35.17।।
அதன் பிறகு, தேவர்கள்
அனைவரும் தங்களுடைய காரியம் ஒன்று ஆக வேண்டும் என்பதற்காக, பர்வத ராஜனிடம் சென்று,
மூன்று திசைகளில் ஓடக்கூடிய, அவருடைய மூத்த மகளாகிய கங்கையைத் தங்களுக்குக்
கொடுக்க வேண்டினர்.
ददौ धर्मेण हिमवान्
तनयां लोकपावनीम्।
स्वच्छन्दपथगां गङ्गां त्रैलोक्यहितकाम्यया।।1.35.18।।
தர்மத்தைக் காப்பாறுவது
தன் கடமையென நினைத்த ஹிமவான், மூன்று உலகத்துக்கும் நன்மை உண்டாகும் என்பதால்,
சுதந்திரமாகப் பாய்ந்து உலகையெல்லாம் புனிதமாக்கக் கூடிய தன் புதல்வியை
அவர்களுக்குக் கொடுத்தார்.
प्रतिगृह्य ततो देवास्त्रिलोकहितकारिण:।
गङ्गामादाय तेऽगच्छन् कृतार्थेनान्तरात्मना।।1.35.19।।
மூன்று உலகங்களுக்கும்
நன்மை செய்ய வேண்டி கங்கையைப் பெற்றுக் கொண்ட தேவர்கள், அவளை அழைத்துக் கொண்டு,
மனத்திருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.
या चान्या शैलदुहिता
कन्यासीद्रघुनन्दन।
उग्रं सा व्रतमास्थाय तपस्तेपे तपोधना।।1.35.20।।
ரகு நந்தனா! பர்வத
ராஜனின் இன்னொரு மகள் (உமா), தவத்தையே தனது செல்வமாகக் கொண்டு, உக்கிரமான தவத்தில்
ஈடுபட்டிருந்தாள்.
उग्रेण तपसा युक्तां
ददौ शैलवरस्सुताम्।
रुद्रायाप्रतिरूपाय उमां लोकनमस्कृताम्।।1.35.21।।
மலைகளுள் சிறந்தவரான
ஹிமவான் உக்கிரமாகத் தவம் செய்பவளும், உலகனைத்தாலும் வணங்கப் படுபவளுமான தன் மகள்
உமாவை ஈடு இணையற்ற ருத்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
एते ते शैलराजस्य सुते
लोकनमस्कृते।
गङ्गा च सरितां श्रेष्ठा उमादेवी च राघव।।1.35.22।।
ராகவா! ஹிமவானின்
இரண்டு புதல்விகளாகிய, மிகப் புனிதமான நதியாகிய கங்கையும், உமாவும் உலகம் முழுவதாலும்
வணங்கப் படுகிறார்கள்.
एतत्ते सर्वमाख्यातं
यथा त्रिपथगा नदी।
खं गता प्रथमं तात गतिं गतिमतां वर ।।1.35.23।।
குழந்தாய்! மிகச்சிறந்த
நடையை உடையவனே! மூன்று வழியாகச் செல்லும் கங்கை எவ்விதம் ஸ்வர்க்கத்தை அடைந்தாள்
என்பதையெல்லாம் உனக்குச் சொல்லி விட்டேன்.
सैषा सुरनदी रम्या
शैलेन्द्रस्य सुता तदा।
सुरलोकं समारूढा विपापा जलवाहिनी।।1.35.24।।
ஹிமவானின் புதல்வியும்,
அழகானவளும், பாவங்களற்றவளுமான தெய்வீகமான கங்கை, ஏராளமான நீரைத்தன்னுடனே
எடுத்துக்கொண்டு ஸ்வர்க்கத்துக்குச் சென்றாள்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे पञ्चत्रिंशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் முப்பத்தைந்தாவது ஸர்க்கம்,
நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment